ஒரிஜினல் டெசிஷன் அவுட்!





(கதைப்பாடல்)

அடர்ந்த காட்டின் கும்மிருட்டில்
ஆல மரத்தின் விழுதொன்றில்
உயர்ந்த கால்கள் ஒன்றாக்கி
உயர்தவம் செய்தது ஒருசிலந்தி!
கடவுள் கருணை மிகக்கொண்டு
கருப்புச் சிலந்தி தனைநெருங்கி,
‘என்ன வேண்டுமெ?’னக் கேட்டார்.
இருகை கட்டிப் பணிவாக…
‘வாயே இல்லா முகத்தோடு
வாழ்க்கைத் துணையை’ வழங்கென்று
வரமாய்க் கேட்டது அச்சிலந்தி
வழங்கிப் போனார் ஒரு துணையை!.
கடவுள் தந்த துணைவிக்கோ
கண்கள், கைகள் தாமுண்டு
கருப்பு நிறமும் அதற்குண்டு
முகத்தில் உண்ண வாயில்லை!
கணவன் சிலந்தி மகிழ்ந்ததுவாம்
கடவுள் கருணையை வியந்ததுவாம்!
எட்டுக் கைகொட்டிச் சிரித்தபடி:
இறுமாபெய்தி இருந்ததுவாம்!
மனைவிச் சிலந்தியை வலையிலிட்டு
வலம்வரச் சென்றது அச்சிலந்தி!
வலையில் பற்பல பூச்சிகளாம்
வந்து தின்ன யோசனையாம்!
திரும்பி வந்து பார்த்தாலோ
மருந்துக்குக்கூட இரையில்லை!
மனமிக வாடி மறைந்தபடி
என்ன நடக்குது எனப்பார்க்க…
மனைவிச் சிலந்தி கால்களினால்
மளமளவென்று உணவெடுத்து
அக்குள் பகுதியில் அமைதிருக்கும்
அகண்ட துளைவழி அனுப்பியதாம்!
கடவுள் நேரில் காட்சிதந்து
கட்டிய மனைவி வாய்போக்க
வரமா கேட்டாய் வகையின்றி??!!
எண்ணிப் பார்நீ எதுநியாயம்?!
தொலைக்காட்சி நடுவர் போலவரும்
தோள்கள் தொட்டு வருத்தமுற்று
கொடுத்த வரத்தை தவறென்று
குறிப்பாய்ச் சொல்லி, மறைந்தாராம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |