ஊனம்
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சைனாடவுன் நடைபாதைகள் ஒன்றின், பஸ் நிறுத்ததிற்குப் பக்கத்தில் சாமிநாதன் தன்னிடம் இருந்த இருநூறு ‘பிக் சுவீப்’ லாட்டரிச் சீட்டுகளை மிக நேர்த்தியாக அடுக்கிவைத்துக் கொண்டிருந்தார். அடுக்குவதற்கு முன் பையில் வைத்திருந்த ஒரு சிறிய குல தெய்வப் படத்தை எடுத்து அதற்கு முன்னால் ஓர் ஊதுவத்தியை ஏற்றிவைத்துப் பயபக்தியுடன் வணங்கினார். அன்றைய வியாபாரம் நல்ல படியாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார். வழக்கம்போல் வார நாள்களில் காலை ஏழரை மணி அளவில் அவர் மேற்கொள்ளும் பணி இது.
“ஐயா, இந்தாங்க காப்பியும் ரொட்டியும்”, என்று நீட்டினார் பக்கத்துச் சாப்பாட்டுக்கடைக்காரர்.
“அப்படி வை…” என்று சொல்லிக்கொண்டே வண்டிச்சக்கரத்தில் மாட்டியிருந்த பையில் கையை விட்டுத் துழாவினார்.
“அட பரவாயில்லை, ஐயா.. பணந்தானே.. பிறகு வந்து வாங்கிக்கிறேன்…”
“இல்லே இல்லே.. கொஞ்சம் இரு.. இந்தா.. . இரண்டு வெள்ளிதானே?.. வச்சுக்கோ..” என்று சற்றுப் பிடிவாதமாகவே அவர் கையில் திணித்தார்.
“சரி வரேன் ஐயா..” என்று சொல்லிக்கொண்டுபோனவர், சற்றுத் தூரத்திலிருந்து திரும்பியபடி,
“மத்தியானச் சாப்பாடு?”, என்று கேட்டார்.
“வழக்கம்போலதான்..” என்றார் சாமிநாதன்.
சோறு, இரண்டு துணைக்கறி வகை. இதுதான் அவருடைய மத்தியானச் சாப்பாடு. அதே கடைக்காரர்தான் கொண்டுவந்து கொடுப்பார். அதற்கும் அப்போதே பணத்தைக் கொடுத்துலிடுவார். கடன் வைப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அது நிம்மதியான வாழ்க்கையைத் தராது என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை எனினும், உழைப்பில் அதிக நம்பிக்கை கொண்டவர்; அதிர்ஷ்டத்தில் துளிகூட நம்பிக்கை இல்லாதவர். அதற்குச் சொந்த வாழ்க்கை ஒரு காரணமாக இருக்கலாம். வேடிக்கை என்னவென்றால், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்களும் அதைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும்தான் அவருடைய வாடிக்கையாளர்கள்.
ஓரளவு வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவர்தான் சாமிநாதன். அதுவும் பல நாள் தவமிருந்து பிறந்த ஒரே பிள்ளை என்பதால் அவருக்குச் சாமிநாதன் என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்தனர் அவர் பெற்றோர், கோவிந்தசாமியும் கமலம்பாளும். தந்தை வங்கி நிர்வாகி; தாயார் இல்லத்தரசி.
சாமிநாதனின் தொடக்கக்கால வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாகத்தான் இருந்தது. கையில் பிடிக்க முடியாத, துறு துறுவென, துடிப்புமிக்க சிறுபிள்ளையாக இருந்து, பிறகு பதினெட்டு வயது கட்டிளங்காளையாக உருமாறிய அவரின் வாழ்வில், விதி விளையாடியது. கார் ஓட்டும் ஆசையில் தன் அப்பாவின் காரை யாரும் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து ஓட்டிச் சென்றார். இள ரத்தம். பின் இருக்கையில் நண்பர்களின் ஆரவாரம். சொல்லவா வேண்டும்? காரின் வேகம் கூடியது. காற்றில் கார் மிதந்தது. வளைவை நெருங்கும்போது, கவனம் சற்றுச் சிதறியது. கார் வளைவை இடித்தது. ஒரு குட்டிக்கரணம் போட்டு, பேரிரைச்சலுடன் சாலையின் குறுக்கே பக்கவாட்டில் அதிர்ந்து நின்றது! அவ்வளவுதான். மற்றக் கார்கள் ஓலமிடத் தொடங்கின. போக்குவரத்து நெரிசல் சாலையைத் திணறச்செய்தது. விபத்துக்குள்ளான கார் உருக்குலைந்து போனது. இரவு நேரம் என்பதால் சாலையில் வெளிச்சம் குறைவாக இருந்தது காருக்குள் சிறிது நேரம் நிசப்தம். பிறகு முனகல் சத்தம் கேட்டது. பின் இருக்கையில் இருந்த இரு நண்பர்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மயங்கிக்கிடந்தனர். முன் இருக்கையில் இருந்த நண்பர் நசுங்கிய கதவில் சிக்கிக்கொண்டார். அவரிடமிருந்துதான் அந்த முனகல் சத்தம் கேட்டது. மருத்துவமனைக்குப் போகும் வழியில் உயிருக்காகப் போராடிய அவர், மருத்துவமனையை அடைந்ததும் உயிர் துறந்தார். சாமிநாதனுக்கோ கால்களிலும் தலையிலும் பலத்த அடி. அவர் அரை மயக்கத்தில் கிடந்தார். கால்கள் ‘ஸ்டியரிங்’ வளையத்துக்குள் சிக்கிக் கொண்டதால் அவற்றை அசைக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை உணர்விழந்து கிடந்தன. அதனால், சக்கர நாற்காலியின் உதவியை நாட வேண்டியதாயிற்று.
அந்த விபத்திலிருந்து, உடலாலும் உன்ளத்தாலும் மீண்டுவரச் சாமிநாதனுக்கு ஓராண்டு ஆனது! தன் நண்பர்களில் ஒருவரை இழந்து விட்டதை எண்ணிக் கடந்த 22 ஆண்டாக அவர் தன்னை நொந்து கொள்ளாத நாளே இல்லை. தன் கால்களின் வளர்ச்சி குன்றிப் போயிருந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல், இறந்து போன தன் நண்பனை நினைத்து அவர் மனம் குற்ற உணர்வில் வெந்தது. தான் மட்டும் அந்தக் காரை ஓட்டாமல் இருந்திருந்தால்… கார் ‘லைசன்ஸ்’ இல்லாமல் காரை ஓட்டுவது மிகவும் ஆபத்து என்று அப்பா அடிக்கடி சொல்வதைக் கேட்டு நடந்திருந்தால்… அம்மாவும் அப்பாவும் அன்று வீட்டில் இருந்திருந்தால்… நண்பர்களின் தூண்டுதல் இல்லாமல் இருந்திருந்தால்… கார் வேகத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தால்… அந்தப் பாழாய்ப் போன கொடிய விபத்து ஏற்பட்டிருக்காதே என்று அவர் மனம் உழன்றது. அதிலும் தனிமையில் இருக்கும்போது அந்த நினைவுகள் விஸ்வரூபமெடுத்து நெஞ்சைப் பிளக்கும்.
தந்தை சொன்னதை நினைத்துப் பார்த்தார் சாமிநாதன்.
“சாமிநாதா உன்னை இந்த நிலையில் லிட்டுட்டுப் போக எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குதுப்பா… நீ எப்படி வாழப் போறியோ.. உன் அம்மாவை எப்படி வச்சுக் காப்பாற்றப் போறியோ.. ஊனமான உனக்கு யார் வேலை தரப்போறாங்களோ.. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கே…”
இறப்பதற்குமுன் அப்பாவின் குமுறல் அவர் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தனக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு உண்மையிலேயே அவர் நெஞ்சு வலியால்தான் இறந்தார். அதன் பிறகு அம்மாவும் ஓர் உணவுக்கடையில் வேலை செய்து, சாமிநாதனையும் பார்த்துக்கொண்டார் கால் ஊனத்தினால், தேசிய சேவைக்கும் அவர் அழைக்கப்படவில்லை. ‘டெலிஃபோன் ஆபரேட்டர்’, உணவுக் கடையில் காசாளர் போன்ற வேலைகனைச் செய்தார். கடைசியில், மூன்றாண்டுக்கு முன்தான், தன் தாய் இறந்த பிறகு, ‘பிக் சுவீப்’ சீட்டுகளை லிற்கும் தொழிலை மேற்கொண்டார். அதில் கிடைக்கும் சிறு வருமானத்தில், தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதுடன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்குத்தெரிந்த முதியோர் இல்லத்திற்குத் தவறாமல் சென்று தன்னாலான உதவிகளைச் செய்து வருகிறார்.
அன்று சீட்டு விற்பனை மந்தம்தான். மனம் பழைய நினைவுகளுக்குத் திரும்பியபோது ஒருவர் வந்து அடுக்கி வைத்திருந்த கட்டுகளை உற்றுப்பார்த்துவிட்டு அதில் ஒன்றை எடுத்துப் புரட்டினார். நடுவிலிருந்து ஒரு சீட்டை எடுத்தார். சிறிது நேரம் யோசித்தார். முதலில் எடுத்த சீட்டை வைத்துவிட்டு இன்னொரு கட்டிலிருந்து கடைசிச் சீட்டை எடுத்தார். இப்படியாகச் சுமார் பதினைந்து நிமிடத்தில் மூன்று சீட்டுகனை எடுத்துக்கொண்டு, சிறு புன்னகை பூத்தவாறே பத்து வெள்ளியை நீட்டினார். மறு புன்னகையோடு மீதம் நான்கு வெள்ளியைத் திருப்பிக்கொடுத்தார் சாமிநாதன்
“வர்றேன்… சாப்பாட்டு ‘டைம்!”, என்று கூறிலிட்டு நடந்து சென்றார் அந்த நபர். அவர் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார் சாமிநாதன். ஓரளவுக்குப் பழக்கமானவர்தான். ஆனால், பெயர் நினைவில் இல்லை. பக்கத்து வங்கியில் வேலை செய்கிறார் அதிகம் பேசமாட்டார். அப்படியே பேசினாலும் பட்டென்று போட்டு உடைப்பார். ஆளைப் பார்த்துப் பேசுவார். ஊனம், பிச்சையெடுப்பது, அடுக்கு மாடி வீடுகளில் செய்யப்படும் துப்புரவுப் பணிகள் எல்லாம் அவருக்கு அருவருப்பைத் தரக்கூடியன. ஏதோ ஒருமுறை சாமிநாதனிடமிருந்து வாங்கிய சீட் டுக்குச் சிறு பரிசுத் தொகை கிடைத்தது. ராசியான கடை என்பதால் அவர் கடைக்குக் கடந்த ஒரு வருஷமாக வந்து போகிறார். ஒல்வொரு மாதமும் தவறாமல் வந்துவிடுவார். முன்பெல்லாம், பத்து இருபது சீட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தவர், கடந்த ஆறு மாதங்களாக மூன்று, நான்கு என்று மட்டுமே வாங்கிக்கொண்டிருக்கிறார்
“நிறையச் சீட்டுகனை வாங்கினால்தான் அதிர்ஷ்டம் கிட்டும் என்றில்லை.. ஒன்றிரண்டில்கூட கிட்டலாம் இல்லையா?..” திடீர் ஞானோதயம் வந்தது அவருக்கு.
எல்லாம் அவர் மனைவியின் மந்திரச்சொல்!
“உண்மையைச் சொல்லப்போனால், என்னைவிட என் மனைவிக்குத்தான் அதிர்ஷ்டம் அதிகம். அவள் சொல்லித்தான் நான் வாங்குறேன்.. அதுவும் அவளுக்குப் பிடிக்காது எண்களா பார்த்து வாங்குறேன். . நாலு ‘நம்பரும்’ அப்படிதான்”, என்று ஒரு தரம் அவர் கூறியது சாமிநாதன் நினைவுக்கு வந்தது. பேச்சுவாக்கில் அவர் மனைவிக்கு அவர் தாயாரைப் பிடிக்காது என்பதையும் அறிந்து கொண்டார் சாமிநாதன். அதனால், தாயாரை முதியோர் இல்லத்தில் விட்டுலிட்டாராம். அதற்குரிய காரணத்தையும் அவரே சொன்னார்:
“அவங்களுக்கும் பொழுது போன மாதிரி இருக்குமில்லே… வீட்டுல வச்சுக்கிட்டா அப்புறம் அவங்களைப் பார்த்துக்கிறதுக்கு ஒரு பனிப்பெண்ணை வச்சுக்கணும். இதெல்லாம் தேவையா? அதனாலதான் என் மனைவி யோசனைப்படி அம்மாவை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிட்டேன். .”
அவர் கூறிய காரணத்தைச் சாமிநாதனால் ஏற்றுக்கொள்ன முடியலில்லை. உடல் ‘ ஊனமாக இருந்தும் கூடக் கடைசிக் காலம் வரை தன் தாயாரை வீட்டில் வைத்துக் காப்பாற்றி வந்த அவருக்கு, உள்ளத்து ஊனத்தினால், அந்த நபர் சொல்வதைக் கேட்க அருவருப்பாக இருந்தது. மகனின் மூடத்தனமும், மனைவியின் சுயநலமும் நன்கு புலப்பட்டது.
வழக்கத்திற்கு மாறாக அன்று கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. நாளை ‘பிக் சுவீப்’ லாட்டரி முடிவுகள் வெளி வர விருப்பதால்தான் இந்தக் கூட்டமோ! ஒருவர் பின் ஒருவராகக் கிட்டத்தட்ட இருபது பேர் அந்தக் காலை நேரத்தில் வந்து வாங்கிச் சென்றார்கன். சிலர் பஸ்ஸிலிருந்து இறங்கிய உடனே பக்கத்திலிருந்த தன் கடைக்கு வந்து வாங்கிக்கொண்டு செல்வது சற்று ஆச்சரியமாகத் தான் இருந்தது சாமிநாதனுக்கு. உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். இன்று சீக்கிரமாகச் சீட்டுகளை விற்றுலிட்டு வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டிருந்தார் அவர் பக்கத்தில் இருந்த குல தெய்வப் படத்தைப் பார்த்து, பயபக்தியோடு கும்பிட்டுத் திரும்பினார். வேகமாக வந்த ஒரு பஸ், பஸ் திறுத்தத்தை மோதி, பக்கத்தில் இருந்த சாமிநாதன் கடையையும் மோதித் தள்ளியது. மோதிய வேகத்தில், மேசை உடைந்து சீட்டுகள் பறந்தன பணப் பையிலிருந்து நாணயங்கன் சிதறின. சக்கரநாற்காலியிலிருந்த சாமிநாதன் தூக்கி எறியப்பட்டார்! தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. அவருடைய குல தெய்வப் படம் உடைந்து அவர் கைக்கு அடியில் கிடந்தது!
முதலுதவி கிடைப்பதற்குள் உரம் வாய்ந்த உள்ளத்தின் அந்த ஊனமுற்ற வெற்றுடல், மெல்லத் தன் கண்களை மூடியது.
– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.