உண்டால் அம்ம!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 184 
 
 

வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை வாசித்தது. ஆற்றங்கரை, குளத்தங்கரை, வயல் வரப்புகள், திரடுகள், பொத்தைகள், குன்றுகள் என அலைந்தது.

நான்காண்டுகள் பம்பாய் வாசம் தந்திருந்த சொகுசு. அலுவலகத்துக்கு சோர் பஜாரில் மலிவு விலையில் வாங்கிய ஷூ, தாராவி பொங்கல் வீட்டிலிருந்து கல்லியில் இறங்கி கண்ணூர் காக்கா மெஸ்க்கு நடக்க ஹவாய் சப்பல்ஸ், என்றாலும் ஊரிலிருக்கும் இந்த இரு கிழமைகளில் வெறுங்காலுடனேயே நடந்தான்.

ஊர் எனச் சொன்னாலும் சிற்றூர்தான். நூற்றிருபது வீடுகள்,

ஈசான மூலையில் இருந்தது அவன் வீடு. திசைகள் நான்கென்போம். கோணத்திசைகளும் நான்கென்பர். எனவே திசைகள் எட்டு,
எண்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கு!

அவன் வீடிருந்த திசை வடக்கு மூலை. எனவே ஈசானம். அதனை வீடெனக்கொனலாம், தென்னையோலைக் குடிசைதான் என்றாலும். ஈசான மூலை எனில் ஈசன் திசை, எல்லாத் திசைகளுக்கும் களிறு உண்டு, பிடி உண்டு, தாகம் உண்டு, தேவதை உண்டு. கேட்டிருப்பீர்கள்தானே அக்னி மூலை, வாயு மூலை, கன்னி மூலை.

ஈசான மூலையிலிருந்து புறப்பட்டு வடக்குத் தெரு வழியாக மேலத்தெருவில் பாதி கடந்து வலப்பக்க முடுக்கில் திரும்பினான். அம்மன்கோயிலுக்குப் போகாமல் சாத்தான் கோயிலுக்குப் போகும் குறுக்கு வழியது. முடுக்கின் வலதுவசம் களத்தின் சுற்றுக்கட்டுச் சுவரையொட்டி இயக்கியம்மனுக்குச் சின்னப் பீடம், முடுக்கின் தரைமட்டத்தில் இருந்து மூன்றடி உயரத்தில். கற்சிலை அல்ல, உடைந்த செங்கல் வைத்து மண் பிசைந்து உருட்டிச் செய்த உருவம். கூம்பு போல், தாமரைப் பூப்போல, முகத்துக்கான வடிவம். மஞ்சணை பூசிச் சிவந்திருந்தது உருவம். வெள்ளியில் செய்த கண்மலர்களும் மூக்கும் வீரப்பற்கள் தெரியும் வாயும் உடமைக்காரர் வீட்டிலிருக்கும் பெட்டகத்திலுள். வெள்னி என்பதால் திருட்டுப் போய்விடும் என்பதால், மக்கள் தலைவர் என்ற போதிலும் கட்டும் காவலும் இல்லாதிருக்குமா!
அன்று மாதப்பிறப்பா, நாளென்ன கிழமையென்ன என்பன எல்லாம் நினைவில் இல்லை. அதிகாலை நாலு மணிக்கு அப்பா இறந்துவிட்டார் என்று விரைவுத் தந்தி வந்தது. விடிந்து பணம் புரட்டி, மத்தியானம் ஒன்றே முக்காலுக்குப் புறப்படும் பம்பாய் சென்னை ஜனதா எக்ஸ்பிரஸ் பிடித்து, மறுநாள் மாலை சென்னை சென்ட்ரலுக்கு வந்து, எழும்பூருக்கு மாறி, திருநெல்வேலிக்கு ரயிலேறி, அடுத்தநாள் காலை நெல்லை சந்திப்பில் இறங்கி, பேருந்து பிடித்து நாகர்கோயிலில் இறங்கி, ஊர் வந்து சேரும்போது மத்தியானம் ஆகிவிட்டது.

