இளமைக் கோலங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2025
பார்வையிட்டோர்: 1,803 
 
 

(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-28

அத்தியாயம்-22

மகேந்திரன் சுவர்ணாவை மணமுடித்துக் கொண்டு அவளது வீட்டிற்கே குடிபோய்விட்டது திருவாட்டி வெங்கடாசலத்தைப் பொறுத்தவரை தான் பெரிய இழப்பாக இருந்தது. மாதா மாதம் கிடைத்து வந்த ஐம்பது ரூபாயில் துண்டு விழுந்துவிட்டதே! இதையிட்டுத் தனது திருவாளரிடம் அவள் அடிக்கடி குறைபட்டுக் கொண்டாள். அந்த மனிசனும் தன் அடிசிற்கினியாளின் சொற் தவற முடியாமல் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் அறையில் ‘வேக்கன்ற்’ இருப்பதாகச் சொல்லி வைத்தது. 

இரண்டு பேர் மாத்திரம் சீவிக்கக்கூடிய அறையில், நாங்கள் மூன்று பேரும் நண்பர்கள் என்ற முறையில் – வேறு அறையும் கிடைக்காமற் போனதால் ஒருவாறு ‘அட்ஜஸ்ட்’ பண்ணி இருந்து காட்டியதுதான் தவறு என்று ஜெகநாதன் சொன்னான். முன்னர் இரண்டுபேர்தான் வாடிக்கை. ‘சரி, இனி என்ன செய்வது? எங்களுக்குத் தெரிந்த யாரையாவது சேர்த்துக் கொள்ளலாம்’ எனச் சிவகுமார் கூறினான். பஞ்சலிங்கத்தார் இந்த விஷயம் அறிந்ததும் வருவதற்கு விருப்பம் தெரிவித்தார். தற்போது குடியிருக்கும் அறைக்கு நூறு ரூபா அழவேண்டியிருப்பதால் சற்றுக் குறைந்த விலையில் ஓர் அறை அவருக்குத் தேவைப்பட்டது. 

மூன்று கட்டில்கள் போடுவதற்கு இடம் போதவில்லை. ‘பரவாயில்லை’ என்று கட்டிலைப் பொருத்தாமல் ஒரு பக்கமாகக் கட்டிப்போட்டார் ‘ஒரு பாய் வேண்டினாற் சமாளித்துவிடலாம்’ என்றார். தவிர இப்படியொரு பொதுவான அறையில் கட்டில் பாவிப்புக்குட்படாமல் இருந்தால் பழுதடையாமலும் இருக்கும் என அந்தரங்கமாகக் கருதினார். முன்னைய அறையில் தனிக்குடித்தனம். அவர் வந்து அறையைத் திறந்து சரியும்வரை அந்தக் கட்டில் அவருக்காகவே விசுவாசமாகக் காத்திருக்கும். 

தனது சமையலுக்கென ஒரு பக்கத்து மூலையை ஒதுக்கி எண்ணெய் அடுப்பையும் தட்டுமுட்டுச் சாமான் பெட்டியையும் வைத்தார். “தம்பியவையள், நான் சைவம் கண்டியளோ!…. உங்களோடை ஒத்துவராது… என்ரை கையாலை சமைச்சாத்தான் மனமாய்ச் சாப்பிடுவன்…” எனக் காரணம் சொன்னார். ஆனால், அதுகூடப் பொருளாதார ரீதியான ஓர் ஏற்பாடுதான் என்று தோன்றியது இவர்களுக்கு. ‘தனிய என்றால் எதையும் சமைக்கலாம் ஒரு பச்சடியுடனும் சாப்பிடலாம்!’ 

“சரியான கசவாரம் மச்சான்… உந்தக் குணத்துக்குத் தான் எல்லாப் பிள்ளையளும் பெட்டையளாயே பிறந்திருக்குது” என ஜெகநாதன் சிவகுமாரின் காதில் முணுமுணுத்தான். 

பஞ்சலிங்கத்தாரைப் பொறுத்தவரை இந்த அறை கிடைத்தது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கிடைத்த கதை. ஜெகநாதனோடு படிப்படியாகக் கதைத்து அவனது மனதை மாற்ற வேண்டுமென்பது ஒன்று – ஊரிலிருந்து மனைவி எழுதுகின்ற எல்லாக் கடிதங்களிலுமே அதைப் பற்றிக் குறிப்பிடுகிறாள்; ‘அந்தப் பெட்டையும் தனிய எவ்வளவு நாளைக்கென்றுதான் இருக்கும்? பெடியனோடை கதைச்சுப் பாருங்கோ. அதுகள் இஞ்சை அடிக்கடி வந்து பெரிய கரைச்சலாய் இருக்கு’ யாருக்காக இல்லாவிட்டாலும் மனைவிக்காகவென்றாலும் இந்த விஷயத்தைத் திரும்பவும் ஒப்பேற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டார் – ‘பெண்சாதி பகுதியில் சம்பந்தம் பேசி வைத்தால் இதுதான் கரைச்சல்.’ 

மற்றது சிவகுமார் விஷயம், சிவகுமாரைப்போல ஒரு தங்கமான பிள்ளை எங்கே கிடைக்கப் போகிறான்? அரசாங்க உத்தியோகம். சோலி சுரட்டுக்குப் போகாதவன். தானுண்டு தன்பாடுண்டு என்று இருப்பவன். தன் மூத்த மகள் லலிதாதேவியோடு அவனை ஒப்பிட்டுக் கற்பனை செய்து பார்த்தார்; ‘நல்ல தோதான மாப்பிள்ளை.’ 

“தம்பி சிவகுமார்… நீர் யாழ்ப்பாணத்திலை எந்த இடம்?” என்று கேட்டார். இடத்தைக் கூறியதும் அண்மையில் இருக்கின்ற தனக்குத் தெரிந்த யாரையாவது நினைவுபடுத்திக் கொண்டு, ‘இவரைத் தெரியுமா?’ ‘அவரைத் தெரியுமா?’ எனக் குடையத் தொடங்கிவிடுவார். எப்படியாவது தனக்குத் தெரிந்த யாராவது அவனுக்கும் தெரிந்திருந்தால் அதன் மூலம் தங்களுக்கிடையில் உள்ள நட்பை (அல்லது உறவை) இன்னும் நெருக்கமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணந்தான். 

“தம்பி… உமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு… சாதகக் குறிப்பைக் கொண்டு வாரும்… பார்த்துச் சொல்லுறன்” என அவனது கையைப் பிடித்துப் பார்த்துச் சொல்லுவார். 

“அண்ணை… உங்களுக்குச் சாத்திரம் பார்க்கவும் தெரியுமோ?” அவனது ஏளனம் அவருக்குப் புரியாது. 

“ஓம்… கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என அடக்கமாகப் பெருமையடித்துக் கொள்வார். 

“ஆனால், எனக்கு இதுகளிலை நம்பிக்கையில்லை” என அவன் ‘சப்’பென சம்பாஷணையை முறித்துக் கொள்வான். அவர் விடமாட்டார். 

“இல்லை… அதுகளிலையும் உண்மையிருக்கு…” என கதையை வளர்த்து வளர்த்து – ‘அப்பாடா!…. இந்த உலகம் எப்போ உருப்படப் போகுது’ – என அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்துவார். 

ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு வந்த பொழுது லலிதாவைக் கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டார். “பிள்ளை… கொழும்பு பார்க்க வேணுமெண்டு அடிக்கடி ஆசைப்பட்டவள் தம்பி… இப்ப பள்ளிக்கூடங்கள் விடுதலைதானே… மற்றவையளை தாய்க்கு உதவியாய் இருக்க விட்டிட்டு இவளைக் கூட்டி வந்திட்டன்” எனக் கூறிவிட்டுக் காரணமில்லாமல் சிரித்தார். அதில் சிரிப்பதற்கு என்ன ‘ஜோக்’ இருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. 

மகளுக்குச் சிவகுமாரை அறிமுகப்படுத்தினார். அவனைப் பற்றி மிகையாகவே கூறினார். 

லலிதா ஒரு பாவமும் அறியாமல் நின்றாள். ஓர் அந்நிய ஆடவனுடன் முதல் தடவையாக அறிமுகமாகின்ற கூச்சம் இல்லை. அப்பாவின் ஒரு நண்பரைச் சந்திக்கின்ற மரியாதையே அவளது பார்வையில் நிறைந்திருந்தது. 

லலிதா கொழும்பிலே நிற்கின்ற நாட்களில் அகிலாவோடு தங்குவதற்கு சிவகுமார் மூலமாக ஏற்பாடு செய்தார் பஞ்சலிங்கத்தார். மாலைகளிலும் லீவு நாட்களிலும் எங்கேயாவது வெளிக்கிடும் பொழுது சிவகுமாரையும் வற்புறுத்தி அழைப்பார். அவனுக்குப் பெரிய சங்கடமாகப் போய்விடும். ‘என்ன மனிசன் இவர்?’ என்ற எரிச்சலும் ஏற்பட்டது. ஆனாலும் வெளிக்காட்டாது நடந்து கொண்டான். சில இடங்களுக்குச் செய்வதறியாமல் அவர்களோடு இழுபட்டான். 

இதையெல்லாம் கவனித்த ஜெகநாதன், “மச்சான்… பஞ்சலிங்கத்தார் மாப்பிள்ளை பிடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார் போலையிருக்கு… மாட்டுப் பட்டிடாதை!” என்று விளையாட்டாக எச்சரிக்கை செய்தான். ஆனால் ‘சிவகுமார் உண்மையிலேயே அதிஷ்டக்காரன்’ என்ற ஒருவித பொறாமையும் அவனுள் எழுந்தது; இவ்வளவு போட்டியும் பொறாமையும் தனக்கு இல்லையே? 

எப்படியாவது அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைப்பதற்குப் படாதபாடுபட்டார் பஞ்சலிங்கத்தார். ஆனால் அவனோ வளைகின்ற பாட்டைக் காணவில்லை. அகிலா வீட்டிற்கு அடிக்கடி போகின்றவன், இப்பொழுது லலிதா இருக்கும் நேரங்களில் போவதையும் தவிர்த்துக் கொள்கிறான். அவள் இந்தப் பக்கம் அப்பாவோடு கதைப்பதற்கு வந்துவிட்டால் இவன் அங்கே போய்விடுவான்.

இவனுக்கு என்ன வந்தது? எந்நேரமும் அகிலாவே கதி என்று கிடக்கிறான். அவளும் எவ்வளவு உரிமையாக இவனோடு நடந்து கொள்கிறாள். சில வேளைகளில் இவனது உடைகளைக் கூடக் கழுவிக் கொடுப்பதையும் பஞ்சலிங்கத்தார் ‘நோட்’ பண்ணியிருக்கிறார். 

எல்லோரும் சொல்வதுபோல ‘சங்கதி அதுதானோ?’ என மனவருத்தத்தோடு இரை மீட்டுப் பார்த்தார். அகிலாவின் ‘கறெக்ரர்’ கூடச் சரியில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறாரே! இவன் ஏன் அநியாயமாக அங்கேயே மாண்டு போகப் போகிறான்? 

“தம்பி… நீர் ஒரு ஆம்பிளை, அவள் குமர்ப்பெட்டை இருக்கிற வீட்டிலை அடுகிடை படுகிடையாய்க் கிடந்தால்…பாக்கிறவங்கள் என்ன சொல்லுவாங்கள்?… அந்தப் பெட்டையின்ரை பழக்கவழக்கங்களும் அவ்வளவு சரியில்லையெண்டு கேள்வி”-எனப் புத்தி சொல்லிப் பார்த்தார். 

“நீர் இப்படித் திரியிறதை அறிஞ்சால் உம்மடை தாய் தேப்பன் என்ன சொல்லுவினம்?…உவையள் ஆர்ஆக்கள்… என்ன சாதி எண்டுகூட அறியாமல் திரியிறீர் போலை கிடக்கு.” 

“அவையள் எப்படியாவது இருந்திட்டுப் போகட்டும்… உங்களுக்கேன் அந்தக் கவலை?” என அவன் சினங்கொண்டு சில வேளைகளில் கேட்பான். 

“அவள்…ஒபிசிலையும்… ஒருத்தனோடை ‘கொனெக்சன்’ என்று கேள்விப்பட்டிருக்கிறன் கண்டியோ? உம்மட நன்மைக்குத் தான் சொன்னனான். யோசித்து நட.” 

ஒருத்தனோடு மாத்திரம் அவளைச் சம்பந்தப்படுத்தி மிச்சம் விட்டது பெரிய காரியம்தான் என நினைத்தான் சிவகுமார். அவரது செயல்கள் ஒரு பக்கம் சிரிப்பையும் மறுபக்கம் எரிச்சலையும் ஊட்டின. 

அத்தியாயம்-23

கடல் அமைதியாகக் கிடக்கிறது. எப்போதாவது ஒரு நாளைக்கு இந்தக் கடல் சோகமாய் இருப்பதைக் காணலாம். யாருடனோ கோபித்துக் கொண்டதுபோல மௌனம் சாதித்துக் கொண்டிருக்கும். அட்டகாசமாகச் சிரிப்பதுபோல இரைந்து கொண்டு ஓடிவருகின்ற கடல் இப்படிச் சும்மா இருப்பதைக் காண கவலையாயிருக்கிறது என எண்ணினான் சிவகுமார். எனினும் இது மனது நாட்டம் கொள்கிற கவலை தரக்கூடிய அமைதி. நெருக்கமும் இரைச்சலும் திணறடிக்க வைக்கிற கொழும்பில் இந்தக் கடல்தானே மனதுக்கு ஓர் ஆறுதல்? கடலுக்கு அண்மையாக அறை கிடைத்தது எவ்வளவு வசதியாய்ப் போய்விட்டது? இப்பொழுது சில நாட்களாக அதிகாலையிலே இந்தக் கடற்கரைக்கு வந்து ஒன்றுமே பேசாமல் ஒரு கல்லில் உட்கார்ந்திருப்பதைத்தான் மனது விரும்புகிறது. யாருடன்தான் கதைப்பது? அகிலா கோபக்காரியாகி விட்டாள். இரண்டு மூன்று நாட்களாக அகிலா அவனோடு கதைக்காமலிருக்கிறாள். இந்தக் கல்லில் வந்து இருந்துகொண்டு, ‘அவள் ஏன் இப்படி மாறினாள்?’ என்று சிந்தித்து முடிவெடுப்பதற்குள்ளே மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. இதைப் போய் ஏன் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும்? ஒன்றும் புரியவில்லை. எப்போதும்போல மனதைத் திறந்து கதைக்காமலிருப்பதே பெரிய குறையாக இருக்கிறது. இவனது பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு சொல்லுவாள். கவலைகளைத் தேற்றுவாள். சிவகுமாரும் அவள் விஷயங்களில் இதேயளவு பங்கு எடுத்திருக்கிறான். இப்பொழுது என்ன நடந்துவிட்டது? காரணம் கேட்டால் ‘ஒன்றுமில்லை’ என்று பேச்சை வெட்டி விடுகிறாள். 

“அகிலா! ஏதோ காரணம் இருக்கு இல்லாட்டி இப்படி இருக்க மாட்டீங்கள். மனசைத் திறந்து கதைச்சால் கவலை தீரும்… உங்கடை கவலை என்னவென்று எனக்குச் சொல்லக்கூடாதா?” ‘எனக்கு’ என்பதில் அழுத்தம் கொடுத்தே கதைத்தான், ‘எந்தப் பிரச்சினை களையும் என்னோடு தானே மனம்விட்டுப் பேசியிருக்கிறாய்’ என்பதை நினைவூட்டுவதற்காக. 

“இந்த உலகத்திலை ஆரைத்தான் நம்பேலும்?” விரக்தியான பதில். என்ன இது? அவனை அகிலா நம்பவில்லையா? இது ஒரு தாங்க முடியாத கவலை. அவள் விஷயத்தில் அவன் எவ்வளவு நேர்மையாக நடந்திருக்கிறான். தன்னைப் பூரணமாக அவள் புரிந்து வைத்திருக்கிறாள் எனவும் நம்பியிருக்கிறான். ஆனால் தனது நம்பிக்கை வீண் என்று அறிய வரும்பொழுது எவ்வளவு கவலையும் ஆத்திரமும் பொங்கி வருகிறது. தன்னைச் சந்தேகிக்கிறாளா? தவறான நோக்கத்தோடு தான் அவளோடு பழகுவதாகக் கருதுகிறாளா? 

யார் என்ன பழியைச் சொல்லிவிட்டுப் போனாலும் அது வேலையற்ற வீணர்களின் செயல் என்று கவலைப்படாமலிருக்கலாம். தங்களைப் புரிந்து வைத்திருக்கிற ஒருவர் என்று கருதப்படுகின்ற ஒருவரே அந்தப் பழியைச் சொல்லும் பொழுதுதான் தாங்க முடியாமலிருக்கிறது. எப்படித்தான் அவளால் இவ்வாறு கருத முடிகிறது? 

அவளது பிரச்சினைகளையும் சுமைகளையும் அறியும் பொழுது மனப்பூர்வமாக இரங்க முடியுமானால் அவளுக்கு வேறு எந்தத் துரோகம் செய்ய மனம் வரும்? சகோதரத்துவத்திலிருந்து இம்மியளவுகூடப் பிசகாமல் பழகியதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லையா? 

ஒருவேளை ராஜேசன்தான் அவளைத் தன்னோடு கதைக்க வேண்டாம் என்று கூறியிருப்பானோ? அதற்காகத் தான் அவள் இப்படியெல்லாம் நடந்து கொண்டு தன்னைக் கைகழுவிவிட எண்ணியிருக்கிறாளோ? அது நியாயமாகத் தோன்றினாலும் அந்த நிலையில் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தான் என்ன தவறு செய்ததற்காக இப்படிப் புறக்கணித்து விடுகிறாள்? இனிச் சீவியம் முழுதும் அவளோடு கதைக்கவே கூடாதா? அவளைக் காணவே கூடாதா? 

“அகிலா நீங்கள் என்னோடை கதைக்க விரும்பமில்லாவிடில்… இஞ்சை வர வேண்டாம் என்றா சொல்லுறீங்கள்?” 

“ஆரு சொன்னாங்க அப்படி?… எனக்கு மனம் சரியில்லை… ஆரோடையும் கதைக்க விருப்பமில்லை… இங்கை அம்மா இருக்கிறாங்க… வந்து கதைக்கலாம்தானே?” 

அவளே கதைக்க வேண்டாம் என்று சொன்ன பிறகு அந்த வீடு எதற்கு ? அம்மாவைக்கூட ஒரு சாட்டுக்காகத்தான் சொல்லியிருக்கலாம் – அப்படிச் சொன்ன பிறகும் ஏன் ரோஷம் கெட்டவனைப்போல அங்கே செல்ல வேண்டும்? 

“அகிலா நான் எந்தவிதமான கூடாத எண்ணத்தோடையும் பழகயில்லை… ஆனால்… நீங்கள் இப்படி என்னை வெறுத்து ஒதுக்கிறீங்கள்…. நான் போறன்… இனி நீங்கள் நினைக்கிற மாதிரி கரைச்சலும் தர வர மாட்டன்… நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறன். ஒருவிதமான பிரதி பலனையும் எதிர்பாராமல் தான் மனநிறைவோடை செய்திருக்கிறன். ஆனால், உங்கள்ஒருத்திக்குத்தான் கடமைப்பட்டிட்டன். என்னையறியாமலே, நீங்கள் செய்த உதவிகளையெல்லாம் ஏற்று ஏற்றுக் கடனாளியாயிட்டன்… அதையெல்லாம் எப்படித் தீர்க்கப் போறனோ என்ற கவலையோடைதான் போறன்” என்று சிவகுமார் கண்ணீருக்கிடையே கூறினான். 

அதைக் கேட்டு அவள் அழுதாள். அவன் அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டான். வரும்பொழுது ‘இப்படித் தன்னைச் சந்தேகிக்கிறாளே’ என்ற வருத்தமும் இருந்தது. 

ஆனால், இப்படித் தனிமையாயிருந்து சிந்திக்கும் பொழுது, அவள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று தோன்றுகிறது. மற்றவர்கள் பேசுகிற கதைகளையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு நாட்களும் தன்னோடு களங்கமில்லாமற் பழகியதே அவளது பெருந்தன்மையைத்தானே உணர்த்துகிறது? தான் அவளோடு பழகியதே எவ்வளவு தவறு என்று இப்பொழுது புரிகிறது. அது தன் வாழ்க்கையையே அல்லாமல் அவளது வாழ்க்கையைத் தான் கூடப் பாதிக்கும் என்பதை முன்பு உணர முடியவில்லை. இப்பொழுது அப்படித்தான் ஏதாவது நடந்திருக்குமோ? ராஜேசன் நிச்சயமாக அவளைச் சந்தேகப்பட்டிருப்பான். ‘கடவுளே! அப்படி இருக்கக்கூடாது. 

அதிக நாட்களுக்குப் பிறகு அவன் கடவுளை நினைத்தான். அதுகூட அவளுக்காகத்தான். அவளது வாழ்க்கை சீர்குலைந்து நடுத்தெருவில் நின்றால் அதற்குக் காரணம் தான்தானே எனக் கருதிக் குழம்பினான். அவள் நடுத்தெருவில் அபலையாக நிற்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. தன்னலம் கருதாமல் உதவிகளைச் செய்தாள். தன்னை ஒரு குழந்தையைப் போலக் கருதி எவ்வளவு ஆதரவாகத் தேற்றியிருக்கிறாள். அவளை ஒரு தாயின் ஸ்தானத்தில் தான் கருத முடிகிறது. அப்படியே போய் அவளது கால்களைத் தொட்டு வணங்க வேண்டும் போன்ற உணர்வு பொங்கி வந்தது. 

கடல் ஏதோ நினைத்துக் கொண்டதுபோல மெல்ல அலைவீசி, வரத் தொடங்கியது. இப்படி மனதுக்குள் அடக்கி வைத்திருப்பதும், பின்னர் எண்ணங்கள் குமுறலெடுக்கும்பொழுது ஒரு முடிவைக் காண வேண்டுமென்ற ஆவேசத்துடன் பொங்கி வருவதும் கரையைத் தொட்டதும் தொடர்ந்து வரத் துணிவில்லாத கோழையாகி மீண்டும் அடங்கிப் போய் விடுவதுமான காரியத்தைத்தான் கடலும் செய்து கொண்டிருக்கிறது போலும் – இப்பொழுது காற்றடிக்கத் தொடங்கியிருக்கிறது. 

‘வேலைக்குப் போக நேரமாகிவிட்டது!’ என்ற நினைவில் எழுந்து அறைக்கு வந்தான். மகேந்திரன் இருந்தால் இப்பொழுது எவ்வளவு ஆறுதலாயிருக்கும்! மனைவி வீட்டுக்குச் சென்ற பின்னர் அவன் வருவதும் குறைவு! ‘மனிசியைக் கண்டதும் எங்களையெல்லாம் மறந்துவிட்டான்’ என எண்ணியவாறு இன்று மாலையில் போய் அவனைச் சந்திக்க வேண்டுமென்ற நினைத்துக் கொண்டான். 

“என்ன தம்பி சிவகுமார்… ஒரு மாதிரி இருக்கிறீர்…. ஏதாவது பிரச்சினையா?” என பஞ்சலிங்கத்தார் கரிசனைப்பட்டார்! 

“ஒன்றுமில்லை!” 

“இல்லை… எனக்கு மறைக்காதையும்… ரெண்டு மூன்று நாளாய் கவனிச்சுக் கொண்டுதான் இருக்கிறன்… கண்டியோ!… அந்தப் பக்கம் போறதுமில்லை… உம்மட முகமும் சரியில்லை.” 

அவன் ஒன்றுமே பேசாமல் அலுவலகத்துக்கு வெளிக்கிட்டுச் சென்றான். 

மாலை அலுவலகம் முடிந்து மகேந்திரனைச் சந்திக்கச் சென்றபொழுது அவன் இருக்கவில்லை. அறைக்குத் திரும்பினான். கடந்த சில நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் சற்று நேரத்தோடு போகிறான். இல்லாவிட்டால் எங்காவது காலத்தைக் கழித்துவிட்டு இரவு பத்துப் பதினொரு மணிக்குப் பின்னர் தான் வந்து படுக்கையில் விழுவான். யாருடனாவது கதைக்க முற்பட்டால் தேவையில்லாத காரணங்களுக்கெல்லாம் கோபம் பற்றிக் கொண்டு வருகிறது. அதைத் தவிர்ப்பதற்காகத் தனிமை தேவைப்பட்டது. 

இன்று அவன் அறைக்கு வருகின்ற நேரத்திலேதான் அகிலாவும் அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்தாள். சிவகுமார் அவளைக் கண்டும் காணாதவன்போல நடந்து கொண்டிருந்தான். அது அவளுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘சிவா, இவ்வளவு ரோஷக்காரனா?’ 

அவன் அவளை விலத்திவிட்டு முன்னே நடந்து செல்வதைப் பொறுக்காதவளாய் விரைந்து நடந்தாள். 

“சிவா! சிவா!” என அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக அழைத்தாள். அந்தச் சத்தம் தொண்டையிலிருந்து பெரிய கஷ்டத்துடனேயே வெளிப்பட்டது. அதை முந்திக்கொண்டு அழுகை வந்து விடும் போலிருந்தது. அவள் அழைத்தது அவனுக்குக் கேட்கவில்லையோ என்னவோ, திரும்பிப் பார்க்காமலே நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைவதற்கு முன்னர் அவனோடு கதைத்து விடலாமென்ற துடிப்பிலே விரைவாக நடந்தாள். ஆனால், அவனும் வேணுமென்றே விரைவாக நடந்திருக்க வேண்டும். அது முடியாமற் போய்விட்டது. கதவைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தவன் இவள் வருவதே தெரியாதவன் போல கதவைச் சாத்திவிட்டு நகர்ந்தான். 

அகிலா கவலையோடு கதவைத் திறந்தாள். ஒரு ரோசாச் செடி அழகான மலரைப் பூத்திருந்தது. இப்பொழுது அதன் இதழ்களையெல்லாம் உதிர்த்துவிட்டுப் பரிதாபமாய்க் காட்சியளித்தது, அதன் தோற்றம் ரோசா முள்ளைப்போல அவள் கண்களைக் குத்தியது. அழகான மலருக்கு ஏன் நெடுங்காலம் சீவிக்கத் தெரியவில்லை? மிகப் பக்குவமாய் மெல்ல மெல்ல விரிந்து மலர்ந்த இதழ்களை இழந்துவிட எப்படி மனம் வந்தது? 

அத்தியாயம்-24

ஜெகநாதனுக்குப் பெண் குழந்தை பிறந் திருப்பதாகத் தந்தியில் செய்தி வந்தது. பெண் பிள்ளை என்றதும் சற்று முகச் சுளிப்புதான். ஆனால், அதையும் மீறத் தோன்றிய ஒருவித உற்சாகமான மனக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு ஒரு குழந்தை – தான் அப்பா என்ற உணர்வு ஒரு புதுமையான இன்பத்தை அளிக்கிறது. மண முடித்து மனைவியைப் பிரிந்து வந்து ஏழெட்டு மாதங்கள் தனிமையாக வாழ்ந்தாயிற்று. இந்த இடைக் காலத்தில் வெறுமையும், விரக்தியுணர்வும் தான் கண்ட பலன். இப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து ‘நீங்கள் எனக்கு அப்பா’ என்று சொல்லுகிறது. அது மழலை பொழிந்து வளர்ந்து சிரித்துச் சிரித்துத் தவழ்ந்து சின்னக் கால்களைப் பதித்து நடக்கப் போகிற நினைவுகள் அவனது மனதை அசைத்தன. 

அவள் இனித் தனது சொல்லுக் கேட்கிற ஒருத்தியாக மாறிவிடுவாளோ? குழந்தை பிறந்திருப்பதாகத் தந்தி அடித்திருக் கிறார்கள். அவளது விருப்பத்தின் பேரிலே தான் செய்திருப்பார்கள். அப்படியென்றால் தான் வருவதை அவள் விரும்புகிறாளோ? 

குழந்தையின் பக்கத்தில் படுத்திருக்கிற அவளது தோற்றம் நினைவில் வந்தது. அவளது முகத்தை கவலையோ அல்லது களைப்போ சோபை இழக்கச் செய்திருக்கிறது. தன்னைக் கண்டால் அந்த முகம் மலர்ச்சியடையும் என்று கற்பனை செய்தான். உடனடியாகப் போய் அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை பொங்கியது. 

இவ்வளவு நாட்களும் ஒரு கடிதம்கூட எழுதாமல் விட்டிருக்கிறாளே? ‘தலைக்கனம் பிடிச்சவள்’ என்ற கோபமும் அடுத்த கணமே தோன்றியது. ‘இப்பொழுது குழந்தை பிறந்த பிறகுதான் என்னைத் தேவைப்படுகிறது. விருப்பமென்றால் தேடி வரட்டுக்கும். நான் போகக்கூடாது’ என்று எண்ணினான். 

பஞ்சலிங்கத்தார் தருணம் அறிந்து கதைத்தார், “தம்பி… நடந்ததை மறந்திட்டுப் போய்ப் பிள்ளையைப் பார்த்திட்டு வாரும்… சும்மா நெடுகலும் பிடிவாதமாய் இருக்கக் கூடாது கண்டியோ!” 

அவன் பதில் பேசவில்லை. 

“பெண் மனசு தம்பி…! இந்த நேரத்திலை புருஷனைக் காணத்தான் துடிக்கும்… முந்திப் பலதும் நடந்திருக்கும்… இனி எல்லாம் சரி வரும். போட்டுவாரும்.” 

“சீவியத்துக்கும் வேண்டாம் என்றுதானே விட்டிட்டு வந்தனான்… பிறகேன் அந்தக் கதையளைக் கதைக்கிறியள்?” 

“உப்பிடி எவ்வளவு காலத்துக்கென்று இருக்கப் போகிறீர்?” 

“நான் ஆம்பிளைதானே? எப்படியும் இருப்பன்.” 

“உப்பிடிச் சொல்லாதையும் தம்பி… ஆண் என்றாப் போலை?… அவனுக்கும் ஒரு துணை தேவைதான்… கண்டியோ! உம்மடை மனுசியையும் குழந்தையையும் எவ்வளவு காலத்துக்கென்றுதான் விட்டிட்டு இருப்பீர்?” 

“எனக்கு ஒருத்தரும் தேவையில்லை!” 

“உப்பிடிச் சொன்ன எத்தனையோ பேரை நானும் கண்டிருக்கிறேன்…” 

மௌனமாக அவர்களது சம்பாஷணையைக் கவனித்துக் கொண்டிருந்த சிவகுமார் சொன்னான் : 

“ஜெகநாதன் இப்பிடி நீ பிடிவாதம் பிடிக்கிறதாலை ஆருக்கு லாபம்? கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து வாழப் பழக வேணும்.” “மச்சான்… நீயென்றால்கூட என்னைப் போல தான் செய்வாய்… சுய கௌரவத்தை விட்டிட்டுப் போகச் சொல்லுறியோ?” 

“அப்படி உன்ரை சுயகௌரவத்தைப் பாதிக்கக்கூடியதாய் என்னதான் நடந்தது?” 

“எத்தனையோ நடந்தது மச்சான்…. எல்லாத்தையும் சொல்லிக் கொண்டிருக்கேலாது. ஒரு பெண் தன்ரை புருசன்ரை சொல்லுக் கேட்காமல் நடக்கிறதே பிழைதானே?” 

“பிழை தான் மச்சான்… பிழையைத் திருத்த முயல வேணுமொழிய இப்பிடிக் கைவிட்டிட்டு வரக் கூடாது!” 

“என்னால் ஏலாக் கட்டத்திலைதான் விட்டிட்டு வந்தனான்.” 

“நீ எவ்வளவு தான் நியாயம் கதைச்சாலும் எப்பவோ ஒரு நாளைக்கு ஒன்று சேரத்தான் போறீங்கள்! ஏனெண்டால் இப்ப பிறந்திருக்கிற குழந்தையாலை உங்களுக்குள்ளை இன்னும் பிணைப்புக் கூடியிருக்குது. அதை ஆரோ ஒரு அன்னியக் குழந்தை என்று நினைக்க முடியுதோ? ரெண்டு பேராலுமே அது முடியாத காரியம். பிறகு ஒரு நாளைக்கு இதுக்காக ஒன்று சேரப் போறனீங்கள்… இப்பவே அதைச் செய்தால் என்ன?” 

ஜெகநாதன் மௌனம் சாதித்தான். மனது சிந்தனை வயப்பட்டது. 

சிவகுமார் சொல்வதும் உண்மைதான். அவர்களைக் கைவிட்டு இருக்க வேண்டுமென வெளிப்படையாக நினைத்தாலும் நடைமுறையில் அது சாத்தியப்பட்டு வராது. குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் தோன்றிய மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த மனக் கிளர்ச்சியே அதற்குச் சான்று. ஜெகநாதனின் மனதைத் தொடும் விதமாகச் சிவகுமார் தொடர்ந்து சொன்னான்; 

“ஆர் முதலிலை கதைக்கிறது என்ற தன்மானப் பிரச்சினை யாலை… அநியாயமாய் உங்கடை இளமையைத்தான் வீணாக்கப் போறீங்கள். இதிலை தன்மானப் பிரச்சினைக்கே இடமில்லை… இப்ப இல்லாமல் பிறகு குடுகுடு கிழவனாய்ப் போனபிறகு ஒன்று சேர்ந்து என்ன செய்யப் போறியள்?… நாங்கள் விரும்புகிற வாழ்க்கை எங்களுக்கு அமையாட்டில்… எங்களுக்கு அமையிற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாய் வாழ வேண்டியதுதான் மச்சான்… இதிலை யோசிக்க ஒன்றுமில்லை.” 

கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே நெடுநேரம் கடந்து போய்விட்டது. அந்த நேரத்திலும் அடங்கிப் போகாத வாகனங்களின் இரைச்சல். இருப்பிடத்துக்குத் திரும்புவதற்கு நேரம் தவறிய பறவையொன்று தனது துணையை ஏக்கத்தோடு அழைத்தவாறு பறக்கின்ற ஓசை சன்னமாக ஒலிக்கிறது. 

அடுத்த நாள் புலர்கின்ற பொழுதில், ஜெகநாதன் யாழ்ப்பாணத்துக்குப் பயணமானான். அவனை வழியனுப்பி வைத்துவிட்டுத் தனது சாதுரியத்தினால் தான் அந்த நல்ல காரியம் கை கூடியது எனச் சிவகுமாருக்குப் பெருமையடித்தவாறு புகையிரத நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார் பஞ்சலிங்கத்தார். 

– தொடரும்…

– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.

– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *