இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது?




(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் விழித்துக்கொண்ட அது, எங்கே போய்க் குந்தலாம் என்று யோசித்தது. அது போய்க் குந்துவதற்குரிய எந்த ஆதாரமும் இருப்பதாய்த் தெரிய வில்லை. ஆதாரம் எல்லாம் சிதைந்து வெறும் வெண் முகிற் சிதலங்களாய் மிதந்து கொண்டு போவதுபோல் தெரிந்தது. அதனால் விழித்த நிலையிலேயே மீண்டும் கண்ணை மூடியபடி கிடந்தது. அதன் அருகில் அதன் சோடி, மூச்சுவிடும் அரவம் கூடத் தெரியாத நிலையில் கிடப்பது தெரிந்தது. சோடி தூங்குகிறதா. விழித்திருக்கிறதா என்று எவராலும் சொல்லிவிட முடியாது. தான் கண் விழித்தும் எந்தப் போக்கிடமும் இல்லாததால் மீண்டும் கிடந்த இடத்திலேயே கிடந்தபடி கண்ணை மூடிக் கொண்டு சோம்பல் முறிப்பதைப் பார்த்து அது தனக்குள் சிரிக்கிறதா என்று இது தன் சோடியை ஓரக் கண்ணால் பார்த்தது. சோடியிடம் எந்த உணர்வுகளையும் எதிர்பார்க்க முடியாதென்று இதற்குத் தெரியும். எந்த அந்தர நிலையில் இது கிடந்து உழன்ற போதும் அது ஒரே மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டிருக்கும்; ஒரு விசித்திரப் பிறவி “இதுக்குக் கொண்டு போய் என் கழுத்தை நீட்டினனே” என்று இது அடிக்கடி அங்கலாய்க்கும்.
ஆனால் அது வழமையான வெறும் அங்கலாய்ப்புத்தான்.
மற்றப்படி இது தன் சோடியில்லா மல் ஒருபோதும் இயங்குவதில்லை.
தன் சோடியின் வெறுமனே பேசாத அவதானிப்பே இதற்கு ஆதார சக்தியாய் ஊற்றெடுப்பதாகவே அதற்குப் படும். பேசாதிருக்கும் அதன் சோடியும் இதுவும் ராசாவும் மந்திரியும் போல. மழைக்காலத்தில் மரங்களிடையே தம் நீண்ட வால்கள் மின்னலிட பறந்துவரும் பட்டிக் குருவிகள் மாதிரி. நீண்ட இரண்டடி வால்களைத் தொங்க விட்டபடி வெள்ளையும் கடும்மண் சிவப்புமாய், தலையில் கருமயிர்கள் கிரீடமிட தாவித்திரியும். அக்குருவிகள்! வெள்ளை ராசாக் குருவி, சிவப்பு மந்திரி. ராசாவும் மந்திரியும்! பொறுப்பில்லாமல் இருக்கும் ராசா! பொறுப்பு முழுவதையும் தன் தலையில் காவிக் கொண்டு அந்தரப்படும் மந்திரி! நான் அந்தரப்பட்டுத்தான் என்னத்தைக் கண்டன்? அந்தரப்படாமல் வெறுமனே உம் மென்று குந்தியிருக்கும் என் ராசாவின் அவதானிப்புத்தானே என் அந்தரத்தைக் குறைப்பது போல் படுகிறது? எனக்கு ஆறுதல் தருவது போல் தெரியுது? இப்படி அந்த மந்திரிக் குருவி இடைக்கிடை நினைப்பதுண்டு. என்றாலும் இந்த உணர்வு அதற்கு அதிகநேரம் நிலைப்பதில்லை. பாரம் முழுவதையும் என் தலையில் தூக்கி வைத்துக் கொண்டால்தான் நான் இங்கே இருக்கிறேன் என்பது போல் எனக்குப் படுகிறது. மந்திரி யோசித்தது. அப்படியானால் நான் ராசாவில் பிழை சொல்ல முடியாது. நான் அதுக்காக இந்தப் பாரத்தை தூக்கிக் கொ காள்ளவில்லை. அது அப்படி என்னைக் கேட்கவும் இல்லை. நான் எனக்காகத்தான் என் இருப்புக்காகத்தான் இதைச் செய்கிறேன். உண்மையில் இன்று பொதுச்சேவை, தானம், தர்மம் என்று அலட்டிக் கொள்பவர்களெல்லாம் தம்மை தம் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் செய்கிறார்கள் போலப் படுகுது உண்மையான சேவையாளன், தர்மவான் என்பதெல்லாம் பொய்.
நான் இல்லாவிட்டால் என்சோடிக்கு என்ன நடக்கும்? மந்திரி தன்னைக் கேட்டுக் கொண்டது. சோடிக்கு என்ன நடக்கும் ? ஒன்றும் நடக்காது. நான் இல்லாவிட்டால் நான் பார்க்கும் கண்ணாடிக்கு என்ன நடக்கும்? அது எதையாவது பார்த்துக் கொண்டுதான் இருக்கும்?
மந்திரி எழுந்து போய்க் குந்த இடமில்லாமல் தவித்தது.
அது குந்த எத்தனித்த கிளைகளெல்லாம் ஒடிந்தொடிந்து விழுவது போல்… ஒன்றும் நிலைத்து நிற்காதது போல் …. மாறிக் கொண்டும் ஓடிக் கொண்டுமிருப்பதுபோல்… புத்தரும், கிரேக்க தத்துவஞானி ஹெரா கிறிற்றசும் அதன் நினைவில் வந்தனர். அவர்கள் கூறிய நிலையற்ற மாற்றம், நிலையற்ற லௌகீக ஓட்டம். அவர்கள் தத்துவார்த்தமாகக் கூறிய மாற்றங்கள் எல்லாம் யதார்த்தமுற்று, பஸ்ஸில் போகும் ஒருவனுக்கு மரஞ்செடிகள் ஓடுவதுபோல், ஓடிக் கொண்டிருந்தன. மாறிக் கொண்டிருந்தன. சிவப்பு எங்கும் குந்தமுடியாமல் அந்தரப்பட்டது. களைத்துப்போன பருந்து குந்தமுனையும் ஒவ்வொரு சமயமும் கொப்புடைந்துபோக சிறகை மேலும் மேலும் அடித்து அந்தரப்படுவதுபோல் அது.
சாரி சாரியாக யாழ்ப்பாணத்து மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். மந்திரி வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அகதித்திரள், அகதித்திரள்!! அதில் போய்க் குந்த எத்தனித்தது. ஹுகும். முடியவில்லை. அதையும் மேவிக்கொண்டு இன்னொரு அலை வருவதுபோல் மற்றொரு காட்சி! தீவுப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மக்கள் திரள் அதன் முன்னெழுந்தது! ‘சிவ சிவா சிவசிவா எனவாய் ஓயாது புலம்ப முன்னர் கலையாடிக் கொண்டு கதிர்காமத்துக்குப் போகும் பக்தர் கூட்டம் போல் தீவுப்பகுதி மக்கள் அந்தரித்து யாழ்ப்பாணம் நோக்கி இடம் பெயர்ந்த காட்சி! அதில் குந்த அது முனைந்தபோது அதை இடறிக்கொண்டு மற்றொரு காட்சி! யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாய் வெளியேறிய முஸ்லிம் மக்கள்! தேடிய தேட்டம், பொருள், நகை அனைத்தையும் விட்டுவிட்டு ஏன் ஆக்கிய உணவையே ஆறுதலாய் உண்பதற்கு அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில் அகதிகளாய் வெளியேறிய அவர்கள்.
மந்திரி குந்த முடியாமல் தவித்தது.
இதன் பின்னர் ஒருநாள், யாழ்ப்பாணத்தில் புதிதாகத் திறந்த கடையில் டிஃபன் கறியர் ஒன்றை அது வாங்கி வந்து, வீட்டில் அதைத் திறந்து பார்த்த போது அதற்குள் பொரித்தமீன் இருக்கக் கண்டு அது பயந்துபோனது. பின்னர் அதன் காரணம் அதற்குப் புரிந்தபோது அதன் உடலனைத்தும் வெந்துவெதும்பி பொரித்த மீனிலும் கேவலமாய்ப் பொரிந்து போயிற்று. மேலும் மேலும் மந்திரியின் தவிப்பு அதிகரித்தது. பல பக்கங்களில் இருந்து மின்னோட்டங்கள் பாய்வதுபோல் பல காட்சிகள் ஓடிவந்தன. ஒருமுறை போராளி ஒருவன் வயிற்று வலியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவன் வயிற்றிலிருந்து சோடாப் போத்தல் ஒப்பிறேஷன் மூலம் வெளியெடுக்கப்பட்டது! சோடா. போத்தலை அவன் விழுங்கியிருக்க முடியாது. அவன் வயிற்றுக்குள் சோடாப் போத்தல் போன துவாரம் எது? ஏன் அது அவனுக்குள் புகுத்தப்பட்டது?
வீர் எனப் பறந்து கொண் ன்டிருந்த வௌவால் சடார் என மின்கம்பியில் சிக்குண்டு எரிந்து தொங்குவதுபோல் மந்திரியின் மனம் எரிந்துபோயிற்று. தமிழ்ப்பண்பாடு, கலாசாரம் எல்லாம் எரிந்து தொங்குவது போல் அதுக்குப்பட்டது.
தமிழர் பாவம் செய்தவர்களா? திரள்திரளாக தம் சொந்த இ டங்களை விட்டு அகதிகளாய் வெளியேறும் தமிழர்கள்! மந்திரிக்கு யூதர்களின் நினைவு ஓடிவந்தது. மோஸஸ் காலத்தில் எகிப்தை விட்டு இடம் பெயர்ந்த யூதர்கள்! ஹிட்லர் காலத்தில் நச்சுவாயு ஊட்டப்பட்டிறந்த 40 லட்சம் யூதர்கள்! உலகெங்கும் திக்குத் திக்காய் சின்னா பின்னப்பட்டுச் சிதறி ஓடிய யூதர்கள்! யூதர்களும் தமிழர்களும் ஒன்றா? மந்திரிக்கு தான் 1960ல் எழுதிய சிறுகதை நினைவுக்கு வந்தது. அதில் இதே கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அன்று வெள்ளம், புயல் என்று இயற்கை சீறி தமிழ்ப்பகுதிகளை அழித்தது பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய அழிவு இயற்கையின் சீற்றம்! இன்றைய அழிவு யாரின் சீற்றம்? யாரிட்ட சாபம்? தம்மினத்திலேயே பிறந்து, தம்மை ரட்சிக்க வந்த அவதார புருஷரை கல்லால் அடித்து, முள்முடி ஏற்றி, சிலுவை சுமக்கவைத்து, சிலுவையில் அறைந்து கொன்ற யூதர்கள்…. அவர்களைப் போலவே உண்மையான யோகிகளும் அவதார புருஷர்களும் தம்மை நாடி வர அடித்துத் துரத்தியும், பரிகசித்தும் ஏளனம் செய்தும் நின்ற யாழ்ப்பாணத்துத் தமிழர்கள். இப்போ போலிகளுக்கும், வியாபாரச் சாமிகளுக்கும், மனிதர்களுக்கும் ஆராத்தி எடுத்து, பட்டுக்குடை பிடித்து பஜனை செய்தால் எதுதான் வராது? எதுதான் சீற்றங் கொள்ளாது?… ஆனால் எல்லாச் சீற்றங்களும் உதைப்புகளும் தாழ அமுக்கத்திலிருந்து மையம் கொள்ளும் புயல் போல் எங்கோ மறைந்திருக்கும் எல்லாமான, ஒன்றில் மையங்கொள்ளும் இழை மந்திரிக்குப் பிடிபடுவது போல் மின்னித் துடித்தது.
அதுதான் எவருக்கும் ஆறுதல் தரும் விஷயம் எனலாம்.
ஆனால் அதுதான் மந்திரிக்கு அந்தரத்தை ஏற்படுத்திற்று; மனதை அலைபாய வைத்தது.
அப்படியானால் இந்த அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் நானும் ஒரு காரணமா? என் நடத்தையும் ஒரு காரணமா? மந்திரி தன்னையே கேட்டுக் கொண்டது?
இத்தனைக்கும் ராசா அதனருகே நிர்மலமான வானம்போல் பார்த்துக் கொண்டிருந்தது. இவ்வேளை மந்திரியின் முகம் சோகை பிடித்த ‘ பகல் நிலாவைப் போல் வெளிறிக் கொண்டு போனது:
இதற்கு முன்னரும் மந்திரியின் முகம் வெளிறிப் போன சம்பவம் ராசாவுக்கு நினைவு வந்தது. தீவுப்பகுதியில் மனைவி மக்களோடு மந்திரி இருந்த காலத்தில் போராளிகள் தீவுப்பகுதியைக் கைவிட்டோட. இராணுவம் அங்கு புகுந்த போது சாமி அறைக்குள் மனைவி, மக்களோடு இருந்து தனக்கு என்ன நேர்ந்தாலும் அங்கிருந்த சிறுசுகளுக்கு எதுவும் நேரக்கூடாதென நினைத்து அவலப்பட்டுக் கொண்டிருந்தபோது அதன் முகம் பேயறைந்ததுபோல் வெளிறிப் போனது இன்னும் இன்றுபோல் நினைவில் நின்றது.
ராசாவின் நினைவுகள் மந்திரியைப் பாதிக்கின்றன? அதாவது ராசாவின் திரையில் விழுபவைதான் மந்திரியைப் போட்டு ட்டுவிக்கின் றனவா? ராசா கையில் நூலை வைத்துக் கொண்டு மந்திரியை பொம்மலாட்டம் ஆட வைக்கிறதா?
மந்திரிக்கு தன் சொந்தத் தீவைப்பற்றிய எண்ணங்கள் திடுதிப்பென முன்னெழுந்து கூத்தாடுகின்றன. அந்த எண்ணங்களின் நீச்சல்களிடையே ஓர் அசாதாரண ஆறுதலும் ஆனந்தமும் கசிவதுபோல் அதற்குப்படுகிறது. அந்தரித்துச் சிறகடித்த பருந்து, ஒருக்கால் அப்பாடா எனக் குந்தலாம் என அங்கு தாவுகிறது. ஆனால் முடியவில்லை. மீண்டும் கொப்பு முறிந்ததுபோல் தவிக்கிறது. அங்கு அது கண்ட சின்னத்தனங்கள், துயரங்கள், பரிதாபங்கள் அதைப் பந்தாடி விடுவதுபோல் மேலெழுகின்றன. ராணுவம் ஊருக்குள் நுழைந்தபோது, தான் அரணாக நின்று ஓயாது உதவி செய்து நேசித்த தன் அன்புக்குரியவர்கள் தனக் கிழைத்த துன்பங்கள்! அதனால் தான் சென்று வழிபட்ட தெய்வஸ்தலமே நரகமாக மாறிய அவலங்கள்
மந்திரி குந்தமுடியாமல் அந்தரிக்கிறது.
மேலும் எண்ணக் காட்சிகள் அதை வந்து சூழ்கின்றன.
அதனோடு ஊரில் படிப்பித்த இளமட்ட வாத்திமாரின் அறியாமைகள், காதல்கள் மோதல்கள் கற்றுக் குட்டித்தனங்கள் ஒருநாள் அந்தப் பாடசாலைக்கு முன்னால் நிகழ்ந்த மரண தண்டனை! அப்போது பீறியடித்த இரத்தம் இன்னும் பசுமையாக அந்த வேப்பமரத்துக் கட்டிடத்தின் வாசல் படியில் வழிந்தோடியிருக்க… அதே இடத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட இயக்கமொன்று நெடுந்தீவு ‘சமூக விரோதிக்கு’ வழங்கிய மரணதண்டனை!
ஐயோ இந்த இரத்தச் சிந்தல்களுக்கெல்லாம் நானும் பொறுப்பா?
எதற்குத்தான் நாங்கள் பொறுப்பில்லை என்று உதறித் தள்ளலாம் ? விடுபட்டு நிற்கலாம்?
மந்திரியால் சிறகுகளையே அடிக்க முடியாத அந்தரம். மீண்டும் காட்சிகள் முட்டி மோதுகின்றன.
ஊரில் எஞ்சிக் கிடந்த அறுநூறு சனங்கள் சனிக்கிழமைகளில் நிவாரணம் எடுக்க, ஒவ்வோர் இடமாக நின்று நின்று கதையளந்து கொண்டு போகும் காட்சி. நிவாரணம் வழங்கும் இடத்தில் மந்திரி இருந்து தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்களுக்கு அதற்கான சிட்டைகள் வழங்க, அவ்வேளைகளில் அச்சனங்களின் மத்தியில் நின்று அதன் நண்பன் பெரிய குரலெடுத்துச் சொல்லும் பகிடிக் கதைகள்… அதே நண்பன் ஒருநாள் விதிவசப்பட்டு தன்முகத்தைத் தானே எதிர்கொள்ள முடியாதவாறு செய்து கொண்ட பரிதாப நிகழ்ச்சி…. அதற்காக இது நாட்கணக்காக நித்திரையின்றி வருந்திச் சாம்பிப் போன காலங்கள்……
மந்திரியின் இறக்கைகள் மேலும் அடிக்க முடியாதவாறு உள்ளோய்ந்துபோகின்றன.
மந்திரி தான் வாழ்ந்த தீவை விட்டு மனைவி மக்களோடு புறப்பட வேண்டிய காலம் வந்தது.
மந்திரி கும்பிட்டு வந்த தெய்வம் இதற்கு முன்னரே குடிபெயர்ந்து போய்விட்டது.
கோயிலில்லா ஊரில் குடியிராதே.
தெய்வம் கிளம்பிவிட்டால் இதுகாலவரை அதன் கருணை அடைகாப்பில் வாழ்ந்து வந்த தீவுச்சனங்கள் சின்னாபின்னப்பட போவதுபோல மந்திரிக்குப் பட்டது.
தெய்வத்தின் பிரதிநிதிகளாக அங்கு வாழ்ந்த பிராமணர்கள் மனித ராணுவத்துக்குப் பயந்து தாம் நம்பிய தெய்வத்தையே கைவிட்டு விட்டு ஓடிவிட்டார்கள். தான் நம்பிய தெய்வத்தை விட்டோடாது. ராணுவம் வந்தபோது அதை எதிர்கொண்டிருந்த மந்திரி உண்மையான பிராமணனாகவே வாழ்ந்தது.
இப்போ அது நம்பிய தெய்வமே குடி பெயர்ந்தது. மந்திரியையும் தன்னோடு கூட வரும்படி சமிக்ஞை கொடுத்து விட்டு.
இதைப்பற்றி அங்கிருந்த மக்களுக்கு என்ன தெரியும்?
யாரால் இதைப்பற்றி அவர்களுக்கு விளக்க முடியும்?
அனாதைக் கூட்டமாய் கிடந்துழலும் தீவுப்பகுதி மக்கள் மந்திரியின் அடிவயிறு பற்றியெரிந்து கொண்டு வந்தது.
போக்கற்றுப்போன கைது செய்யப்பட்ட கிராமம்!
கூப்பிடு தொலைவில் இருந்த யாழ்ப்பாணத்தின் கதவும் பூட்டிக் கிடந்தது.
அங்கும் போக முடியாது!
குடாநாட்டை விட்டு மந்திரி கப்பலில் திருகோணமலைக்குப் பயணமாயிற்று.
இதற்கு முன்னரும் இவ்வழிக் கடற்பயணத்தை மந்திரி மேற்கொண்டிருக்கிறது. ராணுவம் தீவுப் பகுதிக்குள் புகுந்ததன் பின்னர். அது கொழும்பு செல்வதற்காக திருமலை நோக்கி சாமான்கள் ஏற்றும் தாராக் கப்பலில் புறப்பட்ட பயணத்தை நினைத்தால் இப்போதும் அதற்குத் தலை சுற்றும். இரண்டு பகலும் இரண்டு இரவுமாக கப்பலின் வாந்தி வாந்தியாக எடுத்து காற்றோடு காற்றாக பறந்து போகும் நிலைக்கு உடலை மாற்றிய அந்தப் பயணம்….
ஆனால் இப்போது அந்த அவஸ்தை இல்லை. இரவுப்பயணம் மட்டுமே.
கப்பல் புறப்படத் தயாரான போது. மந்திரியின் அருகே வந்து.
”என்ன மாஸ்ரர். குடும்பத்தோட வெளிக்கிட்டாச்சுபோல இனித் திரும்பிற யோசனை கீசனை…? ” என்றவாறு தனது ஒருபக்கத் தோளை அடிக்கடி உயர்த்தியவாறு இழுத்தான் சிவசாமி.
”இல்லை போயிற்று வருவம் பொய்யும் மெய்யும் மந்திரியின் பதிலில் கலந்திருந்தன.
”சோடா ஒண்டு குடியுங்கோவன்” என்றவாறு சிவசாமி கண்டீன் பக்கம் போசு ஆயத்தமானான்..
”வேணாம் சிவசாமி. பிறகு குடிப்பம்” என்று கூறிய மந்திரி “எங்க நீயும் கொழும்புக்கா?” என்றது அவனைப்பார்த்து,
“ஓம் மாஸ்ரர் எத்தன நாளைக்கு அண்ணற்றை வீட்டைப் பாத்தெண்டு கிடக்கிறது? கையில் காகம் இல்ல. போய் அவையளட்டை கொஞ்சக் காசு வேண்டியரலாம் எண்டு போறன்” என்று கூறிய சிவசாமி ஒருவித வரட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். அவன் தன் தோளைத் தூக்கித் தூக்கி விட்டு நடந்து போவதைப் பார்த்த மந்திரிக்கு தீவுப்பகுதியின் அனாதைத்தனம் அவன் தோளில் தொங்கிக் கொண்டிருப்பது போல்பட்டது.
தீவுப் பகுதியிலிருந்து கொழும்புக்கென்றும், யாழ்ப்பாணத் திற்கு என்றும் போனவர்களின் வீடு வாசல்களைக் கவனிப்பதற்காக ஊரில் விடப்பட்டு எஞ்சிக்கிடந்த கிழடுகட்டைகள் படும் அவலம் மந்திரியின் முன் விரிந்தது. காசில்லாமல் தவிப்பவர்கள் ஆக்கித்தின்னப் பஞ்சிப்பட்டுக் கிடப்பவர்கள் பூட்டற்ற வீடுகளுக்குள் புகுந்து ஏதோ புதையல் எடுப்பவர்கள் போல் எதையெதையெல்லாமோ அள்ளிக் கொண்டு வருபவர்கள் ஆவிகள் நடமாடுவதுபோல சில கொட்டில்களை விட்டு வெளி வருபவர்கள்
அப்படித்தான் சிவசாமியும் திரிந்தான்.
நயினாதீவுக்கு தேங்காய் கொண்டுபோய் விற்றிருக்கிறான். உறவினரைப் பார்க்க வருவதுபோல் சில புங்குடுதீவு வீடுகளில் வந்திருந்து கொண்டு. பூட்டற்றுக் கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து சேலையென்றும். சில்வரென்றும் அள்ளிக்கொண்டு போகும் ஏனைய தீவாரோடு சேர்ந்து “வியாபாரம்” செய்திருக்கிறான். இப்போ எல்லாவற்றையும் விட்டுவிட்டு கொழும்புக்குப் போகிறான். வீடு பார்க்கச் சொன்னவர்களிடம் செலவுக்கு காசு வாங்கி வர!
மந்திரி கொழும்பு வந்ததன் பின்னர் மாதக்கணக்காக சிவசாமியைச் சந்திக்கவில்லை.
ஒருநாள் கொட்டாஞ்சேனைப் பகுதியில் மந்திரி சென்று கொண்டிருந்தபோது “மாஸ்ரர்” என்று அழைக்கும் குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்த மந்திரிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சிவசாமி அழுக்குடைகளோடு பிச்சைக்காரர்களில் ஒருவனாக ரோட்டோரமாகக் குந்திக் கொண்டிருந்தான்.
‘என்ன சிவசாமி இந்தக் கோலத்தில்?” மந்திரி அவனைப் பார்த்துக் கேட்டது.
”அண்ணரவை வீட்டை வரவேணாம் எண்டு துரத்திப் போட்டினம்”
“அப்ப ஊருக்குப் போறது தானே, அங்க நிவாரணமாவது கிடைக்கும்”
“அங்க போகத்தான் பாத்தனான். ஆனா தீவுப்பகுதி கப்பல் போக்குவரத்து நிண்டு போச்சாம்”
ஒன்றும் பேசாது தனது சட்டைப் பையிலிருந்த இருபது ரூபாவை அவன் கையில் திணித்து விட்டு மந்திரி நகர்ந்தது.
அவ்வேளை “நான் இந்த சிவசாமியை விட என்ன உயர்த்தி?” என்ற கேள்வி அதற்குள் எழுந்தது.
அவன் பகிரங்கமாகப் பிச்சை எடுக்கிறான். நான் பிச்சை எடுத்தும் எடுக்காததுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது தனக்குள் சொல்லிக் கொண்டது.
கொழும்பு, மந்திரியை, எலும்புத்துண்டை நாய் போட்டு அப்படியும் இப்படியும் நன்னி நன்னித் தின்ன முனைவது போல் நன்னிக் குதறியது.
மந்திரி திக்கு முக்காடிற்று.
ரோட்டிலும் பஸ்ஸிலும் போகுமிடமெல்லாம் செக்ஸும் பணத் தடிப்பின் வாடையும் அதன் மூச்சைத்திணற வைத்தது. வாகனங்களில் ஆண்களும். பெண்களுமாய் நெரிபடும்போது வெளித்தள்ளப்படும் வேர்வை நாற்றம் அதற்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டுவரும்..
தமிழரைப் பொறுத்தவரை ஆங்காங்கே, ரோட்டு ரோட்டாக நிற்கும் காக்கிச் சட்டைகளின் தலைக்கறுப்பு இன்னும் அதை இறுக வைத்தது. அப்போதெல்லாம் அவர்களை அறியாமலே சட்டைப் பைக்குள் கிடக்கும் அடையாள அட்டைகளை வருடும் விரல்களில் ஓர் நடுக்கம். ஏற்கனவே ஆஸ்த்துமாத் தன்மையுடைய மந்திரியை அது மேலும் அந்தரப்படுத்தியது.
சூழலில் மாசு! ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததா? மனித நாகரிகத்தில் பெரும் ஓட்டையா?
மந்திரிக்குள் அடங்கிப் போய்க் கொண்டிருந்த அவதி மேலெழச் தொடங்கிற்று.
என்ன வாழ்க்கை! என்ன உலகம்!
மந்திரிக்கு எல்லாவற்றிலும் விரக்தியும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது.
இன்றோடு சிவசாமியைப் பார்த்து ஒரு கிழமை இருக்கும். மந்திரி சிவசாமியில் குந்தியிருந்து நேரத்தை மினக்கெடுத்த விரும்பவில்லை. இது ராசாவை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டது. ராசாவின் கண்கள் மூடப்பட்டிருந்தன. அப்படியானால் அது இன்னும் கூடுதலான விழிப்போடு இருக்கிறதென்பதே அர்த்தம்.
சிவசாமியின் முகம் அடிக்கடி மந்திரியின் முன் தோன்றியது. வழமைக்கு மாறாக அவன் முகம் முன்னே வந்து வந்து மந்திரியின் மூக்கில் ஒட்டிக் கொள்வதுபோல் மிதந்து ஏன் ஏன்?
அருகில் கிடந்த ராசாவை நோட்டம் விட்டது.
ராசா வழமைபோல் மெளனம் காத்தது. ஆனால் அதனிடமிருந்து ஏதோ செய்தி வெளிப்பாய்ச்சப்படுவது இதற்குப்பட்டது.
சிவாசாமி செத்துப் போய்விட்டானா?
அப்படித்தான் அதற்குப்பட்டது.
ஏன் ஏன்?
அதன் மனம் திடீரென அலைபாயத் தொடங்கிற்று.
அப்போது, வீட்டு வாசலில் ஊரவர் ஒருவர் மந்திரியின் மனைவிக்கு செய்தியாகச் சொல்வது கேட்டது.
”உங்களுக்குத் தெரியுமா நம்ம சிவசாமி செத்தெல்லோ போனான்?”
“என்ன சிவசாமி செத்துப் போச்சா?” மந்திரியின் மனைவி ஆச்சரியத்தோடு கேட்பது தெரிந்தது.
“நேற்று ரோட்டில செத்துக் கிடந்து. கொட்டாஞ்சேனை பொலிஸ் வந்து பார்த்தவங்களாம். அரசாங்க செலவில அடக்கஞ்செய்ய ஒழுங்கு படுத்தினவங்களாம்..”
“ஐயோ பாவம். இஞ்ச அண்ணன் ஆமர்வீதியில் வசதியா இருக்கிறார். தம்பி ரோட்டில் செத்துக் கிடக்குது’
”என்ன பகிடி எண்டா இண்டைக்கு அண்ணர் நடராசர் தம்பி செத்ததுக்கு துக்கங் கொண்டாடிறாராம்”
“அடி செருப்பால, பசியால தம்பி ரோட்டில் செத்துப் போனான். இவர் இப்பதான் துக்கங்கொண்டாடிறேர்.”
”சிவசாமி செத்ததுக்கு உண்மையான காரணம் ஒரு சிங்களப் பிச்சைக்காரன் அடிச்சதாம். தான் வழமையா படுக்கிற இடத்தில சிவசாமி கிடந்ததைக் கண்டு சிங்களப் பிச்சைக் காரனுக்கும் இவனுக்கும் வாக்குவாதம் வந்ததாம். சிங்களப் பிச்சைக்காரன் கைக்கு கிடைச்ச எதனாலேயோ அடிச்சுப் போட்டானாம். அதுபடாத இடத்தில் பட்டதில் சிவசாமி செத்துப்போனான் எண்டுதான் அங்கால கதைக்கீனம்…’
“அட அநியாயமே….’
அட பிச்சைக்காரர் மத்தியிலுமா இந்த இனவாதம் ? இந்த இடம் பிடிக்கிற போட்டி?
மந்திரிக்கு மீண்டும் அந்தரநிலை. அது பலவற்றை எண்ணியவாறு அப்பாலும் இப்பாலும் உழன்றது.
ராசாவின் பார்வை அமைதியே உருக்கொண்டது போல் இருந்தது. ஆனால் அதன் முன்னே பல காட்சிகள் தோன்றின.
ஏற்கனவே தோன்றி மறைந்தவை அதன் மனத்திரையில் பதியப்பட்டிருந்தன.
சிவசாமி தான் ”செத்துப் போனது பற்றி கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் தவித்தான். அதாவது தன் ஸ்தூல் உடலைவிட்டு எப்படித் தான் வெளியேறினான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் ”அந்தரப்பட்டான்.” -அவன் அந்தரப்பட்டதும் அதைத் தொடர்ந்து அவன் நடந்து கொண்ட விதங்களும் சுவையானவை. ராசா சதா கண்டு கொண்டிருக்கும் பல்வேறு காட்சிகளுள் இதுவும் ஒன்றாக அதன் பார்வையில் அவ்வப்போது விழுந்தது.
முதலில் சிவசாமி தனக்கு என்ன நடந்தது என்று புரியாமல் தன் உடலைப் பார்த்துக் கொண்டு நின்றான். அதன் பின்னர் தன் உடல் பொலிசாரால் அப்புறப்படுத்தப்பட்ட போது அதன் பின்னால் ஓடினான். சுடுதண்ணீர் ஊற்றப்பட்ட நாய் போல் அங்குமிங்கும் ஓடினான். தன் உடலைச் சுற்றி நின்றவர்களோடு தன் “இருப்பை” வெளிப்படுத்துவதற்கு மிகுந்த பிரயத்தனப்பட்டான். ஆனால் ஒருவரும் அவன் இருப்பைக் கண்டு கொண்டதாய் இல்லை. சிறிது நேரத்திற்குப் பின்னர் அவனது உடல் தூர எடுத்துச் செல்லப்பட்டு வெட்டிப் புதைக்கப்பட்ட போதுதான் அவன் தான் “செத்துப்” போனதை உணர்ந்தான்.
அது சிவசாமிக்கு இன்னும் அந்தரத்தை ஏற்படுத்திற்று. ”உயி’ ‘ரோடு இருந்த தன் பிச்சைக்காரச் சகாக்களோடு தொடர்பு கொள்ளப் பெரும் முயற்சி எடுத்தான். முடியவில்லை. அவர்கள் அவனைப் “பார்ப்ப’தாய் இல்லை. மீண்டும் சுடுமணலில் நடப்பவன் போல் அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓடினான். பின்னர் வெள்ளவத்தையில் இருந்த அவன் அண்ணர் வீட்டுக்கு ஓடினான். அவர் அங்கே அவன் செத்துப் போனதற்காக “துக்கங்’ கொண்டாடிக் கொண்டிருந்தார்!.
அப்போதுதான் வீட்டுக்கு வந்த ஒருவரோடு தன் ‘”கண்ணீரை’த் துடைத்துக் கொண்டிருந்தார்.
”ஐயோ எனக்குத் தெரியாது. இவன் கொழும்பிலதான் நிக்கிறான் எண்டு அண்ணர் அப்பட்டமான பொய் சொன்னார். “ஏன் அவன் இங்க உங்களிட்ட வரேல்லியா?” கேட்டுக் கொண்டிருந்த ஒருத்தர் கேட்டார்.
“வந்தவன். நானும் அவனை ஊருக்குப் போகச் சொல்லி காசு குடுத்தனான். அவன் அதை சிலவழிச்சுப் போட்டு எனக்குத் தெரியாமல் இங்கதான் நிண்டிருக்கிறான்.”
மேலும் பல பொய்களை அவிழ்த்து விட்டார் அண்ணர்.
“கர்மமே… இதான் அவன்ர விதி” -வந்தவர்களில் ஒருவர் அனுதாபப்பட்டார்.
“எண்டாலும் எனக்கு இது ஆறாத கவலை. கொஞ்சம் முந்தித் தெரிஞ்சிருந்தா அவன் பிரேதத்தையாவது கொண்டு வந்து நல்லமுறையில் அடக்கஞ் செய்திருப்பன்… அவன் தீட்சை கேட்டவன்…”
சிவ சிவா!சிவ சிவா!!
“கேட்டுக்” கொண்டு நின்ற சிவசாமிக்கு ஆத்திரம் பொங்கி வர, அண்ணரை ஓங்கி உதைத்தான். ஆனால் அண்ணரை அவன் உதை பாதிக்காதது ஆச்சரியமாய் இருந்தது.
சிவசாமி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
அவன் இறந்து போனதற்கு இரண்டு நாளைக்குப் பிறகு, அவன் படுத்திருந்த இடத்தில் அவன் சாவதற்குக் காரணமாய் இருந்த அந்தச் சிங்களப் பிச்சைக்காரன் நித்திரை செய்வதைக் கண்டு, அவன் கழுத்தைச் சிவசாமி ஆவேசங் கொண்டு பலதடவை “நெரித்’தான். அலறிக் கொண்டு விழித்தெழுந்த சிங்களப் பிச்சைக்காரன், தான் பயங்கரக் கனவு கண்டதாக நினைத்தான். அதன் பின்னர் அவன் அங்கு படுப்பதே இல்லை!
இப்போது சிவசாமிக்கு ஆறுதல் தரக் கூடியதும் ஆனந்தம் தரக் கூடியதுமான ஒரே ஒரு விஷயம் போக்குவரத்து ஒன்றுதான். காலோயும் மட்டும் நடந்தும் இடைக்கிடை வாகனத்தில் நெரிபட்டும் போக்குவரத்துச் செய்த சிவசாமிக்கு இப்போ நினைத்தவுடன் நினைத்த இடத்துக்கு காற்றாய் பறந்து போய் வரக்கூடிய ஆற்றல் எவ்வாறு சித்தது என்பது பெரும் புரியாத புதிராக இருந்தது. பின்னர் அது தன் இயல்பென நினைத்துக் கொண்டான்.
அவன் இப்போ அடிக்கடி தீவுப்பகுதிக்குப் போய் வந்தான்.
அவன் தீவுக்குப் போனதும் முதன் முதலாகச் செய்த வேலை தான் வாடிக்கையாகக் கள்ளுக் குடித்து வந்த ராசன் வீட்டுக்குப் போனது தான். “வாய்” நிறைய கொழும்புக் கதைகளோடு போயிருந்தான். ஆனால் அங்கே ஒருவரும் அவனைக் “கண்டு கொண்டதாய் இல்லை. பின்னர் அங்கிருந்து வழக்கமாக பீடி வாங்கும் சூரி கடைக்குப் போனான். அங்கும் இதே கதைதான்.
இவர்களுக்கெல்லாம் கண் குருடாகிப் போச்சா?
சிவசாமி க்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
அப்போதுதான் தீவுப்பகுதிக் கோயிலொன்றுக்கு பூசகராக இருந்து இடையில் விட்டிட்டு ஓடி யாழ்ப்பாணம் போன சண்முகநாதக் குருக்கள் சிவசாமிக்கு எதிரே வந்து கொண்டிருந்தார். நோய்க்கு வைத்தியம் செய்யப் போவதாகப் போனவர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து தீவுக் கோயில்களுக்குத் திருவிழாச் செய்யப் போவதாக காசு திரட்டிக் கொண்டு போனவர்… திரும்பவே இல்லை. சிவகாமிக்கு இவை “நினைவில் ஓடின.
‘என்ன ஐயா. இந்தப் பக்கத்தால?’ சிவசாமி தன்னோடு கதைக்க ஒருவர் கிடைத்த உற்சாகத்தில் அவரை ஆரவாரமாக வரவேற்றான்.
‘நான் இடைக்கிடை இந்தப் பக்கத்தால் வாறனான்… நீதான் என்னைக் காணேல்ல. அப்ப நீ இங்க உயிரோட இருந்தனியாக்கும். அதுதான் காரணமாய் இருக்கும்.
‘நீங்க விபத்தில் செத்துப் போனதை நான் பேப்பரில பார்த்தனான் ஐயா..’
‘அது சரி, நீ எப்ப கூப்பனை குடுத்திற்று வந்தனீ?’
‘போன மாசந்தான். ஒரு சிங்கள பரதேசி அடி வயித்தில உதைஞ்சு போட்டான். பிறகு எனக்கு என்ன நடந்ததெண்டு தெரியாது… கொஞ்ச நேரத்தால பாத்தா என்ர உடம்பைச் சுத்தியண்டு பொலிசும் ஆக்களுமா.. நான் எவ்வளவோ குளறிப் பாத்தும் ஒருவனுக்கும் என்னைக் கண்ணுக்குத் தெரியேல்ல… இவங்கள் பூமியில உயிரோட இருக்கிற எண்ட பேர்தான் எல்லாரும் சுத்தக் குருடுகள். எங்களை போல அவங்களையும் பார்த்து எங்களையும் பார்க்கிற வெளிச்சம் கிடையாது.
‘அதுதான் எனக்கும் உள்ள பிரச்சினை. கொஞ்ச சாமான்களை மறைச்சு வைச்சிற்று வந்தனான். அதை என்ர வீட்டாருக்கு சொல்லுவ மெண்டா முடியாமல் இருக்கு. என்ர வீட்டாருக்கு என்னை தெரியேல்ல.. அதைப்பாக்கத்தான் இஞ்சால அடிக்கடி வாறனான்…’
‘அது சரி யாழ்ப்பாணச் சனத்துக்கு நடந்ததைப் பார்த்தியளோ… எல்லாம் என்னமாதிரி நடந்து முடியுது.
‘இப்படி வருமெண்டு ஆரு கண்டது? பெரும்பாவம்! வீடு வாசல் எண்டு வாழ்ந்த சனம். இப்ப ரோட்டு ரோட்டாக குந்தி எழும்புது…’
‘எச்சில் கையால காகம் கலைக்காத யாழ்ப்பாணத்தாருக்கு. ஏழையளுக்கு குடுத்தறியாத யாழ்ப்பாணத்தாருக்கு இதைவிட வேறென்ன வரும்? எங்கட அண்ணர் செட்டி மாதிரி இருக்க நான் சாப்பாடில்லாமல் ரோட்டில பிச்சை எடுத்து செத்தன். அப்பிடிப்பட்ட எங்களுக்கு இதைவிட வேறென்ன வரும்?’
‘எண்டாலும் இப்படி யாழ்ப்பாணத்து சனத்தின்ர வயித்தில ஆரும் ஏறிமிதிக்கக் கூடாது..
‘உண்மைதான் ஐயா. ஆரெண்டா என்ன, வயித்தில அடிச்சவன் வாழமாட்டான். என்ர வயித்தில் உதைஞ்சவன் இப்ப குடி எழும்பிப் போனான்! அவன் இப்ப அந்த இடத்தில படுக்கிறதும் இல்ல. எங்கேயும் படுக்கவும் பயந்து நடுங்கி நடுங்கி செத்துக் கொண்டிருக்கிறான். ஓமோம் எல்லாருக்கும் இதுதான் மாறி மாறி நடக்கப் போகுது. ஆண்டவன் தீர்ப்பெண்டு ஒண்டு இருக்கல்லே..
“இப்ப இலங்கை எங்கையும் யாழ்ப்பாணமாய் மாறிப் போச்சு. இந்தப் போர் வந்தாலும் வந்திது பிள்ளையளை பறி குடுத்த தாய்மாரின் அழுகைதான். எங்கையும்…. சரி சரி பசிக்குமால் போல் இருக்கு வா கோயில் பக்கம் போவம். இண்டைக்கு பிரதோச விரதம், சண்முகம் பொங்கி படைச்செண்டு நிப்பான். ஒரு பிடி பிடிப்பம்…”
“ஐயா முந்தி எங்கட அம்மா, படைப்பு சோறுகளை சாப்பிடாதையடா. கண்ட ஆவியள் வந்து உமிஞ்சிருக்குமடா எண்டு சொன்னா நான் நம்பிறேல்ல. இப்பதான் அதில் எவ்வளவு உண்மை இருக்கெண்டு புரியுது…”
குருக்கள் ஐயா கெக்களம் கொட்டிச் சிரிக்கிறார்.
சோம்பல் முறித்துக்கொண்டு கிடந்த மந்திரி மீண்டும் கண்ணையயர்ந்து கனவு கண்டுவிட்டு விழித்துக் கொண்டதுபோல். விழித்தது.
வானொலி போரில் இறந்துபோன போராளிகளின் எண்ணிக் கையை ஒன்றுக்கு இரண்டாகப் பெரிதுபடுத்திக் கூறிக்கொண்டிருந்தது.
…பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புடையினருக்கும் இடையில் நடந்த மோதலில் பதினெட்டுப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏனையோர் காயமுற்ற தமது சகாக்களையும் தூக்கிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இம்மோதலில் பாதுகாப்புப் படையினருக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை…
எங்கும் போரும் அழிவும் அகதிகளும்!
மந்திரிக்கு அந்தரநிலை ஏறிக் கொண்டு வந்தது. அரசாங்கம் சமாதானத்துக்கான போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
ஆறுதலாய் குந்த ஒரு இடமில்லை.
போர் இல்லாமல் இந்த உலகே இயங்காதா?
போர் எதற்கு?
ஒவ்வொன்றிடமும் தன் அடையாளத்தைப் பற்றிய அழுத்தம் இருக்கும் மட்டும் போர் இருந்தே ஆகும். மந்திரிக்கு ஏனோ எரிச்சல் எடுப்பதுபோல் இருந்தது.
ஒவ்வொரு கணமும் பலமுள்ளது பலவீனமானதை விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
பலவீனமானது தனது அடையாளத்தை இழக்கிறது. பலமுள்ளது தனது அடையாளத்தை எல்லாவற்றிலும் திணிக்கிறது. விஸ்தரிக்கிறது.
மந்திரிக்கு இரண்டு உலகப்போர் நினைவுக்கு வருகிறது. தூய ஆரிய இன அடையாளத்தை ஸ்தாபிக்க முனைந்த ஜேர்மனியின் முனைப்பே இரண்டு யுத்தமும்! Kultur Race.
ஆனால் இந்த யுத்தங்கள் மார்க்சீய பொருளாதாரக் கோட்பாடு களின் மனித இயல்பூக்கங்கள் பற்றிய ஆழமின்மைகளை புட்டுக்காட்டிச் சென்றது. மந்திரிக்கு நினைவு வந்தது.
பொருளாதாரப் பொதுவுடமை என்று கத்திய ரஷ்ஷியாவே நாஸிப்படை வந்து ஸ்ரலின் சிராட்டை ஒரு உலுக்கு உலுக்கிய போது, பொதுவுடமைச் சுலோகங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வீர ரஷ்ஷிய நாட்டையும் ஸ்லாவ் இன உணர்வுக் கோஷங்களையும் தான் கூவியழைத்தது! என்ன பொருளாதாரக் காரணங்களுக்காகப் போர் ஏற்பட்டாலும் அது ஈற்றில் தன் வெற்றிக்காக தன் இனம், தேசியம் என்னும் அடையாளங்களை – கருத்துக்களைத்தான் மாட்டிக் கொள்கிறது. மந்திரிக்கு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால் மந்திரியின் தோள்களுக்கு மேலால் யாரோ பெரிதாகச் சிரிப்பது போல் கேட்டது.
யார் சிரிப்பது? மந்திரி ராசாவைப் பார்த்தது ராசா வழமைபோல் மூஞ்சி முழுக்கக் கண்ணாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த ராசாவுக்கு என்ன அடையாளம்?
இது எதன் அடையாளம்?
அடையாளங்களுக்குள்தான் மனிதனின் இருப்பு.
அடையாளங்கள் இல்லாவிட்டால் மனிதன் செத்துவிடுவானா? பலமான ஒரு சிரிப்போசை எழுந்தது.
ராசாதான் சிரிக்கிறதா?
அந்தரித்துத் திரியும் நீ, எந்த அடையாளத்துக்குள் போய் குந்தத் தவிக்கிறாய்?
மந்திரி தன்னையே கேட்டுக் கொண்டதா? இல்லை, மந்திரியின் அருகே கிடந்த ராசா தான் அக்கேள்வியை எழுப்பி விட்டதா? சொல் எது உன் அடையாளம்?
மீண்டும் அக்குரல் சவுக்குப்போல் மந்திரியைச் சுற்றி இழுத்தது. நான் ஓர் ஈழத்தமிழன்!
மந்திரியிடமிருந்து வந்த பதிலை, மந்திரியே வேறு யாரிடமிருந்தோ வருவதுபோல் ஆச்சரியத்தோடு விடுபட்ட நிலையில் கேட்டது.
ஈழத்தமிழன்!
மந்திரியே பெரிதாகச் சிரித்தது.
இல்லை, அது ராசாவின் சிரிப்பாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு மந்திரி தன்னை அறியாமல் பின்னணி கொடுக்கிறதா?
அவ்வாறே திடுதிப்பென ஓர் காட்சி மந்திரியின் முன் விரிகிறது. ஒரு கல்லெறிபட்டதும் கூட்டமாய் இருந்த காகங்கள் எல்லாம் சிதறி திக்குத் திக்காய் பறந்தோடுவதுபோல் எங்கெல்லாமோ பரதேசிகளாய் பறந்து கொண்டிருக்கும். ஈழத்தமிழர்கள்! நேற்று யாழ்ப்பாணம் என்னும் பனங்கூடலில் இருந்து கூழ் குடித்து, அருவி வெட்டி, துலாமிதித்து, தோட்டம் செய்து வாழ்ந்திருந்த கூட்டம் இப்போ எங்கோ எங்கோ எல்லாம் திக்குத்திக்காய்…. இந்த லட்சணத்தில் நான் ஒர் ஈழத்தமிழன்!
‘கட கட’ வென்ற பெருஞ்சிரிப்பு!
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி வவுனியாவைக் கடந்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள்! எப்படியாவது பனங்கூடலை உதறிவிட்டு வருவதில் காட்டும் வேட்கை! கொழும்பில் வந்து, அங்கு குந்தி, இங்கு குந்தி பொலிஸ் நிலையங்களைத் தரிசித்து திடீரென ஒருநாள் பிறநாட்டுக்கு பிளேன் எடுக்கும் ஈழத்தமிழர்.
மந்திரியின் கண்முன்னே அதுவிட்டுவந்த பனங்கூடலில் இப்போ கொஞ்ச இளமட்டங்கள் ஆயுதங்களைத் தூக்கியவாறு ஈழத்தமிழர் என்னும் அடையாளங்களாக பதுங்கியும் நிமிர்ந்தும் திரியும் காட்சி ஓடிவருகிறது. அதன் நெஞ்சு துயரால் கனக்கிறது.
நான் ஓர் ஈழத்தமிழன்!
மந்திரிக்கு மீண்டும் துயர் கவிவதுபோல் இருக்கிறது.
நான் ஓர் ஈழத்தமிழன்!
அடையாளம்! பொருள்!
இவற்றைத்தான் மனிதன் கட்டிப்பிடிக்கிறான். ஆனால் ஆபத்து வரும்போது எல்லாவற்றையும் உதறிவிட்டு உயிர்த்தப்பினால் போதுமென ஓட்டமெடுக்கிறான். சிறிது சுமூகநிலை ஏற்பட்டதும் அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டு பொருளைக் குவிக்கும் ஆசை!
அடையாளம் என்னும் கருத்துக்குள் அவன் ஆணவத்தின் இருப்பு. பொருளின் சேகரிப்புள் அவன் ஆசையின் இருப்பு.
