கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 20, 2025
பார்வையிட்டோர்: 6,301 
 
 

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

அத்தியாயம்-1

புலிக்குட்டி அவன் பெயர். புலியைப் போன்ற மனம் கொண்டவன்தான். ஆனால் பார்ப்பதற்குப் பூனையைப் போல் அவன் இருந்தான். அவன் இருபத்திரண்டு வயதான இளைஞன். பட்டம் பெறவில்லை. பள்ளிக்கு ஒழுங்காகப் போகவில்லை. படிக்கத் தெரியும். கையில் கிடைத்ததையெல்லாம் தன் வாழ்க்கைக்கு உதவுமா என்ற ஐரே எண்ணத்தோடு படிப்பாள். கீழே கிடக்கும் பழைய பத்திரிகையைக்கூட எடுத்து வைத்துக்கொண்டு படிப்பான். அவனுக்கு வலக்கை இல்லை. நொண்டி. பிறக்கும்போதே நொண்டியாக அவன் பிறக்கவில்லை. வேலூரிலிருந்து பிழைக்கச் சென்னைக்கு ஒரு லாரியில் அவன் தொத்திக் கொண்டு வந்தது அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கே தெரியாது. லாரி வழியில் ஒரு விபத்தில் கவிழ்ந்து விழுந்தபோது, புலிக்குட்டியின் வலக்கை போய்விட்டது. அவன் வலக்கையின் முக்கால் வாசியை டாக்டர்கள் வெட்டி எடுத்துவிட்டார்கள்! இதனால் அவனுக்கு வாழ்க்கையில் சலிப்பும், அதனால் எப்படியாவது இந்த நொண்டிக் கையுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வீரமும் எழுந்தது அவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு அவனுக்கு உற்றார் உறவினர் என்று எவரும் இலர். ஆகையால், வாழ்ந்தால் அவனுக்கு இலாபம்; வாழ முடியாவிட்டால் இனிமேல் இழப்பதற்கு அவனிடம் ஒன்றும் இல்லை! 

இந்த எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது! 

புலிக்குட்டியைப் பார்த்துப் பலர் கேலி செய்தார்கள். சிலா இரக்கப்பட்டார்கள். கையை இழந்துவிட்டு இவன் என் வாழவேண்டும் என்று ஒரு சிலர் பேசிக்கொண்டார்கள். கையை இழந்தவர்களும் இந்தக் காலத்தில் மற்றவர்களைப் போலவே வாழ முடியும் என்று ஒரு சிலர் எடுத்துச் சொல்லி அவனுக்கு ஊக்கம் அளித்தார்கள். 

இரண்டு கைகளையுமே விபத்து ஒன்றில் இழந்து விட்ட ஒருவர், காலாலேயே காரை ஓட்டி வாழும் படம் ஒன்று அண்மையில் பத்திரிகையில் வந்தது. அந்தப் படத்தைச் சிலர் புலிக்குட்டியிடம் காட்டினார்கள். ஆனால் எவரும் அவனுக்கு வேலை கொடுக்கவில்லை, பொருளுதவி செய்யவில்லை. 

சென்னையில் இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தான் புலிக்குட்டி. ஒரு நாள் மாலை மூர்மார்க்கெட்டின பின்னால் இருந்த ஒரு பூங்காவில் உடகார்ந்து சிறிது நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான. 

மாலை வேளை ஆகையால், பறவைகள் விரைவாகப் பறந்து போயக்கொண்டிருந்தன. அந்தப் பறவைகளைப் போல நாமும் ஏன் சுறுசுறுப்பாக இருக்கக்கூடாது என்று எண்ணினான். அப்போது அவன் காலடியில் பழைய பத்திரிகையின் பாதித்தாள் ஒன்று கசங்கிச் சுருண்டு பறந்து வந்து விழுந்தது. அதை எடுத்தான். இடக்கை யால் அதைப் பிடித்து, சுசங்கிய பகுதிகளை அந்த ஒரே கையாலேயே நீட்டி, எழுத்துகள் தெரியும்படி வைத்துக் கொண்டு படித்தான். தேர்தல் செய்திகள் அவனுக்கு ஊக்கத்தை அளிக்கவில்ல. விளம்பரப் பகுதிகளைப் பார்த்தான். நொண்டிக்கு வேலை கொடுப்பதாக எவரும் விளம்பரம் செய்யவில்லை. ஆனால் நொண்டிகளுக்குச் செயற்கைக் கால்களையும், கைகளையும் செய்து விற்கும் கம்பெனி ஒன்று விளம்பரம் கொடுத்திருந்தது. அந்தக் கம்பெனியின் முகவரியை மனப்பாடம் செய்துகொண்டு, அந்தப் பழைய பத்திரிகையை வீசி எறிந்தான். அந்த இடத்திலிருந்து எழுந்து விரைவாக நடந்தான். அவன் செயற்கைக் கையை வாங்கி வைத்துக்கொள்ள முடிவு செய்தான். அதற்காக அவனுக்குப் பணம் தேவைப்பட்டது. எவ்வளவு பணம் தேவை என்பதை தெரிந்துகொள்ளாமல், அவன் அந்தப் பணத்தைப் பெற முடிவு செய்தான். 

அவன் கால்கள் நடந்துகொண்டிருந்தன. ஒரு கை மட்டும் ஆடியது. வலக்கை, நொண்டியாகிவிட்ட கை. அதனால்தான் அது ஆடவில்லை! சட்டையின் அரைக் கைக்குள் அது ஒளிந்து கொண்டிருந்தது! அவனுடைய கண்கள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய கண்கள் ஏதோ ஒரு பொருளை உற்றுப் பார்த்ததும், அவன் கால்கள் நின்றன. அவன் கண்கள் பார்த்த பொருள்- 

ஓர் அழகிய பெண்ணின் கையில் இருந்த கைப்பை, அந்த அழகிய பெண், காரிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷனின்முன் இறங்கினாள். அவள் இறங்கியதும் கைப் பையைத் திறந்து டிக்கெட்டைத் தேடினாள். அப்போது பையிலிருந்த சில ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துவிட்டு, அடியிலிருந்த டிக்கெட் கிடைத்த தும், பணத்தை மீண்டும் பையில் போட்டு மூடி வைத்துக் கொண்டு நடந்தாள்.

புலிக்குட்டி, அந்தப் பெண்ணை ஒரு கணம் பார்த்தான். பிறகு மீண்டும் அவள் கைப் பையைப் பார்த்தான். அவளைத் தொடர்ந்தான். 

அழகிய அந்தப் பெண், முன்னால் நடந்தாள். அவன் பின்னால் கூலி ஒருவன் அவளுடைய பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தான். கூலிக்குப் பின்னால் அவனுடைய நிழலைப்போல் புலிக்குட்டி நடந்தான். 

புலிக்குட்டி பிளாட்பாரம் டிக்கெட்கூட வாங்கவில்லை. அவனிடம் பைசாகூட இல்லை. கூலியின் பின்னால் நடந்தபோது, டிக்கெட் சோதகர் அவனிடம் டிக்கெட் கேட்கவில்லை. அவர் யாரிடமும் டிக்கெட் கேட்டதாகத் தெரியவில்லை! எவராவது தாமாக டிக்கெட்டை நீட்டினால் மட்டும் அவர் அதை வாங்கித் துளையிட்டுக் கொடுத்தார். 

அழகி, நேராகப் போய் டில்லிக்குப் போகும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறினாள். கூலி, அவள் ஏறிய முதல் வகுப்புப் பெட்டியில் பெட்டியை வைத்துவிட்டுப் போய்விட்டான். வண்டி புறப்பட நேரம் இருந்ததால், முதல் வகுப்புப் பெட்டியில் அவள் மட்டுமே இருந்தாள். அந்தப் பெட்டியில் பயணம் போக வேண்டியவர்களில் எவரும் இன்னும் வரவில்லை. அந்தப் பெண் கைப் பையைத் தனது இடத்தில் வைத்துவிட்டு, கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியும் பார்த்தாள். பிறகு, மெல்ல எழுந்து பாத்ரூமுக்குள் சென்றாள். 

இவ்வளவு விரைவில் புலிக்குட்டிக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் சன்னல் ஓரமாக விரைந்து சென்று, கைப் பையை எடுத்துக்கொண்டு, விரைவாக நடந்தான். அவனை எவரும் அப்போது கவனிக்கவில்லை. வழியில் எவராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்று அவன் புகை வண்டிகளின் பெட்டிகளுக்கு இடையில் புகுந்து, தண்டவாளத்தைக் கடந்து, புகைவண்டிப் பதையின் ஓரமாகவே ஓடினான். 

ஸ்டேஷனில் ஏதோ கூச்சல் கேட்டது! கத்தியது அந்தப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்! எவரோ ஓடி வருவதைப் போல் தெரிந்தது! புலிக்குட்டி நின்று பார்க்க வில்லை! விரைந்து ஓடினான்! மீண்டும் அவன் புகைவண்டிப் பாதையின் ஓரமாகவே மூர்மார்க்கெட்டின் பின்னால் வந்துவிட்டான்! ஒரு சுவருக்குப் பக்கத்தில் அவன் கொஞ்சம் நின்று, கைப் பையிலிருந்த பணத்தை அள்ளிக் கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு, பையை வீசி எறிந்துவிட்டு ஓடினான்! மூச்சு வாங்க அவன் மறைந்துவிட்டான்! 

அத்தியாயம்-2 

புலிக்குட்டிக்கு, அச்சம் ஒரு பக்கம்; ஆவல் ஒரு பக்கம் எவராவது தன்னைத் துரத்திவந்து பிடித்துக்கொண்டு விடுவார்களோ என்று அவனுக்கு அச்சம் எவ்வளவு பணம் இருக்கிறது தன் கையிலே என்று எண்ணிப் பார்க்க அவனுக்கு ஆவல். வழியிலே எங்கும் நின்று பணத்தை எடுத்து எண்ணிப் பார்க்க அவனுக்குத் துணிவு இல்லை. ஆகையால் ஒட்டலுக்குள் புகுந்து. ஒரு மூலையிலோ, ஒரு தனி அறையிலோ உட்கார்ந்துகொண்டு பணத்தை எண்ணிப் பார்க்கலாம் என்று எண்ணினான் அவன். எந்த ஓட்டலுக்குள் வேண்டுமானாலும் நுழைய இப்போது அவனுக்குத் துணிவு வந்தது. 

அவன் விரைந்து நடந்து கொஞ்சத் தொலைவில் இருந்த பெரிய ஓட்டல் ஒன்றுக்குள் நுழைந்தான். அந்த ஓட்டலில் ஒரே கூட்டமாக இருந்தது. எங்கு உட்கார்ந்தாலும் எவரும் பார்க்காதபடி பணத்தை எடுத்து எண்ணிப் பார்க்க முடியாது. குடும்பங்களுடன் வருகிறவர்களுக்கும் தனிமையில் உட்கார்ந்து சாப்பிட விரும்புகிறவர்களுக்கும் உட்காரக் தனி அறைகள் கட்டிவிடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றைப் பிடித்து உள்ளே போய் உட்கார்ந் தான். பரிமாறுபவன் வந்ததும். என்ன வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டு, அவன் போனதும் பணத்தை எடுத்து எண்ணினான். அவனிடம் நானூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருந்த அவன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோதே பரிமாறுபவன் வந்து வெறும் தண்ணீரை வைத்துவிட்டுப் போனான். அப்போது அவன் பார்த்த பார்வை புலிக்குட்டிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை! பரிமாறுபவன் போனதும் மேசையைத் துடைக்கும் பையன் எட்டிப் பார்த்தான். அவன் பார்த்த பார்வையும் புலிக்குட்டிக்குப் பிடிக்க வில்லை! எவ்வளவு உயர்ந்த ஓட்டலாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஓட்டலாக இருந்தாலும் சரி, தனிமையில் உட்காருகிறவர்களை ஒட்டலில் உள்ளவர்களில் எவராவது கழுகுக்கண்களுடன் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை அப்போது அவன் உணர்ந்தான்! 

பலகாரத்தை உண்டுவிட்டு அவன் வெளியே வந்த போது மெல்ல இருட்டத் தொடங்கியது. சாலைகளிலும் கடைகளிலும் விளக்குகள் எரியத் தொடங்கின. அவன் பஸ் ஒன்றைப் பிடித்து அதில் பிராட்வேக்குப் பயணம் செய்தான். சென்னையில் மிகக் குறுகிய தெருக்களில் ஒன்று பிராட்வே. அகன்ற தெரு என்று பொருள் உள்ள இந்தப் பெயரை யார்தான் அதற்கு வைத்தார்களோ என்று எண்ணியபடி அவன் பிராட்வேயில் இறங்கி, செயற்கைக் கைகள் விற்கும் கடைக்குள் நுழைந்தான். 

கை கால்களை இழந்து வாழ்வு கசந்தவர்களுக்குப் புதுவாழ்வைக் கொடுக்கும் அந்தக் கடையின் பொறுப்பாளர் இன்முகத்துடன் அவனை வரவேற்றார். உட்கார வைத்து அவன் கையை இரக்கத்துடன் பார்த்தார். எப்படி அந்தக் கை போய்விட்டது என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, பிறகு சொன்னார்: “துன்பம் கொள்ள வேண்டாம். இயற்கைக் கையைப் போலவே இப்போது செயற்கைக் கையும் வருகிறது. மேல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்தச் செயற்கைக் கையில் விரல்கள் இருக்கின்றன. விரல்களும், உள்ளங்கையும் பருமன் இல்லாக இரும்பினால் ஆனவை. மற்ற பகுதி பிளாஸ்டிக்கினால் ஆனது, உடையாதது. விரல்களை அசைச்கலாம். மடக்காலம். எழுகலாம். பூட்டைத் திறக்கலாம். சிகரெட் பிடிக்கலாம். தீக்குச்சியைப் பற்ற வைக்கலாம். காட்டட்டுமா?” 

“கொண்டு வாருங்கள்” என்றான் புலிக்குட்டி. 

கடையின் பொறுப்பாளர் உள்ளே சென்று அவர் குறிப்பிட்ட செயற்கைக் கையைக் கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் புலிகுட்டியின் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது! 

பொறுப்பாளர் அந்தக் கையின் கொக்கிகளை மடக்கி விட்டு அதில் கூரிய கத்தி ஒன்றைப் பொருத்தினார். பிறகு அதைக் கழற்றிவிட்டு மீண்டும் கொக்கிகளை நீட்டினார். “தற்போது காப்புக்காகச் சண்டை போடும் போது இந்தக் கத்தியை பொருக்கிக் கொள்ளலாம். அல்லது இயந்திரங்களை முடுக்கும் கருவிகளைப் பொருத்திக்கொண்டு இயந்திரங்களைப் பழுது பார்க்கலாம். இதைவிடச் சிறந்த கை இன்று உலகத்தில் இல்லை” என்றார். 

“என்ன விலை இது?” 

“பத்தாயிரம் ரூபாய்! இத்தனைக்கும் இதற்கு வரியே கிடையாது!” 

இதைக் கேட்டதும் புலிக்குட்டியின் மனம் சுருங்கியது! இவ்வளவு விலை இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. கற்பனை கூடச் செய்து பார்க்கவில்லை. “வேறு மலிவாக ஒன்றும் இல்லையா?” என்றாள் அவன். அவன் குரலே மாறிவிட்டது இப்போது! 

பொறுப்பாளர் அப்போதும் இனிய முகத்துடன் சொன்னார்: “இருக்கிறது வெறும் கட்டையால் ஆனது. மேலே தோலால் மூடியிருக்கும். இந்த மரக்கட்டைக் கையினால் ஒன்றும் செய்ய முடியாது! முழுக்கை சட்டை போட்டுவிட்டால் கை உள்ளதைப்போல் இருக்கும்! இதன் விலை மிக மிகக் குறைவு! முன்னூறு ரூபாய் தான் எடுக்கட்டுமா?” 

“வேண்டாம்” என்று கூறிவிட்டு அவன் எழுந்து விரைந்து வெளியே வந்தான். 

புலிக்குட்டிக்கு மண்டையே தெறித்துவிடும் போலிருந்தது! பத்தாயிரம் ரூபாயை எங்கே போய் எப்படித் திருடுவது? இதைப் பற்றியே இப்போது அவன் மனம் எண்ணியது. கால்கள் நடந்தன. எப்படியாவது அவன் பத்தாயிரம் ரூபாயைப் பெற்றுச் செயற்கைக் கையை வாங்க எண்ணினான். கடற்கரை ஓரமாக அவன் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, வாய்ப்பு அவனைத் தேடி வந்தது! இவ்வளவு விரைவில் அது அவனைத் தேடிவரும் என்று அவனுக்கே தெரியாது! 

அத்தியாயம்-3 

நடத்து போகிற ஒருவனை ஓசையில்லாமல் ஒரு கார் தொடர்ந்து வருவது என்பது மிக அரிய, மிக வேடிக்கையான ஒரு நிகழ்ச்சி. நடந்து போகிற எவரும் தன்னை ஒரு கார் துரத்தி வருகிறது என்று ஐயப்படவே மாட்டார்கள். பின்னால் மெல்ல வரும் காரில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். அல்லது காற்று வாங்கக் காரை நிறுத்த இடம் பார்க்க வேண்டும் என்றே எல்லோரும் எண்ணுவார்கள். அப்படி ஒரு கார், புத்தம் புதிய அம்பாஸிடர் கார் புலிக்குட்டியைத் தொடர்ந்து வந்தது. அதைச் செலுத்தி வந்தவள் ஒரு பெண். காரில், அவள் பக்கத்தில் ஒரு பூனை உட்கார்ந்திருந்தது. கொழுகொழுவென்று கொழுப்புடன் வளர்ந்திருந்த அந்தப் பூனை, உயர்ந்த சாதியைச் சேர்ந்த பூனை. சயாம் நாட்டுப் பூளை. பணக்காரர்களால் மட்டுமே இப்படிப்பட்ட பூனைகளை இங்கே வளர்க்க முடியும்! 

புலிக்குட்டியைப் பார்த்துக்கொண்டே காரைச் செலுத்திய அந்த அழகி, காரை நிறுத்திவிட்டு. பூனையைத் தூக்கிப் புலிக்குட்டியைச் சுட்டிக் காட்டினாள். “அந்த மனிதனைப் பார். ஒரு கை இல்லாதவன். அவனிடம் கொஞ்சம் விளையாடு. புரிகிறதா?” என்று சொல்லி அதைத் தடவிக் கொடுத்து வெளியே தூக்கிப் போட்டாள். 

அந்தப் பூனை அவள் சொன்னதைப் புரிந்துகொண்டதைப் போல் வெளியே வந்து விழுந்ததும் குதித்து எழுந்து, ‘மியாவ். மியாவ்’ என்று கத்திக்கொண்டு புலிக்குட்டியின் பின்னால் ஓடியது. 

புலிக்குட்டி திரும்பிப் பார்த்தான். பூனைக்கு உரியவர்கள் எவரும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அந்த அழகியின் கார் ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தது. அவள் காருக்குள் உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தது புலிக்குட்டிக்குத் தெரியாது! 

பூனை, அவனுடைய கால்களைத் தனது கால்களால் வருடி ‘மியாவ் மியாவ்’ என்று கத்திக்கொண்டே மணவில் இருந்த பளபளக்கும் சிப்பிகளை மட்டும் வாயில் கெளவி வந்து அவனிடம் கொடுத்தது. பூனையைத் தடவிக் கொடுத்து விட்டுச் சிப்பிகளை வாங்கிக்கொண்டான் அவன். மீண்டும் அந்தப் பூனை ஓடிப்போய்ச் சிப்பிகளைக் கௌவி வந்தது. 

இப்படி ஓர் அழகிய புனையின் நட்பத் தனக்குக் கிடைக்கும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை அந்த அழகிய பூளையைப் பிடித்துக்கொண்டு போய்ப் பணக்காரர்களிடம் விற்றால் பெரும் பணம் கிடைக்கும் என்று எண்ணினாள் அவன். மறுகணம் அந்தப் பூனையைப் பயன்படுத்திப் பெரும் பணம் சேர்த்து விடலாம் என்ற எண்ணம் அவன் மனத்தில் வேரூன்றி விட்டது. 

புலிக்குட்டிக்கு ஓர் ஐயம் வந்தது. பூனைக்குரியவர்கள் எவராவது மணலில் உட்கார்ந்திருக்கிறார்களோ. அவர்கள் வந்து பூனையைத் தூக்கிச் சென்று விடுவார்களோ என்று அவனுக்குத் தோன்றியது. எப்படி இருந்தாலும் சரி, அந்தப் பூனையைத் தூக்கிச் சென்றுவிட அவன் முடிவு கட்டினான். கொஞ்ச நேரத்துக்கு முன்பு முதல் திருட்டைத் தொடங்கிய அவனுக்கு, இரண்டாவது திருட்டைச் செய்ய மனம் தயங்கவில்லை. பூனையை அப்படியே இடக்கையால் வாரி அணைத்துகொண்டு விரைந்து நடந்தான். பூனைக்கு உரியவர்கள் எவராவது வருகிறார்களா என்று மெல்லத் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் வாவில்லை! பூளையும் கக்கவில்லை! அவனைப் பிறாண்டவில்லை! தப்பி ஓட முயற்சி செய்யவில்லை! 

இந்த உலகத்தில் தனக்கு முதல் துணையாக ஒரு பூனை கிடைத்ததே என்று அவனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. பூனைக்கு உரியவர்கள் எங்கேயாவது பார்த்துவிட்டால் சும்மா விடமாட்டார்களே என்று ஒரு பக்கம் அச்சம்! அச்சத்தை அவனிடம் படிந்துவிட்ட திருட்டுக் குணம் வென்றுவிட்டது! 

பூனைக்கு ஏற்ற உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அவன் விரைந்து நடந்தபோது. அவனைத் தொடர்ந்து கொஞ்சத் தொலைலே அந்த அம்பாஸிடர் கார் வருவகை அவன் கவனிக்கவில்லை. எவராவது துரத்தி வருகிறார்களா என்று தான் அவன் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்களுக்கு எவரும் தென்படவில்லை. 

வழக்கமாக அவன் ஒரு சத்திரத்துத் திண்ணையில் படுத்து உறங்குவது வழக்கம். இப்போது அவன் சக்கிரத் துக்குப் போக விரும்பவில்லை. கையில் பணம் இருந்த தாலும். அழகிய உயர்ந்த சாதிப் பூனைக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதாலும் ஓர் ஓட்டலில் அறை எடுத்துக் கொள்ள அவள் முடிவு செய்தான். திருவல்லிக்கேணியில் இருந்த ஓர் ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கி, பூனைக்குப் பாலும் பிஸ்கட்டுகளும் வாங்கிக் கொடுத்தான். பிறகு அவன் தனக்கு உணவை வரவழைத்து உண்டான். 

இரவு பத்து மணிக்கு மேல் அவன் பூனையைத் தூக்கிக்கொண்டு பங்களாக்கள் உள்ள தெருக்களை நோக்கி நடந்தான். பங்களாக்களில்தாம் பணம் இருக்கும் என்று அவன் மனத்தில் பட்டது. ஆகையால் அவன் தன்னுடைய இரண்டாவது சோதனையை ஒரு பங்களாவில் நடத்த முடிவுகட்டினான். 

ஒவ்வொரு பங்களாவாகப் பார்த்துக்கொண்டே சென்றான் ஒரு சில பங்களாக்களில் மட்டுமே, ஒரு சில அறைகளில் மட்டுமே விளக்குகள் எரிந்தன. விளக்கு எரிந்த அறைகளின் பக்கம் மட்டும் அவன் கூர்ந்து பார்த்தான். 

ஒரு பெரிய பங்களாவின் மாடியில் இருந்த ஓர் அறை அவனைக் கவர்ந்தது. நடுத்தர வயதுள்ள ஒரு பெண் சன்னல் ஓரமாக நின்று தனது கழுத்திலிருந்த விலை உயர்ந்த நெக்லஸைக் கழற்றி மேசைமீது வைத்தாள். அதை அவள் கூர்ந்து பார்த்தபடி நின்றான். அந்தப் பெண் நெக்லஸைக் கழற்றி வைத்ததும், மற்றொரு பெண் அந்த அறைக்குள் நுழைந்தாள். இரண்டு பெண்களும் பேசிக்கொண்டே அந்த அறையிலிருந்து உள்பக்கம் போய் விட்டார்கள். 

நெக்லஸ் – 

நெக்லஸ், மேசைமீது தான் இருக்க வேண்டும்! 

விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் நெக்லஸைக் கழற்றி வைத்த பெண் விளக்கை அணைத்து விட்டு உள்ளே சென்றாள். 

நெக்லஸை அவள் எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை! 

புலிக்குட்டி, பூனையைத் தடவிக் கொடுத்து அந்த மாடி அறையைச் சுட்டிக் காட்டினான். “அந்த நெக்லஸைக் கொண்டு வா, பார்க்கலாம்” என்றான். 

பூனை உடனே- 

தாவியது. 

குதித்தது. 

ஓடியது. 

மறைந்தது. 

புலிக்குட்டி, பங்களாளின் சுற்றுச்சுவர் ஓரமாக நின்று கொண்டிருந்தான். சுற்றுச்சுவர் ஓரமாக நெருங்கிய செடிகள் வளர்ந்து தலை தூக்கி நின்றதால், அவன் நின்ற போது தொலைலிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவன் நின்றது தெரியவில்லை. 

மரம் ஒன்றின் மீது தாவி.சன்னல் விளிம்புக்குத் தாவிய பூனை. ‘மியாவ். மியாவ்’ என்று கத்தியது! அது என் இப்போது கத்துகிறதோ என்று புலிக்குட்டிக்குச் சினம் வந்தது. அதன் குரல்வளையைப் பிடித்துக் கொன்று விடலாமா என்றுகூடத் தோன்றியது. அவன் கொஞ்சம் அச்சத்துடன் பார்த்தபடி நின்றான். 

பூனை சன்னலுக்குள் பாய்ந்தது. அது மீண்டும் வருமா வராதா என்ற ஐயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் புலிக்குட்டி. அது உள்ளே நுழைந்ததும், பளபளக்கும் நெக்லஸைக் கௌவிக்கொண்டு திரும்பி வந்தது. மீண்டும் அது மரத்தின் மீது தாவி, மதில் சுவரின் மீது குகித்து, கொஞ்சம் தள்ளிச் சாலையில் குதித்து ஓடியது! புலிக்குட்டி யிடம் அது வரவில்லை! 

புலிக்குட்டி அதைப் பிடிக்க ஓடினான். பூனை விரைந்து ஓடியது. அவனும் விடவில்லை. பூனையின் விரைவுக்கு அவனால் ஓட முடியவில்லை. இப்படி இந்தப் பூனை ஏமாற்றும் என்று அவன் கொஞ்சமும் எண்ணவே இல்லை. 

பூனையை அவன் துரத்தி விரைந்து சென்றபோது சைக்கிள் ஒன்று விரைந்து வந்தது. அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் விரைந்து வந்தார். எங்கே அவர் பூனையைப் பார்த்துவிடுவாரோ, தன் மீது ஐயப்படுவாரோ என்று மெல்ல, மெல்ல, மெல்ல ஒன்றும் தெரியாதவனைப் போல் அவன் ஓசையின்றி நடந்தான். 

சைக்கிள் மறைந்தது. 

பூனையைக் காணவில்லை. 

சாலையின் திருப்பத்தை அடைந்ததும் புலிக்குட்டி பூனையைப் போல் மெல்லக் கத்தினான். பதிலுக்குப் பூனை கத்திவிட்டு அவனை நோக்கி ஓடி வந்தது! நல்ல வேளையாக அதன் வாயில் நெக்லஸ் இருந்தது! 

அதை அவன் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு பூனையைத் தூக்கிப் பிடித்தபடி நடந்தான், அப்போது, ஓசையின்றி அம்பாஸிடர் கார் அவனுக்குப் பக்கத்தில் வந்து நின்றது. அதன் விளக்குகள் எதுவும் எரியவில்லை. காரில் அந்த அழகி மட்டுமே உட்கார்ந்திருந்தாள். அவள் காரை நிறுத்திவிட்டு, ”காரில் ஏறு. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று சொன்னாள். 

புலிக்குட்டிக்கு உடல் வேர்த்தது! கை கால்கள் நடுங்கின! 

அத்தியாயம்-4 

புலிக்குட்டி ஒன்றும் பேசவில்லை. காரில் வந்த அழகி தன்னைக் காரில் ஏறும்படி சொன்னதும் ஏதோ ஒன்றுக்குத் தான் கட்டுண்டவனைப் போல் காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தான். அவன் கையிலிருந்த பூனை ‘மியாவ், மியாவ்’ என்று கத்திக்கொண்டே முன் சீட்டுக்குத் தாவிக் காரை ஓட்டி வந்த அந்த அழகியின் பக்கத்தில் உட்கார்ந்தது. 

அவள் காரைச் செலுத்தினாள். அவளுடைய வலக் கை, ஸ்டியரிங்கை எளிதாகப் பிடித்துக் காரைச் செலுத்தியது. இடக்கை, பூனையைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தது. 

வைர நெக்லசுடன் காரில் ஏறி உட்கார்ந்துவிட்ட புலிக்குட்டிக்குத் தான் ஏதோ ஒரு பெரிய ஆபத்தில் சிக்கி விட்ட உணர்வு ஏற்பட்டது. போலீஸாரிடம் சிக்கியதற்குப் பதில் இந்த அழகியிடம் சிக்கிவிட்டோமே என்று தோன்றியது அவனுக்கு. அழகும் அறிவும் பெற்ற பெண்கள் ஆபத்து மிகுந்தவர்கள் என்பதை அவன் படித்திருக்கிறான்! இந்தப் பெண்ணுக்கு அறிவும் அழகும் ஆற்றலும் இருந்தன. இவளிடமிருந்து எப்படித் தப்புவது என்பதைப் பற்றி எண்ணியபடி அவன் சாய்ந்து உட்கார்ந்தான். 

”இந்தப் பூனை மிக விலை உயர்ந்தது அல்லவா?” என்று கேட்டாள் அவள். 

”ஆமாம்” என்றாள் புலிக்குட்டி. 

“இந்தப் பூனையை வைத்துப் பல இலட்சங்களை எளிய வழியில் பெறலாம் என்னும்போது, இது மிகவும் விலை உயர்ந்ததுதான்! இதை விற்க முடியுமா?” என்று கேட்டாள் அவள். 

புலிக்குட்டி மெளனமாக இருந்தான். பிறகு கொஞ்ச நேரம் கழித்து, ‘”இதை விற்பதற்கில்லை” என்றான். 

“உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல். இப்போதே நம் கணக்கை நாம் தீர்த்துக் கொள்ளலாம். இந்தப் பூனை என்னிடம் நீண்ட நாள் பழகிக் கொண்டதைப் போல் ஒட்டிக் கொண்டு விட்டது!” என்றாள் அந்த அழகி. 

இந்தப் பூனைக்குட்டி இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் நிண்ட நாள் பழகியதைப் போல் ஒட்டிக் கொள்ளும் போலிருக்கிறது என்று நினைத்தான் புலிக்குட்டி. ஆகையால் அதை விற்று, இழந்துவிட்ட தன் கைக்குப் பதிலாக இரும்புக்கையை வாங்கிக் கொள்ள அவன் முடிவு செய்தான். இப்போது அவன் நெக்லஸை விற்பதால் ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணினான். எப்போதும் நகையைத் திருடுபவர்கள் அவற்றை விற்கும் போதுதான் போலீசாரிடம் சிக்கிக் கொள்வது வழக்கம்! 

அவன் சிந்தனையுடன் உட்கார்ந்து விட்டதும், ”என்ன பேசாமல் உட்கார்ந்திருக்கிறாய்?” என்றாள் அவள். 

“முடிவுக்கு வந்துவிட்டேன். இந்தப் பூனையை விற்பதெனறால, எனக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டும்” எனறான புலிக்குட்டி துணிவுடன்! 

அவள் சிரித்தாள். “இவ்வளவுதானா?” என்றாள் அவள். 

அவள் கேலி செய்கிறாளா அல்லது உண்மையாகவே சொல்லுகிறாளா என்று புரியவில்லை அவனுக்கு! பொறுத்திருந்து பார்ப்போம் என்று பேசாமல் இருந்தான் அவன். 

”உன் பெயர் என்ன?” என்று கேட்டாள் அவள்.

“புலிக்குட்டி.” 

“என் பெயர் கிளிமொழி” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள் அவள், 

கார் எங்கேயாவது வழியில் நிற்கும். தன்னை அவள் இறக்கிவிட்டுப் பத்தாயிரம் ரூபாய் பண நோட்டுக்களை வீசி எறிந்துவிட்டுப் பூனையுடன் பறந்து போய்விடுவாள் என்று கறபனை செய்து கொண்டிருநதான் புலிக்குட்டி. ஆனால், கார் எங்கேயும் நிற்காமல் ஓடியது. சென்னை நகரின் மேற்கு எல்லையில் தனிமையில் இருந்த ஒரு பங்களாவின முன் சென்று நின்றது கார்! 

அவள், பூனையைத் தூக்கிக்கொண்டு இறங்கினாள். “புலிக்குட்டி, என்னுடன் வா, என் தந்தையிடம் சொல்லித்தான் பணம் வாங்கித் தரவேண்டும்” என்று சொன்னாள் கிளிமொழி, 

அந்தப் பங்களாவைப் பார்த்ததும் அவனுக்கு அச்சம் மிகுந்தது. நாகரிகப் பொருள் மிகுந்த அந்தப் பங்களாவுக்குள் நுழைந்து, பூனைக்கு ஈடாகப் பத்தாயிரம் ரூபாயுடன் திரும்பி வர முடியுமா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. கிளிமொழி தன்னை ஏமாற்றி அழைத்து வந்து விட்டதாகவே அவன் எண்ணினான். அவன் பேச முயற்சி செய்தபோது அவனுக்கு நா எழவில்லை. அவள் பின்னால் பேசாமல் நடந்தான். அவன் எண்ணியது உண்மையாகிவிட்டது. அவன் இப்போது மீள முடியாத ஆபத்தில் சிக்கிக் கொண்டு விட்டான்! அதை அவனால் தவிர்க்க முடியவில்லை! 

அத்தியாயம்-5

முழங்கால் அளவே தண்ணீர் இருக்கும் இடங்களிலும் ஆபத்தான இடங்கள் உண்டு. காலை வைத்ததும் அப்படியே மனிதனை உள்ளே இழுத்துக்கொள்ளும் பூப் போன்ற மணல் பகுதி சில இடங்களில் இருப்பது உண்டு. இந்தப் பகுதியில் விழுந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய், பிடி கிடைக்காமல் தப்ப முடியாமல் தவித்து உருவம் மறைந்து இறப்பார்கள். இந்த மாதிரி, மனிதனை விழுங்கும் மணற்சுழலில் சிக்கியவனின் நிலைக்குப் புலிக்குட்டி ஆளாகிவிட்டான்! அடுத்து நடந்த சில செயல்கள் இதை அவனுக்கு உறுதிப்படுத்தின! 

கிளிமொழி பங்களாவுக்குள் அழைத்துச் சென்றதும், ”இங்கேயே நீ இரு” என்று சொல்லிவிட்டு. பூனையுடன் அவள் கூடத்தைக் கடந்து எங்கேயோ சென்றாள், 

கூடத்தின் அழகைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த புலிக்குட்டி, கொஞ்சம்கூடத் தூசு படாமல் பளபளவென்று இருந்த மேசைகள், நாற்காலிகள், சோபாக்கள், விளக் குகள், சன்னல்கள், இரத்தினக் கம்பளங்கள் ஆகிய வற்றைப் பார்த்து, இந்தப் பங்களாவில் இருப்பவர் திரைப் படம் எடுத்துப் பெரும் பணம் சேர்த்தவராக இருக்க வேண்டும் என்று எண்ணினான். கொஞ்சம்கூட அழுக்குப் படாத சோபாவில் உட்கார அவனுக்கு அச்சமாக இருந்தது! 

உள்ளே சென்று தன் தந்தை உலகையாவுடன் திரும்பி வந்தாள் கிளிமொழி. அந்த வேளையிலும் விலை உயர்ந்த உடையணிந்து, வைரப் பொத்தான்களும், வைரம் பதித்த கடிகாரமும் மினுமினுக்க வந்தார் உலகையா. அவருக்கு ஐம்பது வயது இருக்கும். கிளிமொழி அவருக்குப் புலிக்குட்டியை அறிமுகப் படுத்தினாள். 

புலிக்குட்டி இடக் கையை நீட்டினான். அவரும் இடக் கையை நீட்டி அவன் கையைக் குலுக்கினார். பிறகு அவன் கையை உதறிவிட்டு, நின்றபடியே பேசினார்: “கிளிமொழி சொன்னாள். இந்தப் பூனைக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என்று நீ கேட்டாயாம்! உண்மையா?” 

”ஏன்? உங்கள் மகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்றான் புலிக்குட்டி. 

“என் மகளை நான் நம்புவதைப் போல் என்னையே கூட நான் நம்புவதில்லை! நீ கேட்ட தொகையில் மாறுதல் ஏதாவது இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ளவே நான் கேட்டேன்” என்றார் உலகையா. 

“மாறுதல் இல்லை” என்றான் புலிக்குட்டி.

“பத்தாயிரம் உனக்கு எதற்கு?” 

இந்தக் கேள்வி புலிக்குட்டியை ஏமாறச் செய்தது. அதைப் பற்றி உலகையாவுக்கு என்ன என்று வெட்டிப் பேசியிருக்கலாம். ஆனால், அவன் உண்மையைச் சொன்னான்: “இழந்துவிட்ட என் கைக்குப் பதிலாக இரும்புக் கை ஒன்றை நான் வாங்க வேண்டும். இதற்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டும்.” 

உலகையா உடனே கிளிமொழியைப் பார்த்துத் தலையை ஆட்டினார். அவர் சாடையைப் புரிந்துகொண்ட அவள் உள்ளே விரைந்து சென்று பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு வந்து நீட்டினாள். 

ஒரு பூனைக்கு இவ்வளவு பணமா என்று எண்ணியபடி நடுங்கும் கைகளில் அதைப் பெற்றுக் கொண்டான் புலிக்குட்டி! 

அவன் மனத்தில் ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொரு பக்கம் அச்சம். யாருடைய பூனையோ அது என்ற எண்ணத்தினால் எழுந்த அச்சம் அது. 

பணத்தைப் பெற்றுக் கொண்டதும், மேலே ஒன்றும் பேச முடியாமல் போகத் திரும்பினான் புலிக்குட்டி. 

”நில்” என்று ஓர் அதட்டல் போட்டார் உலகையா! அவருடைய குரல் கணீரென்று எழும்பிப் பங்களாவையே ஓர் உலுக்கு உலுக்கியது! 

புலிக்குட்டி நின்றான். திரும்பினான். 

“நெக்லஸை எடு! நழுவாதே!” என்று சொல்லிவிட்டு வலக்கையை நீட்டி விரல்களை ஆட்டினார் உலகையா. 

“நெக்லஸா? ஏது?” 

“புரியவில்லையா? நெக்லஸ் யாருக்கு உரிமை உடையது!” 

“எனக்கு உரிமை உடையது. இதில் என்ன ஐயம்!”

உலகையா கணீரென்று பேசினார்: “நெக்லஸ் உனக்கு உரிமையுடையதல்ல. பூனைக்கு உரிமையுடையது. நெக்லஸைக் கொண்டு வந்தது நீயா? பூனை தானே! பூனையை நான் வாங்கியதும், அதற்கு உரிமையுடைய நெக்லஸை என்னிடம் நீ கொடுத்துவிட வேண்டியதுதானே!” 

இப்படிப்பட்ட பதிலை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. அந்த இடத்திலிருந்து நெக்லசுடன் மட்டுமல்ல, பணத்துடன் மட்டுமல்ல, ஒன்றும் இல்லாமல் அவன் மட்டுமே தப்புவதுகூட அரிது! அவ்வளவு பாதுகாப்பான இடம் இது! உலகையாவின் விரல் அசைந்தால் அந்தப் பங்களாவே அசையும்! அவ்வளவு பணியாளர்கள் அந்தப் பங்களாவில் இருந்தார்கள்! ஆகையால் அவன் நெக்லஸை எடுத்து நீட்டினான்! 

அதை வாங்கிப் பார்த்த உலகையா, “இது விலை உயர்ந்தது. இதை நீ விற்க முயற்சி செய்தால் உடனே நீ அகப்பட்டுக் கொள்வாய்! இந்த நெக்லஸ் என்னிடம் இருக்கட்டும். இதை நீ மறந்துவிடு” என்றார். 

புலிக்குட்டி ஒன்றும் பேசவில்லை. 

“போய்ப் பத்தாயிரம் ரூபாய்க்குக் கை ஒன்றை வாங்கி மாட்டிக்கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டாள் கிளிமொழி. 

“பிழைக்க வழிதேடப் போகிறேன்.” 

“நீ பிழைக்க வழி தெரியாதவன். நாளைக்குக் கடைக்குச் சென்று இந்தப் பணத்தை நீட்டியதும், இவ்வளவு பணம் உனக்கு எது என்று கடைக்காரர் ஐயப்பட்டு உன்னைப் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுவார்! பணத்தை இழந்து சிறைக்குப் போய் விடுவாய் நீ!” என்றாள் கிளிமொழி. 

“என்னிடம் இருந்த பூனை ஒன்றை உங்களிடம் விலைக்கு விற்றதால் கிடைத்த பணம் இது என்று நான் சொன்னால்” என்றாள் புலிக்குட்டி. 

இதைக் கேட்டதும் கிளிமொழியும் உலகையாவும் வாய்விட்டுச் சிரித்தார்கள்! ”இந்தப் பூனை யாருடையது தெரியுமா?” என்றார் உலகையா. 

புலிக்குட்டி உடனே சொன்னான்ட “ஏன், என்னுடையது!”

இதைக் கேட்டு மேலும் அவர்கள் சிரித்தார்கள்! 

கிளிமொழி சொன்னாள்: “இந்தப் பூனையின் பெயர் கூட உனக்குத் தெரியாது. இதன் பெயர் மின்மினி. இது உலகையாவுக்கு உரிமையுள்ள பூனை என்பது போலீஸ் கமிஷனர் முதல் எல்லாருக்கும் தெரியும்!” 

இந்தப் பதிலைக் கேட்டதும் புலிக்குட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது! அவனை வேண்டுமென்றே சதி செய்து இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட அவன், அவர்களிடமிருந்து எப்படித் தப்ப முடியும் என்பது பற்றி இப்போது விரைந்து சிந்தித்தான். அவர்கள் சொற்படி கேட்டு, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களிடமிருந்து தப்புவதுதான் சிறந்த வழி என்று முடிவு செய்தபடி, “அப்படியானால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்றான். 

“உனக்குக் கைதானே வேண்டும்? நாளைக்கே என் காரில் அனுப்பி, ஆளையும் அனுப்பி, உனக்கு என் செலவில் கையைப் பொருத்தும்படி செய்கிறேன். புதுக் கையைப் பொருத்தும்படி செய்கிறேன். புதுக் கையைப் பொருத்தியதும், அதைப் பழக்கப்படுத்திக கொள்ளக் கொஞ்ச நாட்கள் ஆகும். அதுவரையில் இங்கேயே எங்கள் பங்களாவிலேயே தங்கியிரு. உனக்குச் செலவுக்குப் பணம் வேண்டுமென்றால் நான் தருகிறேன். சரிதானே!” என்றார் உலகையா, 

“எல்லாம் எனக்குக் கனவில் நடப்பதைப் போலிருக்கிறது! உங்கள் உதவியை நான் மறக்க மாட்டேன். எனக்கு வாழ்வளிக்க முன் வந்த உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் நான். சொல்லுங்கள்” என்றான் புலிக்குட்டி. 

“நீ என்ன செய்ய வேண்டும் என்பதை வாய்ப்பு வரும் போது நான் சொல்லுகிறேன். உனக்கு மூளை இருக்கிறது. கையை இழந்த நீ, செயற்கைக் கையுடன் வாழ உனக்கு நான் உதவி செய்கிறேன். ஆனால் ஒன்று. என்னிடம் சொல்லாமல் என்னிடமிருந்து தப்பிப் போக மட்டும் நீ முயற்சி செய்யாதே! அது ஆபத்தில் வந்து முடியும்!” என்றார் உலகையா! 

பங்களாவுக்குப் பிள்ளாலிருந்த அறை ஒன்றைப் புலிக்குட்டிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாள் கிளிமொழி. 

படுக்கச் சென்ற புலிக்குட்டிக்குக் தூக்கம் வரவில்லை. ஒரே நாளில் அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாறுதல்! சென்ட்ரல் ஸ்டேஷனில் முதல் திருட்டைத் தொடங்கிய அவன், இரண்டாவது பெரிய கனவை மின்மினி என்னும் பூனையின் உதவியுடன் வெற்றிகரமாகச் செய்து முடித்தான். அதன் விளைவாக அவன் உலகையாவிடம் வந்து சிக்கினான்! உலகையா எப்படிப்பட்டவர்? 

அவர் புலிக்குட்டியை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்? 

புரியவில்லை அவனுக்கு! 

இதனால் அவனுக்குத் தூக்கம் வரவே இல்லை! 

– தொடரும்…

– கல்கண்டு இதழ்.

– இரும்புக்கை மனிதன் (நாவல்), முதற் பதிப்பு: 1976. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *