என்னைத் தெரியுமா?




அந்த சிவன் மலை கோயிலுக்குப் படிக்கட்டுகள் வழியே வாரந்தோறும் செல்வது வழக்கம். கோயில் தரிசனம் முடித்து திரும்பும் போது நடுவில் ஒரு நந்தி சிலை வரும். அங்கு கொஞ்சம் இளைப்பாறி கரும்பு ஜூஸ் குடிப்பதுண்டு. அந்த நபரை எப்போதும் நான் கீழிறங்கும் போது பார்ப்பேன். அவர் அப்போது மேல் நோக்கி சென்று கொண்டிருப்பார். அவரை எங்கேயோ பார்த்த ஞாபகம்.
‘வணக்கம்’ சொல்லி அவரை கொஞ்சம் இடை நிறுத்தினேன்.
‘ஒவ்வொரு வாரமும் இதே டைமில் இந்த இடத்தில நான் உங்களை பார்க்கிறேன். ரொம்ப சந்தோசம். ஜூஸ் குடிங்களேன். என்னைத் தெரியுமா’.
‘இல்ல, நான் கீழே வரும் போது தான் வழக்கமா குடிப்பேன். சரி. நேரமாயிடும். அப்புறமா பார்க்கலாமே’ நடையை கூட்டிக் கொண்டார்.

அட, ஜூஸ் குடிப்பதில் நம்மை மாதிரி தான் போலிருக்கு. சரி, அடுத்த தடவை பேசிக் கொள்ளலாம் என்று ஒன்றும் சொல்லவில்லை.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் ‘அருமை சிற்றுண்டி’ என்று ஒரு ஹோட்டல். வெண்ணை தோசை அருமையாக இருக்கும். சாப்பிட்டு விட்டு வெளியே வந்தால் அந்த நபர் உள் நுழைந்து கொண்டிருந்தார்.
‘ஹலோ, நீங்களும் இங்கே வருவதுண்டோ?’.
‘நான் எப்பவும், மலையேற்றம் முடிந்து வீட்டுக்குப் போறப்போ டிபன் இங்கே தான் . வீட்டுக்கும் பார்சல் சொல்லிடுவேன். இங்கே நெய் பொங்கல் சூப்பராயிருக்கும்’.
வெளிய வந்தப்பிறகு ‘அடடா, அவர் பெயரை இல்ல போன் நம்பரை கூடக் கேட்டுக்கிலையே’ என்று வருத்தப்பட்டேன். சரி, அடுத்த வாரம் மலையிலே எப்படியும் சந்திக்கப்போறோம் தானேன்னு சமாதானப் படுத்திக்கொண்டேன்.
அடுத்த ஞாயிறு அவரை காண்போம் என்ற மகிழ்ச்சியான ஆவல். முடிந்தால், நம்ம ட்ரெக்கிங் கிளப்பில் சேர்க்க வேண்டும். நல்ல பழகும் தன்மையுள்ளவராக தெரிகிறார்.
நந்தி சிலை பக்கம் ஜூஸ் கடையில் நான் காத்திருக்க அவரும் மறக்காமல் வந்தார்.
‘ஜூஸ் குடித்துக்கொண்டே பேசுவோமே’ என்று கொஞ்சம் உரிமையுடன் ஆர்டரும் கொடுத்து விட்டேன்.
‘என் பேரு, சுதீப், நீங்க?’.
‘நான் சுனில், சுருக்கமா. நிஜ பேரு, சுனில்குமார்’.
‘என் முழுப்பெயரும் சுதீப்குமார் தான். நமக்குள்ள நல்ல ஒற்றுமை. எங்கே வாசம்?.
‘ஜெட் ஃபாரஸ்ட் அபார்ட்மெண்ட்’.
‘அடடா, நானும் அங்கே தான். என்ன ப்ளாக்? என்னோடது D .’
‘அட, நானும் D தான். நம்பர் 333’.
‘அட, நான் இருக்கிறது 334. ஜஸ்ட் எதிர்த்தாப்புலே. எங்கேயோ உங்க ஃபேஸ் நிறைய தரம் பார்த்த மாறி இருந்திருக்கு. நிறைய தரம் ஜஸ்ட் மிஸ் பண்ணிருக்கோம்’.
‘இனிமே மிஸ் பண்ண வேணாம். ரொம்ப நெருங்கிட்டோம், இல்லையா?’.
“என்னை தெரியுமா, நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் ….” என்ற எம்ஜிஆர் பாடல் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.