உண்மை புரியாமல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 361 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூர்யமூர்த்திக்கு அது எதிர்பாராத விஷயமாகவே இருந்தது. இப்படி ஒரு சந்திப்பு இன்று நடக்கும் என்று கொஞ்சமும் அவன் எதிர்பார்க்கவில்லை. மேசை மீது கிடந்த பழுப்பு நிறக் கடிதத்தின் உறையில் கண் பதித்தவாறு அமர்ந்திருந்தவனின் மனத்தில் கடந்துபோன, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடிவந்தன.

தனது அலுவலக அறையின் கதவுகள் திறக்கப்பட்டு நண்பன் கல்யாணகுமார் வந்து அவனுக்கு முன்னால் அமர்ந்து பத்து நிமிடங்கள் ஓடிப்போனதுகூட அவனுக்குப் புலனாகவில்லை. அவன் எழுந்து வந்து தோளில் கை வைத்துத் தொட்டு உசுப்பிய பின்பே தெளிவு பெற்றுத் திரும்பினான்.

“என்ன சூர்யா.. உலகத்தையே மறந்து போயிருக்கியே.. புதுசா பிசினஸ் பிளானோ..?” சூர்யா அதிர்வுடன் பார்த்தான். நண்பனின் முகத்தில் தெரிந்த விளையாட்டுத்தனம் அவனைச் சமநிலைக்குக் கொண்டு வந்தது.

“எப்ப வந்தே கல்யாணம்… ரொம்ப நேரமாச்சா..!?”

“நீ….இந்தச் சன்னலைத் தாண்டி காத்துல ஏறி…அந்த மலையில நடந்து… அப்புறம் அந்தக் கடல்ல குதிச்சி.. அதுல ரெண்டு கொக்கு மீனைப் பிடிக்க முயற்சி பண்ணினப்பவே வந்துட்டன்பா”

இருவரும் சிரித்தார்கள். தொடர்ந்து சூர்யா பேசினான்.

“இன்னிக்கு நான் எதிர்பார்க்காத விஷயம் நடந்துச்சு கல்யாணம். அதுதான் என்னை உலுக்கிடுச்சி.. காலத்தோட விளையாட்டை நெனைச்சி மலைச்சுப் போயிட்டேன். நமக்கும் மேல ஒரு சக்தி இருக்குன்னு சொல்லறதை இப்ப நான் நம்பறேன்.’

உருக்கமும் நெகிழ்வுமாய்ச் சொன்னான். கல்யாண குமார். அதிசயமாய் அவனைப் பார்த்தான். அவனோடு பழகிய இந்த ஐந்தாண்டுகளில் இப்படி அமைதியாய் அவனை அவன் பார்த்ததே இல்லை. எப்போதும் சிற்றெறும்பு போல் ஓடிக்கொண்டும், சிட்டுக் குருவிபோல் பறந்து கொண்டும் தொழிலில் கவனம் செலுத்தக் கூடியவன் அவன். ஒரு மணித்துளி கூட வீணாவதை விரும்பாதவன். வெட்டிப் பேச்சில் நேரம் கழிக்காதவன்.

அந்தச் சூர்யமூர்த்திதான் இன்று இப்படிச் சிந்தனை வடிவமாய்ச் சிலையாய் உட்கார்ந்திருக்கிறான். கல்யாண குமார் அவன் முகத்தைச் சற்றுப் பார்வையால் அளந்தான். சில நிமிட கணிப்பில் அருமை நண்பனின் நண்பனின் அகப் போராட்டம் அவனுக்குத் தெரிய ஆரம்பித்தது.

‘சூர்யா.. என்ன இது சின்னப் பிள்ளையாட்டம் கண்ணுல கண்ணீர்?”

கல்யாணம், கேட்டதுமே சூர்யாவின் கண்ணீர்ப் பெருக்கம் அதிகமாகியது. சட்டென்று மேசையில் கிடந்த டிஸ்யூவை எடுத்துக் கண்ணீர் ஒற்றி எடுத்தான்.

“அவன் வந்திருந்தான் கல்யாணம்…” சொல்லிவிட்டு மேசையில் கிடந்த பேப்பர் வெயிட்டைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டான்.

“அவனா… யாரைச் சொல்றே நீ…?” கல்யாணகுமார் விளங்காமல் கேட்டார்.

“சந்திரசேகர்..!” சொன்னவன் கண்கள் நிலம் பார்த்தன…

“சந்திரசேகரா?.. எப்படி வந்தான், எதுக்காக வந்தான்… மறுபடியும் ஏதாச்சும் கஷ்டத்தைக் கொடுக்க நெனைக் கிறானா…அவன்?”

ஆத்திரமாய்க் கேட்ட நண்பனைச் சூர்யா அமைதிப் படுத்தினான்.

“இல்லை கல்யாணம்… பெரிய கஷ்டத்திலே இருக்கிறதா சொன்னான்…!”

“என்ன சொல்றே ..! பால்ல குளிச்சி, பன்னீர்ல வாய் கொப்புளிக்கிறதா தம்பட்டம் போட்டவனுக்குக் கஷ்டமா? என்னால் நம்ப முடியலியே சூர்யா… கடிச்சிட்டு பொணம் சுடுகாட்டுக்குப் போயிடுச்சான்னு பார்க்குமாம் கொம்பேறி மூக்கன் பாம்பு… அந்த மாதிரில்லே இவன் கதை இருக்கு..”

சூர்யா அவனை இடைமறித்தான். “இல்லே கல்யாணம். அவன் நெஜமாகவே பாதிக்கப்பட்டிருந்தான்… அவ… அவதான் அவன இங்கே அனுப்பி இருக்கா… இந்தக் கவரைப் பாரேன்”

மேசையில் கிடந்த கனமான கடித உறை ஒன்றை அவனிடம் காட்டுகிறான். எடுத்துப் பார்த்த கல்யாணத்தின் கண்கள் வியப்பால் விரிகின்றன. எதிரே இருந்த நண்பன் மேல் அனுதாபம் அதிகமாகின்றது.

பட்டை உரிக்கப்பட்ட மரம் தனக்குத்தானே தோலை வளர்த்துக் கொண்டு தன்னை மூடிக் கொள்வதுபோல் பலமுறை பட்டை உரிக்கப்பட்ட மரம் இந்தச் சூர்யமூர்த்தி..! அவனது தொல்லைகளுக்கெல்லாம் காரணமாயிருந்தவனே இந்தச் சந்திரசேகர்தானே..!

அவன் எதற்காக இவளைத் தேடி இங்கே வந்தான். அவளை நினைத்து இவன் ஏன் வேதனைப்படுகின்றான். மனம் வெதும்பிய நிலையில் நண்பனைத் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். அவனது துயரங்களை அவனே ஆறவைத்துக் கொள்ளட்டும் என்ற நினைவோடு.

காரில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினாலும் மனம் என்னவோ சூர்யமூர்த்தியிடமே நின்று கொண்டு வர மறுத்தது. நட்புக்கு இலக்கணம் வகுத்தவன் அல்லவா அவன்! கடந்து போன ஐந்தாண்டுகளுக்கு முன் இந்தச் சிலாங்கூர் மாநிலத்திற்குச் சூர்யமூர்த்தி வந்தபோது கொண்டு வந்தது ஒரு சிறிய ப்ரிப்கேஸும், ஒரு ஃபைலும், இரண்டு பேன்ட் ஷர்ட்டும் தான். ஆனால் இன்று அவன் அடைந்திருப்பதோ அபரிமிதமான வளர்ச்சி. இரண்டு ஜவுளி நிறுவனங்கள் அவனுக்குச் சொந்தமாயிருந்தன. ஓர் உணவகத்திற்கும் உரிமையாளராகி இருந்தான். இவற்றுக்கும் மேலாக ஏற்றுமதி இறக்குமதி நிர்வாகம் வேறு!

ஒரு சாதாரண பலகாரக் கடை உரிமையாளரான குஞ்சுராமனின் ஒரே பிள்ளையாய்ப் பிறந்து ஐந்து வயதிலேயே பெற்றவளை மலேரியாக் காய்ச்சலுக்குப் பறிகொடுத்துவிட்டு, அதன்பின் எல்லாமே அப்பா என்றாகி…

அவனுக்காக அப்பா எல்லா ஆசாபாசங்களையும் துறந்து ஒரு தியாக வேள்வியே நடத்தி அவனை மனி தனாக்கியது. அவனின் பருவகால வரலாறு… ஆனால் அதன்பின்…அதாவது யுனிவர்ஸிட்டி மலாயாவில் ஒரு பொரு ளாதாரப் பட்டதாரியாகி, அப்பாவின் கனவை நனவாக்கிய கணிப்பில் நின்றபோது அவன் வாழ்க்கையில் தோன்றிய காதல் என்னும் வானவில் அவசரமாய்க் கலைந்து போனது தான் அவன் நெஞ்சில் மாறாது வடுவாகிப் போனது.

சூர்யமூர்த்தி கௌசல்யாவை முதன் முதலில் ஒரு சாலை விபத்தில்தான் சந்தித்தான். உடல் நலமில்லாத தன் தாயாரை அழைத்துக் கொண்டு சாலையைக் கடந்த போது மோட்டார் சைக்கிளினால் மோதப்பட்டுக் காயம் அடைந்து மயக்கம் போட்டுத் தாய் கீழே விழ, கெளசல்யா தவித்துப் போனாள். அதுவே தொடர் கதையாய் வளர்ந்து கௌசல்யாவின் அம்மாவின் விருப்பத்தோடு காதல் என்ற பயிர் வளர ஆரம்பித்தது. வறுமைக் கோட்டில் சூழ்ந்து கொண்டிருந்த தாயும் மகளும் சூர்யமூர்த்தியின் வசதியைக் கண்டு அவனால் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்பினார்கள்.

பட்டப் படிப்பை முடித்து வந்திருந்த சூர்யமூர்த்தி பத்திரிகையைப் பார்த்துவிட்டு, விண்ணப்பித்திருந்த நிறுவனத்திடமிருந்து அவனுக்கு உடனடி அழைப்பு வந்திருந்தது. மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான். அந்த அழைப்பை அப்பாவின் பாதங்களில் வைத்து வணங்கினான்.

அப்பாவின் ஆசீர்வாதத்துடன் ஆலோசனை அறிவுரை ஆகியவற்றையும் ஏற்றுக் கொண்டு கௌசல்யாவின் வீட்டிற்குப் போய் விவரம் சொல்லிப் பயணமானான்.

“எத்தனை வருஷமானாலும் என் பொண்ணு உனக்குத் தான் தம்பி… நீ சந்தோஷமா போயிட்டு வா..” என்று தாயும்-

“அங்கே போனதும் என்னை மறந்துடாதீங்க, உங்களுக் காக நான் காத்திட்டிருப்பேன்.. நீங்க வரலைன்னா உங்களை நினைச்சே செத்துப்போவேன்” என்று மகளும் உறுதி அளிக்க…

மிகவும் மனநிறைவோடு கிளம்பினான் சூர்யமூர்த்தி..! வந்த இடத்தில் புதுவேலை… புதிய அனுபவம்.. புதிய நண்பர்கள்…

ஒரு மாதத்தில் அப்பாவை அழைத்துக் கொண்டான். கரண்டி பிடித்தே காய்த்துப் போன கைகளுக்கு ஓய்வு கொடுத்தான். ஈசி சேரும், பத்திரிகையுமாய் அப்பா உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது மனம் சந்தோஷத்தில் மிதக்கும்.

தன்னை வளர்த்து ஆளாக்க தன்னையே கரைத்துக் கொண்ட சந்தனம் அல்லவா அவன் தந்தை! நிமிடத்திற்கு நிமிடம் நினைந்து நினைந்து உருகி அவரை வழிபட்டான். ஆறுமாதம் ஓடியபோது ஒருநாள் அவனை அழைத்து அப்பாவே அவனிடம் –

“நீ, ஒரு கல்யாணம் பண்ணிக்கோ சூர்யா, எனக்கும் வயசாகுது…பேரப் பிள்ளைகளோடு விளையாட ஆசையா இருக்குடாப்பா” என்றபோது மெல்ல அவரிடம் கௌசல் யாவைப் பற்றிக் கூறினான். அப்பா திகைத்துப் போனார்.

அவருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு இரவோடு இரவாக பஸ்ஸில் ஏறி கோலாலம்பூரில் இருந்து கௌசல்யா வீட்டிற்குப் போனான். வழிநெடுக ஆயிரம் ஆயிரம் கற்பனைகள். திடீரென்று போய் அவர்களை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என்ற ரகசியத் திட்டம் மனத்தில்.

சூர்யமூர்த்தி பஸ் நிறுத்துமிடத்திலேயே முகம் கழுவி தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அழகாய், மிடுக்காய் நடந்து போனான். ஏதோ சிறு சிறு மாற்றம்.

புதிதாய் வண்ணம் பூசப்பட்டு, வாசலுக்குப் புதுக் கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. பார்க்கும்போதே அண் மையில் ஏதோ சுபகாரியம் நடந்து முடிந்திருந்த அடை யாளங்கள் காணப்பட்டன. வீட்டை நெருங்கினான். பூட்டப் பட்டிருந்த கம்பி வேலியைப் பிடித்துக் கொண்டு நோட்ட மிட்டான். பின்பு தொங்கிக் கொண்டிருந்த பூட்டை ஆட்டினான். அந்த ஓசை கேட்டுக் கௌசல்யாவின் அம்மா வெளியே வந்தாள். அவள் கூடக் கொஞ்சம் மினுமினுப் பாய்த் தெரிந்தாள்.

சூர்யமூர்த்தியைப் பார்த்து வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே பூட்டைத் திறந்து விட்டு

“வாங்க தம்பி… இப்பத்தான் பாதை தெரிஞ்சுதா உங்களுக்கு” என்றவாறே அவனை உள்ளே அழைத்துப் போய் அமரச் சொன்னாள். அவனும் அமர்ந்தான்.

“கொஞ்சம் இருங்க தம்பி.. குடிக்க ஏதாச்சும் கொண்டு வர்றேன்…”

அவனுக்கு என்ன வேண்டும் என்றுகூடக் கேட்காமல் அவள் உள்ளே போக, அவன் மேசையில் கிடந்த புதிய ஆல்பத்தைக் கையில் எடுத்துத் திறந்தான். ஆல்பத்தின் முதல் பக்கமே அவனை முகத்தில் அறைந்தது. அவசர அவசரமாய் அடுத்தடுத்து பக்கங்களைப் புரட்டுகிறான். மீண்டும் மீண்டும் அடிகள் விழுகின்றன. ஆரம்பத்தில் முகத்தில் விழுந்த அடிகள் இப்போது இதயத்தைப் பதம்பார்த்தது. வலி தாங்காது இடது கையால் நெஞ்சைப் பிடித்துக் கொள் கிறான். அந்த அழகிய ஆல்பம் விரித்தபடியே மேசையில் கிடந்தது.

நீர் தளும்பும் விழிகளுடன் அதைப் பார்க்கிறான் சூர்யா. பொன்னகையும், புன்னகையும், புதுப்பட்டும், பொட்டுமாய் கௌசல்யா மணக்கோலத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு அவனையே கேலி செய்வது போலிருந்தது. ஆத்திரமாய் அதைக் கையில் எடுக்கும்போது அந்த அம்மாள் காப்பியுடன் வந்தாள். அவன் முகத்தில் காணப் பட்ட உணர்ச்சி வேகங்கள் அவளுக்கு எதையோ உணர்த் தியது.

“தப்பா நெனைச்சுடாதீங்க தம்பி.. நீங்க சொன்ன மாதிரி என்னால காத்திருக்க முடியல… அதுலேயும் அந்தத் தம்பி உங்களை விட நாலு பங்கு ஆஸ்திக்குச் சொந்தக்காரப் பிள்ளை, பொண்ணு வசதியா வாழனும்ன்னு ஆசைப் பட்டா…அதனாலதான் அந்தப் பிள்ளை வந்து கேட்டதும் கொடுத்துட்டேன். இப்ப சொந்த வீடு, காரு, நகை, நட்டுன்னு நல்லா இருக்கா தம்பி”

அதற்கு மேல் அவன் அங்கே நிற்கவில்லை. வந்த சுவடு மறைவதற்குள் ஊர் திரும்பினான். அவன் ஆசை நிராசை ஆனது கண்டு அப்பாவும், மனமுடைந்து போனார்.

ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்து ஓராண்டு கழித்து சூர்யமூர்த்திக்கு அமராவதியை அப்பாவே தேடிப் பிடித்துத் திருமணம் செய்து வைத்தார். சூர்யமூர்த்திக்கு முதலில் விருப்பம் இல்லையென்றாலும் அமராவதியின் குணம் அவனைச் சமநிலைக்குக் கொண்டு வந்தது. அமராவதி அவனுக்கு வலதுகரமாய் விளங்கினாள். அவனது தொழில் மேன்மைக்கு அவளே தூண்டுகோலாய் இருந்தாள். எந்த நிறுவனத்தில் மேல் அதிகாரியாய் இருந்தானோ அந்த நிறுவனத்திற்கே உரிமையாளர் ஆனான். வீட்டில் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. அப்பாவிற்கு அளவு கடந்த ஆனந்தம், மகிழ்ச்சி. மகனின் மகிழ்ச்சி அப்பாவின் மகிழ்ச்சியை வளர்த்தது.

இந்த நேரத்தில்தான் கல்யாணக்குமார் வந்து சேர்ந்தான். பங்குச் சந்தைத் தொழிலில் நல்ல அனுபவமும் ஆற்றலும் மிக்க அவன் வருகை சூர்யமூர்த்திக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்தது. நல்ல தொழில்முறை வாய்ப்புகளை அவன் சூர்யமூர்த்திக்குக் கற்றுக் கொடுத்தான்.

பணம் வந்து குவிந்தது. நிறுவனம் வளர்ச்சி கண்டது. வேலையாள்கள் அதிகமானார்கள். அடிக்கடி வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சூர்யமூர்த்தி நாட்டில் உள்ள முக்கிய தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்றான்.

அறிவும், அழகும் நிறைந்த அன்பான மனைவி, உண்மை யான நேசமும், செயல்திறமையும் கொண்ட நண்பன், நடமாடும் தெய்வமாய் அப்பா… சூர்யமூர்த்தி கவலை இல் லாத மனிதனாய்க் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த போதும் மனத்திற்குள் ஒரு மூலையில் கௌசல்யாவின் ஏமாற்றம் மற்றும் நீறுபூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருந்தது.

அன்பைவிடப் பணம் தான் பெரிதென நினைக்கக் கூடிய பெண்ணாக அவள் இருந்துவிட்டாளே, என்ற வருத்தம் சில சமயங்களில் பணத்தின் மீதே வருத்தத்தை வெறுப்பை உண்டாக்கும். அவள் அவனுக்கு மாறுபட்ட பெண்ணாகவே தெரிந்தாள். எத்தனை முறை மறக்க முயன்றாலும் அவள் மீது இனம் புரியாத அன்பு மட்டும் எப்போதும் ஒட்டிக் கொண்டு அவன் மனக்கூட்டில் ஒளிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தலைப் பிரசவத்தில் அமராவதி அவனை விட்டுப் பிரிந்தாள். அது அவனுக்குச் சோகத்தை மட்டுமல்ல மிகப் பெரிய இழப்பையும் ஏற்படுத்தியது. எல்லாமே அவளாக இருந்து குடும்பத்தையும், அவனையும் நிர்வாகம் பண்ணிக் கொண்டிருந்தாள். போனபின் அவன் சிலநாள் எதையும் செய்யமுடியாமல் தவித்துப் போனான். அந்த நேரத்தில் கல்யாணம்தான் அவனுக்குச் சகலமுமாய் இருந்து ஆறுதல் கூறினான்.

இரண்டு மூன்று வருடங்கள் ஓடின மனத்தில் இரணங்களும் மாறி அவன் சமநிலைக்கு வந்துவிட்ட இந்த நேரத்தில்தான் அந்தச் சந்திரசேகரன் அவன்முன் வந்து நின்றான்.

தான் உயிருக்குயிராய்க் காதலித்த கௌசல்யாவைத் தன் பணத்தையும் பதவியையும் காட்டி மணந்து கொண்டு தன்னுடைய சந்தோஷத்திற்குச் சமாதி கட்டியவன். இன்று எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாய் வந்து தனக் கென்று ஒரு உத்தியோகத்தைத் தேடி அதுவும் கௌசல் யாவால் அனுப்பப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்து மனத்திற்குள் பலவிதப் போராட்டங்கள்…

கல்யாணகுமார் சந்திரசேகரை முன்பே சூர்யாவின் வழி அறிந்திருந்த காரணத்தினால் அவனைப் பழிவாங்க இதுவே சரியான தருணம் என்று முடிவு செய்தான்.

“வேண்டாம் சூர்யா… அவனுக்கு உதவி செய்யாதே… அப்பதான் அவனுக்குத் திமிர் அடங்கும்… இதுவே சரியான சந்தர்ப்பம்” என்றான்.

புன்னகையோடு அவனுக்குச் சமாதானம் செய்து விட்டு வீட்டிற்குப் போனவன், அப்பாவிடம் சொல்லிக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு கடைத்தெருவிற்குப் புறப்பட்டான். சில பரிசுப் பொருள்களை வாங்கினான். கௌசல்யாவின் வீட்டிற்குப் புறப்பட்டான். முன்பிருந்த அதே வீடு, அதே அம்மா அவனைக் கண்டதும் குற்ற உணர்வுடன் உள்ளே நின்றவாறே அவனை வரவேற்று அமரச் செய்கிறார். குழந்தைகள் ஓடி வருகின்றனர். பரிசுப் பொருள் களைக் கொடுக்கின்றான். கெளசல்யா வருகிறாள். அதிர்ச்சி யுடன் பார்க்கிறாள். பலவித உணர்ச்சியின் பிரதிபலிப்பு.

“நான் தான் கௌசல்யா உன் புருஷனைத் தம்பிக்கிட்ட அனுப்பி வச்சேன். என்ன இருந்தாலும் நம்ம பிள்ளையாச்சே, நான் நம்பினது வீண் போகலே, மாப்பிள்ளை வேலையும், வீடும் அங்கேயே ஏற்பாடு பண்ணிட்டாங்களாம். உன்னையும், குழந்தைகளையும் பார்த்துட்டுப் போகலாம்னு தம்பி வந்திருக்கு. பேசிக்கிட்டிருங்க.. நான் காப்பி கொண்டு வர்றேன்” அம்மா உள்ளே போய்விட்டாள்.

அமைதியாய் அவளைப் பார்த்த சூர்யமூர்த்தி “ஆமாம் கௌசல்யா… நீயும் பிள்ளைகளோடு அங்க வந்துட்டா எனக்கும் சந்தோஷமா இருக்கும். உங்களையும் எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்… அடுத்த வாரமே நீங்களெல்லாம் புறப்பட்டு வந்துடுங்க.”

அவளுக்கு அவன் வருகையும் பேச்சும், கடந்த காலத்தில் நடந்து முடிந்துவிட்ட விஷயங்களும் ஒன்றன்பின் ஒன்றாய்ப் பின்னிக் கொண்டு சங்கடப்படுத்தின..

என்னென்னவோ நினைத்தாள். பழைய நினைவுகளில் தன்னைப் பழிவாங்கத் திட்டமிட்டுத் தன் பணத்தால் காரியம் சாதிக்க வந்துவிட்டதாய் நினைத்தாள். அவனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தாள்.

“உங்களைக் கையெடுத்துக் கும்பிடறேன். நீங்க பிச்சையாய்ப் போடற இந்த வாழ்க்கை எங்களுக்கு வேணாம். நாலு வீட்ல கூலி வேலை செய்தாச்சும் நான் என் பிள்ளைங்களைக் காப்பாத்திடுவேன். அந்த நிம்மதி போதும். தயவு செய்து இங்கிருந்து போயிடுங்க… உங்க பணத்தால என்னை விலைகொடுத்து வாங்காதீங்க…”

சூர்யா தன் இருதயம் இருக்கின்ற பக்கம் இடது கையை வைத்து மெல்ல அழுத்திப் பிடித்தான். அது படபடவென்று அடித்துக் கொண்டது. மனக்கூட்டில் ஒளிந்துகிடந்த அன்பின் பறவை அடிபட்டுத் துடித்தது. மெல்ல எழுந்தான். அவளை மறுபடியும் ஒருமுறை பார்த்தான். எதையும் சொல்லாமல் வெளியேறினான். மேல்சட்டை இல்லாத அவளுடைய பிள்ளைகள் அவன் பின்னால் ஓடிவந்து வேடிக்கை பார்த்தன. உள்ளேயிருந்து அம்மா வெளியே வந்தாள். அவன் கிளம்பிவிட்டான். தாயும் மகளும் விக்கித்து நின்றார்கள். பத்து நிமிடங்கள் சென்றிருக்கும். வீட்டுக்குள் ளிருந்த தொலைபேசி அலறியது. ஓடிப்போய் கௌசல்யா எடுக்கிறாள். மறுமுனையில் சந்திரசேகர் பேசினான்.

“கௌசல்யா… எனக்கு மலேசியத் தலைநகரில் மேனேஜர் வேலை கிடைச்சிருக்கு. இரண்டு நாள்லே நான் வேலையை ஒப்புக் கொள்ளணுமாம். வீடும் அங்கேயே… அதுமட்டு மல்ல… நமக்குன்னு கார் கூட முதலாளி ஏற்பாடு பண்ணிட்டாரு. நீ தயாரா இரு..”

கௌசல்யா மகிழ்ச்சியில் திணறிப் போனாள். அவள் மனத்தில் சூர்யா நிறைந்து போனான். தன் கணவனுக்கு வேலையும், வீடும் காரும் கொடுத்த அந்த முதலாளி தெய்வமாய்த் தெரிந்தான். விடுவிடுவென்று காரியத்தில் இறங்கினாள். சோர்ந்து கிடந்த மனத்தில் புது உற்சாகம் பிறந்தது. புதுவாழ்வு கொடுத்த கடவுளுக்கும், அந்த முதலாளிக்கும் மனத்தால் நன்றி கூறிக்கொண்டாள்.

ஆனால் அவளுக்கு மறுவாழ்வளித்தது சூர்யா என்பதோ அந்த முதலாளி சூர்யமூர்த்திதான் என்பதோ இன்னும் புரியவில்லை.

அன்றைக்கும் இன்றைக்கும் ன்றைக்கும் தன்னைப் புரிந்து கொள்ளாத அந்த அவசர புத்தி படைத்த பெண்ணிடம் தன் தூய மனத்தைத் திறந்துகாட்ட அவனும் விரும்பவில்லை.

எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராமல் வலம் வந்து கொண்டிருக்கும் சூரியனைப் போல் அவனும் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டான்.

– சிங்கை வானொலி 16-9-95

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *