கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 29, 2026
பார்வையிட்டோர்: 116 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

இவ்வாண்டு எனது அன்புத் தந்தை எஸ். அகஸ்தியரின் 100ஆவது  பிறந்த தினம் 29.8.2026, (29.8.1926 –8.12.1995) எதிர்நோக்குகின்றது. அதனை நினைவுறும் வகையில் அவரின் ‘இலவு காத்த கிளி’ என்ற அவரது பாரீசில் வாழ்ந்தபோது எழுதிய சிறுகதையை அனுப்பி வைக்கின்றேன். நன்றியோடு – நவஜோதி ஜோகரட்னம்.

கைம்பெண்போல் தன்னை அவள் காட்டிக்கொள்வதில்லை.

புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி.

பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே பென்சன் போதாது. ஆக, அவள் மாடு, ஆடு, கோழி, கன்று, காலி, சீட்டு, சித்தாயம் என்றெல்லாம் மாய்ந்தாள்.

வலிச்சல் தேகம். ‘தம்பியை எப்படியும் நல்லாப் படிப்பிச்சு ஒரு கரை காண வேணும்’ என்ற ஆசை அவளை எலும்பாக்கியது. ‘எலும்புருக்கியாக்கும்’ என்று நடை மருந்து பாவிக்கிறாள்.

‘உவ்வளவு கஸ்டத்துக்குள்ள பெட்டையளைப் படிப்பிக்க வேணுமோ, பொடியனைப் படிப்பிச்சு ஆளாக்கினாள் அவன் உன்னையும் தங்கச்சிமாரையும் பாக்கமாட்டானோ?’ என்று அயலட்டை சிலேகடையாகச் சொல்லும். அசட்டை பண்ணிவிடுவாள்.

‘பொம்பிளைப் பிள்ளையள் படிச்சு நாலு காரியம் தெரிஞ்சால்தான் ஆம்பிளையள் மேலைக்கு அடக்கி ஆளாங்கள்’ என்று சொல்லுமளவு அனுபவம், ‘இந்தப் பிள்ளையள் மூண்டையும் கோசுபோகாமல் நல்லாப் படிப்பிக்கவேணும்’ என்ற அவள் எண்ணத்துக்கு உரம் பாய்ச்சி வருகிறது.

‘தம்பி கட்டாயம் கம்பசுக்கு எடுபடுவான். அதுக்குப் பிறகு தன்ர சகோதரியள் ரண்டையும் அப்பிடி ஆக்குவான்’ என்ற நம்பிக்கையும் வீண் போகவில்லை.

எடுபட்டான் – ‘பயோ சயன்ஸ்’

யாழ்ப்பாணக் கோயில் குளம் ஒன்றும் பாக்கியில்லை. வேண்டின ;கைமாத்து’களைக் கடன்பட்டும் தீர்த்துக் கொண்டாள். பாடுபட்டுச் சுமந்து பெற்று வளர்த்ததற்குத் தக்க பலன் அடைந்ததான பூரிப்பில் ஆழ்ந்து போனாள்.

ஒரு வருஷம் ஆகவில்லை….

கொஞ்ச நாளாக மைந்தனில் ஒரு மாற்றம்.

கவனித்தே வருகின்றாள்.

‘மேல் படிப்பெண்டா அப்பிடித்தானிருக்கும்’ என்று தனியே இருந்து யோசிப்பாள். பிடிபடுவதில்லை. புரிகிறதாயுமில்லை. கடல் நீருள் தாளையாக மனசு தளம்பி என்னவோ செய்கிறது. எப்போதும் ‘திக் திக்’ கென்று அடித்துக்கொள்கிறது.

‘அண்ணையின்ர போக்கு இப்ப ஒரு மாதிரி’ என்று தங்கச்சிமாரும் கணித்தே வருகின்றார்கள். தாய்க்குச் சொல்வதில்லை.

‘அம்மா பாவம். ஏங்கிப்போவா’ என்று இந்தப் பெண்பிறவிகள் மனம் கரையும்.

‘கம்பசுக்குள்ள என்னென்னவோ எல்லாம் நடக்கிறதாக’ தாய் கேள்விப் பட்டிருக்கிறாள். நம்புவதில்லை.

பொறுப்பில்லாத சகோதரன்போல, தங்கச்சிமாரை மறந்து அவன் அப்பிடி ‘ஏணாகோணமாக’ நடக்கான்’ என்று திடப்படுத்திக் கொள்வாள்.

