இலக்கிய வழக்கழகனார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 20, 2025
பார்வையிட்டோர்: 220 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கமாகப் போய் வந்து கொண்டிருந்த தெருவின் கடைசி வீட்டில் இந்தமாதிரி புதிய போர்டு ஒன்று ஒரு நாள் திடீரென்று கண்ணில் பட்டது. கடிகாரம் விற்பனை செய்ய பர்மா காட்டு யானையைக் காட்டுவது போலவும், புது ஜவுளி ரகத்தை விற்க காஞ்சி ஸ்தூபியைப் போடுவது போலவும் தொழிலில் புதிய விளம்பர முறை என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் யோசனை தான்! கம்பெனி சட்ட வக்கீல், வருமான வரி வக்கீல், வீட்டு வாடகை கட்டுப்பாட்டு வக்கீல், கிரிமினல் வக்கீல், விவாக ரத்து வக்கீல், இப்படிப்பல குறிப்பிட்டதுறை நிபுணர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். சிலருடன் பழக்கம் கூட உண்டு. ஆனால் இலக்கிய வழக்கழகனார் என்று கேள்விப் பட்டதே இல்லையே! அவர் எப்படி இருப்பார்? எந்த விஷயத்தைக் கரைத்துக் குடித்திருப்பார் என்று அறிய ஆவலாக இருந்தது! 

மறுநாள் காலையில், அந்த வீதி வழியே போகும் போது நாமாக வழக்கழகனாரை அறிமுகம் செய்து கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றேன். 

பெரிய அறை. மூன்று புறங்களிலும் புத்தகசாலை வைக்கப்பட்டிருப்பது போலே, ஏராளமான புத்தகங்கள் இரும்பு ராக்குகளில் வைக்கப்பட்டிருந்தன. இரண்டொரு ராக்குகளில் பழைய சுவடிகள்கூட இருந்தன. நடுவில் பெரிய மேஜை. அதை ஒட்டிய சுழல் நாற்காலியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஆளைப் பார்த்தால் புதுமைக்கும் புதுமையாய் பழமைக்கும் பழமையாக இருந்தது. இளைஞர் தான் ஆனால் தலைமயிரில் நரையோடிக் கிடந்தது. வாசனைத் தலைவலி சூழ்ந்து கொண்டிருந்தது. அவர் போட்டுக் கொண்டிருந்த உருக்கு மூக்குக் கண்ணாடிதான் அவரை சரித்திரகாலத்து மனிதராகத் திரித்து விட்டது. உள்ளே நுழைந்ததும் வருக என்ற வரவேற்பு கிடைத்தது. 

“வணக்கம்” 

“வணக்கம். உட்காருங்கள்.” 

ஆமாம் என்று உட்கார்ந்தேன். பேச்சை எப்படி ஆரம்பிப்பதென்றே தெரிய வில்லை. அதற்குள் அவரே ஆரம்பித்து விட்டார். 

“வழக்குகளில் புதுத் துறையைக் கண்டு தொண்டு செய்யும் நற்பணியை மேற்கொண்டிருக்கிறேன்” என்றார். 

“அதாவது, கொஞ்சம் விளக்கமாக” 

“சொல்லுகிறேன்” என்று ஆரம்பித்தார். அதற்குள் அங்கு யாரோ வந்து சேர்ந்து விட்டார். வந்தவரைப் பார்த்தால், கொஞ்சம் வினோதமாக இருந்தது. யார் என்று காட்டு மிராண்டித் தனமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அவா எனக்கு ஏற்படவில்லை. எனவே வந்த வரை ஊன்றிக் கவனித்தேன். இதற்கு முன்பு அவரை நேரில் பார்த்ததே இல்லை என்று நிச்சயமாகத் தோன்றினா லும் மிகவும் பழக்கப்பட்ட முகமாகவே இருந்தது. பொறுத்துப் பார்த்துப் பிரச்னையை ஆள்வோம் என்று இருந்தேன். 

வந்தவரைப் பார்த்து வக்கீல் சொன்னார். 

“நீங்கள் சொன்ன புகாரைக் கொண்டு முழு விவரங் களையும் சேகரிக்க ஏற்பாடுசெய்தேன். உங்கள் முதல் நூலை முன்னூறு பேர்வழிகள் உபயோகப் படுத்திக் கொண்டு பணமாக்கியிருக்கிறார்கள். ஆறு நூறு பேர் விளக்கம் அகலம், உரை, போக்கு, கருத்து வாழ்நெறி, காட்டும் வழி. இடும் கட்டளை என்று பல வசன விஸ்தரிப்புகளைச் செய்திருக்கின்றனர்.” 

“ஆமாம் இந்தக் கொலைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை. நானே இரண்டொரு வசன விஸ்தரிப்புகளைப் பார்த் தேன். சொல்லாததை சிந்தியாததை. கனவு காணாததை எல்லாம் என் மீது ஏற்றி வைத்து விட்டார்கள். இந்தத் துயரம் தாங்கவில்லை. நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதனால்தான் உங்களிடம் நேற்று யோசனை கேட்க வந்தேன். 

“நீங்கள் சொல்வதெல்லாம் மெய்தான். நான் ‘நோட்டீஸ்’ நகல் தயாரித்து விட்டேன்.” 

“எங்கே?” 

வழக்கறிஞர் வந்தவரிடம் ஒரு தாளை நீட்டினார். அவர் தம் மனத்திற்குள்ளாகவே படித்து விட்டுத் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தார். 

“இவரென்ன மூவேந்தர் காலத்துக் காவலர் மாதிரி இருக்கிறாரே?” என்றார். 

“இல்லை, இல்லை. இந்தக் காலத்தவர். உங்களால் ஆட் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான்” என்று வக்கீல் சமாதானம் அளித்தார். 

“அப்படியா? மகிழ்ச்சி” என்று வந்தவர் கூறிவிட்டுத் தன் கையிலிருந்த தாளை என்னிடம் நீட்டினார். 

பிரித்துப் பார்த்தேன். இலக்கிய வழக்கழகனார் முத் தமிழ்த் தெரு, தமிழ் கூறும் நல்லுலகம் என்று அனுப்பு வோரை நோட்டீஸ் குறிப்பிட்டது. ஆனால் இன்னாருக்கு என்ற பகுதி காலியாகவே விடப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நிமிஷம் தயங்கினேன். 

“இந்த நோட்டீசை அச்சடிப்பதாக உத்தேசம். தமிழ் தட்டெழுத்தில்கூட அடித்து மாளாது… அவ்வளவு பேருக்கு அனுப்பவேண்டியிருக்கிறது” என்று வழக்கறிஞர் கூறி நிறுத்தினார். 

நான் நோட்டீசைப் படிக்க ஆரம்பித்தேன். 

கட்சிக்காரர் சார்பில், 

…க்கு நாம் தெரிவிப்பதாவது:- 

என் கட்சிக் காரருக்குப் பன்னூற்றாண்டுகளாகச் சொந்தமான இலக்கியச் செல்வத்தை நீங்கள் சுவான் தார் அனுமதியின்றி எடுத்துக்கொண்டு வினியோகித்து வரு வதில், பிரசாரத்தின் நன்னோக்குடன் காரியங்கள் செய்து வருவதற்கான அறிகுறிகளைக் காணோம். அதற்கு மாறாக நூலுக்கு 25 நபை. முதல் முடிந்த அளவு – தாங்கும் அளவு என்று நீங்கள் கருதலாம்-விலை வைத்துப் பையை நிரப்பிக் கொண்டு வருகிறீர். அது போகட்டு மென்றால் இல்லாத விஷயங்களையும் பொல்லாத விஷயங்களையும் என் கட்சிக் காரர் மீது சுமத்தி மணலைக் கயிறு திரிக்கும் வித்தைக்கு இவரைத் தூண்டு கோலாக்கி விட்டிருக்கிறீர். ஒருவர் உழைப்பில் ஒருவர் வாழ முயலும் புல்லுருவித் தனத்தைக் கண்டிக்கும் இந்தப் புதுயுகத்தில் இவற்றை எல்லாம் சும்மா பார்த்துக் கொண்டிருக்க என் கட்சிக்காரர் சம்மதிக்க வில்லை. எனவே இதன் மூலம் உமக்குத் தெரிவிப்பதென்ன வென்றால் என் கட்சிக்காரருடைய செல்வ நஷ்டத்திற்கு நீங்கள் ஒரு வாரத்தில் ஈடு செய்து விடவேண்டியதென்றும், தொகை விவரத்தை என்னுடன் நேரிடையே பேசி முடித் துக் கொள்ளலாமென்றும், அப்படி செய்யத்தவறினால் வழக்கு கண்டிப்பாகத் தொடர்ந்து கோர்ட்டு செலவு களுடன் வசூலிக்கப்படும் என்பதைக் கண்டிப்பாய் அறியவும். 

