கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2026
பார்வையிட்டோர்: 78 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

பள்ளி விடுமுறை முடிந்து வகுப்புகளில் பாடங்கள் முமுரமாக ஆரம்பித்து விட்டன. மூன்றாம் வகுப்பின் வகுப்பாசிரியராக நான் பொறுப்பேற்று இரண்டு மாதங்களும் முடியவிருந்தன.

வகுப்பில் சில சிறுவர்கள் எனக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே ஒன்றாம் வகுப்பாசிரியராக நானிருந்தபோது தெரிந்தவர்கள். அவர்களில் பாலாவும் ஒருவன்.

அப்போதிருந்த பாலா வேறு. ஆர்வம், வேகம், சுறுசுறுப்பு, ஈடுபாடு என்று ஒரு துடிப்பான சிறுவனாகவே இருந்தான். கவனமாகப் படிப்பான். வீட்டுப் பாடங்களை நாள்தோறும் தவறாமல் செய்வான். ஆரோக்கியம் தோற்றத்திலேயே மின்னும். அதேபோல விளையாட்டிலும் ஈடுபாடு கொள்வான்.

அதே பாலா இவ்வருடம் என் பகுப்பில் படிக்கிறான். இரண்டு வருடங்களில் இந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது? நேர்மாறான தோற்றம், நடவடிக்கை. ஏன் இந்த மாற்றம்..? நன்றாகப் படிக்கும் திறன் உள்ள சிறுவன். மனது மட்டும் வைத்தால் எல்லாப் பாடங்களிலும் தொண்ணூறு மதிப்பெண்கள் வாங்கும் அளவுக்கு ஆற்றல் உள்ளவன். கவனமின்மை, ஈடுபாடு இல்லாத காரணமாக அறுபது மதிப்பெண்களுக்கு குறைவாகவே வாங்குகிறான் வகுப்புத் தேர்வுகளில். வீட்டுப் பாடங்கள் பல நாட்கள் செய்வதில்லை. செய்திருந்தாலும் பல தவறுகள். கையெழுத்து மிகவும் மோசமாக இருந்தது. நானும் நயமாகவும் பயமாகவும் கடுமையாகவும் பலமுறை சொல்லிப் பார்த்துவிட்டேன்.

பாலாவைத் தவிர பல சிறுவர்கள் சில குறைகளுடன் இருந்தது என்னவோ உண்மை. ஆனால், பாலா முன்பிருந்ததிலிருந்து வெகுவாக மாறியிருந்தான்.

இதனாலேயோ என்னவோ முப்பத்தொன்பது சிறுவர்களில் அவன் தனியாகத் தெரிந்தான். நானும் அன்றாடம் அவனைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்.

எதிலும் ஒரு ஈடுபாடில்லாமல், கவனமில்லாமல் எப்போதும் வகுப்பறைக்கு வெளியே ஒரு இலக்கின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருவரிடமும் பேசமாட்டான். யாரோடும் சேர்ந்து விளையாட மாட்டான். பல முறை அவனுக்கு நான் எடுத்துக் கூறியும் பார்த்து விட்டேன். எந்த விதமான மாறுதலோ முன்னேற்றமோ இல்லை. அவனுடைய பெற்றோரிடம் பேசலாம். இருவரும் வேலையில் இருந்தார்கள், இப்பொழுது எப்படியோ, நேரம் கிடைத்து வந்து என்னைச் சந்திப்பார்கள் என்று நினைத்தேன். பிறகு சரி, மேலும் சில நாட்கள் தொடர்கணிப்பு – I தேர்வுகள் முடியும் வரை பார்க்கலாம், முன்னேற்றம் தெரிந்தால் சரி இல்லையென்றால், பெற்றோரைச் சந்திக்கலாம் என்று தீர்பானித்தேன்.