எனினும், மனசுள் ஒரு அரிப்பு.

ஊர்க் கடுவன் நாய்களுக்கு நலமடித்து – பெட்டை நாய்களுக்கு நெருப்புக் கம்பிச் சூட்டுக்குறி போடுகிற ராட்சத மனுஷ அப்புக்குட்டியப்பா, ‘யூனிவெசிட்டிக்குப் போற பொடி பொட்டையளுக்கு நலமடிக்காட்டி, காடு கரம்பையெல்லாம் நாய்க்கொழுவலாக இழுபடுங்கள்’ என்று, வேறு பகிடி விடுவது இவள் மனசில் விஸ்;வரூபமெடுத்திருக்கிறது.

‘கோதாரி மனுஷன்… அந்தாள் தான் செய்யிற கருமத்திலதான் கண்ணும் கருத்தும் கதையும். மலம் தின்கிற காகமாட்டம் எந்த நேரமும் இதே கரிசனை – எப்பவும் கிலிசகெட்ட எண்ணம்’ என்று தன்னள் புழுங்கிப்போவாள்.

‘தம்பி அப்பிடிக் கேவலமாக நடக்கான்’ என்று மனசுள் தேறினும், மகன் போக்கு, நடை, உடை, பாவனை, பேச்சு யாவும், ‘அப்பிடித்தானிருக்குமோ,’ என்றும் அவளை ஐயுறுத்துகின்றன.

‘காடேறிசாடை வர வர ஆன குளிப்பு முழுக்கும் இல்லையே?’

‘நேரே கேட்டு விடுவது’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.

ஒரு நாள் கேட்டாள்:

அவன் சிரித்துவிட்டு ‘நான் முந்தியப்போல இல்லையெண்டா, இப்ப ஓய்வில்லாம நல்லாப் படிக்கிறனெண்டு தெரியுதுதானே…. பேந்தேன் உப்பிடிக் குடைஞ்சு மடைஞ்சு கேக்கவேணும்?’ என்று இவனே திருப்பிக் கேட்டதோடு புத்தகக் கட்டுகளை எடுத்தவன் சயிக்கிளில் ஏறி வெளியானான்.

மனசுள் கிலேசம், சஞ்சலம். ஐயம் விடுபடுகினும் விறுத்தாப்பிபோல் அவன் பதில் சொன்ன விதம் – அதன் விறுத்தம் சற்று வித்தியாசமாகப் படுகிறது.

முருகேசர் வீட்டு இளங் கடுவன் நாயொன்று பெட்டை வளைச்சலுக்கு வேலி பாய, கல் எடுத்து எறி;ந்து ஆத்திரமாக நிமிருகையில் மனசு அப்புக்குட்டியப்பாவைக் கறுவிற்று.

மேலைக் கடற்கரை தாண்டிய மண்கும்பான் திட்டி வெளிப் பக்கம் இரவு நேரங்களில் துவக்கு வெடிச் சத்தம் கேட்கிறபொதெல்லாம், ‘பொடியங்கள் சுட்டுப் பழகிறாங்களெண்டு கள்ளுக்குடிக்க வாறவே சொல்லுகினம்’ என்று பட்டு விளையாட்டுவாக்கில் சொல்லியிருக்கிறாள். இது வேறு நெஞ்சை இடிக்கிறது.

மண்டை அதிருகிற ஓயாத வெடிகுண்டுச் சத்தம் எப்பவும் கோடை இடியாகக் கேட்டபடி.

ஜுலை எண்பத்திமூன்று இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1983 ஜுலை 24 இல் அரசு கட்டவிழ்த்த பெரும் இனக் கலவரத்தைக்குறிப்பது.

‘ஜுலை எண்பத்திமூன்று’ச் சனியனுக்குப்பின் இளமட்டங்கள் வீடு வாசல்., ஊன் உறக்கம், வேலை வெட்டி, கல்விக் கூடம் அருந்தலாகி ஊர்;தோறும் கந்தறுந்து நாடுவிட்டு வெளியேறுவது – இயக்கத்துக்குப் போவது தாய் தந்தை சகோதரமார்களுக்கு ஊமைக் காய நோவு எடுத்திருப்பதுபோல் இவள் நெஞ்சுள்ளும் கண்டிப்போய்க் கனத்துக் கிடக்கிறது.

