என்னிலும் இனியவன் ஒருவன்
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 248
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு குழந்தையைப் பார்த்து உனக்கு இனியவர் யார் என்றால் தட்டுத் தடக்கு இல்லாமல் அம்மா என்கிறது. இன்னோர் குழந்தை அப்பா என்கிறது. விபரம் தெரிந்த குழந்தை அம்மாவும் அப்பாவும் என்கிறது. வேலைக்காரியால் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தை அந்த வேலைக்காரியே தனக்கு இனியவள் என்கிறது. காதலன் காதலியை இனியவள் என்று குறிப்பிடுகின்றான். காதலியோ காதலனைக் குறிப்பிடுகின்றாள். குடிகாரன் குடிபோதையை இனிமையானது எனக் குறிப்பிடுவான்.
ஒரு சீடன் தனது குருவைக் குறிப்பிடுவான். இன்னுஞ் சிலர் தமது சிநேகிதரைக் குறிப்பிடுவர். ஆண்டவனுக்கு இனியவர்கள் அடியவர்கள். அடியவர்களுக்கு இனியவரான அப்பர் சுவாமிகளை ஓர் அன்பர் உங்களுக்கு இனியவர் யார் என்று கேட்டார். அப்பர் உடனே “என்னிலாரும் எனக்கியார் இல்லை” என்றார். ஒவ்வோருயிருக்கும் தன்னுயிர் மேலேதான் நீங்காப் பற்று இருக்கும்.
இது பற்றிய ஆராய்ச்சி ஒன்று ஜேர்மன் தேசத்திலே நடைபெற்றது. ஓர் ஆராய்ச்சிச் சாலை. எட்டு அடி உயரமும் ஐந்து அடி சுற்றளவும் கொண்ட ஒரு கண்ணாடிச்சாடி. சாடியின் அடிப் பக்கத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு அவைமூலம் தண்ணீர் நிரம்பிக் கொண்டே இருக்கிறது.
சாடியினுள் ஒரு குரங்கும் குட்டியும் விடப்பெற்றன. குட்டி தாயை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தது. தண்ணீர் ஏறிக்கொண்டே வந்தது. குட்டியின் மூக்கைத் தண்ணீர் எட்டிவிட்டது. மூச்சுத் திணறியது. குட்டிபடும் அவஸ்தையைக் கண்ட தாய்க் குரங்கு குட்டியைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டது. தண்ணீர் ஏறிக்கொண்டே இருக்கிறது. தாய்க் குரங்கின் மூக்கு வரை தண்ணீர் வந்துவிட்டது. மூக்கினுள் தண்ணீர் சிறிதளவு சென்றுவிட்டது. மூக்கைச் சீறியது. மூச்சுத் திணறியது. தன்னுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதை தாய்க்குரங்கு உணர்ந்தது. இதற்குமேல் அதனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தாய்படும் அவஸ்தையைக் கண்ணுற்ற குட்டி கத்தியது. தாய்மை பறந்துவிட்டது. குட்டியை கையால் தூக்கி தண்ணீருள் அமிழ்த்தி அதன்மேலே தாய்க் குரங்கு ஏறி நின்று கொண்டது. எந்த உயிருக்கும் தன்னுயிருக்கே முதலிடம். தன்னுயிருக்கு ஆபத்து வரும்வரை தாய்மை வேலை செய்தது. தன்னுயிருக்கே ஆபத்து என்பதை உணர்ந்தவுடன் தாய்மை கொலை செய்யப்பட்டுவிட்டது. இதனால்தான் அப்பர் சுவாமிகள் “என்னிலாரும் எண்கினியாரில்லை” என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார்.
என்னைவிட எனக்கு இனிமையானவர் மானிடரில் எவரும் இல்லை. ஆனால் என்னையும்விட இனியவன் ஒருவன் இருக்கின்றான். அவன் யாரெனில் உன் உடம்புக்குள்ளே ஆவி (மூச்சு) ஆகி வெளியிலே வந்தும் உள்ளே போயும் எனக்குள் அந்தர் யாமியாய் நிற்கும் திரு இன்னம்பர்ப் பெருமானேயாவான். திரு என்று கடவுளுக்கும் ஒரு பெயருண்டு. திருமுறை என்றால் கடவுளைப் பற்றிச் சொல்லப்படும் நூல் என்பது பொருள். முறை என்று நூலுக்கும் பெயர். சாதாரண பருத்தியினால் அல்லது சணலினால் செய்யப்படுவதும் நூல்தான். இந்த நூல் மரத்திலுள்ள கோணலைப் போக்க உதவுகிறது. புத்தகத்திற்கும் நூல் என்று பெயர். புத்தகமாகிய நூல் மனத்திலுள்ள கோணலைப் போக்கவல்லது. திரு என்ற சொல்லுக்குக் கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்பது நச்சினார்க்கினியருடைய உரையாகும். திருவைத் தியானிப்பவன் திரு ஆகின்றான்.
பிறரிடத்து ஒருவன் பிரியம் செய்வதெல்லாம் தனது சந்தோஷத்துக்காகவேயாம். ஒருவன் தனக்குத்தானே அன்பு செய்கிறவனாயின், தீங்கு செய்யுங்காரியங்களின் பக்கத்தில் கொஞ்சங்கூட நெருங்கப்படாது. தன் மேலுள்ள இனிமையினால் தான் பிறரிடம் பிரியமாய் இருக்கிறானாதலின் தன்னிலும் இனிய பிறர் ஒருவர்க்கு இல்லை.
என்னிடத்துக் கொள்ளும் பிரியத்திலும் மிக்கப் பிரியம் என்னிடம் கொண்டு எனது நன்மையையே (நான் அறியாதபோதும்) கோரி முயன்று வருதலின் ஈசன் என்னைக் காட்டிலும் எனக்குப் பிரியமானவன் என்னை அறியாமையால் யான் கெடுக்க நினைத்தாலும் அதற்கு இடம்கொடாதவன் ஈசன்.
உயிர்தருபவனாய், உயிர்க்குயிராய் இருப்பவனாய் என்னுள்ளேயே இருந்து என்னைக் காப்பவன் யாரோ அவனே இன்னம்பர் ஈசன். பக்தனுக்கு உள்ளும் புறமும் காட்சி தந்து நம்மைப் பக்குவப்படுத்துகிறவன் எவனோ, அவன் இன்னம் பரீசன் ஆகிறான். என்னிலும் இனியான் ஒருவன். என்னிலும் இனி யான் ஒருவனைப் பற்றி அப்பர் கூறும் தேவாரத்தினைப் பார்ப்போம்:
என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்இனி யான்ஒரு வன்உளன்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு
என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசன்.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026