உனக்கும் கீழே உள்ளவர் கோடி!
நல்ல கூட்டம் அந்த பஸ்ஸில் நிற்க இடம் கிடைத்தால் போதுமென்று எண்ணி ஏறினான் ஏக்நாத்.
‘உள்ள போங்க! உள்ள போங்க!’ கண்டக்டர் கையால் தள்ளாமல் வார்த்தையால் நெட்டித்தள்ள அவன் முன்னே நகர்ந்தான். அவனுக்கு பின்னால் நின்றிருந்தவன் இவனை நெட்டித் தள்ள இவன் பின்பக்கம் திரும்பி ‘தம்பி தள்ளாதீஙக!’ என்றான்.
‘நான் என்ன பண்றதுங்க…? கூட்டம் அப்படி.!’

பின் பக்கம் நின்றவன் நெரிசலில் இவனுடை பேண்ட் பாக்கெட்டில்பின் பக்கம் துழாவ…அடுத்த கனம் பின்பக்கம் நின்றவன் விறு விறுவென வண்டி நிற்கும்முன் இறங்க பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்த ஏக்நாத்தும் தானும் இறங்கி அவனைத் தொடர்ந்தான்.
‘தம்பி என் பையிலிருந்து பிக்பாக்கெட் அடிச்ச பணத்தைக் கொடு!’ என்றான்.
அவன் இவனைத் திரும்பி முறைத்து ‘என்ன உளர்றே? பணமா ? எனக்கெதுவும் தெரியாது!’ என்றான்.
ஏக்நாத் சொன்னான் ‘எனக்குத் தெரியும் நீதான் அடிச்சே கொடு!’ என்று சொல்லி அவனைத் தொடர்ந்து பின்னாலேயே போனான்.
ஒருகனம் இவனைத் தவிர்க்க முடியாது என்று உணர்ந்த அவன் நின்றான்.
நம்பிக்கை வந்த ஏக்நாத் அவனிடம் சொன்னான். ‘உனக்கு அடிச்ச பணம் தீபாவளி செலவுக்கு. எனக்கு பரிச்சைக்கு!’ என்று இவன் சொன்னதும் பிக்பாக்கெட்காரன் கேட்டான் ‘எவ்வளவு வச்சகருந்தே?’
‘முன்னூறு ரூபாய்!’ என்றான்.
பிக்பாக்கெட்காரன் தன் பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து ‘உன்னிடமிருந்து எடுத்ததை என் கூட்டாளிக கிட்ட கொடுத்துட்டேன். மூன்றில் ஓரு பங்கு. என் பங்கு நூறு. அதைத் தந்துட்டேன். பரிச்சைக்குன்னு சொன்னதால தரேன். நான்படிக்கலை! நீ படிக்கறேன்னே! படி.. ஆனா ஜாக்கிரதையா இரு! இப்படி இனி ஏமாறாதே!’ சொல்லிவிட்டு மறைந்தான்.
கண்ணில் நீர் ததும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ஏக்நாத்.