இரண்டு நிர்வாணங்கள்





(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் கதையிலே, ஒர் அநாதைப் பிணத்தை வைத்து கொண்டு ‘மனிதனை’த் தேடுகிறார் கதைஞர் டேவிட். – சோக்கிறற் றீஸ் நடத்தியது போன்ற ஒரு தேடல். இவருடைய தேடலில் உதட்டளவிலே பிறக்கும் குறைப் பிரசவங்களான அனுதாபங்கள், எண்ணத்தை நெஞ்சினுள்ளேயே கொன்றுவிடும் பேடிமைகள் பணத்திலே வேர்விட்ட சிறுமைகள் என்பனவற்றின் கோரமான கோலங்கள் தலைகாட்டுகின்றன! மனிதாபிமானமோ, வறுமையில் கருகிவிட்ட குச்சனின் உடம்பினுட் கிடந்து துடிக்கிறது!… குச்சன் அவனுடைய வர்க்கத்தீன் அசற் பிரதிநிதி. அவன் கதையை நகர்த்துகிறான்; ஆனால், தான் நகராமல் நமது நெஞ்சில் நிலைத்துவிடுகிறான்!
பூரணம் நிர்வாணமாய்க் கிடக்கின்றாள்; அவள் இறந்துட்டாள்!
அவள் உடுத்தியிருந்த நாலுமுழக் கந்தல் துணி கயிறாய்த் திரிபட்டு அவளது இடையில் சுற்றிக்கிடக்கின்றது.
இரவு பத்து மணிக்கு மேல் கடைசி பஸ்ஸிற்காகக் காத்துநின்ற பத்துப் பதினைந்து மனித ஜீவன்கள் எட்ட நின்று அவள் உடலைப் பார்த்து ஏதோ முணுமுணுத்துக் கொள்ளுகின்றன.
குச்சன் – அவன்மட்டும் இறந்துபோன பூரணத்தின் உடலுக்கருகில் குந்தியமர்ந்திருக்கிறான்.
“எனது தனிமையை நீக்க இருந்த ஒரேயொரு சீவன் நீதான். நீயும் போய்விட்டாய்! இனிமேல் நான் தனியன்!” காலையும் கழுத்தையும் சேர்த்து இறுகக் கட்டப்பட்ட கோழி சிறகடித்து அவலப்படுவதுபோல அவனது இதயம் அவதிப் படுகின்றது.
உறவற்ற பூரணம்;
உறவற்ற குச்சன்;
இருவருக்கு மிடையே ஓர் உறவு!
உடற் கலப்பற்ற, உள்ளங்கள் கலந்த புனிதமான உறவு! ‘பிச்சைக்காரர்’ என்ற வர்க்க உணர்வு!
குந்தி யமர்ந்திருந்த குச்சனின் பார்வை பூரணத்தின் முகத்திற் சில நிமிடங்கள் தரிக்கின்றது.
அவளது கண்கள் வெண்மை படர்ந்து, பாதி திறந்து, வாய் அரை குறையாக மூடப்பட்டு… மரணக் கோலத்தின் முத்திரைகள்!
“பூரணம், நீ உயிரோடிருந்த காலத்தில் உன்னைக் கடைக்கண்ணாற்கூடப் பார்க்காத இந்த உலகத்தை இறந்தாப் பிறகும் பார்க்கவேணுமெண்ட ஆசையே? பாதிக் கண்ணைத் திறந்திருக்கிறாய்.
“நீ பசி பசியெண்டு திரிஞ்ச போதெல்லாம் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தராத இந்த உலகம் இறந்தாப் பிறகு ஏதாலும் தருமெண்டே உன்ரை வாயைத் திறந்திருக்கிருய்?”
குச்சன், தனது இதய ஓலம் தொடர, பூரணத்தின் கண்ணையும் வாயையும் மூடிவிடுகின்றான்.
பூரணத்தின் வாய் திரும்பவும் திறக்கின்றது.
“என்ன பூரணம் வாயைத் திறக்கிறாய்? பசியாலை செத்தேன் எண்டு காட்டவா? நீ பசியாலை தான் செத்தா யெண்டு எல்லாருக்கும் தெரியும். நீ வாயை மூடு. பிறப்பிலை யிருந்து இறப்புவரை எங்களுக்கு வெறுவயிறுதானே! தீராத பசி! எனிமேல் நீ வாயைத் திறக்க வேண்டிய அவசியமில்லை! எனிமேல் உனக்குப் பசிக்காது! எனி நீ வாயை மூடு.’ திரண்டுபோயிருககும் அடம்பன் கொடிக்குள் குப்பைவாரியை விட்டு இழுப்பது போல அவனது கைவிரல்கள் அவளது பரட்டைத் தலையைக் கோதிவர,. அவனுக்குள் அவனது இதயம் அழுகின்றது.
பூரணத்தின் முகத்திற் பதிந்திருந்த அவனது பார்வை திலிருந்து உடலில் நகர்கிறது.
மனித உணர்வின் நெறிக்குச் சவால் விடுகின்ற நிர்வாணக்கோலம்!
ஆனால், சூச்சனின் உணர்வு? உருகிக் கீழ் நோக்கி. வடிகின்றது.
பரிதாப உணர்வு!
அவளது நிர்வாணத்தைப் போக்கிவிட நினைந்து அவளுடைய இடையிற் கயிறாய்ச் சுற்றிக் கிடந்த நாலுமுழக் கந்தலைப் பிடித்து இழுக்கின்றான். தண்ணீரில் நனைந்த கடதாசி பிய்வதுபோல், அந்த நாலுமுழக் கந்தல் துணி பிய்ந்து வருகின்றது.
பூரணத்தைத் தூக்கி நிமிர்த்தி அந்தக் கந்தல் துணியை எடுத்து அவளுக்கு உடுத்தும் அளவுக்கு குச்சனுக்கு உடற் பலம் இல்லை. எச்சிலிலையால் வளர்ந்த உடல்; பலமிருக்குமா?
கிழிந்து கையோடு வந்த துண்டுகளை நிலத்திற் போட்டு விட்டு பஸ்ஸிற்காகக் காத்து நிற்பவர்களைப் பார்க்கின்றான். நின்றவர்களும் அதைப் புரிந்துகொள்ளுகின்றனர், ஆனால்,
யாரும் முன்வரவில்லை. யாரும் வரமாட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டும்,
“இவளைக் கொஞ்சம் தூக்கி விடுங்கோ, இந்தச் சீலையை எடுத்து உடுத்தி விடுவம்,” ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றான்.
இறந்துபோன ஒரு பெண்ணின் நிர்வாணத்தை நீக்கி விடத் துடித்து உதவி தேடுகின்ற ஒரு ஆணின் பரிதாபநிலை.
யாரும் வரவில்லை!
திரும்பவும் அவனது கைவிரல்கள் அடம்பன்கொடித் தலைக்குள் குப்பை வாரியாகிக் கோதுகின்றன.
சில நிமிடங்கள்..
மரக்கட்டையை உருட்டுவதுபோல் அவளது உடலை உருட்டி அந்த நாலுமுழக் கந்தல் துணியை எடுக்க முயல்கிறான், அவளோடு சேர்த்து துணியும் சுற்றி..கிழிந்து…இனி எடுத்தாலும் பிரயோசனப்படாது!
பூரணத்தின் நிர்வாணத்தைக் கோடிட்டுக் காட்டுகின்ற மின்சார பல்புகளைப் பார்க்கின்றான்.
“இந்தப் பல்புகளை கல் எறிஞ்சு உடைச்சாலென்ன!” இப்படி எண்ணுகிறது, அவனது மனம்,
பல்பை உடைத்து இருளுக்குள் பூரணத்தின் நிர்வாணத்தை மறைக்கலாம்; விடிந்தால் சூரியன்! பூரணத்தின் நிர்வாணம்! சூரியனைக் கல் எறிந்து உடைக்க முடியுமா!
அடம்பன் கொடித் தலைக்குள் கைகள் குப்பைவாரியாகி…
தலையைத் தாழ்த்திக் கொள்ளுகிறான்.
மயான அமைதிக்குச் சவால் விடுகின்ற பயங்கர அமைதி.
சில நிமிடங்கள்…
கடைசி பஸ் தனக்கே உரித்தான உறுமலோடு வரு கின்றது. நின்றவர்கள் ஏறிக்கொள்ள, பஸ் புறப்படுகின்றது. பஸ் நிலயத்திற் பூரண அமைதி.
கொடிகாமம் பஸ் நிலயம்:
பிரயாணிகள் தங்குவதற்காக ஆசையருமையாகக் கட்டப்பட்டிருக்கும் தங்குமடம்; கிட்டத்தட்ட இருபது அடி நீளமும் நாலு அடி அகலமும் கொண்டது, இதன் வலது பக்க ஓரத்தில்தான் பூரணம் கிடக்கின்றாள்.
கொடிகாமம் பஸ்நிலையத்திற்கு வருபவர்களுக்கு இவளைக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும், வயது நாற்பதுக்கு மேலிருக்கும், கொப்போடு முறிந்து வெய்யிலில் வதங்கிய முருங்கைக்காய்ப் பிஞ்சுபோல வாடி வதங்கிய மெல்லிய . உடல்; கறுத்தவள்; ஒரு நாலுமுழத் துணி; ஒரு சட்டை. அரை நிர்வாணக் கோலமாய்ச் சகலரிடமும் கை நீட்டித் திரிவாள்,
“ஐயா, ஒருசதம் போடுங்கோ.” ஒரு சதத்தைவிடக் குறைந்த காசில்லை என்ற எண்ணமோ என்னவோ, எல்லாரிடமும் ஒரு சதந்தான் கேட்பாள்,
பின்னேரங்களில் கொடிகாமம் தியேட்டர் வாசலில் கண்டிப்பாக அவளைக் காணலாம்.
இவ்வளவுதான் இவளைப்பற்றிக் கூறலாம்.
இவளது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், உறவினர்.. இவளோடு அதிகம் பழகுகின்ற குச்சனுக்கே இவைகள் தெரியா!
பூரணத்திற்குச் சகலதும் குச்சன்தான்! குச்சனுக்குச் சகலதும் பூரணம்தான்!
குச்சன் –
இது அவனது பட்டப்பெயர். மெலியக் கூடாத அளவுக்கு மெலிந்து, தடிக்குச்சிபோல் இருப்பதால் இவனைக் ‘குச்சன்’ என்று எல்லோரும் அழைப்பார்கள், இவனது சொந்தப் பெயர்? அது பூரணத்துக்கே தெரியாது
இன்று காலையில் கொடிகாமம் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட குச்சன் இப்போதுதான் தீரும்பினான்,
சில தினங்களாகப் பூரணம் வயிற்றுவலி என்று அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு திரிந்ததும் அவனுக்குத் தெரியும். அகற்குப் பசிதான் காரணம் என்பதும் அவனு குத் தெரியும்.
அனுபவங்கள் சாவது இல்லையே!
இன்று பகல் முழுவதும் அந்தத் தங்கு மடத்துச் சீமெந்து நிலத்திற் கிடந்த பூரணம் படிப் படியாகச் சகல மரண அவஸ்தைகளையும் பட்டு, எட்டு மணியனவில் இறந்து விட்டாள்.
குச்சன் அங்கே நின்றிருந்தால் பூரணத்தின் உயிர் ன்னும் சில நிமிடங்களாவது தங்கிப் போயிருக்கும். கடைசித் தண்ணீரென்று தன் கண்ணீரையாவது அவன் பருக்கியிருப்பான்.
“நீ செத்திட்டாய்; இனிப் பாரன்; விதானை, பொலீஸ், நீதவான், விசாரணை, பேப்பர்… இனிமேல் தான் உனக்கு மனிச மரியாதைகள்! ‘நீ குடல்வலி யெடுத்துத்தான் செத்தாய்’ எண்டதைச் சட்டப்படி தீர்மானிச்சு…” – குச்சன் வாய்விட்டுக் கூறுகிறான்.
பிணத்தின் அருகில் இருந்த குச்சன் எழுந்துபோய் தங்கு மடத்தின் இடதுபுறமாகவிருந்த சீமெந்து நிலத்தில் அமர்கிறான்.
மணி இரவு பன்னிரண்டுக்கு மேல்…
“டேய்! ஐயா பஸ் ஸ்ராண்டிலை ஒட்டச் சொன்ன பெரிய படத்தை எடு.” சில மனித ஜீவன்களின் பேச்சரவம் குச்சனின் அமைதியைக் குலைக்கின்றது.
அவர்கள் சினிமா நோட்டீஸ் ஒட்டுபவர்கள்.
நாளை காட்டப்படவிருக்கின்ற புதிய படத்தின் விளம்பரநோட்டீஸ். ஒருவன் அந்த விளம்பரப் பலகையை விழுத்தி அதில் பசையைப் பூசுகின்றான். மற்றவன் முதலாளி ஐயாவினால் குறிப்பிட்டுக் கூறப்பட்ட அந்தப் பெரிய படத்தை வெளியே எடுக்கின்றான்.
