இளமையின் விலை
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 6,279
அவர்களை இறக்கி விட்டு சென்ற விண்கலத்தின் ஒலி தூரத்தில் கரைய, எட்டு பேர்களும் AR13P என்ற வேற்றுக்கிரகத்தின் மேற்பரப்பில் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தனர். அந்தக் கிரகத்தின் இரண்டு சூரியன்களும் அடிவானத்தில் மெதுவாக எழும்பிக் கொண்டிருந்தன.
“ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டோம்,” தும்பைப் பூ போன்ற வெளுத்த முடி கொண்ட அறுபது வயது பெண்மணியான லக்ஷ்மி கிசுகிசுத்தாள். “இந்த பயணத்திற்காக செலவழித்த கோடிக்கணக்கான பணத்திற்குப் பிறகு…”
“சரி, சரி. நாம் ஒரு மூச்சைக் கூட வீணடிக்கக் கூடாது,” என நடுத்தர வயது கோபால் சிரித்தார். “இங்கு நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்!”
அவர்களின் வழிகாட்டியான டாக்டர் சர்மா தன் குரலை உயர்த்தினார். “எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரகத்தின் காற்றை சில நிமிடங்கள் நீங்கள் சுவாசித்தால் அது உங்கள் வாழ்க்கையில் இருந்து சில நாட்களை கழிக்கும். உங்களை சற்றே இளமையாக்கும். நமக்கு இங்கே 24 மணி நேரம் இருக்கிறது, எனவே நீங்கள் சாதாரணமாக மூச்சு விடலாம். எந்த அவசரமும் இல்லை.”
எல்லோரும் அவரவர்களின் அறைகளுக்கு சென்று குளித்து உடை மாற்றி காலை உணவை உண்ட பின், அந்த இடத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள். ஊதா நிற புல்வெளிகளின் நடுவில் சூரிய ஒளி நடனமாடிக் கொண்டிருக்க, தொலைவில் விழுந்து கொண்டிருந்த அருவியின் இடை விடாத சப்தம் காற்றில் கலந்திருந்தது.
மதிய உணவிற்குப் பின், 75 வயதான ராபர்ட் வியப்புடன், “ஓ! என் மூட்டு வலி கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை உணர முடிகிறது.” என்றார்.
அவரது மனைவி மேரி புன்னகைத்தார். “உங்கள் தாடி கூட கொஞ்சம் கொஞ்சமாக கருக்க ஆரம்பித்திருக்கிறது!”
நேரம் செல்ல செல்ல, எல்லோர் உடலிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. சித்ராவின் கன்னத்து சுருக்கங்கள் ஆங்காங்கே கரைய ஆரம்பித்திருந்தன. சுந்தரத்தின் வழுக்கையில் மீண்டும் முடி முளை விட்டுக் கொண்டிருந்தது. ராபர்ட் நிமிர்ந்து நின்று, புதிய சுறுசுறுப்புடன் நடமாடினார்.
“கடந்த பல வருடங்களில் இந்த அளவிற்கு புத்துணர்ச்சியை நான் உணர்ந்ததேயில்லை,” என்றார் சுந்தரம் ஓரிடத்தில் ஜாகிங் செய்தபடியே.
“கவனமாக,” என டாக்டர் சர்மா எச்சரித்தார். “உங்கள் உடல் இளமையாக உணரலாம், ஆனால் உங்கள் மனம் இன்னும் இதற்கு பழக்கப்படவில்லை. அதிகப்படியாக எந்த செயலையும் செய்யாதீர்கள்.”
கிரகத்தின் மூன்று நிலவுகளின் குளுமையான ஒளி வீசும் இரவு வந்தபோது, குழு ஒரு போர்டபிள் ஹீட்டரைச் சுற்றி கூடியது.
“என் கை விரல்களைப் பார்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது,” என 40 வயதான, எல்லோரைக் காட்டிலும் இளையவரான சித்ரா வியந்தார். “என் திருமண மோதிரம் இப்போது கொஞ்சம் தளர்வாக இருக்கிறது.”
“எனக்கு ஒரு சந்தேகம்,” என ஆரம்பித்தார் சுந்தரம். “நாம் எதிர் பார்த்ததற்கும் மேலாக ரொம்பவே இளமையாகி விட்டால் என்ன செய்வது?”
“அதற்காகத்தான் நாம் இங்கு இருக்கும் நேரத்தை கட்டுப்படுத்துகிறோம்,” என்று உறுதியளித்தார் டாக்டர் சர்மா. “நாளை காலை நாம் இங்கிருந்து கிளம்பி விடுவோம். அப்போது உங்கள் ஒவ்வொருவர் வயதிலிருந்தும் சுமார் பன்னிரண்டு வருடங்கள் கழிக்க வேண்டியிருக்கும். பன்னிரண்டு வருடங்கள் இளமையாக இருப்பீர்கள். உங்கள் உடலில் கணிசமான ஒரு வித்தியாசத்தை உணருவீர்கள். ஆனால் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய வித்தியாசம் அல்ல அது.”
மறு நாள் காலையில் குழு உற்சாகத்துடனும் மீட்டி எடுத்த இளமையுடனும் அங்கிருந்து கிளம்பத் தயாரானது .
விண்கலத் துறைமுகத்தில் எல்லோரும் சூட்கேசுகளுடன் கூடியபோது, டாக்டர் சர்மா, “குட் மார்னிங். எல்லோரும் ஓகேயாக இருக்கிறீர்களா? உடலில் பிரச்னை ஏதும் இல்லையே?” என்று கேட்டார்.
எல்லோரும் உற்சாகமான கண்களுடன் தலையசைத்தார்கள். அவர்களை பூமிக்கு அழைத்துச் செல்லும் பிக்கப் விண்கலத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் அந்தக் கிரக நேரப்படி காலை 8 மணிக்கு வர வேண்டிய பிக்கப் விண்கலம் வர முடியவில்லை. பெரிய போக்குவரத்து நெரிசலில் சிக்கி விண்கலம் ஆறு நாட்கள் தாமதமாக வந்திறங்கியது.