கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 20, 2025
பார்வையிட்டோர்: 1,194 
 
 

என்னையும் ஒரு எழுத்தாளனாக ‘தாயகம்’ பத்திரிகையில் அறிமுகப்படுத்திய முதல்ச் சிறுகதை.

திலகம் ஐந்து பிள்ளைகளையுடைய ஏழைத்தாய். இளவயதினள். அவள் “பொண்ணு” பெரிசாய் வந்து பிள்ளை பெற்றுக்கிறபோதும் அவள் ஒருவேளை பிள்ளைப் பெற்றுக்கலாம். 16 வயசிலே அவளுக்கு கல்யாணம் நடந்திருந்தது. இப்ப அவளுக்கு வயசு இருபத்தெட்டு.

இது பொதுவான சேரி நிலைமை. மூத்த பையன் பிரதீப்புக்கு எட்டு வயசு, அடுத்த ராணிக்கு ஆறு. ரூபினாவுக்கு நான்கு வயது. நோனாவுக்கு வயது மூன்று. ராஜாவுக்கு இரண்டு. இப்ப வயிற்றிலே ஒன்று. ஆணா பெண்ணா என்பது அவள் கையிலும் இல்லை. மூத்த இரண்டும் பள்ளிக்கூடம் போய்வருகிறார்கள். ஆனால் அவர்கள் படிக்கிறதாகத்தான் தெரியவில்லை.

அவள் அன்றாடம் தேயிலை ஸ்டோரில் பக்கிங் வேலை பார்க்கும் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அம்மா, சகோதரங்கள், அவளுமே அங்கேயே வேலை பார்க்கிறார்கள். தேயிலை ஸ்டோர்கள் கொழும்பில் எல்லாப் பகுதியிலுமே இருந்தன. அவள் புருசன் காபரிலே கூலியாளாக வேலை செய்பவன். அவனும் அப்படியான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். கொழும்புச் சேரிப் பகுதியில் கசிப்புக்கும் கஞ்சாவுக்கும் ஆட்படாத இளைஞர்கள் இல்லை என்றே பொதுவாகச் சொல்லலாம். அவனும் அந்த பலவீனம் உள்ளவன். கொஞ்ச நாளாய் ….

“வேலைக்குப்போகக்கூடாது. நீ வீட்டிலே இருந்து குழந்தைகளைப்பார்” என்று அவள் கர்ப்பிணித்தனத்தைப் பார்த்துச் சொல்லியிருந்தான். அவன் பேச்சைக்கேட்டு அவளும் வேலைக்குப்போகாது விட்டிருந்தாள். ஆனால் அவன் பேச்சில் உள்ள வீராப்பு செயலில் இல்லாதபோது அவள் வெடித்துக்கொண்டிருந்தாள். ஏசினாள்.

அம்மணமாக ராஜாவும் நோனாவும் அழுதுகொண்டிருந்தனர். பசியால் சிறிசுகள் அழுகிறபோது கர்ப்பிணியான அவளுக்கு பொறுக்கமுடியாது இருந்தது. படுக்கிறதில மட்டும் சமத்துக் காட்டுறபுருசன். ‘தன்புத்தியைச் செருப்பால் அடிக்கவேணும் என்று கூறி அழுதாள். கிறிஸ்மஸ் போனசாக நானூறு ரூபாய் என்னவோ அவனுக்கு வேலைத்தலத்தில் கொடுத்திருந்தார்கள். மனிசன் கடன், கிடன் என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கசிப்பையும், கஞ்சாவையும் வாங்கிவந்து எதுவுமே கவனியாமல் இருந்தது, அவளுக்கு என்னவோ நெருப்பிலே எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது. கல்லுளிமங்கனாக எப்படி அவனால் இருக்கமுடிகிறது? அழுதாள். அவளின் வற்றிப்போன மார்பு, காய்ந்த தேகம், இதன் மத்தியிலே

வயிற்றில் பிள்ளை வேறு! அவள் அழகி இல்லை. ஏழை. தன்மேல் கவிந்த விதியை நினைத்து அழுதாள். அவன் வக்கிரம் பிடித்தவனா? இல்லையா? என்பதை அவளால் அறிய முடியவில்லை. மரியம் மர்மமானவனாகவே இருந்தான்.’யேசுவே! என்ர புருசனுக்கு நல்ல புத்தியைக்கொடுத்து பிள்ளைகளை நல்லபடி வாழவைக்கமாட்டாயா? அவள் யேசுவை வேண்டுவாள். “பசியிலே பிள்ளைகளைப் போட்டு அந்தரிக்க விடுகிறாயே நீ ஒரு மனிசனா?” திலகத்தின் சூடான பேச்சு அவள் வயிற்றெரிவில் இருந்துகிளம்பியது. மரியமை நோவதிலும் அர்த்தம் இல்லையா? அவன் சமயங்களில் சொல்வது அவளுக்கு தெரியும். “இதோ பார் கஞ்சாப் புகைக்குப் பலியாகி விட்டேன். இப்ப இது இல்லாமல் என்னால் இருக்கமுடியாது.”

அவளுக்கு அப்பத்தைய மரியம் ஞாபகத்துக்கு வந்தான். கட்டான கரிய மேனி, தினமும் வாசிகசாலை வளவில் உடற்பயிற்சி செய்கிற ஒரு

நாட்டுப்புற இளைஞன் இளவயசிலே, மக்கோனா பள்ளிக்கு அனுப்பப்பட்டிருந்தான். அது ஆச்சரிமம் போல் ஒரு அமைப்பு. கொழும்பில் மக்கோனாப்பெடியள் என்றால் சனம் திருந்தியவனாக இருந்தாலும் சந்தேகமாகப் பார்க்கும். ஏதோ களவு விசயமாக பெத்தவங்களே அங்கே அனுப்பியது அவனை வெகுவாகப் பாதித்தது. அங்கே அவன் அம்மா, சகோதர உறவுகளின் அன்பை விரும்பி ஏங்குகிற ஒரு பிறவியாக மாற்றப்பட்டிருந்தான். ஆனால் திரும்பி விந்தபிறகும் ஒரு அன்னியப்பட்டவனாக, அனாதையாக, வாழ்ந்தான். சீரழிந்தான். பெத்தவர்கள் அவனைக் கவனிக்கவேவில்லை.

திலகம் மரியத்தின் பக்கத்து வீட்டுக்காரி. அவன் திரும்பி வந்தபோது அழகியாகப் பருத்திருந்தாள். சாது, தேயிலை ஸ்டோருக்கு சகோதரங்களுடன் வேலைக்குப்போகும் வழியில் மரியம் வந்து நிற்பான். அவளைப்பார்த்து சிரிப்பான். அவன் வேலையில்லாமல் றோட்டு வழிய சீரழிந்த காலத்தில் அவளைக் காதலிக்கிற முயற்சிகளில் இறங்கியிருந்தான். அவன் அனாதையாக நின்றது.திலகம் வீட்டுக்காரருக்கு பரிதாபமாக இருந்தது.”எங்கேயும் இப்படி இருப்பார்களா? பெத்ததை எப்படி உதறி எறியமுடிகிறது? றோட்டு வழியே அங்கேயும் இங்கேயுமாய் படுத்து சீரழிந்தபோது அவனைக் கஞ்சாப்பழக்கமும் கசிப்புப்பழக்கமும் தொத்திக் கொண்டது. அதைச் சொல்லி மரியம் இப்பவும் கவலைப்படுவான். அந்த வாழ்வில் அவனுக்கு நண்பர்களும் எதிரிகளும் கூட இருந்தனர். அரசியல் போஸ்டர் ஒட்டுற வேலையை, அடிதடிகளை செய்கிற கூட்டத்தில் அவனும் ஒருத்தன். அந்த மாதிரியான நீச்சலடிப்பின் மூலமே இப்ப அவன் காபரில் கூலியாளாய் இருக்கிறான்.

அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட திலகத்தின் அம்மா அவனுக்கு தங்கள் மாட்டை மேய்த்துக்கட்டுற வேலையைக் கொடுத்தாள். வீட்டிற்கு முன்னால் கட்டிய சிறிய விருந்தினர் கொட்டிலில் படுக்கிறதுக்கும் இடம் விட்டாள். காலையில் கேம்பில் இருந்து மாட்டை விரட்டிக்கொண்டு போய் குளத்தங்கரைப் பக்கத்தில் கட்டி விட்டு வருவான். மத்தியானம் தண்ணி எடுத்து வைக்கணும். இடம் மாற்றிக் கட்டணும். பிறகு மாலையில் அவிட்டுக்கொண்டு வரணும். இதுதான் அவன் வேலைகள். காம்பில் இருந்து விரட்டிக்கொண்டு போகையில் சந்தோசமாய் அவன் போவதைப் பார்த்திருக்கிறாள். காம்ப் சதுப்புப்பாதையில் அவன் அப்படிப் போறதைப் பார்க்க திலகத்துக்கு வேடிக்கையாக இருக்கும்.

அது ஒரு காலத்தில் ஆமி காம்பாக இருந்த ஒதுக்குப்புறமான பள்ளப்பகுதி. அப்ப, எத்தனையோ கொலைகள், சித்திரவதைகள் நடந்ததாக சொல்வார்கள். ரயில்வேப் பகுதியில் மரக்குடில்களில் இருந்தவர்கள் ஆமிக்காம்பை எடுத்தவுடன் அங்கே வந்து குடியேறத் தொடங்கினார்கள். அரசாங்கமே பிறகு அவர்களுக்கு அந்தப் பகுதியைக் கொடுத்துவிட்டது. இப்ப திலகத்திட பேரில் தனிவீடே அங்கே இருக்கிறது. அவளின் அம்மா கொஞ்சம் கெட்டிக்காரி. தான் குடியேறிய சமயம் மகளுக்கும் என குடிசை ஒன்று போட்டிருந்தாள். தொடக்கத்தில் எல்லாருக்கும் பயம். வெட்டிய பகுதி எல்லாம் மண்டை ஒடு, எலும்புகள் வந்து கொண்டிருந்தன. ம். இப்ப அந்தப் பகுதியில் காணிக்கு விலை அதிகம். இப்ப பாம்புகள் மட்டுமே தொல்லை கொடுத்தன. அடை மழை பெய்தால் அந்தப்பகுதியே வெள்ளக்காடாகப் போய் விடுவதும், அந்த நேரங்களில் நகரப் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக இருந்து விட்டு மீள வருவதும் அவர்களுக்குப் பழகிப் போய் விட்டது.

திலகம், அவன் மேல இரக்கப்பட்டாள். கஞ்சி வந்து கொடுக்கும் போது அவளையே முளித்துப் பார்த்து கதைக்கும் போது அவன் மேல் ஏற்பட்ட பரிவு, காதலாக மாறியது. அவனைத் திருத்தணும் என்று முடிவு செய்தபோது அவளுடைய அப்பா சந்னியாசம் பெறுகிறேன்’ என்று எங்கேயோ ஒடிப்போய் விட்டார். எங்கே என்று தேடியபோது அவர் இன்னொரு பெம்பிளையைச் சேர்த்துக் கொண்ட சேதி தெரிந்தது. பணக்கஷ்டம், மனக்கஷ்டம் மத்தியிலும் அம்மா வேற அவளுக்கு மாப்பிள்ளை’ ஒருத்தனைத் தேடிக் கொண்டிருந்தாள். அப்ப அவள் மரியத்திடம் அம்மாவிடம் நேரில போய் “என்னை உங்க மருமகளாக ஏத்துப்பீங்களா?”என்று கேட்டாள்.

அவருக்கு அவள் மேல் நல்ல அபிமானம் இருந்தது.

“என் மூத்தவன் தான் உதவாமல் போய்விட்டான். நீ என்ர இரண்டாவது மகனைக் கட்டன்” என்று பரிவுடன் கேட்டார்.

“இல்லை மாமி, எனக்கு மரியத்தை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கு அவரோட சந்தோசமாக வாழ்ந்து காட்டுகிறேன்” என்று சம்மதம் பெற்றாள்.

மரியத்துக்கு அவள் மதிப்பானவளாகத் தெரிந்தாள். தன்னைக்கட்டுகிறேன் என்று கட்டியது அவன் நெஞ்சில் வசந்தங்களைத் துாவியது. அவனுக்கு அவள் மேல் ஆழமான அன்பை ஏற்படுத்தியது. அவளது வாழ்க்கை சந்தோசமாக ஒடியது. அவள் ஒவ்வொரு பிள்ளையை பெத்துக்கிறபோதும் அவன் எவ்வளவு ஆதரவாக பொறுப்புடன் இருந்தான்.

ராஜா பிறந்தபிறகு அந்த விபத்து நடந்தது. காபரில் வேலை செய்கிறபோது திடீரெனப் பாரம் இறங்கியதில் அவன் வலது கை மோசமாகப் பாதிக்கப்பட்டது. விரல் நுனி ஒன்று நசிந்து சிதைந்தது. வலியால் துடித்த அவனை அவள் கண்ணை இமைகாப்பது போல் பார்க்க வேண்டியிருந்தது. கவனித்தாள். அவன் அழுதான், அரற்றினான். அதன் பிறகே கஞ்சாப் புகைக்கும் பழக்கம் சற்றுக் கூடுதலானது.

விபத்து நடக்க முதல் இருந்த மரியம் திரும்ப வரமாட்டானா என்று அவள் ஏங்குவாள். அவன் அவள் நெஞ்சைக் கவர்ந்தவன். இரவுகளில் அவன் பக்கத்தில் தூங்கும் போது இதைச் சொல்லியே கவலைப்படுவாள். விபத்து நடக்க முதல் நெஞ்சை நிமிர்த்திய அவனை அவளால் மறக்க முடியவில்லை. இப்ப இருக்கிற மரியம் குடும்பத்துக்கு ஒத்து வராத சன்னியாசம் அரைகுறையாகப் பெற்றவன்.

காம்ப் பகுதியில் “மரியம் நெஞ்சை நிமிர்த்தி நின்ற கோலத்தை அவளால் வாழ்நாளில் மறக்க முடியாது.எத்தனை உயர்வாக என்ர மரியம் நின்றார். இவ்வளவு பிரச்சனைகள் மத்தியிலும் அவள் அவனை விட்டுப் போகாததற்கு அந்த சம்பவமே பெரிய காரணம். இப்ப வயிற்றில் ஒன்றைத் தாங்குவதற்கும். அவளால் அவனை என்றுமே அவமானப்படுத்தி ஒதுக்க முடியாது.

அவள் தங்கச்சி விமலா ஒரு முஸ்லிம் பெடியனுடன் ஒடி விட்டிருந்தாள். அவனது பகுதி ஆட்கள் அவனை ஒதுக்க வேறு வழியில்லாமல் அவர்கள் அங்கேயே திரும்பி வர வேண்டியிருந்தது. சம்சுதீனும் தேயிலை ஸ்டோரில் வேலை செய்கிற சாதாரண தொழிலாளி தான். முஸ்லிம் என்பது பேரில் மட்டுமே இருந்தது. இவன் கடின உழைப்பாளி. அவர்கள் வீடு இல்லாது தவித்தபோது அவள் தன் வீட்டிலே ஆதரித்தாள்.

சம்சுதீன் தம்பி போலப் பழகினான். அவள் அன்புள்ளம் கொண்டவள். கள்ளம் கபடமற்று பழகிற ஆட்களைக்கண்டால் யார் பேச்சையும் கேளாமல் பழகுவாள். உதவுவாள். உரிமை கொண்டாடுவாள் அதே சமயம் நெருப்பு மனம் கொண்டவள்.

அவளின் நேரடிப் பேச்சுகளால் கசப்புற்ற அயலவர்கள் மெல்ல மெல்ல கதை கட்டிவிடத் தொடங்கினார்கள். அது அவள் காதுக்கு எட்டுவதற்கு நாள் எடுத்தது. எட்டியதும் அவள் துடித்துப் போனாள். சம்சுதீனையும் அவளையும் சேர்த்து. ஊருக்கு விவஸ்தையேயில்லை. அவள் அழுதாள்.

ஒரு நாள் பெரிய சண்டையாகி அவள் அம்மா உட்பட உறவுகள் மத்தியில் அவள் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்தாள்.

“அவன் தொட்டுக் கதைக்கிறதுக்கு என்னடி அர்த்தம்?”

அவள் என்ன செய்வாள்? விமலா வீட்டை எதிர்த்து ஒடியவள். தங்கச்சியின் புருசன் என்பதால்.அன்பாகப் பழகியதை, தம்பி போல நினைத்துப் பழகியதை எப்படி விளங்க வைப்பாள்? சாதாரணமாக பெண்ணின் குரலுக்கு வீட்டில் மதிப்பில்லை. வெளியில்..? சம்சுதீனும் எப்படியாவனோ? ஒரு வேளை பிளேட்டை மாத்தி அவனே கதைத்து விட்டால்? ஐயோ என்ர புருசன் சந்தேகப்பட்டால். அவளுக்கு மனசு வெறுத்து விட்டது. அம்மா ஆறு பெண் பிள்ளைகளோடு தனித்து நின்று போராடியவள். அவள் புருசன் இன்னொருத்தியிடம் போனபோதும் அவளுக்கு அந்த மன உறுதி இருக்கிறதே.

உறவுகள் திட்டும் போது அவர்களிடம் கணிசமாக தங்கியிருந்ததால் அவர் மகளுக்காகப் பேசமுன்வரவில்லை.

திலகத்துக்கு அது தெரியும். கடைசியில் விரக்தியில் வீழ்ந்திருந்தாள். இனி புருசன் என்பவன் வந்து திட்டுறதோ அல்லது அப்பனைப் போல ஒடிப் போறதோ நடக்கலாம். இருக்கிற மூன்று பிள்ளைகளுடன் அவள் தனிய வாழ்வாள்.

வேலையால் வந்த மரியம் “என்ன கூட்டம்” என்று அயலில் விசாரித்த போது சம்சுதீன் அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தான். பொன்னுக்கிழவர்,

“தம்பி உன்ரை மனிசி இந்தப் பேச்சுக்களால் பிரச்சனைப்பட்டவள்” என்று அவனைக் கூட்டிக் கொண்டு போய் விளங்கப்படுத்தினார்.

விமலா வெளிறிப் போன முகத்துடன் நின்றிருந்தாள். மரியம் ஒன்றும் பேசாமல் வெளியே போனான். சம்சுதீனைக் கூட்டிக் கொண்டு வந்தான். திலகத்தின் சின்னம்மா,

“தம்பி உனக்கென்ன விசரே?” என்று கேட்டாள்.

அப்ப மரியம் சொன்ன வார்த்தை. அவள் இப்போதும் மெய்சிலிர்ப்பாள்.

“என்ர மனிசியை எனக்குத் தெரியும். நீங்க ஒன்றும் சொல்ல வேண்டாம். அதே போல சம்சுதீனையும் எனக்குத் தெரியும். அப்ப நீங்க போறிங்களா?”

அந்தப் பேச்சின் காரணமாகவே அவளும் எந்தப் பிரச்சனையிலும். புருசன் சன்னியாசக் கோலத்தில் பொறுப்பற்று நடந்த போதும் ஏழ்மையில் வாடி வதங்கிய போதும் பிரியாமல் இருக்கிறாள். மரியத்துக்கு அது தெரியும். ஆனால் நெடுக இப்படி, ஏச்சு வாங்க என்னவோ மர்மமாக நடந்து கொள்கிறான். அதுக்குபிறகு அவன். அவளோடு கதைத்தது ஒரு தோழி ஆதரவாகக் கதைத்தது போல் மெத்தென்றிருந்தது.

‘திலகம் உனக்கு இங்க இருக்கிறது. அந்தரமாக இருக்கும், இந்த வீட்டில் சம்சுதீனையும் விமலாவையும் விட்டிட்டு நாம வெளியில் ஒரு வீடு பார்த்திட்டுப் போகலாம். அரசாங்கத்தாலே ஒரு குவாட்டர்ஸ் வீடு கிடைக்கும் போலிருக்கு.

பிறகு,காம்பை விட்டு விலகி வந்தது.மகிழ்ச்சியாக காலம் ஒடியது. விபத்து நிகழ்ந்தது. மரியத்தின் திடீர் பற்றற்ற போக்கு நீள்வது. அவள் நினைத்து நினைத்து அழுதாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *