இருபது ரூபாய் தண்டம்




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தங்கள் நெற்றியில் இருக்கிற மூக்குக் கண்ணாடியைத் தாங்களே தேடுகிறவர்கள் பலர் உண்டு.

ஆனால் நீலகிருஷ்ணன் வேறொருவருடைய கண்ணாடி யைத் தேடிக் கொண்டிருந்தார். அதுவும் ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவனுடைய மூக்குக் கண்ணாடியை.
அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஏன் வராது? இப்படி ஊராருக்கு மாரடிப்பதற்கே அவரை இறைவன் படைப்பித்து விட்டான். இந்த மாரடிப்பு அவரால் இல்லாவிட்டால் அவருடைய மைந்தன் சிவாவினால் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
கொஞ்சம் முன்னாடிதான் நீலகிருஷ்ணன் ஆபீசிலிருந்து வந்திருந்தார். தலைவலியும் கதகதப்புமாய் இருப்பதால் ஒரு மணி நேரம் முன்னதாகப் புறப்பட அனுமதி கேட்டபோது தலைமைக் குமாஸ்தா கேசவமேனன் தனது அற்பத்தனத் தையெல்லாம் காட்டி, “ஃபைல்களை முடித்து விட்டால் போமேன்” என்றார்.
உலகத்தில் நல்லவர்கள் பூண்டற்றுப் போய்விட வில்லை. பக்கத்து குமாஸ்தா ஒருவர் தானும் பாதி இழுத்துப் போட்டுக்கொண்டு அரைமணி நேரமாவது சீக்கிரமாய்ப் புறப்பட உதவி செய்தார்.
“நாயகி! மண்டை பிளக்கிறது. கொஞ்சம் காப்பி கொண்டு வா” என்று சமையல்கட்டுக்குக் கட்டளை போட் டு விட்டுக் கட்டம் போட்ட கோட்டைக் கழற்றிக் கொண் டிருந்தார். அவர் மனைவி கரண்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள், மாடிக் குடித்தனக்காரர்களிடம் பிச்சை எடுக்க.
வெறுப்பாலும் சலிப்பாலும் உடல்நிலையினாலும் அவர் ஊசி முனையில் நின்றிருந்தபோது தடதடவென்று இரண்டு மூன்று பள்ளிப் பிள்ளைகள் உள்ளே நுழைந்தார்கள்.
“மாமா, மாமா! உங்க வீட்டு சிவா இல்லை சிவா, அவன், மூணாவது வீட்டு சோடாப் புட்டி இல்லை, நாராயணன்…”
கோபாவேசத்துடன் குறுக்கிட்ட நீலகிருஷ்ணன், “சிவாவும் இல்லை, நாராயணனும் இல்லை! எல்லாரும் ஒழிஞ்சு போயிட்டாங்க. தொலையுங்கடா அந்தண்டை!” என்று கூச்சலிட்டார்.
“என்ன மாமா, கோபிச்சுக்கிறீங்களே மாமா! உங்க நன் மைக்காகச் சொல்ல வந்தால்…” என்றான் அதிகப் பிரசங்கி ஒருவன்.
“அதென்னடா என் நன்மை!”
“சிவா வந்து, நாராயணனோட மூக்குக் கண்ணாடியை விளையாட்டுக்கோசரம் வாங்கி மாட்டிட்டிருந்தான். அப்புறம் எங்கேயோ கெட்டுப் போக்கிட்டான். சோடாப் புட்டியோட அப்பா கத்திக்கிட்டிருக்கிறார்…”
“எங்கே அந்த ராஸ்கல் பின்னே? வீட்டுக்கு வராமல் ஒளிகிறானாமா?” – என்று நீலகிருஷ்ணன் கோபாவேசத்துடன் குதித்துக் கொண்டிருந்த போது மாடிக்குப் போயிருந்த நாயகி, “என்ன அமர்க்களம் இங்கே?” என்று வியந்தவாறு திரும்பினாள்.
“இந்த வீட்டில் வேறே யாரால் அமர்க்களம் வரும்? அந்தப் படவா ராஸ்கல் இருக்கிறானே அவனால்தான்! தொரை அந்த மூணாவது வீட்டுப் பையனோட மூக்குக் கண்ணாடியை வாங்கிக் கெட்டுப் போக்கிட்டானாம்!”
”யார், நாராயணன் கண்ணாடியையா?” என்று நாயகி கேட்டபோது குரல் விழுந்துவிட்டது. நாராயணன் வீட்டா ரும் இதே வீட்டில் வேறொரு போர்ஷனில் குடியிருந்தவர் கள்தான் முன்பு. “உங்களுக்காகவே நாங்கள் வேறே வீட் டுக்குப் போகிறோம்” என்று முகத்துக்கு நேரேயே சொல் லிவிட்டு மூன்றாவது வீட்டுக்குச் சென்று விட்டார்கள். அவர் களுடனா தகராறு?
“வரட்டும் அவன், உண்டு இல்லைன்னு பண்ணி விட்டுத்தான் மறுகாரியம்!” என்று அங்கவஸ்திரத்தால் ஈஸி சேரை அடித்து விட்டு அதில் உட்கார்ந்தார் நீலகிருஷ்ணன்.
“சிவா… வந்து மாமா, ப்ளே க்ரவுண்டிலே தேடிட்டிருக்கான் அந்தக் கண்ணாடியை” என்று தெரிவித்து விட்டுப் பையன்கள் ஓடி விட்டார்கள். நீலகிருஷ்ணனின் முகத்தில் ஜொலித்த கோபாக்னி அவர்களை அஞ்சச் செய்து விட்டது.
வாசலில் நிழலாடியது.
”உள்ளே வாடா ராஸ்கல்!” என்று கத்திக் கொண்டே எழுந்தார் நீலகிருஷ்ணன்.
“இந்தக் கடுதாசியை எங்கப்பா கொடுக்கச் சொன்னார் மாமா” என்று ஒரு சிறுவன் நாராயணனின் தம்பிதான் துண்டுக் கடிதமொன்றை எறிந்து விட்டு ஓட்டமாய் ஓடி விட்டான்.
கடிதத்தைப் பிரித்தார்.
மிஸ்டர் நீலகிருஷ்ணன்,
உங்கள் பையன் செய்கிற காரியம் உமக்கே நன்றாயில்லை. எங்கள் நாராயணன் ஏதோ அசடு என்பதால் எதை வேண்டுமானாலும் பிடுங்கிக் கொள்வதா? எப்பாடு பட்டேனும் மூக்குக் கண்ணாடியைத் தேடித் தரவும். இல்லாவிட்டால் நான் பொல்லாதவனாய் இருப்பேன்.
வாசுதேவன்.
கடிதத்தைச் சுக்கு நூறாய்க் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்த சமயம் இரண்டாவது தரமாக நிழலாடியது.
இப்போது சிவாதான்.
ஈரக்குச்சி மாதிரி சோனித் தேகமும், ஒருவித சோகை வெளுப்புமான சிவா, கலவரத்தினால் இப்போது இன்னும் சீர்குலைந்திருந்தான்.
“வாடா இங்கே!” என்று பாய்ந்தார் நீலகிருஷ்ணன். “விளையாட்டுன்னா இன்னது விளையாட்டு, இன்னது இல்லைன்னு கிடையாது?”
பளார் என்று அவனது எலும்பு முதுகில் அறை விழுந்தது.
“இல்லேப்பா. சும்மா விளையாட்டுக்கு மாட்டிக் கிட்டு… அவன் டெஸ்க்கிலே உடனேயே திருப்பி வைச்சிட்டேன்பா. அவன்தான்…”
“மூட்டா வாயை! நீ ஏண்டா அவன் கண்ணாடியை வாங்கறே? கூலிங்கிளாஸா இருந்தாலும் விளையாடலாம். சோடாபுட்டி கண்ணாடியிலே போய் என்னடா விளையாட்டு?”
இன்னொரு பளார்.
புயல் மாதிரி ஓடி வந்தாள் நாயகி உள்ளேயிருந்து. “நிறுத்துங்க சொல்றேன்! உங்க கையை முறிச்சு அடுப்பிலே வைக்கணும்! நல்லா பிசாசாட்டம் அறைஞ்சீங்க? உசிர் ஒட்டிக் கொண்டிருக்கு குழந்தைக்கு” சிவாவை அணைத்துக் கொண்ட போது அவள் கண்கள் கரகரவென நீர் சொரிந்தன. “கறிவேப்பிலைக் கன்னாட்டம் ஒண்ணே ஒண்ணு இருக்கிறது உங்களுக்குப் பொறுக்கலையா?”
“ஒழிஞ்சு போகட்டும் என்கிறேன். செத்து ஒழியட்டும் கிறேன். இவன் சம்பாதிச்சா நம்மை காப்பாத்தப் போகிறான்? பாடத்திலே அத்தனையும் சைபர். மக்கிலே ஒண்ணாம் நம்பர்.”
“போதும் போதும். ஏதோ மாதா பிதாக்களுக்கு இருக்கிறதுதான் குழந்தைக்கும் வரும், நினைவு வச்சிக்குங்கோ. அவ்வளவு அக்கறை இருந்தால், ஆண் பிள்ளையாய் லட்சணமாய்ச் சட்டையை மாட்டிக் கொண்டு ஸ்கூலுக்குப் போங்கள். வாத்தியார் கிட்டே, பியூன்கள்கிட்டே விசாரியுங்கள். தேடிப் பிடித்து அந்த மனுசன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள்.”
வெறும் ஓசையாக ஏதோ உறுமியபடி சட்டையை அணிந்தார் நீலகிருஷ்ணன்.
“போகிறத்துக்கு முன்னாடி அந்தக் காப்பியைக் குடிச்சுட்டுப் போங்களேன்.”
”உன் தலையிலே கொட்டிக் கொள்.”
நீலகிருஷ்ணன் ரொம்ப நேரம் கழித்துத் திரும்பினார். அவருடைய கோபம் தணிந்து விட்டது. ஆனால் ஏமாற்றம் ஆழமாயிருந்தது.
“எவன் என்கிட்டே முகம் கொடுத்துப் பேசுகிறான்? எவனாவது டெரிலின் சட்டை மாட்டிக் கொண்டு காரிலே வந்திறங்கினால் ஈன்னு இளிப்பாங்க. அந்தப் பியூன் தடியன்களுக்குத் தீபாவளி இனாம் தரலைன்னு வேறே கோபம். ‘அது எங்கே விழுந்திச்சோ’ என்கிறாங்க. அவங்களே எடுத்து வைச்சிருப்பாங்க, திருட்டுப் பசங்க.”
“இப்ப இந்த மனுஷனுக்கு வழியைச் சொல்லுங்கோ” என்றார் நாயகி.
“எங்கே அவன்?” என்று நீலகிருஷ்ணன் அதட்டியதும் மூலையில் பதுங்கியிருந்த சிவா மெல்ல எழுந்து வந்தான்.
“கடங்காரா! போ அந்த நாராயணனோட அப்பன் கிட்டே. அந்த மூக்குக் கண்ணாடிக்குப் பிரிஸ்கிரிப்ஷன், எங்கே கிடைக்கும், விலை என்ன எல்லாம் தெரிஞ்சிட்டு வா,”
“நாளைக்கு வெளிச்சத்திலே நானே நல்லா தேடி அதைக் கண்டுபிடிச்சுத் தந்திடறேம்பா” என்றான் அவன்.
“ஆகா!” என்று தன் வயிற்றில் ஓங்கி அறைந்து கொண்டார் நீலகிருஷ்ணன். “எத்தனை சமர்த்தடா நான் பெற்றது! சீ, போடா முகரை!”
சிவா சற்றைக்கெல்லாம் திரும்பி வந்து “இதோ சீட்டு, அப்பா. பிராட்வேயிலே கடையாம்” என்றான்.
“விலை?”
சிவா மென்று விழுங்கினான்.
நாயகி முன்வந்து “விலையும் கேட்டு வரச் சொன்னாரேடா அப்பா?” என்றாள்.
“இருபது ரூபாயாம் அப்பா.'”
“இருபது ரூபாய்!” என்று தலையில் போட்டுக் கொண்டார் நீலகிருஷ்ணன். ”இவனாலே எத்தனை விதத்திலே தண்டம் வந்தது பார்த்தியா?”
நாயகி பதில் பேசவில்லை.
ஒரே பிள்ளை, சௌகரியமான சம்பளம். அவர்கள் வச தியாய் வாழலாம்தான். ஆனால் நீலகிருஷ்ணன் அடிக்கடி மனைவியிடம் சொல்வார்; ‘நாயகி, சத்தியமாச் சொல்றேன், ஒரு தரித்திரக் குடும்பத்திலே ஒரே ஒருத்தன் மட்டும் முன் னுக்கு வந்தானோ தொலைஞ்சான். கீழே இருக்கிற ஒருத்த னாவது ‘ஐயோ பாவம், இவனாவது நல்ல படியா இருக்கட்டும்’ என்று நினைக்கிறானா பார். அவனை யும் தங்கள் நிலைமைக்கு இழுத்துக் கீழே தள்ளினால்தான் திருப்தி. ”
உண்மை. நீலகிருஷ்ணனுக்குப் பிறந்த வீடு, பெரிய ஏழைப் பட்டாளம். பிரசவிக்கப் போகிற தங்கைக்குப் பணம் அனுப்ப வேண்டுமே என்று அவர் கவலைப்பட்டுக் கொண் டிருக்கையில், வேலையில்லாத அண்ணா தன் குடும் பத்தோடு வந்து பாடியிறங்குவார். இப்படி உதவி செய்து செய்தே நொடித்தவர் நீலகிருஷ்ணன். ஆனால் அவருடைய அந்தரங்க நண்பர்களில் சிலர், “நீங்கள் சும்மா ஜம்பத்துக் காக உதவி பண்ணுகிறீர்கள். எக்கேடோ கெடட்டும் என்று விடுங்கள். செத்தா போய்விடுவார்கள்?” என்பார்கள்…
“இவன் படிக்கிற லட்சணத்துக்கு ட்யூஷன் வேறே!” என்று பெருமூச்சு விட்டார் நீலகிருஷ்ணன். “அந்த ட்யூஷன் வாத்தியாருக்கு இன்னும் கொடுக்கலையே இருபது ரூபாய்?”
“இல்லை” என்றாள் நாயகி.
“அதை என்னிடம் கொடுத்துத் தொலை. நாளைக்கு ஆபீசிலேயிருந்து வர்றப்போ இந்தக் கர்மாந்தரத்தை வாங்கி வருகிறேன்” என்றார் நீலகிருஷ்ணன்.
“வாத்தியாருக்கு?”
“பத்து நாள் கழிச்சுத் தரோம்னு சொல்லு.”
மறுநாள் சாயந்தரமே சொன்னபடி மூக்குக் கண்ணாடி வாங்கி வந்துவிட்டார் நீலகிருஷ்ணன்.
”பத்திரமாய்க் கொண்டு போய்க் கொடு. சரியாயிருக்கிறதான்னு கேட்டுக் கொண்டு வா.”
சிவா தனது குற்றத்தை மறந்தவனாகத் துள்ளலுடன் ஓடித் துள்ளலுடன் திரும்பி வந்தான். “ரொம்பக் கரெக்டாய் இருக்கிறதாம். அவன் அப்பா உனக்குத் தாங்க்ஸ் சொல்லச் சொன்னார்.”
“திமிரைப் பார்த்தாயா, நாயகி?”
“ஹும்.”
பதினைந்து நாள் கழித்து, ஆபீசுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கணவரிடம், “ட்யூஷன் வாத்தியார் பணம் கேட்டார்” என்றாள் நாயகி.
“நேற்றே அவருக்காக ஓரிடத்தில் வாங்கி வைத்திருந்தேன். மறந்து விட்டது. இந்தா.”
“போகிற வழிதானே? ஸ்கூலில் பார்த்துக் கொடுத்து விடுங்களேன்.”
”சரி,” என்று சென்றவர், பள்ளிக்கூடத்தில் சிவாவின் ட்யூஷன் ஆசிரியரைப் பார்த்துப் பணத்தைச் சேர்ப்பித்து விட்டுத் திரும்பினார்.
“எட்டாவது ஸ்டாண்டர்டு எஃப் செக்ஷன்” என்று ஓர் அறையின் நிலைப்படி மீது பலகையைக் காண நேரிட்டது. சிவாவின் வகுப்பு.
உள்ளே ஆசிரியர் கரும்பலகையில் ஏதோ எழுதியபடி பாடம் நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டவாறே மேலே நடந்த நீலகிருஷ்ணன், திடீரென்று கோபம் கொதிக்க நின்றார் வகுப்பில்.
சிவா, நாராயணனிடம் ஏதோ பேசியபடி இருந்தான். அது மட்டுமல்ல.
அவனுடைய கண்ணாடியை, கேட்டு… வாங்கிக் கொண்டு… மாட்டிக் கொண்டு… இருந்தான்!
பல்லை நறநறவென்று கடித்தவண்ணம் வெளியேறினார் நீலகிருஷ்ணன். இவனுக்கு என்ன திமிர் இருந்தால், அதே பழைய விளையாட்டை மறுபடி செய்வான்? இன்னும் எத்தனை தரம் தண்டம் வைக்கப் போகிறான் நமக்கு?…
மாலையில், வீட்டுக்குள் நுழையும் போதே “சிவா!” என்று ஒரு கர்ஜனை புரிந்து, இடுப்பிலிருந்த பெல்ட்டையும் உருவினார் நீலகிருஷ்ணன்.
”ஐயையோ! இவன் என்ன பண்ணினான்…?” என்றாள் நாயகி.
“சும்மா விடடீ நீ! ஒழிஞ்சே போகட்டும்! இன்னைக்கு மறுபடியும் அதே நாராயணன்கிட்டே மூக்குக் கண்ணாடியை வாங்கி மாட்டிக் கொண்டிருந்தானா இல்லையா கேள்!”
“ஏண்டா பாவி…”
“தள்ளி நில்.”
சுளீரென்று பெல்ட் இறங்கியது.
“அம்மா!” என்று சிவா துடித்தான்.
“விளையாட்டா இருக்குதாடா உனக்கு? அவன்கிட்டே மறுபடி கண்ணாடி வாங்கி, மறுபடி கெட்டுப்போக்கி, மறுபடி தண்டம் வைக்கிறது விளையாட்டாயிருக்குதா? சொல்லுடா!”
சுளீர், சுளீர்!
“தெரியலேப்பா. அதனாலே வாங்கிட்டேம்பா. தெரிலேப்பா” என்று அலறித் துடித்தான் பையன்.
“தெரியலையா? நாக்கை முழ நீளம் நீட்டிக் கொண்டு சாப்பிடத் தெரியறதா? தெரியறதாடா?”
”ஐயோ, விடுங்களேன்” என்ற அலறலின் மத்தியில் இன்னொரு பெல்ட் விளாசல்.
“தெரியலேப்பா… வாத்தியார் பிளாக் போர்டிலே எழுதறது எதுவும் தெரிய மாட்டேங்கறது எனக்கு…”
“என்னது…!” என்று நாயகி கூவினாள்.
மகன் என்ன சொல்கிறான் அல்லது, சொல்லத் தெரியாமல் தவிக்கிறான் என்பதை அவளால் உணர முடிந்தது. அதை நினைக்கும்போதே அவளுடைய தேக மொத்தமும் நடுங்கியது.
”என்னடா சொல்கிறே?” என்று மறுபடி கையை ஓங்கினார் நீலகிருஷ்ணன்.
“நாராயணனோட கண்ணாடியை வாங்கி மாட்டிக்கிட்டால் பிளாக்போர்டிலே எழுதறது நல்லா தெரியறது. இல்லாட்டி ஒண்ணும் தெரியலை… அதுக்காக அவன்கிட்டே அடிக்கடி வாங்கி மாட்டிக்கிறேன். எல்லாப் பையன்களும் அவனை சோடா புட்டின்னு பரிகாசம் பண்ற மாதிரி என்னையும் பண்ணுவாங்கன்னு உங்ககிட்டே கண்ணாடி கேட்காமல் இருக்கேன்…”
நீலகிருஷ்ணன் தன் மகனின் கண்களையே பார்த்தபடி ஸ்தம்பித்து நின்றார்.
”நமக்கெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ள யோக்கியதை கிடையாது” என்றாள் நாயகி. வேறொன்றும் சொல்லவில்லை.
– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.