கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2025
பார்வையிட்டோர்: 510 
 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாழ்ப்பாணத்துச் சமுதாய அமைப்பிலே, இன்னும் எச்சசொச்சமாகவிருந்து கோலோச்சுகின்ற நிலப்பிரபுத்துவச் சிந்தனைகள் வாழ்க்கைமுறை என்பன இன்றைய நகரவாழ்க்கையிலே வந்து சங்கமமாகும்போது ஏற்படும் மோதல்களின் – முரண்பாடுகளின் கோணத்தை இந்தச் சிறுகதை சித்திரிக்கிறது.. சந்திரன், கமலா கதாபாத்திரங்களின் வார்ப்பு அற்புதம்! கதைஞர் நமது உணர்ச்சிகளைப் பெருக்கி, சிந்தனையைத் தூண்டிவிட்டுக் கதையைச் சொல்லும் பாங்கு நம்மை ஈர்க்கின்றது. 


கொட்டாஞ்சேனை மாரியம்மன் கோவிலை அடுத்து வடக்கே கிளை பிரியும் சந்தில் – பள்ளத்தில், ஒரு மாடி வீட்டின் கீழ்ப்பகுதியில், ஒதுக்குப்புறமாக உள்ள ஒர் அறையில் அவனும் அவளும் குடியிருக்கிறார்கள். 

இருவருமே வேலை செய்வதால் மாலை ஐந்து மணிக்கு மேல்தான் அவர்களை அந்த அறையில் காணலாம். 

பகற்பொழுதெல்லாம் அவர்களது அந்த அறை பூட்டியே கிடக்கும். அப்பொழுது அவர்கள் எங்காவது ‘அவுட்டிங்’, அல்லது நண்பர்களது வீடுகளுக்குப் போயிருப்பார்கள். சில சமயங்களில் இலக்கியக் கூட்டம் அது இதென்று அவள் போக – பிடிக்காத, பிடிபடாத விஷயமானாலும் கூட அவனும் போவான். அந்த நடைமுறைகூட இப்பொழுது சிறுகச்சிறுகக் குறைந்துவிட்டிருக்கிறது. 

அவள் அரசுத்துறையில் எழுதுவினைஞராகப் பணியாற்றுகிறாள். அவன் தனியார் கொம்பனியொன்றில் சொற்ப ஊதியத்தில் ஏதோ உத்தியோகம் என்று ‘பேர்’ பண்ணுகிறான். இருவரது ஊதியமும் அப்படி இப்படித்தான். இருந்தும் அவளுக்குச் சம்பளம், சலுகைகள் சற்று அதிகம். பட்டதாரியான அவன் இருநூறுக்கு ‘மட்டையடிக்க’ அவள் முந்நூற்றைம்பதுவரை எடுத்தாள். 

இருவருடைய மாத வருமானமும் கழிவுகள் போக ஐந்நூறு ரூபாயைத் தாண்டாதநிலை. அதில், அவர்கள் குடியிருக்கும் அறை ‘சுளையாக’ நூறை வாடகையாக விழுங்கி விடுகிறது. மீதத்தில்தான் குடித்தனம் நடைபெறுகிறது. 

இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம் நடந்தபின் நாலைந்து மாதங்கள் இவர்களிடையே எவ்வளவு நெருக்கமும் நெகிழ்வும், அதன்பின், அவர்களது தாம்பத்திய உறவில் விழுந்துவிட்ட சிறு விரிசல், நிரவுபடாமற் பெரிதாகி, இப்பொழுதெல்லாம் ஒரு வருஷ காலமாக இருவரும் எப்பொது பிரிந்துபோவது என்ற அபாயத்துடன் இருக்கிறார்கள் 

இதற்கெல்லாம் அவளைக் காரணம் சொல்ல முடியாது. அவன்தான் காரணம், பிரிந்துபோவதிற்கூட அவள் ஆர்வங் காட்டவில்லை. அவன்தான் திடீரென இப்பொழுது அது பற்றி மிகுந்த ஆர்வங் கொண்டவனாய் பேசுகிறான். அது பேச்சளவில்தான் என்பது அவளுக்குத் தெரியும். 

அவளில்லாமல் அவனால் இருக்க முடியாதென்பது அவளுக்குத் தெரியும். அவன்மீது அவளுக்கு அனுதாபம் உண்டு. ஆனால், வரவர அவனது முரட்டுத்தனங்களால் வாழ்வில் அவனுடன் வாழ்வதில், ஒரு கசப்பு லேசாக அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இருந்தும் அவனுடன்தான் அவள் வாழ்கின்றாள். இறுதிவரைக்கும் அவனுடன்தான் வாழ்ந்துவிடுவது என்றும் உறுதிபூண்டுள்ளாள். ஆனால், எதற்குமே அவசரப்படும் அவன் இவளுடன் இறுதிவரை வாழ்ந்துவிடுவானா? லேசான ஒரு பயம் அவளை அலைக்கழிக்கவே செய்கிறது. 

இந்த வாழ்க்கையிலும், அவளுக்கு ஓர் இனிமையான பகுதி உண்டென்றால் அதுதான் அவளது எழுத்தும் இலக்கியமும். அதில் அவள் தன்னை ஈடுபடுத்தும்போது – தனது வாழ்வின் அவலங்களையே மறந்துவிடுகின்றாள். 

அவள் அதிகம் எழுதுவதில்லை. எழுதியதெல்லாம் அற்புதமாக வந்திருக்கின்றன. அவள் எழுதுவதற்கு ஒருவகையில் தூண்டுகோலாய், துணையாயிருப்பவன் ‘அருண்’ என்கிற அருணாசலம் தான். அந்த அற்புதமான எழுத்தாளனது தொடர்புகள் அவளது படைப்புக்களில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

ஆரம்பகாலத்தில், சதா முக்கோணக் காதற் கதைகளையே எழுதிக் குவித்து வந்த அவள், இப்பொழுதெல்லாம் மனிதன்பால் அதீத நேயம் பூண்டு, வர்க்கநலம் பேணும் எழுத்தை வடிப்பதென்றால், அந்த மாற்றம் மகத்தான ஒன்றுதான்! 

வேலை முடிந்து, கந்தோரிலிருந்து நேராக வீட்டுக்குவந்தவள், அறைக்கு முன்னால் பாற்காரன் வைத்துவிட்டுச் சென்ற பாற்போத்தல் சரிந்து உடைந்து கிடப்பதைக் கண்டு, சிறிதும் பதட்டமில்லாமல், உடைந்த போத்தலை அகற்றிவிட்டு, அறைக்கதவைத் திறந்தாள். 

அறை இருட்டாகவே இருந்தது. ஜன்னலைத் திறக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. அலுப்புடன், கையில் இருந்தவற்றை அங்கு கிடந்த மேசையில் போட்டு விட்டு சோபாவில் சோர்வுடன் சாய்ந்துகொண்டாள். 

சற்று அசதியாக இருக்கவே. அயர்ந்து தூங்கிவிடுகிறாள். அவள் விழித்தபொழுது ‘லயிற்’ எரிந்துகொண்டிருந்தது. 

மணியைப் பார்த்தாள் ஆறுக்குப் பத்து நிமிடங்கள். யார் ‘லயிற்’ போட்டது. அவன் வந்துவிட்டானோ? 

மனம் பதைத்தவளாய் எழுந்துகொண்டாள். 

அவன் வந்ததும் அவனுக்குக் கோப்பி கொடுக்க வேண்டும். அல்லது அவன் கோபமுற்று, அதையே சாட்டாக வைத்து ஒரு பாட்டம் நாகரிகமில்லாமல் திட்டித்தீர்த்து விடுவான். இப்பொழுது ஒருசில நாட்களாய் நடைபெற்று வருகிறது. சிறு உரசலே அவனுக்குப் போதுமானதாய் விடுகிறது. அவன் நெருப்பாய் மாறிவிடுகிறான். அப்படியொரு நிலை இப்போது வேண்டாமென அவள் பயந்து சுற்று முற்றும் பார்த்தாள். 

அவன் வந்த சிலமனில்லை. 

அவளே ‘லயிற்ரை’ நித்திரைச் சோம்பலுடன் எழுத்து போட்டுவிட்டு, மீண்டும் படுத்திருக்கவேண்டும். 

சோம்பலையும் கோழித்தூக்கத்தையும் உதறியபடி எழுந்தவள், சேலையை உருவி எறிந்துவிட்டு, குளியலறைக்கு – பழைய சாக்கால் மறைப்புக்கட்டிய குழாயடிக்கு சென்றாள். 

குளித்துவிட்டு வந்தவள், ‘கவுணை’ போட்டபடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். தலையை வார வேண்டு மென்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. கூந்தலை ஈரம் சொட்டச்சொட்ட வாரி முடித்தபடி நிமிர்ந்தபோது அவளது பார்வை, அவனும் அவளும் திருமணத்தின்போது எடுத்த படத்தின்மீது தரித்தது. கசப்பான ஒர் உணர்வின் நெருடலுடன் அவள் லேசாகச் சிரித்துக்கொண்டாள். 


அவர்களது திருமணம் ஓர் அவசரத்துடன்தான் நடந்தது. அந்த அவசரத்துக்குக் காரணமே அவன்தான். இவள் எவ்வளவு நிதானமாயிருக்கிறாளோ அதற்கு எதிரிடையாக அவன் எதற்குமே அவசரப்படுவான். 

அவள், அவனை முதன்முதலில் கொழும்பில் சந்தித்தது கொட்டாஞ்சேனை பஸ்ஸில்தான். வெள்ளவத்தை பஸ்தரிப்பில் ஏறியவன் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். 

அவளை இவன் யாரோ ஒரு பெண் என நினைத்து, இயல்பான யாழ்ப்பாணத்துக் கூச்சத்துடன் ஒதுங்கியே இருந்து கொண்டான். 

எதேச்சையாக இவனது பக்கம் திரும்பிய அவள், “யாரது சந்திரனா?” என்று புன்னகைத்தாள், 

அவனுக்கு அவளை உடன் யாரென அறிந்து கொள்ள முடியவில்லை. பின் ஒருவாறு அனுமானித்துக் கொண்டான். 

ஓ…! எத்தனை வருஷங்களுக்கு முந்திக் கண்டது ஒல்லியாய், கறுப்பாய், உடம்பிலே சதைப்பிடிப்பே இல்லாமல், அழுக்குப் பாவாடையும் கிழிஞ்ச சட்டையுமாய் மூக்கில் சதா சளிவழிஞ்ச தடம் புண்ணாயிருக்கும் கோலத்துடன் திரிந்த கமலாவா இவள்! வினாசியின்ரை மகளுக்கு இவ்வளவு எழுப்பமே! 

கோவியப் பெட்டை என்ற நினைப்பு வந்ததும் இன்னும் சற்று ஒதுங்கியே உட்கார்ந்து கொண்டான். 

அவளை அவன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவளாகவே மீண்டும் “மட்டுக்கட்டேல்லைப்போலை?” என்றாள். 

“தடிவினாசியின்ரை மகள்தானே…தெரியுது நல்லாத் தெரியுது” 

“…”

“எங்கை இந்தப் பக்கம்”

“நானே.. நான் கிளறிக்கல் சேர்விஸிலே எடுபட்டு… இன்கப்ராக்ஸிலை வேலை செய்யிறன்” 

“இன்கம்ராக்ஸோ!” 

அவன் பொறாமையால் வெந்துபோகிறான் என்பது அவளுக்குத் தெரிகிறது. 

ஏதோ தனியார் கொம்பனியொன்றில் ‘அரைகுறை’ ஊதியம் பெறுபவனுக்கு, அவள் அரசாங்க உத்தியோகத்தி லிருப்பது பொறாமையை ஊட்டியதில் வியப்பில்லைத்தான். 

“சேர்விஸிலை சேர்ந்தது பென்சன் ஸ்கீம் இருக்கேக்கையோ? இல்லைப் பிந்தியோ?”

“இருக்கேக்கை தான். அதுசரி இப்ப இந்த வரவு செலவோடை எல்லாருக்கும் திரும்பவும் ‘பென்சன்’ எண்டு தான் நிதிமந்திரி அறிவிச்சிருக்கிறார்.” 

“ஒ, நான் அதை மறந்திட்டன் அதுசரி; நீ சிவானந்த வீதியிலேயே இருக்கிறது?” 

“ஓம் ஓம் உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“அங்கையொரு கேள்ஸ் ஹொஸ்ரல்’ இருக்கு; அது தான் கேட்டனான்” 

“நீங்களும் கொட்டாஞ்சேனையிலை தானே இருக்கிறது?”

“ஒம்; மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்திலை” 

அவர்கள் இருவரும். அதன்பின் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவன் அடிக்கடி அவளை ஒரக்கண்ணால் பார்த்துக்கொண்டான். 

‘இவள் இவள் கமலா இவ்வளவு அழகாக எப்பிடி இருக்க முடியும்! கறுப்பி இளஞ்சிவப்பாய் இருக்கிறாள். எலும்பாய்க் கிடந்தவள் ஹும் என்ன மாதிரி எல்லாமே பூரிச்சுக் கிடக்குது.” 

அவள் பஸ்ஸைவிட்டு இறங்கி நடந்தாள். இவனும் தன்னுணர்வு இழந்தவனாய் அவளுடன் அவளது விடுதி வரைக்கும் வந்து விடுகிறான். பின் ஒருவாறு தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவளிடம் விடைபெற்றுக்கொண்டான். 

அன்றிலிருந்து அவன் அவளை அடிக்கடி சந்தித்தான். சந்திக்காவிடில் அவனுக்கு எதுவுமே ஒடாது. தலைவெடித்து விடும் போலிருக்கும். 

‘கோவியப் பெட்டைதானே, தட்டிப் பார்த்தால் எடுபட்டிடுவாள், என்ற கெட்ட எண்ணம்தான் அவனுக்கு முதலில் இருந்தது. ஆனால், அவளது அறிவு, அவள் நடந்து கொள்ளும் விதம், அவள் கைநிறையச் சம்பாதிக்கும் பணம், அவள் எடுக்கவிருக்கும் பென்சன், என்ற எதிர்காலப் பாதுகாப்பு என்று எல்லாம் சேர்ந்து அவளை மணந்துகொண்டால் தான் என்ன, என்ற உணர்வை அவனுக்கு ஏற்படுத்தும். திடீரென தனது குடும்பத்திற்குப் பரம்பரை பரமபரையாக ‘குடிமையாக’ இருந்த வம்சத்தின் வித்து அவளென்பது நினைவு வந்ததும் அவன் அருவருப்புடன் உடம்புகூசி ‘தூ’ என்று காறித் துப்புவான். 

என்ன இருந்தென்ன. அவளது இளமையிலும், இனிமையான வசீகரத்திலும் வனது ஆண்மை கரையவே, அவன் அவளைத் தீவிரமாகக் காதலிக்கத் தலைப்பட்டான். 

தனது எண்ணத்தை, காதலை இவன் ஒருசமயம் அவளுடன் விகாரமாதேவிப் பூங்காவில் இருந்தபொழுது வெளியிட்டான். அப்போழுது அவள் எதுவித உணர்ச்சிப் பாதிப்புக்கும் உடபடாதவளாக, விழுந்து விழுந்து சிரித்த சிரிப்பு இவனது உடலையே குறுக வைத்துவிட்டது. 

‘இவள் என்னை எனது காதலை ஏற்க மறுத்துவிடுவாளோ!’ என்று உணர்ச்சி வேகத்துடன் திடுக்குற்று, அவளை – அவளது காதலை யாசிப்பதுபோல் அவளையே பார்த்தான். 

“சாதியிலை குறைஞ்ச பெட்டை அதுவும் தாவாடிக்காரருக்குக் குடிமை வேலைசெய்த சின்னன்ரை பூட்டி… முத்தன்ரை பேத்தி… தடிவினாசியின்ரை மகள்… இந்தப் பெட்டையை முடிச்சிட்டு உங்களாலை ஊர்ப்பக்கம் தலைகாட்டேலுமே” 

அவள் பேசி முடிக்கவில்லை; அவன் திடீரென உன்மத்தம் கொண்டவனாய் தான் தீவிரமாக அன்பு செலுத்தியும் அவள் தன்மீது அனபில்லாமல் நடந்துகொள்கின்றாளே என்று எண்ணியவனாய், அவளது கன்னத்தில் அறைந்துவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றான்.

அந்த அடி அவளுக்கு வலிக்கவில்லை. அவனது அன்பு, அவன் தீவிரமான ஒரு லட்சிய வெறியுடன் காதலிப்பது அவளுக்குப் புரிந்தது. 

காதல், இலட்சியம் என்ற தங்கக் கோபுர நினைவு களனைத்தும் அர்த்தமற்றவை என்பது அவளது முடிவு. இருந்தும், எவனோ ஒருவனை மணக்கவேண்டும்,  அவன் இவனாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே, என்று நினைத்தபடி விடுதிக்குத் திரும்பினாள். 

அன்றைய சம்பவங்களின்பின் ஒருவார காலமாக அவன் அவளைச் சந்திக்கவில்லை. இந்த ஒருவாரமும், அவனை இவள் அடிக்கடி நினைத்துக் கொண்டாள். அவனது குழந்தைத்தனமான முகம், அதில் விஷமத்தனமாகக் குறுறுறுக்கும் கண்கள் சிவந்த உதடுகளுக்கு மேலாய் படர்ந்து கிடக்கும் அடர்த்தியான மீசை, அனைத்தும் அவளை, அவன்பால் ஆர்வங்கொள்ளவே வைத்தன. அவனுக்காக அவள் லேசாக ஏங்குவது போன்ற உணர்வின் உறுத்தல் வேறு. அவளால் தன்னையே நம்பமுடியவில்லை. 

அவனது கொம்பனிக்குப் போன்பண்ணிப் பார்ப்போமா?’ என்று நினைத்தவள் அந்த எண்ணத்தையே மாற்றிக்கொண்டாள். 

அவனே தன்னிடம் பேசக்கூடும் என்று எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே இரண்டு நாள் கழித்து, அவள் கந்தோரில் இருந்த சமயம் அவன் அவளுடன் போனில் தொடர்புகொண்டு, மாலை கந்தோர் முடிந்ததும் விடுதிக்கு வருவதாகச் சொன்னான். அப்பொழுது அவளும் ஏதோ பேச முயன்றாள். அவள் பேசுவதற்கு முன்பாகவே அவன் போனை மறுமுனையில் வைத்தது அவளுக்கு ஏமாற்றமாய்ப் போய் விட்டது. 

மாலை அவள் விடுதியில் இருந்தபொழுது, இவளைத் தேடிக்கொண்டு முதலில் வந்தவன் ‘அருண்’தான். தான் புதிதாக எழுதிய கதையினைக்காட்டி அவளது கருத்தினை அறிய வந்திருந்தான். பிரசுரத்திற்குப் போகுமுன் பரஸ்பரம் அவர்கள் கருத்துப் பரிமாறிக்கொள்வதுண்டு. 

அவர்கள் கதையின் உள்ளடக்கத்தைப் பற்றித் தீவிரமாக அலசிக்கொண்டிருந்த பொழுதுதான் இவன் அங்கே வந்தான். 

அவனை வாருங்கள் என்று கூறியதுடன் அருணையும்’ அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். பின் கதையைப் பற்றியே அதிகம் பேசியது இவனுக்கு மிகுந்த எரிச்சலை ஊட்டியது. 

‘என்ன எழுத்தோ! என்ன நட்போ! அவளது ஈடுபாடு தன்னில் முழுமையாக லயிக்காமல் எழுத்தென்றும், அருணது தோழமை என்றும் சிதறுவதை அவன் விரும்பவில்லை. 

இருந்தும் பொறுமையாக இருந்தான். 

அருண் ஒருமாதிரி விடைபெற்றபொழுது, இவன் அவளைப் பார்க்க, அவள் பரபரப்புடன் வீதிவரை சென்று அருணுக்கு விடைகொடுத்தது இவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. 

அருணை அனுப்பிவிட்டுத் திரும்பியவள் இவனைப்பார்த்து “கோப்பி சாப்பிடுங்கள்” என்று உபசரித்து, ஃப்ளாஸ்கில் இருந்த கோப்பியை வார்த்துக் கொடுத்துவிட்டு, “இதோ இருங்கள்; ஒரு நிமிஷத்திலை வாறன்” என்று உள்ளே சென்றாள். 

தன்னை ஓரளவு அலங்கரித்துக்கொண்டு வெளியே வந்தவள், “நூல் நிலையம் வரைக்கும் போய்வருவமே?” என்று அவனை அழைத்தான். 

அவன் ஏதும் பேசாமல் அவளைப் பின்தொடர்ந்தான். 

அவள்தான் முதலில் பேசினாள்: “என்ன கோபமே?” 

“எதுக்கு ?” 

“இல்லை அண்டைக்கு என்னமாதிரி கோபத்திலை உங்களை மறந்து என்னை அடிச்சீங்க…” 

“ஒ…! அது.. அது என்னை மன்னிச்சிடு உனக்கு உனக்கு…என்ரை அன்பு விளங்கேல்லை.. ” 

“விளங்காமலா உங்களுடன் வெளிக்கிட்டிருக்கிறன்” 

“வெளிக்கிட்டது சரி… ஆனால் இது இடைநடுவிலை…?” 

“நிக்காதெண்டுதான் நான் நினைக்கிறன்’ 

“சரி சரி அதிருக்கட்டும் கமலி, உன்ரை அன்பு எனக்கு எனக்கு மட்டுதான் வேணும். நீ பிறருடன், அதிலும் ஆண்களுடன் பேசுவதை என்னாலை பொறுக்க முடியேல்லை. ஆரிந்த அருண்…? சரியான எழுத்துப் பயித்தியம். இவன் உன்னோடை எவ்வளவு நெருக்கமாப் பழகமுடியுது” 

“போதும் போதும், அசட்டுப் பிசட்டென்று உளறாதேங்க. அவர் எனது நண்பர். எழுத்துலகத் தொடர்பு- தோழமை, இதைவிட ஒண்டுமில்லை. உங்கடை மனசுதான் வீணாக குழம்பிக்கிடக்குது” 

அன்று அவர்களிருவரும் வெகுநேரம் வரையில் நூலகத்தில் – வாசிப்போர் பகுதியில், அமைதியாக, தங்களைப்பற்றி, தங்கள் எதிர்காலம்பற்றியெல்லாம் தர்க்கித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். 

“இன்னும் சில தினங்களிலை பதிவுத் திருமணத்தை வைத்துக்கொள்வமே?’ அவன் நச்சரித்தான். 

அதற்கு அவள் மௌனமாகப் புன்னகை பூத்தாள். அந்த மெளனம், புன்னகை எல்லாம் அவனுக்கு அவளது காதலை உணர்த்தியிருக்க வேண்டும். 

அவன் சூழ்நிலையையே மறந்தவனாய் அவளது காதின் கீழ்ப்புறத்தில், கழுத்தில் முத்தமிட்டான். 

அவள் சிலிர்த்து, இவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள் 

அந்த இனிமையான சந்திப்பின் ஒருவார காலத்தின் பின்பு, அவர்களிருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். 

அவர்களது திருமணத்திற்கு அவனது நெருங்கிய நண்பர்கள் சிலரும், இவளது தோழிகளும், அருணும் வந்திருந்து வாழ்த்தினர். 

இவர்களது பெற்றோர்களுக்கு ‘இதுவிஷயம்’ உடனே எதுவும் தெரியாது, தெரிந்தபொழுது இவர்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவித பூகம்பமும் வெடித்துவிடவில்லை. 

அவளது பெற்றோர்கள்: ‘யாரது நம்மடை தாவாடிப் பெரிய வீட்டுத் தம்பியே! சந்திரனா’ என்று மகிழ்ச்சி தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனால், அவனது தகப்பனார் கொஞ்சம் இரத்த அழுத்தப் பேர்வழி. ஏதோ ஆவேசத்துடன் கிறுக்கியிருந்தார். எல்லாம் வழமையான பல்லவிதான். 

‘உனக்கு, இந்த வேலை செய்ததுக்கு செப்பாலடிச்ச சல்லிக்காசும் கிடையாது.. நீ இந்தப்பக்கம் அந்தச் சாதிகெட்ட தோடை வருவியா, பாப்பம்..’ என்று ஏதேதோ அற்பத்தனமான பிரலாபங்கள். 

அவன் கடிதத்தைப் படித்துவிட்டு இவளிடம் கொடுத்தான் அதைப் படித்த இவள்: 

‘இந்தக் கிழவரிடம் என்ன இருக்கிறது. வரட்டுச் சாதிப் பெருமையைத் தவிர. இருந்த நிலபுலத்தையும் சும்மா இருந்தே சீட்டாடியும், குடித்தும் குலைத்துவிட்ட இவரை எந்த நிலையிலும் ஒரு பாதுகாப்பாக சந்துரு நினைச்சிருப்பாரா…?. இல்லை; இருக்காது. இவரது தனவந்தத்தனமெல்லாம் உண்மைக்குப் புறம்பான வெறும் கற்பனைகள்தான். சும்மா இருந்து சுகித்த பேர்வழி உள்ளதையெல்லாம் சிதைத்து சாதிவெள்ளாளர் என்ற பட்டயம் மட்டும் எஞ்சி நிற்கும் இவர் மிகவும் இரக்கத்திற்குரியவர்’, என்றெல்லாம் நினைத்துக்கொண்டாள், 

 அவர்களிருவரையும் இவை எந்த விதத்திலும் அன்று பாதித்துவிடவில்லை. 


பழைய நினைவுகளில் மனதை அலையவிட்டவள், ‘பட பட’ எனக் கதவு தட்டப்படும் ஒசைகேட்டு எழுந்து திறந்தாள். 

அவன் தான் வந்திருந்தான். 

வழமைபோல அவனது முகம் சுரத்தற்று ஆனால், சற்றுக் கடுகடுப்புடன் இருந்தது. அவள், அவர்கள் மணவாழ்வில் ஈடுபட்ட ஆரம்ப நாட்களில் அவன் முகம் இருந்த மலர்ச்சியை ஏனோ அப்பொழுது நினைவு கூர்ந்தாள். 

அவன் வந்ததுமே கோப்பி குடிப்பான், எனவே. அதனைத் தயாரிப்பதற்காக உள்ளே போனவள், மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனது முகத்தோற்றம் ஏனோ அவளுக்கு மிகுந்த பயத்தை ஊட்டியது. 

அவன் இப்பொழுது சில நாட்களாக, சீதனம் என்று ஏதோ பிதற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளை அநாகரிகமாக ஒன்றுக்கும் வக்கில்லாத – வகையில்லாத தரித்திரம் பிடித்தவளென்றெல்லாம் திட்டித்தீர்ப்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது. 

ஊரில் ஏதோ சொற்பகாணி இவளது பேருக்கு உண்டு, அதனையே விற்று, அவன் இவளைச் சீதனம் தரும்படி நச்சரித்தபொழுது இவள் அவன்பால் முதன்முறையாக வெறுப்புக் கொண்டாள். அந்த வெறுப்பு அவன் அந்தப் பிரச்சினை பற்றிப் பேசும்பொழுதெல்லாம் அதிகரிக்கவேசெய்தது. 

அதைப்பற்றித்தான் இன்றும் ஏதாவது அவன் பேச விரும்புகிறானோ. அந்த அநாகரிகமான வார்த்தைகளை, வசைகளை அவளும் கேட்கத் தயாராக வேண்டுமோ? 

‘வேண்டியதில்லை!’ அந்த. நினைப்பே அவளுக்கு நிம்மதியைத் தருகிறது. 

இன்றுதான் அவளது தகப்பனார் காணியை விற்று அவனது பெயருக்கு வங்கியில் பத்தாயிரம் வரையில் போட்டிருப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விஷயத்தை அவள் அவனுக்குச் சொன்னபொழுது அவனது முகத்தில் லேசான மலர்ச்சி அந்தமலர்ச்சியும் ஏனோ கணநேரம்தான் நிலைத்தது. மீண்டும் அவனது முகம் இறுக்கமுற்றுக் கடுமையானதை அவள் அவதானித்தாள். 

“இது ஏன்?” அவள் சஞ்சலமுற்றாள். 

சிநேகிதி ஒருத்திக்கு சம்பளம் எடுத்த கையோடு அவள் கொடுத்த கைமாற்றுப் பணம்பற்றித்தான் இவன் கேட்கப் போகிறானோ? கேட்டு அந்தச் சிநேகிதி இன்னும் தரவில்லை என்று இவள் சொல்ல, அவன் அர்த்தமில்லாமல் இவளை ஏசுவதற்குத் தயாராக இருக்கின்றானோ? அல்லது ஏதாவது புதிதாகக் கற்பிதம் பண்ணித் திட்டித் தீர்க்கத் தன்னைத் தயார்ப் படுத்துகின்றானோ? 

ஒன்றுமே புரியாமல் அவள் குழம்பினாள். 

அவள் சம்பளம் எடுத்ததும் பணம் முழுவதையுமே இவன் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். பின் அவளது தேவைகளுக்குக்கூட இவனிடம்தான் அவள் பணம் வாங்க வேண்டும். 

எதற்குமே அவனை எதிர்பார்ப்பது இவளுக்கு என்னமோ போலிருந்தது. எந்த விஷயத்திலும் அவன் சொல்வதையே இவள் கேட்டு நடக்கவேண்டுமாம். அதுதான் மனைவிக்கு லட்சணமாம். அப்பொழுதுதான் குடும்பம். குடும்பமாக இருக்குமாம். அல்லது சீரழிந்து விடுமாம. சீரழிந்துவிட்டால் இவள் தெருவில்தான் நிற்கவேண்டுமாம். 

இதெல்லாம் அவளுக்கு அர்த்தமாகவில்லை. மிகவும் கட டுப்பெட்டித் தனமான அந்த ஆணின் அதிகார வரம்பை அவள் ஒரோர் சமயம் உடைத்தெறிய விரும்புவதுண்டு. விரும்பும அளவிற்கு அவள் துணிவதில்லை. 

அவள் மிகவும் பொறுமையாகவே இருந்தாள். அப்பொழுதெல்லாம் அவளது மனம் அவளது பெற்றோர்களை, அவர்களது வாழ்க்கையை நினைத்துப் பிரமித்துப்போகும், 

‘ஆச்சியும் அப்புவும் ஏழைகள்தான். எளியதுகள்தான் இருந்தும், என்னகுறை அவையின்ரை வாழ்க்கையிலை! ஆச்சி கல்லுடைக்கப் போனால். அப்பு உழவுக்குப் போவார். அவ அரிவு வெட்டப் போனால் இவர் சூடுவைககப் போவார். இருவருமே உழைத்தார்கள். இருவருமே குடும்பம் அது இதென்று ஒருமித்துச் செயற்பட்டார்கள். அப்புவின் அபிப்பிராயங்களை ஆச்சி கேட்பதும், ஆச்சியின் அபிப்பிராயங்களை அவர் கேட்பதும்…, ஒ! அவர்களது அந்த வாழ்க்கை எவ்வளவு அர்த்தமும் மகத்துவமும் நிரம்பியது. 

அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து, வாழ்ந்து பழகிய அத்துடன் அறிவுக்கூர்மையும் மிக்க இவளுக்கு, தங்கள் இருவருடைய வாழ்க்கையிலுமுள்ள வெறுமை புரியவே செய்தது அவனது போக்கு இவளுக்கு ஒரு சமயம் பிடிபட்டும், பிடிபட மறுத்தும் அலைக்கழித்தது. இந்த முரண் சிறுகச்சிறுக அவர்களது குடும்ப வாழ்வின் அமைதியைக் குலைத்து விடுமோ வெனறு அவள் பயந்தாள். அதுமட்டுமல்ல, அவள் மிகுந்த பயத்துடன் எது நடக்கக்கூடாதென்று எதிர்பார்த்திருந் தாளோ அது அவனது வாயாலேயே அவள் எதிர்பாராக வகையில் வெளிப்பட்ட பொழுது அவள் மிகுந்த வேதனை யுற்றாள் 

அவன் இப்பொழுது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் ‘சாதி சனத்துக்கை சடங்கு முடிச்சிருக்கலாம், எளியதுகளை முடிச்சால் இப்படித்தான் கிரிலசசெட்டு அலைய வேணும்’. 

அவள், இந்த வார்த்தைகளால் மனம் தளர்ந்துதான் போனாள். 

தன்னை மறந்த நிலையில் பழையதையும், புதியதையும் அசைபோட்டவளுக்கு. ‘ஐயோ அவன் கோப்பி கேட்பானே’ என்ற நினைப்பு வந்ததும், பாலில்லாமல் கோப்பியைத் தயாரித்து எடுத்துச் சென்றாள். 

அவன் கோப்பியை வாங்கி. திடீரென அவளை நோக்கி வீசினான். அவள் சற்று ஒதுங்கவே அது அவளது இடது தோளில் பட்டுச் சிதறியது. சுடுகோப்பி பட்டதும் துடித்தவள்: “சீ… என்ன பைத்தியம்மாதிரி…” என்று முணு முணுத்தாள். 

“ஒமோம்… பைத்தியம் தான். உன்னோடை இருந்தால் பைத்தியம்தான் வந்திடும்…” 

“சத்தம் போட்டுப் பேசாதையுங்க… வெக்கமாயிருக்கு” 

“எது… எதடி வெக்கம் ஊரெல்லாம் அவன் அந்த அருணோடை சுத்திறது வெக்கமில்லை. நா… நான் பேசுறது தான் அவவுக்கு வெக்கமாயிருக்கு…” 

அவன் புதிய பிரச்சினையொன்றில் சிக்கித் தவிக்கின்றான் என்பது அவளுக்குப் புரிந்தது. இதுவரையில்லாத பிரச்சினை அதுபற்றி இன்று பேச ஆரம்பித்திருக்கிறான். 

இன்று காலை பத்து மணியளவில் அவள் தனது கதைத் தொகுதிக்குக் ‘கோட்டேஷன்’ எடுப்பதற்கு ஆட்டுப்பட்டித் தெருவரைக்கும் போக வேண்டியிருந்தது. ‘ஷோட்’ லீவில் போயிருந்தாள். வழியில் அருணைக் கண்டு அவனுடன் அச்சகம் வரை போனதைப் பார்த்துவிட்டு ‘இவன் இப்படி நடந்து கொள்கிறானோ’ என நினைத்தவள்; 

“அதா… அது நான்..” 

“போதும் போதும் உன்ரை பசப்பல் அவன் சச்கி இதைச் சொல்லேக்கை எனக்கு இடுப்பிலை சீலை இல்லை” 

“அவன் சொல்லிறதை நம்பிறயள் … நா …. நான் சொல்லிறதை…” 

“ஒ…! நீ சொல்லிறதை நம்பிறன்….. நல்லவடிவா நம்பிறன். உனக்கு…… கதை கதையெண்டு அவனோடை சுத்திறது இப்ப சாட்டாய்ப் போச்சில்லை…” 

“….”

அவளது மௌனம் அவனைக் கோபமூட்டியது. அவன் அவளை மேலும் வம்புக்கு இழுத்தான். 

அவளுக்கும் அருணுக்கும் தொடர்பு இருப்பதாசவும், அந்தத் தொடர்புகளுக்கு இடைஞ்சலாகத் தான் இருப்பதாக அவள் நினைப்பதாகவும், கையும் மெய்யுமாக இருவரையும் பிடித்து மானபங்கப்படுத்தப் போவதாகவும், ஏதேதோ கூறி அவன் மேன்மேலும் தன்னைச் சிறுமைப்படுத்திக்கொண்டான்.

அவளால் என்ன செய்யமுடியும். அவனுக்கு இந்த நிலையில் என்ன சமாதானம் சொல்லமுடியும்? அவள் தனது தூய்மைபற்றி அவனுக்குச் சொல்வதையே அப்பொழுது அவமானமாகக் கருதினாள். அப்படி அவள் சொன்னாலும் இவன் நம்புவானா? நம்பமாட்டான், என நினைத்தவளாய் பொறுமையாக இருந்தாள். 

இவள் பொறுமையாக ஏதும் பேசாமல் இருந்ததே அவனுக்கு மிகுந்த எரிச்சலூட்டியது. அவன் ஆவேசம் கொண்டவனாய், அவள்மேல் பாய்ந்து தனது பலம் முழுவதையுமே சேர்த்து அடித்தான். இப்படிப்பட்ட நிலைகளில் அவன் அடிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை ஒரு குரூரமான சாடிஸ்ற்ராகவே மாறிவிடுவான். குழம்பிய சிந்தையுடன் இருக்கும் அவளுடன் இவன் ஒரு வகை மிருகபலத்துடன் தாம்பத்திய உறவுகூட வைத்துக்கொள்வான். 

ஆனால், இன்று அதற்கு முற்றிலும் மாறான முறையில் அவன் செயற்படுவதை அவள் உணர்ந்தாள். 

அவனது கரங்கள் அவளை அவளது உடலை புதுவிதமாகப் பரிசீலித்தன. அவள் எதையோ இழந்துவிட்டது போலவும், அதை இவன் கண்டு பிடித்து நிரூபிப்பது போலவும் முயற்சிகள். 

அவள் முதன் முறையாக அவன்மீது ‘இது விஷயத்தில்’ வெறுப்புற்று அவனைப் பிடித்துத் தள்ளினாள். 

அவன் மிகவும் வெட்கம் கெட்டதனமாக: “நீ… இன்று… இன்று அவனுடன் ……?” 

அவன் சொல்லி முடிக்கவில்லை. அவள் “தூ! நீயும் ஒரு மனிதனா” என்று விம்மினாள். 

அவளுக்கு எல்லாமே அர்த்தமற்றதாகத் தோன்றியது. பின், ஏதோ நினைத்துக் கொண்டவளாய்; தன் இயல்புகளுக்கு மாறாக அவனை மேலும் எரிச்சலூட்ட விரும்பியவளாய்: “ஓம் இன்று இன்று அருணோடை அவன்ரை அறையிலைதான் இருந்தனான்” என்று பொய் சொன்னாள். 

ஏதோ எச்சிற் பழத்தை, அழுகிய பண்டத்தை தொட் டதுபோன்ற அருவருப்புடன் முகம் சுழித்து அவன் அவள் முகத்தில் காறி உமிழ்ந்தான். 

அவனது அந்த அநாகரிகமான செயல் அவளை மிகவும் பாதித்தது. உடைபட்ட நெஞ்சுடன் அவள் விக்கித்து நின்றாள். 

அப்பொழுது, அவன் திடீரெனக் குலுங்கிக் குலுங்கிப் பெரிதாகச் சத்தம் வைத்து அழுதான். 

ஆண்மகன் ஒருவன் அழுவதை அவள் கண்டதில்லை. அந்த நிலையிலும் ஆண்மை அழுவது அவளுக்கு வேடிக்கை யாகவே இருந்தது. அவள் தனது துயரங்களை ஒருகணம் மறந்தவளாய் லேசாகச் சிரித்துக் கொண்டாள். 

அவன் ஏன் அழுகின்றான் என்பது அவளுக்குப் புரிந்தது. அர்த்தமில்லாமல் ஏதோ கற்பனைகளைக் கற்பிதப் பண்ணி அழுவதற்கு அவள் என்ன செய்ய முடியும! அவனது பலஹீனம் அவளுக்கு அதிசயமாக இருந்தது. அத்துடன் அருவருப்பாகவும் இருந்தது. அவனது செயல்கள் யாவும் அவன் மீது அவள்கொண்ட அன்பை, அனுதாபத்தைக் குலைத்தன. 

அவள், இவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான், என்று ஆய்வதிலும் பார்க்க, இவன் தன்னுடன் இனியும் ஒட்டி உறவாடத்தான் முடியுமா என்று தன்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டாள். 

‘இப்படி என் உணர்ச்சிகளையே சீண்டி வேடிக்கை பார்க்க இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த உரிமை, இதற்கெல்லாம் இடம் கொடுக்கிறதா? சீ ! இவன் மனிதனே அல்ல! இந்தத் திருமணம் என்ற பந்தமே இவர்களால் எவ்வளவு கட்டுப்பெட்டித்தனமாக அர்த்தப்படுத்தப்பட்டு மலினப்படுத்தப்பட்டு விடுகிறது.’ 

அவளுக்கு ஏனோ அழவேண்டும்போல் இருந்தது. 

அவளும் அழுதாள். 

அப்போது அவனும் மீண்டும் ஒருமுறை குலுங்கிக் குலுங்கி அழுதான்! 

அவளுக்கு அவன்பால் எவ்வித பரிவும் ஏற்படவில்லை. மனதில் இருந்த துயர் அனைத்தையுமே உதறி எறிந்தவள் எழுந்து உள்ளே போய் குழாயடியில் முகத்தைக் கழுவிக் கொண்டுவந்து, சமைப்பதற்காக வெட்டிவைத்துச் சமைக்காமலே கிடக்கும் காய்கறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவனது கட்டிலுக்குப் பக்கத்தில், நிலத்தில் பாயை விரித்து ஒன்றுமே நடவாதது போலப் படுத்துக்கொண்டாள். 

அவனது அழுகை அப்பொழுது சிறுவிகம்பலாக மாறி, பின் ஓய்ந்தது. 

இருவரும் துயரங்களால் அலைபட்ட களைப்பால் அயர்ந்து தூங்கினார்கள். 

இல்லை! அவள் மட்டும்தான் உறங்கினாள். உறக்கத்தில் புரண்டவள் விழிப்புற்றுக் கட்டிலைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை ! 

அவன் எங்கே? 

குழாயடியில் ‘லயிற்’ எரிந்து கொண்டிருந்தது. பரபரப்புடன் எழுந்தவள் போய்ப் பார்த்தாள். அங்கு அவனில்லை. மீண்டும் வந்து அறை லயிற்றைப் போட்டுப் பார்த்தாள். அவனது பெட்டி படுக்கை உடைமைகளென்று எதுவுமே அங்கிருக்கவில்லை. அவளுக்கு அதிர்ச்சியும் அதிசயமும் சலந்த ஓர் உணர்வு நிலை. 

அவள் வழமையாகக் கந்தோரில் இருந்து வந்ததும் கழற்றி வைக்கும் தாலிக்கொடியைப் புத்தக அலுமாரியின் இடது பக்கத்து மூலையில் தேடினாள். அது அங்கு இல்லை! 

‘அவன் அதனையும்…!’ 

அவளது மனம், அதை நம்ப மறுத்தது. 

‘சீ. இப்படியுமா நிமிடக்கணக்கில் வாழ்வின் கட்டுகளைத் துண்டித்துக்கொள்ள முடியும், எதிலுமே அவசரப்படும் அவன் அதிலும் அவசரப்பட்டுவிட்டானோ…?’ 

அவளுக்கு அவன் திருமணத்தன்று வாங்கித் தந்த கூறையும் இரண்டாம் பட்டும் நினைவுக்கு வருகின்றன. தனது பெட்டியைத் திறந்து பார்த்தாள். அவற்றையும் காணவில்லை, அவன் அவசரக்காரன் மட்டுமல்ல அற்பத்தனமானவனுங்கூட என நினைத்தாள். 

அவளது பார்வை எதேச்சையாக கண்ணாடிப் பீடத்தில் தரித்தது. அதில் குங்குமச் சிமிழ்! ‘இதையும் அவன்தானே பரிசாக வாங்கித் தந்தான். இதனையும் அவன் கொண்டு போயிருக்கலாமே!’ என நினைத்தவள், ‘ஒ நா நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுகிறேன்…இல்லை?’ என அரற்றினாள். 

அவளுக்கு அப்பொழுது ஏனோ லூஸுனின் கதையொன்றில் வரும் ஷுசுன் என்ற பெண்ணும், இப்சனின் நோராவும் நினைவுக்கு வந்தார்கள். 

அவர்களைப்போல அவளால் தாம்பத்திய உறவை வெட்டிக்கொள்ள முடியவில்லைத்தான். ஆனால், அவர்களைப்போல நடந்துகொள்ளாமல் இவள் இருப்பதற்கு அவனே வழி செய்திருப்பது அவளுக்கு ஒருவகையில் நிம்மதியாக இருந்தது. 

அந்த நிம்மதியே அவளுக்கு இப்போதைக்குப் போதுமானது. அவள் நிம்மதியாகப் பெருமூச்செறிந்தாள். 

– மல்லிகை, 1976.

– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.

க.சட்டநாதன் 

இரு தசாப்த காலமாக எழுதிவகும் ரு. க.சட்டநாதன் இலங்கை இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாளி. இவரது எழுத்து, தரமான வாசகர் மத்தியில் பெரிதும் சிலாகித்துப் பேசப்படுகிறது. 

சிறுகதை புனைவதிலேயே அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள இவர் எண்ணிக்கையில் மிகச் சில கதைகளையே எழுதியுள்ளார். தரம் பேணுவதில் இவர் காட்டும் சிரத்தையே இதற்கான காரணமாகும். 

‘எந்தப் புறநிகழ்வுமே என்னைப் பாதிக்கிறது. மனதைத் தொட்டு நெருடுகிறது; சில சமயங்களிற் காயப் படுத்துகிறது; இந்த அனுபவங்களை யெல்லாம் சிறைப் பிடிக்கும் எத்தனம்தான் எனது எழுத்து’ எனக் கூறுகிறார், சட்டநாதன். இவர் மனிதன்பால் அதீத நேயம் பாராட்டுவதோடு, இறுக்கமான குடும்ப உறவுகளில் தளையுண்டுகிடக்கும், பெண்ணின் விடுதலைபற்றியும் இயல்பாகச் சிந்திக்கின்றார். 

சட்டநாதன் விஞ்ஞானப் பட்டதாரி. கல்லுாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *