என்னைப் போல் ஒருவன்





நான் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்த போது புரொபஸர் ரங்காச்சாரி போன் செய்தார். “முரளி, ஒரு பத்து நிமிஷம் இங்கே வந்து விட்டு போகிறாயா?”
நான் NITயில் எலக்ட்ரானிக்ஸ் படித்துக் கொண்டிருந்த போது புரொபஸர் எனக்கு சர்க்கிட் தியரி கிளாஸ் எடுத்தார். உடம்பெல்லாம் மூளை. இப்போது ரிட்டையர் ஆகி வீட்டிலிருக்கிறார். பொழுது போகாமல் புதுசு புதுசாக எதாவது கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார். அவ்வப்போது என்னைக் கூப்பிட்டு தன் கண்டு பிடிப்பை விளக்கி ஒரு டெமோ கொடுப்பார்.

“சார், மணி எட்டாகி விட்டது. இப்போது கிளம்பினால் தான் ஒன்பது மணிக்காவது நான் ஆபீஸ் போய் சேருவேன்,” என்றேன்.
“நீ மின்னல் வேகத்தில் ஆபீஸ் போகும் படியாக ஒரு இயந்திரம் தயார் செய்து இருக்கிறேன். உடனே இங்கே வா சொல்கிறேன்,” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டார்.
நான் அவர் வீட்டிற்கு சென்று, காரை பார்க் செய்து விட்டு, விட்டைச் சுற்றி நடந்து பின்னால் உள்ள அவர் லேப்பிற்குள் நுழைந்தால், ஒரு பெரிய அலமாரி போன்ற இயந்திரம் என்னை வரவேற்றது. கச்சா மூச்சா என்று சுற்றிலும் வயர்கள். நான் அருகில் சென்று சோதித்தேன்.
“முரளி, இது தானப்பா உலகின் முதல் டெலிபோர்ட்டேஷன்(Teleportation) இயந்திரம். இதில் ஏறிக் கொண்டு நீ எங்கு போக வேண்டுமோ அந்த விலாசத்தை கொடுத்தால், அடுத்த வினாடியே நீ அங்கு இருப்பாய்.”
“இதில் ஏறினால், நான் ஆபீசுக்கு உடனே போய் விட முடியுமா?” என்று சந்தேகத்துடன் கேட்டேன்.
“ஆம், முடியும்,” என்றார் புரொபஸர்.
“எப்படி அது சாத்தியம்?”
“ஜெராக்ஸ் மிஷின் எப்படி வேலை செய்கிறதோ அது மாதிரி தான் இதுவும். ஜெராக்ஸ் 2D என்றால் இது 3D. உன்னை ஒரு காப்பி எடுத்து அந்த காப்பியை மின்னல் வேகத்தில் ஆபீசுக்கு அனுப்பி விடும் இந்த இயந்திரம்.”
“இங்கே இருக்கும் எனது ஒரிஜினல் என்னஆகும்?”
“நீ ஆபீஸ் போய் சேர்ந்தவுடன் இங்கு உன்னுடைய ஒரிஜினல் ஆவியாகி காற்றில் கரைந்து விடும்.”
எனக்கு கொஞ்சம் நப்பாசை தட்டியது. ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு ட்ராபிக்கில் மல்லாடுவதிற்க்கு இப்படி நொடியில் ஆபீஸ் போவது எவ்வளவு சுலபம்? நான் டெலிபோர்ட்டேஷன் இயந்திரத்தின் உள்ளே நுழைந்து என் ஆபீஸ் விலாசத்தை கொடுத்து விட்டு START பட்டனை அழுத்தினேன். இரண்டு நிமிடங்களுக்கு இயந்திரம் எதேதோ சத்தம் போட்டதே ஒழிய உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. நான் ஏமாற்றத்துடன் வெளிவந்தேன்.
புரொபஸர் சங்கடமாகச் சிரித்து விட்டு தலையை சொறிந்தார். சாப்ட்வேரில் ஏதாவது பிழை இருக்கலாம் என்றார்.
நான் மணி பார்த்தால் 8:38. புரொபஸரிடம் அவசர அவசரமாக விடை பெற்றுக் கொண்டு காரில் ஏறி மெயின் ரோட்டுக்கு வந்து சீறிப் பாய்ந்தேன்.
நாற்பது நிமிடங்கள் கழித்து நான் ஆபீஸ் போய் சேர்ந்தவுடன் அங்கு கண்ட காட்சி-
நான் என் பாஸ் உடன் பேசிக் கொண்டிருப்பதை நானே பார்த்தேன்!