கருத்தையும் பொருளையும் கட்டிப்பிடிக்கும் மனிதன் எல்லாவற்றுக்கும் காரணமாக நடுவில் இருக்கும். மனிதனை மறந்து விடுகிறான்! இன்று கருத்தும் பொருளும் மாறி மாறி மனிதனை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றன.
40 லட்சத்துக்கு மேலான யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லர்!
அதற்கும் மேலான மக்களை பொதுவுடமையின் பேரில் கொன்றொழித்த ஸ்ரலின்!
எல்லாவற்றுக்கும் ஒரு அடையாள முலாம்!
அடையாளந்தான் மனிதனா?
அடையாளம் இல்லாவிடில் மனிதன் இல்லையா?
அண்மைக்கால இலங்கை அரசியலில் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் தம்மைப்பழங்கால இலங்கை அரசர் அரசிகளோடு அடையாளம் காண முனைந்தது. மந்திரிக்கு நினைவு வந்தது.
56ல் தியசேன குமாரயா.
62ல் விஹாராமகாதேவி
77ல் ஜயவர்த்தன புரக்கோட்டை அரசன்.
95ல் செண்பகப் பெருமாள்.
ஒவ்வொரு அடையாளங்களும் ஈழத்தமிழர் அடையாளங்களுக்கு பேரழிவோடுதான் வந்தன!
இதற்குப் போட்டியாக தமிழ்ப் பகுதிகளிலும் சேர, சோழ, பாண்டிய அடையாளங்கள் நிழல் எறிந்தன. களம் பல கண்ட காளைகள் நூலுருப்பெற்றன!
உனது அடையாளம் என்ன?
மந்திரி தன்னையே கேட்டுக் கொண்டதா?
அல்லது ராசாதான் மீண்டும் அதனுள் குரல் கொடுத்ததா?
நான் ஓர் ஈழத்தமிழன்!
நான் ஓர் சிங்களவன்!
நான் ஓர் முஸ்லிம்!
நான் ஓர் கிறிஸ்தவன்!
நான் ஓர் பௌத்தன்!
நான் ஓர் கொம்யூனிஸ்ட்!
நான் ஓர் சோஷலிஸ்ட்!
நான் ஓர் ஜனநாயகவாதி!
எத்தனை அடையாளங்கள்! மந்திரி தனக்குள் சொல்லிக் கொண்டது. சொல்லிவிட்டு இடையில் பெரிதாகச் சிரித்தது.
ஏன் சிரிக்கிறாய்?
மந்திரி தன்னையே கேட்டுக் கொண்டதா?
சிரிக்காமல் என்ன செய்வது? எல்லாவற்றுக்குள்ளும் நான்தான் கொழுத்து நிற்கிறது. மனிதனைக் காணவில்லை!
நான் ஈழத்தமிழன், நான் சிங்களவன், நான் பௌத்தன், நான் கொம்யூனிஸ்ட்… நான் நான்…
மீண்டும் சிரிக்கிறது, பைத்தியக்காரன் போல்!
எத்தனை அடையாளங்கள்! இவை தேவையா?
இந்த அடையாளங்கள் மனிதனுக்கு விடுதலையா? விலங்கா?
மந்திரிக்குள் இக்கேள்விகள் எழுந்தன.
இவையெல்லம் இப்போ பெரிய விலங்குதான்!
மந்திரிக்குள் தானாகவே எழுந்த பதில் ராசாவிடம் இருந்தே வந்ததுபோல் பட்டது. மேலும் அது தொடர்ந்து விளக்குவது போல் தெரிந்தது.
இன்றைய மனித முன்னேற்றம் என்பது மனிதன் பற்றிய அகப்புற அறிவின் ஆழத்திலும் அதை வெளிக்காட்டும் மொழியின் கூர்மையிலும் தான் உள்ளன என்றால் அந்த அறிவைப் பெறுவதும் அதை வெளிக்காட்டும் மொழியைக் கற்பதுமே அவசியமாகும். இவை தவிர்ந்த ஏனைய மொழி, சமய, இனப்பற்றுக்கள் எல்லாம் தேவையற்றவை. மனித முன்னேற்றத்திற்குத் தடையானவை இல்லையா?
மந்திரி பேசாமல் இருக்க, இக்கருத்துக்கள் எல்லாம் தானாகவே மந்திரிக்குள் குமிழிகள் போல் வந்து வந்து உடைந்தன.
அப்படியானால் தேசம் தேசமாய் பரதேசிகளாய்த் திரியும் ஈழத்தமிழர் இந்த முற்போக்கான வேலை தான் செய்கிறார்களா?
மந்திரி ஏளனமாகக் கேட்டது; பின்னர் சிரித்தது. இல்லை, அவர்கள் உயிருக்குப் பயந்து ஓடுகிறார்கள். அவர்கள் தங்களைக் காப்பாற்ற ஓடுகிறார்கள்.
ராசாவிடம் இருந்து பதில் வருவதுபோல் இருந்தது.
அப்படிப் பயந்து ஓடச் செய்வது எது? அப்படி மக்களை ஓடச் செய்யும் ஒடுக்குமுறை எது? இந்த ஒடுக்குமுறை எங்கிருந்தாலும் என்ன பேரில் இருந்தாலும் அதற்கெதிராகப் போராட வேண்டாமா? மந்திரி இப்படிக் கேட்டது.
போராடத்தான் வேண்டும்! ஆனால்…
என்ன ஆனால்?
ஆனால் நான் ஈழத்தமிழனாகவோ, சிங்களவனாகவோ முஸ்லிமாகவோ, கொம்யூனிஸ்டாகவோ எந்த அடையாளத்துக்குள்ளும் நின்று போராட மாட்டேன்.
அப்போ?
மனிதனாக நின்றுதான் போராடுவேன். எனது போராட்டம் எந்த அடையாளத்துக்குள்ளும் புதைக்க முடியாதது. அப்போதான் அது எல்லா மனிதருக்கும் உரியதாய் இருக்கும்.
மந்திரி பேசாமல் இருக்க இந்த வார்த்தைகள் அதற்குள் வந்து விழுவன போல்பட்டது ராசா தனக்குள் படிப்படியாக மந்திரியை
உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறதா?
மந்திரி மௌனமாகி ராசாவின் ஈர்ப்பு நீரோட்டத்தோடு கலந்தோட தயாராகுவது போல்பட்டது.
அப்போது தூரத்தே பேரிடிபோல் ஏதோ வெடித்து சிதறுவது கேட்டது.
திடீரென வெளியே அமைதி கெட்டு அந்தரம் பற்றிக்கொள்வது தெரிந்தது. சனங்கள் ஓலமிட்டவாறு ஒடுவதுகேட்டது. வாகனங்கள் அந்தரப்பட்டு ஹோர்னை அழுத்திச் சப்தமிட்டவாறு விரைவது கேட்டது. எங்கும் ஓர் அந்தரம் புயலாக வீசுவது தெரிந்தது. எங்கும் இனி அமைதியாகத் தரிக்க முடியாது.
வெளியில் வீசிய அந்தரம் மந்திரியையும் தன் கைக்குள் இறாஞ்தி எடுத்து நிலத்தில் ஓங்கி அறைந்தாலும் அறையலாம்.
மந்திரி பயத்தாலும் பீதியாலும் சிறகை விரித்து எங்கும் பறக்க முடியாது உள்ளோய்ந்து போகிறது.
இனி மந்திரியின் அடையளாத்தை கேட்டு பொலிசார் வீடு தேடி வருவார்கள்.
மந்திரி தன் தேசிய அடையாள அட்டையைக் காட்டினாலும் விடமாட்டார்கள்.
ஒருவேளை தேசிய அடையாள அட்டை அவர்களால் கிழித்தும் எறியப்படலாம். மந்திரியின் இனத்தைப் பற்றி அவர்கள் வைத்திருக்கும் அடையாளம் என்ன? அது வேறுவகையானதாக இருக்கலாம். இனி அந்த அனெக்ஸ்ஸிலும் மந்திரியால் நிம்மதியாகப் போய்த் தரிக்க முடியாது. எந்நேரம் வந்து பொலிசார் தட்டுகிறார்களோ, யார் கண்டது? “பயங்கரவாதி” என்ற அடையாளம் குத்தப்பட்டு மந்திரி இழுத்துச் செல்லப்படலாம்.
நடுங்கும் உடலை சிறகுகளால் இறுக்கியபடி கிடுகிடுக்கும் பற்களை சொண்டுகளால் மறைத்தபடி மந்திரி ராசாவைப் பார்த்தது. ஏன் நடுங்குகிறாய்? ஏன் அந்தரப்படுகிறாய்? ஏன் பயப்படுகிறாய்?
ராசா வழமையான அமைதியை விட இன்னும் இரட்டித்த அமைதிச் செறிவோடு அப்படியே இருந்தது. ஆனால் அதன் குரல் மந்திரிக்குள் உள்ளொலிப்பதுபோல் பட்டது.
ஏன் அந்தரப்படுகிறாய்? ஏன் பயப்படுகிறாய்? நீ பயப்படும் அளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது?
மீண்டும் ராசாவின் குரல் உள்ளொலித்தது.
மந்திரி சிறிது யோசித்தது.
நீ என்னைப் பார்!
ராசா கட்டளையிட்டது. அதை ஏற்று மந்திரி ராசாவைப் பார்த்தது.
என்னையே பார்த்துக் கொண்டிரு! மனதை அலையவிடாதே!
மந்திரி அப்படியே செய்தது.
இவ்வளவு நேரமும் பலதை எண்ணி நடுங்கிக் கொண்டிருந்த மந்திரி இப்போ நல்ல வாய்ப்பான இடம் தன்னோடேயே இருப்பதைக் கண்டுவிட்டதுபோல் ஆனந்தமாய் ராசாவில் போய் குந்தியது. உடனே அதற்கு முன்னைய போக உணர்வின் எச்சங்கள் தலைதூக்கியது. ஆனால் கணப்பொழுதில் ஓர் புது உணர்வு வெடித்து விசாலித்து பழைய போகக் கிறுக்கங்களையெல்லாம் அற்பமாக்கியது. ஓர் அமைதியும் இதமும் எழுந்தன. பின்னர் அப்படியே ஓர் பெருவெளிக்குள் புகுவதை மந்திரி உணர்ந்தது. தனது தலையில் இதுகாலவரை தூக்கிவைத்திருந்த பாரங்கள் நீக்கப்படும் சுகம் தெரிந்தது. இப்போ அவை அர்த்தமற்று இதுகாலவரை சுமக்கப்பட்டதாகப் பட்டது.
ஆனால் அவ்வேளை திடீரென அதற்கொரு பயம் எழுந்தது. தான் மெதுவாக இல்லாமல் போகப் போவது போல் பட்டது. தன் அடையாளத்தை தான் இழக்கப்போவது போல் அது பயந்தது. நான் எங்கே? நான் எங்கே?
மந்திரி பீதியால் உந்தப்பட்டுக் கத்தியது.
தனக்கருகே இருந்த ராசாவின் உருவம் மறைந்து வெளியாக மாறுவது போல் மந்திரிக்குப் பட்டது.
அந்த வெளியோடு வெளியாக தானும் கரைவது போல் மந்தரி உணர்ந்தது.
நான் எங்கே? நான் எங்கே?
கரைந்துபோகும் தன் அடையாளத்தை கரைக்கவிடாது, தன் அடையாளத்தின் நாயகனாக இருக்கும் ‘நானை’ இறுகப்பிடித்தபடி மந்திரி கத்திற்று.
துகில் உரியப்படும் பாஞ்சாலி ஒற்றைக் கையால் சேலைத் தலைப்பை அணைத்தபடி மறுகையால் கண்ணனைக் கூவியழைத்த நிகழ்ச்சி மந்திரியின் நினைவில் தெறித்தது.
அடுத்த வினாடி தான் தன் அடையாளத்தை இழந்து கரைந்து போவதை விரும்பாத மந்திரி அந்நிலையிலிருந்து விடுபட திமிறிக் கொண்டு எழுந்தது.
ஆனால் அப்போது ராசாவை எங்கும் காணவில்லை. எங்கும் எல்லாம் வெளியாய்த் தெரிந்தது.
நீ ஏன் பயப்படுகிறாய்?
அந்த வெளிக்குள் இருந்து ராசாவின் குரல் கேட்டது. நீ எங்கே இருக்கிறாய்?
மந்திரி கத்தியது.
நான் இங்கே இருக்கிறேன்.
ராசா பதில் கூறிற்று.
இங்கே என்றால் எங்கே?
மந்திரி துருவித் துருவிக் கேட்டது.
நான் இங்கே இருக்கிறேன். எல்லாமாக இருக்கிறேன். எல்லாமாக வியாபித்திருக்கிறேன். நீயும் என்னிடம் வா. எல்லா அடையாளங்களும் என்னிடமிருந்துதான் வருகுது.
ராசா கூறிற்று.
என்னைச் சாகச் சொல்கிறாயா?
மந்திரி கேட்டது.
இது சாதல் அல்ல. உன் அடையாளத்தை விடுதல். உன் தனி அடையாளத்தை விட்டு விட்டு எல்லா அடையாளங்களின் மூலமாக இருத்தல். வா என்னிடம்.
ராசா விளக்கியது.
என்னால முடியாது என் அடையாளத்தை எனக்கு விடமுடியாது.
மந்திரி எதிர்த்தது.
அப்படியானால் நியாயமான உன் அடையாளத்துக்காகப் போராடவும் முடியாது.
ஏன்?
உன் அடையாளத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உன் அடையாளத்துக்காகப் போராடினால் மேலும் பல தேவையற்ற அடையாளங்கள் பெருகுமே ஒழிய உன் அடையாளத்துக்கு விடுதலை வராது. பயங்கரவாதம். பாஸிசம் அராஜகம் என்னும் தேவையற்ற புதுப்புது அடையாளங்கள் தான் பெருகும். ஆனால் உன்நியாயமான அடையாளத்துக்கு விடுதலை வராது! வீணாக போராட்டம் நீண்டு கொண்டு போகும்.
இதெல்லாம் எனக்கு விளங்காது. ஆனால் நான் என் அடையாளத்தை விடமாட்டேன். நான் என அடையாளத்தோடு நிம்மதியாக எனக்குரிய இடத்தில் குந்தியிருக்க வழி சொல்!
அதுதான் நான் சொல்லி விட்டேனே!
அது எனக்கு விளங்காத வழி. வேறு வழி சொல்லு.
அதுதான் ஒரே வழி. இனிவரப் போகும் வழி!
எனக்கது விளங்காது. எனக்கு அதை விளங்கிக் கொள்ள பொறுமையுமில்லை. வேறுவழி சொல்!
அதுதான் ஒரே வழி. பொறுமையாக இருந்து யோசித்துப்பார்.
அப்போ என்னைக் கைவிட்டு விட்டாயா?
நான் கைவிடவில்லை. நீதான் என்னோடு கைகோத்துவர மறுக்கிறாய்! வா என்னோடு போராடுவோம்.
முடியாது! முடியாது! உன்போராட்டம் எனக்குப் புரியாது! நீ என்னை ஏமாற்றுகிறாய்! ஐயோ..
மந்திரி அப்படியே குந்தியிருந்து அழத் தொடங்குகிறது. கைவிடப்பட்ட அகதிபோல்!
அப்போது ரோட்டோரமாகக் குந்தியிருக்கும் அகதிகளும் அகதி முகாம்களில் கிடந்து அல்லல்படுவோரும். கையிழந்தவர்களும், கால் இழந்தவர்களும், கைவிடப்பட்டவர்களும், சடைத்த பேர்விருட்சத்தில் வந்து விழும் வௌவால்களைப் போல் மந்திரியைச் சூழ்ந்து மொய்ப்பது போன்ற ஓர் தரிசனம்ராசாவுக்கு ஏற்பட்டது. மொய்த்தவர்கள் “நாங்கள் எங்க போறது? எங்க போறது? எங்களைக் கைவிட்டிட்டியா? எங்களுக்கினி ஒரு வழியில்லையா?’ என்று மந்திரியை உலுக்குவதுபோல் பட்டது.
அவ்வேளை கனகாலமாக மந்திரியைக் காணவேண்டும் என்னும் ஆசையைத் தேக்கி வைத்திருந்த ‘சிவசாமி’ அங்கே மிதந்து வருவதை ராசா கண்டது. வந்தவன் கலவரமடைந்தவனாக, மந்திரி முன்னே நின்று, ‘மாஸ்டர் வெளியே பொலீஸ்! மாஸ்டர் வெளியே பொலீஸ்?” என்று கத்தினான். ராசா வரட்டுச் சிரிப்புச் சிரித்தது … மந்திரி நிமிரவில்லை!
வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.
– 1995
– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.