இலட்சிய அம்புகள்





கவியரங்கம் களை கட்டியது. வழக்கமான கவிஞர்களுடன் இன்று பல புதுக்கவிஞர்களும் உற்சாகமாகக் கவிதைத்தேரை உருட்டினார்கள்.
கடைசியாகத் தமிழ்நேசன் மேடையேறினான். மைக்கின் முன்னாள் கைகளை அசைத்து,
ஆண்களின்
அடிமைகளா
பெண்கள் . . .?
என ஆரம்பித்து ஆவேசமாகக் கவிதை பாடினான். பெண்கள் பரம்பரைத் தளைகளை உடைத்தெறியும் எண்ணமேயின்றி முடங்கிக் கிடப்பதால்தான் பிரச்சனையே எழுகிறது என்று பொருள்பட அவன் மிக இயல்பாகப் பாடி முடிந்ததும் கைதட்டல்கள் அரங்கத்தை அதிரச் செய்தன.
சுற்றிலும் அமர்ந்திருந்த ஆண் கவிஞர்கள் காலரை நிமிர்த்திக் கொண்டு பெண்கள் பக்கம் ஏளனப் பார்வையை வீசினார்கள்.
மன்றச் செயலாளர் நன்றி நவில, கூட்டம் இனிதே முடிந்தது.
கூட்டம் தமிழ்நேசனின் கவிதையைப் புகழ்ந்தபடியே கலைய ………. இதில் அத்தனையிலும் திருப்தியுறாத தமிழ்நேசனின் கண்கள் மட்டும் கூட்டத்தையே வெறித்தன. எதிர்ப்பு இல்லாமல் கவிதை முடிந்த ஏக்கம் அவனைச் சோர்வு படுத்தியது.
அவள் எங்கே? ஏன் வரவில்லை? இந்நேரம் ஒரு பெண் புலிபோலச் சீறி எதிர்க்கவிதை தொடுத்திருப்பாளே!
அவளிடம் அடிக்கடி அவன் தோற்றாலும் அப்படித் தோற்பதே அவனுக்கு ஒரு சுகானுபவம். யோசித்துப் பார்த்த போதுதான் ஞாபகம் வந்தது. அவள் போன கவியரங்திற்கும் வரவில்லையென்பது.
அவனுக்கு மண்டையைக் குடைகிறமாதிரி இருந்தது. அவள் வீட்டுக்கேச் சென்று ஏன் வரவில்லை என்று கேட்டுவிடலாமா?
ஊ…ஹும் அவள் கணவனைக் கல்யாணத்தன்று பார்த்ததுதான். சரியாகப் பேசிக்கூடப் பழகவில்லை… இந்த நிலையில் அவள் வீட்டுக்குப் போவது உசிதப்படுமா? வேண்டாம்.
அந்த எண்ணத்தை உதறிவிட்டுக் கடற்கரையை நோக்கிச் சிந்தனையோடு நடந்தான்.
பலவிதக் குழப்பங்களோடு நடந்தவனைப் பழக்கப்பட்ட குரல் தடுத்து நிறுத்தியது.
“என்ன சார், எதிரில் வர்றவங்களைக் கூடக் கவனிக்காம என்ன அப்படியொரு சிந்தனை?” கிருபாகரி சிரித்தபடியே கேட்டாள்.
“ஓ! நீங்களா…? எங்கே இப்படி?” மகிழ்ச்சியும் வியப்புமாகக் கேட்டான்.
“அஷ்டலஷ்மி கோவிலுக்குப் போனேன். இந்தாங்க பிரசாதம்.”
“நன்றி, ஆமாம், ஏன் நீங்க கவியரங்கத்துக்கு வரவில்லை? அழைப்பிதழ் வரலீங்களா?”
“வந்ததே!”`
“பின், ஏன் நீங்க வரலே?”
“சந்தர்ப்பப்படலே”
“சந்தர்ப்பப்படலேயா, சந்தர்ப்பம் கொடுக்கப் படலேயா?” – கிண்டலாகக் கேட்டான் தமிழ்நேசன்.
“கொடுப்பதற்கும், கொடுக்காததற்கும் யாருக்கு உரிமை இருக்கு?” எதிர்க்கேள்வி சூடாகப் பிறந்தது.
“அப்படியானால், உங்கள் உரிமையை உங்களால நிலைநாட்ட முடியுதா?”
சட்டென்று கிருபாகரிக்கு அவன்மேல் எரிச்சல் வந்தது.
“ஏன் சார் வாழ்க்கைங்கிறது போர்க்களமா! யாருக்கு அதிக பலம் இருக்குன்னு பார்க்கிறதுக்கு?”
“எது எப்படியோ, நீங்க கவியரங்கத்திற்கு வராமல் இருந்ததற்கு அழுத்தமான காரணம் இருக்குன்னு நினைக்கிறேன்.”
“காரணம் எதுவுமில்லே, இது ஒரு விட்டுக்கொடுத்தல்”
“கணவனுக்காகக் கவிதையை விட்டுக் கொடுத்து விட்டீர்கள் இல்லையா கிருபா?”
“இல்லை, விட்டுவிடவில்லை. ஒத்தி வைத்திருக்கிறேன். ஓர் அநாகரிகமான சூழ்நிலையைத் தவிர்த்திருக்கிறேன். அதாவது வருமுன் காத்தல் அவ்வளவே!”
“இங்குதான் பெண்ணடிமைத்தனம் உருவாகிறது. இன்றைய என் கவிதையே அதுதான்!”
“இல்லே. தமிழ்நேசன்சார். இது அடிமைத்தனம் அல்ல. ஒரு சின்ன விஷயத்தை விட்டுக்கொடுக்கிறதனாலே ஒரு பெரிய மகிழ்ச்சி கிடைக்கிறது. இது பஞ்சதந்திரத்திலே ஒன்று.”
“இல்லீங்க கிருபா. இந்த இடத்திலேதான் பெண்கள் வலுவிழந்து போகிறீர்கள். எது சின்ன விஷயம்? தனித்தன்மையும், சுயசிந்தனையும் விட்டுக்கொடுப்பதா? இந்த சின்ன விஷயத்தை ஏன் உங்க கணவர் பெரிசு படுத்தணும்? அவரே ஏன் விட்டுக்கொடுக்கக்கூடாது. இந்த கோணத்தில் நீங்கள் சிந்திப்பதே கிடையாது. கல்லானாலும் கணவன் என்கிற கற்காலத்திலேயே இருக்கிறீர்கள். ரொம்ப வருத்தப்படுகிறேன் கிருபா” – படபடவென்று பொரிந்து தள்ளினான் ஆத்திரத்தால்!
“சார், தயவுசெய்து கொஞ்சம் அமைதி! முதலிலேயே சொன்னேன். வாழ்க்கை என்கிறது போர்க்களம் அல்ல. என்னால் எதனோடும் ஒத்துப்போக முடியும்கிறதுதான் என்னோட பலம். சின்னவிஷயத்தையும் அவரால விட்டுக் கொடுக்க முடியாதுங்கிறதுதான் அவரோட பலவீனம் எதிராளியோட பலவீனத்தை தெரிஞ்சுக்கிட்டாலே பாதி வெற்றி கிடைச்சமாதிரி இல்லையா? நிம்மதியான வாழ்க்கை வேணும்னா, கொஞ்சம் அட்ஜெஸ்ட்மெண்ட் வேணும்.”
“ஆக, வாழ்க்கைக்காக லட்சியத்தை கைவிட்டுட்டீங்க இல்லையா கிருபா?”
“யார் சொன்னா? என்னோட லட்சியதாகம் அவ்வளவு சீக்கிரம் அழிஞ்சிடாது. உள்ளுக்குள்ளே கனன்றுகிட்டு இருக்கு.”
“அப்படீன்னா….?”
“புலி பதுங்குவதற்கும், வில் வளைவதற்கும் பணிந்ததாக அர்த்தம் இல்லே.”
“ஓஹோ! அப்ப, எப்ப நீங்க பாயப்போறீங்க?”
“இங்கு வில்தான் வளைந்திருக்கிறதே தவிர அம்பல்ல! சமயம் வாய்க்கும்போது என்னோட லட்சிய அம்புகள் விடுபடும். கூடிய விரைவில், என் முதல் கவிதைத் தொகுப்பை என் கணவரே வெளியிடுவார்.”
“ஆனாலும், உங்களுக்குத் தன்னம்பிக்கை ரொம்ப அதிகம் கிருபா.”
“அதுதான் என்னோட பலம். அப்ப நான் வரட்டுமா?”
கம்பீரமாக அவள் விடைபெற்றுப்போகத் தமிழ்நேசன் இந்த முறையும் அவளிடம் பெருமிதத்தோடு தோற்றுப் போனான்.
அடுத்த கவியரங்கத்தில் –
“விட்டுக்கொடுத்தல்
அனுசரித்துப் போதல்
என்ற
அரவணைப்பிலேயே
நம்மை அடிமைப்படுத்தி
விடுகிறார்கள் இந்தப் பெண்கள்!
உண்மையில்
நாம்தான் இங்கே அடிமைகள் !”
கண்களில் நீர்த்துளிக்க உற்சாகமாகக் கவிதை பாடினான் தமிழ்நேசன்.