இறுதி மூச்சுள்ளவரையில்…





(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இயலாமைகளால்-நிறைவேறாத ஆசைகளால் ஏற்பட்ட வறட்சி; அந்த வறட்சியிடையே பிறக்கும் ஒரேயொரு நம்பிக்கையொளியாகிய அதிர்ஷ்டம்; அதிர்ஷ்டத்தின் தூலவடிவமாகிய சுவீப் பரிசு இந்தப் பரிசை நடுவாகக் கொண்டு கதை விரிகிறது. வாழ்வின் வெறுமையை வார்த்தைகள் அப்படியே காட்டுகின்றன.
காய்ந்தபோன கிழித்த பனங்கிழங்காக வளைந்து. குடிசையின் முன்புறத்து ஒட்டுப்பிட்டியில் முதுகைச் சாய்த்து, தளர்ந்துபோன நிலையில் குந்தியிருக்கும் கணபதிப்பிள்ளை.
ஆவலோடு வெளிப்புறப் படலையைச் சதா வெறித்து நோக்கியவண்ணம் உறுமீன் வரும்வரை, கொக்காகத் தவமியற்றிக் கொண்டிருக்கும் அவர் விழிகள்…
முற்றத்தில் குறுக்குப் பாடாக விழுந்து கிழக்குத்திசை நோக்கி நீண்டு வளர்ந்து செல்லும் பனை நீழல்…
அந்த நிழலின் துரித வளர்ச்சியைக் கண்டு அதைப் பார்க்கக் கூடாதென்ற பிடிவாதத்தில், தவிர்க்க முடியாமல் இடையிடையே அதை நோட்டமிட்டு ஏங்கிக் கொண்டிருக்கின்றார், அவர்.
கணபதிப்பிள்ளையின் உற்ற துணையாக விளங்கும் ஊன்றுகோல், உன்ரை பலம நான்தான், என்ற இறுமாப்பில் சாய்ந்து கிடப்பதுபோல ஒட்டுப்பிட்டியில் தலைவைத்து, அவரைத் தொட்டும் தொடாமலும ஒட்டினாற்போலச் சரிந்து கொலுவிருக்கிறது.
வளர்ந்துபோய்க் கொண்டிருக்கின்ற பனைநிழல் அவர் பார்வையைக் குத்திவிடுகின்ற மன அரிப்பில் – வெளிப்புறப் படலையை உற்று உற்றுப் பார்த்து அலுத்துப்போன கண பதிப்பிள்ளையரின் இரத்தங் கண்டிப்போன கண்களில்-ஏதேச் சையாக அவரது ஊன்றுகோல் சிக்குப்படுகின்றது. “சீ! சனி யன்! துலைஞ்சுபோ” என்று சொல்லிக்கொண்டு நடுநடுங் கும் கரத்தைக் தூக்கி, ‘அவக்’ கென்று பற்றிப் பிடிக்கும் மனோவேகத்தில், ஊன்றுகோலைத் தூக்கித் தூர வீசவேண் டுமென்ற சினங்கொண்டெழுந்த வெறியுடன், பலங் கொண் டமட்டும் பல்லைக் கடிதது உன்னி எறிகின்றார். அவருள் ளத்தில் எழுந்த ஆவேசத்தை அலட்சியம் செய்வதுபோல அந்த ஊன்றுகோல் அவருக்கருகே சத்தமின்றி நெடுங் கிடையாக, அவரைப்போல மெல்ல விழுந்துகிடக்கின்றது.
சற்று நேரம் தாமதித்து அடுக்களைப்பக்கமாக அவர் திரும்புகிறார். “அம்மன், இப்ப நேரமென்ன இருக்கும்?”
“பள்ளிக்குடம் விட்டிருந்தால் பொடியன் இப்ப வருந்தானே!”
கணபதிப்பிள்ளையின் மூத்தமகள் – அடுக்கனைக் கொட்டிலுக்குள்ளிருந்து பனையோலைப் பாய் இழைக்கும் அவள்- அவர் கேள்விக்குப் பதில் சொல்லுகிறாள்.
‘அம்மன்’- அந்தக் குடும்பத்தில் அவள் ஒருத்தியை மாத்திரம்தான் ‘அம்மன்’ என்று அழைப்பது வழக்கம். அவ ளைப் பார்க்கின்ற வேளைகளிலெல்லாம், அவர் பக்தி சிரத் தையோடு வழிபடுகின்ற அவரது குலதெய்வமான அம்மன் தான் அவர் மனத்தில் தோன்றும். அவளைப்போல வரிசையாக இன்னும் நான்கு அம்மன்களை அவர் வீட்டோடு வைத்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்குரிய பெயர்களால், அந்தப் பெயர்களைச் சுருக்கி, செல்லமாக அழைப்பார். மூத்த மகள் பிறந்த பின்னர், அவர் தன் மனைவியைப் பார்த்து லஜ்ஜையில்லாமல் பிள்ளை என்று அழைப்பது அவருக்கு வசதியாகப் போய்விட்டது,
அவருக்குண்டான இந்த வாய்ப்பு அவர் மனைவிக்குக் கிட்டாமல் போனதில், அவளுக்கு மாத்திரமல்ல அந்தக் குடும்பத்துக்கே புரையோடிப்போன வேதனைதான். கணப திப்பிள்ளை நோய்வாய்ப்பட்டு நடமாட முடியாமல் வீட் டோடு முடங்கிய பின்பு, எல்லாரையும்விட அந்த வேதனை அவரைப்போட்டு அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது.
அவருக்குள்ள இந்தக் குறை அவர் வாழ்வில் நிறைவு பெற்றிருந்தால், இன்று நீண்டநேரமாக ஏமாற்றத்தோடு படலையைப் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டி நேர்ந்திருக்காதல்லவா?
“பிள்ளை, ஒருக்கால் பாரணை.”
”நான் எங்கேயெண்டு பார்க்கிறதையா.”
அவள் கொட்டிலுக்குள்ளேயிருந்து வெளியே வந்து, வளர்ந்து கொண்டிருக்கும் பனை நிழலைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறாள்.
“படலையிலே நிண்டு பார்.”
ஒருவேளை வாங்கிக்கொண்டு வராமல் விட்டு விடு வானோ, விளையாட்டுப் பொடியன்… சொல்லேலாது.. அப்படியுமிருக்கும்.
“மூந்தநாள் இழுத்தது. கட்டாயம் ண்டைக்குப் பேப் பரிலே வந்திருக்கும் கணபதிப்பிள்ளை மனத்துள்ளே தாழுதுகொண்டு தலையைப் பின்புறமாகக் குடிசைக்குள் திருப்புகிறார். குடிசையினுள்ளே கிழக்கு மேற்காக நீண்டு கிடக்கும் வளையின் நடுப்பாகத்தில் ஆணியடித்து அதன் மேல், கற்பூரப் புகையில் மங்கி, கண்ணாடிச் சட்டத்துள் சிறைப்பட்டுக் கிடக்கும் அம்மன் படம் நிமிர்ந்து நிற்பது அவர் கண்வழிப்புகுந்து இதயத்தில் விழுகிறது. அம்மன் படத்த க்குக் கீழே அதன் பீடமாக, வளையோடு பொருந்த, அதன் குறுக்குப்பாட்டில் கம்பியினால் வரிந்து கட்டப்பட் டிருக்கும் ஒரு பலகை. அதன் மேல் தீனமும் அவர் கற்பூர மெரிக்கும் திருநீற்றுத் தட்டு. திருநீற்றுத் தட்டுக்கும், பல கைக்கும் இடையே மஞ்சள் நிறமான அந்தச் சிறிய கட தாசித்துண்டு. பலகையை விட்டு வெளியே நீண்டு பார்வை யில் தட்டுப்படும் அந்தத் துண்டுக் காகிதம் காற்றில் பட்டு அதன் முனை மெல்லப் படபடக்கிறது. அந்தக் காகிதத்தை இதயத்திலிருந்து எழுகின்ற ஆதங்கத்தோடு கண்களால் தடவி, அம்மன் படத்தின்மேல் மானசீகமாக ஒத்துகிறார், கணபதிப்பிள்ளை. படத்துக்கு மூன்னால் வைக்கப்பட்டிருக் கும் திருநீற்றுத் தட்டின் மேல் விரல்களைப் பதித்து நெற் றியில் பூசி+கொள்ளும் பாங்கில், நெற்றியின்மேல் மூன்று விரல்களையும் வைத்து உத்தூளனமாகத் தேய்க்கிறார். இமைப் புருவங்களின் மேலும் முகத்திலும் நெற்றியில் இறைந்துகிடக்கும் திருநீறு உதிர்ந்து கொட்டுகிறது.
‘பொடியனை இன்னும் காணவில்லை.’
வலது கரத்தைக் கோலிப்பிடித்து மறுகரத்தால் முற் றத்தில் கிடக்கும் தண்ணீர்க் குடத்தைக் கவிழ்த்து நீரை ஏந்திக் கொண்டு அடுக்களைக்குள் புகுந்து, வெயிற் காங் கையில் முறிந்து கொண்டிருக்கும் பனையோலையின் மேல் தெளித்துப் பதப்படுத்தி, திரும்பவும் வேகமாகப் பாயை இழைக்க ஆரம்பிக்கிறாள் அவரின் முத்த மகள்.
‘இரண்டு கிழமையாக இராசரத்தினமும் இந்தப் பக்கம் வரவில்லை. அந்தப் பொடியன் வந்தால் எனக்கேனிந்தக் கரைச்சல். வாசியசாலைக்குக் கொண்டு போய்ப் பார்த்துக் கொண்டு வந்துவிடும். அதுக்கும் எங்கே நேரம். ஊர்ச் சுமையெல்லாம் அதின்ரை தலையிலேதான் நல்ல பொடியன். தன்னைப்பற்றி யோசிக்கத் தெரியாது. எந்த நேரமும் ஊரைப்பற்றித்தான் கவலை.’
கணபதிப்பிள்ளைக்கும் இராசரத்தினத்துக்குமிடையே ஏற்பட்ட உறவு அந்தவூர்ச் சனசமுக நிலையத்தில்தான் ஆரம்பமானது. இராசரத்தினம் நாள் தவறாமல் சனசமூக நிலையத்துக்கு வசதிப்பட்ட ஏதோவொரு நேரத்தில் பத் திரிகை படிப்பதற்குப் போவான். வாரத்தில் ஒரு தடவை மாத்திரம் கணபதிப்பிள்ளையும் அங்கு வருவார்; அந்த நாள் சுவீப் ரிக்கற் இழுப்பு முடிவு பத்திரிகைகளில் வெளிவரு கின்ற தினமாக இருக்கும். அந்த நாட்களில் கணபதிப்பிள்ளை யின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு ஒரு கூட்டம் அந்தக் கட்டடத்துக்குள் காத்திருக்கும். அவருடைய நிழல் கண்களுக்குத் தட்டுப்பட்டதும், “வாறார்… வாறார்… சுவீப் கணபகி” என்று அவர் செவிகளுக்கு எட்டத்தகுந்ததாகவே கிண்டல்பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். ஒருசிலர் தங்களுக்குள்ள ஆங்கில மேதைமையை ஏலம் போட இதை விடச் சிறந்த சந்தர்ப்பமில்லையென்ற நினைப்பில், சுவீப் கணபதியல்ல… சுவீற் கணபதி’ என்று ஏதோ புதிய கண்டு பிடிப்பை வெளியிடுவதுபோலப் பல்லிளிப்பார்கள். வேறு சிலர் பத்திரிகைகளில் அவருக்கு வேண்டிய பக்கங்களைக் கைக்குக் கீழே மடித்து வைத்துக்கொண்டு ஆழ்ந்த கவனத் துடன் பத்திரிகை படிப்பதான பாசாங்கில் பம்மாத்துப் பண்ணுவார்கள். அவர் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, தான் வந்த காரியம் எப்படியோ முடிந்தபின்னர் அங்கிருந்து ‘ மல்லப் புறப்பட்டுவிடுவார்.
இராசரத்தினமும் சில சமயங்களில் அவரைச் சனசமூக நிலையத்தில் வைத்துக் கண்டிருக்கிறான். எப்போதும் மலர்ந் திருக்கும் அவர் முகம், எவர் டேச்சைக் கேட்டும் மனங்கோணாத அவர் இயல்பு, என்றைக்கும் தளராத மிடுக்கான தன்னம்பிக்கை மிக்க போக்கு என்பன அவனை உணராமல் அவர்பால் அவனை ஈர்த்தன.
“நீங்கள் பேப்பர் பாக்க வந்தால் இருந்து வாசிக்காமல் உடனே திரும்பிப் போறியளே!”
இராசரத்தினம் ஒன்றுமறியாதவன்போல ஒரு தினம் தன் சந்தேகத்தை அவரிடம் மெல்லக் கேட்டுவைத்தான்.
“நான் பேப்பர் படிக்க வாறதில்லை. கவீப் பார்க்க வாறனான் தம்பி.’*
“ஒவ்வொரு கிழமையும் தவறாமல் எடுக்கிறனீங்கள் போல கிடக்கு எவ்வளவு காலமாக எடுக்கிறியள்?”
“சுவீப் துடங்கின காலத்தில இருந்து…”
“அப்ப இன்னுமொரு ஆறு தல் பரிசுகூட விழவில்லையே?”
“இல்லைத் தம்பி: எனக்கு ஆறுதல் பரிசு வேண்டாம்.”
“அப்படியெண்டால் நீங்கள் குறுக்கு வழியிலே லட் சாதிபதியாகப் பார்க்கிறியள்போலத் தெரியுது.”
அமைதியாகப் பேசிக் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை இதைக் கேட்டதும் துடிதுடித்துப் போனார், பதட்டத்தோடு அவனை இடைமறித்துக்கொண்டு அவர் சற்று உணர்ச்சி வசப்பட்டவராகப் பேசத் தொடங்கினார்:
“தம்பி…அப்பிடிச் சொல்லக்கூடாது தம்பி… நான் ஆரையும் ஏமாத்தயில்லை, களவெடுக்கயில்லை, கொள்ளையடிக் கயில்லை. உலகம் ஒத்துக்கொள்கிற முறையிலை வியாபாரம் எண்ட சாட்டில கொள்ளை லாபங்கூட அடிக்கயில்லை “
“நீங்கள் சொல்லுகிறது உண்மைதான். எண்டாலும் பாருங்கோ, இதுகும் ஒரு வழியிலே சூதாட்டந்தானே!”
“சூதாட்டத்தைச் சட்டவிரோதமெண்டு குற்றஞ்சாட்டுகிற கவுணமேந்தெல்லோ தம்பி சுவீப்பை நடத்திது.”
“தனிமனிதன் செய்தால் குற்றம். அரசாங்கம் செய்தால் சனநாயகம். இந்த அரசாங்கங்களிலே சனநாயகத்தின்ர பேரிலே சூதாட்டங்கள்தான் நடக்குது. தேர்தல் பேசின கட்சிகளெல்லாம் வருகுது பாருங்கோ லட்சியம் முகத்திரையைக் கிழிச்சுக்கொண்டு பேயாட்டமாடும். அவை யின்ர சூதாட்டம் தெளிவாகத் தெரியவரும். அது போகட்டும்; உங்களுக்கு ஒரு லட்சம் ரூபா சுவீப்பிலே கிடைக்குதெண்டு வைச்சுக் கொள்ளுவம்; அப்ப அந்தக்காசை என்ன செய்வீயள்?”
”தம்பி’ இந்த நெத்தியிலே கிடக்கிற திருநூத்தைப் பாருங்கோ…இது எங்கத்தையான் தெரியுமோ!”
“தெரியும். நீங்கள் ஓராள் தானே தினமும் உந்த அம் மன் கோயிலுக்குப் போறியள். ஊரிலெயுள்ள ஆடம்பர மான கோயிலுகளெல்லாத்தையும் விட்டுவிட்டுப் பிச்சைக் கார அம்மனிட்டைப் போறியள்.”
“எனக்கு ஆறு பிச்சைக்கார அம்மனுகள்.”
“ஏன் உங்களுக்கு ஆறு பொம்பிளைப் பிள்ளையள் இருக் கினமே?”
“இல்லை; அஞ்சுபேர்தான் பிள்ளையள் இருக்கினம். ஒண்டு நீங்கள் சொன்ன அந்தப் பிச்சைக்கார அம்மன் தான்.”
“சரிதான். பிச்சைக்கார அம்மனுக்கும் சீதனம் குடுத் துக்கலியாணம் செய்துவைக்கப்போறியள் போலெ கிடக்கு” என்று கேட்டுவிட்டு இராசரத்தினம் மெல்லச் சிரித்தான்.
“சிரிக்காதையுங்கோ தம்பி. உண்மையிலே அம்மனுக்குச் சீதனம் குடுக்கப்போறன்.”
அவனுக்குண்டான வியப்பை அடக்கிக்கொள்ள முடியாமல் விழிகளை அகலத்திறந்து அவரைப் பார்த்தான்.
“சுவீப்பிலே கிடைக்கப் போகிற பணத்திலே பாதி பிச்சைக்கார அம்மனுக்கு, அம்மன் கோயிலைப் புதிசாகக் கட்டுறதுக்கு. மிச்சந்தான் என்ரை வீட்டிலெ இருக்கிற அஞ்சு அம்மனுகளுக்கும்.”
“சரிதான்; நீங்களும் ஒரு பூசலார் நாயனார்தான். அவரும் மனத்திலெ கோயிலை எழுப்பி இருந்தாராம். மனத்திலெயெண்டால்… உருவகிச்சு வைச்சிருந்தாராம். ஒரு வகையிலே பார்க்கப்போனால் அவரும் நீங்களும் எஞ்சினியர்மார் தான்.”
“இல்லைத்தம்பி. நான்… நான் கட்டிமுடிப்பேன்.”
“எப்பிடி……..?”
”சுவீப் விழும்.”
“நிச்சயமா?”
“நிச்சயமாக நான் நம்புகிறேன்.”
“நம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களுந்தான் வாழ்க்கையின் ஆழமான அத்திவாரங்கள்; கொள்கை வழி வந்த லட்சியங்களுங்கூட. உங்கடை நம்பிக்கையும் கைகூடத்தான் போகிறது.”
இருவரும் மனந்திறந்து பேசிக்கொண்ட பின்னர் அவர்களுக்கிடையே இனம் புரியாத நெருக்கமான ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. இதன்பின்பு இருவரும் இடையிடையே சந்தித்து மனம் விட்டுப் பேசிக்கொளவதில் தனியான ஒரு சுகங் கண்டனர்.
இராசரத்தினம் ஒரு சமயம் கணபதிப்பிள்னையைச் சந்தித்து ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தபோது நீண்ட காலமாக அவன் மனத்திலிருந்துவந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டுக்கொண்டான்.
“நீங்கள் என்னதான் சொன்னாலும் உங்கடை நோக்கம் முழுவதும் சுயநலந்தான்.”
“அப்பிடியேன் சொல்லுறியள்?”
“சுவீப் விழும். உங்களின்ரை பிள்ளையளுக்கு நல்வாழ்வு கிடைக்கும்…” அவன் சொல்லி முடிப்பதற்கு முன்னர் கணபதிப்பிள்ளை இடைமறித்துக்கொண்டு, “பிச்சைக்கார அம்மனுக்கும்” என்றார்.
“ஓ, அம்மனும் பணக்காரியாக வேணுமெண்டு மாத்திரம் நம்பியிருக்கிறியள். ஆனால், உங்கடை குமருகள்போல உலகத்திலே எத்தனைபேர் இருக்குதுகள். ஏழை எளியதுகளின்ரை வாழ்வு ஒரு நேரக்கஞ்சிக்கும் வழியில்லாமல் இருண்டு போய்க் கிடக்கு. அது உங்கடை கண்ணுக்குத் தெரியல்ல.”
கணபதிப்பிள்ளை மெளனமாகத் தலையை ஆட்டி மெல்லச் சிரித்துக் கொண்டார்.
இப்படிக் கேட்ட பின்னரும் என்றும் போல அவர் முகத்தில் கோட்டமில்லாத குளிர்ச்சி அவன் எதிர்பார்த்தது போல் முகம் சுண்டிக் கறுத்துப்போய் விடவில்லை. ஆனால், நீண்ட மெளனம் இருவருக்குமிடையே கவிந்து போய்க் கொண்டிருந்தது. இராசரத்தினம் புதுமையோடு வைத்த கண் வாங்காமல் அவரை அவதானித்துக் கொண்டிருந்தான். நிமிடங்கள் இரண்டு மூன்று பாய்ந்தழிந்து விட்டன. அவர், தான் இருக்கும் சூழ்நிலையை மறந்து, அவன் தன் அருகே இருக்கிறானென்பதையும் நினைவிழந்து, ஏகாங்கியாக அந்தச் சூழல் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டு எங்கோ இருப்பவர் போலத் திகழ்ந்து, திடீரென்று சுய நிலைக்கு வந்தவராக அவனைப் பார்த்துத் தொடர்பின்றிக் கேட்டார்.
“தம்பி, உங்கடை மனத்திலே இருக்கிற லட்சியமென்ன?”
“இல்லாமையால் வாடுகிற மக்கள் இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க வேணும்; ஏற்றத்தாழ்வென்பதை இல்லாமல் செய்யவேணும் எண்டதுதான் எனக்கிருக்கிற ஒரே லட்சியம்.”
“அந்த உலகம் என்ரை சீவியத்திலே வருமெண்டால் தானும் என்ரை நம்பிக்கையைக் கைவிட்டு விடுகிறேன். அல்லது நீங்கள் விரும்புகிற உலகத்தை உண்டாக்கக் கூடிய அளவுக்கு எனக்கொரு சுவிப் விழுமெண்டால் நீங்கள் எதை விரும்புகிறியளோ அதைத்தான் நானும் செய்வன்.”
“உங்கடை உணர்வுகளை நான் நல்லாகப் புரிந்து கொண்டு விட்டன். உங்களைப் போன்றவர்களிடமிருக்கிற தார்மீகமான உணர்வுகளே எங்களுக்குப் பக்கபலந்தான்.”
கணபதிப்பிள்ளை நோய் வாய்ப்பட்டு எழுந்து நடமாட முடியாமல் இருக்கிறாரென்பதை அறிந்தபோது இராசரத்தினம் முதற் தடவையாக அவரைத் தேடிக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றான். எப்பொழுதுமே குதூகலத்தோடும் நம்பிக்கையோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு மனிதன், நோயில் விழுந்து துன்ப துயரங்களோடு படுத்துக் கிடப்பதைப் பார்க்கப் போகிறேனே என்ற வேதனையுடன் அவன் அவரை எதிர்பார்த்து வந்தான். அவர் வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்னர்தான் அவன் போட்டுக்கொண்டி ருப்பது தப்புக்கணக் கென்பதைப் புரிந்துகொண்டான். கணபதிப்பிள்ளை என்றும்போல மலர்ந்த முகத்தோடு அவனைச் சிரித்து வரவேற்றார். அவரைப் பார்க்கின்றபோது அவன் மனத்திலெழுந்த வியப்பை அவன் முகமே அவருக்குக் காட்டிக் கொடுத்துவிடுகின்றது.
“தம்பி, என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறியள் போலத்தெரியுது.”
“ஓமோம். இந்த நேரத்திலேயும் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறியளே! இதைப் பாத்து எப்படி ஆச்சரியப்படாமல் இருக்கலாம். நீங்கள் அதிசயமான மனிசர்.”
“நீங்கள் மாத்திரமென்ன! நீங்களும் என்னைப் போலத் தான்.”
“ஏன் அப்படிச் சொல்லுறியள்?”
“உங்களுக்கு நீங்கள் நினைக்கிற உலகத்தை உருவாக்கிப் போடுவோமெண்ட நம்பிக்கை. எனக்கும் என்னுடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கை இருக்கும்வரைதான் லட்சாதிபதி; நீங்கள் கம்மியூனிஸ்ட். அது இல்லாமல் போச்செண்டால் நான் லட்சாதிபதியுமல்ல, நீங்கள் கம்யூனிட்டுமல்ல”
“அப்ப நம்பிக்கைதான் நடைமுறை வாழ்க்கையெண்டு சொல்லுறியளோ.. ?”
“அதுகும் ஓரளவுக்குச் சரிதான் தம்பி. ஆனால் நம்பிக்கையை நடைமுறையிலே காணுகிறது தான் பூரணமான வாழ்வு.”
“ஐயா, பேப்பர் கொண்டு வருகுது பொடியன்.”
கணபதிப்பிள்ளை சிந்தனைத் திடத்திலிரூந்து விடுபட்டு, பத்திரிகை வாங்கிக்கொண்டு வந்திருக்கும் பக்கத்து வீட்டுப் பாடசாலை மாணவனை ஆவலோடு வரவேற்கிறார்.
“கொண்டாதம்பி கொண்டா… அம்மன் அந்த நிக்கெற்றை எடுத்துக்கொண்டு வா..”
பத்திரிகையை விரித்துப் பிடித்து, ரிக்கெற்றைக் கையில் தூக்கிக் கொண்டு இலக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
“ஆ முதற் பரிசு! முதற் பரிசு! ச்சச்ச இந்த இங்கிலீசு எழுத்து மாறிப்போச்சு! இல்லையெண்டால் முதலாம் பரிசு. ஒரு லட்சம், சரி சரி. வாறகிழமை பாப்பம்.”
கணபதிப்பிள்ளை நீட்டி நிமிர்ந்து நெடுஞ்சாணிட்டுக் கிடக்கிறார். மனைவி மக்களும் சுற்றத்தார் சிலரும் அவரைச் சூழவிருக்கிறார்கள். அவர்கள் கண்கலிலிருந்து துன்பச்சுமை நீராக வடிந்து நெஞ்சின்மேல் இறங்கிக்கொண்டிருக்கின்றது. தலைமாட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் அருகே இருந்து கூப்பிய கரங்களோடு உறவினர் ஒருவர் திருப்புகழ் பாடுகிறார். பக்தியில் இழைந்துருகும் அவர் குரலைவிட, மனைவி மக்களின் விம்மல் விசும்பல், கணபதிப்பிள்ளைக்கு மூச்சு முட்டி நெஞ்சு பொருமி விக்கல் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கிறது. குழவிருப்பவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் உறவுமுறை சொல்லி, அவர் வாய்க்குட் பால் வார்த்துத் தங்களுக்கும் அவருக்கு முள்ள பந்தத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறார்கள். இறுதியாக அவர் மனைவியும் கைவிட்ட நிலையில் குமுறிக் குமுறி அழுதவண்ணம் பால்வார்த்து முடித்துக் கொண்டுவிட்டாள். ஆனால், அவரது மூச்சு இன்னும் அடங்கிப் போகாமல் அவரை அவஸ்தைப்படுத்தி இழுத்துக்கொண்டு கிடக்கிறது. பார்வை பூரணமாக அவர் பெற்ற அம்மன்களின் மேல் ஒவ்வொருவராக மெல்ல நகர்ந்து செல்கிறது.
“ஐயே! அஞ்சு குமரையும் அந்தரிக்க விட்டுவிட்டு இந்தச் சீவன் எப்பிடிப் போகும்! அதுதான் கிடந்து இழுபறிப்படுகுது.” அங்கிருந்து எழுகின்ற நைந்துபோன வேதனைக் குரல்கள்.
இராசரத்தினம் எங்கிருந்தோ அவசரம் அவசரமாக அங்கு ஓடிவந்து சேர்ந்தான். அணையப்போகின்ற கணபதிப் பிள்ளையைப் பார்க்க அவனை அறியாமல் அவன் கண்கள் பனிக்கின்றன. ‘எனக்கு நல்ல தந்தையாக. உற்ற தோழனாக விளங்கிய இவரை இழக்கப் போகின்றேனே!’ என்று நினைக்கும்போது அவன் இதயம் வேதனையால் கொதித்து வெந்தது. கடைசி நேரத்தில் அவர் படுகின்ற அவஸ்தை அதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அவன் துடியாய்த் துடித்தான்! அவர் ஆத்மா இப்படிக் கிடந்து ஏன்தான் கசக்கிப் பிழியப்படவேண்மென்று எண்ணமிட்ட அவனது மனத்தில் மின்னலைப் போன்று திடீரென்று ஒரு நினைப்பு!
அவன் யாருக்கு மெதுவும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து திரும்பி வெளியே ஓடுகிறான். அடுத்த சில நிமிடங்களில், போன வேகத்தில் வியர்க்க விறுவிறுக்க கையில் ஒரு பத்திரிகையோடு திரும்பவும் அங்கு வந்து சேருகிறான். அம்மன் படத்துக்கு முன்னாலுள்ள திருநீற்றுத் தட்டுக்குக் கீழே கிடக்கும் சுவீப் ரிக்கெற்றைக் கையில் எடுத்துக் கொண்டு, பத்திரிகையை விரித்துப் பிடித்தவண்ணம் அவர் அருகே அமர்ந்து கொள்ளுகின்றான். அவர் பார்வைக்குப் படத்தக்கவண்ணம் பத்திரிகையையும் ரிக்கெற்றையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, செயற்கையாக வருவித்த மகிழ்ச்சியோடு அவர் முகத்துக் நேரே குனிந்து,
“இந்தத் தடவை உங்களுக்குத்தான் முதற் பரிசு! ஒரு லட்சம் ரூபா! அம்மனுக்குப் பாதி, உங்கடை பிள்ளையளுக்குப் பாதி,” என்று கூறிக்கொண்டு வெம்பி வெடித்து வந்த அழுகையை உதட்டைக் கடித்து உள்ளே அடக்கிய வண்ணம் அவர் முகத்தை உற்று நோக்குகிறான்.
அந்த முகத்தில் ஒரு புதிய ஒளி! கண்களில் திடீர்ப் பிரகாசம்! இதழ்க் கடையில் நம்பிக்கையின் வெற்றியில் தோன்றும் பெருமிதமான கீற்று நெளிவு! வறண்டு கிடக்கும் அவர் உடலெங்கும் பொங்கிப் பெருகும் புது வெள்ளத்தின் பூரிப்பு! தொடர்ந்து கொண்டிருந்த விக்கல் திடீரென்று நின்றுபோக நிம்மதி தோய்ந்த அமைதியான ஒரு மூச்சு நெஞ்ச முட்டி.. சிறிது சிறிதாக வெளியேறி… அவர் கண் மடல்கள் மெல்லக் குவிந்துகொள்ளுகின்றன!
“ஐயா..! எங்களைத் தனிய விட்டிட்டுப் போவிட்டியளே!”
இராசரத்தினம் தலைகுனிந்த வண்ணம் மெளனமாகக் குடிசையை விட்டு வெளியே வருகிறான்.
‘நானும் இவரைப் போலே சாகவேணும்.’
அவன் இதயத்தில் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
– மல்லிகை, 1977.
– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.
தெணியான்
தமது எழுத்துலகப் பிரவேசத்தின் 25 ஆம் ஆண்டினை 1989 இல் நிறைவு செய்ய விருக்கும் தெணியான் அவர்கள் இது வரை 94 சிறுகதைகளும், மூன்று நாவல்கள், இரண்டு குறு நாவல்கள் என்பனவும் படைத்துள்ளார். இவரது ‘கழுகுகள்’ நாவல் தகவம் பரிசினைப்பெற்றது.
‘யதார்த்தத்தைச் சமூகத்தின் இயல் பான அசைவியக்கப் பின்னணியில் வைத்துக் காட்டும் ஒரு பண்பின் வளர்ச்சியையும், லக்கிய முதிர்ச்சியையும் இலங்கைத் தமிழ் நாவல்களைப் பொறுத்தவரையில், தெணியானுடைய கழுகுகள் நாவலில் காணலாம்”. -பேராசிரியர் கா. சிவத்தம்பி.
தெணியானது சிறுகதைகள் சில ‘சொத்து’ என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.
“இவரது சிறுகதைகள் யாவும், பரந்த தளத்தில் நின்று, நசுக்கும் வர்க்கத்தினரின் மனச்சிக்கல்கள், குமுறல்கள், தவிப்புகள், பாரம்பரியப் பெருமைகள் முதலானவற்றை யும், நசுக்கப்படும் வர்க்கத்தினரின் போராட்டங்கள், எதிர்ப்புக்கள், நம்பிக்கை கள், ஏமாற்றங்கள், பரிதாபங்கள் முதலான வற்றையும் கூர்மையும் தெளிவும் கொண்ட வர்க்கப் பார்வையுடனும் கலைப்பாங் குடனும் தெளிவுபடுத்துவனவாகும்.” – ‘சொத்து’- நூல் ஆய்வில் செ.யோகராசா.