இலவச ஆலோசகர்கள்!
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 19
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலவச ஆலோசகர்களாவது? அப்படி யார் ஐயா இருக்கிறார்கள்? வக்கீலிடம் ஆலோசனை கேட்ப தென்றால் பணம்! டாக்டரிடம் ஆலோசனை கேட்ப தென்றால் பணம்! இப்படி எங்கு பார்த்தாலும் எதற் கும் பணத்தை அளந்து கொட்ட வேண்டியிருக்கிற இந்த உலகத்திலா இந்தக் காலத்திலா இப்படியான ஆலோசகர்கள் இருக்கிறார்கள் என்று கேட்பீர்கள்.
நான் உண்மையாகத்தான் சொல்லுகிறேன். இந்த ஆலோசகர்கள் என்னைச் சுற்றியும் இருக்கிறார் கள். உங்களைச் சுற்றியும் இருக்கிறார்கள். ஏன் அதி கம் வளர்ப்பான், உலகத்திலுள்ள எல்லாரைச் சுற்றி யுமே இவர்கள் இருக்கிறார்கள்.
இந்த இலவச ஆலோசகர்கள் நமக்கு என்ன சம்பவங்கள் நிகழ்ந்தாலும் இலவச ஆலோசனைகள் சொல்லுவதற்காக நமது வீடுகளுக்கே வந்து போவார் கள். இதற்காக அவர்களுக்கு நாம் போக்கு வரத்துச் செலவுகூட கொடுக்கத் தேவையில்லை. இவர்கள் நமது பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடுவதற்கு எங்கே போகவேண்டுமென்றும் சொல்லுவார்கள். எந்த வழி யால் போவதென்று வழியும் காட்டுவார்கள். வண் டியிலா காரிலா சைக்கிளிலா நடந்தா போகவேண்டு மென்றும் சொல்லுவார்கள். பஸ்சிலானால், எந்த பஸ் சில், எவ்வளவு பணம் கொடுத்து ‘டிக்கட்’ வாங்கிச் செல்லவேண்டும் என்றும் சொல்லுவார்கள்.
“என்ன ஐயா ஷேக்ஸ்பியரின் ‘ஜூலியஸ் சீசர்’ நாடகத்தில் வரும் மார்க் அன்ரனி பேசுவது மாதிரி விஷத்துக்கு வராமலேயே எங்களது ஆவலைத் தூண் டியபடி இருக்கிறீர்களே! சொல்லுவதைக் கெதியாகச் சொல்லிவிட்டுப் போங்களேன்! உங்களிடம் இலவச மாக ஆலோசனை கேட்பதாக எண்ணமா? பணம் கொடுத்துத்தான் புத்தகம் வாங்கியிருக்கிறோம் என் பது ஞாபகமிருக்கட்டும்” என்கிறீர்களா?
இதோ சொல்லி விடுகிறேன். ஆனால் ஒன்று, இந்த இலவச ஆலோசகர்களால் எமக்கு நன்மைகளை விட தீமைகள்தான் அதிகம். உதவியிலும் பார்க்க உபத்திரவம்தான் அதிகம். பிரச்சினைகள் தீருவதற்குப் பதில் பிரச்சினைகள் மலைபோல் வளருவதுதான் பலன். தலையிடி தீருவதற்குப் பதில் தடுமாற்றம்தான் உண்டாகும்.
ஏன் அதிகம் போவான். நேற்று நடந்த ஒரு சம்பவத்தைத்தான் பார்ப்போமே! காலை உணவுக்குப் பின் என்ன காரணமோ தெரியவில்லை எனக்குக் கடுமையான வயிற்று வலி வந்து விட்டது. மிகுந்த வேதனைக்குப்பின் பெற்றோர்கள் செய்த ஒரு கைமருந்தால் வலி பறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த இலவச ஆலோசகர்கள் ஒருவர்பின் ஒருவ ராக எனது வீடு நோக்கிப் படை எடுக்கத் தொடங் கினார்கள். ஒவ்வொருவரும் எல்லாவற்றையும் நன்றாக விசாரித்துவிட்டு ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் சிந்திவிட்டு ஆளுக்கொரு இலவச ஆலோசனையும் சொல்லிவிட்டுப் போனார்கள்.
“என்ன காரணமோ ஏதோ. படம் பிடித்துப் பார்த்து ‘ஒப்பிறேசன்’ ஏதாவது செய்ய வேண் டுமானால் செய்து போடுங்கோ. பிறகு பின்னை என்று இராமல் இப்பவே பெரியாசுப்பத்திரிக்கு ஓடுங் கோ…” என்றார் ஒருவர்.
இளந்தாரி வயதிலே இப்படி வலியா? வாழுற பிள்ளை, கவனமாய்ப் பாக்கவேணும்! பெரியாசுப் பத்திரி இப்ப பெரியாசுப்பத்திரியாகவா கிடக்கு, அங்கை இத்தனை சனங்களுக்குள்ளை வடிவாய் பார்க்க மாட்டினம். ‘பிறைவேற்’ டாக்குத்தர் யாரிடமாவது காட்டுங்கள், சரியாய்ப் போய்விடும்… ;என்றார் இன்னொருவர்.
“உந்த இங்கிலீசு வைத்தியம் எப்ப வந்தது? எங்கடை காலத்திலெல்லாம் எந்த வைத்தியம் இருந் தது? எல்லாரும் கைவிட்ட நோயாளியையும் சில்லாலை யான் காப்பாத்துவான்! நீங்கள் ஒருக்கால் அங்கை போங்கோ… ” என்றார் வேறொருவர்.
“பரமுவைத் தெரியாதா பரமுவை. அவர் ஒருதரம் கையைப் பிடித்ததும் எல்லாம் சொல்லுவார். என்ன வருத்தம்,ஏன் வந்தது, எப்படி மாறும் என்று அவருக்குத்தான் தெரியும்…” என்றார் இன்னும் ஒருவர்.
“உது ஒன்றுமில்லை. பெடியனுக்கு யாரோ மருந்து போட்டிருக்கினம். குடத்தனைக்குக் கொண்டு போய் மருந்தை விழுத்தினால் எல்லாம் சரியாகிப் போம்…” என்றாள் ஒரு கிழவி.
“அவனுக்கு ஒரு மருந்தும் வேண்டாம் மந்திர மும்வேண்டாம். எதற்கும் ஒருக்கால் ஐயரிடம் கொண்டு போய் நூலும் கட்டி பார்வையும் பார்த்தால் எல்லாம் ‘பக்’ என்று பறந்து விடும்…” என்றாள் இன்னொரு கிழவி.
இப்படி இன்னும் எத்தனையோ இலவச ஆலோ சனைகள் கூறப்பட்டன. இதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கும் பெற்றோர்களுக்கும் தலையிடிதான் வந்தது. இவர்களில் யாருடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பது என்பது பற்றி இன்னும்தான் எங்க ளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்றால் பார்த் துக் கொள்ளுங்களேன்.
இப்பொழுது தெரிந்துவிட்டதா யார் இந்த இலவச ஆலோசகர்கள் என்று! என்ன இன்னுமா புரியவில்லை, எமது சொந்தக்காரர்கள், அயலவர்களைத் தான் குறிப்பிடுகிறேன்.
இந்த ஆலோசகர்களால் எந்த முடிவுக்கு வரு வது என்ற தொல்லையை விட இன்னுமொரு தொல்லை யும் உண்டு. நாம் யாராவது ஒருவருடைய ஆலோசனை யைத்தானே கேட்க முடியும்? அப்படிக் கேட்டதும், அல்லது கேட்டு அதன்படி நடந்தால் ஏனைய அத்தனை பேர்களுக்கும் எம்மீது பொல்லாத கோபம் வந்துவிடும். “நாங்கள் சொன்னால் அவர்களுக்குப் பிடிக்காதாம். இன்னார் சொன்னால்தான் பிடிக்குமாம்” என்பார்கள்.
இந்த இலவச ஆலோசகர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கும்படி உங்களுக்கு ஆலோசனை கூறுவதற் காகவே இவ்வளவும் எழுதினேன். இது என்னுடைய இலவச ஆலோசனை என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். பணத்திற்காகத்தான் இந்தக் கட்டு ரையை எழுதியிருக்கிறேன் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்!
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
