ஏம்மே அயுதுனுகீற ?!




தொழில்முறை நடிகையாக இருந்து, வீராச்சாமியைக் கல்யாணம் கட்டியவுடன், பிள்ளை குட்டி என ஆனபின் குடும்பத்தைக் கவனிப்பதிலேயே காலத்தை ஓட்டினாள் கௌரி. வழக்கம் போல அன்றும் வீராச்சாமியுடன் விவாதம்.
“ஏய், இன்னான்றே இப்போ ! சொம்மா தென்துக்கும் கத்தி கூப்பாடு போட்டுனுகீற…” என்று விழி பிதுங்கித் தள்ளாடிய வீராச்சாமி, கௌரி விட்ட அறையில், வாசல் தரையில் பொத்தென்று விழுந்தான்.
“கௌலீ ழீ ழல்லா இலுக்கனு….” என்று கை எடுத்துக் கும்பிட்டவனிடம் இருந்து சற்றைக்கெல்லாம் பேச்சு மூச்சைக் காணோம். பதறி போனாள் கௌரி. கிட்ட நெருங்கி நாசித் துவாரத்தில் விரல் வைத்துப் பார்த்தாள்.
‘நல்ல வேளைக்கு மூச்சிருக்கு !’ என்று தெம்பானாள். குமட்டிய சாராய நெடியைத் தாங்கிக் கொண்டாள். வீராச்சாமியின் அவிழ்ந்த வேட்டியை, இறுக்கிக் கட்டி, அவனைத் தரதரவென குடிசையினுள் இழுத்து, தூக்க முடியாது தூக்கி கயிற்று கட்டிலில் போட்டாள்.
குடிசை மூலையில், ஏதோ நிகழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்த இலவச டி.வி.யை அணைத்தாள்.
சட்டைப் பொத்தான்களை அவிழ்த்து விட்டு, அங்கே கிடந்த ஓலை விசிறியில் லேசாக விசிறி விட்டாள்.
“இந்தாம்மே கௌரீ…வூட்டுல தான் கீறியா ?” என்று குடிசைக் கதவை அடித்தாள் கோமளவல்லி.
கதவைத் திறந்த கௌரி, “யக்கா, இது இம்ச நாளுக்கு நாள் தாங்கலக்கா…” என தன் கணவனின் நிலை குறித்துப் புலம்பினாள்.
“இப்படி வாய் பேசாத இருந்துகினா, அது (வீராச்சாமி) வாயடைக்கிறது கஷ்டங்கண்ணு”
“யக்கா, நீ வேற, ஏய்யா இப்டி குட்சிட்டு வந்து கலாய்க்கிற. நமக்கும் புள்ள குட்டினு ஆகிபோச்சி. ஆனது ஆச்சி, கடலு பக்கம் எப்பதான் போவேனு கேட்டு தான் உட்டேன் ஒரு உடு, அது தாங்காத சுருண்டுகிச்சி” என்றாள் கௌரி.
“அய்யே அடிச்சியாக்கும்… ம்ம்ம்ம்ம், இப்டி செஞ்சீனாக்கா அது உன் காலாண்ட சுத்தி சுத்தி வரும் பாரு !” என்று ஒரு யோசனையும் சொன்னாள் கோமளவல்லி.
“சொம்மாங்காட்டியும் சொல்லாதக்கா !”
“மெய்யாலுமே தாங் கண்ணு, செஞ்சி தான் பாரேன்.”
***
இரண்டொரு வாரங்களில் நல்ல மாற்றம் இருந்தது வீராச்சாமியிடம். நேரத்துக்கு கடலுக்குப் போவதும், மீன் அள்ளி வருவதும், குழந்தைகளை இஸ்கூலுக்கு அழைத்துச் செல்வதும் என ஆளே மாறிப்போனான்.
“இன்னாம்மே… எப்டிகீற ? அய்யே மூஞ்சீல சிரிப்பப்பாரு …” என்றார் திண்ணைப் பேச்சில் ஒரு நாள் கோமளவல்லி.
ஆனந்தத்தில் திக்குமுக்காடிய கௌரியால் அழுகையை அடக்க முடியவில்லை.
“ஏம்மே இதுக்குப் போயி அயுதுனுகீற. கவ்லைய உடும்மே. சொம்மாவே கடலு உப்பா கீது, அப்பாலிகா தாங்காது !” என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்தார் கோமளவல்லி.
***
வீராச்சாமியைத் தன் வசம் வைத்துக் கொள்ள, கௌரியிடம், கோமளவல்லி அப்படி என்ன யோசனை சொல்லி இருப்பார் ? உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டுங்கள்.
இரண்டொரு நாட்களில் பதில் இங்கு :)))
ஒரு சின்ன க்ளூ : இந்த கதையிலும், இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் பதில் ஒளிந்திருக்கிறது.
***
ரெண்டு நாளாச்சுபா … உங்க முயற்சிகளுக்கு நன்றி. எனது பதில் கீழே,
கோமளவல்லியின் ரோசனை:
‘எதுனா டி.வி. நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போயி, நம்ம குப்பத்துல ஒரு ப்ரோக்ராம் வச்சிகினு, வீராச்சாமிய அதுல கலந்துக்க வச்சி, போட்டுத் தாக்கிருவேன்’னு சொல்லிப் பாரு கண்ணு :)))))