எது குற்றம்…?
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 3,261
(பழைய கதை புதிய பாடல்)
ஆற்றங் கரையன் ஓரத்தில்
அடியார் சூழ ஒருதுறவி
உற்று நோக்கிக் கொண்டிருந்தார்
ஒல்லி யானஒரு பெண்ணை!
அந்தப் பெண்ணின் விழிகளிலே
அச்சம் அதிகம் தென்படவே
அந்தப் பெண்ணை அத்துறவி
அச்சம் ஏனெனத் தான்கேட்டார்
‘’ஆற்றைக் கடந்த அக்கரைக்கு
அடியேன் செல்ல வேண்டுமய்யா
ஆற்று நீரில் நீந்தும்கலை
அடியேனுக்குத் தெரியாது!
உதவ வேண்டும் நீரென்றாள்!”
ஒல்லியான அப்பெண்ணும்!
உதவத் துறவி முடிவெடுத்தார்
ஒல்லிப் பெண்ணைத் தன்முதுகில்
ஏற்றிக் கொண்டு நீந்தியந்த
ஆற்றைக் கடந்து அவர்போனார்
சீடர் சிலரும் உடன்நீந்தி
வாட்டத்தோடு கரையேற
‘என்ன உங்கள் முகமெல்லாம்
என்னவோ போல இருக்கிறது’
என்று துறவி கேட்டதற்கு
இப்படிச் சொன்னான் ஒருசீடன்
“நீரோ முற்றும் துறந்தவராம்
அப்படி இருக்க ஒருபெண்ணை
ஊரே பார்க்கச் சுமந்தீரே
உங்கள் செய்கை தவறில்லை?!”
என்றே கேட்க அத்துறவி
நன்றாய்க் கேட்டாய் என்சீடா
நல்லது உனக்குச் சொல்கின்றேன்
ஒல்லிப் பெண்ணை கரையேறி
அந்தக் கணமே விட்டுவிட்டேன்
நீயோ இன்னும் அப்பெண்ணை
உள்ளத் துள்ளே சுமக்கின்றாய்
இருவரில் எவரிடம் தவறென்று
துறவி கேட்க வெட்கிப்போய்
தவறெனெ தன்னை பொறுக்கும்படி
சீடன் அவரது அடிமலர்கள்
சிந்தும் கண்ணீரால் நனைத்தான்!
குற்றம் என்பதில் பெருங்குற்றம
அடுத்தவர் குற்றம் பார்ப்பதுதான்
தன்குறை பார்க்கும் மானிடரால்
தரணியில் பெருமை மெருகேறும்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