யோசிக்க, நெஞ்சில் லயப் பிசகுப் பறை ஓலமாக அடிக்;கிறது.

மண்டைக்குள் இடியப்பச் சிக்கல். சுpந்தனையில் – மனசில் தெளிவற்ற வலை வீச்சு பூஞ்சாணித்த அலைப் பாய்ச்சலாகக் குதி போடுகிறது.

பட்டு மண்கும்பான் சம்பவம் சொன்ன பின் வானம் பார்த்த பூமி அவள் கண்ணில் இடுகாடாத் தெரிகிறது. சவுக்கமரத்தோப்பில் கூவி எழும் காற்றோசை அலை குமுழ்த்தி ஏகாந்தமான இவள் மனக் குகையில் மண்டுகிறது.

நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி, மின் வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர்வெட்டுகள் வானமடங்க வெடித்து நிலமதிரச் சிதறி அவள் மனக் கண்ணுள் மின்னித் தெரிகின்றன.

மைந்தன் இன்னும் வந்து சேராததால் சடலம் நத்தைச் சதையாக ஊனிக்கிறது.

உடல் சோர்ந்து ஒருவாட்டி அயர்ந்துபோனாள். ஆழ்ந்த உறக்கத்திலும், ‘தம்பி அப்பிடி நடவான்’ என்று அடைக்கோழி அனுங்குகிற சாடை வாய்ப் புசத்தல்.

விடிகாலை அவன் வளாகம் செல்ல ஆயத்தமானபோது, ‘மனக்கிலேசத்தைத் தீர்த்துவிடுவமோ?’ என்று யோசித்தாள். ஆனால், அவன் சயிக்கிள் ஏறிய உசார் அவனைக் கிண்ட மனமின்றி ஓய்ந்தது.

ழூழூழூழூழூ

தேறியிருக்கிறது இந்தமாதக் கட்டுக்காசு கொடுக்கப் போதாது. தவணைக்கு நறுவிசாகக் கட்டாட்டி விழுகிறதைத் தரவும் சீட்டுக்காறி ஓஞ்சுவாள். அவள்பாவியோட மல்லுக்கட்ட ஏலாது.

‘கழிவு கூடினாலும் இந்த மாதம் சீட்டைக் கூறி எடுப்பமோ? என்று புதுசாக ஒரு குழப்பம் மண்டையைப் போட்டு இடித்தது.

பொட்டக லாச்சிகளுக்குள் வைக்க அஞ்சி, கடுதாசிகள், சீலைத்துண்டு ஆவணங்களால் சுருட்டி முகட்டுக்குள் – செத்தையோலைக் கிடுகு இடுக்குகளில் சொருகி வைத்த காசு முடிச்சுகளில் ஒன்றைச் சொடுக்கி எடுத்தபோது, ‘பொடுக்’கென்று ஒரு படம் காலில் விழுந்தது.

குனிந்து எடுத்த உற்றுப் பார்த்தாள்.

அஞ்செழுத்தும் அச்சொட்டாக இளையவள்போல் நல்ல வடிவான இளங்குமர் வாலிபி. களிசான், தொப்பி புஸ்சேட், பட்டி மாட்டிய கம்பீரம்….’

‘தாரடி இந்த ஆண்மூச்சுக்காறி….?’

அப்புக்குட்டியப்பா நாட்டுக்கூத்து ஒன்றில் பயங்கர ராட்சதன் வேஷம் போட்ட காட்சி கண்ணில் திரை விழுத்திற்று.

அவர் பகிடியாகச் சொல்கிறது காகுள் இப்போ விண் கூவியது. சடலம் உப்பிப் போயிற்று.

‘இந்தப் பொடிச்சியைத் தெரியுமோ?’ என்று பிள்ளைகளிடம் அறிய வாய் உன்னியவள், ‘இதைப் பற்றிப் பறைஞ்சால், தங்கட பாட்டில படிச்சுக்கொண்டிருக்கிற இதுகளின்ர மனமும் கெட்டுப்போம்’ என்று தன் பாட்டில் மௌனித்துவிட்டாள்.

படம் திருப்பிப் பார்த்த கண்ணில், ‘ஓர் இலட்சியத்திற்காக’ என்று கிறுக்கி எழுதிக் கிடந்த ஒரு வசனம் அவளை உலுப்பிற்று.