கிட்டத்தட்ட நாலடி நீளமும், மூன்றடி அகலமும் கொண்ட, பெரும் அளவிலான படம்.
ஓர் ஆங்கிலப்படத்தின் விளம்பரம்
ஒரு பெண்ணின் தோற்றம்.
முழு நிர்வாணக் கோலம்!
பெண்ணின் தோற்றம் முழு நிர்வாணமாக வரையப் பட்டு இருக்கிறது. வரைந்தவனின் மனம் சகிககவில்லையோ என்னவோ, பெண்ணின் தொப்பூழின்கீழ், படத்தின் பெயரைப் பெருத்த அளவில் எழுதி நிர்வாணத்திற்குத் திரையிட்டிருக்கின்றான்.
படம் ஒட்டப்பட்டு, விளம்பரப் பலகை நிமிர்த்தி வைக்கப்படுகின்றது.
மின்சார ஒளிக்கீற்று படத்தைத் தழுவுகின்றது.
பஸ் நிலயத்தில் இரண்டாவது நிர்வாணக்கோலம்!
அசலும் நகலும்!
“என்ன குச்சா, பன்னிரண்டு மணிக்கு மேலேயாய்ப் போச்சு, படுக்காமல் இருக்கிறாய்?” தற்செயலாகக் குச்சனைக் கண்ட அவர்கள் கேட்கின்றனர், இறந்துபோய் மறுமுனையிற் கிடக்கின்ற பூரணத்தை அவர்கள் அவதானிக்கவில்லை.
“உந்தப் படத்துக்கு நாளைக்கு மதிப்பில்லை.” சில விநாடிகள் மெளமைாக இருந்தவன் திடீரென்று கூறுகின்றான்.
“ஏன்?”
“உது வெறும் படந்தானே. உண்மையாயும் ஒன்று கிடக்குது. சனங்கள் நாளைக்கு அதைத்தான் பாக்குங்கள்.”
“என்ன குச்சா சொல்லுகிறாய்?”
“அங்கை போய்ப் பாருங்கோவன்.” பூரணம் கிடக்கின்ற இடத்தைச் சுட்டிக் காட்டுகிறான், குச்சன்,
“என்ன, பூரணம் கிடக்கிறாள்.”
“ஒம், கிடக்கிறாள்; என்ன மாதிரிக் கிடக்கிறாள் எண்டு பாருங்கோவன்.” குச்சன் முன்னே வரத் தியேட்டர்க்காரப் பொடியள் பின்னால் வருகிறார்கள்.
“என்ன குச்சா! பூரணம் செத்துப்போச்சே?”
”ஓம்”
“என்ன வருத்தம்?”
”வருத்தமோ, என்னவோ! பூரணம் செத்துப்போச்சு!”
“பொலிசிலை போய்ச் சொல்லு.”
“நானேன் சொல்லுறது. நாளைக்கு அவையளாய்க் கேள்விப்பட்டு வரட்டன்.”
”அதை ஒண்டாலே மூடிவிடன்.” பலரது பார்வைக்காக நிர்வாணப் படம் ஒன்றை ஒட்டிய அவர்கள், இந்த நிர்வாணத்தைச் சனங்கள் பார்ப்பார்களே என்று மூடச் சொல்கின்றனர்.
ஒன்று மனிதாபிமானம்;
ஒன்று தொழில்,
“தம்பி, பூரணத்தைக் கொஞ்சம் தூக்குங்கோவன். உந்த நாலு முழத்தை எடுத்து உடுத்துவிடுவம்.” முன்பு விடப்பட்ட அதே பகிரங்க வேண்டுகோள்,
“நாங்கள் இன்னும் கன இடத்திலை நோட்டீசு ஒட்ட வேணும். நிற்க நேரங் காணாது.” கூறியபடியே அவர்கள் அங்கிருந்து நகருகின்றனர்.
குச்சனுக்கு மீண்டும் தோல்வி!
மீண்டும் பழைய இடத்தில் வந்து அமர்கிறான்.
சில நிமிடங்கள்
‘உந்தப் படத்தை உரிச்சுப் பூரணத்தை மூடிவிட்டால் என்ன.’ குச்சனின் மனதில் மின்னற் கீற்றுச் சிந்தனை, வாய் முணுமுணுக்கின்றது.
அசல் நிர்வாணத்தை நகல் நிர்வாணத்தால் மூடிவிட…
அடம்பன் கொடித் தலைக்குள் கைவிரல்கள் குப்பை வாரியாகி…
முடிவுக்கு வருகின்றான்.
இருந்தவன் எழுந்துபோய் விளம்பரப் பலகையைச் சரித்து விழுத்தி, ஈரம் காயாத அந்த நோட்டீசை உரித்துக் கொண்டு வந்து பூரணத்தின் உடலை மூடிவிடுகிறான்! நோட்டீசின் படப்பக்கம் மேலே தெரிகின்றது.
அசல் நிர்வாணம் மறைய நகல் நிர்வாணம் தெரிகிறது!
“பிறகும் அதுதான்!” குச்சன் தனது தவறை உணர்ந்து கொண்டு, நோட்டீசை எடுத்துப் படத்தை உட்புறமாக்கி மூடுகின்றான்.
நிர்வாணங்கள் ஒன்றை யொன்று தரிசிக்கின்றன. இரண்டுமே உணர்வற்றவைகள்.
இப்போது அந்த பஸ் நிலையத்தில் நிர்வாணங்கள் எதுவுமில்லை.
குச்சன் மனத்திருப்தியோடு மீண்டும் பழைய இடத்தில் வந்து அமர்கிறான்.
சில நிமிடங்கள்…
இரண்டாம் காட்சி முடிந்து வந்த சில மனித ஜீவன்களின் அரவம் பஸ் நிலையத்தில் தனித்துவம்பெற்று ஒலித்து மரணிக்கின்றது.
ஒரு காரின் லைட் வெளிச்சம்; கார் இரைச்சல்; தியேட்டர் முதலாளியின் கார் என்பதைக் குச்சன் தீர்மானித்துக் கொள்ளுகின்றான்.
வந்த கார் விளம்பரப் பலகைக்கு அருகில் நிறுத்தப் பட்டு, முதலாளி காரிலிகுந்து இறங்கி விளம்பரப் பலகையைப் பார்க்கின்றார். பசையின் நீர்த்தன்மை மின்சார ஒளியில் பளபளக்கின்றது.
படம் ஒட்டப்பட்டுப் பின்னர் அது உரிக்கப்பட்டிருப்பதை முதலாளி உணர்ந்துகொள்ள அதிக நேரம் பிடிக்க வில்லை.
முதலாளி திரும்புகிறார், அவரது பார்வைக்குக் குச்சன் தான் தீனியாகிறான்.
”உதார், குச்சனே?”
“ஓம் ஐயா.”
“இஞ்சை வாடா.”
“என்னய்யா?”
“தியேட்டர்க்காரப் பொடியள் நோட்டீசு ஒட்டினவங்களே?”
“ஓம் ஐயா.”
“அப்ப எங்கையடா நோட்டீசு?”
“…”
“உனக்குத் தெரியாமல் போகாது; சொல்லு; ஏது வந்தாலும் நான் இருக்கிறனடா. நீ சொல்லு,”
“….”
“டேய்! குச்சா!” -முதலாளிக்கு எல்லை மீறிய கோபம்.
“ஐயா”
“யாரடா கிழிச்சது?”
“நான்தானய்யா.”
”ஏனடா?”
“பூரணத்தை மூட?”
”அவளை ஏனடா மூடவேணும்?”
“வந்து பாருங்கோ”
இருவரும் பூரணம் கிடக்கின்ற இடத்திற்க்கு வருகின்றன. குச்சன் நோட்டீசை எடுக்கிறான். பூரணம் நிர்வாணமாய்க் கிடக்கின்றாள்.
“பூரணம் செத்துப்போனாளேயடா?”
”ஓம் ஐயா.”
எதிர்பாராத தாக்கம்; முதலாளி சில விநாடிகள் மௌளமாக நிற்கின்றார்.
“ஏனடா குச்சா, செத்துப்போன இந்தப் பரதேசியை மூட என்ரை தியேட்டர் நோட்டீசேயடா உனக்குக் கிடைச்சுது?”
“அப்பிடியில்லை ஐயா, செத்தாலும் பூரணம் பொம்பிளைதானே, நிர்வாணமாய்.. விடிஞ்சால் எத்தினைபேர் வாற இடம்… அதுதான்”
“அதுக்கு, என்ரை நோட்டீசாலையேடா மூடுறது!”
“ஒரு பெண்ணின்ரை மானத்தைத்தானே உங்கடை நோட்டீசு காப்பாத்திக் கொண்டிருக்கு.”
“அதாலை எனக்கென்னடா?”
“என்னய்யா அப்பிடிச் சொல்லுறியள்!”
“டேய்! கதைவேண்டாம். உரிச்சதுபோல கொண்டு போய் ஓட்டிவிடடா.”
“ஐயா!”
”சொன்னதைச் செய்.”
குச்சன் படத்தைக் கொண்டுவந்து ஒட்டி விளம்பரப் பலகையை நிமிர்த்தி வைக்கிறான்.
திரும்பவும் இரண்டு நிர்வாணங்கள் பஸ் நிலயத்தில் பளிச்சிடுகின்றன!
“ஐயா! இந்த நாய் தின்னாக்காசு மனிசனிட்டை அளவுக்கு அதிகமாய் இருந்திட்டால் அவன் நாயை விடக் கேவலமாகிவிடுகின்றான!” எல்லைமீறிய கோபத்தில் குச்சன் திடீரென்று இப்படிக் கூறிவிடுகின்றான்.
முதலாளி இதை எதிர்பார்க்கவில்லை!
“டேய் குச்சா ! நீ நாயாய் அலையிறதுக்கும் நான் ராசாவாய் இருக்கிறதுக்கும் இந்த நாய் தின்னாக் காசு தானடா காரணம்.”
“அது சரி ஐயா. தெருவோரத்தில் கிடக்கிற ஒரு பிணத்தின்ர நிர்வாணத்தை மறைக்கிறதுக்கு உங்களாலே ஒரு நோட்டீசைத் தானஞ்செய்ய மனசில்லாமல் போச்சே!”
“டேய் குச்சா! பூரணத்தின்ர உடலை நிர்வாணமாய் இந்த உலகம் முழுக்கக் கொண்டு திரிஞ்சாலும் எனக்கு ஒரு சதத்து வருமானம் இருக்காது. ஆனால், வெறும் கடதாசியிலை மையால் கீறின இந்தப் படம் ஆடாமல் அசையாமல் இந்த பஸ் ஸ்ராண்டிலை கிடக்கிற ஒவ்வொரு விநாடியும் எனது வருமானத்திற்கு வழி கோலிக்கொண்டு தானடா இருக்கும்” கூறிவிட்டுக் காருக்குள் ஏறுகின்றார்.
கார் புறப்படுகின்றது; குச்சன் அப்படியே நிற்கின்றான்.
இருள் கரைந்து, வானம் வெளுத்து. பொழுதுவிடிந்து ஆதவனின் ஆதிக்கம் வானத்தின் உச்சியைத் தழுவி, அடி வானத்தை த நெருங்கிவிட்டது. மாலை ஆறு மணி.
அசல் நிர்வாணம் எரிந்து சாம்பராகிவிட்டது.
நகல் நிர்வாணம்?…
தியேட்டரில், ‘ஹவுஸ் ஃபுல்’ அறிவிப்புப் பலகை தொங்க விடப்பட்டிருக்கின்றது!
– சிரித்திரன், 1978.
– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.
கே.ஆர்.டேவிட்
சிறுகதை என்னும் கலைவடிவத்தை நலிந்த மக்களது – நசுக்கப்பட்ட மக்களது மீட்புக்காக வலுவுடன் பயன்படுத்துபவர். கே.ஆர்.டேவிட். மானுடத்தின் துன்பங்களும் துயரங்களும் இவரது கதைகளிற் கருப்பொருளாகி, உணர்வு பூர்வமாகச் சித்திரிக்கப்படுகின்றன. இக்கேடுகள் ஒழியவேண்டும் என ஆசிரியர் கொண்டுள்ள ஆத்மார்த்தமான வேட்கை அவற்றில் ஓங்கி ஒலிக்கிறது. சமுதாயத்தில் அடிப்படையான மாற்றம் வேண்டும் என்னும் இவரது ஏக்கம் அவற்றில் தேங்கி நிற்கிறது.
இந்நாட்டில் இன்று இனப்பூசலால் நேர்ந்த அவலங்களைச் சித்திரித்து டேவிட் அண்மைக் காலத்தில் எழுதிவரும் சிறுகதை மானுட நேயத்தின் தேடுதலாக – மனிதாபிமானத்துக்கு அவர் விடுக்கும் அறை கூவலாக அமைந்துள்ளன.
மலையகத் தமிழரின் இதயக் குமுறல்களுக்குக் காரணிகளாகவுள்ள பிரச்சினைகளுள் ஒன்றைக் கருவாகக்கொண்டு இவர் எழுதிய ‘வரலாறு அவளைத் தோற்றுவிட்டது’ என்னும் நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்துள்ளது.