எதிர்பார்த்த முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2025
பார்வையிட்டோர்: 661 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருவருக்கும் ஒரே சமயத்தில் தோணியது. இருந்தும் யாரும் பேசவில்லை. வியர்வை, நசநசப்பாக வழியும் முகத்தோடு ஏறுவெயிலில் நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள். பற்றி எரிவது போல வெக்கை. தந்திக் கம்பங்களில் வெறித்து நிற்கிறது காகம். நகரம் மரங்களற்ற வெளி. எங்கும் புகையின் சுழல் விரிகிறது. பேச்சின் தெறிப்பில் நிறைகிறது தெரு. கல் டயர்கள் தேயச் செல்கிறது மாட்டு வண்டி, சாலையோரத்து மனிதனின் கூண்டில் கிளி வெயில் தாங்காது முகத்தை அலைக்கழித்தபடியிருந் தது.தொப்பி அணிந்த சிறுவர்கள் நிழலை மிதித்து விரைகிறார்கள். யாரும் வராத சலூன் சுழல் நாற்காலி தன்னையே கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தது. நல்ல புகையிலை வாசம். பட்டை பட்டையாகக் காம்பு கிள்ளும் மணம். கூடைக்காரப் பெண்கள் கழுத்தைத் துடைத்துக் கொள்கிறார்கள். ஒலிபெருக்கிகளின் விடாத இரைச்சலில் ஊர்கின்றன கால்கள். யார் யார் சாயலிலோ மனிதர்கள். தலை பிசுபிசுத்து எரிச்சலாகியது. பச்சைக் குழந்தை யோடு ஒரு பெண் கால் தாங்கிப் போகிறாள். மீண்டும் அந்த இருவருக்கும் ஒரே சமயத்தில் தோணியது. இந்த முறை முந்திக் கொண்டு ஏட்டு சுப்பையா பிள்ளை கேட்டே விட்டார்.

”கசகசன்னு… என்ன எளவு இது… தாகம் வறட்டிப்புடுதுல்ல… தண்ணிக்கு எங்க போறது? டீக்கடை தண்ணி குடிச்சாப்பில இருக்குதுல்ல. ”

நடந்தபடியே போஸ் பதில் சொன்னார்.

“உக்கிரமாதான் இருக்கு. இப்பிடி நடந்து சூரகுத்தி வளைவு வரைக்குப் போனா, என் தங்கச்சிகாரி வீடு இருக்கு. போகலாம்ல. நேரமிருக்குமா?”

“கிடக்கும். கோர்ட் விடியவா திறந்துருவான்.”

இருவரும் கடந்து போனார்கள். அவர்களைக் கடந்துபோன யாரோ ஒருவன் இருவர் கைகளையும் பார்த்துப் போனான். அவன் பார்வையின் பின்பே போஸுக்கும் உணர முடிந்தது. அவனும் தன் கைகளைப் பார்த்துக்கொண்டான். அவனது வலது கையையும், ஏட்டு இடது கையையும் இணைத்து வளைத் திருந்தது விலங்கு. இரும்பு வளையம் அழுத்தியது. ஏட்டு தன் கையை வீசி நடக்க சிரமப்படுவது போலிருந்தது. வலது கையில் கேஸ் கட்டுகள். கசங்கிச் சுருண்ட வேட்டி. எதிரே பள்ளிப் பிள்ளைகள் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தன. அவைகளில் சில இவர்களைத் திரும்பிப் பார்த்து மற்றவர்களிடம் சொல்லின. இலக்கின்றி நடப்பது போல நடந்துபோயினர். ஏட்டு அந்தப் பிள்ளைகளைப் பார்த்தார். அவரைக் கண்டதும் திரும்பிக் கொண்டன. அப்போதுதான் புதுசாகப் பார்ப்பது போல அவரும் விலங்கைப் பார்த்தார். பார்த்த வேகத்தில் நிமிர்ந்து போஸையும் பார்த்தார்.போஸ், வெயில் வண்ணத்துப் பூச்சியைப் போல வெட்டி வெட்டி அலைவதைப் பார்த்தான். உள்ளங்கை நசநசத்தது ஏட்டுக்கு. அவர் தொப்பியை எடுத்து முகத்தில் வீசிக்கொண்டே கேட்டார்.

