எருமை – ஒரு பக்க கதை





”ஒரு எருமை வாங்கலாம்னு பார்க்கிறேன்…”
பலராமிடம் பேச்சை ஆரம்பித்தார் பூங்காவனம்.
”எதுக்கு எருமை? நல்லா யோசித்துதான் பேசறியா?”
”யோசிக்காம இருப்பேனா? கலப்படமில்லாத பால் கிடைக்குமே!”
”எனக்கென்னவோ சரியாப்படலே…எருமை யாருடைய வாகனம்? அதை வாங்கறேன்னு சொல்றியே…உனக்கோ வயசாச்சி…எருமை வந்த நேரம் ஏதாவது ஆயிட்டுதுன்னா…”
”அதில்லே பலராம்..நம்ம ராமசாமிகிட்டே ஒரு எருமை இருக்கு… அவனால பராமரிக்க முடியலயாம்…யாருக்காவது தானமா தள்ளிடலாம்னு பார்க்கிறான்..”
”அவனுக்கிருக்கற தொல்லைகள் தொலைய பரிகாரமா இருக்கும்…பயமாயிருக்கு… ஒண்ணுக்கு நாலு தடவையா யோசி…!”
சரிப்பா, நீ சொல்றதிலயும் நியாயம் இருக்கு. ‘பூங்காவனம் சென்டிமென்டா எருமையை வாங்கிக்கத் தயங்கறான்’னு நீயே என் சார்பில் ராமசாமிகிட்டே சொல்லிடேன்”
”இதைச் சொல்ல எனக்கும் தயக்கமாத்தான் இருக்கு…இருந்தாலும் உனக்காகச் செய்றேன்…” விடை பெற்றார் பலராம்.
சில நாள் கழித்துப் பூங்காவனம் ராமசாமியைச் சந்தித்தபோது எருமை பேச்சு எழுந்தது.
”அதை நம்ம பலராம் கேட்டான். கொடுத்து விட்டேன். அவனும் சந்தோஷமா ஓட்டிட்டுப் போயிட்டான். உன்னை மாதிரி சென்டிமென்ட் எதுவும் அவனுக்குக் கிடையாதாம்!”
பூங்காவனத்தால் பதில் பேசமுடியவில்லை.
அழுவதா இல்லை சிரிப்பதா? அல்லது எருமை மாதிரி கத்துவதா என்று புரியாமல் திகைத்து நின்றார்.
– பர்வதவர்த்தினி (12-10-09)