உதவி – ஒரு பக்க கதை





சைக்கிள் கேரியரில் மகன் சுரேஷுடன் பொருட்காட்சிக்குப் பயணமானார் ஆசிரியர் வேணுகோபால், வழியில் செடி கொடி மரங்களை பசுமையாய் கடந்தபடி.
சாலையோரமாய் ஒரு பைக். சைக்கிளை கைகாட்டி, “ஏங்க…பைக் ரிப்பேராயிருச்சு. ஒர்க்ஷாப் வரைக்கும் தள்ளிட்டு வரணும். பணம் வேணா தர்றேன்’ என்றவரை மறுத்துவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.
சிறிது தூரத்தில் வெயிலில் கார் டயரை ஒருவர் மாற்றிக் கொண்டிருக்க, அவரிடம் நின்று, “உதவி செய்யட்டுங்களா..’ என ஸ்டேண்டு போட்டு நிறுத்தப் போனவரை, புன்னகைத்தபடி அவர் மறுத்துவிட்டார். பயணம் தொடர்ந்தது.
அப்பா செயலால் குழம்பிய மகன், “ஏம்ப்பா… பைக்காரர் உதவி கேட்டார். பணமும் தர்றேன்னார். மறுத்திட்டீங்க. ஆனா கார்காரர் கேட்காமலே உதவி செய்யப் போறீங்க. பணம் அதிகமா தருவாருன்னா..?’ என்று கேட்க…
“தம்பி… பைக்காரர் தன்னால் முடிஞ்சதைக் கூட அடுத்தவங்க செய்யணும்னு நினைக்கிறார். அதான் மறுத்திட்டேன். கார்காரரோ ரெண்டு பேரோட வேலையை ஒருத்தர் செஞ்சிட்டிருந்தார். அதான் உதவப் போனேன்.
இன்னொன்னு தெரிஞ்சுக்க தம்பி.. அதோ அங்க தெரியுதே ஒரு கம்பெனி. அங்கதான் இந்த ரெண்டு பேரும் இருக்காங்க. ஒருத்தர் தொழிலாளியாவும், ஒருத்தர் முதலாளியாவும்’… என்றபோது சுரேஷூக்கு புரிய ஆரம்பித்தது.
– சி.சாமிநாதன் (மே 2011)