இளமைக் கோலங்கள்





(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
அத்தியாயம்-19
விடியப்புறமாக நாய் குரைத்த சத்தத்தில் எழுந்த பூமணி சிவகுமாரைக் கண்டதும், “எட தம்பி…இப்பதானேடா வாறாய்?” என மகிழ்ச்சியோடு முற்றத்துக்கு இறங்கி வந்தாள். ஆளையறியாமல் முதலில் குரைத்த ஜிம்மிநாய் பின்னர் அவனைச் சுற்றிச் சுற்றி, தொங்கி விழுந்து கைகளை நக்கித் தனது விசுவாசத்தைக் காட்டத் தொடங்கியது. அவனோடு சேர்ந்து விறாந்தைக்கும் ஏறியது.

“அங்காலை போ… இறங்கு கீழை…!” என அம்மா அதட்டினாள்.
சிவகுமார் பயணப் பையை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு சப்பாத்துக்களைக் கழற்றி கால்களை விடுவித்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த அம்மா, “என்னடா தம்பி… சரியாய் வயக்கட்டுப் போனாய்?” என அனுதாபப்பட்டாள். அவனுக்கு அதற்குப் பதில் சொல்ல வேண்டும் போற் தோன்றவில்லை. “இரு! தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்” என்றவாறே அம்மா குசினிக்குப் போனாள்.
அவனுக்கு எரிச்சலாக இருந்தது. “உடனடியாக வரவும்” என்று தந்தி அடித்துவிட்டு காரணத்தைச் சொல்லாமல் இருந்தால்? நேற்றுத் தந்தியைக் கண்டதும் அவன் எவ்வளவு பதட்டமடைந்தான். அம்மாவுக்கு ஏதாவது சுகவீனமோ? அல்லது அப்பாவுக்கு? ஒருவேளை அக்காவின் சம்பந்த விஷயங்கள் ஏதாவது ஒப்பேறியிருக்குமோ?
காலையில் வந்து வீட்டையும் அம்மாவையும் தரிசித்த பின்னரே பெரிய நிம்மதி தோன்றியது. எனினும் என்னவோ ஏதோ என்ற தவிப்பு இன்னும் இருக்கத்தான் செய்தது.
சிவகுமார் வந்திருப்பது தெரிந்து அக்காவும் தம்பியும் எழுந்து வந்தார்கள். இந்த ஆரவாரத்தில் சின்னவனும் எழுந்து சிணுங்கிக் கொண்டே வந்தான்.
“இஞ்சற்றா பெரியண்ணை வந்திருக்கிறார்!” என அவனுக்கு ஏதோ அற்புதத்தைக் காட்டுவது போன்ற பாவனையில் அம்மா அடுப்படியில் இருந்து வந்தாள்.
“என்ன தம்பி எங்களையெல்லாம் அடியோடை மறந்திட்டியோ? இந்தப் பக்கம் வந்து எத்தினை மாசம்?” என அக்கா குறைப்பட்டாள். அதற்கு ஒரு மெல்லிய சிரிப்பைப் பதிலாக உதிர்த்து சமாளித்துக் கொண்டான்.
தனக்குப் பக்கத்தில் பேசாமல் அமர்ந்திருந்த சிவராசனிடம் “உனக்கு எப்ப கம்பஸ் துவங்குது?” எனக் கரிசனையோடு விசாரித்தான் சிவகுமார். விடியப்புறமே எழுந்து பின் வளவுக்கு தோட்டப்பக்கம் சென்ற அப்பா திரும்பி வந்தபொழுது மகன் வந்திருக்கிற அசுகை அறிந்து ஒன்றும் பேசாமல் செம்பை எடுத்துக் கொண்டு பால் எடுப்பதற்காக மாட்டுக் கொட்டில் பக்கம் போனார். அது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்பா என்ன கோபக்காரனைப் போல ஒன்றுமே பேசாமல் போகிறார்?
இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவனாகவே கேட்டான்.
“அம்மா! என்னணை ஏதோ அவசரமாய்த் தந்தி அடிச்சியள், பிறகு ஒரு கதையுமில்லாமல் இருக்கிறியள்?”
அதற்கு என்ன பதில் சொல்லலாமென்று சங்கடம் அம்மாவுக்கு. பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு;
“ஏன் அவசரமெண்டாத்தானே தந்தி அடிக்க வேணும்?… நீ இஞ்சை வீட்டுக்கு வந்து எத்தினை மாசம்? வீட்டிலையும் தாய் தேப்பன் சகோதரங்கள் இருக்குதெண்ட நினைவில்லையே உனக்கு?”
சப்பென்று போய்விட்டது. “இவ்வளவுதானா சங்கதி?”
“உங்களுக்கு வேறை வேலையில்லை! நானும் என்னவோ ஏதோவெண்டு பயந்திட்டன்.”
“நாங்களும் அப்டித்தான் பயந்து கொண்டிருக்கிறம்.
சிவகுமாருக்கு ‘திக்’கென்றது. இதென்ன அம்மாவுக்கும் என்னவோ ஏதோ என்ற தவிப்பு?
“என்னணை விளங்கச் சொல்லன்?”
“அதெல்லாம் பிறகு ஆறுதலாகச் சொல்லுறன். நீ போய் முதல்லை கால் முகத்தைக் கழுவிக் கொண்டு வா!”
“தம்பி மறைக்காமல் சொல்லடா? நீயேன் கனநாளாய் வீட்டுக்கு வரயில்லை?”
“அடிக்கடி வாறதுக்கு நானென்ன பெரிய சம்பளக்காரனே?” அம்மாவுக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை;
முந்தியெண்டால் அடிக்கடி ஓடி வருவாய்!… இப்ப இந்தப் பக்கத்தையே மறந்திட்டாய்!” எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.
அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனச் சிவகுமாருக்குப் புரியவில்லை. உண்மையிலே தான் முன்னரைப் போல அடிக்கடி வராமல் விட்டதற்கு என்ன காரணம்? அந்தக் காரணம் தெரியாமலே அவன் கனநாட்கள் கொழும்பில் நின்றிருக்கிறான். அப்படி ஊருக்கு வராத குறையே அவனுக்குப் பெரிதாகத் தோன்றியதுமில்லைதான். கொழும்பு வாழ்க்கை பழகிப் போய்விட்ட காரணமா?
ஊருக்கு வருவதென்றால் சும்மாவா? எப்பொழுதுதான் கையில் மேலதிகமாகக் காசு இருந்திருக்கிறது? இப்பொழுது தந்தியைக் கண்டவுடனும் கடன்பட்டுக்கொண்டுதானே ஓடிவந்திருக்கிறான்.
“அம்மா! நெடுகலும் ஒரு மாதிரியே… வர வர எனக்கு எத்தனை பொறுப்புக்கள் கூடுது? அதையெல்லாம் சுமக்கிறதெண்டால் என்ரை ஆசைகளை கொஞ்சமெண்டாலும் விட்டுக் குடுக்கத்தானே வேணும்? எனக்கு ஊருக்கு வாறதுக்கு ஆசை இல்லையே?” சிவகுமார் இப்படிக் கூறியபொழுது கலைச்செல்வியின் நினைவும் கூடவே எழுந்தது.
“எடேய் ராசா… சொல்லுகிறனெண்டு குறை நினையாதையடா தம்பி… நீங்களெல்லாம் கொப்பரின்ரை விருப்பப்படிதான் நடக்க வேணும். உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட மனுசன் அவர்… கொப்பற்ரை குணம் தெரியும்தானே? அவற்றை விருப்பத்துக்கு மாறாய் ஏதேன் நடந்துதெண்டால் பிறகு பிள்ளையெண்டும் பாக்கமாட்டார்… உங்களுக்குள்ளை ஏதேன் பிணக்கெண்டால் பிறகு என்னைக் கண்ணிலையும் காணமாட்டியள்.”
அம்மாவின் உபதேசம் சிவகுமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா இப்படி யெல்லாம் எச்சரிப்பதற்குக் காரணம் என்ன? ஒரு வேளை கலைச்செல்வியின் விஷயம் வெளிப்பட்டு விட்டதோ? சத்தியநாதன் வீட்டுக்கு சிவகுமார் போய் வருகின்ற சங்கதியும் சாடைமாடையாக அம்மாவுக்குத் தெரியும். “ஏன் தம்பி சும்மா சும்மா அங்கை போறாய்… அங்கை ஒரு குமர்ப்பிள்ளை இருக்குதெல்லே? பிறகு ஊர் வேறை விதமாகக் கதைக்கும்” எனத் தடுத்துமிருக்கிறாள்.
“இப்ப ஏன் இந்தத் தேவையில்லாத கதையெல்லாம் கதைக்கிறீங்கள்? நான் ஏதோ உங்கடை விருப்பத்துக்கு மாறாய் ஒருத்தியைக் கொண்டு வந்துவிட்ட மாதிரியெல்லே கதைக்கிறியள். இதுக்குத்தானே இவ்வளவு அவசரமாய்த் தந்தியடிச்சுக் கூப்பிட்டனீங்கள்?” சிவகுமார் எரிந்து விழுந்தான். இதற்குப் பின்னர் நீண்ட நேரம் மௌனம் நிலவியது. தம்பியின் இக்கட்டான நிலைமையைக் காண சுகந்திக்கும் மனவருத்தமாக இருந்தது. அவளும் ஒன்றுமே பேசாமல் எழுந்து சென்றாள்.
மகன் தன்மேல் எரிந்து விழுந்தது பூமணிக்கு கவலையா யிருந்தது. எப்படி இருந்தாலும் குடும்பத்தில் ஒரு சச்சரவும் இல்லாமல் தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையில் சுமுகமான உறவு இருக்க வேண்டும் என்பதுதான் அவளது ஏக்கம். ‘மனிசன் ஒரு பிடிச்சராவி. இதுகளும்… இனி தலைக்குமேலை வளந்திட்டுதுகள்…. ஏதாவது எதிர்க்கதை கதைச்சுப் போடுதுகளோ’ என்ற பயம்தான். சிவகுமார் சாப்பிட்டு இடையில் எழுவதைக் கண்ட பூமணி,
“தம்பி… எடேய்… என்னடா அதுக்கிடையிலை எழும்பி யிட்டாய்… இந்தாடா இன்னுமொருக்கால் போடுறன் சாப்பிடு!”… அவன் ஒன்றும் பேசாமல் முற்றத்துக்குச் சென்று கையைக் கழுவினான்.
தன்மேல் ஏற்பட்ட கோபத்தினால்தான் அவன் இடையிலை எழுந்து போய்விட்டான் என எண்ணியதும் வயிற்றைப் பற்றி எரிந்தது பூமணிக்கு. அழுகையே வந்துவிடும் போலிருந்தது. அந்தநேரம் அவளுக்குக் கணவன் மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. ‘பிள்ளைகளின் விருப்பங்களுக்கு கொஞ்சமெண்டாலும் விட்டுக் கொடுக்காமல் ஏன்தான் இப்படி பிடிவாதக்காரராய் இருக்கிறாரோ? இந்த அந்நியக் கெட்டதுகளோடை கிடந்து உலையாமல் வேளைக்குத் துலைஞ்சிடலாமெண்டால் இந்தக் கடவுளுக்கும் கண்ணில்லாமல் போச்சுது’ என அங்கலாய்த்துக் கொண்டாள்.
விறாந்தைக்கு வந்தபொழுது அப்பா முதல்தரமாகக் கதைத்தார்.
“எத்தனை நாள் லீவு போட்டிட்டு வந்தனீ?”
கதையை ஆரம்பிக்க இதைத் தவிர வேறு விஷயம் அவருக்குக் கிடைக்கவில்லை. அவரது கேள்விக்கு ஒரு சொல்லில் பதிலளித்து விட்டு நின்றான் சிவகுமார்.
“உன்ரை ற்றான்சர் விஷயம் இப்ப என்னமாதிரி இருக்கு?” எனக் குறுக்கு விசாரணை ஆரம்பமாகியது.
கொழும்பில் நாலு வருடங்களுக்கு மேல் சேவை செய்துவிட்ட சிவகுமாருக்கு காலிக்கு மாற்றம் கிடைத்திருந்தது. நாட்டில் இனக் கலவரங்கள் நடைபெற்ற காலமாக இருந்தபடியால் அதைக் குறிப்பிட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றம் எடுப்பதற்கு விண்ணப் பிக்குமாறு அருணாசலம் மாஸ்டர் கூறியிருந்தார்.
“கடிதம் எழுதியிருக்கிறன்… ஒரு பதிலையும் காணயில்லை… சிலவேளை போகவேண்டி வந்தாலும் வரும்.”
சற்றுநேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பின்னர் நிதானமாகச் சொன்னார்.
“எல்லாத்துக்கும் பயப்படாமல் சீவிக்கேலுமே? விதிப்படி நடக்கிறது நடக்கட்டும். இன்ன நேரத்திலை இப்படி நடக்கவேணும் எண்டு எழுதியிருந்தால் அது காலியிலை இருந்தாலென்ன கொழும்பிலை இருந்தாலென்ன நடந்துதான் தீரும்…”
தந்தை எதைக் குறிப்பிடுகிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. இனக்கலவரம் நடந்த பொழுது போக வேண்டாம் என்றவர் இப்பொழுது போகுமாறு பணிக்கிறார். இடையில் அவரிடம் ஏற்பட்ட மாற்றத்துக்குக் காரணம் என்ன என்பது மாத்திரம் புரியாத ஆச்சரியமாகவே இருந்தது. எப்படியாவது மாறிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டால் தான் பயப்படுவேன் என்ற உணர்வில் தெம்பளிப்பதற்காக அப்படிக் கூறினாரா அல்லது?
வெகுநேரத்திற்குப் பின்னர் சுகந்தி தம்பியோடு கதைத்துக் கொண்டிருந்தபொழுது ஒரு விஷயத்தைக் கூறினாள்.
“போனமாதம்… உன்ரை றூம்மேற் ஒருத்தர் இஞ்சை வந்தவர்.”
அவன் எதிர்பாராத சங்கதி இது.
“உன்னைப் பற்றி அப்பா கேட்டவர்”
“அவன் என்ன சொன்னவன்?”
“நல்லாய்… ஏதோ… அள்ளி வைச்சிட்டுத்தான் போனவன்… உடனை இஞ்சை அப்பா, அம்மாவோடை துள்ளி அடிச்சுக் கொண்டு வரவெளிக்கிட்டார்… பிறகு அம்மா ஒரு மாதிரி சொல்லிக்கில்லி நிற்பாட்டினவ.”
அவன் என்ன சொல்லியிருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. அதுதான் அப்பாவின் மாற்றத்துக்கு காரணம் என நினைத்துக் கொண்டான்.
“நெடுகலும் ஒரு இடத்திலை இருந்து வேலை செய்யக் கூடாது” எனத் தந்தை கூறியதற்கு வேறு எந்த நியாயமுமே தேவையில்லை.
“எல்லாம் விதிப்படிதான் நடக்கும். பயப்படாமல் போ!” எனக் கூறுகின்ற தந்தை, தான் நினைத்துப் பயப்படுவதைப் போல ஏதாவது நடக்குமென்றாலும் அதையும் ஏன் ‘விதிப்படி’ என நினைத்துக் கொள்ள மறுக்கிறார்?
இப்படியான நினைவுகள் அவனுள் எழுந்தபொழுது இந்த உலகவாழ்க்கை மீதே வெறுப்பு ஏற்பட்டது. எண்ணிக் காட்டிவிட்டுப் போகக்கூடிய சில வருட வாழ்க்கைக்குத்தானே இந்தப் போலி கௌரவங்களும் பாராட்டுக்களும்? இப்படி நினைத்த பொழுது கலியாணமே ஒரு தேவையில்லாத விஷயமாகத் தெரிந்தது. எல்லாருமே வலுசீக்கிரத்தில் சாகப் போகிறோம். அதற்கிடையில் வாழ்க்கையை சற்று இலகுவாக்குவதற்கு ஒருவருக்கொருவர் துணை தேவைப்படுகிறது. யாருக்கு யாரென்று தேர்ந்து கொள்வதற்கு இடையில் இத்னை சிக்கல்களா?
மனதை ஆட்கொண்டு ஆக்கிரமிக்கின்ற வெறுப்பையும் விரக்தியையும் தீர்க்கின்ற வழி புரியவில்லை. வீட்டிலே இருந்தால் இந்த மனக்கிளர்ச்சி இன்னும் விகாரமடைந்து கொண்டிருந்தது. உடனடியாக ஆறுதல் தேவைப்பட்டது.
குழம்பிய மனத்தோடு சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் போகப் போற இடம் அம்மாவுக்குத் தெரியும்.
“இவ்வளவு படிச்சுப் படிச்சுச் சொன்னாப் பிறகும் எங்கையடா போறாய்?”
அம்மாவின் கண்டிப்பான குரலையும் பொருட்படுத்தாது அவன் செல்வியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்.
அத்தியாயம்-20
அதிக நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்பதற்குப் பிடிக்கவில்லை, சிவகுமாருக்கு. அப்பா கோபக்காரனைப் போல இருக்கிறார். எந்தப் பக்கம் பாடுவது என்ற சங்கடம் அம்மாவுக்கு. இந்த விசித்திரத்தில் வீட்டிலே இருப்பது எப்படி?
செல்விகூடச் சிணுங்குகிறாள்; “நீங்கள் இப்ப என்னைத் துப்புரவாக மறந்திட்டீங்கள்…” “நான் ஒருத்தி இஞ்சை உங்களுக்காக இருக்கிறதே உங்களுக்கு நினைவில்லை.” – செல்வியை மறக்க முடியுமா? அவளுக்கு அதை எப்படிப் புரிய வைப்பது. அவனது ஆறுதலே அவள்தானே, அவனால் தன்னை மறக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் நெடுநாட்கள் காணாது இருக்க முடியாமல் தான் அப்படிக் கூறுகிறாள் என நினைத்தான். சகல பிரச்சினைகளாலும் தாக்கப்படுகின்ற மனதுக்கு ஒத்தடம் கொடுப்பது போன்ற சுகத்தை அளிப்பது அவளது நினைவுதானே? முன்னரைப் போல அடிக்கடி அந்த நினைவு எழுவதில்லைத் தான். எப்பொழுதாவது இருந்து விட்டுக் கிளர்ந்து வந்து மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும். அவனது துணைவியாக அவள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அவன் எதற்குமே கவலைப்பட மாட்டான்.
எல்லாவற்றையும் அவளே கொண்டு நடத்துவாள்; தேற்றுவாள்; ஆற்றுவாள்; அவனை மடியில் கிடத்தி நெற்றியையும் தலையையும் வருடிக் கவலைகளை மறக்கச் செய்வாள். இப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறான். தனிமையான ஒரு வீட்டிலே அவளோடு அமைதியாகக் குடும்பம் நடத்தி வாழ்வதாகக் கனவு கண்டிருக்கிறான். கைநிறையச் சம்பளம் தருகின்ற நிரந்தரமான ஒரு உத்தியோகம். ஒரு கார், ஒரு வீடு வீடு நிறையத் தளபாடங்கள், பூஞ்செடிகள், மலர்களைப் போன்ற குழந்தைகள்… அவள் எல்லாவற்றையும் ஒரு ராணியைப்போல நிர்வகிப்பாள் – அவனை இயக்குவாள்; இயக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறான். இந்த உத்தியோகத்திலிருந்து கொண்டு என்னத்தைத்தான் வெட்டிப் பிடுங்க முடிகிறது? கைநிறையக் காசு வந்தால் மறுநாளே போகிற வழி தெரியவில்லை. அப்படி விலைவாசிகள் உயர்வு, பொறுப்புக்கள், பிரச்சினைகள், சுமைகள்!
அவன் இப்பொழுதுகூட, ‘சரி’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமாம்! கையைப் பிடித்துக் கொண்டு வந்து விடுவாளாம் – செல்வி சொல்கிறாள். அப்படிச் சொன்ன நேரத்தில் கிளர்ந்தெழுந்த இன்பத்துக்கு அளவில்லை. அவனை நம்பி வர அவனுக்காக ஒருத்தி! ஆனால், கூட்டிக் கொண்டு எங்கேதான் போவது? கொழும்பிலே இல்லாத ஒன்றுக்காக இவ்வளவு தலையைப் போட்டு உடைக்கும் அப்பா… இதை அறிந்தால் பொல்லுத் தூக்கிக் கொண்டு வரமாட்டாரா? அப்படியென்றால் அப்பா சொல்வதுபோல் அவர் பார்த்துக் கொண்டு வருகின்ற எங்கேயோ இருக்கிற, முன்பின் தெரியாத ஒருத்திக்குத்தான் தாலியைக் கட்ட வேண்டுமா? – ‘நோ!’
செல்வியைக் காதலித்திருக்கவே கூடாது. பாவம், எப்படி உருகிப் போய்விட்டாள் – இவனுடைய நினைவாம். மலர்கின்ற பருவத்தில் மொட்டாக இருந்த அவள் மனம், இவனை நினைத்து நினைத்தே இதழை விரித்து இவனுக்காகவே ஏங்குகின்ற மலர். செல்வியிடம் கண்ணீரிலே விடைபெற்று வந்தாயிற்று ஒரு முடிவும் சொல்லாமலே! ‘எல்லாம் கடவுள் விட்ட வழி’ என்று சொன்னான். தனது துணிவற்ற தன்மையை மூடிமறைக்க இப்படியானதொரு மடைத்தனமான பதிலைச் சொல்ல வேண்டியிருந்தது. அவன் நினைத்தபடி ஒருத்தியைக் கூட்டிக் கொண்டு வந்தால் என்ன குடியா முழுகிப் போய்விடும்? இது அப்பாவுக்கு ஏன் புரியவில்லை? அப்பா தராதரங்கள் பார்த்துக் கொண்டு வருகிற ஒருத்தி நாளைக்கு இவனது மனத்துக்கு ஒத்துவரா விட்டால் யார் பழி?
கடலின் பரப்பிலிருந்து எதையோ சாதிக்கப் போவது போல வீறுகொண்டு ஓடி வருகின்ற அலைகள் கரையில் மடிந்து போகின்றன. – மீண்டும் அதே அலைகளின் ஆவேசமான ஓசை. கொழும்புக்கு வந்தால் மகேந்திரன் புதிய செய்தியோடு காத்திருக்கிறான்.
“மச்சான், ஜெகநாதனுக்கும் மனிசிக்காறிக்கும் இடையிலை குழப்பம்!”
“உனக்கு நல்ல கதையே பேசத் தெரியாதா?” சிவகுமார் ஆத்திரத்தோடுதான் கேட்டான். ஆனால் அப்படி ஏதாவது ஆகியிருக்குமோ என்ற எண்ணமும் தோன்றியது.
வாகனமொன்று ‘சடின்பிறேக்’ போடுகிற இரைச்சல் – யாரோ குறுக்கே போயிருக்க வேண்டும். நிதானமாக நின்று பார்த்துப் போயிருக்கலாம். அதன் குறுக்கே போயிருக்கவும் தேவையில்லை. அதன் வழியைத் தடை செய்திருக்கவும் தேவையில்லை. எப்படியோ விபத்து நடக்காவிட்டால் சரிதான்.
“மச்சான், உனக்கு நான் என்ன சொன்னாலும் பகிடிதான்… ஆனால் இது உண்மை.”
மகேந்திரன் காய்கறிகளை நறுக்கியபடியே கூறினான். இப்பொழுதும் இடையிடையே சமையல் செய்கிறார்கள். ஊருக்குப் போனால் அம்மா மிளகாய்த்தூள் இடித்துக் கொடுத்து விடுவாள். (“தம்பி நேரங் கிடைக்கிற நேரம் ஏதாவது சத்துள்ள சாப்பாட்டைச் சமைத்துச் சாப்பிடு… கடையிலை சாப்பிட்டு சாப்பிட்டு… எலும்பும் தோலுமாய்ப் போனாய்…”)
“உனக்கு எப்பிடித் தெரியும்?”
சிவகுமார் மகேந்திரனிடம் a கேட்டான்.
“அவன்தான் சொன்னவன்… நீ இஞ்சை இல்லாத நாளெல்லாம் ஒரே குடிதான் பாவி.”
“இப்ப எங்கை போட்டான்?”
“எங்கையாவது குடிக்கத்தான் போயிருப்பான்.”
“வரட்டும் கதைப்பம்.”
“நீ என்னத்தைச் சொல்லித் திருத்தப் போகிறாய்?… அவனுக்கு அந்த விஷயங்கள் தெரிஞ்சிட்டுது போலையிருக்குது.”
அந்த விஷயங்கள் என அவன் குறிப்பிடுகின்ற, ஏற்கனவே தன் மனைவி ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டவள் என்ற சங்கதி தெரிய வந்தால் அவனது மனது எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது. செல்வியைக் காதலிப்பதாலும் அவளால் காதலிக்கப்படுவதாலும் தான் அடைகின்ற பெருமையை அவன் அனுபவிக்க முடியாது. தனக்கு வரப்போகிறவள் உள்ளத்தாலும் உடலாலும் தூய்மையானவளாக இருக்க வேண்டும் என்ற ஓர்மம் ஏன் இந்த ஆண்களின் மனதில் பதிந்து போயிருக்கிறது? அப்படி எதிர்பார்க்கின்றவர்கள் ஏன் அதை ஒரு பக்கமாக மாத்திரம் கற்பனை செய்கிறார்கள்?
ஜெகநாதன் செய்த திருகுதாளங்கள் கொஞ்ச நஞ்சமா? ‘உன்னிடம் மயங்குகிறேன்’ என்று ஒருத்திக்குக் கடிதம் கொடுத்து, அவளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து கையும் களவுமாகப் பிடிபட்டு வெள்ளவத்தைச் சந்தியில் வைத்து அவளது ஆட்களால் நல்ல உதையும் பட்டிருக்கிறான். அவற்றையெல்லாம் பழைய கனவுகளாக மறந்துவிட முடியுமானால்… இவற்றைப் புதிய உறவுகளாக ஏற்க – ஏன் மனது வெறுக்கிறது?
அன்று அகிலா நேரம் கழித்தே வீட்டுக்கு வந்தாள்.
“என்ன பிள்ளை இவ்வளவு நேரமும் செய்தாய்?… இருண்டு போச்சுது. இது எங்கட ஊருகள் மாதிரியா?… சந்திக்குச் சந்தி காவாலிகள் நிற்குறானுகள். நேரத்தோட வீட்டுக்கு வந்திட வேணும்.
அம்மாவின் எச்சரிக்கையான பேச்சை அவ்வளவு பெரிது படுத்தாமலே பதில் சொன்னாள் அகிலா, “ஏனம்மா பயப்படுறீங்க? நான் என்ன சின்னப் பிள்ளையா… உழைக்கிறதுக்கென்று ஊரைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறம்… அப்புறம் என்ன பயம்?… வேலைகள் தலைக்கு மேலே இருந்திச்சு… ஓவர்ரைம் செய்தால் காசுதானே?… ராஜேசன் கூட்டி வந்து விட்டிட்டுத்தான் போனவர்.”
அதற்குப் பிறகு அம்மா பேசவில்லை. அகிலாவின் குரலைக் கேட்டதும் சிவகுமார் எழுந்து வந்தான், “எப்பிடி அகிலா ஓவர்ரைம்?” என்று கேட்டவாறே.
அவனது கேலிக் கதையைக் கேட்டு குப்பென்று முகம் சிவந்தவள், அம்மாவின் முன்னிலையில் அந்தக் கதையை வளர்க்க விரும்பாமல்;
“எப்ப வந்தீங்க சிவா?” எனக் கதையை மாற்றினாள்.
அவனை அம்மாவோடை கதைத்துக் கொண்டிருக்க விட்டுக் குளித்து உடைமாற்றி வருவதற்குச் சென்றாள்.
“எப்படித் தம்பி ஊரிலை… பெத்தவங்க… சகோதரங்கள் பாடு?”
“பரவாயில்லை”
அகிலா தேநீரோடு வந்தாள். “என்ன சிவா, அதுக்கிடையிலை திரும்பிட்டீங்க?”
“ஏன் வரக்கூடாதா?”
“அதுக்கில்லை! கனநாளய்க்கப்புறம் போனீங்க… உங்கட செல்வியை விட்டிட்டு இவ்வளவு கெதியிலை வரமாட்டீங்க என்று நினைச்சன்.”
செல்வி! உண்மைதான் அவளை விட்டு எப்படி வர முடிந்தது? வருகின்ற பொழுது அவள் அழாக்குறையாகச் சொன்னாள்; “எப்பவும்… செல்வி, செல்வி என்றுதான் கூப்பிடுறீங்கள்… பிறகு வாழ்க்கை முழுதும் என்னைச் செல்வியாகவே இருக்க விட்டிடாதையுங்கோ.”
“செல்வி! வட் யூ யூ மீன்?” அவள்கூட அவனைச் சந்தேகிக்கிறாளா? அப்பாவுக்குச் சொல்வதுபோல அவளின் பிஞ்சு மனத்திலும் யாராவது நஞ்சைப் போட்டிருப்பார்களோ?
“என்ன செல்வி சந்தேகமா?”
“இல்லை உங்களைச் சந்தேகப்படேலுமா? நீங்கள் எனக்குத்தான் – அதைவிட வேறை ஆரோடையும் உங்களைச் சேர்த்து நினைக்கக்கூட எனக்கு ஏலாது. முந்தி அடிக்கடி ஓடி வருவீங்கள்….இப்ப எவ்வளவோ நாளைக்குப் பிறகு வந்து, வந்த சுவடே தெரியாமல் ஓடிப் போறீங்கள்…” அதற்கு மேல் கதைக்க முடியாதவளைப்போல அழுதாள்! அதை நினைத்துக்கொண்டு இப்பொழுது இவனது நெஞ்சு குமுறியது. கண்கள் கலங்கிக் கண்ணின் இமைகளை உடைத்துக் கொண்டு உருண்டது. அதைக் கண்டு அகிலா பதறிப் போனாள்.
“சிவா என்ன இது? நான் ஏதாவது தேவையில்லாததைச் சொல்லியிட்டேனா?” அப்பொழுதுதான் அவளுக்கு அவனை வீட்டிலிருந்து உடனடியாக அழைத்த தந்தி ஞாபகத்துக்கு வந்தது. ஒருவேளை வீட்டில் வேறு கலியாணம் பேசியிருப்பார்களோ?
“சிவா… ஏன் தொட்டதுக்கெல்லாம் கவலைப்படுறீங்க?… வீட்டிலை ஏதாவது பிரச்சினையா?”
“இல்லை.”
“அப்புறம் எதுக்குத் தந்தி குடுத்தாங்க” என ஆதரவோடு கேட்டாள். அம்மா அவ்விடத்தில் நிற்கிறாளா என்று பார்த்துவிட்டுத் தனது தாவணித் தலைப்பை எடுத்து அவனது கண்ணீரைத் துடைக்குமாறு சொன்னாள். அவனும் ஒரு தாயின் அரவணைப் புக்குக் கட்டுப்படுகிற குழந்தையைப் போல அப்படியே செய்தான்.
“ஜெகநாதன் எனக்குக் கலியாணம் பேசிப் போயிருக்கிறான்” என்று சொன்னான்.
அவளுக்கு விளங்கவில்லை.
“அவர் ஏதோ மிஸிஸ்சோடை மனஸ்தாபப்பட்டுக் கொண்டு இப்ப ஊருக்குப் போகாமல் குடிச்சுக் கொண்டு திரிகிறாரே” எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.
“மற்றவனுக்குக் கெட்டது நினைச்சால் அது தனக்கு நடக்கிறதுக்குக் கனநாள் செல்லுமா?… நாங்கள் நிர்ணயிக்கிற விலையிலேயே தீர்க்கப்படுவம் என்றது அவனுக்குத் தெரியவில்லை” என ஆத்திரத்தோடு சொல்லிவிட்டு, இரண்டு மாதத்திற்கு முன்னர் ஜெகநாதன் திருமணத்திற்காகச் சென்றிருந்த பொழுது தன் வீட்டுக்கும் சென்று இல்லாதது பொல்லாததுகளையெல்லாம் அள்ளி வைத்துவிட்ட சங்கதியைக் கூறினான்.
“எனக்கு இருந்த பிரச்சினைக்குள்ள ஊருக்குப் போகவும் நேரம் கிடைக்கயில்லை… கடிதமும் போடுறது குறைவு… அதுதான் அதுகளும் என்னவோ ஏதோ என்று பயந்து தந்தி அடிச்சிருக் குதுகள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே ஜெகநாதன் நிறைதண்ணியில் வந்து பக்கத்து அறையில் அலட்டுவது கேட்டது. சிவகுமார் போக விடைபெற்ற பொழுது அகிலா தடுத்தாள். “வேண்டாம் சிவா… அவரும் வெறியிலை நிற்கிறார்… அப்புறம் வீண் பிரச்சினைகள் வரும்.”
சிவகுமார் சிரித்தபடி கூறினான். “நீங்கள் பயப்படாதையுங்கோ. நான் அதைப் பற்றி ஒண்டும் கதைக்கமாட்டன்… அவங்கடை அவங்கடை மனது அப்பிடி! நாங்கள் என்ன செய்யிறது…மனிசியோடை சண்டை பிடித்துக் கொண்டு வந்திருக்கிறானாம்… என்னெண்டு கேட்டுப் பார்ப்பம்.”
சிவகுமாரைக் கண்டதும், ஜெகநாதன் “ஹலோ! சிவா” என்று குசலம் விசாரித்தான். “யூ ஆர் லக்கி பெலோ மச்சான்” என்றான்.
“நான் அதிர்ஷ்டக்காரனெண்டு நீதான் சொல்லுறாய். எனக்கென்றால் அப்பிடித் தெரியவில்லை – என்ன விஷயம்?”
“உனக்கென்ன குறை? ஊரிலை மனம் நிறைஞ்ச காதலி… இஞ்சை நல்லதொரு சிநேகிதி…”
“உனக்கு இன்னும் இந்தக் குணம் விட்டுப் போகயில்லை… சரி போகட்டும்… உனக்கு என்ன குறை? ஏன் இப்பிடிக் குடிச்சு அழிகிறாய்?”
“வேறை என்ன செய்ய மச்சான்… காசு வேணும் வேணுமெண்டு பெரிய இடத்திலை கட்டினன்… இப்ப அதுகும் இல்லை… இதுகும் இல்லை…”
“நீயாக எதையாவது கற்பனை பண்ணியிருப்பாய்?…உன்ரை பழக்கமே அதுதானே?”
“இல்லை அவள் தலைக்கனம் பிடிச்சவள்…”
தலைமயிரைக் கோதியவாறு அவன் விரக்தி ததும்பக் கதைப்பதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. மகேந்திரன் தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை நீட்டினான். “இந்தாமச்சான்…”
அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, “வேண்டாம்!” எனத் தலையை அசைத்தான்- “நான் குறைச் சிகரட் குடிக்கிறதில்லை.” மகேந்திரன் வற்புறுத்தவில்லை. ஆனால் அவனது மாற்றத்தை நினைக்க வியப் பாக இருந்தது. முன்னரென்றால் ஒரு சிகரட் குடிக்க விடமாட்டான்; “பட்”டைத் தா மச்சான்!” என்று அரைவாசிக்கு வருமுன்னரே பறித்து விடுவான். இப்பொழுது என்ன நேர்ந்தது?
“இந்த ரெண்டு மாதத்துக்குள்ள எத்தனையோ பிரச்சினை வந்தது. எனக்கு அந்த ஊரிலை இருக்கவே பிடிக்கவில்லை. என்னோடை கொழும்புக்கு வரச் சொன்னாலும் மாட்டாளாம். அவள் நினைத்தபடி ஆட நானென்ன மடையனே? இப்ப உத்தியோகம் பார்க்கப் போறனெண்டு நிக்கிறாள். எனக்கு அது விருப்பமில்லை. சொல்லிப் பார்த்தன்… கேட்கிறாளில்லை… ‘நீங்கள் எனக்கு ஒன்றும் சொல்லத் தேவையில்லை’ எண்டு சொல்லுகிறாள். அவள் படிச்சவளாம்! பணக்காரியெண்ட திமிர்! நான் சொல்லாமல் வேறை ஆர் சொல்லுறது?… நீ என்னத்தையாவது செய்யடி ஆத்தை எண்டிட்டு வந்திட்டன்…”
“என்னடாப்பா கலியாணம் முடிச்சு ரெண்டு மாதத்துக் கிடையிலை இப்படியெண்டால்?”
“இனிச் சீவியத்துக்கும் வேண்டாமெண்டுதான் வந்திட்டன்…”
“அப்ப என்ன செய்யப் போறாய்?” என்று அனுதாபத்தோடு கேட்டான் சிவகுமார்.
“விளையாட்டுக் கல்யாணமே… வெறும் விபரீத முடிவாகுமே” என ராகம் இழுத்துப் பாடினான் ஜெகநாதன். அவனது கட்டைக் குரலில் அந்தப் பாட்டைக் கேட்டபொழுது இசைத்தட்டு மெதுவாகச் சுழலும்பொழுது ஏற்படுகின்ற இயக்கமற்ற ஓசையைப்போல அசிங்கமாக இருந்தது. அவன் இருக்கின்ற நிலையில் இதற்கு மேலும் கதைப்பதால் பிரயோசனமில்லையென்றும் தோன்றியது.
“சரி… சரி முகத்தைக் கழுவிவிட்டு வா மச்சான் சாப்பிடுவம்… நீ ஒண்டுக்கும் யோசியாதை… எல்லாம் வெல்லலாம்” என்று மகேந்திரன் தந்திரமாக அழைத்தான்.
“வேண்டாம்… நான் கடையில சாப்பிட்டிட்டுத்தான் வந்தனான்… எனக்கு ஒருதரும் தேவையில்லை… என்ரை காலிலை நிற்கத் தெரியும் எனக்கு” எனக் கூறி விட்டு உடையை மாற்ற முயன்றான். அதுகூட முடியாமல் நிலைதடுமாறி அப்படியே கட்டிலிற் குப்புற விழுந்து படுத்தான்.
அத்தியாயம்-21
இருள் அகலாத அதிகாலையிலே ஜெகநாதனுக்கு விழிப்பு ஏற்பட்டுவிட்டது. இன்றைக்கும் நேரத்துடனே விழிப்படையச் செய்தது அந்தக் குருவியின் பாடல்தான். ஒவ்வொரு நாளும் விடிவதற்கு முன்னரே வந்துவிடுகிறது. அறையின் பக்கத்தே உள்ள செடிகளிலும் வேலியின் மரக் கொப்புகளிலும் தத்தித் தத்தி இருந்து தனது மென்மையான குரலால் இராகம் இசைத்துப் பாடுகிறது. அந்த ஓசை சோகத்துடன் யாரையோ அழைப்பது போன்ற பிரமையையே ஜெகநாதனுக்கு அளிக்கிறது.
தூரத்திலே காகங்கள் கரைகின்ற சத்தம். அவையும் இனிக் கலைந்து தங்கள் சாப்பாட்டுக்காகப் பறக்கும். இடையிடையே வீதி வாகனங்களின் இரைச்சல். விடியற்காலையிலே வேலைகளுக்கு நடந்து செல்லும் தொழிலாளிகளின் காலடியோசை. வயிற்றுப் பாட்டுக்காக எல்லோருமே எல்லாமே ஆயத்தமாகிவிட, இந்தச் சின்னக் குருவிக்கு மட்டும் அந்த யோசனையே இல்லையா? செட்டைகளை உதறி உடலைச் சிலிர்த்தது. தன் தலையையும் சிறிய கண்களையும் திருப்பித் திருப்பி எங்கோ எங்கோவெல்லாம் பார்க்கிறது. பின்னர் அழுவது போலப் பாடுகிறது. தனது துணையைத் தேடுகிறதோ?
‘இப்படி ஒருவரை ஒருவர் பிரிந்துகொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் சீவிக்கப் போறீங்கள்?’ பஞ்சலிங்கத்தார் அடிக்கடி தூது வந்து கேட்பார். இவன் சீறிச் சினந்து அனுப்பி விடுவான்; “உந்த விசர்க் கதையளை என்னோடை கதைக்காமல் போங்கோ இனிச் சீவியத்துக்கும் அவள் வேண்டாம்.” அவள் வேண்டாம் என்று சொல்ல முடிகிறது. ஆனால் அறுபது நாட்கள் ஒன்றாக வைத்திருந்த கட்டிலின் நினைவுகள்?
ஆறு மாதங்கள் இடைவெளி. ஊர்ப்பக்கமே தலைகாட்ட வில்லை. அவள் வேண்டாமென்றால் ஊரே வேண்டாமென்று அர்த்தமா? அம்மாவும் வேண்டாம் – அப்பாவும் வேண்டாம். யாரை நினைத்தாலுமே வெறுப்புத்தான். ஆனால் இப்பொழுது அவளது நினைவு இடையிடையே இதயத்தை நெருடிக்கொண்டு வருகிறது குருவியின் சோக கீதத்தைப் போல, ‘தூரத்தே வா! வா!’ என அழைக்கின்ற கடலோசை.
கட்டிலிற் படுத்திருந்தவாறே பக்கத்துக் கட்டிலில் அயர்ந்து தூங்குகிற சிவகுமாரைப் பார்த்தான். பாவம் – அவன்கூட எத்தனை நாட்கள் இவனை வற்புறுத்தியிருக்கிறான் – “இந்த வயதிலை, உன்ரை வாழக்கையைப் பாழாக்கிறதுக்குப் பின்னடிக்குத் தான் கவலைப்படுவாய்! சொல்லுறதைக் கேள் மச்சான்! விட்டுக் குடுத்து வாழ்கிற மனப்பான்மை வேணும்!” இவன் எந்தப் பேச்சையுமே கேட்கவில்லை. ‘இவர் பெரிய மனிசன் எனக்குப் புத்தி சொல்ல வாறார்’ என ஏளனமாக எண்ணியிருக்கிறான். ஆனால் அவன், எவ்வளவு துரோகமாகத் தான் நடந்து கொண்ட போதிலும் எதையுமே பெரிதுபடுத்தாமற் பெரிய பண்பாளனாக பழகுகிறான். இந்தப் பெருந்தன்மை – மனப்பக்குவம் வேறு யாருக்கு வரும்? இப்படி உலகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? எல்லோருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சுயநலம் கருதாமல் உதவி செய்யும் மனப்பான்மையோடு ஐக்கியமாக வாழப் பழகினால் வாழ்க்கை எவ்வளவு சுலபமானதாகவும் இன்பமாகவும் இருக்கும்!
இப்படியெல்லாம் நினைத்துவிட்டு மனவிரக்தியோடு சிரித்துக் கொண்டான் ஜெகநாதன். மகேந்திரன் இருந்தால் எதையாவது கதைத்து மனப்பாரத்தைக் கொஞ்சம் இறக்கலாம். இன்றைக்கு அவன் இல்லை. இப்பொழுது கொஞ்ச நாட்களாக அவனைக் காணக் கிடைப்பதே அரிதாகத்தான் இருந்தது. எங்கே போய் விடுகிறானோ? சில இரவுகளில் படுக்கைக்கும் வருவதில்லை. காரணம் கேட்டால் ஏதாவது உருட்டுப் பிரட்டுக் கதைகளைச் சொல்லிக் குழப்பி விடுவான்.
காலை ஒன்பது மணிக்குப் பின்னர் அறைக்கு வந்தான் மகேந்திரன். சனிக்கிழமையாதலால் நண்பர்களும் அறையில் இருந்தார்கள். சிவகுமார் பாத்ரூமில் தன் உடைகளைக் கழுவிக் கொண்டிருந்தான். அழுக்கேறுகிற உடைகளைச் சேர்த்து வைத்திருந்து இப்படிச் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தானே கழுவிக் கொள்வான். எல்லாவற்றையும் ‘லோண்டறி’யில் போடுவதானால் கட்டாது. அகிலாவிடம் ‘அயன்’ இருக்கிறது. அவள் கெட்டிக்காரி. தன் சிறிய சம்பளத்திலேயே இப்படி ஏதாவது பொருள்களை வேண்டி குருவியைப் போல சிறுகச் சிறுக சேர்த்துக் கொள்கிறாள். உடைகளைக் கழுவி உலர்த்திவிட்டு அங்கே கொண்டு சென்று அயன் பண்ணலாம். சிலவேளை அகிலாவே அயன் பண்ணிக் கொடுப்பாள். முன்னர் இந்த வசதி இல்லாதபோது கழுவி உலர்ந்த பின்னர் இரவு படுக்கைக்கு முன் தலையணைக்குக் கீழ் மடித்து வைத்துவிட்டுப் படுத்தால் விடிய அணிவதற்கு ‘ரெடி’ யாகிவிடும்!
சிவகுமார் தனது அலுவல்களை முடித்துக் கொண்டு அறையினுள் வந்து ஆறுதலாக அமர்ந்தபொழுது மகேந்திரன் “மச்சான் எனக்கு ஒரு உதவி செய்வாயா?” என்று கேட்டான்.
‘இவன் எதற்கு அத்திவாரம் இடுகிறான்?’ என நினைத்த பொழுது மனம் ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது.
அப்படி என்ன உதவியாயிருக்கும்? ஏதாவது காசு தேவைப்படுகிறதோ? பொதுவாகவே கைவசம் மேலதிகமாகக் காசு இருப்பதில்லை. இந்த நிலையிலை நண்பர்கள் யாராவது அவசரத்தில் கைமாற்றுக் கேட்டால் பெரிய சங்கடம் ஏற்படும். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லுவது? சொன்னாலும் அவன் நம்புவானோ என்னவோ? அவன் நம்பினாலும் அவனுக்கு உள்ள அவசரத் தேவைக்கு கொடுக்க முடியாமற் போய்விட்டதே என்ற கவலை தோன்றும்.
“என்….னாலை… ஏலக்கூடியதென்றால் செய்யிறன்… சொல்லு!” இவன் ‘திக்’கித் ‘திக்’கிப் பதிலளித்தான்.
“உன்னாலை நிச்சயம் ஏலும்!” – இதென்னடா ‘தர்ம’ சங்கடம். காசு தேவையென்றாலும் நண்பர்களிடம் இப்படித்தான் சுற்றி வளைத்துக் கொண்டு வருவார்கள். காசு கடனாகக் கொடுப்ப தென்றாலும் அதுகூட ஒருவித ‘தர்மம்’தான். தனது குறைந்த பட்ச தேவைகளுக்காக கைவசம் தற்செயலாக இருக்கிற சொற்ப காசில் பங்கிட்டுக் கொடுத்து விட்டால் அது திரும்புவதற்கு பல மாதங்கள்கூட தவணையெடுக்கும். சிலவேளை திரும்பி வராமலும் விடும். ஏனென்றால் வேண்டியவனது கையிலும் சம்பளக்காசு மிஞ்ச வேண்டுமே!
“சரி, விஷயத்தைச் சொல்லு! என்ன காசு தேவையா?”
“இல்லை மச்சான்…. எனக்கு நீங்கள்தான் சாட்சிக் கையெழுத்துப் போடவேணும் நான் கலியாணம் முடிக்கப் போறன்!”
வெள்ளவத்தை தேவாலய மணி கணீரென ஒலித்து வாழ்த்துக் கூறியது!
“இதென்ன புதுக் கதையாய் இருக்கு… எங்களுக்கு ஏன் இவ்வளவு நாளும் சொல்லயில்லை… ஆரடாப்பா பொம்பிளை?”
“சுவர்ணா”
நண்பர்கள் இருவரும் யார் அந்தச் சுவர்ணா என்ற சிந்தனையில் ஆழ்ந்தனர்.
‘அட உன்ரை சிங்கள ரீச்சரே?’ என வினவினான் ஜெகநாதன்.
“ஓம்” என மகேந்திரனிடமிருந்து நிதானமாகப் பதில் வந்தது.
ஆச்சரியந்தான். இப்படி நடக்குமென்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. மகேந்திரனுக்கு அவளோடு ‘கொனெக்சன்’ இருக்கிற விஷயம் சிவகுமாரைவிட, ஜெகநாதனுக்குத்தான் கூடத் தெரியும். எனினும் அது இவ்வளவு தூரத்துக்குப் போய் முடியும் என நினைத்திருக்கவில்லை.
‘அப்ப வசமாய் மாட்டியிட்டாய் எண்டு சொல்லு. என்ன மருந்தைப் போட்டு மடக்கினவளவை? எனக்கு அப்பவே தெரியும் இப்படி நடக்குமென்று!” ஜெகநாதனது பேச்சு மகேந்திரனுக்குச் சற்று எரிச்சலையும் ஊட்டியது.
“உனக்கு இந்த விசயத்திலை ஞானம் கூடத்தான் – உந்த விசர்க்கதையளை இனியாவது விடு. அவையள் ஒரு மருந்தும் போடவில்லை. மாயமும் செய்யவில்லை. நானாய்த்தான் விரும்பிச் செய்யுறன்.” எனப் பதிலளித்தான்.
ஜெகநாதன் அவனது கோபத்தைப் பொருட்படுத்தாமல் “ஏன்ராப்பா உனக்கு ஊரிலை ஒரு நல்ல பொம்பிளை கிடைக்கயில்லையே?… போயும் போயும் ஒரு சிங்களத்தியே கிடைச்சிருக்கிறாள்?” என்றான்.
மகேந்திரனது ஆத்திரம் எல்லை மீறிக்கொண்டு வந்தது. “ஏன் முடிச்சுப்போட்டு பிறகு உன்னைப் போலை விட்டிட்டு வந்து இருக்கச் சொல்லுறியோ?” என ஒரு போடு போட்டான்.
ஜெகநாதனது வாய் அடைத்துக் கொண்டது. தான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது என்று பிறகுதான் மகேந்திரனுக்குத் தோன்றியது.
இவ்வளவு நேரமும அவர்களது சம்பாஷணையைக் கவனித்துக் கொண்டு பேசாமலிருந்த சிவகுமார் இப்பொழுது வாயைத் திறந்தான்.
“மகேந்திரன் ஏன் இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்தm?”
அவசரப்பட்டில்லை… ஆறுதலாய் கனநாள் யோசித்துத்தான் முடிவை எடுத்தனான்.
“இந்த வயசிலை இருக்கிற துடிப்பிலையும் ஆசையிலையும் இப்பிடி ஒரு முடிவை எடுக்கலாம். பிறகு காலம் போகப் போக அதுக்காகக் கவலைப்பட வேண்டியும் வரும்… அவள் உன்னோடை ஒத்து வருவாளோ என்றது என்ன் நிச்சயம்?”
“முன்னைப்பின்னை தெரியாமல் பேசிச் செய்யிற பொம்பிளையளே ஒத்து வாழ்க்கை நடத்துகினம் – இதிலை என்ன புதிசாய் பார்க்க இருக்கு – நான் அவளோடு கனநாள் பழகிய பிறகுதான் இந்த முடிவை எடுத்தனான்.”
“என்றாலும் – நீ ஒரு தமிழ் இந்து… அவள் ஒரு சிங்கள கிறிஸ்டியன்.”
“இனம் மதம் என்று பிரிச்சுப் பேசிறதாலை என்ன மச்சான் இருக்கு? எல்லாரும் மனிசர்தானே? மதங்கள் எல்லாம் வெவ்வேறு கோணத்திலை ஒரே வாழ்க்கை முறையைத்தானே சொல்லுது. மனசு ஒத்துப்போனால் சரி… மொழிப்பிரச்சினைகூட இல்லை! இப்ப… நான் நல்லாய்ச் சிங்களம் பேசுவன்… அவள் நல்லாய்த் தமிழ் கதைப்பாள்… பிறகென்ன?”
“எண்டாலும் பண்பாடு கலாசாரம் எல்லாம் வித்தியாசம்தானே…”
“இதிலை கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்க ஒன்றுமில்லை மச்சான்… பண்பாடு கலாசாரம் எல்லாம் மனிசன்ர வாழ்க்கை முறைகளும் அவையனின்ரை பழக்கவழக்கங்களும் தானே… ரெண்டு பேரும் மனமொத்து வாழ்ந்தால் அதைவிடச் சிறந்த பண்பாடு என்ன இருக்கு?”
“சரி… உன்ரை விருப்பப்படி செய்யலாம். மச்சான்… ஆனால் உன்ரை ‘பேரன்ஸ்’ சம்மதிப்பினமோ?”
“அவையிட்டையும் அனுமதி எடுக்க வேணும்தான். ஆனால் இட் இஸ் ரூ லேற் இதை இப்ப சொல்லப்போக… அவையள் போர்க்கொடி உயர்த்திக்கொண்டு வெளிக்கிடுவினம். பிறகு அதைச் சமாளிக்கிறதுக்கு இடையிலை விசயம் முத்திப் போய் விபரீதமாய் முடிஞ்சாலும் முடிஞ்சிடும்… இது அவசரமாய் செய்ய வேண்டிய கலியாணம் பிறகு அவையளைச் சரிப்படுத்தலாம்.”
“ஏன் வற்புறுத்தலா?”
“இல்லை அவளுக்கு இப்ப நாலுமாசம்.”
“விளையாட்டுப் பிள்ளைமாதிரித் திரிஞ்சு திரிஞ்சு நீயும் வலுத்த ஆளடா” என ஜெகநாதன் சொன்னான்.
அதை ஆமோதிப்பதுபோல மகேந்திரன் சிரித்துவிட்டுச் சொன்னான்:
“மச்சான் நீ நினைக்கிறது போல நான் எக்கச்சக்கமாய் போய் மாட்டுப்பட்டிட்டன் என்று மாத்திரம் நினையாதை. நான் நினைச்சால் விட்டிட்டும் ஓடியிருக்கலாம். ஆனால் பாவங்கள் மச்சான். ஏழைச்சனங்கள். என்னிலை நம்பிக்கை வைச்சவளுக்குத் துரோகம் பண்ணக்கூடாது.”
சிவகுமாரின் கண்களால் மகேந்திரனை அளக்க முடியவில்லை. அன்றாடம் பஸ்களில், சினிமாவில், கடற்கரைகளில் என்று எத்தனை கதைகளைச் சொல்லுகின்ற மகேந்திரனா இவன்? சிவகுமார் அவனை நிமிர்ந்து பார்த்தவாறு கேட்டான்;
“மகேந்திரன் இந்த முடிவை உன்ரை பேரன்ட்ஸ் விரும்புவினமா?”
அவன் பெரிதாகச் சிரித்துவிட்டுச் சொன்னான் – “என்ன மச்சான் கலியாணம் முடிக்கப்போறது நான்தானே?”
இவனால் எப்படி எந்தப் பிரச்சினைகளையுமே சிரித்துச் சாதாரணமாக எடுக்க முடிகிறது! நண்பர்கள் ஆச்சரியப்பட்டவாறு திருமண நோட்டிஸ் பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதற்கு பதிவுக்காரரிடம் பயணமானார்கள்.
– தொடரும்…
– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.
– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.