உணர்வின் துடிப்பு
(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இது ப்யூர் ஸைக்காலஜி. ஆனால் ஸைக்கலாஜிக்கல் உண்மைகளை எத்தனை பேர் புரிந்து கொள்ளும் சக்தி பெற்றிருக்கிறார்கள்? இல்லை. அப்படி ஆற்றல் பெற்றிருப்பவர்களில்தான் எத்தனைபேர் விஷயத்தைப் புரிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்? புரிந்துகொள்ளச் சக்தி இல்லாமலும், உண்மையைப் புரிந்து கொள்வதற்கான மனம் இல்லாமலும் திரிகிற மக்குப்பிளாஸ்திரிகள், மடச் சாம்பிராணிகள், மண்டூகங்கள், மண்ணாந்தைகள் மத்தியிலேதான் ஐயாவாளைப் போன்ற மேதைகளும் வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கு. இதுதான் வாழ்வின் ஐரனி!
சுயம்புலிங்கம் மூஞ்சியைச் சுளித்தான். வாயை எப்படி எப்படிக் கோணலாக்க முடியுமோ அப்படி எல்லாம் நீட்டி யும் குறுககியும் சுருக்கியும் கோரணி பண்ணினான். கண்களை உருட்டிக் கொண்டான். தானாகவே சிரித்து வைத்தான்.
ஐயாவுக்கு இப்போ குஷி மூட்!
ஸைக்காலஜி என்ன சொல்லுது? இயல்பான உணர்ச்சிகள் பொங்கி எழுகிற போது அவற்றுக்கு உரிய போக்கு காட்டாமல், அமுக்கி ஆழ்த்திக் கொன்றுவிடத் தவிப்பதனால் தான் மனித இனத்தில் மனக்கோளாறுகளும் நரம்பு வியாதிகளும், சித்தப் பிரமைகளும் வக்கிரங்களும் அதிகம் காணப்படுகின்றன.
அதுக்கு உளஇயல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
உணர்ச்சிகளை அடக்கி ஒடுக்கி வைக்கப்படாது. அவை பொங்கி எழுகிற போது அவற்றுக்கு ஒரு போக்கு காட்ட வேண்டியது. அவசியம். அப்போதான் மன அமைதி உண்டாகும்.
இதற்காக இன்றைய உள இயல் நிபுணர்கள் வகுத்துக் காட்டும் வழி என்னவென்றால்-
மக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருதா? யார் மீதாவது எரிந்து விழணும் போலிருக்கா? ஏசணும், கத்திக் கூப்பாடு போடணுமின்னு தோணுதா? எதையாவது வீசி எறிந்து உடைக்கணும்போல் ஆத்திரம் உண்டாகுதா? உடனே அப்படியே செய்துவிடும். அதற்கென ஒரு தனி அறை வைத்துக்கொள்ளும். அதுக்குள்ளே போய் கத்தும். வசை பாடும். தலையணைமீது ஓங்கி ஓங்கிக் குத்தும். அறையும். விலை மதிப்பு குறைவான உடைப்பதற் கென்றே வாங்கி வைக்கப்பட்டுள்ள பொருள்களை வீசி எறிந்து அமர்க்களமாய் சிரியும்… இப்படி எல்லாம் செய்தால், பொங்கி எழுந்த உணர்ச்சிகள் சூடு ஆறி இயல்பாகவே தணியும். உமது உள்ளத்தில் அமைதியும் சந்தோஷமும் படியும்.
‘ஆகா! இதல்லவா புத்திசாலித்தனமான ஐடியா!’ என்று கூவிக் குதித்தான் சுயம்பு.
அந்த அறையில் அவன் மட்டும் தான் இருந்தான்.
ஏய், எந்த..உணர்ச்சியையுமே அடக்கி ஒடுக்கப் யடாது. நம்ம சமூகத்திலே, நமது நாட்டிலே, விடியா மூஞ்சிகளும் மூணாம் பேஸ்துகளும், உர்ராங் உட்டாங்களுமே காணப்படும் வயணம் என்ன? உள்ளத்தில் அமைதியும் ஆனந்தமும் ஊற்றெடுக்காததுதான் காரணம். அதைச் செய்யாதே; இதைச் செய்யாதே; எதையுமே நினைக்காதே; ஆசையை அடக்கு; மூக்கைப்பிடி; மூலையிலே குந்து. கண்ணை மூடு. சிந்தனையை ஒடுக்கு! இவ்வாறு உபதேசித்து, ஆக்கினைகள் செய்து, உருப்படாமல் அடித்து விட்டார்கள்; அடித்து வருகிறார்கள்.
சிரிக்கணுமா? சத்தம்போட்டுச் சிரி. அழணும் போலிருக்கா? அழு. பாடுகிற உற்சாகம் ஏற்படுதா? பாடு. உனக்கு சங்கீத ஞானம் இருக்குதா, குரல் இனிமையாக இருக்குதா, பாடல்கள் தெரியுமா என்றெல்லாம் கவலைப் படாதே. தெரிஞ்சது, காதிலே விழுந்தது, அரைகுறை யாக அறிந்தது, எதை வேணும்னாலும் கத்து. பீறிடும் உணர்ச்சிகளுக்கு வடிகால் அமைக்க வேண்டும். முக்கியம்.
சுயம்புலிங்கத்துக்கு சிரிப்பு வந்தது. ‘நம்ம இஷ்டத் துக்கு சிரிச்சால்கூட மனுசப் பயலுக பயந்து போவானுக!’ என்று முணுமுணுத்தான். பழைய அனுபவ நினைவு திடீர் எனத் துள்ளி வெடித்ததுதான் காரணம்.
ஒரு மாலை நேரம். ஊருக்கு வெளியே ஒதுக்கமான குளக்கரை. கரையின் பக்கங்களில் ஓங்கி வளர்ந்த மரங்கள். மறுபக்கம் பசுமை கொஞ்சிக் குலவும் நெல்வயல்கள். கரை மத்தியில் ஒற்றையடிப் பாதை என மனிதர் நடந்து பண் பட்ட சுவடு. எப்பவாவதுதான் ஆட்கள் போவார்கள். சுள்ளி பொறுக்குவோர்,விறகு வெட்டுவோர், மாடு மேய்ப் பவர்கள் வகையறா. அவ்வேளையில் யாரும் இல்லை. மாலைக் கதிரவனின் வெயில் இதமாக இருந்தது. ‘காலை நடை காலுக்கு பலம்’ என்றும், ‘மாலை நடை மனதுக்கு. நலம்’ என்றும் அவன் அந்த வழியாக தினம் தினம் நடப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தான். சிரிப்புகளைப் பற்றிய நினைப்பு மனசில் அலைமோதியது. வெடிச்சிரிப்பு, துப்பாக்கிச் சிரிப்பு, மவுனச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, கிளுகிளுச் சிரிப்பு, மணிச் சிரிப்பு, கனைப்புச் சிரிப்பு… இவ்விதம் அடுக்கிக்கொண்டே போன் மனம் ‘பேய்ச் சிரிப்பு’ என்றது. அப்படிச் சிரிக்கலாமே என்று உணர்வு உந்தியது. சிரித்தான். உரக்க, எவ்வளவு குரல் உயர்த்திச் சிரிக்க முடியுமோ அவ்வளவு பலமாகச் சிரித்தான். அவனுக்கு ரொம்ப திருப்தி. நடந்தான்.
முன்னே, ஒரு வளைவில், மரம் வெட்டிக் கொண்டிருந்த ஒருவன் கைக் கோடரியை கீழே போட்டுவிட்டு, பயந்தவனாய், தடத்தின் மத்தியில் வந்து நின்று அண்ணாந்து பரக்கப் பரக்கப் பார்த்தபடி காணப்பட்டான். அப்படி ஆள் எவனாவது அங்கே இருக்கக்கூடும் என்ற எண்ணமே சுயம்புக்கு எழுந்ததில்லை. அந்த நினைப்பு எழுந்திருக்குமானால் அவன் அவ்வாறு சிரித்திருக்க மாட்டான்.
சுயம்பு அருகே வந்ததும். அந்த மனிதன், ‘ஐயா, செத்த முந்தி இங்கே ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டுதே?’ என்று இழுக்கவும், ‘ஆமா, நான்தான் சிரித்தேன்’ என்றான் இவன்,
‘நீங்களா சிரிச்சீங்க? நல்லாச் சிரிச்சீங்க போங்க. பேய் அலறின மாதிரி! நான் பயந்தே போனேன். சின்னப் புள்ளெக ஏதாவது அதைக் கேட்டிருந்தால் வெருவிச் செத்திருக்கும்!’ என்றான் மரம் வெட்டி.
மவுனச் சிரிப்பை முகத்தில் நெளிய விட்டபடி நடந்தான் சுயம்பு. தனது சிரிப்புப்பயிற்சி பெரும் வெற்றி பெற்றுவிட்ட ஆனந்தம் அவன் உள்ளத்தில் குமிழ்த்துக் கும்மாளி போட்டது.
இப்போது சுயம்பு தனிரகச் சிரிப்பு ஒன்றைச் சிதறி வைத்தான்.
இப்படி எல்லாம் செய்தால் பைத்தியம், கிறுக்கன், லூஸ் என்றுதான் எண்ணுவார்கள்.
ஸர்த்தான்! எண்ணிட்டுப் போறாங்க. அதுனாலே நமக் கென்ன? நமக்காகத்தான் நாமே தவிர, மற்றவங்களுக்காக நாம் அல்ல. வீ ஆர் எபவ் ஆல் தீஸ் திங்ஸ்!
சிலபேர் தங்கள் குண இயல்புகளினால், உணர்வுச் சிறப்புகளினால், அறிவு ஆற்றல்களினால், மற்றவர்களைவிட மேம்பட்டவர்கள். சராசரி மனிதர்களின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகள் வகையரா தங்களை பாதிக்கா – பாதிக்கக் கூடாது – என்பது அவர்களது கருத்து. அத்தகைய ‘அதிமனிதர்’களில் அவனும் ஒருவன் என்பது சுயம்புலிங்க நினைப்பு.
ஆகவே, பிறரது விருப்பு வெறுப்புகள், அபிப்ராயங்கள், சம்பிரதாயங்களை எல்லாம் தான் மதிக்க வேண்டிய தில்லை என்றே அவன் நம்பினான். அப்படி மதிக்காமல், தன் மனம் போன போக்கில், உணர்ச்சிகள் உந்தும் வழியில், தான் வாழ ஊர், சமூகம், மனித இனம் தன்னை அனுமதிப்பது இல்லையே – ஏகப்பட்ட வேலிகளை பார்வைக்குப் புலனாகா வகையில் அமைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறதே- என்ற குறை அவனுக்கு என்றும் உண்டு.
பின்னே என்ன? கவர்ச்சியான ஒரு பொருளை பார்க்கிறேன். அது எனக்குத் தேவை என்று ஆசை தூண்டுகிறது. அதை நான் என் இஷ்டத்துக்கு எடுத்துக்கொள்ள முடிகிறதா?… எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறேன் நான். அழகான குழந்தையை பார்க்கிறவர்கள் அதன் கன் னத்தைக் கிள்ளுகிறார்கள்; தட்டுகிறார்கள். ஆசையோடு எடுத்துக் கொஞ்சுகிறார்கள். அதேமாதிரி, அழகான, இனி மையான, பெண் எதிர்ப்படுகிறபோது அருகாமையில் நிற்கிற போது – பஸ் பயணம், ரயில் யாத்திரைகளில் மிகமிக நெருங்கி வர நேரிடுகிற போது -அவளது பட்டுக் கன்னத்தைத் தடவ, மூக்கைப் பிடித்து ஆட்ட, எழில் நிறை காதுகளை சொல்லமாய் கிள்ள, இப்படிச் சிறு குறும்புகள் பலப்பல செய்ய வேணும் என்று உளம் குறுகுறுக்கிறது. உணர்ச்சி உந்துகிறது. செய்ய முடிகிறதா நம்மாலே? அந்த எண்ணம் எழுந்ததும், அவ்வாறே செய்ய வேண்டும், செய்யும் உரிமை நமக்கு வேணும் என்றுதான் நான் சொல்கிறேன்…
சுயம்புலிங்கம் தனது எண்ணங்களை கொள்கையை, தன் நண்பர்கள் ஒன்றிருவரிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்களும் தலையாட்டினார்கள். இவ்வித நினைப்புகளும் உணர்ச்சி உந்தல்களும் மனிதருக்கு எழுவது இயல்புதான் என்றும்,ஆயினும் வாழ்க்கை முறைகளும் சமூக அமைப்பும் ஒழுக்க நெறிகளும் பிறவும் அவை சுதந்திரமாக மலர்ந்து விளங்குவதற்கு வகை செய்வதில்லை, என்றும் ஒப்புக் கொண்டார்கள்.
‘சோதனை ரீதியாக நாம் இவற்றை செயலாற்றிப் பார்த்தால் என்ன?’ என்று கேட்டான் சுயம்பு.
‘நமக்கு எதுக்குடே வீண்வம்பு!’ என்றான் ஒருவன்.
‘நல்ல ஐடியாதான் பிரதர்.ஆனால் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது’ என்றான் இன்னொருவன்.
‘என்னைக்காவது ஒருநாள் நானும் எக்ஸ்பெரிமெண்ட் பண்ணலாம்னுதான் இருக்கேன். ஆனால் இப்ப சரிப்படாது’ என்று சொல்லிவிட்டான் வேறோருவன்.
‘முதுகெலும்பில்லாத பயலுக!’ என்று முடிவுகட்டினான் சுயம்பு.
நாம் ஒருநாளாவது நம் உணர்ச்சி உந்துதல்களின் படி வாழ்ந்து பார்த்துவிட வேண்டியதுதான்.
அதற்கு ‘நல்லநாள்’ என்று ‘குஷியான மூட்” பெற்றிருந்த இன்றைய தினத்தை அவன் மனம் சிபாரிசு செய்தது.
ஹ்விட்..ஹ்விட்டோ ஹ்வீட் என்று அது சீட்டி அடித்துக் குதூகலித்தது.
சுயம்புலிங்கம் உற்சாகமாக வெளியே வந்தான்.
தெருவில் ஒரு நாய் ஓடிவந்தது. அவனை ஏறிட்டுப் பார்த்தது. நின்றது. மோந்து பார்த்துவிட்டு, சுவர்ஓரமாகப் போய் நின்று, ஒரு காலை உயர்த்தியது. சுவரின் அந்தப்பகுதி நனைந்தது. அவனை அலட்சியமாக நோக்குவது போல கண்ணை ஏவியபடி அது நகரலாயிற்று.
சவத்துப்பய நாய் மேலே கல்லை வீசணும்.
சுயம்பு உடனே குனிந்து, பெரும் கல் ஒன்றை எடுத்து நாய்மீது விட்டெறிந்தான். கல்லெறியப்பட்ட நாய் காள்- காள் என்று கத்தியவாறு, ஒரு காலை நொண்டிக் கொண்டு ஓடலாயிற்று.
அவன் அதற்கு எதிர் திசையில் நடந்தான்.
ஒரு வீட்டின் முன்னால் அடுக்கு அரளி கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கி நின்றது. செம்பருத்திப் பூக்கள் சிவப்பாய் சிரித்து மிளிர்ந்தன.
அரளிப் பூக்கள். அடுக்கரளி ரோஜப்பூ மாதிரியே இருக்கு. பறிச்சால் என்ன?
அருகில் சென்று, கைநீட்டி, செடியை வளைத்து இழுத்துப் பறித்தான்.
‘ஏய் யாரது அங்கே செடியை முறிக்கிறது?’ என்று ஒரு உரிமைக் குரல் வீட்டினுள்ளிருந்து உறுமியது.
பதில் சொல்லத் தேவை இல்லை.
அவன் பாட்டுக்கு நடந்தான்.
‘தெருவோடு போறவனுக்கு சும்மா போக முடியலியோ? குரங்குத்தனம் பண்ணிக்கிட்டேதான் போகணுமோ?’ உறுமிய குரல் வெளியே வந்து, அவனுக்குப் பின்னால், வாசலில் இருந்து கத்தியது.
திரும்பிப் பாராமலே நடந்த சுயம்பு பூவைக் கசக்கி வழியில் தூவினான்.
குரங்காமில்லே குரங்கு!
அங்கே ஒரு கன்றுக்குட்டி சோம்பலாக நின்றது.
‘ஓடி டி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாதடி பாப்பா!’ என்று பாடியவாறு, சுயம்பு அதன் வாலை முறுக்கினான்.
கன்றுக்குட்டி மெதுநடை போட்டு விலகி நகர்ந்தது.
‘கன்றுக்குட்டி துள்ளி ஓடும், ரெண்டாம் கிளாசில் நான் படித்த பாடம். கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய். அண்ணன் என்று இங்கு வருவார்?…’
பாடப் புத்தகத்தில் எந்தக் காலத்திலோ படித்ததை இப்போது பள்ளிப் பையனின் நீட்டல் ராகத்தோடு உச்சரித்த படி நடந்தான்.
தெருவோடு போன ஒரு சிறுவன் வேடிக்கையாகப் பார்த்தான். சிரித்தான். கூச்சலிட்டான்-
‘காசிக் போனார்
எங்கே போனார்?
கடைக்குப் போனார்.
என்ன வாங்க?
டீ வாங்க
என்ன டீ?
பொண்டாட்டீ!’
என்று ‘டீ’யில் விசேஷமான அழுத்தமும் நீட்டலும் சேர்த்து முழக்கினான்.
அவனை முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும் என்று சுயம்புவுக்குத் தோன்றியது. ‘டே இங்கே வாடா!’ என்று கூப்பிட்டான்,
பையனோ ‘ஏ பீ ஸி டி எங்கப்பன் தாடி! ஓ பீ ஸி டி – ஒங்கப்பன் தாடி!’ என்று கூவிக்கொண்டு ஓடிவிட்டான்.
பிசாசுப்பயல் மகன்! எமப்பயல்புள்ளே. உணர்ச்சிகள் உந்துகிறபடி வாழ்கிற பையன்.
சுயம்புவின் ஜாலி அதிகரித்தது. முகத்தில் சிரிப்பு விளையாட நடந்து கொண்டிருந்தான்.
ஒரு இடத்தில் பெண் ஒருத்தி நின்றாள். ‘நாட்டுக் கட்டை’. கவர்ச்சி நிறைந்த தோற்றம். அவளுடைய கண்கள் மிக அழகாக இருப்பதாக அவனுக்குப்பட்டது. ரசிக்கப்பட வேண்டிய முகம் உடைய அவளைப் பார்த்து, ரசனையின் சான்றிதழாக ஒரு சிரிப்பு வழங்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. எண்ணம் எழுந்தால் உடனே செயலாற்ற வேண்டியதுதானே! சிரித்தான். நன்றாக அவளை நோக்கி, அவளுக்காக, அவளது வசீகர வனப்புக்காக, ரசிகச் சிரிப்பை உதிர்த்தான்.
‘மூஞ்சியைப் பாரு!குரங்கு! பீடை, பாடை, சவம். தரித்திரம். முழிச்சுக்கிட்டு இளிக்கதைப் பாரேன்’ என்று முணமுணத்தாள் அவள்.
சுயம்புவின் காதிலும் அது விழத்தான் செய்தது. இன்னொன்றும் விழுந்தது.
‘ஏ குட்டி அம்மே! ஏளா ஏ குட்டி!’ என்று நீண்ட குரலெடுத்துக் கூப்பிட்டாள் ஒரு முதியவள். அதைத் தொடர்ந்து அவளே வந்துவிட்டாள். ‘இங்கேயா நிக்கிறே?’ என்று கேட்டாள்.
சுயம்புவின் உள்ளம் உந்தியது. அவன் வாய் பாடியது. என்றோ கேட்ட பழம்பாட்டு.
‘குட்டி அம்மெ நாத்தினா
சில்லறையை மாத்தினா!
பொட்டி வண்டி கட்டிக்கிட்டு
பட்டணம் பாக்கப் புறப்பட்டா!’
குட்டி அம்மை என்று அழைக்கப்பட்டவள், அவன் பக்கம் முறைத்தபடி ‘தூ’ என்று காறித் துப்பினாள். ‘இங்கே துடைப்பக்கட்டை எதையும் காணேமே?’ என்றாள்.
‘சீ தூமையைக் குடிக்கி! விளக்குமாத்தை எடுத்து, சாணியக் கரைச்சு ஊத்தி, சரியானபடி பூசைக்காப்பு கொடுக்கணும். கொழுப்பு மிஞ்சிப் போச்சோடா கழுதை?’ என்று கூப்பாடு போட்டாள் பெரியவள்.
அங்கே நின்றால் ஆபத்து என்று உள்ளுணர்வு உணர்த்தவும், பிள்ளையாண்டான் வேகமாக நடையைக் கட்டினான்.
எங்கெங்கோ சுற்றிவிட்டு சுயம்புலிங்கம் ஒரு தெரு முனைக்கு வந்தான். ஆள் நடமாட்டம் சுமாராக இருந்த இடம். எதிரே வந்து கொண்டிருந்த ஒரு பெண் – ‘ஸ்டைல் மிஸ்ஸி’ என்றது அவன் மனம் – சைக்கிளுக்கும் கட்டை வண்டிக்கும் விலகி ஓரமாக நடந்ததனால், அவனை இடிப்பதுபோல் வந்தாள்.
‘இடி ராஜா’க்கள் இருப்பது போல, ‘இடி ராணி’களும் இருக்கிறார்கள் நாகரிக நகரங்களிலே!
மையுண்ட அகல் விழிகள் அவன் முகத்தில் மொய்த்துச் சுழன்றன. அவள் சிரித்தாளோ இல்லையோ என ஐயுறச் செய்யும் ரேகை ஒன்று அவளது உதடுகளில் ஊர்ந்தது.
பையன் கிறங்கிப் போனான். தன்னுடைய முக காந்தியில் சொக்கிப்போய்த் தான் அந்த சுந்தரி இந்த வேலை பண்ணுகிறாள் என்று நினைத்தான். அவளுடைய கையைப் பிடித்து, கன்னத்தை லேசாகத் தட்டி, ‘ஓ, ப்யூட்டிஃபுல்!’ என்று செல்லமாய் குழறினான்.
‘காலி ராஸ்கல்!’ என்று கத்தினாள் அவள். பளார் என அறை விழுந்தது அவன் கன்னத்தில். அதிர்ச்சியினால் நிலை குலைந்து, தன் கன்னத்தைத் தடவ அவன் கை மீட்டுக் கொண்டபோது, அவள் குனிந்து, ஒரு கால் செருப்பைக் கழற்றிப் பிடித்து நிமிர்ந்தாள். ‘ஓகோ, அவ்வளவு திமிரா!’ என்று கூச்சலிட்டாள்.
அவள் அழகும் அலங்காரமும் வழியோடு போவோரைக் கவர்ந்தன என்றால், அவளது செயலும் பேச்சும் அந்தப் பக்கம் போவோர், சுற்றுப்புறத்தில் இருந்தோர் அனைவரையும் சுண்டி இழுத்தன.
நகரத் தெருவில் இப்படி ஒரு காட்சி கிட்டுகிறபோது விரைவில் கூட்டம் கூடுவதற்குக் கேட்க வேண்டுமா?
‘கொடுங்கம்மா ஒண்ணு!’ ‘சூடாக் கொடுங்க!’ ‘இந்த மாதிரிப் பயலுகளுக்கெல்லாம் சரியானபடி பாடம் கத்துக் கொடுக்க வேண்டியதுதான்!’
உற்சாகமாகக் கத்தும்படி அவரவர் உணர்வு தூண்டவும். பலரும் பலவாறு பேச்சு உதிர்த்தனர். ஒருவனது உணர்ச்சி செயலில் புகும்படி உந்தவும், அவன் சுயம்புவின் மூஞ்சியில் ஓங்கி அறைந்தான். அதைத் தொடர்ந்து சாடின பற்பல கரங் கள். சம்பந்தப்பட்டவர் படாதவர், போனவர் வந்தவர் எல் லோரும் சடபடவென அவன் முதுகில், முகத்தில்,மார்பில், தலையில், கைக்கு வசமாக எட்டிய இடமெல்லாம் சூடாக அறைந்தனர். ‘அய்யா,சாமி, அப்பா, சாமி ! செத்தேன்’ என்று ஒலமிட்டான் அப்பாவி சுயம்பு.
இந்தத் திருப்பணிக்குத் துவக்க விழா செய்து வைத்த அம்மணிக்கே ‘ஐயோ பாவம்’ என்று மனம் கசிந்து விட்டது. கண்களில் நீர் மல்குவது போல் தோன்றியது.
‘இவனை இப்படியே விட்டுடப்படாது. போலீசிலே ஒப்படைக்கணும். அப்பதான் இவன் மாதிரி வீணன்களுக்கெல்லாம் எச்சரிக்கையாக இருக்கும்’ என்று வழிகாட்ட முன்வந்தார் ஒரு பெரியவர்.
‘பரவம் விட்டுடுங்க. என்னமோ செய்து போட்டான். அதுக்குத்தான் சரியான தண்டனை கிடைச்சுப் போச்சே!’ என்று அருள் கூர்ந்தாள் நாகரிக அம்மை.
‘ஏய், அவங்க சொல்றதுக்காக உன்னை இப்போ சும்மா விடுறோம். இனிமேல் இது மாதிரி வாலாட்டினே, ஆளு அடையாளம் தெரியாதபடி துவையல் பண்ணிப் போடுவோம். ஆமா ஜாக்கிரதை!’ என்று சொல்லி, ‘இந்தா இதை நினைவு வச்சுக்கோ’ என்று ஒரு கும்குத்து கொடுத்தார் ஒருவர்.
அதைத் தொடர்ந்து ‘கொசுறு’ ஆகச் சில அடிகள் அவனுக்கு வழங்கப்பட்டன.
‘இங்கே நில்லாதே போ!’ என்று ஒரு கை அவன் கழுத்தைப் பிடித்து பலமாக நெட்டித் தள்ளியது.
முன்னே போய் தள்ளாடி விழுந்திருக்க வேண்டியவன் தான். எப்படியோ சமாளித்துக் கொண்டு நடந்தான் சுயம்பு.
‘என் உணர்ச்சி தூண்டுகிறபடி செயல் புரிய எனக்கு உரிமை இருக்குமானால், மற்றவர்களுக்கும் அவரவர் உணர்ச்சித் துடிப்பின்படி செயல்புரியும் சுதந்திரம் இருக்கும் தானே? அப்போது ஏற்படக் கூடிய விளைவுகள்…’ என்று அவன் சிந்தனைத் தறியில் அறிவு வேலை செய்யத் தொடங்கியிருந்ததோ என்னவோ! தலைகுனிந்தவாறே நடந்து கொண்டிருந்தான் சுயம்புலிங்கம்.
– சிவாஜி, ஜனவரி 1972.
– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.