”துண்டு வச்சிருக்கியா.”

“எடுத்துட்டு வரலே…”

அவர் தொப்பியை எடுத்து அதனுள்ளிருந்த சின்ன டவலை எடுத்து விலங்கின் மேல் போட்டுக்கொண்டார். இருவரும் வியாபாரம் பேச கைகளை மூடிக் கோர்த்துக்கொண்டது போல் இருந்தது. இப்போதுதான் கூச்சமாகவும், அசூயையாகவும் இருந்தது போஸுக்கு. அவன் கைகளை அசைக்காதபடி நடந்தான். கொஞ்ச தூரம் போன பின்பு கேட்டான்:

“இது எதுக்கு?”

“கிடக்கட்டும்டே, எனக்கு அசிங்கமாயிருக்கு.”

அவசரம் எல்லாவற்றிலும் பற்றி ஏறியிருந்தது. தலையற்ற முண்டம் ஒன்றை ஞாபகப்படுத்துவது போல தலை சிதறியிருந்த சிலையொன்று நின்றுகொண்டிருந்தது. அவன் கேட்காமலே ஏட்டு சொன்னார்.

“பாத்தியா இந்தக் கோலத்தை… யார் சிலை… ஏ.கே.எஸ்.பி. அவருக்கே இந்த கதி. உடைச்ச பார்ட்டி… வெல்லிட்டாங்குடி சுப்பையா வகையறா. ஒரே போடுல சிலை தலைய தூக்கிட்டான். ஆளையே தூக்குறவனுக்கு இது எம்மாத்திரம்?”

கடந்து போய்க்கொண்டே இருந்தார்கள். இரும்புக் கடை மார்வாடிகள் திண்டில் சாய்ந்தபடி வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விதவிதமான போஸ்டர்கள் நிறைந்த சுவர்கள். வெற்றிலை போட்டபடியே உற்சாகமாக இருவர் எதையோ பேசிக்கொண்டிருந்தனர். ரேடியோ ஒலி வீட்டின் ஜன்னல் வழியாகக் கேட்டபடியிருந்தது. அவன் கைகளை மெதுவாக வீசி நடக்கத் தொடங்கினான். இடையில் ஏட்டு கேட்டுக் கொண்டார்.

“வீடு எங்கன்னே… சூரகுத்தி வளைவா…”

அவன் பேசாமல் நடந்து வந்தான். தெரிந்த முகங்கள் அகப் படவே இல்லை. மணிக்கூண்டை நெருங்கும்போது எதிரே வந்த போலீஸ்காரர் ஒருவர் சுப்பையா பிள்ளையைக் கண்டுகொண்டு கேட்டார்.

“எங்க, கோர்ட்டுக்கா?”

“ஆமா, வெயில பார்த்தீகளா?”

“என்ன கேஸ்… ஆள் பாத்த முகமா தெரியுதே… எந்த ஊரு?”

“எல்லாம் நம்ம ஊர்தான். திருட்டு கேஸ்… தெரிஞ்சிருக்கும். சூனாபானா வகையறா.”

“பெரியவரு இருக்காரா…”

இதை அந்த போலீஸ் போஸிடம்தான் கேட்டார் எனத் தெரியாது. போஸ் தரையைப் பார்த்தபடி இருந்தான். இரண்டாவது தடவை கேட்டபோது சுதாரித்துக் கேட்டான். “என்ன கேட்டீக?”

“சூனாபானா இருக்காப்லயா?”

“அவரதான்… போன வருஷம் வெட்டிப் போட்டாங்கல்ல…” என்றார் சுப்பையா பிள்ளை. போஸுக்கும் ஞாபகம் வந்தது. அவனுடைய தாத்தாதான் சூனாபானா. அவரை இருட்டில் மறித்து யாரோ வெட்டிப் போட்டுவிட்டார்கள். லாந்தர் விளக்குகளும், வேல் கம்புமாக ஆள்கூட்டம் அன்றிரவெல்லாம் காட்டில் அலைந்தது. வெளிச்சம் தெரிந்திராத பறவைகள் லாந்தர் கண்டு மிரண்டு சிறகடித்தன. ஒப்பாரிச் சத்தம் இருட்டை நிரப்பியது. யார் வெட்டினார்கள் என்றே தெரியவில்லை.