தேர்வுகள் நெருங்கின. வேலைகள் பலவும் ஒரே சமயம் வந்து குவிந்தன. பேச்சு, கட்டுரை, போட்டிகளும் நடக்கவிருந்தன. ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களைத் தயார்படுத்த போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல என்று வேறு சில எதிர்பாராத சில பொறுப்புகள். இன்னும் பல காரணங்களால் பாலாவையே மறந்திருந்தேன்.

தேர்வுகளின் மதிப்பெண்களைக் குறிப்பேட்டில் பதிவு செய்யும்போது பாலாவின் குறைவான மதிப்பெண்களும், கணிதத்தில் அவன் தேறாததும் எனக்கு சற்று ஏமாற்றைத்தையே கொடுத்தன. அரையாண்டுத் தேர்விலாவது பாலாவை நல்ல மதிப்பெண்கள் வாங்கச் செய்ய வேண்டும். இதற்கு, அவனுடைய பெற்றோரைச் சந்திக்க வேண்டும். பெற்றோரில் ஒருவரேனும் வந்தால் விவரமாகப் பேசலாம் என்று எதிர்பார்த்து பாலாவைக் கூப்பிட்டு, “பாலா தேர்வில் நீ குறைந்த மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாய், தெரியுமா? நான் உன் அம்மாவை சந்திக்க வேண்டும். பள்ளிக்கு வரச் சொல்லுகிறாயா?” என்று கேட்டேன்.

அவன் பதில் பேசாமல் மௌனமாகவே இருந்தான். அதே கேள்வியை மறுபடியும் கேட்டே. அவன், “ஆசிரியை, என் அம்மா வரமாட்டாங்க” என்றான். “ஏன், அம்மாவுக்கு நேரம் கிடைக்காதா? அரை நாள் விடுப்பாவது எடுத்துக் கொண்டு என்னைச் சந்திக்கச் சொல். சரியா?”

அவன் மறுபடியும், “அம்மா வரமாட்டாங்க” என்று சொன்னான். நான் உடனே “அப்பா வருவாரா? அவருக்கு நேரமிருந்தால் அவரையாவது வரச் சொல்லேன்” என்ரேன். அவன் ஒன்றுமே சொல்லாமல் தன் இடத்தில் போய் அமர்ந்தான்.

இரண்டு நாட்கள் சென்றன. ஒரு நாள், பாலா வீட்டுப்பாடம் செய்யாமல் வந்திருந்தான். அதைக் கண்டதும், எனக்கு அவனிடம் அவன் தந்தையை அழைத்து வரச் சொன்னது ஞாபகம் வரவே, “உன் அப்பா எப்போ என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்? நீ அவரிடம் சொன்னாயா? பல நாட்கள் வீட்டுப்பாடம் வேறு செய்யாமல் வருகிறாய். வீட்டில் யாரும் உனக்கு உதவுவதில்லையா பாலா?” என்று கேட்டேன்.

அவனோ, “அப்பாவிடம் சொல்ல மறந்து விட்டேன் ஆசிரியை. நான் அவரைப் பார்க்கவேயில்லை” என்றேன். “இன்று மறக்காமல் அவரிடம் சொல்லி, அவசியம் நாளை அழைத்து வரவேண்டும், தெரிந்ததா?” என்று சற்று கடுமையாகவே அவனிடம் சொன்னேன். அவன் சிந்தனையில் ஆழ்ந்தது அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது.

அடுத்த நாள், வகுப்புகள் முடிந்து பள்ளி முடியும் நேரம் நான் வழக்கத்திற்கு விரோதமாக சீக்கிரமே, வெளியேறி வீடு திரும்ப நினைத்துக் கிளம்பினேன். மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுவது ஒன்று தான் தலையாய குறிக்கோள் போல கூண்டை விட்டு வெளியேறிய பறவைகளாக பறந்து கொண்டு வீடு நோக்கி வெளியேறினர். சிரிப்பு, பேச்சு, இரைச்சல், ஓட்டம், துரத்தல் என்று சிறுவர்கள் கூட்டம் கூட்டமாகக் கலைந்தனர். தினமும் நான் பார்க்கும் காட்சியானாலும் ஏதோ அன்று தான் புதிதாகப் பார்ப்பது போன்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியது. கண்காணித்துக் கொண்டே மாடியிலிருந்து கீழிறங்கினால் அங்கு தயங்கித் தயங்கி என் முகத்தையே கூர்ந்து கவனித்த வண்ணம் நின்றிருந்தான் பாலா.

“ஆசிரியை, உங்களைப் பார்க்க எங்க பாட்டி வந்திருக்காங்க. அவங்க உங்களோட பேசுவாங்க,” என்றான்.

அம்மா வரவில்லை. அப்பாவும் வரவில்லை. பாட்டி வந்திருந்தார். பாட்டியை அழைத்து வருவானென்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. நான் யோசிக்கும் முன்பே பாலாவின் பாட்டி, “வணக்கங்க, நான் தான் பாலாவோட பாட்டி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தொரந்து, ‘என் மகனுக்கு நேரமிருப்பதேயில்லை. தவிர பாலாவுக்கும் அவனிடம் கேட்கவே பயம். சமீப காலமாக, அவன் ஆத்திரம் கோபம் என்று இருப்பதால் பாலாவும் பாவம், அடிவிழுமோ என்ற பயத்தில் என்னைக் கூப்பிட்டான். நானும் உங்களைப் பார்த்துப் பேச வந்தேன். எதனாலும் என்கிட்ட சொல்லுங்கம்மா?” என்றார்.

நான் சாதாரண்மாக “அவங்கம்மாவுக்கு நேரம் கிடைக்கலையா? அவங்க கூட வந்திருக்கலாம். நீங்கள் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. பாலா படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. ஈடுபாடு காண்பிப்பதில்லை. எப்போதும் சோர்ந்து வேறு காணப் படுகிறானே” என்று மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன்.

அவர் வேதனையுடன் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறினார்.

அவன் பெற்றோர் ஒன்றரை வருமாகப் பிரிந்து வாழ்கின்றனராம். ஆரம்பத்தில் பாலாவும் அவன் தங்கை நீலாவும் இருவரிடமும் மாறி மாறி இருந்து வந்திருந்தார்கள். இப்போது சில மாதங்களாக பாலா அவனுடய அப்பாவிடமும் தங்கை நீல அம்மவிடமும் இருக்கிறார்களாம். மணவிலக்கு கிடைத்து சில மாதங்களாகின்றன. முதலில் இருவருக்கும் இரண்டு குழந்தைகளும் தேவையாயிருந்தனர். பிரகு, வேறு வழியில்லாமல் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து ஆளுக்கு ஒரு குழந்தையாக பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அது மிகவும் நியாயமாகிவிட்டது. ஒரே குழந்தையாக இருந்திருக்கும் பட்சத்தில் இவர்கள் என்ன செய்திருப்பார்களோ!

சிறுவர்களுக்குப் பெற்றோர் பிரிந்த கொடுமை ஒருபுறம், உடன்பிறந்த ஒரே ஒரு ஆதரவு, நட்பு, அன்பு இவை ரத்தானது ஒரு புறம். எட்டு வயது பாலாவுக்கும் ஐந்தே வயது நீலாவுக்கும் இது எத்தனை பெரிய கொடுமை!

கணவன் மனைவி இருவருமே தங்கள் சொந்த வேலையையே உலகமாக நினைத்து உழன்று பல நேரங்களில் பல விஷயங்களுக்காகப் பிடிவாதம் காண்பித்து சண்டைகள் போட்டியிருக்கின்றனர். வீட்டுக்கு வீடு வாசற்படி. சண்டைகள் எல்லா வீடுகளிலும் இருக்கும்.

ஆனால், சேர்ந்திருப்பதே சண்டையிட என்றாகும் போது தான் வீட்டில் சிறுவர்களுக்கு ஒரு பாதுகாப்பில்லாத உணர்வு ஆரம்பித்திருக்கிறது. இரண்டு தனி நபர்களின் தானே உலகம் என்னும் இறுமாப்பில் நடந்த போராட்டமே பிரச்சனைக்கு மூலம். பணிந்து போக, விட்டுக் கொடுக்க இருவருமே தயாராக இல்லை.

பெற்றோர், அவரவர் பிரச்சனையை அவரவர் மனதில் வைத்துக் கொண்டும் பேசித் தீர்வுகாண முற்பட்டாலும் சண்டையிட்டதால் குழந்தைகள் அரண்டிருக்கின்றனர். சிறுவர்களிருவரின் மனமும் நோகத் தலைப்பட்டது. பாலாவின் அப்பாவோ குடிக்கத் துவங்கிவிட்டிருந்தார். இருவருக்குமே குடும்பம், குழந்தைகள், அங்கு நிலவ வேண்டிய அமைதி இவையெல்லாவற்றையும் விட அவர்களின் வேலை, அவரவர் தற்பெருமை பெரியதாகிவிட்டன. பிரிய நினைத்துப் பிரிந்தும் விட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பழகிப் பார்த்து, பேசி, விரும்பி திருமணம் புரிந்தவர்கள், படித்தவர்கள், பெரிய பொறுப்பான வேலைகளில் இருப்பவர்கள். காதல் திருமணமாவது, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாவது எல்லாமே மணம் புரிந்தவர்கள் கையில்தானே. இருவரும் இரண்டு தனிநபர்தானே. அபிப்ராய பேதங்கள் சகஜமே. புரிந்து நடந்து விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்கலாம். இல்லை, குழந்தைகளிருவரின் எதிர்காலம் பற்றியாவது யோசித்திருக்கலாம். அதுவும் இல்லை. முன்பின் அதிகம் தெரியாத, அறிமுகம் மட்டுமே ஆன பலரிடம் நான் தற்பெருமையைக் கட்டுப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் மிகவும் சுலபமாக சமாளிக்கிறோம். வாழ்க்கைத் துணையாக, வாழ்வின் பாதியாக தேர்ந்தெடுத்தவரிடம் மட்டும் ஏன் இந்தத் தீவிரமான தன்னுணர்வு? ஆங்கிலத்தில் agree to disagree என்பார்கள். அதாவது, இருவரிடையே நிலவும் கருத்து வேறுபாட்டிலும் ஒரு நல்லிணக்கம் காண்பது. இந்தக் குணம் சிறிதேனும் அவர்களிடையே நிலவியிருந்தால்…

பாலாவின் பாட்டி சொன்ன விஷயங்கள் யாவும் நான் சிறிதளவும் எதிர்பாராதவை. என்னை மிகவும் பாதித்தவை. எனக்கே இப்படியென்றால், அந்தப் பிஞ்சு நெஞ்சம் அனுபவித்துப்பட்ட வேதனை எத்தனையோ, அவனிடம் காணப்பட்ட மாறுதல்களுக்கு விடைகள் கிடைத்தன. அதே சமயம் தீர்வில்லாத விடையாக அமைந்ததே!

பாலாவின் பாட்டியிடம் நானும் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டே விட்டேன், “காதலித்து கல்யாணம் செய்து நல்லபடியாகத் தானே குடும்பம் நடத்தினார்கள். திடீரென்று எப்படியம்மா இப்படியாகிவிட்டது” என்று.

பல கசப்பான நினைவுகள் தந்த வேதனைப் பெருமூச்சுடன், “உம், நாங்களும் அப்படித்தானே நினைச்சுக்கிட்டிருந்தோம். ஆரம்பத்துலேயே ரெண்டு பேருக்கும் அபிப்ராய பேதம், சண்டை, சச்சரவு இருந்திருக்கு. எங்களுக்குத் தெரியும் போது பிரச்சனை மீறிப் போயிடுச்சி. எல்லாரும் எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். கேக்கலம்மா, ரெண்டு பேரும் ரொம்ப பிடிவாதம். முடிவ மாத்திக்கவே மாட்டேன்னு பிரிஞ்சிட்டாங்க” என்று வருத்தப்பட்டார்.

தொடர்ந்து, “பிள்ளைகள நினைச்சாத் தான் ரொம்ப கவலையா இருக்கு. பாலாவுக்கு அரைகுறையா புரியுது. நீலாவுக்கு புரியவில்லை. ரெண்டும் எப்படியாவது சேர்ந்து விளையாட முடியுது. தானும் நிம்மதியில்லாம, வயசான எங்களையும் நிம்மதியில்லாம அவங்க வேலை, தொழில் செய்து வாழறாங்க” என்றார்.

மேலும், அவருடைய கவலையை அதிகரிக்க விரும்பாமல் நான் பேச்சை மாற்ற முயன்றேன். பாலாவிடம், “பாலா, நீ படித்து பட்டம் பெற்று பெரிய ஆளாகணும். கவனமாகப் படிக்கணும். என்ன உதவி வேணும்னாலும் என்னிடம் தயங்காம கேக்கணும் புரிஞ்சுதா. என்னால முடிஞ்ச உதவியை தவறாம நான் செய்கிறேன்.” என்று சொன்னேன்.

அவனுடைய பாட்டியிடம், “முடிஞ்ச வரைக்கும் நீங்க அவனுக்கு வீட்ல உதவுங்க நானும் பள்ளிக்கூடத்தில் பார்த்துக்கறேன். கவலைப்படாம வீட்டுக்குப் போய்வாங்க” என்று கூறினேன். அவரும் நன்றி, வணக்கம் கூறி விடை பெற்றார்.

உற்றார் உறவினர், கூறிய அறிவுரைகள் பலனளிக்கவில்லை. பிரியும் நிலைகூட இல்லை, மணவிலக்கே ஆன பிறகு நான், இல்லை வேறு யார் தான் என்ன செய்ய முடியும்?

திருமணம் என்பதே ஒரு ஒப்பந்தம். அதைக் கருத்து வேறுபாடு, விட்டுக் கொடுக்காமை, தற்பெருமை ஆகியவை உடைத்திருக்கின்றன.

தாங்களாக நினைத்தால் திருமணம் செய்து கூடுவது, பிறகு சுலபமாகப் பிரிவது இரண்டும் அவர்கள் வரையில் வேண்டுமானால் நியாயமாக இருக்கலாம். இடையில் ஒன்றுமறியாத சின்னஞ் சிறுவர்களை உயிர் கொடுத்து

இவ்வுலகத்திற்குக் கொணர்ந்த பெற்றோருக்கு குறிப்பிட்ட வயதுவரை காக்கவும் பராமரிக்கவும், அன்பு செலுத்தி அரவணைக்கவும் சந்தேகமில்லாமல் பொறுப்பு இருக்கிறதே! மணம் முதலீடு செய்து பாடுபட்டு கட்டிய அல்லது வாங்கிய வீடு, வாகனம் போன்ற உயிரற்ற பொருட்களுக்கே எத்தனை கவனம் செலுத்துகிறோம். பராமரிக்கிறோம், காக்கிறோம். சொந்த ரத்தமாகிய தங்களுடைய சொந்த வாரிசுகளை உதாசீனப்படுத்துவது, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அன்பை, ஆதரவை, மறைத்து எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக ஆக்கி மனவேதனை, பிரிந்த குடும்பம் போன்றவற்றையே அளிப்பது எந்த விதத்தில் நியாயம்? எதிர்கால சந்ததியினருக்கு இவை எப்படி ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கும்? இவையெல்லாம் பாலாவின் பெற்றோர் உணர்ந்திருப்பார்களா?

திருமணம் தோல்வி கண்டால் மிகவும் அதிகமாகப் பாதிப்படைவது சிறுவர்களே!

– 1996, தமிழ்முரசு.

jeyathisankar சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *