உண்மையா சம்பாரிச்ச சொத்து




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ஒரு ஆசாரி இருந்தா. ரொம்பக் கசுட்டப் பட்டு பணஞ் சம்பாரிச்சு, நெலம்பொலங்க வாங்கி, வேல செஞ்சுகிட்டு, ஆசாரித் தொழிலயும் விடாம, செஞ்சுகிட்டு வந்தர்.
வரயில, ஆசாரி வேலயும் வெவசாயமும் சேந்து, அதிகமான வருமானம் வருது. வச்சிருந்த பணத்துக்கெல்லாம் தங்கமா வாங்கினா. அப்படியே பொன்னா வச்சிருந்தா, கழவாணிக வந்து, கழவாண்டுகிட்டுப் போயிருவாங்கண்டு, வீட்ல இருந்த பனமரத்தத் தொளச்சு, அதுக்குள்ள தங்கத்த அடச்சு, வீட்டுக்கு வெளிய, மாடு கட்டுற கட்டுத் தொறயில, காடிப் பலக மாதிரி போட்டுட்டா.
காடி மரம் போட்டுருக்காண்ட்டு, ஆருமே அது மேல சந்தேகப்படல. அவ்பாட்டுக்கு, வேலய விடாமச் செஞ்சுக்கிட்டு வாரர். தங்கம் – தங்கம் பாட்டுக்கு காடிக்குள்ளார கெடக்குது.
ஒருநா, பலமா காத்தடிச்சு மழ பேயுது. மழயில, ஆசாரி வீடு வெள்ளத்ல முங்கிப் போச்சு. தங்கத்த ஒழிச்சு வச்சிருந்த மரத்தயும் வெள்ளம் இழுத்துக்கிட்டுப் போயிருச்சு. ஆசாரிகிட்ட ஒண்ணுமே இல்ல. குடிக்கக் கஞ்சி கூட இல்ல. வேல செய்யுறதுக்கு எடமில்ல. சுருக்கமா சொன்னா, ஒண்டுறதுக்கு கோடியுமில்ல. எல்லாம் வெள்ளத்துல போயிருச்சு. ஆசாரி மட்டும், பொண்டாட்டி புள்ளைகளோட இருக்கர்.
பொழைக்க வழியில்ல. புள்ள குட்டிங்களக் கூட்டிக்கிட்டு, வேற ஊருக்கு, ஆசாரி பொழைக்கப் போறர். அந்த ஊர்ல போயி, வேல செஞ்சு பொழச்சுக்கிட்டு இருக்கா.
பொளச்சுக்கிட்டு இருக்கயில -, வச்சிருந்த தங்கத்தப் பத்தி நெனக்காம இருக்க முடியல. நெனக்ய நெனக்ய, நெஞ்சு வேகுது. ஒழச்சு சம்பாரிச்ச சொத்தில்ல, வேகாது பின்ன!
வெள்ளத்ல போன பனமரம், பக்கத்து ஊர்ல, (இப்ப நம்ம ஆத்துல வெள்ளம் போனா, தேனியப் போல) ஒதுங்கிருக்கு.
காலைல – வயக்காட்டுப் பக்கம் போன ஒரு வெவசாயி, அந்தப் பனமரத்த எடுத்திட்டு வந்து, இந்தப் பனமரத்ல பரம்பு செய்யலாம்ண்டு ஆசாரிகிட்டக் கொண்டுகிட்டு வாரா. கொண்டுகிட்டு வந்து, குடுத்திட்டுப் போயிட்டா.
பரம்பு செய்ய, ஆசாரி, பனமரத்த வெட்டுறா. வெட்டவும் அதுக்குள்ள இருந்த தங்கம் வெளிய தவ்விருச்சு. அப்பத்தா இது நம்ம மரம்ண்டு ஆசாரிக்குத் தெரியுது. பெறகு, ஆசாரி, இந்த மரத்த வச்சுகிட்டு, வேற பனமரத்ல அவனுக்குப் பரம்பு செஞ்சு குடுத்திட்டான். கசுட்டப்பட்டு சம்பாரிச்ச சொத்து, வீணாப் போகுமா தம்பி? போகாது. ஏண்டா, அதுல நம்ம ரத்தம் ஓடுது. பெறகு, தங்கத்த எடுத்துக்கிட்டு, சொந்த ஊருக்குப் போயி, நல்லா பொளச்சானாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.