சுப்பையா பிள்ளை அந்த போலீஸுடன் பேசியபடி நின்றிருந்தார். அவனுக்கு இந்தப் பேச்சு லயிப்பு கொள்ள முடியாத எரிச்சலைத் தந்தது. ஏட்டு அவனிடம் கேட்டார்.

“சூனாபானாவுக்கு தொடுப்பு ஒண்ணும் இங்க உ உண்டுல்ல.”

இருவரும் எதையோ பேசிச் சிரித்தனர். அவன் எரிச்சல் தாங்காது சொன்னான்.

“தண்ணி தாகமாயிருக்கு.”

ஏட்டு எதுவும் பேசவில்லை. பேசிய போலீஸ்காரன் போய் விட்ட பின்பு இருவரும் சூரகுத்தி வளைவை நோக்கி நடந்தனர். ஓட்டு வீடுகள் நிறைந்த தெரு. நாய்கள் சாவகாசமாக உறங்கிக் கொண்டிருந்தன. புகை அலைந்து கொண்டிருந்தது. வாய்க் காலை தெருவில் ஒட்டி விட்டிருந்தார்கள். கறுப்பு படர்ந்த தெரு. சூரகுத்தி வளைவினுள் போகும்போது அவன் சுப்பையா பிள்ளையிடம் கேட்டான்.

”வீடு வந்திருச்சு. கொஞ்ச நேரத்துக்கு இதைக் கழட்டிவிட்டா. பெறகு மாட்டிக்கலாம்.”

ஏட்டு உடனடியாக எதுவும் பேசவில்லை. பிள்ளைகள் கூம்மரிச்ச சப்தம் எழும் வீட்டின் முகப்பில் வந்தபோது அவரே விலங்கைக் கழட்டி கையில் எடுத்துக்கொண்டார். அவன் கைகளை உதறிக் கொண்டான். ஏட்டு வீட்டைப் பார்த்தார். சாம்பல் படர்ந்த ஓட்டு வீடு. உள்ளே புகையும், மங்கிய வெளிச்சமுமாயிருந்தது. ஏதோ தாளிதம் நடந்த வாடை. அவன் உள்ளே நுழையும் முன்னே ஒரு பெண் குழந்தை எட்டிப் பார்த்து உள்ளே சொன்னது. ஒரு பெண் வெளிப்பட்டு அவனை இடுக்கிய கண்களால் பார்த்தாள். அவன் உள்ளே நுழைந்து கூப்பிட்டான்.

“தனம்…”

அவளுக்குக் குரல் புரிந்துவிட்டது. வேகமாகக் கிட்டத்தில் வந்து நின்று சொன்னாள்:

“வாங்கண்ணே… இருங்க…”

அவன் பின்னே திரும்பி ஏட்டையும் உள்ளே கூப்பிட்டான். அப்போதுதான் அவள் இன்னொருவர் வந்திருப்பதையும் கவனித்தாள். உள்ளே போய் மடக்கு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டாள். அவற்றைப் பிடித்தபடி போலீஸைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் குழந்தையை அவன் கூப்பிட்டான்.

“இங்க…வாளா…”

“போடி.. உங்க மாமா… ஊர்ல இருக்காரு. போஸ் மாமாடி…”

சொன்னதும் கிட்டத்தில் வந்து நின்றுகொண்டது குழந்தை. தனம் பின் வாசலுக்குப் போனாள். அவள் உருவம் மறைந்ததும் மற்றொரு பெண் குரல் கேட்டது.

“யாரு வந்திருக்கறது…”

போஸ் திரும்பிப் பார்த்தான். அவனுடைய அம்மா வந்து கொண்டிருந்தாள். கிட்டத்தில் வந்து நின்று கேட்டாள்:

“யாருன்னு சட்னு தெரியலே.”

“நான்தான் போசு…”

அவளுக்குப் புரிந்தது. சுவரை ஒட்டி உட்கார்ந்துகொண்டாள். முகம் உரிந்து பிரிந்திருந்தது. விரல்கள் நீண்டு தொங்கியிருந்தன. நீண்டு அறுந்த காதுகள். அவள் உட்கார்ந்துகொண்டு பேசினாள்:

“எங்கயிருந்து வாரே… ஊர்லயிருந்தா?”

“ஆமா”

“அதாருகூட,”

“நம்ம ஊருதான். ஏட்டு சுப்பையா பிள்ளை” அவள் குரல் பயமாகவும் மங்கியும் கேட்டது.

“போலிஸ்ஸா..”

“தெரிஞ்சவக…”

அதற்குள் தனம் செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்தாள். வெட்டிவேர் வாடையுடன் குளிர்ந்த தண்ணீர். ஏட்டு ஒன்றரை செம்பு குடித்தார். தனம் அவருக்கு விசிறி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். அவர் விசிறிக்கொண்டார். புகை நின்ற பாடில்லை. ஓட்டின் இடுகல் வழியாக வெயில் இறங்கியபடி யிருந்தது. போஸுக்கு மட்டும் கேட்கும்படியாக அம்மா கேட்டாள்:

“என்ன விஷயமா வந்தாப்ல?”

“நிலம் வாங்கிறதுக்காக… ஒரு ஆள பாக்க…”

“யாருக்கு?”

“ஏட்டுக்குத்தான்.”

ஏட்டு வீட்டைச் சுற்றிப் பார்த்தார். தீப்பெட்டி ஒட்டி கடையில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. வரிசையாக சாமி படங்கள். மூலையில் இரண்டு வேல் கம்பு. எங்கும் சோளம் சிதறிக் கிடந்தது. வெறும் தரையைக் கொத்திக்கொண்டிருந்தது கோழி. பின்வாசலில் நல்ல வெளிச்சம். அம்மா அதற்குள் சுப்பையா பிள்ளையிடமே பேசத் தொடங்கினாள்.

“சொந்த ஊர் எங்கிட்டு?”

“சிவகிரி பக்கம்.”

“இங்கேயே வந்துட்டீகளாக்கும்.”

“வாய்க்கிற இடத்தில இருக்க வேண்டியதுதானே?”

”ஊரு மோசமில்ல. பிள்ளைக இருக்கா?”

‘மூணு பொம்பளை பிள்ளைக. ஒரு பையன். எல்லாம் வயசுப் பிள்ளைகதான்.”

“இங்கேயும் ரெண்டு பிள்ளைக இருக்காக. வயசு ஏறிட்டே போகுது. ரெத்னம் மாதிரி லட்சணம். அதுகளுக்கு துணையாதான் இங்கயே கிடக்கேன்.”

அதற்குள் பின்வாசல் வழியாக தனம் கலர் கொண்டு வந்தாள். அவள் ஒரு தட்டு நிறைய முறுக்கும் வாழைப்பழமும் கொண்டு வைத்து, கலரை உடைத்துக் கொடுத்தாள். ஏட்டு முறுக்கை ஒடித்தபடியே போஸைப் பார்த்துக்கொண்டிருந்தார். போஸ் எழுந்து உள்கட்டுக்குப் போனான். அவன் பின்னாடியே தனமும் வந்தாள். உள்கட்டுக்குள் போனதும் கதவை ஒருச்சாய்ந்தபடி தனம் சாய்ந்து நின்று கேட்டாள்.

“மதினி எப்படியிருக்கா?”

‘அழுதுகிட்டு கிடக்கா.”

“எப்படிப் புடிச்சாக.”

“ரெண்டு நாளாச்சு. எப்பிடியும் ஒரு வருஷம் கிடைக்கும். உள்ள போகணும். மச்சான் எங்கே?”

“அவுக இப்ப ஜலால் கடையில இருக்காக…”

“புரோட்டா கடையா?”

“இல்ல, ஹோட்டலு. அங்கையும் அதே வேலைதான்” அவன் எட்டிப் பார்த்தான். அம்மாவுடன் எதையோ பேசிக் கொண்டிருந்தார் ஏட்டு. போஸ் தனத்திடம் கேட்டான்:

“பெரியவளுக்கு எதுவும் விசேஷப் பேச்சு உண்டா?”

“யார் அதைப் பேசுறது… கழுதைக்கு வயசு போயிட்டேயிருக்கு. நீயும் வீணா திரியுற எனக்குன்னு பேச யாரு இருக்கா?”

சட்டென்று தனம் உடைந்து அழத் தொடங்கினாள். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அவள் அழுகைச் சப்தம் கேட்டுப் பெரியவள் உள்ளே வந்து அம்மையைச் சரிப்படுத்தினாள்.

“இந்தா எதுக்கு அழுகே?”

போஸ் பெரியவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அடங்கு வது போல உள்ளே போன அழுகை மீண்டும் விசும்பி வெடித்தது. அம்மையின் அழுகை தாங்காது பெரியவளும் சேர்ந்து விசும்பினாள். வெளியே வெளிச்சம் ஏறிக் கொண்டிருந்தது. அவன் பெரியவளின் தோளைத் தொட்டு ஆறுதல்படுத்தினான். ‘மீனா, எதுக்கு அழுகே… நான் பேசுறேன்.’

“தனம்…. நான் கிளம்புறேன்.’

அவன் சொல்லியதும் தனத்தின் அழுகை நின்றது. அவள் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கேட்டாள்.

“சாப்பிட்டுப் போகலாம்ல…”

“இல்லை. கோர்ட்டுக்கு நேரமாயிரும்.”

“அப்ப வர்றப்ப…வர்றயா?”

“இல்லை.”

அவன் உள் அறையை விட்டு வெளியேறும்போது தனம் சொன்னாள்,

“ரொம்ப மெலிஞ்சு போயிட்டே. அடிச்சாங்களா?”

“ரொம்ப இல்ல…”

அவன் ஏட்டுப் பக்கம் வந்தபோது அவர் தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டார். அவர் மடியில் உட்கார்ந்து இருந்தது பெண் குழந்தை. கலரைக் குடித்து முடித்திருந்தார். போஸிடம் அம்மா அடவாகக் கேட்டாள்.

”வர்றவன், ரெண்டு இனிப்பு வடை வாங்கிட்டு வரக் கூடாது. வெறுங்கைய வீசிட்டு வந்துட்டான். அய்யா பழக்கம் பிள்ளைக்கு அப்படியே இருக்கு. என்ன செய்ய?”

போஸ் இதைக் கேட்டது போலவே இல்லை. அவனே ஏட்டிடம் கேட்டான்:

“போவமா?”

இன்னுமொரு செம்பு தண்ணி வாங்கிக்கொண்டார் ஏட்டு. புறப்பட்டு வாசலுக்கு வரும்போது அம்மா ஏட்டிடம் எதுவோ சொன்னாள். பின்பு “வீட்டுக்கு வந்துட்டுப் போங்க போசு.. அவளையும் கூட்டிக்கிட்டு வா…” என்றாள்.

இருவரும் இறங்கி தெருவில் நடந்தார்கள். சுப்பையா பிள்ளை விலங்கை எடுத்து மாட்டி அதன் மேல், துண்டைப் போட்டுக் கொண்டார். கண்ணாடியில் பட்டு எங்கும் சிதறிய வெளிச்சத்தின் கதிர்களோடு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். கோர்ட் பரபரப்பாக இருந்தது. சிவப்பு ஜன்னல்கள். உள்ளே நுழையும்போது போஸ் சாதாரணமாகக் கேட்டான்.

“வர்றப்ப எங்கம்மா என்ன சொன்னாக?”

ஏட்டு தொப்பியைச் சரிசெய்தபடியே படியேறினார். மரப்படி சப்தமிட்டது. மேல் கட்டடம் வந்தபின்பு தொப்பியை எடுத்து விசிறியபடியே அவனைப் பார்க்காமல் சொன்னார்.

”உள்ள வச்சு ரொம்ப அடிச்சிராதீங்கன்னு சொன்னாங்க.”

தனக்கு ஏற்கெனவே தெரிந்ததை மீண்டும் கேட்பதுபோல தலையைக் கவிழ்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான் போஸ்.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *