இழுபறி





தொன்மையான ஒரு விளையாட்டு ‘ வடக்கயிறு இழுத்தல் . அந்தப் பெருங்கயிறை இழுப்பதற்கு, இந்தப் பக்கம் பத்துப் பேர், மறுபக்கம் பத்துப் பேர் ‘முறுக்கிக்’ கொண்டு நிற்பார்கள், ஒட்டுமொத்தமாக பத்துப்பேரையும் வீழ்த்துவதே விளையாட்டு. சிறிது நேரத்துக்கு ‘இழுபறி’யாகத்தானிருக்கும்.

அப்படித்தான் மணப்பெண்ணாகப் போகிற ரோஸலின் வீட்டாருக்கும் மணமகனாகப் போகிறேனென்று மார் தட்டிக்கொண்டிருக்கும் பெஞ்சமின் வீட்டாருக்கும் இழுபறியாக இருந்தது.
ரோஸலின் பெங்களூர் – ஒயிட் பீல்டு பகுதியில் ஓர் அப்பார்ட்மெண்டில் மின்தூக்கியில் போய் வந்து கொண்டிருக்கும் ஓர் ஐ .டி ஊழியர். மிதமான சம்பளம். இதமான க்ளைமேட். பெங்களூரை உதறிவிட்டுச் செல்ல விருப்பமில்லை.
இனி… மாப்பிளைத் தம்பியை எடுத்துக் கொண்டால்,ரொம்பத்தான் முறுக்குகிறார்!
இருக்கத்தானே செய்யும். அவனும் இலட்சத்தில் கை நனைக்கிற ஆசாமிதான்.
‘நீ இப்படிப் பேசுடா’ என்று சொல்லிக் கொடுப்பதற்கு ஆட்களா இல்லை?
‘அதெப்படி முடியும்.. பொண்ணைக் கட்டிக்கொடுத்துட்டா, மாப்பிளை இருக்கற பக்கம் போவதுதானே நியதி’
வாட்ஸ் அப் கால் பறந்தது. இருவரும் வடக்கயிறு இழுத்தார்கள். அவ்வளவு சீக்கிரம் ரிசல்ட் கிடைத்து விடுமா என்ன…
இத்தனைக்கும் இருவரும் முகநூல் நண்பர்கள்! சாட்டிங்குக்குப் பஞ்சமில்லை. ‘நான் லைலா – நீ மஜ்னு’ என்றார்கள். ‘அம்பிகாபதி – அமராவதி, ரோமியோ- ஜூலியட்’ என்றெல்லாம் வசனம் படித்தார்கள். அவ்வளவு அமரத்துவம் வாய்ந்த நட்பு! காதலர் தினத்துக்கு புரொபெசனல் கூரியரில் ‘ரோஜாக் கூட்டம் ‘ பரிமாறப்பட்டது.
என்ன இருந்தாலும் … இந்த உலகம் காதலர்கள், காதலர்களாகவே இருக்கத்தான் விரும்புகிறது.
இந்த விஷயத்தைக் கொஞ்சம் ‘ஆற’ ப்போட்டால் என்ன என்று யாரோ சொல்லப்போக அது பலித்தும் விட்டது .
கம்பெனி பெஞ்சமினை ஆறு மாத காலத்துக்கு இலண்டனுக்கு அனுப்பியது . பெஞ்சமினுக்குக் கொஞ்சம் மனசு இளகியது. ரோசலினை பெங்களூர் – கெம்பெகவுடா பன்னாட்டு விமான தளத்துக்கு வரச்சொன்னான். சந்தித்தார்கள். குலாவினார்கள். கத்தினார்கள். கூல் ஆனார்கள்.
அலுமினியப் பறவை மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
இந்த எதிர்பாராத இடைவேளையில், இரண்டு வீட்டாரும் புத்தியாய் யோசிக்க ஆரம்பித்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் போதகர் சாம்சனை அணுகினார்கள். அவர் எக்ஸ்ட்ராவாக அல்லையன்ஸ் வேலையும் செய்து கொண்டிருந்தார். அடிக்கடி பெங்களுர் போய் வந்தார். சைடில் சொந்த காரியத்தையும் முடித்துக் கொண்டார் .
எப்படியோ ரோசலினை ‘மடக்கி’ சென்னைக்கு இழுத்துக் கொண்டு வரும் அளவுக்குப் பேச்சு வார்த்தை சுபமாக முடியும் தருணத்தில், ஆறு மாதம் போனதே தெரியவில்லை.
இலண்டன் போன மாப்பிள்ளை பெஞ்சமின் கொஞ்சம் வழி மாறிப் போய்விட்டது போன்ற ‘கச முச’ செய்திகள் ‘லீக்’ ஆக ஆரம்பித்தது. நிஜத்திலேயே தம்பி வெள்ளைத் தோலுக்குத் தாவி…!
ரோஸலின் பொங்கியெழுந்தாள். தமிழ்ப் பொண்ணாயிற்றே!
ஓ ஒ! வரட்டும்…. ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸ் அப் அது இதுன்னு அந்த வெள்ளைக்காரியை உண்டு இல்லைன்னு பண்றேன்!’
மீண்டும் இழுபறி!
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |