ஒரு கிராமத்துப் பாடசாலை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2025
பார்வையிட்டோர்: 2,601 
 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை ஒன்பதரை மணி. ஆசிரியர் தனபாலசிங்கம் பாட சாலைக்குப் புறப்படத் தன் சைக்கிளை எடுத்தார். அப்போது தான் தெரிந்தது. பின் சில்லில் காற்று இறங்கியிருப்பது. முற் றத்தில் சைக்கிளை நிற்பாட்டிக் குரல் கொடுத்தார். 

‘ஏய் தனம்.இஞ்சேரப்பா காத்தில்லை சைக்கிலுக்கு. பம்மை ஒருக்கா எடுத்துவாரும்..’ 

உள்ளேயிருந்து குரல் வந்தது: ‘இஞ்சை நான் ஒன்றும் சும்மா இல்லை நானும் பள்ளிக்குடத்துக்குப் போகத்தான் புறப்படுகிறன். ஒருக்கா வந்து எடுத்துப் போங்கோ…’ 

தனபாலசிங்கமும் அவர் மனைவி தனபாக்கியமும் ஒரே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றவர்கள். கணவன் தலைமை ஆசிரியர். மனைவி துணை ஆசிரியை. இன்னொரு ஆசிரியரும் கடலாஞ்சிக் கிராமப் பாடசாலையில் இருக்கிறார். மனைவி பம் எடுத்து வராதது தன்பாலசிங்கத்துக்குக் கோபத்தை மூட்டி விட்டது. 

‘ஒருக்கா எடுத்து வாப்பா… எட்டு மணிக்குப் போற பள்ளிக்கு இப்ப ஒன்பதரை மணியாச்சுது…’ 

இப்போது தான் தலைவாரிக் கொண்டையிட்டுக் கொண்ட தனபாக்கியம் ஒரு கையில் சீப்பும் மறு கையில் பம்புமாக வந்தாள். 

‘ஏதோ பள்ளிக்கூடத்தில் வெட்டி முறிக்கிறது போல…இப்ப அங்க ஒரு பிள்ளையளும் வந்திருக்காது. கொஞ்சம் லேற்றாப் போனாத்தான் என்ன? குடியே முழுகிப் போம் ஏதோ இந்தத் திட்டிகுளத்து கொலனிப் பிள்ளையளை படிப்பிச்சு டாக்குத்தர் எஞ்சினியர் ஆக்கிறது மாதிரி…’ 

ஆசிரியர் மனைவியைச் சற்றுக் கடுமையாகப் பார்த்தார். வெளியே றாக்ரர் ஒன்று இரைந்தபடி விரைந்தது. ‘அது தான் உன்ர அப்பரிட்டை படிச்சதுகள் எல்லாம் மதகுகளில் குந்தியிருக்குதுகள். அது சரி அவரிட்ட படிச்சதுகள் மதகில இருக்காமல் வேறை எங்க இருக்கிறது?’ 

‘வீணா ஐயாவை எடுத்ததுக் கெல்லாம் குறை சொல்லாதை யுங்கோ…’ 

‘சொன்னா என்ன?’ 

‘போயும் போயும் உங்களுக்கு என்னைத் தந்ததுக்காக’

தனபாலசிங்க மாஸ்ரர் மனைவியை மிக ஏளனமாகப் பார்த்தார். 

‘நான் என்ற படியால் உன்னைக் கட்டினன். கலியாணம் கட்டின ஆறு மாதத்தில் நீ …அந்தப் பரிசு கேடுகளை ஏன் சொல்லுவான்… எனக்குத் தான் வெட்கம்’ 

தனத்தின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

‘அதுக்காகத்தான் நீங்கள் சியாமனோடு சேர்ந்து ஊரெல்லாம் பேயிறதைக் கண்டும் நான் பொறுத்திருக்கிறன்….’ என்றவாறு உள்ளே செல்ல முயன்றாள். தனபாலசிங்கம் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அப்போது வாசலில் யாரோ கூப்பிடுவது கேட்டது. 

“மாஸ்ரர்… மாஸ்ரர்….இருக்கிறாரோ?’ 

‘ஓம். ஆரது? இரத்தினமோ?’ என்றபடி மாஸ்ரர் எழுந்து நின்றார். இரத்தினம் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். அழுக்கேறிய வேட்டி. இடுப்பில் ஒரு துவாய்த் துண்டு. நாற்பத்தைந்து வயது இருக்கும். 

‘மாஸ்ரரிட்ட ஒரு விசயம்’ என்று தலையைச் சொறிந்தான் இரத்தினம். 

‘கெதியாச் சொல்லு நேரமாச்சுது நான் பள்ளிக்கூடத்துக்குப் போகவேண்டும்’ 

‘ஒண்டுமில்லை ஒரு அவசரத் தேவைக்கு ஒரு நூறு ரூபா தேவைப்படுகுது…மிளகாய் ஆத்தில நட்டிருக்கிறன் மூன்று மாதத்தில் தந்திடுவன்….’ 

தனபாலசிங்கம் சற்று யோசனை செய்பவர் போலக் காணப்பட்டார். இரத்தினத்தின் முகத்தில் கவலை படர்ந்தது. 

‘நீ ஒழுங்கானவன்: ஆனா பார் இரத்தினம். கையில் இருந்த காசை நேற்றுத்தான் சியாமன் ஒரு தேவைக்கு வாங்கினவர். சரி சரி உனக்கு இல்லை என்று சொல்லக் கூடாது. உன்னைப் போன்ற ஏழைகளுக்கு உதவத்தான் வேண்டும். எல்லாத்துக்கும் பின்னேரமா வா… மாதா மாதம் வட்டியை ஒழுங்காத் தந்திடவேணும்… பத்து ரூபா தெரியும்தானே?’ 

சந்தோசத்துடன் தலையை ஆட்டினான் இரத்தினம். அவனுடைய உடனடித் தேவை பூர்த்தியாகின்றது. அந்தளவில் அவனுக்கு மகிழ்ச்சி. 

‘இஞ்சை விடுங்கோ நான் காத்து அடிச்சுத்தாறன்….’ 

இரத்தினம் காற்று அடித்தான். காற்று அடிக்கும்போது சொன்னான்! ‘மாஸ்ரர் உவன் காணியை மாயாண்டி தன்ர விக்கப்போறானாம்…’ 

‘அது வைபோஸ் காணியல்லே?’  

‘அடாத்துக் காணிதான்… ஆனால் நல்ல காணி. இந்தியாக்காரன் என்று காணிக்குப் பேமிற் தரமுடியாது என்று டி.ஆர்.ஓ. சொல்லிவிட்டாராம். அதுதான் ஆருக்கும் வித்திடலாம் என்று திரியிறான்’ 

‘நானும் கேள்விப்பட்டன் மலிவா வந்தால் பார். வாங்கினால் உழுந்தைப் கிழுந்தைக் போடலாம்’

இரத்தினம் எழுந்து நின்றான். ‘மாஸ்ரர் நீங்க முந்தி முனியாண்டியிட்டை ஒரு பத்தேக்கர் வாங்கினியள் எல்லே? அதுக்குப் பேமிற் எடுத்திட்டியளே?’

‘எடுக்கத்தான் திரியிறன். உவன் டி.ஆர். ஓ. சம்மதிக்கிறானில்லை. உத்தியோகத்தருக்குக் காணியில்லை என்கிறான். இருக்கட்டும் உவரை மாட்டிற இடத்தில மாட்டிறன்….’ 

‘ஒரு பெட்டிசத்தை எழுதிப் போடும்கோ…’ என்றான் இரத்தினம். 

தனபாலசிங்கம் மாஸ்ரர் பள்ளிக்கூடத்துக்கு வரும்போது பத்தரை மணி. அவருடைய மனைவி பள்ளிக்கூடத்துக்கு வரும் போது பத்து முப்பத்தைந்து. கோபால் மாஸ்ரர் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்த மாணவர்களைக் கொண்டு விவசாய பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட முற்றத்தில் அவர் தன் செலவில் நட்டிருந்த மிளகாய்க் கன்றுகளுக்கு மாணவர்கள் பாத்தி பிடித்துத் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொண்டிருந்தார்கள். 

தலைமை ஆசிரியர் தனபால சிங்கம் வரவு டாப்பில் கையொப்பம் வைத்தார். சரியாக காலை ஏழரை மணிக்கு வந்ததாக எழுதினார். அவரைத் தொடர்ந்து அவருடைய மனைவி கையெழுத்து வைத்தாள். பின்னர் கோபால் மாஸ்ரரும் வைத்தார். பதிவேட்டின்படி சரியாக கடலாஞ்சிக்கிராமப் பாடசாலை காலை எட்டு மணிக்கு ஆரம்பமானது. 

பாடசாலையின் முன்னேற்றம் பற்றி மூவரும் சற்று விவாதித்தார்கள். 

‘இன்றைக்கு பொன்னப்பா கொஞ்ச மான் இறைச்சி அனுப்பியிருந்தவன். ராத்திரி வேட்டைக்குப் போனவனாம். அது தான் இப்ப சமைக்க விட்டிருக்கிறன் குவாட்டசில’ என்றார் கோபால் வாத்தியார். 

‘ஆரை விட்டிருக்கிறியள் சமைக்க? உவள் சுவந்தி நல்லாச் சமைப்பாள்’ என்றாள் தனபாக்கியம் ரீச்சர். 

‘சுவந்தியையும் மாலதியையும் தான்’ என்றார் கோபால், 

தலைமை ஆசிரியர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ‘வயது வந்த பிள்ளையளை உங்கட குவாட்டசிற்குத் தனிய அனுப்பப்படாது. பெற்றோர் பார்த்தால் குறை சொல்லுவினம். சரி சரி இண்டைக்கு மத்தியானம் மூண்டு பேருக்கும் சாப்பாடு என்கிறியள்’ 

கோபால் மாஸ்ரர் நெளிந்தார். அவருக்குத் தலைமை ஆசிரியரின் ஆதரவு தேவை. அவர் யாழ்ப்பாணத்து வாசி அவருடைய குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. வாரத்தில் திங்கட் கிழமை பின்னேரம் அல்லது செவ்வாய்க்கிழமை மத்தியானம் திட்டிகுளத்திற்கு திரும்பிவிட வேண்டியவர். 

‘இந்தக்கிழமை வீட்டிற்குப் போகேக்கை சொல்லுங்கோ மாஸ்ரர். யாழ்ப்பாணத்தில் படிக்கிற என்ர பிள்ளையளுக்குக் கொஞ்சச் சாமான் தாறன்…கொடுத்துவிடுங்கோ’ என்றாள் தனபாக்கியம். 

‘அதுக்கென்ன இந்த வாரம் புதன்கிழமை பின்னேரம் போக இருக்கிறன். என்ர கடைக்குட்டிக்கு நயினாதீவில முடியிறக்கிற நேத்தி’ என்றார் கோபால். 

வகுப்பறைகளில் மாணவர்கள் கூச்சலிட்டார்கள். சிலர் சண்டை பிடித்தார்கள். தனபாலசிங்கம் பிரம்பை எடுத்து மேசையில் தட்டினார். சத்தம் அடங்கியது. 

‘நீங்கள் போய் பாத்து எழுதுவதற்கு ஏதாவது எச்சசையில் கொடுத்துவிட்டு வாங்கோ. சில விசயங்கள் விவாதிக்கவேண்டும்’ 

கோபால் மாஸ்ரரும் தனபாக்கியமும் வெளியே எழுந்து சென்றார்கள். தனபாலசிங்கம் ஆசிரியர் தனது ஆசிரியர் குறிப்பேட்டைப் பிரித்தார். அவரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர்கள் விபரம் இருந்தது. இம் மாத வட்டி தராதவர்களில் ஒரு பெயர் கண்ணில் பட்டது. உடனே எழுந்து வந்து, ‘மூன்றாம் வகுப்பு சுப்பிரமணியம்…’ என்று கூப்பிட்டார். கோபால் மாஸ்ரர் மூன்றாம் வகுப்பு சுப்பிரமணியத்தைத் தலைமை ஆசிரியரின் அறைக்கு அனுப்பி வைத்தார். பையன் பயந்தவாறு தலைமை ஆசிரியரின் முன் நின்றான். 

‘நீ சுப்பையன்ர மகன் தானே? கொப்பரிட்டை சொல்லு என்னை வந்து ஒருக்கா சந்திக்கும்படி. இரண்டு மாத வட்டிக்காசு தரவில்லை என்று சொல்லு’ 

‘சரி வாத்தியார்’ என்றான் பையன். தனபாலசிங்கம் யன்னல் ஊடாக வெளியே பார்த்தார். இரு பையன்கள் கேற்றடியை நோக்கி நடப்பது தெரிந்தது. படிக்கிற நேரத்தில் எங்கே செல்கிறார்கள்? எழுந்து வெளியே வந்தார். கை தட்டி இருவரையும கூப்பிட்டார். 

இருவரும் ஓடி வந்தார்கள். 

‘எங்கையடா போறியள்?’

‘கோபால் மாஸ்ரர் கூப்பன் கடையில மல்லியும் லக்ஸ்பிறே யும் வாங்கிவரச் சொன்னவர். அதுதான் போறம்’ 

கோபால் மாஸ்ரர் தலைமை ஆசிரியரிடம் வந்தார். 

‘நான்தான் அனுப்பினனான். இந்தப் பொடியன்ரை தமையன்தான் எம்.பி.சி.எஸ். மனேச்சர். மல்லி பத்து ரூபாவுக்கும் யாழ்ப்பாணத்தில் இல்லை. லக்ஸ்பிறேயும். உங்களுக்கும் மல்லி வேனுமென்றால் கொடுத்து விடுங்கோ’ என்றார் கோபால் மாஸ்ரர். 

‘சரி சரி கெதியா வாங்கி வாருங்கோ…’ 

பையன்கள் இருவரும் போன கையோடு இரு மாணவிகள் வெளியே செல்வது தெரிந்தது. அவர்கள் ஏன் செல்கிறார்கள் என்பது தலைமை ஆசிரியருக்குத் தெரியும். அவருடைய மனைவி காலையில் கிணற்றடியில் எடுத்துப் போட்டிருக்கும் பானை, சட்டி. கோப்பைகளைக் கழுவி வைத்துவிட்டு வரத்தான் செல்கிறார்கள். 

நேரத்தைப் பார்த்தார் தனபாலசிங்கம் மாஸ்ரர். நேரம் 11-30 மணி. 

‘இந்த மாதம் எப்ப சம்பளம்? என்று கேட்டார் கோபால் மாஸ்ரர். 

‘இருபதாம் திகதி தான். நீர் செய்கிற வயல் எப்படி இருக்கு? நல்லா இருக்குது என்கினம்’ 

‘பரவாயில்லை. நீங்கள் செய்யிற வயல் நல்ல விளைச்சல்’

அப்போது தனபாக்கியம் அங்கே வந்தாள். 

‘இதுகள் சரியான மோட்டுப் பிள்ளைகள். எப்படிப் படிப்பித்தாலும் ஏறாது. மாடுகள் மேய்க்கத்தான் சரி’ 

‘ஓ…உதுகள் வலு மக்குகள். படிச்சென்ன உத்தியோகமே பாக்கப் போகுதுகள். கையொப்பம் வைக்கத் தெரிந்தால் போதும்’ என்றார் கோபால் மாஸ்ரர். 

‘நாய்ப் பழக்கங்களும்… நல்ல பழக்க வழக்கமில்லை. அதுதான் நான் என்ர பிள்ளையளை யாழ்ப்பாணத்தில போடிங்கில விட்டிருக்கிறன்…. இங்க இருந்தாக் கெட்டுப் போயிடுங்கள். சொன்னாப்போல அப்பா, வீட்டில ஒரு துண்டு விறகுகூட இல்லை. ஒருக்கா மூன்றாம்வகுப்பு மாணிக்கத்தையும் சுப்பிரமணியத்தையும் கூப்பிட்டு காட்டில் விறகு பொறுக்கி வீட்டில் போடச் சொல்லுங்கோ…’ என்றாள் தனம். 

‘அப்போதை சொல்லுறதுக் கென்ன? சரி கூப்பிடு…’ 

மாணிக்கமும் சுப்பிரமணியமும் தலைமை ஆசிரியர் முன்னால் வந்து நின்றார்கள் 

‘நல்ல பிள்ளையள் கெதியா ஓடிப்போய் ஒவ்வொரு கட்டு விறகு முறிச்சு வீட்டில போட்டிட்டு ஓடி வாங்கோ…’ 

சுப்பிரமணியம் புறப்பட்டான். மாணிக்கம் தயங்கி நின்றான். 

‘போவன்ரா…’ 

‘நான் மாட்டன் மாஸ்ரர். முந்தா நாள் விறகு பொறுக்கேக்கை பாம்பொன்று நிண்டது பயமா இருக்குது நான் மாட்டன்’ என்றான் மாணிக்கம்.  

ஆசிரியர்கள் திகைத்துப் போயினர். தனபாலசிங்கம் தன் சேவைக்காலத்தில் இப்போதுதான் இப்படி ஒரு சொல்லைக் கேட்கிறார். பெரும் தோல்வி. 

‘மாட்டியோ?…’ என்றவாறு தன் கையிலிருந்த பிரம்பால் விளாசிவிட்டார். மாணிக்கத்தின் வலது தோல் மூட்டில் பிரம்பு பலமாகப் பட்டது அவன் வீரிட்டுக் கத்தினான். 

‘அடியாதையுங்கோ வாத் தியார். நான் போறன்’ என்றபடி கேற்றை நோக்கி ஓடினான். 

‘அவனைக் கூப்பிடுங்கோ… இண்டைக்கு வேண்டாம்’ என்று பதறினார் தனபாலசிங்கம். 

‘மாணிக்கம் இஞ்ச வா…’ என்று கோபால் மாஸ்ரர் கூப்பிட்டார்.  

‘சரி சரி பசிக்குது மணியை அடியுங்கோ…’ என்றார் தலைமை ஆசிரியர். 

பாடசாலை மணி ஒலித்தது. தலைமை ஆசிரியர் நேரத்தைப் பார்த்தார். பன்னிரண்டு மணி. பதிவேட்டில் இரண்டரை மணி என எழுதினர். பதிவேட்டின் சரியாக இரண்டரை மணிக்குக் கடலாஞ்சிக் கிராமப் பாடசாலை முடிவுற்றது. 

‘நீங்கள் போய் சாப்பாட்டை ஆயத்தப் படுத்துங்கோ… நான் ஒரு கடிதம் இ.ஓக்கு எழுதிட்டு வாறன்…’

கோபால் மாஸ்ரரும் தனபாக்கியமும் பேசிச் சிரித்தபடி குவாட்டர்சை நோக்கி சென்றனர். அவர்கள் சிரித்தபடி செல்வது தனபாலசிங்கத்திற்கு எரிச்சலை மூட்டியது. குவாட்டர்சில் வேறொருவருமில்லை என்ற எண்ணமும் எழுந்தது. எழுந்து அவர்களைப் பின் தொடர்ந்தார். 

– மல்லிகை, ஆகஸ்ட் 1976.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *