இளமைக் கோலங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 1,892 
 
 

(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

கட்டிலுக்குக் கீழே தள்ளி விடப்பட்டிருந்த பழைய செருப்புகளை எடுத்து, ஊசியைக் குற்றிச் சரிசெய்து கொண்டான் சிவகுமார். அவற்றைக் கால்களில் செருகி நடந்தபொழுது ஒரு பக்கத்தில் ஊசியின் சாதுவான நெருடல் இருக்கத்தான் செய்தது. கொஞ்சம் ‘அஜஸ்ட்’ பண்ணி நடக்கலாம் என நினைத்துக் கொண்டான். 

வழக்கமான ‘சிங்கள ரியூசனுக்கு’ பல்லவியுடன் சென்ற மகேந்திரன் இன்னும் வரவில்லை; ‘இரவுச் சாப்பாட்டுக்குக் கறி சமைக்கவும் வேணும்.’ – சலிப்புத்தட்டுகிற மனதோடு எழுந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கழுவுவதற்காகப் பின்பக்கமாகச் சென்றான். 

பின்பக்க வேலியோரமாக நிற்கும் குரோட்டன் செடிகள் காற்றில் அழகாக ஆடுகின்றன. அந்தச் செடிகளுக்குள்ளிருந்து பூச்சியொன்று ‘கிறீச்’ எனச் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பூச்சிகளுக்கு ஓர் அற்புதமான சக்தி இருக்கிறதாம். சன சந்தடி சத்தங்கள் அதிகமான பகுதியாயினும் சரி, தனது துணையைத்தேடி ஒரு பூச்சி அழைக்கின்ற ஓசை அதன் சோடிக்கு இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்குமாம்- எங்கோ வாசித்திருக்கிறான். 

பக்கத்து வீட்டில் மோட்டார் வாகனமொன்று ‘ஸ்ரார்ட்’ செய்யப்படுகின்ற ஓசை – எங்கே போகப் போகிறார்களோ? 

சிவகுமார் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு திரும்பிய பொழுது ‘அனெக்ஸ்ட்’ பலகையில் யாரோ தட்டுகிற சத்தம் கேட்கிறது. அவன் உன்னிப்பாக அந்தப் பக்கம் கவனித்தான் தற்செயலாகத் தட்டுப்படுகின்ற சத்தமில்லை. யாராக இருக்கும்? 

அகிலா அந்தப் பக்கம் நின்று செருமினாள். பதிலுக்கு என்ன செய்வது என்று இவன் தடுமாறினான். பேசாமல் உள்ளுக்கு ஓடிவிடலாம் போல இருந்தது. இதற்கு முன்னர் – ஒருபோதுமே அவளுடன் கதைத்ததில்லை. இப்பொழுது தன்னையே அழைக்கிறாள் என்பது சரியாகத் தெரியாமற் கதைக்கலாமா? அவள் அப்படிக் காரணத்தோடுதான் செய்கிறாளோ அல்லது தற்செயல் நிகழ்வுகளோ தெரியவில்லை. தன்னையே அவள் அழைப்பதாக வைத்துக் கொண்டாலும் முதலில் முகம் பார்க்காமல் எப்படிக் கதைப்பது? என்ன கதைப்பது? அவள் எதற்காக அழைக்கிறாள்? இதென்னடா தர்மசங்கடம்! அல்லது இன்னொரு மானக்கேடா? இன்றைக்கு என்ன முழுவியளம்? பேசாமற் போய்விடலாமா? 

தான் இன்னும் அங்கேயே நிற்பதை உணர்த்துவதற்காக இவனும் வலிந்து செருமினான். உடனடியாக அவ்விடத்தை விட்டுப் போக ஏனோ மனது மறுத்தது. 

“உங்களத்தான்!” 

“என்…னையா?” 

“ஓம்!” 

காரணம் புரியாத பதட்ட உணர்வு உடலெங்கும் ஊடுருவியது. அப்படி அவள் வலிந்து கதைப்பதற்கு என்ன ரகசியம் இருக்கும்? 

“இஞ்ச கொஞ்சம் வாங்களன்!” 

-இவன் மந்திரத்திற் கட்டுண்டவனைப்போல, பலகைப் பக்கமாகச் சென்றான். அகிலாவுடன் கதைத்து அவளது நட்பைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அறையில் ஜெகநாதனும் மகேந்திரனும் எவ்வளவு போட்டி போடுகிறார்கள்! இப்பொழுது அந்த அதிர்ஷ்டம் இவனையே தேடி வருகிறதா? ஒருவிதமான பெருமித உணர்வு தோன்றியது. நண்பர்கள் வந்ததும் இதைச் சொன்னால் பொறாமைப்படுவார்கள். அல்லது நம்புவார்கள் தானோ என்னவோ! 

தான் பலகைக்கு அண்மையாக வந்துவிட்டதை உணர்த்த மீண்டும் ஒருமுறை செருமிக் காட்டினான். சுவரிலிருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பல்லி ‘சச்சச்சச்’ என்று சாத்திரம் சொன்னது. 

“உங்களுக்கு வதக்கி ஆக்கின முருங்கைக்காய்க் குழம்பு பிடிக்கும்தானே?” 

சிவகுமார் ஆச்சரிய மேலீட்டால் கதைக்க முடியாமல் சற்றுத் தாமதித்துவிட்டுக் கேட்டான்… 

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” 

“சாத்திரம் பார்த்தன்!” – அவள் மெல்லிய ஓசையிற் சிரித்தாள். இவன் விழித்தான். 

“சாத்திரமோ?” 

“இல்லை… அப்ப… நீங்க கதைச்சுக் கொண்டிருந்தது…கேட்டுது!” 

“ஐயோ!” 

“என்ன பயப்பிடுறீங்க?” 

“நாங்கள் கதைக்கிறதெல்லாம் உங்களுக்குக் கேட்குமா?” 

“ஓ!… நல்ல வடிவாய்க் கேக்கும்!” 

“ஐயோ!” 

“என்ன… மறுகாவும் ஐயோ?” 

“நீங்கள் கேட்கக் கூடாத கதையெல்லாம் கதைச்சிருப்பம்… அதுதான்…” இவன் தடுமாறினான். 

“பயப்பிடாதையுங்க… ஆம்பிளையள் எல்லாம் கதைப்பானுகள்… அப்படிக் கதைகளுக்கெல்லாம் நான் காது குடுக்கிறதில்லை.” 

சிவகுமாருக்கு உண்மையிலேயே இப்பொழுது பயமும் பிடித்துக் கொண்டது. இரவு நேரத்தில் தான் இப்படி நின்று கதைத்துக் கொண்டிருப்பது ஜெகநாதன் வந்து தற்செயலாகக் கண்டுவிட்டால் என்ன நினைப்பான்? இதையே கரவாக வைத்துக் கொண்டு எத்தனை கதைகளைச் சோடிப்பான்? 

“அப்ப… நான் போகட்டா?” 

“வந்த விசயத்தையும் மறந்து போறியள்?… முருங்கைக்காய் குழம்பு வேண்டாமா?” 

என்ன பதில் சொல்வதென்று இவனுக்குப் புரியவில்லை. வேண்டாமென்று சொல்லிவிடலாம். இவ்வளவு வலிய வந்து கேட்டவளுடைய மனத்தை முறித்த மாதிரிப் போய்விடும். கேட்ட மாத்திரமே கைநீட்டி வேண்டுவதற்கும் மனது கூசியது. 

“பின்னுக்கு நிண்டு பேசிறது சரியில்லதான்… வீட்டுக்கு வாங்களன்!” என அவள் கூறிவிட்டு இவனது பதிலையும் எதிர் பாராமற் சென்றாள். நிலைமை தற்காலிகமாகச் சமாளிக்கப்பட்டதில் இவனுக்கும் திருப்திதான். சிவகுமார் ஆச்சரியத்தோடு யோசித்துப் பார்த்தான்; மாலை ஐந்து மணிபோல மூவரும் அறையில் இருந்த பொழுது இன்று என்ன சமைக்கலாம் என்ற பிரச்சினை எழுந்தது. அப்பொழுதுதான் சிவகுமார் சொன்னான் : 

“மச்சான்! வதக்கிக் குழம்பு வைச்ச முருங்கைக்காய் கறி எண்டால் எவ்வளவு ருசியாயிருக்கும்…. அப்பிடியெல்லாம் சாப்பிட்டு எவ்வளவு நாளாகுது!” 

“சிவா… கிடைக்காத பொருளுக்கு ஆசைப்படக் கூடாது! எங்களைப் பொறுத்தவரை… காய்கறிகளையும்… வெண்காயம் மிளகாயையும் வெட்டிப் போட்டு… தேங்காய்ப் பாலையும், தூளையும் தண்ணியையும் உப்புப் புளியையும் சேர்த்துக் கலக்கி… அடுப்பில வைச்சு இறக்கி எடுக்கிறதுதான் கறி…. அப்படிச் சாப்பிடுறதுக்கும் ஒரு மாதத்துக்கு மேலை பழகியிட்டம்… பிறகேன் உனக்கு இந்த விபரீத ஆசையெல்லாம்?” என வேடிக்கையாகக் கேட்டான் ஜெகநாதன். 

“இல்லை ஜெகா… எனக்கு எதிலையாவது விருப்பம் வந்திட்டால்… எப்படியாவது அதை அடைஞ்சே தீரவேணும்… இல்லாட்டி மனம்… கேளாது. எத்தனை நாளைக்குத்தான்… எங்கடை உப்புச் சப்பில்லாத கறியைச் சாப்பிடுறது?… வாய்க்கு ருசியாய்ச் சாப்பிடுறதுக்காகவெண்டாலும் ஒருக்கால் யாழ்ப்பாணம் போட்டு வரலாம் போலையிருக்கிறது.” 

“இதுக்குத்தான்ரா சொல்லுறது… நேரகாலத்தோடை கலியாணத்தை முடியுங்கோ எண்டு!… ஒருத்தியைக் கலியாணம் முடிச்சுக்கொண்டு வந்து பக்கத்திலை வைச்சிருந்தால்… இப்பிடிச் சின்ன விசயங்களுக்கெல்லாம் யோசிச்சுக் கொண்டிருக்கத் தேவை யில்லைத்தானே?” என இலவச ஆலோசனை வழங்கினான் மகேந்திரன். 

இந்தச் சம்பாஷணைதான் அகிலாவுக்குக் கேட்டிருக்கக்கூடும் என்ற நினைவுடனே அகிலாவின் வீட்டை (அறையை) நோக்கி நடந்தான் சிவகுமார். 

இடம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை நுணுக்கமாக அழகுபடுத்தி வைத்திருக்கின்ற பக்குவம் இவனுக்கு வியப்பை அளித்தது. தங்களுடைய அறைக்கும் இந்த அறைக்குமுள்ள வித்தியாசம் எவ்வளவு! பிரம்மச்சாரிகளுடைய அறைகளின் கதி அதுதான். தங்களைப் போல சமையல் வேலைகளையும் ஒரே உள்ள அறையிலேயே வைத்திருக்காமல் பின்புறமாக அறையாக்கப்பட்ட பகுதியைத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். 

“என்ன?… வந்தவர்… இருக்கக்கூடயில்ல… என்னத்தக் கண்டு சொக்கிப் போய் நிற்கிறீங்க?” 

“இஞ்சை உள்ள எல்லாமே அழகாய்த்தான் இருக்கு!” 

அவனது சிலேடையான குறும்பை அவள் ரசித்தாள். பின்னர் அம்மாவுக்கு… “இவர்தானம்மா பக்கத்து அறையில் இருக்கிற மிஸ்டர் சிவகுமார்” என அறிமுகப்படுத்தினாள். 

ஓ! இவள் பெயரைக்கூடச் சரியாகத் சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறாளே! விடிந்தால் வேலைக்குப் போகவும், மாலையில் வந்தால் தானுண்டு தன்பாடுண்டு என இருக்கவும்தான் இவளுக்குத் தெரியும் எனக் கருதியிருந்தது பிழையாகிப் போய்விட்டது. 

“வாங்க தம்பி!” என்றவாறு அம்மா ஒரு கதிரையில்அமர்ந்தாள். அந்த அறையில் ஒரு பக்கத்தில் கட்டிலொன்றும் மறுபக்கத்தில் நான்கு வரவேற்புக் கதிரைகளும் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. “கதைச்சுக் கொண்டிருங்க… ரீ போட்டுக் கொண்டு வாறன்” என்றவாறு அகிலா சென்றாள். 

“இல்லை… வேண்டாம்!” 

“இதென்ன தம்பி… முதல் முதல்ல வந்திருக்கீங்க – தண்ணி வென்னி குடியாமல் போறதா?” – அம்மா வற்புறுத்தினாள். 

சம்பாஷணைகள் வளர்ந்தன. 

அம்மா தனது பிரச்சினைகளையெல்லாம் கவலையோடு கூறினாள். மட்டக்களப்பில் உள்ள ஆரையம்பதி ஊர் அகிலா பெற்றோருக்கு இரண்டாவது மகள். தந்தை நெசவுத் தொழிற்சாலையொன்றில் காவலாளியாக உத்தியோகம் பார்க்கிறார். மூத்த மகளுக்குத் திருமணம் முடித்து வைத்ததோடு அவர்களது கைகளும் வரண்டு விட்டன. ஆரையம்பதியில் சொந்தமாகவிருந்த காணித் துண்டொன்றும் சிறிய வீடும் அக்காவுக்குச் சீதனமாகக் கொடுத்தாயிற்று. மற்றைய செலவுகளுக்காகத் தொட்டம் தொட்டமாகப் பட்ட கடன்கள் தலைக்கு மேல் இருக்கின்றன. அப்பாவும் மற்றைய தங்கையும் கடைசித் தம்பியும் அக்காவுக்குச் சீதனமாகக் கொடுத்த வீட்டில் இருக்கிறார்கள். 

“கடவுள் புண்ணியத்தில் அகிலாவுக்கு இந்த உத்தியோகமாவது கிடைச்சபடியாத்தான் ஏதோ எங்கடை பாட்டையும் பாத்துக் கொண்டு அவனுகளுக்கும் ஏதாவது அனுப்ப முடியுது… அவர் உழைக்கிறது என்னத்தக் காணும்” எனப் பெருமூச்சோடு கூறினாள் அம்மா. 

சிவகுமார் இரக்கத்தோடு அகிலாவைப் பார்த்தான். இந்தக் குழந்தைத் தன்மையான பெண்ணுக்குத்தான் எவ்வளவு பொறுப்புக்கள்! 

அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனது பொறுப்புக்களும் சுமைகளும் அற்பமானவையாகத் தோன்றின. பெண்ணாகப் பிறந்த ஒருத்தி இவ்வளவு சுமைகளையும் ஏற்று நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் பொழுது தன்னால் ஏன் முடியாது என எண்ணிப் பார்த்தான். அடுத்தகணமே அந்த எண்ணமும் சுயநலமானதாகத் தோன்றியது. எந்த ஒரு விசயத்தையும் தன்னோடு ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு பலவீனம்தானோ என நினைத்தான். 

“என்ன பேசாமலிருக்கீங்க. கதைக்க விருப்பமில்லையா?” அகிலா அவனது மௌனத்தைக் கலைக்க முயன்றாள். 

“அம்மா கதைக்கிறா தானே… கேட்டுக் கொண்டிருக்கிறேன்…” 

“அம்மாவுக்கு வேலையென்ன?… வாறவனுக எல்லாரிட்டையும் தங்கட கவலைகளைச் சுமத்தத்தான் தெரியும்… இதுக்கெல்லாம் கவலைப்பட்டு என்ன செய்யிற? எல்லாம் அவங்கட அவங்கட தலையில எழுதியிருக்கு!” 

“தலையெழுத்தெண்டாப் போல?… கவலைப்படாம முடியுமா? எண்ட பிள்ளை இப்பிடிக் கிடந்து கஷ்டப்பட வேணுமெண்டு எழுதியிருக்கு?… முருகா… இதுக்கொரு வழியைக் காட்டுவாயா?” அம்மாவின் மனசு அங்கலாய்த்தது. 

அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது சிவகுமாருக்கு; ஆனால் அது தன்னால் இயலாத காரியம் என்பதையும் உணர்ந்தான். ஒருவித கவலையும் பதட்டமும் மனதிலே உருவெடுத்தன. நண்பர்கள் வருவதற்கு முன்னரே அறைக்குப் போய்விட வேண்டுமென நினைத்தான். 

அவர்களிடம் விடைபெற்ற பொழுது அகிலா ஒரு பாத்திரத்தில் கறியைக் கொண்டு வந்து கொடுத்தாள். இவன் நன்றியோடு கேட்டான் : 

“நீங்கள் ஏன்…..எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுறீங்கள்?” 

“இதில் என்ன கஷ்டமிருக்கு?… நீங்க ஆம்பிளையள்… வேலையால வந்து களைப்போடை ஆக்கி வாய்க்கு ருசியில்லாமல் சாப்பிடக்குள்ள அதப் பார்த்துக் கொண்டு பேசாமலிருக்க ஏலுமா?” 

“பிள்ளை அடிக்கடி சொல்லுறவதான் தம்பி!… பாவம் ஆம்பிளையள் என்னெண்டு ஆக்கிறது… கஷ்டப்படுதுகள் எண்டு.” 

அகிலாவுடைய பெருந்தன்மையான குணத்தை நினைத்து வியப்படைந்தான் சிவகுமார்; “அதுக்கென்ன செய்யிறது?… கடையளிலை சாப்பிட்டு அலுத்துப் போனம்… நாங்கள் சமைச்சால் துப்பரவாயும் இருக்கும்… சத்தான சாப்பாடும் சாப்பிடலாம்… கடையளிலை… என்னத்தை அவிச்சுப் போடுறாங்களோ…. ஆர் கண்டது?” 

“வேலை செய்யிறனீங்கள் நல்லாய்ச் சாப்பிடவும் வேணும்தானே?… சுவர் இருந்தாத்தானே சித்திரம் எழுதலாம்?” 

அம்மாவுடைய பேச்சைக் கேட்டு அகிலா சிரித்தாள். சிவகுமாரும் சிரித்துக்கொண்டே விடை பெற்றான். 

அத்தியாயம்-8

‘இவ்வளவு நேரமாகியும் இவர்களைக் காணவில்லையே’ என்ற எண்ணத்தோடு அறைக்கு வெளியே வந்து பார்த்தபொழுது மகேந்திரன் திருமதி வெங்கடாசலத்தோடு (லான்ட்லேடி) கதைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அவன் கதைத்துக் கொண்டு நிற்கின்ற சுவாரஸ்யத்தைப் பார்த்தால் இப்போதைக்கு வரமாட்டான் என்பது நிச்சயம். இப்படியே கதைத்துவிட்டு வந்து அவளது கட்டமைப்பான உடலமைப்பையும் கவர்ச்சியான சிரிப்பைப் பற்றியும் சொல்வான். அவளது அழகுக்கும் எடுப்புக்கும் அவர் (மிஸ்டர்) தோதான ஆளில்லை என்று வாதிப்பான். தன்னை அடிக்கடி இழுத்து வைத்துக் கதைப்பதற்கும் காரணம் அதுதான் என்பான். 

இந்த எண்ணங்களெல்லாம் அவனது சலனங்கள்தானோ என்று சிவகுமார் நினைத்திருக்கிறான். எந்நேரமும் இதுபோன்ற எதிர்பார்ப்புக்களோடு இருப்பதாற்தான் அவனால் இப்படியெல்லாம் நினைக்க முடிகிறது போலும். திருமதி வெங்கடாசலத்தை ஒரு வஞ்சகமில்லாத மனுசியாகத்தான் இவனாற் கருத முடிகிறது. அவளது கள்ளம் கபடமில்லாத சிரிப்பு அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. 

முருங்கைக்காய்க் கறியின் நினைவு பசியை அதிகரித்துக் கொண்டிருந்தது. ‘ஜெகநாதனெண்டாலும் நேரவழிக்கு வருகிறானில்லையே’ என்று நினைத்த பொழுது வாசற் கதவைத் திறந்து கொண்டு அவன் நுழைந்தான். (அவனுக்கு ஆயுசு நூறு!) மகேந்திரன் வீட்டுக்காரியோடு கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மனமில்லாத ஒரு புன்னகையை மாத்திரம் உதிர்த்துவிட்டு வந்தான். என்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாகச் சம்பாஷிப்பது இவனுக்குச் சம்மதமில்லை என்பதை மாத்திரம் முகம் காட்டிற்று. ஜெகநாதன் மனதிலே கற்பனை செய்கிற அளவுக்கு செயற்திறன் இல்லாதவன். செயல் வீரன் மகேந்திரன் மேல் அடிக்கடி இவன் முகச்சுளிப்போடு பாய்வதன் காரணமும் இதுதான். 

மகேந்திரன் ஒன்றுக்கும் கவலைப்படாமல் கதைத்துக் கொண்டிருந்தான். 

ஜெகநாதன் நெடுநாள் பசி கிடந்தவனைப்போல அவசரப் பட்டான்; “அவன் கிடக்கட்டும் மச்சான்! நாங்கள் சாப்பிடுவம்” 

“சரியில்ல… அவனும் வரட்டுக்கும்.” 

நண்பர்களின் பொறுமையை அதிக நேரம் சோதித்த பின்னரே மகேந்திரன் அறைக்கு வந்தான். எல்லோருமாகச் சாப்பிட அமர்ந்தபொழுது, கறியை எடுத்து முன்னால் வைத்தான் சிவகுமார். 

“இதென்னடா புதுக்கறி!… நல்ல மணம் குணமாயிருக்குது!” இருவரையும் ஆட்கொள்ளும் ஆச்சரியம். 

“நான்தான் சமைச்சனான்!” 

“ஓ! பெரிய சமையல்காறனெண்டு இவருக்கு எண்ணம்! சொல்லடா விஷயத்தை?” ஜெகநாதன் அவசரப்பட்டான். சிவகுமார் குரலைத் தாழ்த்திக் கூறினான்; “அகிலா தந்தது!” ஜெகநாதன் எதிர்பார்ப்பது போலவே சங்கதி கவலைக்கிடமானதாக இருந்தது. “சும்மா கதை விடாதை… அவளாவது தாறதாவது…!” அது பொய்யாகவே இருக்கக்கூடாதா என்ற ஏக்கம். 

“உண்மையாகத்தான் மச்சான்!… நாங்கள் பின்னேரம் கதைச்சுக் கொண்டிருந்தது அவையளுக்குக் கேட்டிருக்குது… பிறகு கூப்பிட்டுத் தந்ததுகள்… பாவங்கள்… நல்ல சனம்.” 

“ஓ!… அப்ப மாப்பிளை பிடிக்கிற யோசனை போலையிருக்கு! எங்கத்தை ஆக்களெண்டு தெரியும் தானே?” 

சிவகுமார் இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. “மெதுவாய்க் கதையடாப்பா!… அங்காலை கேக்கப் போகுது… அதுகள் மினக்கெட்டுச் செய்து தந்திருக்குதுகள்… நீ என்ன பேய்க்கதை கதைக்கிறாய்?” 

“கேக்கட்டன்… கேட்டால் என்ன பயமே… ஆரை ஏமாத்தி அமத்தலாமெண்டு பாத்தாளவை? உதுக்கு ஆரேன் உன்தரவளி இளிச்சவாயனைப் போய்ப் பிடிக்கச் சொல்லு.” 

சிவகுமாரது மனம் புகைந்தது. இந்தச் சம்பாஷணையை அகிலா கேட்க நேரிட்டால் எவ்வளவு மனம் வருந்துவாள் என்ற கவலையும் தோன்றிற்று. 

“சரி… சரி… உனக்கு விருப்பமில்லாட்டிச் சாப்பிட வேண்டாம்… வீணாய்த் தேவையில்லாத கதை கதையாதை!” 

சிவகுமார் சாப்பிடத் தொடங்கினான், மகேந்திரன் சங்கடத்துடன்; “எடுப்பதா…விடுவதா?” என்ற யோசனையோடு ஜெகநாதனை நோட்டம் விட்டான். 

“மகேந்திரன் நீயும் உதைச் சாப்பிடப் போறியே? அதுக்குள்ள… என்ன மருந்து போட்டிருப்பாளவையோ தெரியாது! சொல்லவேண்டிய கடமைக்குச் சொல்லியிட்டன்… இனி உன்ரை விருப்பம்.” 

வீதியில் யாரோ சிலர் நிறை தண்ணியில் தமது கருத்துச் சுதந்திரத்தைப் பிரயோகித்துக் கொண்டு நடக்கிறார்கள். அக்கம் பக்கத்திலும் வீடுகள் இருக்கின்றன. தாங்கள் மனிசத் தன்மையில்லாமல் சத்தம் போட்டுச் செல்வது அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. 

“அதையெல்லாம் நீ நம்பிறியே மச்சான்? மருந்தும் மாயமும்… எல்லாம் மோட்டுக்கதையள்” – மகேந்திரன் சமாதானம் கூறினான். ஜெகநாதன் எதையும் கேட்கத் தயாராயில்லை. அவனுக்கு சிவகுமாரைப் பார்க்கவே எரிச்சலாயிருந்தது. தாங்களெல்லாம் அகிலாவைப் பற்றிக் கதைக்கும் சந்தர்ப்பங்களில் அமுசடக்கிக் கள்ளன் மாதிரிப் பேசாமல் இருந்துவிட்டு ‘நைசாக’ வேலையைக் கொண்டு போயிருக்கிறான் என்ற ஆத்திரம் மட்டும் மேலோங்கி நின்றது. 

சிவகுமார் யாருடனும் கதைக்க விரும்பாமலிருந்தான். சமூகம் இவ்வளவு கேவலமானதாகவா இருக்கிறது? படித்தும் பகுத்தறிவில்லாத சனக்கூட்டந்தான் பெருகிக் கொண்டே இருக்கிறது. 

விரைவாகவே சாப்பாட்டை முடித்துக் கொண்டு எழுந்து சென்றான் ஜெகநாதன்.இல்லாவிட்டால் எல்லோருக்கும் கடைசியாகப் பந்தியை முடிப்பது அவன்தான். இப்பொழுது சுறுக்காக எழுந்து சென்றது மகேந்திரனுக்குச் சிரிப்பாக இருந்தது. இவ்வளவு நேரமும் மெதுவாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்த அவன் ஜெகநாதன் சென்ற பின்னர், “உவனுக்கு மச்சான்… எல்லாம் கரவுதான்!” என்றவாறே தானும் அந்தக் கறியை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். 

சிவகுமாருக்கு சிரிப்பு மேலிட்டது; “இவனும் மற்றவனுக்குப் பயந்துதான் வாழ்கிறான்! பெரிய விண்ணன்களைப் போல கதைக்குக் குறைச்சலில்லை. தங்கடை கருத்துக்களை நேர்மையாய் சொல்வதற்கே முதுகெலும்பில்லாத மடையன்கள். 

‘எங்களைச் சூழ உள்ள மனிதர்களையும் இந்தச் சமூகத்தையும் எவ்வளவாக நேசிக்கிறோம். ஆனால், எங்கே எத்தனை பேர் போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! நேர்மை, இலட்சியப் பிடிப்பு என்பதெல்லாம் காண்பதற்கு அரிதாகவே இருக்கின்றது. சுயநலவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் ஏமாற்றுக் கும்பல்களும் மலிந்து விட்டனர். இவர்களுடைய பண்புகள் எப்பொழுது நாகரிகமடையப் போகின்றன? நாகரிகம் என்பதே கல்வியில், கலாசாரத்தில், வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களில் ஏற்படுகின்ற முன்னேற்றமான நல்ல மாற்றங்கள் என்பதை ஏன் இவர்கள் உணர்கிறார்களில்லை? 

‘இந்த மகேந்திரன் தலைமுடியை நீளமாக வளர்ப்பதையும் விதவிதமாக ஆடைகள் அணிவதையும் தான் நாகரிகம் எனக் கருதுகின்றானோ?’ 

சிவகுமார் மௌனமாகவே இருப்பதைப் பார்க்க மகேந்திரனுக்குச் சங்கடமாக இருந்தது. 

‘என்ன மச்சான் என்னோடையும் கோபமா?’ 

“சீ!.. எனக்கென்ன கோபம்? ஒவ்வொருதற்ரை போக்கையும் யோசிச்சன்.” 

“அதுக்கென்ன செய்யிறது?… அது அவரவற்றை பலவீனம், மனிசனாய்ப் பிறந்தவனுக்கெல்லாம் இப்படி ஏதாவது பலவீனம் இருக்கத்தான் செய்யும்!” எனத் தத்துவம் பேசினான் மகேந்திரன். 

அதற்குப் பதில் கூற விரும்பாதவனைப்போல சாப்பாட்டுக் கோப்பையை எடுத்துக்கொண்டு ‘பைப்’ பக்கமாகச் சென்றான் சிவகுமார். 

இராக் குருவியொன்று அவசரமாக ஏதோ கூறிக் கொண்டு பறக்கிறது. அந்த அவலமான கூவலிலும் ஓர் இனிமை இருக்கத்தான் செய்கிறது. 

அத்தியாயம்-9

அழகை இன்னும் கவர்ச்சியாகக் காட்ட வதற்குப் பெண்கள் விதம் விதமாகப் பல வர்ணங்களில் ஆடைகளை அணிந்து கொள்வது போல வர்த்தக நிலையங்களின் பெயர்ப் பலகைகள் தோற்றமளிக்கின்றன. இலகுவில் விலை போகக் கூடிய பொருட்களுக்குக் கூடக் கவர்ச்சியான விளம்பரங்களும் தேவைப்படுகின்றதே! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு உத்திகளைக் கையாண்டு மிக நுணுக்கமாகத் தங்கள் பொருட்களுக்குத் தருகின்ற விளம்பரங்கள்! அங்கேயும் ஒருவரை ஒருவர் வென்று செல்வதற்குப் போட்டிகள்; எங்கேதான் போட்டி இல்லை? 

கண்ணாடிப் பெட்டிகளில் காட்சியறைகளிலெல்லாம் ‘எங்களை எடுத்துக் கொள்ளுங்களேன்’ என்பது போல வீற்றிருக்கும் பொருட்கள், பொருட்கள்! அவற்றை விலை கொடுத்து அனுபவிக்க லாயக்கில்லாத பெரும்பாலோனோர் நின்று பார்த்து -கவர்ச்சியான உடைகளுடன் எடுப்பாக வீதியில் செல்கின்ற கன்னியரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்செடுக்கின்ற சுமாரான இளைஞர்களைப்போல, சொக்கிப்போய் நிற்கின்ற பரிதாபமான கோலங்கள். 

சிவகுமார் காலி வீதி ஓரமாக வர்த்தக நிலையங்களின் ‘ஷோகேஸ்’களைப் பார்த்தவாறே நடந்து கொண்டிருக்கிறான். இப்படிப் பார்த்துக்கொண்டு செல்வதே ஒரு சுவையான பொழுதுபோக்குத்தான். எத்தனை நாட்கள் பார்த்தாலும் அலுக்காது. 

வர்த்தக நிலையமொன்றின் முன்னிலையில் பல வேறு ரகங்களிலுள்ள சப்பாத்துக்களும் செருப்புகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. நவீன மயமாக பலவர்ணக் காலணிகள் கண்களைப் பறிக்கின்றன; மரக்கொப்புகள் கிளைவிட்டுப் பிரிவது போன்ற அமைப்பில் அவை அடுக்கப்பட்டு அவற்றிற்குரிய விலைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. (சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!) 

சிவகுமார் மிக அவதானமாக அடியெடுத்து வைத்து நடந்து கொண்டிருக்கிறான். இல்லாவிடில் நேற்றையைப்போல நேரம் காலம் தெரியாமல் செருப்பு காலை வாரிவிட, அந்த இக்கட்டான நேரத்தில் சந்தி சிரிக்க நிற்கலாமா? 

காலி வீதியிலிருந்து கிளை விட்டுப் பிரிகின்ற வீதியொன்றின் ஓரத்தில் ‘க. தங்கவேலு’ என்ற பெயர்ப்பலகை குறிப்பிடுவது ஒரு பெரிய தாபனம் அல்ல. தங்கவேலு ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. வீதி ஓரத்து மரநிழலில் பழைய செருப்புக்களைப் பரவிவிட்டு உட்கார்ந்திருக்கிறான். வாயைப் பிளந்துகொண்டிருக்கும் மீன் கருவாடுகளைப் போல பல பழைய சப்பாத்துக்கள் அடுக்கப் பட்டிருக்கின்றன. மற்றும் செருப்புத் தையலுக்குத் தேவையான ஊசி, நூல், தோல், இரும்புக்கட்டை இத்தியாதி பொருட்களுடன் அவனது தாபனம் எவ்வித விளம்பரங்களும் இன்றி சமூகப்பணி செய்து வருகிறது. ‘க. தங்கவேலு’ என்ற பெயரை மாத்திரம் கோணல் மாணலாக சிறிதும் பெரிதுமாக சுண்ணாம்பினால் எழுதியிருக்கிறான். 

வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தவன் சிவகுமாரைக் கண்டதும், 

“வாங்க சாமீ!” என முக மலர்ச்சியோடு வரவேற்கிறான். பின்னர் உதட்டில் விரல்கள் இரண்டைப் பதித்து ‘சளக்’கென வெற்றிலைச் சாறை ஒரு பக்கமாகத் துப்பி தனது பொழுதுபோக்கிற்குத் தற்காலிகமான ஓய்வு கொடுக்கிறான். 

சிவகுமார் அவன் முன்னிலையில் செருப்பைக் கழட்டி விட்டதும் அதை ஆதரவோடு எடுத்து வருத்தம் இருக்கின்ற இடத்தைக் கண்டுபிடித்துப் பரிகாரம் செய்யத் தொடங்குகிறான். 

அவனுக்குப் பக்கத்தில் சற்று விலகி விரிக்கப்பட்டிருக்கின்ற பொலித்தீன் தாளின் மேல் இரண்டு பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கின்றன. ஒரு குழந்தையின் அரையில் ‘யங்கி’ மாத்திரம் இருக்கிறது. மற்றதுக்கு இதுகூட இல்லை. சனசந்தடியும் வாகனங்களின் இரைச்சலும் அவர்களின் தூக்கத்தை எந்தவிதத்திலும் பாதிப்பது போலத் தெரியவில்லை. இன்னொரு பக்கத்தில் மூன்று கற்கள் அடுப்பாக அடுக்கப்பட்டு அதன்மேல் பானையொன்றில் ஏதோ அவிகிறது – சமையல் நடக்கிறது! எரிகின்ற அடுப்பிற்கு காற்றுத் தடையாக இருக்காமல் ஒரு சிறிய தகரத்துண்டினால் மறைப்புச் செய்திருக்கிறான். 

“என்னப்பா சமையல் நடக்குதுபோலை?” சிவகுமார் தனது சந்தேகத்தை வினாவாக்கினான். 

“ஆமங்க சாமி!” 

ஆச்சரியமாக இருந்தது! நிரந்தர இருப்பிடமின்றிப் பாதையோரத்தில் வாழ்கின்ற சீவன்களும் இருக்கத்தான் செய்கின்றன! இப்படி மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாதையோரங்களையும் வீதி முடக்குகளையும் நம்பி வாழ்கின்ற எத்தனையோ குடும்பங்களைக் கொழும்பிலே காணலாம். 

“இரவிலையும் இதிலைதான் படுப்பீங்களா?… மழை வந்தால்?… இந்தக் குழந்தைகளையும் வைச்சுக் கொண்டு கஷ்டம்தானே?” 

“கஷ்டத்தைப் பார்த்தா முடியுங்களா… செலவேளைல இங்கிட்டு ஒதுக்கமா சரிஞ்சுக்குவம்… இன்னொரு எண்ணம் வந்துச்சின்னா… ஐயா அவங்கடை கடவாசல்ல போய்த் தூங்கிக்குவம்.” 

அவன் ஐயா எனத் தன்னையே குறிப்பிடுவது போலிருக்கவே சமசியத்தோடு திரும்பவும் கேட்டுப் பார்க்கிறான். 

“ஆமாங்க… அங்கிட்டு இருக்கே ஐயா அவங்கட கட…” என சிவகுமாரையே குறிப்பிட்டுப் பதிலளித்தான் தங்கவேலு. 

“இதென்னப்பா… புதினம்…! எனக்கு இஞ்சை ஒரு கடையும் இல்லையே?” 

“ஐயா யாழ்ப்பாணம்தானே?” தங்கவேலு சந்தேகத்தோடு கேட்டான். 

“ஓம்!” 

“அதுவும் யாழ்ப்பாணத்துக்காரங்கட கடைதானுங்க!” 

சிவகுமார் சிரித்துக் கொண்டான். அந்த ஏழையின் மனோநிலையை அறிய ஆச்சரியமாகவும் இருந்தது. ஒரே ஊரவர் என்பதற்காக ஒன்றாகக் கருதுகின்ற உள்ளம் யாருக்கு இருக்கும்? ஆனால் ஊர் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொருத்தரும் பிரிந்து பிரிந்து பிரிந்து எத்தனை வேறுபாடுகள்? அக்கம் பக்கத்து வீடுகளில் ஒற்றுமையாக இருக்கின்ற குடும்பங்களை எங்கே காணலாம்? 

“என்னப்பா சமையல்?” – சிவகுமார் விடுத்து விடுத்துக் கதை கொடுத்தான். அவனோடு கதைப்பதற்கு மிக விருப்பமாக இருந்தது. 

“சோறுதானுங்க!” 

“ஒவ்வொரு நாளும் அரிசிக்கு உன்ரை உழைப்புப் போதுமா தங்கவேலு?” சிவகுமார் இன்னும் கரிசனையோடு கேட்டான். தனது பெயரை ஆதரவாக அழைத்தது அவனுக்குப் பெரிய புளுகமாக இருந்தது. 

“ஆமாங்க… தொறை! படச்சவன் படி அளக்காமலாவுடுவான்?…. கெடைக்கிற சல்லியில் அந்திக்கு எதுன்னாச்சும் வேண்டலாமுங்க.” 

“ஒரு நாளைக்கு எவ்வளவு உழைப்பாய்?” 

“மூணு றூபாவும் கெடைக்கும்… நாலு றூபாவும் கெடைக்கும்… சில நாளைல எட்டு ஒம்போது றூபாவும் கெடைக்கும்.” – எட்டு, ஒன்பதைக் குறிப்பிட்டபோது தங்கவேலுவின் கண்கள் பெரிய ஆனந்தத்தாலும் ஆச்சரியத்தாலும் விரிந்து அபிநயம் செய்தன. 

“மூன்று ரூபா அரிசிக்குத்தானே காணும்!… கறிக்கு என்ன செய்வாய்?” 

“அந்திக்கு ‘மார்க்கெட்’லை கெட்டுப் போன காய்கறி வீசுவாங்க…பொறுக்கிக்குன்னு வந்தா… தெரிஞ்சு எடுத்துக்கலாம்… எறைச்சிக் கடயில ஒரு அம்பேசத்தை நீட்டினா இம்புட்டு எலும்பு கொடுப்பாங்க…” என இரு கைகளையும் அகட்டிக் காட்டினான். கிடைப்பதை வைத்துக் கொண்டு அவன் திருப்தியாய் வாழ்வதை அறிய அதிசய உணர்வு மேலிட்டது. இப்படி வீதியோரத்தில் வாழ்கின்ற சீவன்களுக்கு நாள்தோறும் தென்படுகிற செல்வந்தர்களும் அவர்களது ஆடம்பர வாழ்க்கையும் எவ்விதமான பாதிப்பையும் அளிக்காதா? 

“தங்கவேலு?… உன்ரை சம்சாரம் எங்கை? காணயில்லை…” 

“சில அம்மாமாருங்க எதுன்னாச்சும் பழசு இருந்தா கொடுப்பாங்க அதுதான் போயிருக்கு… அந்தியாச்சின்னா மாக்கெட்டுக்குப் போயி… வர லேட் ஆகும் தொறை?” 

அட, பரவாயில்லையே! அவனது வாயில்கூட கொழும்பு வாடை (லேட்) வீசுகிறதே! 

“என்ன உனக்கு இங்கிலீஷ்கூடத் தெரியும் போலையிருக்கு!” என சிவகுமார் கேட்ட கேள்விக்கு வாய் நிறையப் பல்லைக் காட்டி வஞ்சகமில்லாத சிரிப்பை வெளிப்படுத்தினான் தங்கவேலு. கதையோடு கதையாக தைத்து முடித்த செருப்புக்களை சிவகுமார் முன்னிலையில் போட்டதும் அவன் அதைக் கொழுவிக் கொண்டே “தங்கவேலுவுக்குச் சொந்த ஊர் எது? வீடு வாசல் இல்லையா?” எனக் கேட்டான். 

“வீடு வாசல் ஏதுங்க?…” என்றவாறே அவன் தனது சொந்த ஊரின் பெயரைக் குறிப்பிடுகிறான். முன்னர் ஒருபொழுதும் கேள்விப்பட்டிருக்காத பெயர். அங்கேதான் அவனது உறவினர்கள் சிலர் இருக்கிறார்களாம்… இன்னும் விபரமாகக் கேட்டபொழுது… அது மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு சிங்களக் கிராமம் என்று தெரிய வந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியாயிருந்தது. இவன் வயிற்றுப்பாட்டுக்காகப் பட்டணத்தை நோக்கி வந்திருக்கிறான். இப்படியே காலத்துக்குக் காலம் ஒவ்வொரு பகுதியாகச் செல்வது வழக்கம். யாழ்ப்பாணத்தையும் கொழும்பையுமே உலகம் என்று நினைத்து வாழ்கின்ற தனது வாழ்க்கையோடு இந்த நாடோடி வாழ்க்கையை ஒப்பிட்டு எண்ணிப் பார்த்தான் – வாழ நினைத்தால் வாழலாம்! 

“தங்கவேலு அப்ப நான் போட்டுவாறன்!” என்றவாறே கூலியைக் கொடுத்தான் சிவகுமார். 

“ரொம்ப நல்லம் சாமி!” தங்கவேலு கைகூப்பி விடைகொடுத்தான். 

நினைத்த மாத்திரத்தில் காலிவீதியைக் கடந்து வர முடியாதவாறு அடுக்கடுக்காக வாகனங்கள் விரைந்து கொண்டு செல்கின்றன. அழகழகான, பெரிய கப்பல்களைப் போன்ற ஆடம்பரமான வாகனங்கள்… அவற்றைக் காண்கையில் இப்பொழுது ஏக்கப் பெருமூச்சு தோன்றவில்லை. 

– தொடரும்…

– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.

– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *