இயற்கையின் சிரிப்பு
(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழகும் சுத்தமும் நிறைந்த அந்த அறையின் தரையில் ஒரு இடத்தில் நீர்ச் சதசதப்பும் புழுக்கைகளும் அசிங்கக் கறைகளால் பார்வையை உறுத்தின.
காலையில் கண் விழித்ததும் மாதவன் பார்வையில் அது தான் முதலில் பட்டது.
சீ, என்ன அசிங்கம்! வவ்வால் வந்திருக்கு.
அந்த இடத்துக்கு நேரே உயரே கட்டை வெளியை அவன் கவனித்தான். இப்போது அங்கே எதுவும் இல்லை.
ராத்திரி வந்திருக்கு. காலை வெளிச்சம் வந்ததும் பறந்தோடிப் போயிருக்கும். நல்லா விடியறதுக்கு முன்னாடியே போயிருக்கும்.
துடைப்பத்தை எடுத்து அந்த இடத்தைப் பெருக்கினான். புழுக்கைகளைத்தான் அள்ளி வெளியே எறிய முடிந்தது. மூத்திரக் கறை திட்டுதிட்டாக அந்த இடத்தை அசிங்கப் படுத்திக் கொண்டுதான் இருந்தது.
மாதவனுக்கு சுத்தம் மிக முக்கியமான விஷயம். சூழ் நிலையை சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்வதில் அவன் அதிக அக்கறை காட்டுவான். மேஜை நாற்காலிகளை, புத்தகங்களை, பொருட்களை எல்லாம் தினந்தோறும் பலதடவைகள் துணியால் தட்டித் தட்டி தூசி போகும்படி பண்ணுவதில் கருத்தாக இருப்பான். சுவரில் தொங்கிய படங்களை சில நாட்களுக்கு ஒருமுறை துடைத்துப் பளிச்சிட வைப்பான். சிறு நூலாம்படை (ஒட்டடை) கண்ணில் பட் டால் போதும்; உடனே ஒரு கம்பை எடுத்து வந்து அதை அகற்றி விட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பான். தரையில் நூலோ, காகிதத்துண்டோ, வேறு எதுவுமோ கிடந்துவிட் டாலோ அவன் மனசு சங்கடப்படும். குனிந்து அதை எடுத்து அப்புறப்படுத்தினால்தான் அமைதி அடையும்.
தரையில் வவ்வால் ஏற்படுத்திய அசிங்கக் கறை அவன் மனசைக் கஷ்டப்படுத்தாமல் இருக்குமா? நேரம் ஆக ஆக, ஈரம் உலர்ந்து விட்ட போதிலும், அந்த இடத்தில் வெள்ளைத் திட்டுகள், ‘உப்பு கலிந்தது மாதிரி’, பரவிக்கிடந்தன.
மாதவனின் கண்கள் எதேச்சையாக அந்த இடத்தில் அவ்வப்போது மேய்ந்தன. மனம் குறுகுறுத்தது.
சீ, அசிங்கமா இருக்குதே… சனியன் புடிச்ச வவ்வால் இந்த அறைக்கு ஏன்வரணும் வேறே போக்கிடம் அதுக்கு இல்லாமலா பேச்சு?
அறைக்குள் வந்து, இரவு நேரத்தை போக்கிய வவ் வாலை அவன் பார்க்கவில்லை தான். ஆனாலும் அது வவ்வால் செய்த வேலையே என்பதை அவனுக்கு அனுபவ அறிவு உறுதியாக உணர்த்தியது. சில காலங்களில் அந்த அறைக்கு எலி வருவது உண்டு. எங்கிருந்தோ நெல்லை எடுத்து வந்து, புத்தக வரிசைகளுக்கு ஊடேயுள்ள இடுக்கு களில் புகுந்து கொரித்து விட்டு, உமியைப் போட்டு வைக் கும், புளுக்கைகளும் மூத்திரமும் சிந்தி, ரொம்ப நேரத்துக்கு ஒரு வித நெடி நிலவும்படி பண்ணிவிட்டுப் போயிருக்கும்.
ஆனால் இது எலியின் வேலை இல்லை. எலிப்புழுக் கைகள் இன்னும் பெரிதாய், பருமனாய் இருக்கும். எலி ஒதுக்கிடாமல், சந்து பொந்து இண்டு இடுக்கு என்று பம்மி யிருந்தது, இரை தின்று, கழித்து விட்டுப் போகும். இப்படி நட்டுநடுவிலே வெட்ட வெளியிலே தங்காது. இது வவ்வாலே தான்.
மறுநாளும் மூன்றாம் நாளும் மாதவன் இதையே எண்ணிக் கொண்டான்.
வவ்வால் ஏன் இந்த அறைக்கு வருகிறது? முன்பு திண்ணையில் ஒரு மூலையில் ஒண்டியிருப்பது வழக்கம். விடிந்து பார்த்தால் வவ்வால் இராது. கீழே அசிங்கமாய் ஈரமும் புழுக்கைகளும் படர்ந்து கிடக்கும்.
அதை விரட்டி அடிப்பதற்காக, உயரே விட்டத்தில் இலந்தை முள்ளை இலைகளோடு கட்டி வைத்தார்கள். வவ்வால் தொல்லை இல்லாது போயிற்று.
பிறகு, தொட்டிக்கட்டில் ஒரு இடத்தில் இரண்டு வவ் வால்கள் அடைந்தன. அந்தி நேரத்திலிருந்தே பறக்கும், கொசுக்கள் பூச்சிகளைப் பிடிப்பதற்காக. இரவு ஏழு ஏழரைக் குள் விளக்குகளை அணைத்து விடுவார்கள். வவ்வால்கள் வந்து தொங்கும். யாராவது எழுந்து விளக்கைப் போட்டால், விர்ரென்று பறந்து ஓடும். விளக்கேற்றாமலே இருட்டில் அந்தப்பக்கம் போனால், வவ்வால்கள் விஷ்ஷ் – விஷ்ஷ் என்று காற்றைக் கிழித்து ஓசைப்படுத்தியபடி சுற்றியும் சுழன்றும் ஏறியும் தாழ்ந்தும் பறந்து திரிவதை சிலசமயம் அறியமுடியும்.
தொட்டிக்கட்டுப் பக்கம் திறந்த வானவெளி இருக் கிறது, திண்ணையை அடுத்தும் திறந்த வெளிதான். அங்கெல்லாம் வவ்வால்கள் சஞ்சரிப்பது சரிதான். இந்த அறைக்குள் எதுக்காக வரவேண்டும்?
மாதவன் மனம் கேட்டுக் கொண்டது. அவனுக்கு பதிலும் புரிந்ததுதான்.
கொசுக்கள் நிறைய, ஒவ்வொன்றும் தண்டி தண்டியாய், எவ்வளவு பெரிசு! ஒவ்வொரு அறையிலும் கொசுக்கள் வாசம் செய்தன. அவற்றைப் பிடித்துத் தின்பதற்காக வவ்வால் வீட்டினுள், இருட்டில், அறைதோறும் சஞ்சரித்தது. இந்த அறைக்கும் வந்தது. இது ஒதுக்கமாய், அமைதியாய், ஆள் அரவமற்று இருந்தது. அது தங்குவதற்கு வசதியாகப் பட்டிருக்கும்.
வவ்வாலுக்கு வசதி; அவனுக்குத் தொல்லை.
ஒவ்வொரு சீசனில் ஒவ்வொன்று தொல்லை கொடுத் துக் கொண்டுதான் இருக்கிறது. நெல் இருக்கிற காலத்தில் எலி… குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கிற சீசனில் குருவி கள், வைக்கோலும் புல்லும் துரும்புகளும் கொண்டுவந்து அசிங்கப்படுத்தும். மழை பெய்தால், கறையான்கள் உபத் திரவம். எப்பவும் கொசுத் தொல்லை. அதோடு வவ்வால் வேறு.
மாதவன் அலுத்துக் கொண்டான், கொசுக்கடி தூக்கத் -பிர்ர் தைக் கெடுத்த ஒரு இரவில், அவனுக்கு மேலாக விர்ர் என்று சிறகோசை எழ வவ்வால் அறை நெடுகப் பறந்து திரிவதை அவன் உணர்ந்தான்.
இன்னிக்கு அதுக்கு நல்ல வேட்டைதான் என்று நினைப்பு அவன் மனசில் நெளிந்தது.
மறுநாள் காலையில், அறையில் அந்த இடம் ரொம்ப வும் அசுத்தப்பட்டிருந்தது. வழக்கத்தைவிட அதிகமான புழுக்கைகள், திட்டுதிட்டாய் ஈர நசநசப்பு.
மாதவனுக்கு அருவருப்பும் எரிச்சலும். அசிங்கம் புடிச்ச வவ்வாலை ஒழிச்சாகணுமே என்று அவன் மனம் கறுவியது.
அது தற்செயலான வாய்ப்புதான்.
அன்று இரவும் கொசுத் தொல்லை அதிகம். வெளியே நிலா ஒளி வெள்ளமாய் கொட்டிக் கிடந்தது. அதனால் கொசுக்கள் வீட்டின் இருட்டினுள் புகுந்து. இரைந்து கொண் டிருந்தன. உறங்குவோரைக் கடித்து இன்புற்றன.
மாதவனின் தூக்கம் கெட்டது. ஜன்னல் கதவுகள், அறைக்கதவு அனைத்தையும் சாத்தினால், கொசுக்கள் படை யெடுப்பது குறையும் என்று நினைத்தான். எழுந்து, அடுத்த அறையோடு இணைக்கும் பெரிய கதவை சாத்தினான். ஜன்னல் கதவையும் அடைத்தான்.
மனித நடமாட்டத்தை வவ்வால் உணர்ந்து கொண்ட தாய் தோன்றியது. அமைதியாய் விட்டத்தில் கட்டையைப் பற்றிக் கொண்டு தொங்கிய அது பதட்டமடைந்தது அதன் பறப்பில் புலனாயிற்று. அது வந்து போவதற்கு உதவும் விசாலவழி அடைபட்டுப் போனதை அது உணர்ந்து கொண் டது. மேலேறியும் தாழ்ந்து தணிந்தும் வேகமாகப் பறந்த அது, தன் முகத்தில் வந்து மோதிவிடுமோ என்ற குழப்பம் மாதவனுக்கு ஏற்பட்டது.
அவன் விளக்கைப் போட்டான். ஒளி பாய்ந்து வெளிச் சப்படுத்தியது அறையை.
அதனால் வவ்வால் மேலும் கலவரம் அடைந்தது. வெளிச்சம் அதன் பார்வையை பாதித்தது. அது குருடு போல் திண்டாடியது. சுவரில் மோதி விழுந்தது. உடனே ஜிவ்வென எழுந்து எதிர்திசைக்குப் பாய்ந்தது. பெரிய பெட்டி பரப்பிய சிறுநிழலில் அது ஒண்டியது.
அப்போதுதான் அந்த எண்ணம் அவனுள் வெடித்தது; இதை சாகடித்தால் என்ன?… அடித்துக் கொன்று போடலாமே!
ஒரு மூலையில் சுவரோடு சுவராய் வசமாக ஒரு தலைக் கம்பு இருந்தது. ஒட்டடை அடிக்க அவன் அதை உபயோகிப்பது உண்டு. இப்போது அது வசதியாக இருந்தது.
தடியை எடுத்துக்கொண்டு அவன் வவ்வாலை நோக்கி நகர்ந்தான்.
அணுகுகிற ஆபத்தை உள்ளுணர்வால் உணர்ந்தது போல, வவ்வால் விர்ரென்று மேலெழுந்தது. பறந்தது.
பறக்கும்போது இறக்கைகள் பெரிதாய் அதுவே அளவில் பெரிய ஜந்துவாய் காட்சி அளித்தது.
குறுகிய எல்லையில், நூறு வாட்ஸ் பல்பு மிக வெளிச்சம் கொண்ட பேரொளியாய் எரிந்தது. அவ் ஒளி வவ்வாலை வெகுவாகப் பாதித்தது. அது திசை தெரியாது திண்டாடித் தவித்து அலை பாய்ந்தது.
அக்குழப்பத்தால், ‘புசை முட்டிப்போன’ வெறியால் தன்னை நெருங்கும் போதெல்லாம் அது தன்னைக் கடித்து விடுமோ என்றொரு உள்பயம் மாதவனை நடுக்கியது. அத னால், அதை அடிக்க வேண்டும் என்ற அவன் நினைப்பு வேகம் பெற்றது.
ஓங்கி வீசினான் தடியை.
அடி வவ்வால் மீதுபட்டது. அது விழுந்தது. க்ரீச்-க்ரீக் என விகாரமான ஒரு ஒலி எழுப்பியவாறு அது மீண்டும் மேலே எவ்விப் பறந்தது. விழுந்தது.
மேஜையின் கால் அருகே, நிழலில் கிடந்த அதை அவன் மறுபடியும் அடித்தான்.
அது எழுந்து, பறந்து, வெளியே செல்லக்கூடிய வழியை நாடித் தள்ளாடிக் கதவில் மோதி விழுந்தது.
அசிங்கக் குவியலாய், அருவருப்பு தருவதாய் அவனுக்கு தென்பட்ட வவ்வால் மாதவனிடம் இரக்கம் எழுப்பவில்லை. அவன் தடியால் ஓங்கிக் குத்தினான். செத்தது அது.
மறுபக்கத்துக் கதவைத் திறந்து, வவ்வாலை தடியால் தள்ளித் தள்ளி வெளியே ஏற்றினான். அங்கே மண் தரை. திறந்த வெளி. -கிடக்கட்டும் சவம். காலையில் எடுத்து, தெருவிலே, பாழுங்கிணற்றுள் போட்டு விடலாம்.
அவன் மனசில் ஒரு திருப்தியும் நிம்மதியும். ‘முடுக்கு பக்கம் கதவை அடைத்துத் தாளிட்டான். அறைப் பக்கக் கதவைத் திறந்தான். வவ்வாலின் புழுக்கைகளும் மூத்திரமும் அசிங்கப்படுத்தியிருந்த இடத்தைத் துடைப்பத்தால் பெருக்கினான்.
இனி இப்படி அசிங்கமும் கறையும் ஏற்படாது.
விளக்கை அணைத்து விட்டு சந்தோஷமாகப் படுத்தான். தூக்கம் அவனைத் தழுவியது. எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ! மாதவன் திடீர் விழிப்புற்றான்.
கொசுக்கடி மட்டுமே காரணமல்ல. காற்றைக் கிழித்து சிறகடித்துப் பறக்கும் வவ்வால் எழுப்பும் விர்ர் – விஷ்ஷ் ஓசை தெளிவாக அவனுக்குக் கேட்டது.
தூக்கக் குழப்பத்தில், அந்த வவ்வால் தான் வந்திருக்குமோ என்றொரு அபத்த நினைப்பு… அது எப்படி வரும்? அதுதான் செத்து விட்டதே! முடுக்குக் கதவு வேறே அடைத் துக் கிடக்கு! அது சாகாமல் கிடந்து காற்று பட்டதும் உணர்வு பெற்று, வானில் பறந்து போய், வழக்கமான வழி மூலம்
சீ பைத்தியம்! அவன் மனமே அவனை எள்ளி நகைத் தது. அது செத்துக்கிடக்கு. இனிப் பறக்காது…
பறக்கும் சத்தம் கேட்கவில்லை இப்ப.
அப்படீன்னா அதனுடைய ஆவியாக இருக்குமோ?.. மாதவன் தூங்கிப் போனான்.
காலையில் கண் விழித்ததும், வெளிச்சத்தில் அவன் பார்வையில் பட்டது-
அதே இடத்தில் அசிங்கமாய் ஈர நசநசப்பும் புழுக்கைகளும்.
அவன் மனம் சங்கடப்பட்டது.
இன்னொரு வவ்வால் வந்திருக்கு!
இப்போது அவன் உள்ளம் முதல் வவ்வாலுக்காக இரக்கப்பட்டது.
முடுக்குக் கதவை திறந்தான்.
அது சுவர் அருகில் குறுகி முடங்கி விறைத்துக் கிடந்தது. மூக்குப்பொடி நிறமாய்; சிலசில இடங்களில் கறுப்பு படிந்து; குறள் உருவமாய், இறக்கைகளைக் குறுக்கிக் கொண்டு; அசிங்கமான மூஞ்சியோடு அது கிடந்தது;
எத்தனை ஜீவத்துடிப்புடன் இயங்கியது இது! பறக்கும் போது எவ்வளவு பெரிசாய், என்ன வேகம் நிறைந்ததாய், சில கோணங்களில் அழகாகக்கூட இருந்தது! அதை அசிங்க மான ஜடம் ஆக்கிப் போட்டேனே! அவன் மனம் வருத்தப் பட்டது.
இதை கொன்று விட்டதால் என்ன பிரயோசனம்? அறை அசிங்கப்படுவது நிற்கும் எனத் தெரியலியே. இன்னொரு வவ்வால் உடனடியாக வந்திட்டுதே! அதை கொன்றால் வேறொண்ணு வரும். அப்படி சங்கிலித் தொடராக நடந்து கொண்டேயிருக்கும்.
மாதவன் பெருமூச்செறிந்தான். குனிந்து செத்த வவ்வாலை இரண்டு விரல்களால் பற்றி எடுத்து, வெளியே கொண்டு போய் பாழுங் கிணற்றுள் விட்டெறிந்தான்.
அறைக்கு வந்ததும், அழகான அறையின் சுத்தமான தரையில் அந்த இடத்தில் கறையாகப் படிந்திருந்த அசிங்கத் திட்டுகளாக ஈரமும், சிதறிக் கிடந்த புழுக்கைகளும் தன்னைப் பரிகசித்துச் சிரிப்பதாகவே மாதவனுக்குப் பட்டது.
– சௌராஷ்டிரமணி பொங்கல் மலர், 1984.
– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.