கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 7,541 
 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரபல எழுத்தாளரும், தமிழறிஞருமாகிய சுந்தர ராஜன் காலமாகிவிட்டார். அவரது படிப்பறையாக வும், சயனக்கிருகமாகவும், பண்டசாலையரகவும் சாமி யறையாகவும் எல்லாமாயிருந்த அறையில் ஒரு மரக் கட்டிலின்மீது அவரது சடலம் கிடத்தப்பட்டு வெள் ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. தலைப்பக்கத்திலே ஒரு குத்துவிளக்கு. கால்பக்கத்திலே கண்ணீருங் கம்பலை யுமாக அவர் மனைவி சிவபாக்கியம். ஒன்று எரிந்து கொண்டிருந்தது; மற்றது புகைந்தபடியிருந்தது. 

சுற்றிவர உற்றாரும், உறவினருமாகிய பெண்களி கூட்டம். அவர்களின் ஒப்பாரி இடைக்கிடை எழுந்து சிவபாக்கியத்தின் நெஞ்சக் குருத்தைக் கருக்கி அவளை அழவும் சக்தியற்றவளாய் ஆக்கியபடி இருந்தது. 

பற்றாக் குறையும், பஞ்சமும், நோயுமாக வாடி வதங்கிய வேளையிலும் முற்றாகக் கருகிப்போகாத ஒரு குளிர்மையைத் தமது பேச்சாலும், ஆதரவாலும், அன் பாலும் ஏற்படுத்தி வந்த அவர், அவளைத் தவிக்கவிட டுப் போய்விட்டார். தாய், தந்தை, சகோதர சகோ தரிகள் யாருமற்ற அநாதையான அவளுக்கு எல்லாமா யிருந்த அன்புருவம் வெறும் சவமாகக் கிடக்கிறது. இனி அவளுக்கு யார் துணை? 

கண்களோடு இதயமும் இருண்டு கொண்டு வந்தது. சிந்தனையோடு உயிரும் செத்துக் கொண்டிருந்தது. சிவபாக்கியம் சுருண்டு ‘அவராயிருந்த’ அதன் கால்களிலே தலையை வைத்துக் கிடந்தாள். 

வெளியிலே இடைக்கிடை சந்தம் பிசகாது எழுந்து கொண்டிருந்த பறைச் சத்தமும், பந்தல் போடுபவர் களின் ஆராவாரமும், வருவோர் போவோரின் ஒலிக ளும், ஏன், உள்ளே வந்து தன்னைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுது அநுதாபத்தை வெளியிடும் பெண்களின் ஓலமுங்கூட அவளுக்குக் கேட்கவேயில்லை. 

எங்கோ ஆழத்திலே அதல பாதாளத்திலே தலை குப்புற விழுகின்ற ஓர் அந்தர நிலையிலே- 

படுபாதலம் – கச – இருட்டு – பயங்கர சூனியம். இனி-

(2) 

சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு சிவபாக்கியம் சுந்தரராஜனின் கைத்தலம் பற்றி ஸ்ரீமதி சுந்தரராஜ னானாள். சிறந்த எழுத்தாளர், தமிழ் அறிஞர், நாட றிந்த பிரபலமானவர் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு அவள் அவருக்குக் கழுத்தை நீட்டவில்லை. கலையுணர்வு பற்றியோ, அழகு ரசனை பற்றியோ அவ ளுக்கு ஒரு மண்ணும் தெரியாது. பாவாடை கட்டும் பருவம் கழியுமுன்னரே, பாடசாலையை விட்டுக் குச்சுச் கொட்டிலில் உரல் உலக்கைகளோடும், அம்மி குழவிக ளோடும் உறவாடி வளர்ந்த ஓர் அப்பாவிக் கிராமப் பெண் அவள். 

திருமணச் சந்தையிலே மலிவுச் சரக்காயிருந்த சுந்தரராஜனை, அவளின் தாய், தான் குத்தியிடித்து இரத்தம் பிழிந்து உழைத்த பணத்திற்குப் பெற்றுக் கொடுத்தாள். அவர்களுடைய திருமணம் ஏழ்மைக்கும் ஏழ்மைக்கும், அநாதைத் தனத்திற்கும் அநாதைத் தனத்திற்குமிடையே ஏற்பட்ட ஒரு பந்தமேயல்லாது வேறன்று. 

சுந்தரராஜன் ஒரு தமிழாசிரியர்; இருநூறு ரூபா சம்பளத்திற்குப் பெட்டி படுக்கை சகிதம் ஊர் விட்டு ஊர் செல்லும் தலைவிதியைப் பூண்டவர். அவருடைய கல்வித் தாரதரம் அரிவரி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை ‘படித்துக் கொடுக்கும்’ அளவிற்குத்தான் தகுதி பெற்றிருந்தது. 

ஆனால், அவரது திறமை அந்தத் தராதரப் பத்தி ரத்தினுள்ளே சிறை செய்யப்படவில்லை என்பதை ஈழத் துத் தமிழுலகமும், அறிஞருலகும் அறிந்திருந்தன, ‘சுந்தரன்’, ‘ராஜன்’, ‘அமுதன்’ என்ற புனைபெயர் களிலே கவிஞனாக, சிறுகதை எழுத்தாளனாக, கட்டுரை யாசிரியனாக, நாடக மேதையாக அவர் பத்திரிகை உல கிலும், கலையுலகிலும் உலாவி வந்தார். இலக்கிய, சம யக் கூட்டங்களில் தேன் மாரியாகப் பிரசங்க மாரி பொழிந்தார். இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் மாதத்தில் ஒரு தடவையாவது நடைபெறும் இலக்கிய, சமய மகாநாடுகளில் அவர் சொற்பெருக்காற்றுவது கடந்த பத்தாண்டுகளிலே சர்வ சாதாரணமாகியிருந்தது. 

இவை அவருக்குப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. சில சந்தர்ப்பங்களிற் கையைக் கடிப்ப தும் உண்டு. ஆனாலும், ஓயாத கலைத்தாகமும், புகழ் வெறியுங்கொண்டு அவர் அலைந்து திரிந்தார். 

இவ்வேளையில் சிவபாக்கியத்திற்கு அவரின் மீது பத் திரிகைகள் அவ்வப்போது பாடிய புகழ்மாலைகளும், பத்திரிகைகளில் வந்த அவரின் புகைப்படங்களும் நினைவில் வந்தன. ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு சுந்தர ராஜன் அவற்றைத் தனக்குக் காட்டி மகிழ்ந்த நாள்கள் அவளுள்ளே படங்களாய் விரிந்தன. 

அவர் ஒரு குழந்தைப்பிள்ளை தான்! பொறுப்பில்லா மல் திரிவது தொடங்கி, உணர்ச்சிவசப்பட்டு அழுவது, சிரிப்பது வரை சுந்தரராஜன் குழந்தையிலும் குழந்தை யாகத்தான் இருந்தார். “என்ன இப்படிச் சிறுபிள்ளை மாதிரி இருக்கிறீர்களே ? கொஞ்சங்கூடப் பொறுப் புணர்ச்சி இல்லையே உங்களுக்கு” என்று அவள் சொன்னால், “இதோ பார் ராணி! உனக்கு ஆறு குழந்தைகள் இருக்கின்றன. அந்த ஆறோடு என்னையும் ஏழாக நினைத்துக் கொள்ளேன். இதில் என்ன குறைந்துவிட்டது?” என்று சொல்லிவிட்டு, குழந்தைகள் பக்கத்தில் இருந்தாலும் பொருட்படுத்தாமல் சிவபாக்கியத்தின் மடியிலே படுத்துவிடுவார். அந்த நேரத்தில் அவர் இடி இடி என்று சிரிக்கும் அந்தச் சிரிப்பு ! 

“அத்தான்! உங்கள் ராணி, இன்று ஆறு குஞ்சுகளோடு அநாதையாய் நிற்கிறாளே, தெரியவில்லையா உங்களுக்கு?” என்று சிவபாக்கியம் குருதிக் கண்ணீர் வடிக்கையில்- 

நடந்ததையும், நடக்கப் போவதையும் புரிந்து கொள்ளாத அவளின் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடியாடித் திரிவது மங்கிய நிழல் வடிவாய் அவளுக்குத் தோற்றுகின்றது. 

அந்தக் குழந்தைகளைப் பரிதாபத்தோடும், ஆதுரத் தோடும் பார்க்கிறவர்களின் பார்வையும், கைகளாலே தடவுகின்ற தடவலும் 

அவள் வயிற்றைக் கலக்கி, இதயத்தைச் சுக்கு நூறாக்கி- 

“கடவுளே! என் குழந்தைகளின் எதிர்காலம்”

சிவபாக்கியம் தன்னுள்ளே தானாகிச் சமாதி நிலை யில் கண்மூடிக் கிடக்கிறாள். 

பறை முழங்குகின்றது. பெண்கள், ஆண்கள் மாறிமாறி வருகின்றனர். போகின்றனர். வேலைகள் துரிதமாக நடக்கின்றன. 

சவமாகிவிட்ட சுந்தரராஜன் சாம்பராக இன்னும் சில மணித்தியாலங்களே இருக்கின்றன. 

குருக்களும் வந்துவிட்டார். 

(3) 

பாடசாலைகளை அரசாங்கம் எடுத்ததால் யாருக்கா வது நன்மை ஏற்பட்டிருந்தால், அவ்வாறு நன்மை பெற்ற ஒரு சிலரில் சுந்தரராஜனும் ஒருவர். இது நாள்வரை வெளியூர்களிலே கடமையாற்றி இலங்கைப் கையிரதப் பகுதிக்கும், இ.போ. ச. விற்கும், உணவு விடுதிகளுக்குமே தமது சம்பளத்தைப் பகிர்ந்து கொடுத்துவிட்டுத் தமது குடும்பத்தை அரைப்பட்டினி யிலே போட்டு வந்த அவருக்கு ஊரோடு மாற்றம் வந்தது பெரும் வரப்பிரசாதமாகவேயிருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திற்கு அதுவும் பெரியதொரு கல்லூரிக்கு மாற்ற உத்தரவு கிடைத்த பொழுது சுந்தரராஜன் மகிழ்ச்சி வெள்ளத்திலே முக் குளித்தார் என்றே சொல்ல வேண்டும். 

சிவபாக்கியத்திற்கோ ஆனந்தம் அளவிடவியலாத தாய் இருந்தது. சுந்தரராஜனிலும் நூறு மடங்கு கூடிய நிம்மதி அவளுக்குத்தான் ஏற்பட்டது. கொட்டில் வீட் டைக் கல்வீடாய் மாற்றி அமைக்கலாம் என்றும், அட கிலே கிடக்கும் நகைகளை மீட்கலாம் என்றும், குழந்தை களுக்கு வயிறார உணவு கொடுத்து, மரியாதையைக் காக்க நல்ல துணிமணிகளை வாங்கலாம் என்றும் அவள் எத்தனையோ கனவுகளைக் கண்டாள். எல்லாவற்றிலும் மேலாக அவர் என்றைக்கும் பக்கத்திலேயே இருப் பார் என்ற நினைவே அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. 

ஆனால் – குச்சு வீடு குச்சு வீடு குச்சு வீடாகத்தான் இருந் தது. நகைகள் சுவரில் அடித்த பந்துபோலச் சில நாள் கள் வீடுதிரும்பி அவளிடம் இருந்துவிட்டு மீண்டும் அட குக் கடையையே நாடிச் சென்றன. பிள்ளைகள் போஷாக்குக் குறைந்தவர்களாயும், பிணிகொள் கலங்க ளாயுந்தான் இருந்தார்கள். 

சுந்தரராஜன் வந்த வழி அது. தமிழாசிரியரின் சிக்கன சுபாவத்திற்கு மாறாக ஒரு கலைஞனின் ஊதாரிக் குணத்திற்குத்தான் அவர் எடுத்துக்காட்டாயிருந் தார். மாதம் முழுவதும் கல்லூரியிலே கத்துவதற்குக் கிடைத்த பணம், கிடைத்த இரண்டொரு நாட்களில் அந்தர்த்தியானமாகிவிட எஞ்சிய நாள்களை அவர் கழிப்பதற்கு முடியாது திண்டாடுவது வழக்கமாகிவிட்டது. 

சிவபாக்கியம் ஏழ்மை வாழ்விற்குப் பழக்கப்பட்ட வள்தான். ஆனால், ஊதாரித்தனத்தால் கணவன் ஏற் படுத்துகின்ற வறுமையைத்தான் அவளால் சகிக்க முடியாதிருந்தது. 

சம்பளம் கிடைத்த அன்று குடும்பம் முழுவதும் கார் பிடித்துக்கொண்டு படத்திற்குச் செல்லவேண்டும் எனபது சுந்தரராஜனின் நியதி. பணம் இருக்கையில் குழந் தைகள் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடு வார். அவை ஒரு நிமிடத்தில் வாங்கியதைப் போட்டு உடைத்து நொருக்கினாலென்ன, கிழித்துக் குதறினா லென்ன அதைப்பற்றிச் சிறிதும் வருத்தப்படமாட்டார். 

இந்த அநியாயச் செலவுகளைப் பற்றிச் சிவபாக்கி யம் மூச்சுவிடக்கூடாது. ‘அநுபவிக்கவேண்டிய காலத் தில் எல்லாம் அநுபவித்துவிட வேண்டும். பணத்தைச் சுடலைக்குப் போகும்போது கட்டிக்கொண்டா போகப் போகிறோம்? குழந்தைகளின் முகங்களிலே காணப்படும் ஒரு நிமிஷ மலர்ச்சியின் பெறுமதி, நான் செலவழிக் கும் பணத்திலும் எவ்வளவோ மேலானது” என்றெல் லாம் அவர் பேசும்பொழுது சிவபாக்கியத்திற்குக் கோபம் கோபமாக வரும். வந்து என்ன செய்வது? சுந்தரராஜனைத் திருத்தக் கடவுளாலும் முடியாது. 

அநுபவிக்க வேண்டியதையெல்லாம் அநுபவித்து விட்டு அவர் போய்விட்டார். 

இனி அவள் கதி ? குஞ்சுங் குருமானுமான பிள்ளைகளின் கதி? 

கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்று கேட்கக்கூட நாதியற்ற அவளுக்கு இனி யார் துணை? எந்த ஆதாரத்திலே அவள் தனது வாழ்க்கையைக் கொண்டிழுக்கப் போகிறாள்? 

மிச்சம் மீதியென்றிருந்த ஒரே ஒரு சங்கிலி இன்று சுந்தரராஜனின் கடைசிப் பயணச் செலவுகளுக்காய் நகைக்கடையை நாடிச் சென்றுவிட்டது. 

நாளை? 

திரும்பிய பக்கமெல்லாம் அநாதரவும், அந்தகார முமாய்த் தெரிய அவள் கிடந்த இடத்திலேயே, சுந்தர ராஜனின் குளிர்ந்த கால்களுக்குமேல் சுருள்கிறாள். 

பலவந்தமாக அவளை அப்பால் விட்டு நாலுபேர் வந்து கட்டிலோடு சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்கள். 

குளிப்பாட்டவாம்! 

குழந்தைகள் ஒன்றும் புரியாது விழித்துப் பார்க் கின்றன. சவத்தின் பின்னால் ஓடுகின்றன. 

சிவபாக்கியம் நிலத்திலே விழுந்து குப்புறக் கிடக்கி றாள். அறிவுக்கும், அந்தகாரத்திற்கும் இடைப்பட்ட நிலை. 

சுந்தரராஜனுக்குச் சிறிய தாய் முறையான கிழவி ஒருத்தி தன் சேலைத் தலைப்பால் அவளுக்கு விசிறுவது கனவுக்காட்சி போலத் தெரிகிறது. 

அவள் கிடக்கிறாள்- 

(4) 

“அந்தாள் தமிழ் வாத்திதான். எண்டாலும் பெரிய வீரனல்லே? இலங்கையிலை அந்நாளைப் போலத் தமிழ் எழுத இரண்டொருதராலைதான் முடியும். பேச்செண் டால் சுந்தரராஜன்தான் எண்டு பேரும் எடுத்துப்போட் டுது, இந்த இளம் வயசிலை. எத்தனை தமிழ்ச் சங்கங் களுக்குத் தலைவர், காரியதரிசி தெரியுமே? உம்- என்ன இருந்தென்ன? வாழத் தெரியேல்லை. இப்பிடிக் குறுக்காலை யமன் வந்திட்டான். பொடிச்சிதான் பாவம்.”  இளைப்பாறிய சிங்கப்பூர்ச் சந்திரசேகரம் வ்வாறு பேசுவது சிவபாக்கியத்தின் காதுகளிலே விழுகிறது. 

சிவபாக்கியம் உள்ளுக்குள்ளே சிரித்துக்கொள்கி றாள். செத்தபின் வாய் வார்த்தைகளால் அபிஷேகம் செய்துவிடுவது சுலபந்தான். ஆனால், இந்த வார்த்தை கள் அவளின் வாழ்க்கைப் பாதையிலே எவ்வளவு தூரம் தொடர்ந்து வரப்போகின்றன? 

சிவபாக்கியம் பல விஷயங்களை நினைவுத் திரையிலே ஓட்டி ஓட்டிப் பார்க்கிறாள். இவ்வளவு பேசுகின்ற இந் தச் சந்திரசேகரம், நோட்டுக்கு ஆயிரம் ரூபா கடன் தருமாறு சுந்தரராஜன் கேட்டபொழுது சொன்ன வாசகங்களை, வாழ்க்கையிலே மறந்துவிட முடியுமா? 

“இஞ்சை பாரும் மாஸ்டர் ! நீர் பிள்ளைகுட்டிக் காரன். சும்மா கூட்டங்கள் நாட்டங்களெண்டு திரியிற ஒரு விசரன். உம்மிட்டை என்ன பொறுப்பு இருக் கெண்டு நான் கடன் தாறது? சும்மா கசாம், புசா மெண்டு பத்திரிகையிலை நீர் எழுதின இரண்டொரு கதையைப் பொறுப்பாய் வைச்சே காசுதரச் சொல்லு கிறீர்? எனக்கு ஒளிச்சு மறைச்சுப் பேசத் தெரியாது. சொல்லுறன் கேளும். உமக்குக் காசு வேணுமெண் டால் உம்முடைய இரண்டு பரப்புக் காணியை ஈட்டுக் குத் தாரும். ஆயிரமல்ல இரண்டாயிரந்தாரன்.” 

இத்தனைக்கும் சந்திரசேகரம் சுந்தரராஜனுக்கு ஒன்று விட்ட தாய்மாமன் முறையானவர். ஆனால், அவர் அன்று பேசின அந்தக் கொழுத்த பேச்சு! 

சுந்தரராஜன் உணர்ச்சி வசப்படுபவரல்லவா ? அவர் கண்டபடி பேசிவிட்டு வீட்டிலே வந்து பாக்கியத்தின் தோள்களிலே தலையைச் சாய்த்துக் கொண்டு விம்மி விம்மி அழுதார். சிவபாக்கியமும் அவரோடு சேர்ந்து அழுதாள். 

அவளால் வேறு என்னதான் செய்யமுடியும்? 

ஒழுகுகின்ற கிடுகுக் கூரையை ஓட்டுக் கூரையாக மாற்ற அவர் எடுத்த முயற்சி இப்படிப் பிசுபிசுத்துப் போகவும், அவர் அவமானப்படவும் காரணம் -? 

சந்திரசேகரம் அன்று பேசிய பேச்சு ! அவர்தாம் ன்று சுந்தரராஜனுக்குப் புகழ்மாலை சூட்டுகிறார் ! 

சுந்தரராஜன் அன்று பாடிய பட்டினத்தார் பாடல் வரிகள் சிவபாக்கியத்தின் நினைவில் மிதக்கின்றன. 

‘ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல
உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்லப்
பெண்டிர் சதமல்ல….’ 

சிவபாக்கியத்தை அணைத்துப்பிடித்துக்கொண்டு, கடைசித் தடவையாக அரப்பு எலுமிச்சங்காய் வைப்ப தற்காகச் சுந்தரராஜனைக் குளிப்பாட்டும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். 

குழந்தைகளுக்கு எண்ணெய் வைக்கையில் அவர் களோடு வரிசையில் வந்து நின்று தாமும் ஒரு குழந்தையாகி எண்ணெய் வைப்பிக்கும் சுந்தரராஜனுக்கு, அவள் அரப்பும், எண்ணெயும் வைக்கப் போகிறாள். 

கடைசித் தடவையாக- 

அடிவயிற்றிலிருந்து குடலைக் கிழிப்பதுபோல ஓர் ஓலம் எழுகிறது. சிவபாக்கியத்திடமிருந்து. 

ஆண்கள்கூடத் தங்கள் சால்வைகளால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். 

(5) 

அன்றைக்குப் பிறகு சுந்தரராஜன் யாரிடமும் கடன் கேட்பதில்லை. பத்து ரூபாவுக்கும், பதினைந்து ரூபாவுக்கும் ‘டியூசன்’ கொடுக்கப்போய் ஓடாய் உழைத்தார். இரவும் பகலும் கதை, கட்டுரை என்று எழுதி எழுதித் தள்ளினார். 

ஆனால், அவர் எதிர்பார்த்த பணவருவாய்தான் எட்டாக் கனியாய் நின்று ஏய்த்தது. எப்பொழுதாவது இருந்திருந்து பத்திரிகையில் வெளியாகும் கதை, கட்டுரைகளுக்குப் பத்தோ, பதினைந்தோ, இருபதோ அனுப்புவார்கள். 

ஒரு தடவை சுந்தரராஜன் ஒரு கிழமை இரவும் பகலும் முயன்று கம்பனின் கவிதைகளிற் சிலவற்றிற்கு நீண்டதொரு விமர்சனம் எழுதினார். அந்தக் கவிதை கள் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு மாணவருக்குப் பாடமாய் இருந்தபடியால், பத்திரிகைகளில் அக்கட் டுரைக்கு வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை அவ ருக்கு! பத்து இதழ்களிலாவது அது வெளியாகும். ஓர் இதழுக்கு இருபத்தைந்து ரூபா வீதம் இருநூற்றைம் பது ரூபாவாவது கிடைக்கும், என்று அவர் மனக் கோட்டை கட்டினார். 

அவரது நம்பிக்கை பழுதாகவில்லை. பத்திரிகையில் அக்கட்டுரைகள் வெளியானபோது பாராட்டுக்கள் குவிந் தன. தனிப்படக்கூடப் பல தமிழறிஞர்கள் அவருக்குப் புகழ்மாலை சூட்டிக் கடிதங்கள் எழுதினார்கள். 

ஆனால் பணம்…? அவர் கட்டிய மனக்கோட்டை நொருங்கிச் சரிந்து போகும் வகையில், கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிகை மௌனமாகவே இருந்து விட் டது. ஒரு சதங்கூட அனுப்பவில்லை. 

சுந்தரராஜன் மனம் நொந்துபோனார். இந்தக் கட்டுரையை எழுத எத்தனை நூல்களை ஆராய்ந்து குறிப் புக்கள் எடுத்திருப்பேன்! எவ்வளவு நாள் சிந்தித்திருப் பேன் ! எத்தனை நாள்கள் கண் விழித்து எழுதி யிருப்பேன்! குறைந்தது நான் எழுதிய தாள்களு க்கும், மைக்குங்கூட, ஒரு பத்து ரூபாக் காசு கிடைக்கவில்லை, பார்த்தாயா?” என்று அவர் கண்கலங்கிச் சொன்ன வேளையில்…. 

சிவபாக்கியத்தால் அழத்தான் முடிந்தது. 

வேறு என்ன செய்வாள்? 

பந்தலிலே கட்டிலைப் போட்டுப் பிரேதப் பெட்டியை அதன்மீது வைத்துச் சுந்தரராஜனைக் கிடத்தியிருக்கிறார் கள். வெள்ளை வேட்டி, நேஷனல் சட்டை, தோளில் உத்தரீயமாய்ப் போட்டிருக்கும் பட்டுச் சால்வை, தலைப்பாகை, பூமாலை சகிதம் சுந்தரராஜன் மாப்பிள் ளைக்கோலத்திலே கிடக்கிறார் ; இல்லை கிடக்கிறது. 

அழுகை, ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிப் போய் விடுகின்றன. குருக்களின் மணியோசையும், மந்திரங் களும் அங்குக் கம்பீர நாதமாய் எழுந்து கொண்டிருக் கின்றன. 

சுற்றிவர ஒரே மனிதக் கும்பல். அது நின்றும் இருந் தும் புதினம் பார்க்கிறது ஆசிரியர்கள், சுந்தரராஜன் கல்வி கற்பித்த கல்லூரி அதிபர், மற்றும் ஊழியர்கள், பத்திரிகாசிரியர்கள், எழுத்தாளர்கள்… இன்னும் பலர்… 

மாவிலையோடு சேர்த்து உரலின் இடையிலே வெள் ளைத் துணி கட்டி, அதனுள்ளே உலக்கையையிட்டு அதிலே ஒரு கையைப் பிடித்தவண்ணம், மூத்தவன் எட்டே வயதானவன் இராஜராஜன் நிற்கிறான். தலை மயிரை ஒட்டவெட்டி,மார்பு, கையெல்லாம் குறிகளோடு, வெள்ளைத் துணியொன்றை அரையில் உடுத்து, மார் பிலே பூணூல் அணிந்து, ஐயோ ! 

அவனைத் தாங்கிக்கொண்டு சந்திரசேகரம் நிற்கிறார். திருப்பொற்சுண்ணம் தொடங்குகின்றது. 

‘முத்துநற் றாமம்பூ மாலை தூக்கி…’ 

இராஜராஜனுக்குப் பக்கத்தில் தேன்மொழி, மங்கை, தயாளன், சீராளன். சுந்தரராஜனின் சிறிய தாய், கடைசிக் குழந்தை இராஜேந்திரனைத் தூக்கி இடுப்பில் வைத்து நிற்கிறாள். அது தனது சிறிய வாயிலே விரலை வைத்துச் சூப்பியபடி, சூழ இருக்கும் உலகினை விழித்து விழித்து மிரள மிரள நோக்குகிறது. 

திருப்பொற்சுண்ணம் முடியும்வரை சிவபாக்கியம் வாய்விட்டுக் கதறி அழக்கூடாது. 

கைகளும் கால்களும், உடலும் சோர்ந்து விழ அவள் இதயத்தினுள்ளே குலுங்கிக் குலுங்கித் தேம்பித் தேம் பிக் குமுறிக் குமுறி அழுகிறாள். 

(6) 

எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. இனிப் பிணத் தைப் பாடையிலே ஏற்றவேண்டியதுதான். 

ஆனால்… திடீரென்று பிணவீடு மேடைப் பேச்சரங் காய் மாறுகின்றது. 

சுந்தரராஜனின் படிப்பித்தற்றிறமை, பழகும் பண்பு, பலதரப்பட்ட ஆற்றல்கள்பற்றி அவர் படிப்பித்த கல் லூரி அதிபர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார். அவரைத் தொடர்ந்து சில ஆசிரியர்கள் சுந்தரராஜனுக்குப் ‘பரவல்’ செய்கின்றனர். 

“சுந்தரராஜனைப் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் அடிக்கடி தோன்றுவதில்லை. அவரது எழுத்தாற்றல், நாடறிந்த செய்தி. எங்கள் பத்திரிகை அவரது கதை, கட்டுரை, கவிதைகளால் பெருமை பெற்றது என்று தயங்காது கூற விரும்புகிறேன். கலை,  கலைக்காகவே என்று அவர் வாழ்ந்தார். அவர் நினைத்திருந்தால் தமது எழுத்தாலேயே ஆயிரம் ஆயிரமாய் உழைத்திருக்கலாம். ஆனால், இலக்கியத்தைக் கொண்டு பணம் பண்ண விரும்பாத பண்பாளராய் அவர் வாழ்ந்து மறைந்தார். இப்படிப்பட்ட பெருமகனை இனி என்று காணப்போகின்றோம்? அவரது ஆன்மா சாந்தியடைவதாக.” 

பிரபல நாளிதழொன்றின் ஆசிரியரும், மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் பெறுபவரும், ஆடம்பரமான பெரிய கார் ஒன்றிலே வந்திறங்கியவருமாகிய திருவாளர் பொன். செண்பகராசன் வழங்கிய மதிப்புரை – பாராட்டுரை – இறுதியுரைதாம் இந்த வாசகங்கள். இவர்தாம் சுந்தரராஜனது ‘கம்பன் கவிதை’ விமர்சனக் கட்டுரையை வெளியிட்டவர். 

தமது பேச்சு முடிந்ததும், சந்திரசேகரத்தைக் கொண்டு, வீட்டுச் சுவரில் தூங்கிய சுந்தரராஜனது நிழற்படத்தை வாங்கியவராய் அவர் தமது காரை நோக்கிச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து எழுத்தா ளர் சிலர் ஏதோ பேசிக்கொண்டு செல்கிறார்கள். ‘நாளைப் பத்திரிகையில் சுந்தரராஜனின் படத்தோடு வெளியிட ஒரு கட்டுரை எழுதித் தாரும்” என்று அவர் தம் பக்கத்திலே செல்லும் எழுத்தாள நண்பரைக் கேட் பது, சிவபாக்கியத்தின் காதுகளிலே தெளிவாக விழுகின் றது. அவள் சிரித்து, அழுகிறாள்……. 

பாடை தூக்கப்படுகிறது. பெண்களின் ஒப்பாரி கிளம்பி வளர்கிறது. சிவபாக்கியம் அழவும் மறந்து, சோர்ந்துபோய்ப் பந்தல் தூண் ஒன்றைப் பற்றியவண் ணம் இருக்கிறாள். இராஜராஜனையும், கைக்குழந்தை யையுந் தவிர்ந்த மற்றைய குழந்தைகள் அவளுக்கு அரு கிலே வந்து நின்று இப்பொழுதுதான் உண்மையை உணர்ந்தவைபோலக் கதறி அழுகின்றன. அவளோ சமாதியாகி நிலந்தோய அமர்ந்திருக்கிறாள். 

சந்திரசேகரம் திடீரென்று அவளருகே ஓடிவந்து கீழே குந்திக்கொண்டு, “பிள்ளை! ஒரு விஷயம்” என்று குசுகுசுக்கிறார். ‘அவள் என்ன?’ என்று விழியாலும் துடிக்கின்ற உதடுகளாலும் கேட்கிறாள். 

“பிள்ளை! நீ தந்த சங்கிலிக் காசு கொஞ்சம் போதாது போலையிருக்குது. பறைகாரன், பாடைக்காரனுக்கெல்லாம் காசு குடுக்கவேணும். என்ன செய்யிறது?” தயங்கித் தயங்கிப் பேசுவது போலச் சந்திரசேகரம் கேட்கிறார். 

சிவபாக்கியம் ஒன்றும் பேசாது தனது காதோலைகளைக் கழற்றி அவரிடம் கொடுக்கிறாள். 

அவர் வேதனைப்படுவதுபோலக் காட்டிச் சிறிதே நின்றவர், ”உம்… உன் நிலையும் இப்படியாய்ப் போச்சுது. என்ன செய்யிறது? நான் இதை அடகாய் வைச்சுக் கொண்டு நூறு ரூபா செலவழிக்கிறன். நீ வசதி போலைத்தா” என்று சொல்லியவராய், வராத கண்ணீரைச் சால்வையால் துடைத்துக்கொண்டு எழுந்து சவத்தைத் தொடர விரைவாய் நடக்கிறார். 

பறையின் சப்தம், சிவபுராண ஒலி, கதறல்கள், அழுகைகள் எழுந்துகொண்டிருக்கின்றன. 

பிரபல எழுத்தாளர் சுந்தரராஜனின் இறுதிப் பயணத்திற்கு அவை கட்டியம் கூறுகின்றன. 

– தினகரன், 1967-12-16.

– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.

க.சொக்கலிங்கம் ஈழத்து மூத்த எழுத்தாளரில் ஒருவரான சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்கள் 1930ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச் செட்டிக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு இறைபதம் எய்தினார். நமது நாட்டின் தமிழ் இலக்கிய உலகிலே மூதறிஞர் என்று போற்றப்படும் "சொக்கன்” 1944ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் “தியாகம்" என்ற வீரகேசரி சிறுகதை மூலம் எழுத்துலகில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *