ஒரு காதலின் உச்சத்தில்!
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 3,169
“அப்ப நீ வுயுந்திட்ட!” என்று அளப்பறை பண்ணினான் அம்பலவாணன்.
“டேய் அப்படி எல்லாம் கிடையாது! அவ தான் மயங்கிட்டா!” இது என் ஈனஸ்வரமாக எனக்கே கேட்டது! பின்னே எப்படி ஒத்துக் கொள்வது-காதலில் விழுந்து விட்டேன் என்று?
“அவ அப்படி ஒன்றும் பெரிய ரதி இல்ல!” இது நான்.
அம்பலவாணன் அவ்வளவு சுலபமாக பின்வாங்கவில்லை! ஆமா! இவுரு பெரிய கோலிவுட் இஸ்டாரு! சும்மா இருடா! வுயுந்தத ஒத்துக்க!
இனிமேலும் தாக்குப் பிடிக்காது என்று எனக்கு உறுதியாகத் தோன்றியபோது அம்பலவாணன் கேட்டான்.
“அத்த வுடு! இப்ப இன்னா பண்ணப் போற?”
அப்பத்தான் நான் எழுத ஆரம்பித்த அந்த வாட்ஸ் அப் மெசேஜைக் காட்டினேன்.
“நீ எனக்கு விருந்து!
நான் உனக்கு மருந்து!
என் பக்கத்தில் இருந்து
நீ என்னை அருந்து!
இந்த உலகை மறந்து!”
“தா! பாருடா இவன! திடீர்னு கவி ஆயிட்டான்”. கூவினான் அம்பலவாணன்.
“நீதான கேட்ட?”
“அப்பால!”
“நீதானே…. நீதானே…. என் நெஞ்சில் தட்டும் சத்தம்……”
“ஓண்ணியுமில்ல! எவ்ளோ தொலவு போவுதுன்னு நீதான் அப்பால ஸொல்ரே! பிரியுதா?”
“ஏண்டா! இப்படி அபசகுனம் சொல்ல வரே?”
“உனிக்கு இம்மாந்தூரம் இட்டாந்து வுட்டேன்! நீதான் துரை மாதிரி கபிலாத்து பண்றே!”
“சரிடா! இப்ப என்ன பண்ணனும்? நீ தான் சொல்லணும் ப்ரோ!”
“ஓகே! நல்லா கவர் பண்ணிட்டேன்னு வுட்டுடாதே! அது திடீர்னு நயுவிடும் அப்பால! இதுங்கள இப்பல்லாம் நம்ப முடியாது.”
“என்னதான் சொல்ல வரே?”
“அத்த நல்லா கேளு! நீ எங்கல்லாம் இட்டுகிணு போனாலும், செலவு உண்ணுதுதான். அது பர்ஸ தொறக்காது. உனுக்கு மன்ஸில பகீர் அடிக்கும்- காசு போச்சுண்ணா. பேஜாரயிடும்! ஆனா கலங்காத!”
“அது இன்னாதான் ராட்சஸியானாலும் இப்போ ஒன்ணியும் பண்ணாது. தலிய மட்டும் ஆட்டும்! நல்லா சாப்பிடும்! சீன் போடும்! சினிமா பாக்கும்! இடைவேள நொறுக்கு தீனி தின்னும். சினிமாவும் காட்டும்! அவ்ளோதான்.”
‘இத்த புச்சிகிணு வூட்டுக்கு இட்டாந்தே- உங்கப்பன், ஆத்தாள் வூட்டுக்கு உள்ள வுடுமா? உண்ணியும் வெரட்டி வுடுமா ஆன்னுட்டு திங்க் பண்ணு. செட் ஆவுமா. அத்தையும் கணுக்கா பாரு!”
“ஸரிப்பட்டா புட்சிகோ! இல்லினா கயட்டி வுட்டுடு”
“ஏண்டா! கதையை மாத்தறே?” காதல் பண்ணுனு நீதானே சொன்னே?”
“கரீட்டு! எத்தினி நாளுடா? காதல் முடியற ஸொல, உனுக்கு நல்லாவே வெளங்கும்”
அம்பலவாணன் கிளம்பி விட்டான். இனிமேல் அவனைப் பிடிப்பது என்பது குதிரைக் கொம்புதான்! ஆனா இந்த விஷயங்களில் அவன் கணிப்பு சூப்பர்தான்.
நான் மெதுவாக அசை போட்டபடி கிளம்பவே, மொபைல் “அச்சச்சோ! அச்சச்சோ!” என்றது. அவள்தான் கூப்பிட்டாள்.
“டேய்! வைரமுத்து கூட போட்டி போடுவ போல! நல்லா எழுதியிருக்க கண்ணா! எனக்குப் பிடிச்சுது. என்னை எப்ப பிடிக்கப் போற?” மல்லிகா பொலபொலத்தாள்.
எனக்கு இன்னும் சூடு ஏறியது. எப்படி இவள் இப்படி விழுந்தாள் என்னிடம்? என்று.
“செல்லம்! எங்கே போலாம்? மழை அறிவிப்பு குடுத்திட்டாங்க! நகரமே வெள்ளக் காடாயிடுமாம்.”
“அப்போ போட் ல கூட்டிட்டு போ! டோல் கேட்டும் ஃப்ரீயாம். ஜாலியா தண்ணீல அளைஞ்சு நீ என்னையும் அளையலாமே. என்னடா கம்முனு ஆயிட்டே?”மல்லிகா இன்னும் பரபரத்தாள்.
“காதல் கையில் கிடைக்கும்வரை ஜொள்ளுதான்! அது கையில் அகப்பட்டு விட்டால், முள்ளு தான்” யாரோ சொன்ன வரிகள் தலையில் ஸ்க்ரோல் ஓடின.
மேம்பாலம் இருக்கற இடமாப் போலாம்! நானும் ஜோக் அடித்தேன் அவளிடம்.
ஒருவழியா, சத்யம் சினிமா கிட்ட மீட் பண்ணலாம்னு அவ சொல்லிட்டா. அங்கேயே சாப்பிடலாம்னும் பிளான் பண்ணி, ஆயிரம் விளக்கு மெட்ரோ அருகில் வந்தும் விட்டாள்.
காதல் உணர்வு, பெண்களை எந்த அளவு தைரியசாலிகளாக்குகிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று நான் நினைத்தேன்!
நேரில் பார்த்ததும் அவள் ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடிப்பாள் என்று என் சினிமா மூளை தெரிவித்தது!
ஏமாந்ததுதான் மிச்சம்! “ஹாய் என்றாள்”
மெட்ரோ நிலையம் படிக்கட்டில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தாள். “வாடா! வந்து நில்லு! படம் பிடிக்கலாம்.” என்று என்னைக் கூப்பிடுவாள் என்று பார்த்தேன். அவள் மௌனமாக பிளாட்பாரத்தில் இறங்கி வந்து, “என்னடா? என்ன ட்ரீட் இப்போ?” என்று அவள் டைம் டேபிளை ஆரம்பித்தாள்.
“படம் போலாமா?”
“போடா! மழை வரும்னு லோ லோன்னு அலஞ்சு திரிஞ்சு மைக்குல சொல்லிட்டுப் போறான் இல்ல? நாம எப்பிடி சினிமா பார்க்க முடியும்?”
“சரி! மெட்ரோல ஏர்போர்ட் வரை போயிட்டு அதுல திரும்பி வந்து எறங்கிடலாம். அங்கே சங்கீதால சாப்பிடலாம்.” என்று என்னுடைய ஐடியா சொன்னேன்.
மலர்ச்சியுடன் கை குலுக்கினாள். “உனக்குக் கூட நல்ல ஐடியா வருதுடா!”
அப்போது எனக்கு கொஞ்சம் பெருமை வந்தது.
ரயிலில் ஏறி, ரெண்டு சீட் இருக்கை அருகில் முதலில் நின்றும், பிறகு சீட் பிடித்தும் த்ரில்லிங்க் ஆக இருந்தது. கூட மல்லிகா நின்று என் கையைப் பிடித்தது எல்லாம் ரொம்ப ஜாலியாக இருந்தது.
மல்லிகாவின் கூந்தலில் வாசனை மல்லிகை! மனசில் காமத்தையும் ஆசையையும் கிளறியது. அவள் பக்கத்தில் அமர்ந்து பயணம்! இடைவிடா பேச்சு! என்ன பேசினாள்? நான் என்ன பதில் சொன்னேன் என்பது சர்வரில் பதிவாகவில்லை. சந்தோஷம் மட்டும் அடிக்கடி பதிவானது.
மெட்ரோ டிக்கட் அவள் எடுத்தாள்! அம்பலவாணன் சொன்னது தப்பு- அவள் பர்ஸ் திறக்க மாட்டாள் என்று.
ஓட்டலில் என் செலவு! ஜாலியாக ஆயிரம் விளக்கில் வந்து இறங்கும்போது அவளை மீண்டும் ஒரு தடவை பார்த்துக் கேட்டேன், “செல்பி எடுக்கலாமா?”
“ஏன் அதை வச்சு நாளைக்கு கட்டாயக் கல்யாணம் செய்யவா?” பளீர் என்று கன்னத்தில் விழுந்த மாதிரி இருந்தது.
“அப்ப லவர்ஸ் எல்லாம் பல போஸ்ல செல்பி எடுக்கிறாங்க! அங்க பாரு அவுங்க ரெண்டு பேரும் எத்தனை செல்பி எடுக்கிறாங்க?”
மல்லிகா மலர்ச்சியுடன் சொன்னாள், “யாரு லவர்ஸ் இங்கே?”
நான் என்னையும் அவளையும் காட்டினேன் ஜாடையாக.
அவள் தீர்மானமாகக் கேட்டாள்,
“நான் காதலிக்கறேன்னு உங்கிட்ட சொன்னேனா? காதலிச்சாதான் இந்த மாதிரி நாம மீட் பண்ணனுமா?
டேய்! ஒண்ணு புரிஞ்சுக்கோ- பழக்கம் காதலாகாது. போன வாரம் ஆரம்பிச்சு இன்னிக்கே நீ ஹனிமூன் போலாம்னு சொல்லத் தோணுதோ?
ஓருவேளை என்னைப் பிடிச்சிருந்தா, காதல் கத்தரிக்காய் இல்லாமல், எங்க வீட்டுக்கு வந்து பெண் கேளு! இப்ப இல்ல! கொஞ்சம் என்னை நீ புரிஞ்சுகிட்ட பிறகுதான். அதுக்குள்ள எனக்கு, புதுப் பழக்கமான உன்னைப் புருஷனாப் பாக்க முடியுமான்னு நானும் யோசனை பண்ணனும்.
நேற்று பழக்கம்! இன்று காதல்… நாளை கலியாணம்… ஹனிமூன்… என்பதெல்லாம், படத்துல இல்லன்னா கதைல வரும். வாழ்க்கையில ஒத்து வராது.”
“ஏய்! அப்ப நீ ஜொள்ளு விடறமாதிரி பேசினதெல்லாம் என்ன?” எனக்கும் கேட்கத்தெரியும் என்று கேட்டே விட்டேன்.
“ஏண்டா அப்பாவியா இருக்கே? இப்பல்லாம் ஆண் பெண் ஜொள்ளுப் பேச்சு ரொம்ப சகஜம். தொடறதும், கட்டிப் பிடிச்சுக் கசக்கறதும், பேச்சோடதான்! சம நிலையில், சமூக முன்னேற்றம் இதுதான். பெரும்பாலும் புத்தியுள்ள யாரும் எல்லை மீறுவது இல்லை. அதிகபட்சம், வாட்ச் அப்ல கிஸ் அனுப்புவாங்க.”
“பொறுப்பான ஆண் பெண் இந்த உச்சத்தை மீற மாட்டாங்க. பழக்கமும் பேச்சும் ரெண்டு பேருக்கும் புடிக்கும். ஆனா இந்த இன்பத்தை இத்தோட விட்டுடறதுதான், நம்ம வாழ்க்கையைக் காப்பாத்தும். இதற்கு மீறின உச்சங்களுக்காக நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.”
மல்லிகா சொல்லச் சொல்ல, எனக்கு என் அக்கா கார்த்திகா நினைவில் வந்தாள்.
ஒருவேளை அவள் இப்படித் தெளிவாகவும் தீர்மானமாகவும் அன்று அவளுடைய காதலனிடம் பேசி இருந்தால் இன்று வாழ்வில் மணமுறிவுடனும் மன வேதனையுடனும் மீண்டும் எங்கள் வீட்டில் குடி புகுந்திருக்க மாட்டாளோ?
“காதலின் உச்சம் என்பது இதுதானோ?”