எரிச்சல் – ஒரு பக்க கதை






சின்ன வயதிலிருந்தே கேசவனுக்கு குறட்டை விடுபவர்களைக் கண்டால் எரிச்சலும் கோபமும் வரும்.
அதற்குக் காரணம், அவனது அப்பா. இரவில் பக்கத்தில் அடிக்கடி மோட்டார் ஓடுகிற மாதிரி கர்..புர்….. என சப்தமிட்டுக் கொண்டே இருப்பார்.
எப்போதாவது கண் விழித்துவிட்டால் அப்பாவின் குறட்டை சப்தம் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதால் அப்பா படுக்கும் அறையைத் தவிர்த்து தனியாகச் சென்று ஹாலில் படுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அங்கேயும் அம்மாவின் குறட்டை சப்தம் காதிற்குள் நுழைந்து கடுப்பேற்றும். அதனால், அங்கிருந்து வாசலுக்குப் படுக்கையை மாற்றினான்.
இப்போது கல்யாணமாகி ஜானகியோடு ஒன்றாக படுக்க வேண்டிய சூழலில், ஜானகியிடமிருந்தும் குறட்டை சப்தம் வருவதை அறிந்து ளிச்சலின் உச்சத்திற்குப் போனான்.
என்ன செய்வது? தூக்கம் கலையும் போது ஜானகியை ஒருதரம் பலமாக அசைத்துவிட்டு சப்தம் நின்றதும் மீண்டும் தூங்கிவிடுவான்.
குறட்டை பிரச்னைக்குக் காரணம் மூக்கு மற்றும் தொண்டை சம்பந்தமான பிரச்னைதான். இதற்கு சரியான தீர்வு ஒரு ஈ.என்.டி டாக்டரிடம் காட்டுவதுதான் என்று ஜானகியை அழைத்தான். முதலில் மறுத்த ஜானகி பிறகு சம்மதித்தாள்.
டாக்டரின் முன் அமர்ந்த ஜானகி, “டாக்டர், இவருக்கு சின்ன வயசுல இருந்தே குறட்டை விடுகிற பழக்கம் இருக்கு. ஆனால், அந்த சப்தம் தனக்கு பக்கத்திலே படுக்கறவங்கக் கிட்டேயிருந்து வருதுன்னு இவரா நெனச்சுக்கறார்.
கல்யாணத்திற்கு முன்னாடியே இவரோட அம்மா – என் அத்தை – இவரோட குறட்டைப் பிரச்னையைச் சொல்லி, அவன் தூங்குவதற்கு முன்பு நீ தூங்கப் பழகிட்டால் பிரச்னை வராதுன்னு சொன்னாங்க. அப்படியே நான் தூங்கினாலும் நடுராத்திரியில என்னை முரட்டுத்தனமா அசைச்சு என் தூக்கத்தைக் கலைச்சுட்டு அவர் தூங்கிடுறாரு. அவரோட மோட்டார் சப்தமும் ஆரம்பிச்சுடும். என்ன செய்ய? காதைப் பொத்திக்கிட்டு ரொம்ப கஷ்டப்படறேன் டாக்டர்! அவரோட பிரச்னையை சரிபண்ணுங்க…”
ஜானகி சொன்னதைக் கேட்டு கேசவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
– 24.3.2021