எதற்காகவும் எதுவும் நில்லாது. மூத்த மகனாக இருந்தும் எழுவரில் ஒருவன் கொள்ளி வைத்தான். எரித்துச் சாம்பலாக்கிப் பழையாற்றில் கரைத்துமாயிற்று. நீற்றைப் புனைந்து நீராடப் போம் ஆற்றில் கிடந்து அழுதாலும் நினைப்பு அழியுமா?

புறப்பட்ட நாளில் இருந்து நாள் கிழமை விடுமுறை எதுவுமே மனப்பதிவில் இல்லாமற் போயிற்று. துட்டி வீட்டுக் கிழமை முறைகள் என்பது வியாழனும் ஞாயிறும். இரண்டாவது ஞாயிறில் பதினாறு அடியந்திரம் என்னும் கல்லெடுப்பு. நன்மைக்கு இருத்தல், மறுநாள் எண்ணெய் தேய்த்துக் குளித்து இறைச்சிக்கறி. அந்தச் செலவுக்கு அம்மையின் உடன்பிறந்தார் தரவேண்டும். அம்மாவுக்கு அப்பாவின் மூத்தகுடி அண்ணன்களே உண்டு. அவர்கள் ஆரிய நாடு – குற்றிச்சல் கிராமத்திலிருந்து செத்த துட்டிக்கே கூட வரவில்லை.

இன்றைக்கு செவ்வாய்க்கிழமை என்பதன் அடையாளமாக இயக்கியம்மன் பீடம் இருந்தது. புதிதாய்ச் சாத்திய மஞ்சணை, அரளிப்பூ மாலை, உதிரி மலர்கள். தலைவாழைத் தும்பில் மூன்று பேயன்பழம், பாக்கு வெற்றிலை. ஒரு பழத்தில் குத்திவைத்து எரிந்து கரிந்துபோன ஊதுபத்தி, ஒற்றை வெற்றிலையில் திருநீறு. சிறியதோர் வாழையிலைத் துண்டில் ஈரகப்பை அரிசிப் பாயசம்.

இயக்கியின், சுடலையின், பட்டனின் அரிசிப் பாயசத்துக்கு அலந்து கிடந்தது நாவு. பள்ளிப் பருவம் எனில் பேயன் பழங்களை நிக்கர் ஜேபில் திணித்துக்கொண்டு, பாயசத்தைக் கையில் இலையோடு எடுத்துக்கொண்டு சாத்தாங்கோயில் பின்புற மறைப்புக்குப் பூனைபோல் போயிருப்பான். ஒருவேளை பசியாறியிருக்கும்.

பம்பாய்க்குப் போன பௌருசம் ஒரு மனத்தடையை ஏற்படுத்தி இருந்தது, மேலும் அவன் நடந்துபோன அதே முடுக்கில்தான் நான்கு வீடுகள் தாண்டி அவன் காணப்போகும் இருளப்பபிள்ளை வீடு இருந்தது.
இருளப்பபிள்ளையை ஊரில் குழூஉக்குறியாகக் கேரளாக் கொம்பையா என்பார்கள். நெடுங்காலமாக அவர் கொடு மளையாளக் குடியிருப்பு என்பதால். அப்பா அவரை அண்ணன் என விளிப்பார். ஆகவே அவனுக்கு அவர் பெரியப்பா. வேறு உறவென்று ஒன்றுமில்லை. அப்பா என அண்ணன் விளித்தவரைப் பெரியப்பா என்றும் அத்தான் என விளித்தவரை மாமா என்றும் அழைத்தான் அவன். இராமையா ஆசாரி, நல்லமுத்துத் தேவர், கிருஷ்ணக்கோனார் எல்லோரும் பெரியப்பா, அம்மாவுக்கு மீன் விற்க வரும் கோம்பை, துணி விற்க வரும் ரகுமான் சாகிபு, எண்ணெய் வாணிபம் தாணு செட்டியார் எல்லோரும் அண்ணன். எனவே அவனுக்கு மாமா,

பெரியப்பா எனும் விளி தாண்டியும் பன்னிரண்டு வயது முதலே கிராமத்தில் அவன் குருக்கன்மாரில் அவரும் ஒருவர். இருளப்பபிள்னைக்கு ஊரில் மேலப்பத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் உண்டு. சம்பா, வாசறுமிண்டான் என இருபோகமும் நெல். அவர் வீட்டின் பின்புறம் ஒன்றரை ஏக்கரில் தென்னந்தோப்பு. அவன் நடந்துபோன முடுக்கில் ஓட்டுப்பணி செய்த, சுற்றுச் சுவர் கட்டிய, படிப்புரை கொண்ட, தட்டட்டி போட்ட மட்டுப்பா வீடு. அவருக்கும் தம்பிக்குமான இருவீடுகளைப் பிரிக்கும் பொது முற்றம், கிணறு, குலதெய்வத்தின் பீடம் கிழ மேலாக.

அவர் வீட்டு அடுக்களை தாண்டி, புழக்கடை கடந்தால், வடக்குப் பக்கம் சுவரின் கதவைத் திறந்தால் தோட்டத்துக்கு இறங்கும் படிகள்,

இருளப்ப பிள்ளைக்கு திருவனந்தபுரத்தில் கண்ணூர் மாப்பிள்ளை முதலாளி ஜவுளிக்கடையில் கணக்கெழுத்து. பேட்டையில் வாயனசாலை கேசவபிள்ளை சாலையில் வீடு. அங்குதான் நிரந்தர வாசம். பிள்ளைகள் நல்லவண்ணம் படித்து ஆளாகி அரசாங்க உத்தியோகம். மகளையும் நல்ல இடத்தில் கெட்டிக் கொடுத்தார். யாவரும் அங்கேயே நிலை கொண்டு விட்டனர்.
கணக்குப்பிள்ளை வேலையில் இருந்தபோது, வயல் விதைப்பு, நடவு, அறுப்புக்காலங்களில் ஊருக்கு வந்து பத்து நாட்கள் இருப்பார். வயல் வேலைகளை மேற்பார்க்க – வெள்ளந் தண்ணி பாய்ச்ச, களை பறிக்க, உரம்போட, எலிக்கலயம் வைக்க, ஊத்தாங்கால் வைக்க – என பார்வைக்காரன் உண்டு. அப்பா கண்ணில் கண்ட அற்ற குற்றம் சொல்வார். பண ஏர் கொண்டு போவார். தோட்டப்பணிகள் செய்யும் காலத்து கூட மாட நிற்பார்.

அப்பா மீது அவருக்குத் தனிப் பிரியம் உண்டு. ஏழு கண்ணுங் கயந்தலைகள் வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறான் என்றொரு கரிசனமும். அவ்வப்போது பத்து இருபது என்று அப்பா அவரிடம் கைமாத்து வாங்குவார். முன்னறுப்புக் கடன் வாங்குவார். கடனுக்குத் தேங்காய் வாங்குவார். வித்து விலைக்கு வாங்குவார். வாழைக்குலை வெட்டினால் பூ தண்டு என்று கறிக்கு இனாமாக வாங்கிவருவார், பப்பாளிப் பழம் பறிப்பார்.

இருளப்பபிள்ளை வயதில் அந்தச் சின்ன கிராமத்தில் பத்துபதினைந்து பேர் உண்டு. அவர்களின் பட்டப் பெயர்களில் சொன்னால் – குரங்கு ராமையா, கருத்தப்போத்தி, மோட்டுமாணிக்கம், சோளங்காடி, வெட்டுக்குத்தி, இடிமாணிக்கம், கூனல் மாணிக்கம், செத்தாடு தூக்கி, செவுரு முட்டி எனப் பற்பல.

சுயமரியாதை இயக்கம் வன நெருப்புப் போல பரவிக்கொண்டிருந்த காலம். இருளப்ப பிள்ளை ஞான மார்க்கம், பக்தி மரபு. இராமலிங்கம்பிள்ளை , சூனாமானா, சுய மரியாதை இயக்கம். வீ.அ.கருணாகரன், வைரவன் சாமி கொண்டாடும் உரிமை துறந்து, குடும்பம் புறக்கணித்து, வயல் அறுத்த நெல்லை விற்று ஊரில் கட்சிக்கிளை துவக்கியவர். அந்தச் சிற்றூரில் மாவட்டத்தின் இரண்டாம் கிளை தொடங்கக் காரணமானவர். சிவானந்தம் பிள்ளை சுயமரியாதைத் தீயில் வேகவும் மாட்டார், சித்தர் ஞான மாார்க்க மழையில் நனையவும் மாட்டார். திருவனந்தபுரம் நடராஜபிள்ளை , மதுரை மணி, மதுரை சோமு, தண்டபாணி தேசிகர், எம்.எல்.வசந்தகுமாரி, கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம், என்.சி.வசந்தகோகிலம் என மெய்ம்மறந்து நடப்பவர். தெற்குத்தெரு தாடி ராமசாமிப் பாட்டா நாத்திதிகர். இவரேபோல் மற்றும் பலர். எல்லோரும் கூட்டாளிகள், சேக்காளிகள்.

ஓய்ந்த நேரத்தில் நீர் நிறை காவு கொண்ட சாஸ்தாங் கோயில் முகப்பில் அமர்ந்து வர்த்தமானம் பேசுவார்கள். பூட்டப்பட்டிருக்கும் சாத்தா சந்நிதித் திண்ணையில் அமர்ந்து ஆறுபேர் விளையாடும் குலாம்களி களிப்பார்கள். சீட்டாட்டத்துக்கு ஒரு கை குறைந்தால் காரசாரமான அரசியல், ஆன்மிக வாக்குவாதங்கள் நடக்கும். விவாதங்களின் ஊடே தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், சிந்தனைச்சிற்பி, சொல்லின் செல்வர், நடமாடும் பல்கலைக்கழகம் எனப் பெயர்கள் தெறித்து வீழும். சிலசமயம் மாம்பழப் புளிசேரிக்குத் தொட்டுக்கொள்ள எது பொருத்தமாக இருக்கும் என்று வாதம் படர்ந்து எரியும்.

மாப்பிள்ளை முதலாளி கடையில் கணக்கெழுத்து வேலையில் இருந்து விடுபட்ட பின் நிரந்தரமாக ஊருக்கு வந்து சேர்ந்தார் தனியாக, மனையாள் மக்களுடனேயே தங்கிப் போனாள். சாப்பிட என்று வைத்து இறக்கும் வேலையெல்லாம் இல்லை. அந்தச் சிற்றூரில் ஒரேயொரு வெற்றிலை பாக்குக் கடையும் ஒரேயொரு சுக்குக் காப்பி கடையும் உண்டு. கோழி கூவியவுடன் எழுந்திருக்கும் ஆடவர் பலருக்கும் பல்விளக்கியவுடன் தேநீர் தவிக்கும். பகவதி விலாஸ் காப்பிக் கடை காலை ஐந்துமணிக்குத் திறக்கும்.

இருளப்ப பிள்ளை பகவதி விலாஸ் காப்பிக் கடையில் காலையில் ஆறு இட்டலியும் இரண்டு ரசவடையும் தின்பார். ஆடைக்கும் கோடைக்கும் வருசம் முந்நூற்று அறுபத்தஞ்சு நாளும் இதுவே அவர் காலைப் பலகாரம். மத்தியானம் சொல்லி வைத்து முன்பணமும் கொடுத்திருந்த வீட்டில் இருந்து எடுப்புச் சாப்பாடு வரும். இரவு மேற்கே இறச்சகுளத்துக்கு ஒரு மைல் நடை. அங்கு சுத்தமான வாற்றுச்சாராயம் மாத்தியபின் சாலையின் விலக்குக் கடையில் இரவுப் பலகாரம் தோசை அல்லது ஆப்பம். சிலசமயம் இடியாப்பம்.

அந்தச் சிற்றூரில் கண்ணுபிள்ளை என்றொரு சின்னத்தோது வைப்புக்காரர் உண்டு, அவருக்கு ஒழிவான நாளொன்றில் மாதம் இருமுறை பொங்கிப் பொரிப்பு உண்டு. உளுத்தஞ்சோறு அல்லது கூட்டாஞ்சோறு. அந்த வழியில் நடப்பவரிடம், “அய்யா திண்ணு, அம்மா திண்ணு” என்று சிபாரிசு நடக்கும். சருவச் சட்டியில் அப்பா வீட்டுக்கும் ஒரு பங்கு கொண்டு வருவார்.

சிலசமயம் சாத்தாங்கோயிலில் காலையில் பத்து மணிக்குத் துவங்கிய சீட்டுக்களி மத்தியானம் இரண்டு மணிவரை நீளும். பள்ளியில் வாசிக்கும் அவன் வயதொத்தவர் வேறு வேலை சோலி இல்லாவிட்டால் சாத்தாங்கோயிலைச் சுற்றி விளையாடிக் கிடப்பார்கள். அவனுக்கு குலாம்களி பார்க்கப் பிடிக்கும்.

சிலசமயம் இருளப்ப பிள்ளை பெரியப்பா சொல்வார் –

*மக்கா லே! வீட்டுக்குப் போயி ஒரு செம்பும் நாலு தம்ளரும் எடுத்துக்கோ … அப்பிடியே நம்ம சிவஞானம் காப்பிக்கடைக்குப் போயி எட்டு ஆமவட, எட்டு சுக்குக்காப்பி வாங்கீற்று வா… நான் சொன்னேன்னு சொல்லு” என்பார்,

பக்கத்துக் கை களிப்பவர், “நீயும் ஒரு சுக்காப்பி குடிச்சுக்கடே!’ என்பார். உடனே ஓடிப்போவான்.

அவர்களின் சராசரி வயது எழுபது இருக்கும். அவர்கள் கூட்டத்தில் கிருத்திருமக்காரர் ஒருவர் உண்டு. சிலசமயம் அவரும் அவனைப் பார்த்துச் சொல்வார் –

“முருகா! நீ நம்ம வீட்டுக்கு ஒத்த ஓட்டத்திலே போ…. ஆச்சி இருப்பா பாத்துக்கோ… நான் சொன்னேன்னு ஒரு செம்பு நிறைய தேயிலை போட்டு வாங்கிட்டு வா என்னா! என்பார். ஆனால் அத்துடன் நிறுத்த மாட்டார்.

“பாலு இல்லியேம்பா… நல்ல பெரிசாட்டு இருக்குண்ணு நீயே அவள்ட்டே கறந்திராதே என்னா! கட்டன் போடுன்னு சொல்லு… ஒரு கிளாஸ் நீயும் அங்கினயே குடிச்சுக்கோ!” என்பார்.
ஆனால் சாயா போடும் சமயத்தில் ஆச்சி அவனுக்குத் தின்ன இரண்டு முறுக்கோ, தேன்குழலோ, அதிரசமோ, முந்திரிக்கொத்தோ தருவாள். பலகாரம் ஏதும் இல்லை என்றால் காலையில் சுட்டு, தின்று மீந்ததை மூடி வைத்திருப்பதில் இரண்டு கொழுக்கட்டையோ, ஒரு தோசையோ தருவாள்.

அன்றெல்லாம் அவனுக்குப் பசித்திருப்பது தவம், பசியாறுவது பெருவரம்.

தர்ப்பைப்புல் என்றொரு சொல் வழக்கில் இருந்தது அன்று. நெருங்கிய நண்பர்களைக் குறித்த சொல். பம்பாய் மொழியில் சொன்னால் ஜிக்ரி தோஸ்த். அவன் அப்பாவும் இருளப்பபிள்ளை பெரியப்பாவும் தர்ப்பைப்புல் என்பார்கள். என்றாலும் இருளப்ப பிள்ளை உட்கார்ந்திருந்து சுதி கூடி உரத்து சித்தர், தாயுமானவர், பட்டினத்தார், மஸ்தான் சாகிபு பாடல்கள் பாடும் இடத்து அப்பா தென்படமாட்டார். சொக்களி பேசும், சுயமரியாதைக்காரர்களைக் கிண்டல் செய்யும், சீட்டுக் களிக்கும் இடங்களிலும் அப்பாவைக் காண இயலாது, அவருக்குப் பதினோரு உருப்படிகளைக் கொண்ட குடும்பத்துக்கு சோற்றுப்பாடு பார்ப்பதே புரிந்தரனார் பெருந்தவம்.

சனிக்கிழமை தோறும், தலையில் எண்ணெயும் தோளில் சுட்டிக்கரை வடிசேரித் துவர்த்துமாகத் திருப்பதிசாரத்துக்கு நடப்பார்கள் சாயும் காலம். பெரியப்பா வயதினர் ஆறேழுபேர், அவன் வயதினர் இரண்டு மூன்று பேர். தேரேகாலின் மேலக்கரையோரம் நடந்தால் திருப்பதிசாரம். பண்டு நம்மாழ்வார் காலத்தில் திருவண்பரிசாரம். நூற்றெட்டுத் திவ்யத் தலங்களில் ஒன்று. பெருமாள் திருவாழிமார்பர். வடமொழியில் சொன்னால் ஸ்ரீநிவாசன். அந்தப் பகுதியில் தாணுமாலயன், மதுசூதனன், பூதலிங்கம், ஔவையார் போல திருவாழி எனும் பெயரும் பிரசித்தம்.

தடத்து திருப்பதிசாரம் பிராம்மணச்சேரியில் இறங்கி, கோயில் முன்புறத்தில், கீழ்புறத்தில் கிடக்கும் தணுப்பும் ஆழமும் நீலமும் அகலமும் நீளமுமாக செவ்வகத்தில் கிடக்கும் தெப்பக்குளத்தில் உடுதுணி நனைத்து நீராடி கோயிலுக்குள் நுழைவார்கள். கிழக்குப்பார்த்து அமர்ந்த திருக்கோலத்தில் திருவாழிமார்பன். திரு, செந்திரு, பங்கயத்து அமர்ந்த செல்வி, அரவிந்த மலரில் இருப்பவள் திருமால் மார்பில். பாகத்தில் ஒருவன் வைத்தான், அந்தணன் நாவில் வைத்தான், ஆகத்தில் ஒருவன் வைத்தான்.

வந்தவர்களில் ஒருவர் பாடுவார் நம்மாழ்வார் பாசுரம்,

‘வருவார், செல்வார் வண்பரிசாரத் திருந்த என்
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார்‘

என்று குழைந்து.

தொழுது சந்தனமும் துளசியும் வாங்கி, சடாரி தாங்கி வெளிப்பிரகாரத்தில் அப்பமோ அரவணையோ பிரசாதம் வாங்கி வாயில் போட்டு, ஈரத்துணியிலேயே கைதுடைத்து, கீழ ரத வீதியின் தெற்கோரம் கிழக்குப் பார்த்திருந்த காப்பிக் கடையில் தலைக்கொரு ஆமவடை தின்று, சுடுப்பம் கூட்டிச் சாயா குடித்து… வாராவாரம் எவரோ ஒருவர் துட்டுக் கொடுப்பார்.

ஊர் நோக்கிய திரும்புகால் நடை. போம்போதும் மடங்கும் போதும் பெரியவர்கள் குரலில் திவ்யப்பிரபந்தமும், தேவாரமும், பட்டினத்தாரும், திருமூலரும், அருணகிரி நாதரும், தாயுமானவரும், வள்ளற்பெருமானும், சிவவாக்கியரும், குதம்பேய்ச் சித்தரும், குணங்குடி மஸ்தானும் மழைச்சாரல் என வீழும். மெய்யும் மனமும் சிலிர்க்கும்.

திராவிடர் கழகத்து இராமலிங்கள் பின்ளை பாடுவார் –

“மாதாமாதம் தூமைதான் மறந்து போன தூமைதான்
மாதமற்று நின்றலோ வளர்ந்து ரூபமானது
நாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா
வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா”
என்று பெருங்குரல் எடுத்து. பாடும் குரல் கேட்டு,

தேரேகாலின் கரையோரத் தோப்பில் உதிர்ந்த தென்னை மடல் பொறுக்கிச் சேர்த்துக் குவித்துக்கொண்டிருக்கும் சொளாங்காடிப் பாட்டா எதிர்க்குரல் எடுப்பார் –

“தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந் தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”

என்று திருமூலரைத் துணைக்கழைத்து.

இருளப்பபிள்ளை பாடுவார்

“ஏதேது செய்திடுமோ! பாவி விதி ஏதேது செய்திடுமோ!
தேவடியாள் வீட்டு நாயாகச் செய்யுமோ!
தேவடியாளை என் தாயாகச் செய்யுமோ?
ஏதேது செய்திடுமோ! பாவி விதி ஏதேது செய்திடுமோ!”

என்று பண் எடுத்து, குணங்குடி மஸ்தான் சாகிபு பாடலை. சிலம்பாமல் வாய்பொத்தி நடப்பர் சிறார். ‘பிஞ்சிலே பழுத்த பயக்கோ’ என்ற வசையும் உண்டு அவர்களுக்கு.

மேலத்தெரு முடுக்கு அளந்து நடந்து இருளப்ப பிள்ளை வீட்டு வாசலில் நின்றான். வெயில் உச்சி சாய்ந்து மேற்கில் இறங்கத் தலைப்பட்டிருந்தது. வெளிவாசல் கதவு வெறிதே சாத்தப்பட்டிருந்தது. சுதவு என்பதே ஒரு ஆசுக்காகவே! எருமை முட்டினால் தாங்காது. கதவைத் தள்ளித் திறந்தான். சூரல் தாற்காலியில் சாய்ந்து கிடந்தவர் நிமிர்ந்து பார்த்தார். தலைமுடியும் பத்துநாள் முகமுடியும் மார்முடியும் நரைத்துக் கிடந்தது. நீரில் குழைத்து நெற்றியில், தோள்பட்டைகளில், நெஞ்சில், விலாப்புறத்தில் தீற்றப்பட்டிருந்த வெண்ணீறு நரையை சவாலுக்கு அழைத்தது.

“யாரு? முருகனா? வா மக்கா!”

படியேறிப் படிப்புரையில் நின்றான்.

“அன்னா அந்த பெஞ்சிலே இரிடே!”

சற்றுநேரம் மோட்டு வளையை வெறித்தார். கண்கள் சற்று சிவந்தாற்போலிருந்தன. அவனுக்கும் தொண்டை அடைத்தது.

“நாளைக்கு பம்பாய்க்குப் போறேன் பெரியப்பா”

“ம்… கெணவதிக்க காரியம் எல்லாம் முடிஞ்சிற்று… பொறுப்பா இருக்கணும்லே மக்கா… அம்மையப் பாத்துக்கிடணும்… தம்பிகளைப் படிப்பிக்கணும்… தைரியமாப் போயிட்டு வா என்னா… எல்லாம் முத்தாரம்மன் பாத்திக்கிடுவா…”

“சரிப்பா …”

“அம்பத்தஞ்சு எல்லாம் சாவப்பட்ட வயசா?” அவனுக்க விதி முடிஞ்சு போச்சு… ஒனக்கு ஒரு கலியாணம் செய்து பாத்திருக்கலாம்… சவம் குடுத்து வைக்கல்லே… ஒனக்கு இப்பம் என்ன வயசாச்சு?”

“இருவத்தொம்பது…”

“மெட்ராசுண்ணாலே பொண்ணு கெட்டித் தர மேலயும் கீழயும் பாப்பானுகோ… பம்பாய்க்கு அனுப்ப எவன் பெத்து வெச்சிருக்கானோ?

இறுக்கத்துடன் குனிந்திருந்தான். அவர் பாடும் மஸ்தான் சாகிபு பாடலே செவிப்பறையில் அதிர்ந்தது.

‘ஏதேது செய்திடுமோ?

பாவி விதி ஏதேது செய்திடுமோ?’.

சற்று மனம் தேற்றிக்கொண்டு சொன்னான்,

“பின்னே ஒரு காரியம் பெரீப்பா!”

“என்னடே? என்னதுண்ணாலும் மடிக்காமச் சொல்லு…”

“அப்பா என்ன காரியம்ணாலும் ஒங்க கிட்டே கேக்காம செய்ய மாட்டா… ஆத்திர அவசரத்துக்கு உங்க கிட்ட தான் நடவுக் கூலிக்கோ, களை பறிக்கவோ, உரம் போடவோ, பீசு கெட்டவோ கடன் வாங்குவா… முன்னறுப்பு நெல்லும் வாங்குவா….

“அதுக்கு?”

வெடுக்கெனக் கேட்டார்.

“ஒங்களுக்கு எவ்வளவு திருப்பித் தரணும்னு அம்மைக்குத் தெரியல்லே! இப்பம் எங்கிட்ட காசு இல்ல…. எவ்வளவுண்ணு சொன்னேள்னா நான் அடுத்த முறை வரச்சிலே மறக்காமக் கொண்டாந்து தந்திருவேன்…..”

மூகமுசென்று அவனை முறைத்துப் பார்த்தார். கண்கள் கனன்று சிவத்து நரசிம்மம் போலிருந்தது.

“எந்திரிலே செறுக்கிவிள்ளா….” என்று உறுமினார்.

அவனை முறைத்து முறைத்துப் பார்த்தார், ஆராசனை வந்த அம்மன் சாமி கொண்டாடி போல.

“யாரு வாங்குன கடத்தை பாருலே தாறது? சின்னப் பய புத்தியைக் காட்டிட்ட பாத்தியா? நீ தீப்பேன்னு நெனச்சாலே எந்தம்பிக்குக் கடன் கொடுத்தேன்? போ… போயிரு இங்கேருந்து சமுண்டித் தள்ளீருவேன் பாத்துக்கோ…” என்றவாறு குமுறி அழுதார்.

அவனுக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. எழுந்து தின்று கரங்கூப்பி வணங்கினான். உடைந்த குரலில் தொடர்ந்து சொன்னார்

“போலே! போயி புத்தியாட்டுப் பொழைக்கப்பட்ட வழியைப் பாரு… சொந்தக் காலுலே நில்லு… ஒரு கூதிவிள்ளைகளையும் நம்பாதே! நான் இருப்பம்லே ஓங்கலியாணத்துக்கு… போலே, போயிட்டு வா…”
வாசற்படியில் இறங்கி, முடுக்கில் கால்வைத்துக் கிழக்கே திரும்பினான். இயக்கி அம்மனின் முன் சிறு வாழையிலைத் துண்டில் அரிசிப் பாயசம் எறும்பரித்துக் கிடந்தது. பிடரியில் வெயில் அடித்தது.

– ஆவநாழி, ஆகஸ்ட் செப்டம்பர் 2020.

நன்றி: https://nanjilnadan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *