உண்மை மறந்த குற்றம்




வானிலை கொஞ்சம் ரம்மியமாக இருந்தது. குளிர்காலத்தின் காற்று அசையவில்லை. மெடிக்கல் சென்ரரில் வைத்தியரைச் சந்திக்கக் குறிக்கும் நேரம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற பல பேரில் அவளும் ஒருத்தி. மின்னொளிகள் எரிந்துகொண்டிருந்தாலும் பணியாற்றுபவளைக் காணவில்லை. மார்கழி மாதக் பனிக்காலத்துக்குளிர் ஒருபக்கம் குத்திக்கொண்டுதான் இருந்தது. லண்டனில் மார்கழிக் கிறிஸ்மஸ்க் காலத்துப் பாடசாலை விடுமுறையும் ஆரம்பித்து விட்டவேளை அது. காத்துக் கொண்டிருக்கும் மக்களின் வரிசையும் குரங்கு வால்மாதிரி நீண்டு வளைந்து போய்க்கொண்டிருந்தது.

வெளியில் சென்று வருகை தந்திருந்த அங்கு பணியாற்றும் ஒரு பெண் வந்த கேட்கின்றாள். யாருக்காக இவ்வளவு தூரம் காத்துக்கொண்டு நிற்கின்றீர்கள்?
இன்று சனிக்கிழமையல்லவா?
‘வழமையாக சனிக்கிழமைகளில் இந்த மெடிக்கல் சென்ரரில் வேலை செய்வார்கள் தானே?’ வரிசையில் நின்ற ஒரு உயர்ந்த பெண் சட்டென்று கேள்வி எழுப்பினாள். இன்று வழமைபோல் திறந்து வைக்கப்பட்டுள்ளதுதானே! எந்த ஒரு அறிவித்தல் பலகையும் காணப்படவில்லையே! என்று தொடர்ந்தாள்.
‘நான் வெளியில் சென்ற வேளை நீங்கள் எதிர்பார்க்கும் வரவேற்பில் பணி புரியும் பெண் பஸ் நிலையத்தில் காத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன். நான் நினைக்கிறேன் அவள் தன் வீட்டிற்குச் செல்வதற்காக நின்கின்றாள் போல் தெரிகிறது’ என்றாள் அங்கு பணியாற்றும் பெண்
‘ஓ அப்படியா? ஒரு அறிவித்தலாவது இதில் எழுதி போடமுடியாதா?’ ஏன்று அங்கு காத்திருந்த அனைவரும் புறுபுறுத்துக்கொண்டே கலைந்து விடுகின்றார்கள். நோய்கள் வந்தால் எவரும் மனித நேசத்தோடு அணுகுவதாயில்லை. ஏதோ சம்பளத்துக்குக் கடமை புரிபவர்கள் தானே! அதுவும் லண்டனில் உள்ள மெடிக்கல் சென்ரரிலா இப்படி நடக்கிறது?.
அவளும் எல்லோரினதும்; கதைகளை அவதானித்தபடி வீட்டிற்குத் திரும்பி;ச் செல்வதற்கு ஆயத்தமாகின்றாள்.
அவளுக்கு ஏற்கனவே காதில் ஏற்பட்ட சிறு நோவு காரணமாக வைத்தியர் மருந்தை நேரடியாகவே ஃபாமஸிக்கு அனுப்பியிருந்தார்கள். கொரோனா தொற்றுநோய்குப் பின் இப்படித்தான் பலமாற்றங்கள் இங்குள்ள சுகாதாரசேவையில். ஃபாமஸியில் வேண்டிய மருந்தைப்பாவித்தும் அவள் சுகம் காணவில்லை. ஆனால் அவர்கள் இரண்டாவது தடவையாகவும் அவளுக்குச் செய்திகள் அனுப்பியிருந்தார்கள். நோய்விடயமல்லவா? அதுவும் ஃபாமஸியினால் அனுப்பப்பட்ட விடயம். தகவல் அறிவதற்காகவே அவள் சென்றிருந்தாள். ஆனால் ஃபாமஸியில் பொறுப்பாக நின்ற பெண்மணி அது தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கிறது. மிகுந்த மன்னிப்போடு நீங்கள் வைத்தியரைச் சென்று சந்திப்பது நல்லது என்று கூறினார். வைத்தியரைக் காண்பதற்கான தகவலைப் பெறுவதற்காகத்தான் அவள் அங்கு சென்றிருந்தாள்.
‘மருந்துகள் பரிமாறும்; இடங்கள், மருத்துவ சேவைகள் இடம்பெறும் இடங்களில் இவ்வளவு தூரம் கவனக் குறைவான செயல்களா? மனிதர்கள் தாம் சுகத்துடன் உயிர்வாழத் துடித்துத்தானே அலைகின்றார்கள். மருந்து
விடயங்களில் மிக அவதானத்துடன் கையாளவேண்டும் அல்லவா? இவர்கள் இத்தொழிலை மனித நேசத்தோடு அல்லவா செய்யவேண்டும்’ என்று அவளுள் மனம் வேதனைப்பட்டது.
லண்டனில் வருட இறுதி நெருங்குவதால் கண், பற்கள் போன்றவற்றிற்கான வருடாந்த பாதுகாப்புச் சோதனைககளும் செய்வதற்கான அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம். உடம்பை மிக அவதானமாகக் கவனிக்க வேண்டும் அல்லவா?
பற்களிலும் நாம் கவனம் எடுக்க வேண்டும் என எண்ணி பல்வைத்தியரிடம் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்து செல்கின்றாள். கொரோனாவுக்குப்பின்னர் அவள் வழமையாக இருக்கும் வைத்தியர்கள், மற்றும் பக்க துணையாகப் பணியாற்றுபவர்கள் மாறிவிட்டார்கள் போல்த் தெரிகிறது.. பல் வைத்திய இடத்திலும்; எல்லோருமே புதியவர்களாகத் தென்படுகின்றார்கள். வழமையான வரவேற்பில் இருப்பவள் புதிய விண்ணப்பத்தை நீட்டி பரிசீலனை செய்தபின்னர், பல்வைத்தியர் பரிசோதனைகளை மேற்கொண்டார். மிகவும் சீரான முறையில் பற்கள் பேணப்பட்டிருக்கின்றன என்ற வைத்தியரின் மகிழ்வான செய்தியோடு வீடு திரும்பினாள்.
ஆனால் ஒரு வாரம் கழிந்ததும்; வைத்திய சேவைத் தலைமையில் இருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. பற்களுக்கான பரிசோதனையின் போது உரிய பணத்தொகை கட்டப்படவில்லை என்றும் அதற்கு வட்டியும் சேர்த்து ஒரு தொகைப்பணத்தை விரைவில் கட்டவேண்டும் என்ற அறிவித்தல் அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பற்பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டுமென்ற ஆர்வமே அவளுக்கு ஏற்படுவதில்லை.
இப்போ லண்டனில் வாகன தரிப்பிடங்கள மட்டுமல்ல வாகனம் சற்று வேகமாகிவிட்டால் உடனேயே கமராவில் ‘அதிவேகமாக ஓடியது’ எனப் பதியப்பட்டிருக்கிறது என்று பொலிசாரிடமிருந்து தண்டனைத்தொகை அறவிடும் கடிதம் பறந்து வந்துவிடும். அப்பாடி இப்போ மூலை முடுக்கெல்லாம் லண்டனில் கமராக்கள் பூட்டி வைத்திருக்கிறார்கள். பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு நோம் பிந்திப்போவதுவரை குற்றச் செயலாக்கிப் பணத்தை வசூலிக்கின்றார்கள் என்பது விசித்திரமானது. லண்டனில் இவையெல்லாம் நடக்கிறது என்றால் ஆச்சரியம்தான். சனங்களிடம் எப்படி எப்படியெல்லாம் வருத்தி பணத்தை வசூலிக்கலாமென புதிய புதிய கண்டுபிடிப்புகள் இவை.
கிறிஸ்மஸ் புது வருட கொண்டாட்டங்கள் அமளிதுமளியாக லண்டனில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. டிசம்பர் மாதம் முழுவதுமே தத்தமது வசதிக்கேற்பக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். விமலாவும் கிறிஸ்மஸ் ஒன்றுகூடும் நிகழ்வு தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் தங்கள் வீட்டில்; நிகழ்த்த இருப்பதாக அவளுக்கும் அழைப்பு விடுத்திருந்தாள்.
வெறுங்கையோடு விமலாவிடம் எப்படிச் செல்வது? அவளுக்கு ஒரு நல்ல பரிசு ஒன்று கொடுத்தால் மிகவும் மகிழ்வாள். நல்லதொரு பரிசுப் பெட்டியும் வாங்கப்பட்டு விட்டது. அது முக்கியமான விடயம் அல்லவா?
விமலா வீட்டில் ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் என்று குதூகலமான நிகழ்வாக நத்தார் கொண்டாட்டம் களை கட்டிக் கொண்டது. கொண்டாட்டம் வீட்டில் என்றாலும் வசதியான வீடாக இருந்த விமலா வீட்டில் பல வகையான சுவையான உணவுகள், குடிபானங்கள் பரிமாறப்பட்டன. பெண்கள் ஆண்கள் பிள்ளைகள் என்று கூடியிருந்து பல்வேறு தத்தமது கதைகளை பரிமாறி மிகமகிழ்வான தருணமாக ஆரவாரமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
வழமையாக குடும்பமாக வரும் வசந்தி, அன்று அங்கு வசந்தி மட்டும் தன்புதல்வர்களோடு வந்திருந்தாள். அவளது துணைவரை அவசரமாக இன்று வேலைக்கு அழைத்திருந்தார்கள். அவர் தனது வேலைத்தளத்திலிருந்து சற்றுத் தாமதமாக கொண்டாட்டத்திற்கு வருவார் என்ற தகவலோடு வசந்தி உணவுகளைப் பரிமாறி குதூகலித்துப் புன்னகைத்துக்; கொண்டிருந்தாள்.
கண்ணீரும் புன்னகையும் கண்ணுக்குத் தெரியாத புத்தகம்போல் தெரிகிறது.
திடீரென வசந்திக்கு துணைவரின் கைத்தொலைபேசி அழைப்பு… அவள் மகிழ்வோடு.
என்னப்பா எங்கே நிற்கின்றீர்கள்?
நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். மிகுந்த சோர்வடைந்த குரலில்…
விமலா வீட்டில் எல்லோரும் உங்களை எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள் என்றாள் வசந்தி உற்சாகமான குரலில்.
நீர் இப்போ பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டை வாரும்.
என்னப்பா என்ன நடந்தது? திடீரென்று என்னப்பா இந்தக் கோலம்? அடுக்கடுக்கான வசந்தியி;ன் கேள்விகள் அவனுக்கு சலிப்பைக் கொடுத்திருக்க வேணும்.
நான் சொல்றன்தானே! எனக்குச் சரியான சோர்வாக இருக்கிறதென்று.
ஐயோ கொரானாக் காலமும் முடிந்தாலும்… இப்படி ஒருநாளும் இந்தாள் கதைக்காதே!
ஏதோ விபரீதம் நடந்துவிட்டதுபோல் என்று வசந்தி தன்னுள் எண்ணிக் கொண்டாள். வசந்தியின் முகமும் பனி படர்ந்ததுபோல் ஆகியதை அங்குள்ளவர்கள் அவதானித்துக் கொண்டார்கள்.
ஏன்னால் வரமுடியாது வசந்தி. வேலை இடத்திலும் எனக்கு மிகுந்த சோர்வாக இருந்தது என்று உமக்கு எத்தனை தரம் சொல்றது.. எனக்கு உடம்பு முற்றிலும் மிகவும் சோர்வாக நித்திரை கொள்ளவேண்டும் போல் இயலாமல் உள்ளது.
அதிர்ச்சியில் உறைவது போல் வசந்தி… வசந்தியின் முகம் வெளிறிப் பேயறைந்தது மாதிரி ஆகிவிட்டது.
ஏனப்பா ஏதாவது சாப்பாட்டை மாறிச் சாட்பிட்டுவிட்டீர்களா?
‘இப்போ போனில் விசாரணைகள் நடத்திக்கொண்டு நிற்காமல் உடனேயே வீட்டுக்கு வாரும்’ போனை துண்டித்து விட்டார்.
அவருக்கு டயப்பிற்ரீசும் இருக்கிறது. சரியான கோபக்காரன்வேற. ஏதோ அந்தரப்படுகிறார்.
குரல் தளதளத்த துணைவரின் குரலின் சோர்வு வசந்தியை அதிர்ச்சிலும், சோகத்திலும் மூழ்கவைத்தது. கண்களில் இருந்து கண்ணீர் சொட்டி வழிகிறது. அவசர அவரமாக புதல்வர்களையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்ப ஆயத்தமாகின்றாள் வசந்தி.
காரைக் கவனமாகச் செலுத்துங்கோ வசந்தி என்று அங்கு இருந்தவர்கள் கூறினார்கள்.
ஒன்றுக்கும் யோசிக்காதையும் வசந்தி. கவனமாகப் பிள்ளைகளுடன் போய்வாரும் வசந்தி என்று எல்லோரும் கூற, அங்கு வந்தவர்களில் ஒருவர் ‘நான் உங்களுடன் காரில் வந்து வீட்டில் இறக்கி விட்டு: வரட்டா?’ என்று வினாவினார்.
நன்றி அண்ணா. ஏன்னுடன் பிள்கைள் வருகிறார்கள். வீடும் அதிக தொலைவில் இல்லை. அவரின் நிலையை நாங்கள் சென்றால்தான் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று கூறி விட்டு உடனேயே புறப்பட்டாள் வசந்தி.
எல்லோருக்கும் நன்றி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள்தான் வசந்தி.
இருபது நிமிடத்தில் அவள் தனது வீட்டை அடைந்து விட்டாள்.
நீண்ட பெருமூச்சுடன்..எல்லோர் முகத்திலும் அச்சம். புதல்வர்கள் அவசர அவசரமாக சுழன்று போய் வீட்டுக்குள் நுழைந்து அப்பாவைத் தட்டி எழுப்புகிறார்கள்.
சாடையாக கண்வழித்துவிட்டுத் திரும்பவும் நித்திரைத்தூக்கம்.
மிகுந்த நித்திரைச் சோர்வாக ஏதோ தேவையற்றவற்றைச் சொல்லாக்கி உச்சரிப்புகள் தடுமாறிக்கொண்டிருந்தது அப்பாவுக்கு.
உங்களுக்கு என்ன நடந்துவிட்டது? வழமையாக எடுக்கும் டயபிற்ரிசுக்கான மருந்துகள் எடுத்திருப்பார் என்று எண்ணிக்கொண்ட வசந்தி நேற்றுத்தானே மருந்தகத்தில் சென்று அவருக்கான மருந்துகளை சேகரித்துக் கொண்டு வந்தேன். என்று தனக்குள் வசந்தியின் எண்ணம் சுற்றிக்கொண்டு வந்தது.
வழமையாக வசந்திதான் அவருக்கு சக்கரை நோய்க்கான மருந்துகள் எடுத்துக் கொடுப்பது வழக்கம்.
வசந்தி அந்தச் சிவப்புநிறக் குளிசையைப் போய்ப்பார்த்தாள். இதுதானே அவர் எடுத்துக் குடித்திருப்பார்.
ஆனால் இந்தச் சிவப்பு நிறக் குளிசை நான் வழமையாகக் குடுக்கும் அந்தச் சிவப்புக் கலர் மாதிரி இல்லையே! நிறத்தில் சற்று மங்கலான சிவப்பாகத் தெரிகிறதே! ஏன்றுவிட்டு வசந்தி மருத்துவ பரிந்துரை செய்யப்பட்ட அந்தப் பத்திரத்தை எடுத்துப் பார்த்தாள்.
அந்தப் பரிந்துரைப்பத்திரம் வசந்தி மருந்தகத்தில் (Phயசஅயஉல) வேண்டிக்கொண்டு வந்த அந்த வெள்ளை பிளாஸ்ரிக் பையோடுதான் பத்திரமாக ஒட்டிக்கொண்டு இருந்தது.
ஐயோ! இது என்ன கொடுவினை. அந்தப் பத்திரத்தில் சம்பந்தமே இல்லாத வேறு ஒருவரின் பெயர் அல்லவா இருக்கிறது. வெளிறிப்போனது அவளின் முகம். தனது புதல்வர்களையோ மயக்கத்தில் இருக்கும் துணைவரையோ பார்ப்பதற்க்கு வசந்திக்குச் சற்றுப் பயமாகவே இருந்தது.
நான்தானே அவரின் மருந்துகளை மருந்தகத்தில் சென்று எடுத்துவந்தேன். மடைச்சி என்ன பெரிய தப்புச் செய்து விட்டேன். மருந்தகத்தில் தவறுதலாக மீள் பரிசோதனை செய்யாது மருந்துகளைத் தந்தாலும் நானும் அல்லவா அதனைக் கவனித்திருக்க வேண்டும். என்னிலும் தப்பு என்று தன்னைத் தானே திட்டித் தீர்த்;துக் கொண்டாள் வசந்தி.
இன்று கிறிஸ்மஸ் விடுமுறைக்கான தினம் என்று ஏல்லா மருந்தகங்களும் மூடப்பட்டுக் கிடக்கின்றனவே. கொஞ்ச நேரம் பார்ப்போம். சோர்வினால் நித்திரைதானே கொள்கின்றார். சற்று அசைவதுமாகத்தானே இருக்கிறார். நான் என்ன செய்வேன் என்று கண்கலங்கினாள் வசந்தி. ஆழ்ந்த தூக்கத்தில்தானே இருக்கிறார் விழித்திடுவார் விரைவில் என்று ஓலமிடுகிறது அவள் குரல்வளை. வசந்தியின் உள் மனசு அவளையும் மீறிக்கொண்டு; தத்தளிக்கிறது.
புதல்வர்களும் வசந்தியும் விழித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தங்கள் தங்கள் சோபாக்களில் இருந்தவண்ணமே குட்டித்தூக்கம் போட்டுவிடுகிறார்கள் எல்லோரும்தான். சகோதரர்கள் இருவரும் ஒருவருடைய முகத்தை ஒருவர் துயரந்தோய்ந்த வண்ணம் பார்த்துக் கொள்கிள்றனர்.
கிட்டத்தட்ட விடிகாலையாகும்போது வழமைபோல் விழித்துக்கொள்ளுகின்றார் அப்பா. தண்ணீர்த்தாகம் மேலோங்குகின்றது.
அருகிலிருந்த வசந்தி பதைபதைப்போடு எழுந்துகொள்கின்றாள். அவருக்கு தேவையானதெல்லாம் செய்து முடித்தபின் அவராகவே தான் வசந்தி நேற்று மருந்தகத்தில் சேகரித்த குளிசையைப்போட்ட கதையைச் சொல்கின்றார்.
‘அவரும் ஒன்றையும் பார்க்காமல் குடித்திருக்கிறார் என்று எண்ணிய வசந்தி. தனது கவலையீனத்தைச்ச சட்டென்று கூறி வாங்கிக் கட்டப்போகிறேன் இவரிடம் இப்போ’ என்று எண்ணிய வசந்தி அமைதியானாள்.
ஓமப்பா பெரிய பிழையொன்று நடந்துபோட்டுது. வசந்தியும் தனது கவனமில்லாமல் செயற்பட்ட கதையை மெதுவாக் அவிட்டுவிட்டாள். நாம் எந்த விடயத்தைச் செய்யும்போதும் அதில் முழுவதுமான மிகுந்த கவனத்துடன் செயற்படவேண்டும். என்பதை மீண்டும் மீண்டும் தன்னுள் வலியுறுத்துகின்றாள்.
நேரத்தைக் கணிப்பிட்டு வசந்தி மருந்தகத்தில் சென்று விபரம் கேட்கின்றாள். மருந்துகளைப் பரிந்துரை செய்யப்பட்ட பத்திரத்தோடும் மருந்தோடும் வசந்தி செல்கின்றாள்.
மருந்தகத்திற்குச் சென்றபோதுதூன் அந்த மருந்தோ நீரழிவுக்கான மருந்து அல்ல என்றும், அது நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீரலைவையும் அதனால் நாளாந்த செயற்பாடுகளில் ஏற்படும் சீர்குலைவையும் நிவர்த்தி செய்வதற்காக பரிந்துரை செய்யப்பட்ட மருந்து என்பதை வசந்தி அறிந்துகொண்டாள். அதாவது மறதி நோய்க்கான மருந்து. அதுதான் அவ்வளவு தூக்கத்தை ஏற்படுத்தியதோ! ஏன்று அவளுள் சிந்தனை சிந்தியது.
அங்கு பணியில் நின்றவர்கள் தடுமாறினர். வேலையில் நின்றவர்களின் பார்வையின் பணிவும், பெருந்தவறுதலின் ஆழ்ந்த பயபீதியான உணர்வையும் வசந்தியால் புரிந்துகொள்ள முடிந்தது. மிகுந்த மன்னிப்போடு என்று சமாதானம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
‘அவருக்கு ஏதாவது ஆபத்தான விடயம் நடந்திருந்தால், யார் இதற்குப் பொறுப்பு? சட்ட நடவடிக்கை எடுத்தால்; சங்கடமான நிலைமை என்ன என்பதை சிந்தியுங்கள், மற்றும் நோயாளிகளின் விடயங்களில் அவதானமாக இருங்கள் என்பதையெல்லாம் வசந்தி கூறவேண்டிய அவசியம் அவளுக்கு அங்கு ஏற்படவில்லை’
சற்று மன இறுக்கத்துடன் சரியான மருந்தைப்பெற்றுக்கொண்டு வீடு திரும்பினாள் வசந்தி. விவரிக்கமுடியாத மகிழ்ச்சியில் பெற்றோரும்…பிள்ளைகளும்…
வாழ்க்கை அற்புதமானதாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் அவர்களுக்குத் தோன்றியது.
– 29.3.2024