உனக்கொரு கொள்கை, எனக்கொரு கொள்கை!




சிக்னலில் நின்றது, சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து.
”ஐயா சாமி… தர்மம் பண்ணுங்கய்யா!”
சில்லறைகள் சிதறிக்கிடந்த ஈயத்தட்டு, ஜன்னல் கம்பி வரை நீண்டதைப் பார்த்து, ”இவனுங்களுக்கு வேற வேலையில்லே!” என்றபடி முகத்தைத் திருப்பிக்கொண்டார் ராகவன்.
பக்கத்தில் இருந்த நண்பர் கேட்டார்… ”சிட்டிக்கு வந்துட்டுப் போறீங்களே, ஏதும் விசேஷமா?”
”ஆவடியிலே ஒரு வி.ஐ.பி. இருக்கார். என் மகனோட வேலைக்காக அவர்கிட்டே ஒரு சிபாரிசுக் கடிதம் வாங்க வந்தேன்…”
”தந்தாரா..?”
”ப்ச்… தரலை! இத்தனைக்கும் அவரும் நம்ம திருச்சிக்காரர்தான். ரொம்ப நம்பிக்கையா வந்தேன். இருந்தும் மறுத்துட்டார். கொஞ்சம்கூட ஊர்ப்பாசமே இல்லாத ஜென்மம்!”
”இப்ப உங்ககிட்டே வந்து பிச்சை கேட்டானே, அவனும் திருச்சிக்காரன்தான்!”
”அட, நீ எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே? பிச்சை எடுக்கிறது அசிங்கம் இல்லியா? யாராயிருந்தாலும் உழைச்சு சாப்பிடணும். அதான் என் கொள்கை!”
”யாராயிருந்தாலும் சிபாரிசு இல்லாம, தகுதியாலதான் முன்னேறணும்கிறது அந்த வி.ஐ.பி-யோட கொள்கையோ, என்னவோ?”
– 23rd ஜனவரி 2008