இரட்டை விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 20, 2025
பார்வையிட்டோர்: 189 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டுக்கு வெளியே ஆறு பெரிய தேக்சாக்களை அடுப் பில் ஏற்றியிருந்தார்கள். கபந்தன் மந்திரவாதியாகி நெருப்பைக் கக்க ஆரம்பித்ததுபோல் அடுப்புகள் எரிந்து கொண்டிருந்தன. தங்கம் உருகி ஓடும் வர்ணத்திலிருந்து சூரிய வெண்மைக்குத் தீ மாறிக் கொண்டிருந்தது. 

ஏழை பாழைகள் நிறைந்த தெரு. மாலை நேரம் கூடு களுக்குப் பறவைகள் கும்பலாகக் கலகலப்பாகத் திரும்பு வது போல வேலை ஆட்களும் தொழிலாளிகளும் குடிசை களுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். 

“என்ன இவுங்க ஊட்டிலே?” 

“தெரியாதா உனக்கு ? ஆமாமாம். நீதான் அப் பொழுது ஊருக்குப் போயிருந்தியே. சந்தணம் பிள்ளை இல்லே, அவரு வப்பாட்டி காலமாயிடுச்சி. இன்னிக்கு நாப்பத்தி அஞ்சாம் நாள்.” 

“நாப்பத்தி அஞ்சாம் நாளைக்கு இந்தமாதிரி நாம்ப எங்கே செய்யறோம்? எதுனாச்சும் இருக்கட்டும்-திறந்த வெளியிலே சோறு எப்பொ பொங்கறோம்? கோயிலிலே, முன்னாலே திறந்தவெளியிலே பொங்கப் பானை வக்கறோமே. அது ஒண்ணு. மாட்டுப் பொங்கலப்பொ கொட்டிலிலே திறந்த வெளியிலே சூரியநாராயண மூர்த்திக்குப் பொங்கப் பானை வக்கறோமே – அது ஒண்ணு. அவ்வளவுதான் வீட்டுவாசல்லே வக்கற வளமை இல்லியே !… மறந்திட் டேன். அந்தப் பொம்பிள்ளை வேறெ மதமில்லே?” 

“ஆமாம் ஆமாம். அந்த மதத்திலே அப்படி வச்சிருப் பாங்க. இல்லாட்டி ஒண்ணைப் பார்த்து ஒண்ணு. இதுக் கெல்லாம் தடை சட்டமா ?” 

“அது இருக்கட்டும். எப்பிடிச் செத்துப் போச்சு? நான் ஊருக்குப் போறப்போ நல்லாத்தானே இருந்தாங்க ?” 

“சாவறதுக்கு ஒரு கணக்கா? சாவற அன்னிக்குச் சாயங்காலம் நான்கூடப் பார்த்தேன். கொத்து வேலையை முடிச்சுட்டு ஊட்டுக்குத் திரும்பி வர்றப்போ அவுங்க மாடி யிலே ரொம்ப ராங்கியா நின்னு தெருவைப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. ரவைக்குப் பத்து மணிக்குப் போயிட் டாங்கன்னு ஆஸ்பத்திரியிலேருந்து கொணாந்தூட்டாங்க.” 

“அப்பொ ஊட்டிலே சாவல்லியா?” 

“ஹூம். மயக்கம்னாங்கன்னு ஆஸ்பத்திரிக்கு அழைச் சுக்கிட்டுப் போனாங்க. கதை முடிஞ்சு போச்சுன்னு ஊட்டுக்குக் கொணாந்துட்டாங்க. சாவறதுக்கு ஒரு கணக்கா?” 

“சரி. அப்பொ என்ன சீக்கு?” 

“அதை யார் கண்டா? கடவுளுக்குத்தான் வெளிச்சம். டாக்டருங்க முளைச்ச பிறவு கடவுளுக்குக்கூட வெளிச்சமோ இல்லியோ? ஆளுக்கு ஒண்ணாச் சொல்றாங்க.” 

“அதெல்லாம் போவட்டும். ஏழை பாழைங்களுக்கு இதிலே ஒரு கவளமாச்சும் கிடைக்குமா?” 

“வாசத்தை எடுத்துக்க அவுங்களைக் கேக்க வேணாம். சோறு தர்ற சமாசாரம் எப்படியோ! சந்தணம் பிள்ளை இதிலே ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு. அதோ பாரேன்-படிக்கட்டுலே உக்காந்துக்கிட்டு நெருப்பையே பாத்துக்கிட்டு. அவரு மொவத்தைப் பாத்தா, கிணத்திலே கயித்தை விட்டுத் தேடறாப்பிலே அல்ல தோணுது ? வீட்டுக்குப் போயிட்டு வந்து கவளம் கிடைக்குமா-பாப் போம்.” 

தெருவிலே பேசியவர் கூறியது போலச் சந்தணம் பிள்ளை அடுப்புத் தீயை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந் தார்: கன்னத்திலிருந்து காதோரம் வரை போயிருந்த வெட்டுக் காயமும் பார்த்துக்கொண்டிருந்தது போலிருந்தது. கருவிழிகள் ஒருமைப்படாமல் விலகி உள்ளே நிலைத்திருந்தன ; உள் பார்வையின் புற நிலை. 

‘ஒரு கோடி காட்டாமல் போயிட்டியே! காட்டி யிருந்தால் மட்டும் என்ன ? கறந்த பால் முலை புகாதுன் னான். முந்தி ரெண்டு தரம் தப்பிச்ச தைரியம் – அப்படித் தானே? அப்பவே சொன்னேனே, தாய்க்கு ஒளிச்ச சூல் வேணாமின்னு. தும்பை விட்டுப்பிட்டு வாலைப் பிடிக்கிற கதை ஆகப்போவுது இன்னேன். நீ கேக்கல்லை. முன்னைப் போல ஜெயமாயிடுச்சுன்னா சொல்லிக்கலாமுன்னு பாத்தே. இப்பொ ? என்னதான் ஒண்ணாப் போயிட்டாலும் நீ ரெட்டை விளக்கு. ஒனக்குன்னு தனிப் பாதை, இருட்டு. நான் மாத்திரம் ஒசத்தியா? எனக்கும் தனி இருட்டு, தனிப் பாதை. ரெட்டை விளக்கு..நான் செஞ்சது தப்புத் தான். சிவனேன்னு நீ சொன்னபடி செஞ்சிருக்கணும். நான் என்ன பண்ண? பாட்டன் முப்பாட்டன் பாதை விட்டுப் போகமாட்டேன்னு புளியமரப் பிசாசுமாதிரி மனசிலே குந்திக்கிட்டு ஆடு ஆடுன்னு ஆடினா நான் என்ன பண்ண ? ஆனா, பாட்டன் முப்பாட்டன் இந்த மாதிரி செஞ்சானா இன்னு கேட்டா, பிசாசு வாயைத் தெறக்குதா? இருக்கிறது ஒரு மனசு. இதுக்குள்ளார தொண்ணூத்தி எட்டு திருட்டுத்தனம். விபூதி பூசிக்கிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டா என்ன ? வெறும் நெத்தியோடெ ஞாயித்துக் கிழமை தேவாலயத்திலே மண்டி இட்டா என்ன? ஆத்துத் தண்ணி கடல்லே விழாமெப் போயிடுமா?… இந்தத்தெளிவு அப்பொ வந்திருந்தா? ஆனா இருட்டுக்கப்பறந்தானே நிலம் தெளியுது? நீயாவது தைரியமாத் துணிஞ்சு வீட்டி லேயே வச்சுக்கிட்டயே. கோடி வரையிலே துணிஞ்சுட வேண்டாம். பாதி சுரைக்காய் விதைக்கு வச்சுக்கிட்டே.’ 

மிடுக்காக வேறு இளைஞர்கள் தெருவில் சென்று கொண்டிருந்தனர். 

“இதோ உக்காந்திருக்காரே இவரைப் பாத்தியா?” 

“ஆமாம். வயசென்ன இருக்கும் ?” 

“நாப்பது முப்பத்தி அஞ்சு இருக்கும்.” 

“மொகம் முறுக்கான முகம்- சவுங்கிக் கிடக்குதே!” 

“அவருக்குப் பெரிய இடி. உனக்குத் தெரியாதே அவரை?” 

“தெரியாதே.’ 

”அவரைப்பத்திக் கேள்விப்பட்டதில்லே?” 

“நீ மறந்தூட்டே. இந்தத் தெருவுக்கு வந்து மூணு மாசந்தானே ஆவுது P பக்கத்து வீடுன்னா எதுனாச்சும் தெரிஞ்சிருக்கும். இவரைப் பார்த்ததே இல்லை. இப்பத் தான் பாக்கறேன்.” 

“ஆமாமா, மறந்தூட்டேன். இவருக்கு ஒரு அதிஷ்டம் அடிச்சுது பாரு.” 

“எவ்வளவு, அம்பதினாயிரம் இருக்குமா?” 

“அட நீ ஒண்ணு. அதிஷ்டம்னா பணந்தானா? இந்த ஊட்டுலே ஒரு பொம்பிள்ளை இருந்தாளே – பாத்திருக்கே இல்லே?” 

“மரம் தழஞ்ச குளம்மாதிரி கண்ணு இருக்குமே- அந்தப் பொம்பிள்ளை தானே?” 

“ஆமாமா ; அது ஒரு கதை. இந்தம்மா ஒரு கிறிஸ்தவம் பொம்பிள்ளை.” 

“அப்படியா ! இவரு ? இவருக்கு வயசு குறைவா இருக்கும் போலத் தோணுதே.” 

“அப்படித்தான். இவரு நம்மடவரு. இவருக்கும் பெரிய கண்டிராக்டர் கிட்டே உதவி ஆள்வேலை. கட்டிடங்கள் மேல்பார்வை செஞ்சுக்கிட்டிருந்தாரு. அப்பொ… எதிர்த்தாப்போலப் பழைய வீட்டை இடிச்சுக் கட்ட ஆரம்பிச்சாங்க. அப்பொ எப்படியோ இவுங்க ரெண்டு பேருக்கும் பத்திக்கிச்சு. கொஞ்சநாள் கிரமிச்சு இந்தப் பொம்பிள்ளை ஊட்டு ஆளோடிலே உக்காந்துக்கிட்டு மேல் பார்வை பார்க்க ஆரம்பிச்சாரு. அதுக்கப்பறம் அப்பப்பொ இந்த ஊட்டிலேயே தூங்கிட்டுக் காலையிலே பல் தேப்பாரு. நான் பார்த்திருக்கிறேன். அதுக்குப் பிறவு நடந்ததுதான் பெரிய சமாசாரம். கிறிஸ்தவப் பொம்பிள்ளை ஹிந்து வோடே எழயறது அந்தப் பொம்பிள்ளை உறமுறைக்குத் தெரிஞ்சு போச்சு. பொம்பிள்ளைக்கு அப்பன் ஆயா போயிட் டாங்க. புருசன்காரனும் போன லக்குத் தெரியல்லே. அண்ணன் தம்பி உண்டுன்னாங்க, இலலேன்னாங்க. அக்கரைச் சீமையிலே இருக்காங்கன்னாங்க. கொடியிலே எப்பிடி எப்பிடியோ வெடிக்குமே அந்த மாதிரி ஆளுக்கு ஒண்ணாச் சொன்னாங்க.இப்படியே விசயம் கசமுசாவாக் கிடந்துச்சு. மண்ணுக்குள்ளே வெரையைப் போட்டா இருட்டிலே என்ன நடக்குதுன்னு நமக்குத் தெரியுதா? முளை விட்டாத். தெரியும் – அவ்வளவுதான். அந்த மாதிரி…இதோ மூஞ்சி யிலே வெட்டுக்காயம் பாத்தியா? இது முந்தி இல்லே.” 

“வாழைப் பூக் கணக்கால்ல இருக்கு ! பலமாண வெட்டு.” 

“பலந்தான். ஒருநாள் ராவிலே சந்தணம் பிள்ளையை யாரோ வெட்டிப்புட்டு ஓடிட்டாங்க. அப்புறம் யாரோ ஆஸ்பத்திரியிலே சேத்தாங்க. சாமி புண்ணியத்துலே வெட்டு ஆறிப்போச்சு. அப்பொ அடிச்சுது பாரு அதிஷ்டம் அதிலே இருந்து அவரு இந்த ஊட்டோடேயே வந்து இருந்தூட்டாரு. ஆஸ்பத்திரிக்கு ஆள் வச்சு அவரை அனுப் பிச்சது இந்தப் பொம்பிள்ளை தானுங்க.” 

“நீ சொல்றாப்போல இதுவும் ஒரு அதிஷ்டந்தான். நமக்கு அடிக்குதா பாரேன்!……நானூறு பேருக்கு மேலே இங்கே தயாராகுமே.” 

“நீ ஒண்ணு. தேக்சா ஒண்ணுக்கு இருநூறு பேர் கணக்கு. மூணு தேக்சாவுக்குப் பாத்துக்க.” 

“இந்த மேஜை நாக்காலி எதுக்கு ?” 

“பெரிய மனுஷங்க சாப்பிட பெரிய கண்டிராக்டர் ஆள் இல்லே. பாக்கியைப் பாடி பரதேசிக்குப் போடு வாங்க.” 

“எதோ உலகத்திலே நடக்குது, நடந்துகிட்டே இருக்குது. எந்தப் பேர் வச்சாவது ஏழை பாழைங்களுக்கு ஒரு கவளம் கிடைச்சாச் சொர்க்கம்.” 

அவர்கள் நிழல் நகர்ந்த பிறகுதான் யாரோ தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த அரை நினைப்பு, சந்தணம் பிள்ளையைத் திடுக்கிடும்படி எழுப்பிற்று. தலை நிமிர்த்திப் பார்த்தார். அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். காட்டுத் தீப்போல அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. கொள்ளிவாய்ப் பிசாசுகள் கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு மெளனமாய்க் கூத்தடிப்பதைப் போல் சமையல் காரர்களுடைய கையும் காலும் பக்கத்துச்சுவரில் நிழல் களும் ஆடிக்கொண்டிருந்தன. நெருப்பு வெளிச்சத்தில் வேர்வை மின்னிற்று. தேக்சாக்களிலிருந்து யாரோ பெரிய நாட்டுச் சுருட்டைக் குடிப்பதுபோல் புகை விட்டு விட்டு வந்துகொண்டிருந்தது. அவர் இதை எல்லாம் பார்த்தும் நெருப்பையோ தவசிப்பிள்ளைகளையோ மனத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. மறுபடி உள்ளே ஆழ்ந்து விட்டார். 

‘ரெண்டு நாளா மொதமொதல்லே- என்னெக் குறி யாப் பாத்துகிட்டு நின்னே. எதிர்த்தாப்போல வேலெ நடக்கிற இடத்திலே பொழுதினிக்கும் நின்னுக்கிட்டுத் தான் இருந்தேன். மாடியிலே நீ அப்பொ அப்பொ கண் ணிலே பட்டே. என் ஜோலி எனக்கு. உன் ஜோலி ஒனக் குன்னு நெனைச்சுக்கிட்டுச் சும்மா இருந்துட்டேன். வேறெ ஒண்ணும் தோணல்லை. தேனைத் தேடி வண்டு போனா, சகஜம். வண்டைத் தேடித் தேன் போனா என்ன புரியும்! அந்த மாதிரி ரெண்டு நாளா எனக்குப் புரியல்லே. மூணாம் நாள்தான் மனசிலே வெடிச்சுது. மாடிக் கைப்பிடி சுவத் திலே ஒரு தொடையைத் தூக்கி ஒயிலா வச்சுக்கிட்டு இருந்தே. நைஸ்துணியிலே தொடை நிழல்கூடத் தெரிஞ் சுது. அப்பொ உன் மேல்துணி திடீரென்று பச்சையாய் விசிறித்து. காத்தையும் காணோம்; ஒண்ணையும் காணோம். இதெ நெனைச்சப்பொ திக்குன்னு மனசிலே பத்திக்கிடுச்சு. பத்திக்கிட்ட உடனே எனக்கே புரியல்லெ. ஒன் கண்ணைப் பார்த்தேன். பூத்தேன், முழுகினேன். காத்து அடிக்காமெ புடவைத் தலைப்புப் பழைய இடத்திலே போய் ஒட்டிக் குச்சு. அதிலேருந்து நான் ஒட்டிக்கிட்டேன். நீ ஒட்டிக் கிட்டியா? பசை காஞ்சிருந்தா தாள் விழுந்து போவும். நீ ஒண்ணும் காஞ்ச பசையில்லே. பன்னீர் மணம் மாதிரி என்னுள்ளே பூந்து சுழண்டுக்கிட்டுத்தான் இருந்தே. ஒட்டினதைக் கிளிக்கிற பசங்க இருக்கத்தான் இருக்கறாங்க. சுவத்திலே ஒட்டி இருக்கிற விளம்பரத்தைப் பாரேன். எத்தினி கிழிஞ்சு தொங்குது? பிசாசுப் பயங்க வேலை. பிசாசுக்காத்து ஒண்ணு அடிச்சுதே, நீயும் கிழிஞ்சு தொங் கினே. இந்தக் காத்தெப்பத்தி நீ மொதல்ல எண்ணல்லே. ஒங்கடவங்களுக்கு எம்மேலே காரம். நம்மடவ பொம்பிளையை இவன் வந்து தொடவாவது?….. இந்த மனுசங் களைப் போல மோசம் பார்த்ததே இல்லை. அவனவன் ஜோலியைத் தவிர எல்லா வேலையும் கவனிக்கிறான்கள். அதுக்கு என்னென்னவோ பூசி மொழுகிப் பேர் வக்கறான். “அவளா – வெறும் புறம்போக்குடா!” ஆனா, புறம்போக்கு வனுக்குக் கிடைக்கல்லேன்னு சாத்திரத்தை வேஷம் கட்டிக்கிட்டு ஆடறான்க. உறவுங்க உன்னை வந்து மிரட்டி னப்பொ நீ கிழிஞ்சு போயிட்டே. ஏன் நம்மாலே ஒனக்கு வம்புன்னு நான் ஒதுங்கி நின்னேன் பாரு-அது அப்பொத் தான். அப்பறம் ஒரு பெரிய காத்து அடிக்குது. தாள் ஆடுது. காத்து நிக்குது. தாளும் நிக்குது. மறுபடி காத்திலே ஆடுது. அதுக்காக ஒன்னைக் குத்தம் சொல்லல்லே. சொல்லலாமா? அப்பொ எல்லாம் நீ மாடியிலே வந்து நிக்கறதும் இல்லே. கண்ணுலே தட்டுப்படறதும் இல்லே. பட்டாலும் பாக்காமே போறே. நான் மாத்திரம் என்ன? நானும் நிமிந்து பாக்கல்லே… நாயந்தானேன்னு நெனைச் சுக்கிட்டேன்…ஆனா அப்புறந்தானே நீ யாருன்னு புரிஞ்சுது? அம்மாசி இருட்டிலே என்னை வெட்டினானுங்களே- நீ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சியே – அதுக்கப்புறம் புரிஞ்சு போச்சு. ஒன்னோடெயே வந்து இருந்தூடுன்னு ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாப்பாள் போட்டியே, அப்பொத்தான் சத்யமாச் சொல்றேன். வெட்டுக்கத்தி மாதிரி உன் புருவம் சும்மா அமஞ்சு இருக்கல்லேன்னு புரிஞ்சுது.” 

“ஏண்டா தம்பி!” 

சந்தணம் பிள்ளை உலுக்கி விழுந்து கண் திறந்தார். அடுப்புப் பிசாசு அடங்கிவிட்டது. தேக்சாக்களிலிருந்தும் புகை அடங்கிவிட்டது. ஆனால் பிரியாணியின் கண்காணாக் குளத்திலிருந்து மணம் விரிந்து பரவிக்கொண்டிருந்தது. 

ஏண்டா தம்பி என்று அழைத்தவள், ரோஸ்மேரியின் எட்டிய உறவு சூசி. இந்த விஷயத்தில் அவள் நிலை வழுக்கி நழுவும் வரால் போலிருந்தது. முதலில் மற்ற உறவினர் களுடன் சேர்ந்து ஆட்சேபித்தாள். ரோஸ்மேரியுடன் ஒன்றவில்லை. ‘சரி முடியல்லே. நம்மடவங்கள்ளே முறுக்கு மீசை நறுக்கு ஆள் இல்லாமெ போச்சா? அந்த ஜாதி ஆளா வேணும்? அந்த ஜாதி சமாசாரம் அவளுக்கு என்ன தெரி யும்?… வேடுகட்டின வெல்லப் பானையிலே எப்படி நுழைய லாமின்னு எறும்பு அலையல்லே?…உன் சொத்தைக் கிளப் பறதிலேதான் நோட்டம். இது உனக்குத் தெரியல்லே. உருகி உசுரை ஒம்மேலே விட்டூட்டான்னுட்டு அப்பாவி நெனைச்சு ஏமாந்து பூட்டே.’ 

அமாவாசை இருட்டில் உறவினர்கள் சந்தணத்தின் தலைக்குப் பாக்குவைக்க எண்ணிப்போய் வெட்டுக்காயமாய் முடிந்தபிறகு, ரோஸ்மேரி துணிந்து காயத்துடன் கிடந்த வனுக்கு ஆள்வைத்து ஆஸ்பத்திரியில் வைத்தியம் செய்து வீட்டோடு வைத்துக் கொண்ட பிறகு காற்று மாறி விட்டது. ராகம் புரண்டு விட்டது. அரிவாளை எடுத்து இருட்டில் வெட்டுவதற்கு ஏசு பிதா மேலே பழியா என்று சொல்லிக்கொண்டு ரோஸ்மேரிக்கும் சந்தணத்திற்கும் ஆதரவாகச் சூசி மாறிவிட்டாள். பொறுக்கித்தின்னி என்று உறவினர்கள் அதற்காக அவளுக்குப் பட்டம் சூட்டினார்கள். இப்பொழுது ரோஸ் மேரியின் அந்தரங்க மூத்த கிழவி சூசி. 

ஏண்டா தம்பி என்று சூசி எழுப்பியபின் சந்தணம் தெளிவடைந்தார். இன்னம் எத்தினி நாள் இப்பிடி அவளையே நெனைச்சுக்கிட்டு கெடப்பே? எல்லாம் சிட்டுக் குருவி மாதிரிதான் இந்த ஜன்னல்லே நுழைஞ்சு அந்த வாசலாலே பறந்து ஓடற கதைதான். ஹால்லேயே எப்பவும் குந்திக்கிட்டு இருக்கும்னு நெனைச்சியா? அன்னிக்கு இருந்த இருப்பிலே நீ கூடப் போயிடுவேன்னு நெனைச்சுப்புட்டோம். இந்த ஆளுங்க யாராவது உனக்கு ஏதாவது சொன்னாங்களா? தெரியுமே-சொல்லி இருக்க மாட்டாங்க. கல்லறையிலே இறக்கி மண்ணைப் போட்டு மூடற மட்டும் நீ எல்லாரையும் போலத்தான் இருந்தே. மத்தவங்க ரெண் டொரு பேச்சுப் பேசிக்கிட்டாங்க நீ அதொண்ணும். பேசல்லே. அப்பறம் எல்லாரும் திரும்பினோமே நீ திடீருன்னு உக்காந்து பூட்டே. கண்ணு நிலைகுத்திப் போச்சு தம்பி தம்பின்னு கூப்பிடறாங்க. ஊஹும், அசையல்லெ. இதான் வாழ்வுன்னு கையைப் பிடிச்சு எழுப்பறாங்க. நீ சவுங்கிச் சவுங்கி விழறே. நான் சொன்னேன் – தம்பியைப் போக்குலே உட்டுடூங்க; அப்பாலே நான் வந்து அழைச்சா றேன் இன்னேன். அப்பாலே விளக்கேத்தரப்போ வந்தேன். கண்ணைத் திறந்துக்கிட்டுத்தான் உக்காந்திருந்தே; நெனைப்பிருக்கா?” 

“பனி மூட்டத்திலே கட்டிடம் தெரியுதில்ல-அந்தக் கணக்கா இருக்கு.” 

“இருக்கட்டும். தம்பி வா, போவலாம்னேன். நீ என்ன சொன்னே,தெரியுமா?” 

“அதெல்லாம் நெனைப்பில்லே.” 

“நீ சொன்னே- இதோ போவப்போறேனே; என்னை ஏன் ஒன்கூட வரச் சொல்றே இன்னு கேட்டே. இரண்டு மூணு தரம் கூப்பிட்டேன். அப்பறம் பதில் வரல்ல. கண் மூடிப் போச்சு. வீண் கலாபுலா பண்ணப்படாதுன்னு ஊட்டுக்குப் போயிட்டேன். மூணு நாளைக்குப் பொறவு கல்லறைத் தோட்டக்காரரு உன்னை ஊட்டிலே அழைச் சாந்து விட்டாரு. மூணு நாளா சோறு தண்ணி இல்லி யாம். மரநிழல்லே குந்தறதும் படுக்கறதுந்தானாம். அப்பொ எல்லாம் உனக்கு எப்படி இருந்துச்சோ?” 

“எனக்கு ஒண்ணும் நெனைப்பில்லே.” 

“போவட்டும். அப்பறம் நீ இருந்த மாதிரியிலே வாசம் தேயறாப்போலத் தோணித்து. இப்பொப் பாத்தா வாசம் தேயல்லேன்னு காட்றியே. நாக்காலி எல்லாம் எடுத்துப் போடச் சொல்லவேணாம்? சிநேகிதங்க எல்லாம் வந்தூடு வாங்க, விருந்தாவணும். அதெப்படிக்கணும். அவுங்க வந்து பாக்கறப்பொவும் இப்படியே குந்திக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?” 

“நாக்காலி எல்லாம் எடுத்துப் போடச் சொல்லு, தெரியாதா ஒனக்கு? இதோ வாரேன்.” 

அவள் வாசம் என்ற சொல்லைச் சொன்னதும் சந்தணம் பிள்ளை மனத்தில் முரண்பட்ட இரு விளைவுகள் உண்டாயின. முதல் விளைவைக் கண்டு அவளுக்கே தைரியமாக இருந்தது. அவர் சுறுசுறுப்பாக எழுந்து தவசிப்பிள்ளையிடமிருந்து ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக்கொண்டு முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டார். மேற்கொண்டு ஏற்பாடுகளைக் கவனிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது, “சோமுவை விட்டு நாற்காலி மேஜையை வரி சையாய் அழகாகப் போடச் சொல்லு” என்று சொல்லி விட்டு விருக்கென்று மாடிக்குப் போய்விட்டார். 

மாடிதான் அவர்கள் தனி அறை. அறைக்குள் சென் றதும் இன்னதிலிருந்து வருகிறதென்று தெரியாத வாசனை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அவர் ஒரு ஞாபகத்தில் அறைக்கு வருவதையே நிறுத்தி வைத்திருந்தார். அவர் இருந்ததொழுது வாசனை பெரிதாகத் தோன்றவில்லை. இப்பொழுது அது வலுவாகத் தாக்கிற்று. அவள் உப யோகித்து வந்த சிறிய சுவர் அலமாரியின் கதவுகள் வாயைத் திறந்ததுபோல் விலகி இருந்தன. வாசம் ‘இரா ராணி’ மலரைப்போல் கனமாகப் புலன்களை அழுத்தி முழு கடிப்பதாக வீசிற்று. அவள் இருந்தபொழுது அந்த அல மாரியைத் திறந்து பார்த்ததில்லை. ஆனால் இப்பொழுது அவள் இல்லை. மணம் மட்டும் இருந்தது. என்னதான் அப்படி அலமாரியில் இருந்ததென்று திறந்து பார்த்தார். அலமாரியில் அழகு படுத்திக் கொள்ளும் சாதனங்கள் எல்லாம் இருந்தன. ஆனால் வாசனைச் சாமான்கள் பாட்டில் எல்லாம் காலியாய்க் கிடந்தன. நாற்பத்தைந்து நாளா யின. பல பாட்டில் மூடிகளைக்கூடக் காணோம். ஆனால் மணம் மட்டும் வந்து கொண்டிருந்தது. இந்த மணம் இந்த அலமாரியில் இல்லை. அவளிடமிருந்துதான் மிதந்து வந்து விரிந்திருக்கவேண்டும். ‘ரோஸ்மேரி, வந்துவிட்டாயா? நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியுமா?-நீ இல்லாமல் நான் இருக்க முடியு மா? எங்கேயும் முடியாது.’ 

மாடிப்படியில் காலடி ஓசை கேட்டது. ஒசை கேட் டதுமே நிழலைக் கண்டு மீன்கள் நெளிந்து மறைவதுபோல் மணம் மறைந்து விட்டது. 

“வாஸ்தவமா அறை மணக்குதா?” 

“ஏன் தம்பி, கீழே படியிலே உக்காந்தது பத்தாதுன்னு மாடி ரூம்லே வந்து குந்திக்கிட்டியா? எல்லாரும் வர ஆரம் பிச்சுட்டாங்க. இல்லேன்னா இந்த ஏற்பாடு பண்ணாமெ மரியாதையா இருந்திருக்கணும்.” 

சந்தணம் தலையை ஒரு தடவை சிலுப்பி அவள்கூடக் கீழே இறங்கிச் சென்றார். 

கீழே வரிசையாக முன் ஹாலில் நாற்காலிகள் மேஜையை ஒட்டிப் போட்டிருந்தன. பல நண்பர்களும் விருந்தாளிகளும் வந்து மூலைக்கு ஒரு நாற்காலியில் உட் கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை வரவேற் காத குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருந்தது. 

“இவங்களுக்கு வெள்ளித்தட்டு, சந்தணக்கிண்ணி எடுத்துக் கொடுக்க மாடிக்குப் போயிருந்தேன். மன்னிச்சுக் கோணும்.” 

“பரவால்லே, சம்பந்தியா? வேத்தாளா? உக்காரேன்.” 

“இல்லே, இதோ வந்தூட்டேன். இன்னம் கொஞ்சம் வேலை; அப்பறம் இங்கேதான்.” 

சந்தணத்தின் முதுகு உள்ளே நுழைவதற்காகக் காத் துக்கொண்டிருந்தவர்போல் வந்தவர்களில்ஒருவர்,”இதெல் லாம் எப்படின்னு யாருக்காவது உண்மை தெரியுமா?” என்று பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். ஒருவரும் சரியாகப் பதில் சொல்ல விரும்பவில்லையோ அல்லது தெரியாதோ, சும்மா இருந்தனர். கேட்டவர் தமக்குத் தெரியும் என்று சொன்னார். 

“நான் எல்லாம் ஆராய்ச்சி செஞ்சுப்புட்டேன். அந்த டாக்டரைக்கூட விசாரிச்சுப்புட்டேன். அன்னிக்குச் சாயங் காலம் நாலு மணிக்கு இந்தப் பொம்பிள்ளை திடீருன்னு உடம்பை என்னவோ பண்ணுதுன்னாளாம். வேலைக்காரிங்க கேட்டதுக்கு அவரை அழைச்சாங்க இன்னுட்டா. சூசியுந் தான் இருந்தா.அங்கே இங்கே தேடி அலைஞ்சு சந்தணத்தை அழைச்சாந்தாங்க. அவரு மாடிக்குப் போயிட்டாரு. வேலைக்காரி ஒருத்தி மாடிப்படியிலே நின்னுக்கிட்டிருந்தா. அவ சொன்னதைத்தான் சொல்றேன். அந்தப் பொம் பிள்ளை மூணுமாசமா குளிக்கல்லியாம். அது அவருக்குக் கூடச் சரியாத் தெரியாது. முத்திப்போன அவமானமாப் போயிடப்போவுதேன்னு இந்தப் பொம்பிள்ளை அதைக் கரைக்க எதையோ செஞ்சிட்டுது. யார் சொன்ன மருந்தோ பச்சிலையோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். அது வேலை செய்ய ஆரம்பிச்ச உடனே அவளாலே வேதனை தாங்கல்லே. மருந்தை எப்பொ தின்னதோ யார் கண்டா ? மூடி மூடிப் பாத்திருக்கு. முடியாதபோது சந்தணத்துக்குச் சொல்லி அனுப்பிச்சூட்டுது . ‘அடி ரோஸ் மேரி, குடியைக் கெடுத்துப் புட்டியேன்னு. கட்டிக்கிட்டு முத்தம் கொடுத்தாராம்- அவ சொன்னா. அப்புறம் உளுந்தடிச்சுப் போய் ஒரு டாக்சி கொணாந்து அவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனாரு. இதைப் பார்த்துப் பக்கத்து ஊட்டுக்காரங்க பதறிப் போயிட்டாங்க. நான் பாத்தேனே டாக்டரு அவர் போன வாரந்தான் சொன்னாரு. பொம்பிள்ளை ஆஸ்பத்திரிக்கு வந்தப்போ டாக்டர் வார்டைச் சுத்திக் கிட்டிருந்தாரு. அவசர ரூமில் இருக்க வேண்டிய டாக்டரும் வேறெ ஏதோ அர்ஜன்டாக் கவனிச்சுக்கிட்டிருந்தாரு. அவங்க வந்து இந்தப் பொம்பிள்ளையைப்பாத்தூட்டு எதோ ஊசி போட்டாங்களாம். அவசர வார்டிலே சேத்தாங் களாம். சந்தணம் அங்கேயே ஆஸ்பத்திரி மரத்தண்டை சிமிட்டி பெஞ்சியில் உட்காந்திருந்தாரு. ஊசிக்கு வேதனை மசியல்லே. எட்டுஎட்டரை மணிக்கு இன்னொரு ஊசிகூடப் போட்டாங்க. ஒண்ணும் கேக்கல்லே.ஒம்பதுஒம்பதேகாலுக் குச் சவமாயிட்டுது. எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லிட் டாங்க அப்புறம் என்ன பண்றது ? உண்மையை உலகத்துக் குச் சொல்ல முடியுதா? டாக்டரை எப்படியோ சரி பண்ணிக் கிட்டாரு. ஆஸ்பத்திரிப் பொஸ்தகத்திலே மாரடைப்புன்னு எழுதி வச்சூட்டாரு. அப்புறம் ஊட்டுக்குக் கொணாந்தூட்டாரு. 

“மாரடைப்பான்னு தெருவிலே கும்பல் சேந்து போச்சு. அப்புறம் எல்லாம் நடந்துச்சு-ராசோபசாரமாக. கல்லறையிலே வக்கறவரையிலும் பாறைமாதிரி இருந் தவரு பக்கத்திலே ஒடற தண்ணீமாதிரி ஆயிட்டாரு. அவர் மூஞ்சியே அப்புறம் மாறிப்போச்சு. நம்ப சந்தணம் இன்னு அப்பறம் சொன்னாத்தான் தெரியும் – அப்பிடி மாறிப் போயிட்டாரு. இப்பொ அவ சப் ரிஜிஸ்திரார் ஆபிசிலே எழுதிவச்சிருந்த உயிலைப் போன வாரந்தான் வாங்கிட்டு வந்தாரு. என்ன தோணிச்சோ நம்ப எதிரிலே அதைப் பிரிச்சுப் படிக்கணுமுன்னு நெனைச்சுப்புட்டாரு.” 

பேச்சை முடித்தாரா முடிக்கவில்லையா என்று தெரிய வில்லை. அதற்குள், “கன்டிராக்டர் வந்தூட்டாரு” என்ற குரல் எழுந்தது. சந்தணம் அவரை வரவேற்று நடு நாற் காலியில் உட்கார்த்தி வைத்தார். அவருடன் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு எல்லோரையும் நாற்காலிகளில் அமரச் செய்தார். 

சந்தணம் பிள்ளை ஜாடை காட்டினார். தவசிப்பிள்ளைகள் சுறுசுறுப்பாகப் பரிமாறினார்கள். விருந்து முடிந்த பிறகு மாடித் திறந்த வெளிக்கு எல்லோருமாகச் சென்றனர். சந்தனம், தாம்பூலம் வழங்கப்பட்ட பிறகு முத்திரையிட்ட உயிலைச் சந்தணம் கன்டிராக்டர் கையில் கொடுத்தார். அவர் உறையை உடைத்துக் சடுதாசுகளைப் பிரித்துப் படித்தார். 

ரோஸ்மேரியின் உயில்! அவள் எழுதி வைத்து, சப் ரிஜிஸ்திராரிடம் ஒப்படைத்திருந்தது; சந்தணத்திற்கும் சாட்சிகளுக்கும் சூசிக்கும் மட்டும் தெரியும். ஆனால் உயிலின் ஷரத்தில் வியப்படையும்படி ஒன்றும் இல்லை. தன் சொத் தில் ஒரு பகுதியைச் சந்தணத்திற்கும் மற்றொரு பாதியில் முக்கால் பங்கை உள்ளூர்க் கிறிஸ்தவத் தேவாலயத்திற்கும் பாக்கியைச் சூசிக்கும் எழுதி வைத்திருந்தாள். 

கன்டிராக்டர் உயிலைப் படிக்கக் கேட்டவர்கள் சூசிக்கு ஒரு பங்கு கிடைத்ததைப் பற்றித்தான் கொஞ்சம் பேசிக் கொண்டார்கள். பாக்கி ஷரத்துகளைப்பற்றி விசேஷமாகப் பேசவில்லை. நியாயந்தானே? இதையும் விடவில்லை, அதை யும் விடவில்லை என்றார்கள். 

சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் கன்டிராக்டர் புறப்பட்டுப் போனவுடன் ஒவ்வொருவராக விடை பெற்றுச் சென்றனர். 

தேக்சாக்களை ஆட்கள் பின்புறம் எடுத்துச் சென்றனர். ஆட்கள் நாற்காலிகளை மடக்கி ‘வானி’ல் ஏற்ற ஆரம்பித் தனர். மேஜைகளும் நகர்ந்துவிட்டன. ஹால் வெறிச் சென்றிருந்தது. சூசி உள்ளே இருந்தாள். 

சந்தணம் நேரே மாடிப்படி ஏறிச் சென்றார். 

வீட்டின் உட்புறத்திலிருந்து வந்த சூசி சந்தணத்தைத் தேடினாள். காணவில்லை. உடனே ஏதோ நினைப்புவந்த வளாய் மாடிக்குப் போனாள். ஆனால் நேரே அறைக்குள் செல்லவில்லை. வெளிப்புற வராந்தாவிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தாள். கட்டிலில் கால்தெரிந்த விதத்தைக் கொண் டு சந்தணம் மெத்தையில் சாய்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று கருதினாள். ‘உயிலைப் படித்தார்கள். இவன் ஒன்றுமே சொல்லவில்லையே ! உயில் நம்மை மறக்கவில்லை. அவனை மறக்கவில்லை. தேவாலயத்தையும் மறக்கவில்லை. இதெல்லாம் அவனுக்கு ஒப்புதல்தானா ? அப்படி என்றால் ஏன் மாடிக்கு வந்துவிட்டான்?’ 

மெதுவாக அறைக்குள் சென்று சந்தணத்துடன் பேச்சுக் கொடுத்தாள். இந்த விஷயத்தைப்பற்றிப் பேச வில்லை. அவனாகச் சொல்லுவான் என்று நினைத்துக்கொண் டாள். 

“தவிசுப் பிள்ளைங்க வீட்டுக்குப் போகட்டுமான்னு கேக்கறாங்க.” 

“போகட்டும். பாக்கிப் பணம் காலம்பர வந்து வாங்கிட்டுப் போகச்சொல்லு… பாத்தியா, உன்னை அவ மறக்கல்லை.” 

அவளுக்கு அந்தப் பேச்சைக் கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டது. “நூத்திலே ஒருத்தி” என்று குரல் தழுக்கக் கண்ணீர் வடியவிட்டாள். 

“அவளாலே முடிஞ்சதைச் செஞ்சிட்டா” என்றார் சந்தணம். அதற்குமேல் பேசவில்லை. ஏதோ நினைப்பில் ஆழ்ந்துவிட்டார். 

யாரைப்பற்றி அவர் குறிப்பிட்டார் என்று அவளுக்குத் தெரியவில்லை. பெரும் அலை ஒன்று அடித்துக் காலின் கீழுள்ள மண்ணை அரித்துத் திரும்பும்பொழுது அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டுபோவதுபோல் சூசிக்கு இருந்தது. இன்னம் எதுவேனும் சொல்லுவானோ என்று சிறிது நின்று நின்று பார்த்தாள். சந்தணம் சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்ட பிறகு நிற்பதில் பயனில்லை என்று கீழே இறங்கிவிட்டாள். 


மறுநாள் காலை மணி எட்டு. அன்று அங்கே படுத்திருந்த சூசி, அத்தனை நேரமாகியும் சந்தணம் கீழே வரவில்லை என்பதைக் கவனித்தாள். அவளுக்கு அது புதுமையாக இருந்தது. காலைக் காக்கை கத்திச் செல்லும் பொழுது கீழே இறங்கிவரும் வழக்கம் ஆச்சே! சிறிது கலவரப்பட்டு மாடி ஏறிச்சென்றாள். படுக்கை வெறிச் சென்றிருந்தது. அறையில் எரிந்துகொண்டிருந்த இரட்டை விளக்கில் ஒன்றுதான் எரிந்து கொண்டிருந்தது. திடுக்கிட் டாள். கட்டிலை நெருங்கிப் பார்த்தாள். ஒரு கவரும் ஒரு துண்டுக் கடுதாசும் இருந்தன. 

சூசிக்கு, 

இவ்வளவு உதவியாக இருந்ததற்கு வந்தனம். சந்தோஷம். சொத்துக்காக வந்தேன்னு ரொம்பபேரு நெனைச்சுக்கிட்டாங்க. மொதல்லே ஒரு தப்புப் பண்ணிப் பிட்டேன். அதனாலே அப்படிப் பேச்சு. இப்படித்தான் இனிமேல் திருத்தணும். இந்தக் கவரைத் தேவாலயப் பாதிரியாரிடம் கொடுத்துடு. போகிற இடத்திலே இரட்டை விளக்கில்லை. ஒண்ணே தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *