உபதேசம்! – ஒரு பக்க கதை





மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். ரம்யா காபி டம்ளர் தட்டுடன் மாப்பிள்ளை மோகன் பக்கம் சென்றாள். மோகனிடம் தட்டை
நீட்டினாள். அதில் பிளாஸ்டிக் டம்ளர் ஒன்றில் காபியும், கண்ணாடி டம்ளர் ஒன்றில் காபியும் இருந்தது.
மோகன் காபி தட்டை கவனித்தான் சில வினாடிகள் யோசித்தவன், கண்ணாடி டம்பளரில் இருந்த காபியை எடுத்து குடித்தான்.
ரம்யாவின் முகத்தில் சந்தோஷ ரேகை படர்ந்தது. தன் அப்பா சந்தானத்தின் பின்னால் போய் நின்றாள்.
மாப்பிள்ளை வீட்டார் போனதும் சந்தானம் தன் மகளிடம் கேட்டார்…. “ரம்யா! மாப்பிள்ளைக்கு நீ கொடுத்த காபித் தட்டில் பிளாஸ்டிக் டம்ளரும், கண்ணாடி டம்பளரும் வெச்சிருந்தியே ஏன்?’ என்று கேட்டார்.
“அப்பா! மாப்பிள்ளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆபீசிலே வேலை செய்றவர்னு சொன்னீங்க! சுற்றுச்சூழல் பற்றி அவர் ஊருக்கு
மட்டும் உபதேசம் பண்ணுறவரான்னு சோதிக்கத்தான் பிளாஸ்டிக் டம்ளரும், கண்ணாடி டம்ளரும் அவர் முன் காட்டினேன். ஆனால் அவர் சூழல் பாதுகாப்பு உணர்வுடன் பிளாஸ்டிக் தவிர்த்து கண்ணாடி டம்ளரை எடுத்தார். உடனே என் சம்மதம் சொன்னேன்!’ என்றாள் ரம்யா.
– கு.அருணாசலம் (மார்ச் 2014)