எழுத்துக்கூட்டி வாசித்தாள். ஏதேதோ அர்த்தங்கள் கற்பனையில் முகிழ்ந்தன.

தேகம் ‘பச்சைத்தண்ணி’யாய்ப் போய்விட்டது. கைகால் அசுப்பிரிவதாயில்லை. கண்களில் சுரந்த நீர் கண்மடல் வழியாக ஊனித்துக் கன்னைகளில் உப்பிற்று. வயிறு பதைக்கிறது. பயோதரங்கள் துடித்தன. மின்னிக் கண்கள் இருண்ட பூமியில் கவிந்தன. மனசு குதறி விம்மிப் பீறிட்ட அழுகையை நெஞ்சுள் அடக்கிக் கொண்டாள்.

‘ஆரும் அறியாத ஒரு பெட்டையின்ர படம் இஞ்ச ஏன் வருவான் – அதென்ன லட்சியம்…?’

அவலச் சிந்தனையில் ஒரு கலகத் திரை பஞ்சாக ஊஞ்சாடிற்று.

வானத்தில் விமானம் ஒன்று இடிமுழக்கம் போட்டு வட்டமிட்டது.

ஊருக்குள் ஆமி இறங்கி துவக்கு முனைகளில் இளமட்டங்களை மடக்கி, ‘றக்’குகளில் போட்டு வதைத்துப்போன அல்லோலம் நடந்து ஆறுமாதம் ஆகவில்லை. இந்த விமான உறுமல் மேலும் இவள் கமண்டலத்தில் குதறுகிறது.

‘ஆமி குண்டு போடுகிறான்’ என்ற ஊர்க் களேபரம் காதில் விழுந்தது.

வேலி வாய்க்கால் ஒழுங்கை பிரித்து ஓடுகின்ற சனக்கூட்டம் தாண்டி ஓர் இளைஞர் பட்டாளம் துவக்குகள் சகிதம் ‘மோட்டச் சயிக்கிள்’களிலும் சிதறி ஓடும் கம்பீர்யத்தில் இவள் தனனை மறந்து நின்றாள்.

திரைக் கீறு நீங்கிற்று. பூமி வெளிறிற்று.

வெயர்த்துக் கொட்டிப்போன தேகத்தை உசிப்பிக் கொண்டாள்.

‘யூனிவேசிட்டியில் படிக்கிற இவன் இந்தப் பெட்டையின்ர படத்தை ஏன் இஞ்ச கொண்டு வந்து வைச்சான்…?’

‘இதை அவனிடம் எப்படி விடுத்துக் கேட்பது?; என்ற அச்சமிருந்தும், ‘இதுக்கு ஒரு முற்றுக்காணத்தான் வேணும்’ என்ற முடிவு செய்தாள்.

இதற்கான விரதம் இருந்த ஒரு வெள்ளிக்கழமை.

‘தம்பி, இஞ்ச வா… உதில இரு’ என்றாள்.

வாங்குப் பலகையில் இருந்தான்.

தன் குடும்ப விருத்தாந்தங்களை ஆதியோடந்தமாக மீட்டு மகனுக்கு ஒப்புவிக்க அரை மணிநேரமாயிற்று. ஆனால், அவன் எதையும் கரிசனையோடு கேட்பதாகக் காண்பித்தபோதும் படத்தை எடுத்து நெற்றிக்கு நேரே காட்டி அதட்டிக் கேட்டாள்:

‘தார் இந்தப் பெட்டை?’

‘எடுத்தவாக்கில் பொட்டிட்டாற்போல் கேட்ட தோரணை, ‘என்னோட கம்பசிலை படிக்கிற பெட்டை’ என்று சொல்லும் துணிவை மறைத்து விரட்டிற்று.

‘தமையனோட கம்பசிலதான் படிக்குது’

‘பழக்கமோ?’

‘பழக்கமில்ல. தெரியும்’

‘அப்ப இந்தப் படம் எப்படி வந்தது?’

‘எனக்குத் தெரியாது’

கூசாமல் அவன் படுபொய் சொன்ன விதம் அவனுக்கே திகிலூட்டிற்று.

‘இவன் பொய் சொல்லவும் துணிந்துவிட்டான்’ என்று இவள் சாடையாகக் கருதியபோதும், அதை மிகைப்படுத்தாதவளாகப் பாசாங்காய்க் காண்பிக்கும் தோரணையில் பார்த்து நெட்டுருவிய ஏக்கவிழி, அவனை, ‘பாவம், என் தாயை ஏமாற்றுகிறேனே’ என்ற உணர்வினனாக்கிற்று.

‘தம்பி, சொல்றனெண்டு கோவிக்காதை. கம்பசுக்குப் போனதுகளைப்பற்றி ஊர் உலகமெல்லாம் என்னென்னவோ கதைக்குது. நீ அப்பிடி நடக்காயெண்டு எனக்குத் தெரியும். ‘உதுகள் அதுகள்ல’ மினைக்கெடாமல் படிப்பாயெண்ட நம்பிக்கையிருக்கு. என்னைப்பற்றி நீ யோசிக்கத் தேவையில்லை. ரண்டு தங்கச்சிமார் இருக்குதுகளெண்ட பொறுப்போட படிச்சு அதுகளையும் முன்னுக்குக் கொண்டுவந்தால் காணும்’

அவன் மௌனம் அவளுக்கு ஒருவித பீதி – சோர்வை உண்டாக்கியபோதும், ‘உன்னை நம்பியே இந்த வீடு இருக்கிறது’ என்று தான் நம்புகிற பாவனையில் ஓர் இரங்கற் பார்வை அவன்மீது காந்த, அவன் சற்றுத் தடுமாறினான்.

பாசத்தைவிட வேறு அறியாத தாய்க்கு ஒருபோதும் பொய் சொல்ல முனையாத தன் போக்கு, தன்னிடம் ஏதோ ரூபத்தில் வந்து பொய் புனைய மாட்டி விபரீதமாக்கியிருக்கிறது என்று அவன் யூகித்தபோதும், அதற்காக அவன் பச்சாத் தாபப்பட்டானே தவிர, தாய் மனக் கொதிப்பை ஆற்றுவதற்கான கரிசனை அவன் கிருத்தியத்தில் இராதது அவனுக்கே வியப்பாயிற்று.

‘ஓர் இலட்சியத்திற்காக’ என்று அந்தப் படத்தில் குறித்தாளே அந்த ஒன்றிற்காக இப்படி ஓர் அந்தகாரச் சழற்சி அவனை ஆட்கொண்டு அதுவே எல்லாமாய் ஆகிவிட்ட சூட்சுமம் இவனில் கருக்கொண்டது.

‘உதுகள் அதுகளல்ல’ என்று தாய் அழுத்திச் சொன்ன வாக்கினடக்கம் ‘காதல் – இயக்கம்’ இரண்டிலொன்னைக் குறித்தே என்று இவன் புரிந்துகொண்டேனாயினும், ஒன்றையேனும் மறுத்துச் சொல்லத் தான் தயக்கம் காட்டிய தோரணை, தாய் தன்னில் வைத்த முழு விசுவாசத்தையே தகர்த்துவிட்டதாகப் புலனாக்கிற்று.

ஓர் இணைபிரியாப் பந்தத்தில் இணையாத ‘ ஓர் இலட்சியத்திற்காக’ என்ற வெறுஞ் சுலோகம் உயிர் துறக்கவும் வச்சிரம் பாய்த்திருக்கையில் – அப்படி வரித்தற்காகவே ‘சகல பந்தங்களையும் துறந்தாலென்ன?’ என்ற ஒரு கண நினைவில் கனத்த மனப்போர் அவனில் உக்கிரகித்திருக்க, தாய் விடுத்துக் கேட்டாள்:

‘பழக்கமில்லாம ஒருத்தியத் தெரிய வாறதும், தெரிஞ்சிருக்கிறவ உன்னோட பழக்கமில்லையெண்டுறதும் என்ன மாதிரியெண்டு விளங்கேல – அதை விளப்பமாச் சொல்லு?’

‘விரிவுரை செய்ய,, இதென்ன யூனிவேசிட்டியே?’

முகத்தில் அறைந்தசாடைதர்க்கித்த மகனை அவள் சினக்காமல் சாந்தமாகப் பார்த்தபோது, ‘அப்படி ஊதாசினமாக அம்மாவுக்குப் பதில் சொல்லியிருக்கக்கூடாது’ என்று வரு;தினானாயினும், ‘விளக்கமாகச் சொல்லு’ என்ற அவள் ‘முட்டுப்பிடி’க்கு ஏதாவது ஈடுகொடுத்தேயாகவேண்டும் என்று யோசித்து அவன் சொன்னான்:

‘கம்பசில ஒரு விரிவுரையாளரை எல்லா மாணவர்களும் அறிஞ்சிருப்பினம், பழகவேணுமெண்டில்லை. அந்த முறையிலதான் தெரியும். பழக்கமில்லை’

‘இந்த சிடுக்குப் பெட்டை விரி;வுரையாளரே?’

‘பாக்க அப்பிடித்தான்… ஏன் பெட்டையள் விரிவுரையாளராயிருக்க முடியாதோ?’

‘இந்தப் பெட்டை இயக்ககாறர்மாதிரியல்லவோ தெரியுது?’

‘இயக்ககாறரெண்டா என்ன?’

‘நான் இளப்பமாச் சொல்லேல. உனக்குத் தெரியுமோவெண்டுதான் கேக்கிறன்’

‘அதென்னவோ எனக்குத் தெரியாது’

‘அப்ப, இந்தப்படம் இந்த முகட்டுக்க வந்தது?’

‘என்னைப் பிடிச்சுக் கேட்டா….?’

‘உன்னை அறியாமல இந்தப்படம் இஞ்ச வராது’

குந்தி இருந்த வாங்கிற் பலகையைத் தூக்கி எறிந்த கையோடு எழுந்து ‘விறுக்’கென்று சயிக்கிள் எடுத்து அவன் வெளியேற அடுக்குப்பண்ண, ‘இனி நீ கம்பசுக்குப் போனது காணும்’ என்று கத்த ஆவேகித்த சன்னதம் அலகு பூட்டி நின்றது.

நெஞ்சு குமுறி விம்மிய அழுகையை அடக்கிக் கேருந்தொனியில் தன்னாரவாரம் சொல்கிறாள்:

‘கம்பசுக்குப் போனதால புத்தி முத்திப்போச்சு. இனி எல்லாம் முடிஞ்சுது’

வெக்காளம் கெம்ப அவன் கேட்டான்:

‘உங்களுக்குத்தான் புத்தி பேதலிச்சுப்;போச்சு. இப்ப என்னத்தைக் கண்டுபோட்டு உப்பிடியெல்லாம் கதைக்கிறியள்?’

‘அந்தப் பெட்டையப்பற்றிக்கேக்க உனக்கேன் உப்பிடி கோவம் வருது?’

‘சும்மா தேவையில்லாத கதையள் பறைஞ்சா ஆருக்குத்தான் கேந்தி வராது?’

‘ஒரு தொடசலும் இல்லாம இந்தப் படம் இஞ்ச எப்பிடி வரும்?’

‘ஒருவேளை தங்கச்சியவளவயோட பழக்கமோ,..?’

‘எடி பிள்ளையள்’ என்ற கூப்பிட்டாள்.

‘என்னணை’ என்று கேட்கும் சாங்கத்தில் நின்ற பிள்ளைகளிடம் கேட்டாள்:

‘இ.ந்தப் பிள்ளைய உங்களுக்குத் தெரியுமோ?’

‘ஏதோ சில்லெடுப்பாக்கும்…’

‘ஓம்’ என்று இருவரும் தலையாட்டியபோது இவள் அசந்தேபோனாள்.

‘இந்தப் படம் இறப்புக்குள்ள ஏன் வருவான்?’

‘நான்தான் வைச்சிட்டு எடுத்து வைக்க மறந்துபோனன’ என்றாள் மூத்தவள்.

தமையனைக் காப்பாற்றியதால் தாய்க்கு வஞ்சகம் செய்கின்றேனோ என்றும் தன்னுள் சங்சலித்தாள்.

;என்ர அவசரபுத்தி ஒண்டுமறியாததின்ர, மனசைக் குழப்பியிட்டுதே’ என்று தாய் வேதனைதாங்காது தவித்தபோது கண்கள் கசிந்தன.

;இனி எந்தப் பிள்ளையிட்டயும் எதையும் விடுத்துக் கேட்டு மொக்கேனப் படக்கூடாது’ என்று தன்னைக் கடிந்து கொண்டாள். ஆயினும், அவள் முகம் முகை விரித்த மொட்டிதழ்போல் மலர்ந்தது.

‘நாசமறுந்த ராட்சதன் அப்புக்குட்டியாலயும், பொறாமை பிடிச்ச ஊரவையாலும் என்ர பிள்ளையில ஐமிச்சப்பட்டேனே?

பொச்சம் தீர ஒரு பாட்டம் முனிந்து பெருமூச்சுவிட்டாள்.


போறணையில் பாண் எடுத்து வாடிக்கைக் கடைகளுக்கு விற்றுக்கொண்டிருந்த இவள் பேரன், ‘திடீ’ரென்று தோளில் துவக்கோடு செக்கல் நேரம் குச்சொழுங்கையால மோட்டச் சயிக்கிளில் போன வேகத்தில் ஊர் மறுபடி கிலி கொண்டது.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிய பதினாறு பெருங்கிராமங்களைச் சுற்றி வளைத்து, சும்மா கிடந்த முழு மனுமாஞ்சாதிகளையும் பயங்கரவாதிகளாக்கி அள்ளி ‘றக்’குகளில் போட்டு வதை முகாம்களுள் சித்திரைவதை செய்த அரச மிருக ராணுவம் ஊருக்குள் மறுபாட்டம் இறங்கி வேட்டையாட எத்தனிக்கிறதோ என்று இவள் ஏங்கினாள்.

இந்தப் பிள்ளை எந்த அத்திவாரத்தைப் போட்டு ஆமியோட மோத வெளிக்கிட்டான்… எடுத்தவாக்கில ஊருக்கும் தெரியாமக் கொடுக்குக் கட்டினா அழவுதானே வரும்?’

இப்படியான பேச்சுக்கூட ‘தவறணைக் குடிகாறரின் விடிஞ்சபேச்சு’ என்று ஒதுக்கினாலும், அதில் ஒரு சரியான அர்த்தம் இருப்பதாகவே இவளுக்குப் பட்டது.

அன்று இரவு இவள் நித்திரை இல்லை. அந்தப் பேரனே மனசில் – கண்ணில் – சிந்தனையில் சூழன்றடித்தான்.

கரையோர வான வெளியில் ‘ஹெலிக்கொப்டர்’கள் போல் மீன்கொத்தி வல்லூறுகள் குஞ்சுகளை இறாஞ்ச வட்டமிடுகிறதை, ஐயோ, ஆமி பிளேனில நிண்டு சுடுறான்’ என்று கிராமம் குய்யோ முறையோக் கூச்சலில் அல்லோல கல்லோலப்படுவதை இவளும் பிள்ளைகளும் கேலியாகக் கருதி மேலே பார்க்க உண்மையாக ஹெலிக்கொப்டர்களே குண்டு வெடிகளைத் தீர்த்துக் கொண்டிருந்தன.

பதுங்கு குழிகளுக்குள ஊரே அடங்கிவிட்டது.

இவள் மனம், வாக்கு, கிரிகை, சிந்தனை ஒடுங்கி, ‘கம்பசுக்குப் போன என்ர பிள்ளை இன்னும் வந்து சேரவில்லையே’ என்று தொண்டை வறளக் குளறிக் கேரி ஒப்பாரி வைத்துக் கெந்தகித்துக்கொண்டிருந்தபோது …

‘ஒரு கம்பஸ் பெட்டையைச் சுட்டுப்போட்டாங்கள்’ என்று ஒரு கதை பரவி இவள் காதில் கச்சிரமாய் விழுந்தது.

‘இவள் வீட்டு முகப்புக்குள் கிடந்த போட்டோ பெட்டையே அந்தக் ‘கம்பஸ் பெட்டை’ என்ற கதையோ, இவள் மகன் துவக்குத்தான் இந்தப் பெட்டையைச் சுட்டது’ என்ற உண்மையோ இன்னும் இந்தத் தாயானவளுக்குத் தெரியாது.

எல்லாம் மர்மமாக…

நம்பமுடியாத செய்தியாக …

பிறிதொருகால் வெளியாக …

நிலமதிருகிறசாடை வானமண்டலாத்தில் வெடிகுண்டுகள் நெருப்பாய்ச் சீறி, மின்மினிப்பூச்சிகளாக இவள் மனக்கண்ணில் மொய்க்க…

‘என்ர ராசாத்தி…?’

‘ஓ’வென்று கதறி, நெஞ்சுகெஞ்சென்று அடித்து, மயங்கி விழுந்தாள், அவளை அறியாத இந்தத்தாய்.

1.6.2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *