ஒட்டு
கதையாசிரியர்: ஜே.எம்.சாலி
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2026
பார்வையிட்டோர்: 512
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விருந்தாளியாக வந்திருந்த புகாரி கண்கள் விரிய அறையைப் பார்த்தான்.
அமீர்பாட்சா ஆயிரக்கணக்கில் அள்ளி இறைத்திருப்பான் போலிருக்கிறது. அவன் அறையில் அத்தனை அலங்காரம்.
“இதுதான் என்னோட அந்தப்புரம்! எப்படி இருக்கு?”
“ஒத்தை வாக்கியத்திலே நீயே சொல்லிட்டியே. நான் என்ன சொல்லப் போறேன், அமீர்?”
“அந்தப்புரம் இருக்கு. ஆனா மகாராணி இல்லே! அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாள் என் பெஞ்சாதி. அதனாலே என்ன! உனக்கு விருந்து போட்டுத் திக்குமுக்காட வச்சித் தான் ஊருக்கு அனுப்பப் போறேன்!”
இரண்டு மாத விடுமுறையில் ‘நிக்காஹ்’செய்து கொண்டு திரும்புவதற்காகப் புகாரி ஊருக்கு வந்திருந்தான். வெளி நாட்டில் அமீரும் அவனும் ஒன்றாகப் பணி புரிந்தவர்கள். பக்கத்து ஊர்க்காரன் என்றாலும் அமீரின் வீட்டைத் தேடி இப்பொழுதுதான் புகாரி வந்திருக்கிறான்.
“அமீர், அந்த ஜன்னலைத் திறந்து வையேன்!”
“புழுக்கமா இருக்கா? ஏண்டா ஏ.ஸி. பொருத்தலைன்னு கேக்கறியாக்கும்? சீக்கிரமே போட்டுட வேண்டியதுதான்!”
“இல்லே,அதுக்காக நான் சொல்லலே அமீர்!”
“சரி, ஜன்னலைத் தெறந்து வக்கிறேன். தெறக்க வேண்டிய நேரந்தான்!” அமீர் ஜன்னல் கதவுகளைத் திறந்தபடி சொன்னான். “நல்ல காத்து வரும்…காத்து மட்டுமில்லே, கண்ணுக்கு விருந்தும் கெடைக்கும்!”
இரண்டு நிமிஷம் அமீர் ஜன்னலருகிலேயே நின்றான். எதையோ தேடும் ஆவல் கண்ணில் மிதந்தது. சில வினாடி களில் அவன் முகத்தில் செழிப்பான புன்னகை.
பிறகு நண்பனிடம் வந்தான்.
“லீவு கரைஞ்சிட்டேயிருக்கே. கலியாணம் எப்ப வச்சிருக்கே? பெண் பாத்தாச்சா? வரும்படி எவ்வளவு எதிர் பார்க்கிறே?”
புகாரி சன்னமாகச் சிரித்தான், “உனக்குத் தெரியாமலா?” என்றான்.
“யார் கண்டாங்க? யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நிக்காஹ் முடிச்சிட்டுச் சொல்லாம கொள்ளாமே பயணம் போனாலும் போயிடுவே! சரி, இப்ப உனக்கு விருந்து தரப் போறேன். ஆரம்பிக்கலாமா?”
புகாரி கொஞ்சம் அதிர்ந்தான். மதுபானத்தைக் குறிப்பிடுகிறான் நண்பன்.
“அமீர், வீட்லேயும் கூட இந்தப் பழக்கமா?”
“இதுதான் பாதுகாப்பான இடம்!”
“இங்கே யாராச்சும் பாத்தாங்கன்னா…?”
“அந்தப்புரமாச்சே…… அத்து மீறி யாரும் வரமாட்டாங்க!” அமீர் பெட்டியைத் திறந்தான். வெளிநாட்டு மதுபானம்! பாட்டிலை உயர்த்திக் காட்டினான். பெருமிதத்தோடு,
“சே, நீ சுத்த மோசம்!”
“ஆமாமாம்! இங்கே வந்து எதைச் செய்யாமே இருக் கோம் – இதை மட்டும் ஒதுக்கி வக்கிறதுக்கு?”
“இருக்கோம்னு சொல்லாதே! இருக்கேன்னு சொல்லு”
“உபதேசம் ஆரம்பிச்சிட்டியா? மதுபானம் குடிக்கிறது ஹராம், விலக்கப்பட்டது. பாவம் அப்படி இப்படின்னு அளப்பியே! நீ சரியான கோழை…”
புகாரி புன்னகை செய்தான், அவன் சுபாவம் அப்படி. பாவ புண்ணியம் பார்க்கிறவன். வளர்ந்த சூழ்நிலை அந்த மாதிரி,அம்மா அவனை ஆளாக்கிவிட்ட விதம் அப்படி.
அமீர் பானத்தை ருசித்தபடியே, “வெளிநாட்டிலிருந்து கொண்டார்ந்தது பூரா குளோஸ். இது முந்நூறு நானூறு குடுத்து இங்கே வாங்கினது,” என்றான்.
குடித்தபடி ஜன்னல் பக்கம் போனான். வெளியே பார்த்தான். முகத்தில் மகிழ்ச்சி மின்னல். ”மறைஞ்சிருந்து பாக்கறதே ஒரு தனி சுகம்பா!” என்றான். நண்பனை அருகில் வரும்படி சாடை காட்டினான்.
புகாரி திகைப்புடன் பார்த்தான். எதிரே தாழ்வான பழைய வீடு தெரிந்தது. முற்றத்தில் ஒரு பெண் வேலையாக இருந்தாள். அங்கே எது நடந்தாலும் இங்கிருந்தபடி பார்க்கலாம்.
“பார்! அந்த ஒட்டு!”
“ஒட்டா? அப்படீன்னா?”
“பருவச் சிட்டுன்னு சொன்னாத்தான் உனக்குப் புரியும். நான் அவளுக்கு வச்சிருக்கிற பேர் ஒட்டு.”
புகாரிக்கு அருவருப்பாக இருந்தது.
அடுத்த வீட்டுப் பெண்ணைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பதில் இத்தனை பெருமையா இவனுக்கு?
“ஒட்டுன்னு ஏன் பேர் வச்சேன் தெரியுமா? இப்பப்பார்… அவள் சேலையிலே எத்தனை ஒட்டு! ஜாக்கெட்லே கூட ஓட்டு…!”
புகாரி முகத்தை திருப்பிக்கொண்டு நாற்காவிக்கு திரும்பினான்.
அமீரும் திரும்பி வந்தான்.
“‘அமீர், இந்தப் பெண் யார்?”
“ஒரே ஒரு தடவை பாக்கறதுக்குள்ளேயே இவ்வளவு அக்கறையா? நீ பெரிய ஆளுப்பா!” சிரித்தான் அவன், “அந்தப் பெண்ணைப் பத்திக் கேட்டே இல்லே… இல்லாதது பணம் காசு. அவளிடம் பரிபூரணமா இருக்கிறது என்னாங்கிறதைத்தான் பாத்தியே! ஒட்டும் கிழிசலுமாய்க் கட்டிக் கிட்டாலும், உடம்பு எப்படி இருக்கு பாத்தியா? தினம் பத்துத் தடவையாச்சும் இப்படிப் பார்த்திட்டேயிருப்பேன். என்னத்ரில்? அடாடா!”
புகாரி மௌனமாக இருந்தான்.
கடைக்கண்ணால் நண்பனைக் கவனித்தான் அமீர். “கடைத் தெரு டீக்கடையிலே அடுப்பு வேலை பாக்கற நயினா முகம் மதுவுடைய மகள் ரஜியா சுல்தானா… அழகிலே சுல்தானா தான்! பக்கத்திலே உக்காந்து நாள் பூராபாத்துக்கிட்டிருக்கலாம் போல அழகு!”
புகாரி பேசவில்லை.
“நயினா முகம்மதுக்கு தினச் சம்பளம் நாலு ரூபா. நண்டும் சிண்டுமா புள்ளைகுட்டிங்க அதிகம். மூத்தவளாச்சே? அதனாலே ரஜியாதான் குடும்பத்தைக் கட்டியிழுத்துக் கிட்டிருக்கா. என் பணத்தைக் காட்டி இவளை சுலபமாய் வளைச்சுடுவேன். ஒட்டுதானே! அலட்சியமாய்ச் சிரித்தான் அமீர்.
“அமீர், இன்னொரு ஒட்டுக் கதை உனக்குத் தெரியுமா?”
“அது என்ன புதுக் கதை?”
“இல்லே, பழசுதான். பாத்திமா நாயகியோட கதை எந்தப் பாத்திமான்னு கேட்டுடாதே. நான் சொல்றது நபிகள் நாயகத்தோட மகள் பாத்திமா நாயகியைப்பத்தி. ஒரு நாள் அவங்க பன்னிரண்டு ஒட்டுப் போட்ட துப்பட்டியைப் போர்த்துக்கிட்டு வெளியே போய்க்கிட்டிருந்தாங்க. அதைப் பாத்து அதிர்ச்சியடைஞ்சிட்டார் நாயகத்துடைய நண்பர் உமர். நபிகள் நாயகத்துக்கிட்டே போய், ஒரு நபியுடைய புதல்வி ஒட்டுப்போட்ட துப்பட்டியைப் போட்டுட்டுப் போக லாமான்னு கேட்டு அழ ஆரம்பிச்சுட்டாங்க. நாயகம் …”
“ஏன் நிறுத்திட்டே? சொல்லு புகாரி.”
“நண்பர் கேட்ட கேள்விக்கு நாயகம், ‘என்னுடைய மகள் அப்படியே இருக்கட்டும். ஏன்னா சொர்க்கத்திலே முதலிடம் கெடைக்கிறது இது மாதிரி எளிமையா உள்ளவங்களுக்குத்தான்’னு சொன்னாங்களாம்.”
அமீர் விழித்தான்.
“என்ன யோசிக்கிறே அமீர்? உன் கையிலே இருக்கிற புட்டி உன் இருதயத்தைப் பாறாங்கல் ஆக்கியிருக்குது! இல்லையா?”
“உனக்கு என்ன ஆச்சு?” என்று அமீர் கேட்டான்.
“ஒண்ணும் ஆகலே… உன் கண்ணை மறைச்ச ஜன்னல் என் மனசைத் திறந்திருக்கு! அவ்வளவுதான். உடனடியா ஒரு பெண்ணை நான் காப்பாத்த வேண்டியிருக்கு”.
“எந்தப் பெண்ணை? யாரிடமிருந்து காப்பாத்தப் போகிறே?”
“நாலு ரூபாய் வருமானத்திலே குடும்பத்தை நடத்தத் தெரிஞ்ச பெண்ணை! ஒட்டுச் சேலையைப் பட்டா நெனைச்சி பகட்டில்லாமே வாழத் தெரிஞ்ச பெண்ணை! அவளை உன் கிட்டேயிருந்து- உன்னைப் போன்ற பிசாசுகளிடமிருந்து காப்பாற்றியாகணும்.”
“புகாரி உனக்குப் பைத்தியமா என்ன?”
“இல்லே… ரொம்பத் தெளிஞ்ச மனசோடுதான் பேசறேன், அமீர். நாளைக்கே என் அம்மாவை வரச் சொல்லி ரஜியாவைப் பெண் கேட்கச் சொல்லப் போறேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன்னா இந்த ரஜியா மாதிரியே அவங்களும் வயித்தைக் கட்டி வாயைக் கட்டி மானத்தோடு வாழ்ந்து என்னை ஆளாக்கிவிட்டவங்க.”
அமீரின் கையிலிருந்த மதுப்புட்டி கீழே நழுவி விழுந்தது. நண்பனையே வெறித்துப் பார்த்தான்…
– 1981, குமுதம்.
– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி.
![]() |
ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உதிர்ந்த மலர்
என்.ஸ்ரீதரன்
July 20, 2026
கல்விக் கண்
இரா.கலைச்செல்வி
July 20, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 20, 2026