படித்து முடித்தவுடன் வக்கீலின் கட்சிக்காரரை கவனத் துடன் ஆராய்ந்தேன். நெஞ்சில் இருக்கிறது, சொல்ல வர வில்லை என்பார்களே அந்தமாதிரி இருந்தது. தெரிந்த முகம் என்ற நினைப்பு. ஆனால் ஆளை நிச்சயப்படுத்த முடிய வில்லை. என்ன பரிதாபம் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டிருந்தேன். 

“இந்தமாதிரி நோட்டீஸ் அனுப்ப வேறு காரணமும் இருக்கிறது” என்றார் கட்சிக்காரர். 

”அதாவது?” 

“இறந்த காலத்தையே ஏன் போற்றிப் புகழ்கிறார்கள் தெரியுமா? தவறாகச் சொன்னாலும் அந்தக் காலத்திலிருந்து யாரும் எழுந்துவந்து கேள்வி கேட்கப் போவதில்லை என்ற சௌகரியம் என்பதொன்று. நிகழ் காலத்திய தகராறு களுக்கும் பிரச்னைகளுக்கும் முடிவுகாண வேண்டிய பொறுப் பையும் பொல்லாப்பையும் இந்தச் சாக்கிட்டுத் தட்டிக் கழித்துவிட முடிகிறதல்லவா என்பது இரண்டாவது சௌகரியம். எல்லாவற்றிற்கும் மேலாக, பணத்தைச் சேர்க்க முடிகிறது. தட்டிக்கேட்க ஆள் இல்லை என்ற தைரியம் தான் எல்லாத் தீம்புக்கும் காரணம். இந்த மாதிரி ‘நோட்டீஸ்’ அனுப்பி விட்டால் அவர்கள் எல்லாம் நடு நடுங்கிப் போய் விட மாட்டார்களா?” 

“நல்ல யோசனை தான்” என்று நான் ஆமோதித்தேன். 

“அதனால் தான் நான் யோசனை சொன்னேன். இதற்குச் செலவுக்குப் பணம் வேணுமே” என்று வக்கீல் குறுக்கிட்டார். 

“வக்கீல்கள் முன்னால் கையை விட்டுப் பணம் போட்டு விட்டு பின்னால் வசூல் செய்து கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்? வேண்டுமானால் புரோநோட் எழுதித் தருகிறேன்!” 

“அதெல்லாம் தபால் லேபிளாகுமா? பேச்சையும் புரோ நோட்டையும் நோட்டீஸில் ஒட்டமுடியுமா?” என்றார் வக்கீல். 

“உங்களிடத்திலா பணமில்லை” என்று கட்சிக்காரர் ஆச்சர்யப்பட்டுக்கொண்டார். 

“அதற்காகத்தானே தொழில் நடத்துகிறேன் பணமிருந்தால் தொழிலதிபராகித் தனியார் துறையில் தொழிலாளர்களைக் கொண்டு நாட்டின் நன்மைக்குகந்த பல-” 

“அப்படி யென்றால் ஒரு காரியம் செய்யுங்கள். ‘வள்ளு வர் நவநீதம்” என்று ஒரு அழகிய நூல் எழுதியிருக்கிறேன். அந்த நூலைப் பணமாக்கி செலவுக்கு வைத்துக் கொள்ளலாமே” என்றார் கட்சிக்காரர். 

“ஒ பேஷாக, இந்தமாதிரி நூல்களும் பணமும் ஒன்றே” என்று கட்சிக்காரர் நீட்டிய நோட் புத்தகத்தை வக்கீல் வாங்கிக் கொண்டார். அதற்குப் பிறகு விடைபெற்றுக் கொண்டு – என்னிடத்திலும் கூடத்தான்-கட்சிக்காரர் வெளியே போய்விட்டார். 

இனிக் கேட்பதில் மரியாதைக் குறை வொன்றும். இல்லை என்று இவர் யார் என்றேன். 

“இவரைத் தெரியாதா? வான்புகழ் கொண்டவரைத் தெரியவில்லை என்றால் ஆச்சர்யமாய் இருக்கிறதே… இவர் தான் திருவள்ளுவர்” என்று வக்கீல் நிறுத்தினார். 

”இவரா? சடைமுடி யோகப் பட்டை ஒன்றையும் காணோமே?” என்று திடுக்கிட்டுக் கேட்டேன். 

பதில் கிடைக்கவில்லை. வக்கீல், அறை ஒன்றையும் காணோம். விழித்துக் கொண்டு நாற்புறமும் பார்த்தேன். ஆபீஸ் மேஜைமேல் மதிப்புரைக்கு வந்திருந்த புத்தகங்கள், மலைபோல் குவிந்திருந்தபடி என்னைப் பார்த்துச் சிரித்தன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *