காலத்துக்கேற்ற கோலம்போடும் கந்தையர்!
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 125
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாலுபேருக்கு முன்னே தாங்களும் ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காகச் சிலர் காலத்துக் கேற்ற கோலம் போடுவதுண்டு. இப்படியான கோலம் போடுவதில் – அதுவும் அழகாகப் போடுவதில் நமது கந்தையருக்கு நிகராக வேறு யாரையுமே சொல்ல முடியாது. இவர் தாம் ஏதோ தீர்க்கதரிசி போலவும் தமது சொல்லைக் கேட்காததால்தான் இந்த உலகமே இப்படிக் கெட்டுவிட்டது என்ற மாதிரியாகவும் பேசிக் கொள்வார்.
முன்பு சிறீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் கந்தையர் தாம் காணும் மனிதர்க ளிடமெல்லாம் அடிக்கடி. “எங்கடை எம்பிமார் யூ.என்.பி.யை எதிர்த்து வீழ்த்தியதுதான் தமிழர் களுக்கு ஏற்பட்ட இத்தனை தொல்லைகளுக்கும் கார ணம். அவர்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலே பாலும் தேனுமல்லவா பாய்ந்திருக்கும்?” என்று சொல்லி வந்தார்.
இவர் அந்நேரம் யூ. என். பி. பதவியில் இருந் தால் என்ன சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?
“எங்கடை எம்பிமார் சுதந்திரக் கட்சியை எதிர்த்து வீழ்த்தியதுதான் தமிழர்களுக்கு ஏற்பட்ட இத்தனை தொல்லைகளுக்கும் காரணம். அவர்கள் மட்டும் ஆட் சிக்கு வந்தால் நாட்டிலே பாலும் தேனுமல்லவா பாய்க் திருக்கும்?” என்றுதான் சொல்லித் திரிவார்.
முன்பு கந்தையர் அடிக்கடி என்னிடம் சொல் லிக்கொள்வார்: “இந்த அண்ணாத்துரை ஆக்கள் ‘திராவிடநாடு’ கொள்கையை மட்டும் கைவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை இன்னும் எவ்வளவோ உயரும். அண்ணாத்துரை இதை இளப் பமாக எண்ணாமல் உடனே ‘திராவிடநாடு’ என்ற கொள்கையை மட்டும் கைவிடவேண்டும்.”
இவரே நேற்று என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? ‘அண்ணாத்துரை ஆக்கள் ‘திராவிடநாடு’ என்ற உயிர்க் கொள்கையைக் கைவிட்டது வெட்கங் கெட்ட செயல். அப்படியானால் இத்தனைகாலமும் திராவிடநாடு’ என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டுதானே வந்திருக்கிறார் இந்த அண்ணாத்துரை!” என்றார்.
இனி என்னுடைய சொந்த விடயத்துக்கு வருவோம்!
நான் எஸ்.எஸ்.சி. சித்தியடைந்து வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் கந்தையர் என்மீது மிகவும் அனுதாபப்பட்டபடி “என்ன தம்பீ! தமிழ் எஸ்.எஸ்.சி. பாஸ்பண்ணி என்ன வேலையை எடுக்கிறது? இங்கிலீஸ் ஒரு பாடம் என்றாலும் பாஸ் பண்ணியிருந்தால் எனக்குத் தெரிந்தவர்களைப் பிடித்து ஒரு வேலையில் அமர்த்தியிருப்பேன்” என்று சொன்னார்.
நான் அடுத்த ஆடித் தேர்வில் ஆங்கிலம் சித்தியடைந்ததும் கந்தையர் மிகவும் கவலையுடன் “இங்கிலீஸ் ஒரு பாடம் பாஸ்பண்ணி என்ன செய்கிறது? இந்தமாதிரி எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? எஸ்.எஸ்.சி.யை முழுவதும் இங்கிலீசில் எடுத்துப் பாஸ்பண்ணியிருந்தால் எனக்குத் தெரிந்தவர்களைப் பிடித்து ஒரு வேலையில் அமர்த்தியிருப்பேன்” என்றார்.
நான் இதன்பின் மிகுந்த சிரமம் எடுத்து எஸ். எஸ்.சி.பரீட்சையை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுத்துச் சித்தியடைந்ததும் கந்தையர் அழாக்குறை யாக “எப்படிப் பாஸ்பண்ணி என்ன தம்பி? உப்பிடி எத்தனை இலட்சம் பாஸ்பண்ணியிருக்குத் தெரியுமா? ‘டைப் ரைட்டிங்’ ஷோர்ட் ஹான்ட்’ இவைகளும் பாஸ்பண்ணி இருந்தால் எனக்குத் தெரிந்தவர்களைப் பிடித்து ஒரு வேலையில் அமர்த்தியிருப்பேன்” என்றார்.
இப்படியே ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல்’ என்று சொல்லுவார்களே! அதுபோல் இந் தக் கந்தையரும் நடந்து முடிந்துவிட்ட சங்கதிகளைச் சொல்லித்தான் தமது தீர்க்கதரிசனத்தைக் காட்டிக் கொள்வார். ‘கந்தையர் முன்பு என்ன சொன்னார்? அது இப்பொழுது சரியாகவா, தவறாகவா நடந்திருக் கிறது?’ என்பதற்கு ஒருவருமே எழுத்துக் குறிப்பு வைத்திருக்காததால் மனிதன் பாடு வெற்றிப் பாதையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. அதாவது நாலு பேருக்கு முன்னே அவரும் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்!
அதோ கந்தையர் வருகிறாரே!
நான் தட்டச்சு, சுருக்கெழுத்துப் படித்து கடந்த மார்கழியில் பரீட்சை எழுதியிருந்தேன். அந்த இரண்டு பாடங்களிலும் தேறியதற்கான மறுமொழி இன்றைய தபாலில்தான் வந்திருந்தது. அதை எடுத்துக் கையில் வத்துக்கொண்டு, விவரத்தைக் கந்தையரிடம் கூறினேன்.
கந்தையர் கண்ணீர் விட்டபடி “தம்பீ! எஸ். எஸ்.சி.யை எப்படித்தான் படித்து, எவ்வளவுதான் திறமையோடு, எத்தனைதான் அதிகமான பாடங்களைப் பாஸ்பண்ணினாலும் இந்தக் காலத்தில் வேலை எடுக்கிறது முடியாத காரியம். பெரிய பட்டதாரிகளையே ‘இங்கு வேலையில்லை’ என்று முன்னைய கல்வி மந்திரி கானாவுக்குப் போகும்படி கூறியது உமக்குத் தெரி யாதா? நீர் ஏதாவது பட்டம் பெற்றிருந்தீர் என்றால் எனக்குத் தெரிந்தவர்களைப் பிடித்து……”
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
