இருபத்தைந்து பில்லியன் மக்கள் செலுத்திய நன்றி






டாக்சி டிரைவர் என்னை EYL கிளினிக் கட்டிடத்தின் முன்பு இறக்கிவிட்டார். நான் கொடுத்த டாக்சி கட்டணத்தை ஏற்க மறுத்தார். நான் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன், அவர் என் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, “இப்பேற்பட்ட தியாகம் செய்ய முடிவெடுத்த உங்களுக்கு இந்த ஒரு சிறிய உதவியை செய்வதில் எனக்கு பெரிய மன நிறைவு,” என்றார் தழுதழுத்த குரலில்.
கிளினிக்கில் இருந்த வரவேற்பாளர் என்னிடம் பதிவு படிவங்களைக் கொடுத்தார். வழக்கமான கேள்விகளுடன், நான் ஏன் இந்த செயலை செய்ய விரும்புகிறேன், மற்றும் இதைச் செய்ய எனக்கு தெளிவான மனநிலை உள்ளதா என்பது போன்ற கேள்விகளும் இருந்தன. நான் விரைவாக பூர்த்தி செய்து வரவேற்பறையில் காத்திருந்தேன்.
பத்து நிமிடங்களுக்குப் பின் ஒரு நர்ஸ் என்னை உள்ளே அழைத்தார். அவர் எனது வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தத்தை சோதித்த போது, நான் “இதெல்லாம் தேவை தானா?” என்று கேட்டேன் கேலியாக. அவர் புன்னகைத்து, “இது வழக்கமான நடைமுறை, சார்.” என்றார்.
அவர் என்னை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று உட்காரச் சொன்னார். அங்கிருந்த டிவியை இயக்கி விட்டு, “சட்டப்படி, நாங்கள் உங்களுக்கு இதைக் காண்பிக்க வேண்டும். நான் சில நிமிடங்களில் திரும்பி வருகிறேன்,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
உலகத்தின் அதிபர் டிவியில் தோன்றி EYL திட்டத்தின் வெற்றி பற்றி சுருக்கமாகப் பேசினார். பின்னர் அவர் EYL-இல் பங்கேற்றதற்காக எனக்கு நன்றி தெரிவித்தார். அவர் மட்டுமல்ல, இருபத்தைந்து பில்லியன் மக்கள் கொண்ட இந்த முழு உலகமுமே எனக்கு நன்றி செலுத்துகிறது என்றார்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு திரும்பினேன். நர்ஸ் தோன்றினார். “சார், நீங்கள் ரெடியா?”
ரெடியா? நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் ரெடி. ஆனால் இந்த செயலை செய்வதற்கான குறைந்தபட்ச வயது 52 என்பதால் அதுவரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது. அரசாங்கம் இதைச் செய்ததற்காக எனக்கு நன்றி தெரிவித்தது, ஆனால் நான் தான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் ‘உங்கள் வாழ்க்கையை முடிக்கும்’ End Your Life கிளினிக்குகளை நிறுவி இந்த செயல்முறையை எளிதாக்கியதற்கு. என் வாழ்க்கையை என் விருப்பப்படி முடிக்க அனுமதித்ததற்கு. மிகவும் நெரிசலான இந்த பூமியின் சுமையைக் குறைக்கும் சந்தோஷத்தை எனக்கு கொடுத்ததற்கு.
“சார்?”
“ஓ, ஸாரி. நான் ரெடி.”