கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 5,065 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் குருடன். பிறவிக் குருடனல்ல, குருடானவன். மக்கள் எவருமே அவனைச் சீண்டுவதில்லை. நகர வீதி களிற் கையில் ஈட்டியோடு அவன் தன்னிஷ்டம்போல அலைந்தான். மக்கள் எல்லாரும் பயங்கலந்த அனுதாபத் தோடு அவனுக்கு வழிவிட்டு விலகி நடந்தனர்.

அவனும் எவரையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அவன் வாய் மட்டும் “மாசற்ற செம்மறியை வதைத்துக் கொன்றவர்களுக்கு நானும் துணை நின் றேன். என் கண்கள் குருடானது அதற்கேற்ற தண்டனை தான்” என்று சதா முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும்!

இருக்காதா பின்னே! அந்தக் கொடூரமான வெள்ளிக் கிழமை மதியந் திரும்பிய பின்னர், வானத்திற் பிரபை யோடு எறித்துக் கொண்டிருந்த கதிரவன், தன் கிரணங் களை மடக்கிக் கொண்டுவிடத் திடீரென எங்கும் இருள் கவிந்தது. கோயிற் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. பூமி அதிர்ந்தது. கல்லறைகள் திடீரெனத் திறந்து கொண்டன்.

இந்த உற்பாதங்கள் எல்லாம் குற்றமேதுமே அற்ற அந்தப் போதகரை இராஜத்துரோகி எனக் குற்றஞ்சாட்டி அனியாயமாகக் கொன்றுவிட்டோம் என்ற குற்ற உணர்வை நகர மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த இரத்தப் பழி தங்களுக்கு என்னென்ன கெடுதிகளைத் கொண்டு வருமே என்று ஜெருசலேம் மக்கள் எல்லோருமே பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தனர்

ஆனாற் தங்கள் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ள சக்கரவர்த்தியின் வும் அவர்களுக்குப் பயம். ரோமச் அரசாங்கம் தங்களையும் அந்த இராஜத்துரோகிக்கு உடந்தை என்று தண்டிக்கலாம் அல்லவா?

பயத்தினால் அந்தப் போதகரின் சீடர்களும் அவரு டைய தாயாரும் பூட்டப்பட்ட கதவுகளின் பின்னால் நான்கு சுவர்களுக்கிடையே அஞ்ஞாத வாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த ஈட்டிக்காரன் மட்டும் எவருக்குமே பயப்படவில்லை. சக்கரவர்த்திக்கோ, அவரின் பிரதிநிதி யான ஆளுநர்க்கோ, அவருக்கும் கீழான அதிகாரி களுக்கோ அவன் பயப்படவில்லை! இராஜத்துரோகி யாக, சமூகத் துரோகியாக, புரட்சிக்காரனாகக் குற்றஞ் சாட்டி அதிகாரிகளிடமும் ஆளுநரிடமும் சிலுவையில் றைந்து கொல்ல வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக் கொண்ட ஆசாரியர்களுக்குக்கூட, எவருக்குமே அவன் பயப்படவில்லை. “எந்தக் குற்றமுமே அற்றவரான அந்தப் போதகரை வதைத்துக் கொன்றவர்களுக்கு தானும் குருவே! என்னை உடந்தையாயிருந்தேன். மன்னியுங்கள்” என்று மனம் உருகிப் புலம்பியபடியே அவன் ஜெருசலேம் நகர வீதிகளிற் தன் ஈட்டியுடன் திரிந்தான்!

கிறீஸ்து நாதரை இராஜத்துரோகி என்று குற்றஞ் சாட்டிய குருக்களும் ஆசாரியர்களும் அவனைக் கண்டு பயந்தார்கள். கிறீஸ்துவின் இரத்தப்பழ என்மேலில்லை எனக் கைகழுவிக் கொண்ட பிலாத்துகூட., அந்த ஈட்டிக் காரனுக்கு ஏதுமே செய்ய வேண்டாம் என்று தன் கீழுத்தியோகத்தர்களிடமும் வீரர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தான்.

ஆம்! எல்லாருமே அந்த ஈட்டிக்காரனைக் கண்டு பயந்தார்கள். ஆனால் அந்த ஈட்டிக்காரனோ, “குற்ற மற்றவரைக் காட்டிக் கொடுத்து விட்டேன் என் கண்கள் குருடாகிவிட்ட தண்டனை அதற்கு நியாய மானதுதான்” என்று புலம்பிக்கொண்டே நகர வீதிகளில் அலைந்து கொண்டிருந்தான்.


அந்த ஈட்டிக்காரனுக்கு இருபத்திரண்டு வயதுதான். இளம் வயதிலேயே துருதுரு என்றிருந்தான். தன் தந்தையாரோடு சேர்ந்து கோதுமை வயலிலே உழுதான். விதைத்தான். அறுவடை செய்தான். அவன் பெயர் லொஞ்சினூஸ்.

அவன் தந்தை வயல் விதைப்புக்காக பால்பஸ் என்பா னிடம் ஓர் தடவை கடன் வாங்கினார்.

தந்தையும் தானும் வயலிலே எத்தனை பிரயாசைப் பட்டாலும் அந்த வருடம் வயல் நன்கு விளையவில்லை. அதனாற் கடனைத் தீர்க்க முடியவில்லை.

தந்தை பால்பஸ்ஸிடம் மீண்டும் கடன் வாங்கினார். பால்பஸ் கொஞ்சங் கொஞ்சமாகப் பணம் கொடுத்து அதற்கு வட்டிமேல் வட்டி போட்டு ஐந்து ஆண்டுகளிற் தந்தையின் நிலத்தையே பறித்துக் கொண்டுவிட்டான். நிலத்தைப் பறிகொடுத்த லொஞ்சினூசின் தந்தை அந்த ஏக்கத்தாலே மரணத்தைத் தழுவிக் கொண்டார். லொஞ்சினூஸ் நிராதரவானான்!

நிராதரவாகி விட்ட லொஞ்சினூஸ் செபக் கூடங்களி லும் கோயில்களிலும் பிரார்த்தனை பண்ணும் குருக் களை வெறுத்தான் ஆசாரியர்களை வெறுத்தான். தான் பிறந்த யூத சமூகத்தையே வெறுத்தான. அவன் மனம் பேதலித்துக் கடினமாகிவிட்டது. இஸ்ராயேலரின் நாட்டிலே அட்டகாசம் பணணிக்கொண்டிருந்த ரோமப் போர்வீரர்களின் கைக்கூலியாக மாறினான். அவர்களுக்கு உளவு சொல்வது, ரோமானியப் பேரரசுக்கு எதிராகப் பேசுபவர்களைக் காட்டிக் கொடுத்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது ஆகியவைகளே அவன் தொழிலாகிவிட்டது

இந்நிலையிற்தான் நசரேத்து ஊரானாகிய இயேசு ரோமச் சக்கராதிபத்தியத்திற்கு எதிராகப் பேசுகிறான் என்ற செய்தி உரோம அதிகாரிகளின் காதில் விழுந்தது. குருக்களும் ஆசாரியர்களும் அவ்வாறு குற்றஞ்சாட்டி அவரைப் பிடித்து விசாரிக்கும்படி அதிகாரிகளைத் தூண் டினார்கள். போர் லொஞ்சினூஸ் ரோமானியப் வீரர்களை அழைத்துக் கொண்டு அவரைப் பிடிக்கச் சென்றான்.

யேசுவைப் பிடித்தவர்கள் அவரைக் கைபா என்ற அதிகாரியிடம் கொண்டு சென்றார்கள். பின்னர் பிலாத்து என்ற மேலதிகாரியிடம் கொண்டு சென்றார்கள்.

பிலாத்துவினால் இயேசுவிற் குற்றங் கண்டுபிடிக்க முடியவில்லை அவரை விடுவிக்க விரும்பினான்.

ஆனாற் பிரதான ஆசாரியரும் குருக்களும் மக்களும் யேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பிலாத்து, “இந்த இரத்தப் பழி என் மேல வராதிருக்கட்டும்” என்று தன் கைகளைக் கழுவி, அவர்கள் விரும்பியபடியே இயேசுவைச் சிலுவை மரணத்திற்குத் தீர்ப்பிட்டான்.

யூதர்கள் இயேசுவைக் கற்றூணிற் கட்டி கசை யால் அடித்தார்கள். அவருக்கு முள் முடி சூட்டிப் பரிகசித் தார்கள். கடைசியாய்க் கழுமரமான சிலுவையைச் சுமக்கச் செய்து அச்சிலுவையிலே அவரை அறைந்து கொன்றார்கள்.

இந்தச் சித்திர வதைகள் யாவற்றிலுமே லொஞ்சினூஸ் பங்கேற்றான். தனது தந்தையார் வஞ்சிக்கப்பட்ட தால் அவன் மனசில் ஏற்பட்ட குரோதம் அவனை மிருக மாக்கியிருந்தது. சமுதாயத்தைத் திருத்துபவர்கள் எனச் சொல்லப்படுகிறவர்களையும் போதிப்பவர்களையும், அவன் அறவே வெறுத்தான். சமுதாயம் முழுமையிலுமே ஏற்பட்ட குரோதம் இயேசுவைச் சித்திரவதை செய்ததிற் திருப்தி கண்டது.

ஆனால் இயேசு, சிலுவையில் மரணித்தபோது ஏற் பட்டஉற்பாதங்களினால் லொஞ்சினூஸ் அதிர்ச்சியடைந்தான். ஆயினும் குரோதமும், வன்மமும் இன்னும் அவனை விட்டுப் போகவில்லை.

வெள்ளிக்கிழமை பிற்பகல் கடந்து நாழிகைகள் ஆகி விட்டன. ஓய்வு நாள் ஓய்வு நாள் சமீபித்து விட்டதால் யூதர்கள் சிலுவையிற் பிணத்தை வைத்திருக்க விரும்பவில்லை. ஆனால் இயேசு உண்மையாகவே மரணித்து விட்டாரா என்பதைப் பரிசோதிக்க விரும்பினர். உற்பாதங்களினால் அதிர்ச்சியடைந்திருந்த லொஞ்சினூஸ் தன்னைச் சுதா ரித்துக் கொண்டு அந்தப் பரிசோதனையை நடத்த முன் வந்தான். அவன் எழுந்து நின்று, சிலுவையில் மரணித்துத் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவின் விலாவில் ஈட்டியாற் குத்தினான்.

அவன் அண்ணாந்து ஈட்டியாற் குத்தியபோது, குத்திய காயத்திலிருந்து வழிந்த தண்ணீர் கலந்த இரத்தத் துளி அவன் கண்களிற் பட்டது. அந்தக் கணமே அவன் கண்கள் குருடாகின.

ஆனால் லொஞ்சினூஸின் மனக்கண் திறந்துவிட்டது. குற்றமற்றவரைக் கொன்றுவிட்டேன்’ என்ற உணர்வு பொறி தட்டியதும், அவன் ‘கொல்கொத்தா’ மலையிலி ருந்து இறங்கி யெருசலேம் நகர வீதிகளிற் புலம்பிக் கொண்டே ஓடினான். சில நாட்களாக ‘மாசற்ற செம்மறியைக் கொன்றுவிட்டேன்’ என்று புலம்பிக் கொண்டே தன் ஈட்டியோடு நகர வீதிகளில் அலை கிறான்.

ஊரெல்லாம் அதிசயமாகப் பேசிற்று. இயேசு இறந் ததும் எங்கேயோ சென்று ஒளித்திருந்த அவரின் சீடர்கள் திடீரென வெளிவந்து தங்கள் குருநாதரின் போதனை களைப் போதிக்கிறார்களாம் ரோமப் பேரரசுக்கோ அல்லது பிரதான குருக்களுக்கோ, ஆசாரியர்களுக்கோ எவருக்குமே பயப்படாமற் போதிக்கிறார்களாம்.

லொஞ்சினூஸின் காதுகளிலும் இச்செய்திகள் விழுந்தன.

”குற்றமற்றவரைக் கொன்றுவிட்டேன்” என்று மனம் புழுங்கிப் புலம்பிக் கொண்டிருந்த லொஞ்சினூஸ் அச்செய்தியைக் கேட்டதும் ஓட்ட ஓட்டமாகச் செபக் கூடத்தை நோக்கி ஓடினான்.

அங்கே இயேசுவின் பிரதம சீடரான சீமோன் என்கிற பேதுரு பேசிக் கொண்டிருந்தார்.

லொஞ்சினூஸ் தன் ஈட்டியுடன் சனக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறுகிறான். சனக்கூட்டம் அவனுக்கு வழிவிட்டுக் கொடுக்கிறது.

முன்னேறிய லொஞ்சினூஸ் பிரசங்கித்துக் கொண்டி ருந்த பேதுருவின் கால்களில் விழுந்து, ‘குருவே; குற்ற மற்ற உங்கள் குருநாதரைக் காட்டிக் கொடுத்து. அவரைச் சித்திரவதை செய்து, சிலுவையிலறைந்து கொன்ற இந்தப் பாவியை மன்னியுங்கள் குருவே” என்று ஓலமிட்டு அழுதான்.

பேதுரு தன் பிரசங்கத்தை இடைநிறுத்தி தன் காலடி யில் விழுந்து கிடந்த லொஞ்சினூசினின் தலையிற் தன் வலக்கையை வைத்து “எழுந்திரு. பரமபிதாவின் குமார பாவங்களை ரான கிறீஸ்துவின் பேரால் நான் உன் மன்னிக்கிறேன்” என்றார்.

லொஞ்சினூஸ் எழுந்து நின்றான். எழுந்து நின்ற போது அவன் குருடனல்ல.

(ஆதாரம்: சென்னை மறை மாவட்டக் குரு முதல்வர் அருட்திரு ஆ. ஜோ. அடைக்கலம் அடிகளார் எழுதிய பலஸ்தீனப் பயணங்கள் என்ற நூல்)

– வீரகேசரி 1992

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *