உன்னை காக்கும் நான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 6,501 
 
 

“இவ்வளவு ஏன் அவசரம்! காலையில கொஞ்சம் நேரமாதான் எழுந்திருக்கிறது. சரியா சாப்பிடக்கூட நேரம் இல்ல உங்களுக்கு” என்று சமையல் அறைக்குள் இருந்து சத்தம் போட்டுக்கொண்டு இருந்தாள் ராணி. அதை கேட்டும் கேட்காமல் வேக வேகமாக புறப்பிட்டுக் கொண்டிருந்தான் வசந்த். “அப்பா, இன்னைக்கு நான் ஸ்கூல் பஸ்ல போகல. உங்க கார்ல கொண்டு போய் விடுங்கப்பா” என்றான் சரண். “இல்லப்பா எனக்கு மீட்டிங் இருக்கு. பத்து மணிக்கு ஆபீஸ் போகணும். இன்னைக்கு ஸ்கூல் பஸ்ல போ. நாளைக்கு கார்ல போகலாம்” என சமாதான படுத்தி “ராணி சீக்கிரம் டிபன்பாக்ஸ் கொண்டுவா” என்றார். “இதோ வந்துட்டேன்” என்று ஒருகையில் டீ, மறுகையில் டிபன் பாக்ஸ்சை எடுத்து வேகமா வந்து கொடுத்தாள். “இந்த டீயையாவது குடிச்சிட்டு போங்க” என்றாள். டீ குடித்துவிட்டு வேகமாக புறப்பட்டு சென்றான்.

அலுவல நுழைவாயிலின் அறிவிப்பு பலகையில், நாளை ரத்ததான முகாம் நடைபெற இருப்பதால், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அதில் எழுதப்பட்டு இருந்ததை படித்தான் வசந்த். அலுவலகத்தின் உள்ளே நுழைந்து, மீட்டிங் நடப்பதிற்கு முன்பே சென்று அமர்ந்துவிட்டான். ஏற்கனவே பலரும் அமர்ந்திர்ந்தனர். அவனின் மேல் அதிகாரி வந்ததும், அனைவரும் வணக்கம் வைத்தனர். அவருடன் ஒரு மருத்துவரும் வந்திருந்தார். “அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் உங்களை எதற்கு அழைத்தேன் என்றால், இங்கு நம்ப கம்பெனி சார்பாக ரத்ததானம் முகாம் நடக்கவிருக்கிறது. நீங்க அனைவரும் உங்கள் ரத்ததை தானம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் மேலதிகாரி. அதை தொடர்ந்து வந்திருந்த மருத்துவரும் “நீங்கள் அனைவரும் படித்தவர்கள், அதனால் உங்களுக்கு சுலபமாக புரிய வைத்திடலாம் என்று நினைக்கிறேன். நம் உடம்பிலிருந்து, குறைந்த அளவு ரத்தமே, நம தானம் செய்ய போகிறோம். அதனால் நம் உடம்பிற்கு எந்த பாதிப்பும் இல்லை. நீங்கள் ஒருவர் செய்யும் தானத்தில் மூன்று பேரின் உயிர் காப்பாற்ற முடியும். எனவே உங்கள் டீம்மில் உள்ள அனைவரையும் கலந்துகொள்ள வைக்க வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.

மீட்டிங் முடித்தவுடன் வசந்த் அவன் டீம்மில் உள்ள அனைவருக்கும் சொன்னான். ஆனால் அவன் மனதில் மட்டும் ஏதோ ஒரு பயம் இருந்தது. “வசந்த் என்ன கொஞ்சம் சோகமாக இருக்கிங்க” என்றான் ப்ரவீன். “ஒன்னும் இல்ல. நீங்க நாளைக்கு ரத்த தானம் செய்யப்போறிங்களா?” வசந்த் கேட்க “நான் இரண்டு முறை ரத்த தானம் செய்து உள்ளேன். நமக்கு அவசரத்துக்கு ரத்தம் தேவைப்பட்டால், அவர்களிடம் உரிமையுடன் கேட்க முடியும்” என்றார் ப்ரவீன்.

நாளை நம் விடுமுறை எடுத்து விட்டால் என்ன! இல்லை வேண்டாம்! என மனகுழப்பதுடன் வீட்டிற்கு சென்றான். மனைவியிடமும் எதுவும் சொல்ல வில்லை. மறுநாள் பத்து மணிக்கு அலுவலகத்துக்கு வந்தார். ரத்ததானம் முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஒவ்வொரு டீம்மாக வர வைத்தனர். வசந்த் டீம்மை வர சொல்ல, வசந்துக்கு முதல் முறை என்பதாலோ மனதில் ஒரு பயம். அனைவரும் வரிசையில் நிற்க, வசந்தும் வரிசையில் நின்றார். பெயர், வயது, இதற்கு முன் ரத்ததானம் செய்தீர்களா? நோய் எதற்கும் மருந்து சாப்பிடுகிறீர்களா? என ஒவ்வொருவரிடமும், கேள்விகள் கேட்க, அதை வசந்த் கவனித்து கொண்டிருந்தார். அதில் மருந்து சாப்பிடும் சிலரை மட்டும், ரத்த தானம் செய்ய அனுமதி மறுத்துவிட்டனர் மருத்துவ குழுவினர். வசந்து யோசித்தார். தானும் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து சாப்பிடுவதாக பொய் சொல்ல, ரத்ததானம் செய்ய முடியாது என மருத்துவ குழுவினர் அவரை அனுப்பிவைத்து விட்டனர். வசந்துக்கு ரத்ததானம் செய்வதிலிருந்து தப்பி விட்டோம் என மனதில் சந்தோசம். அதைநேரத்தில் மனைவியிடமிருந்து கைப்பேசியில் அழைப்பு வந்தது. “நீங்க உடனே மருத்துவமனைக்கு வாங்க. சரண் வந்த பள்ளி பேருந்து விபத்துக்கு உள்ளாயிற்று.” என்று அவனின் மனைவி அழுதுகொண்டே கூறினாள்.

வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்த வசந்த் “சரணுக்கு என்ன ஆச்சு! இப்போ எங்கு இருக்கிறான்” என படபடப்புடன் மனைவியிடம் கேட்க, “இப்போ ஐசியுவில் இருக்கான். உங்கள டாக்டர் பாக்கணுமுன்னு சொன்னார்” என கண்ணீர் மல்க கூறினாள். டாக்டர் அறையினுள் நுழைத்தார் வசந்த். “நான் சரணுடய அப்பா, என் பையனுக்கு இப்போ எப்படி இருக்கு?”. “பயப்படத்தேவையில்லை, ஆனால்… அவனுக்கு உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவன் உயிருக்கு ஆபத்தாகிவிடும். நாங்கள் பல இடத்தில் சொல்லியிருக்கிறோம். ஆனால் ஓ-நெகட்டிவ் கிடைக்கவில்லை. உங்களுக்கு தெறிந்த இடத்தில் எங்கும் கிடைக்குமான்னு பாருங்க” என்றார் டாக்டர். உடனே வசந்த் “சார் என் ரத்தத்தை எடுத்துகொள்ளுங்கள்” என்றார் வசந்த்.“உங்க மனைவிக்கும், உங்களுக்கும் வேற குரூப் ரத்தம். அது சேராது” என்று டாக்டர் கூற வருத்தத்துடன் வெளிய வந்தார் வசந்த். உடனே ராணி “எனக்கு ஒரு யோசனை. இன்று உங்க கம்பெனியில் ரத்த தான முகாம் நடந்ததில்ல. அவங்ககிட்ட கேட்ட கிடைக்குமுன்னு நினைக்கிறேன்” என்றாள். கைப்பேசியில் பிரவீனுக்கு அழைத்து “பிரவீன் என் மகனுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது. நம்ம ஆபீஸ்க்கு வந்த ரத்த முகாமின் போன் நம்பர் கிடைக்குமா?”என்று கேட்டு, அவர்களுக்கு அழைத்தார் “கண்டிப்பாக கிடைக்கும். ஆனால் இப்போ ஓ-நெகடிவ் இங்கு இல்ல. வேறு இடத்தில் ஏற்பாடு செய்து உடனே தருகிறேன். மருத்துவமனையின் முகவரி சொல்லுங்க” என்றார்கள்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் ரத்தம் கொண்டுவந்து கொடுத்தனர். ரத்தம் கொண்டுவந்த அந்த நபரிடம் “மிக்க நன்றி!! என் மகன் உயிரை காப்பாற்றியதற்கு” என்றார் வசந்த். “இல்ல சார் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் உங்க மாதிரி கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள் ரத்தம் தானம் செய்ததால் தான் எங்களால் உடனடியாக இது போன்று சேவை செய்ய முடிகிறது இதைபோல் பல உயிர் எங்களால் காப்பாற்றவும் முடிகிறது. ரொம்ப நன்றி” என்று வசந்திடம் கூறி விடைபெற்றார். தான் ரத்தம் தானம் செய்யாதை எண்ணி வருந்தினார். கண்டிப்பாக ரத்ததானம் செய்யவேண்டும், மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் வசந்த்.

உதிரம் கொடுப்போம்!!! உயிர் காப்போம்!!!!….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *