இயக்கமும் நிலைப்பாடும்





(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழைமையில் ஊன்றிய இறுக்கமான பற்று ஒருபுறம்; புதுமையைத் தழுவுகின்ற வீறார்ந்த துடிப்பு ஒருபுறம். இவற்றுக்கிடையே ஒரு பெரும் இழுபறி!… கதை சத்துள்ளதாய், இலக்கியச் சுவை நிரம்பியதாய் அமைந்திருக்கிறது! வண்ணமயமான சித்திரக் கம்பளம்போன்ற கதைப் பின்னல். மொழியின் செழுமையைக் கதை முழுவதும் நுகரலாம்.
கண்டியிலிருந்து அன்று இரவுப் புகைவண்டியிலே மகள் புவனேஸ்வரி வீடு வருவதாகத் தந்தி கிடைத்தபொழுது பண்டிதர் முருகேசனாருக்கு எவ்வித பரபரப்பும் ஏற்படவில்லை. மாறாக வெறுப்பும் எரிச்சலும்தான் ஏற்பட்டன.
தந்தியைச் சலிப்போடு மேசையின்மீது வீசி ஏறிந்தார். அவரின் மனைவி திலகவதிக்கு அவரின் செயல் வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தியது.
“றெயில் இரவு பத்து மணிக்குத்தான் வரும். பிள்ளை அந்த நேரத்தில் தனித்து வருவது எப்படி? நீங்கள்தான் ஸ்ரேஉடினுக்குப் போய் அவளைக் கட்டி வரவேணும்” என்று திலகவதி சொன்னபொழுது, முருகேசனார் அவள்மீது கீறி விழுந்தார்.
“உன்ர மகள் என்ன சின்ன பபாவே? அவள் பல்கலைக் கழக மாணவி. புதுமைப்பெண். அவளை ஆரும் பிடிச்சுக் கொண்டு போகமாட்டான்.” இவ்வாறு சொல்லிவிட்டு முருகேசனார் சால்வையை அணிந்துகொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டார்.
திலசுவதிக்கு வாய் அடைத்துவிட்டது. “தமது ஒரே செல்ல மகளில் உயிரையே வைத்திருக்கும் ஒரு தந்தை பேசும் பேச்சா இது?”
இவருக்கு இன்று என்ன பிடித்து விட்டது.
திலகவதி திகைத்துப்போய் சிலையாய் நிற்க முருகேசனார் தொடர்ந்து எதுவும் பேசாது கதவைத் திறந்துகொண்டு வெளியே நடந்துசென்றார்.
கல்லூரியை நோக்கி நடந்துகொண்டிருக்கையில் பண் டிதர் முருகேசனாரின் நெஞ்சில் வேதனையும் வெறுப்பும் ஒன்று கலந்து குழம்பி, அவை கோபம் என்னும் புதிய உருவை அடைந்து, சடுதியில் லஜ்ஜையாகப் பரிணமித்தன.
சட்டைப்பையினுள்ளே கிடந்த கடிதம் திடீரென்று ஒரு மலைப்பாம்பாக மாறித் தமது உடலைச் சுற்றி நெரித்து எலும்புகளையெல்லாம் நொறுக்குவதுபோல அவர் உணர்ந் தார். அந்த நரக வேதனையை அவரால் சகிக்க முடியவில்லை.
தெருவில் அவருக்குத் தெரிந்தவர்கள் அவரைப் பார்த்து மதிப்புக் கலந்த புன்னகையை வெளியிட்டபோதும் அவரின் மாணவர்கள் வணக்கம் செலுத்தியபோதும் வழக்கமான பதிற் புன்னகையையோ வணக்கத்தையோ அவர் செலுக் தாமல் சிடுசிடு என்ற முகத்தொடு தலையைத் தாழ்த் தியபடி நடந்துசென்றார்.
போர்க்களத்திலே தனக்குரிய யாவற்றையும் இழந்து நிராயுதபாணியாய் நின்ற இராவணனை இராமன், “இன்று போய் நாளை வா” என்று அனுப்பி வைத்த பொழுது அந்த இலங்கை வேந்தன் பூமியாகிய நங்கையையே நோக்கியபடி அவமானம் பிடரியைப் பிடித்துத் தள்ள நடந்து போய் இலங்கை புக்கது போன்ற மனநிலையோடு பண்டிதர் முருகேசனாரும் நடந்துகொண்டிருந்தார்.
இத்தனைக்கும் காரணமான அந்தக் கடிதம்?…
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்திலே கலைப் பட்டப் படிப்பிற்குப் புவனேஸ்வரி சென்று ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.
பல்கலைக்கழக விடுதியிலே புவனேஸ்வரி தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது, ஆனால், முருகேசனார் அதை விரும்பவில்லை.
புதிய விரும்பத்தகாத சேர்க்கைகளினால் தமது மகள் கெட்டுப்போகக்கூடும் என்றும் அவளின் சைவ உணவிற்குப் பங்கம் ஏற்படும் என்றும் அவர் பயந்தமையால் கண்டியிலே உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த தம் மைத்துனர் முறையினரான தங்கவேலுவின் வீட்டிலே அவளைத் தங்க வைத்தார்.
முதன்முதல் புவனேஸ்வரியைக் கண்டிக்கு அழைத்துச் சென்று தங்கவேலுவின் வீட்டில் விட்டுவிட்டுத் தங்கவேலு விடம் தனிமையிலே தாம் சொன்னவற்றையும் அவற்றிற்குத் தங்கவேலு கூறிய பதிலையும் முருகேசனாரால் அந்த வேளையில் நினைக்காதிருக்கக்கூட முடியவில்லை.
“தங்கவேலு, இந்தக் காலம் கெட்ட காலம். ஊர்விட்டு வேற்றூர் வந்து புதியதொரு குழலிலே என் மகள் மூன்றோ நாலோ வருஷங்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது. இதை நினைக்க எனக்குப் பெரும் பயமாகவும் கவலையாகவும் இருக் கிறது எதற்கும் உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். என் பிள்ளை எப்படி இங்கு வந்தாளோ அப்படியே, அதே தூய் மையுடன் களங்கமில்லாத வெள்ளை உள்ளத்தோடு திரும்பி என்னிடம் வந்து சேர வேண்டும். எனக்குப் படிப்புக்கூட அவ்வளவு முக்கியம் இல்லை; பண்புதான் முக்கியம். இந்த இடை க்காலத்தில் நீதான் அவளுக்குத் தகப்பன்.” இதைச் சொன்னபொழுது அவர் தமது கண்களிலே தயங்கிக் கொண்டிருந்த கண்ணீரை மறைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
முருகேசனாரின் வார்த்தைகளைக் கேட்டுத் தங்கவேலு சிரித்தார்.
“சுத்தப் பைத்தியக்காரன் நீ. இதைத்தான் தமிழ் வாத்திக் குணம் என்கிறது. உன் மகள் பட்டப் படிப்புக்கு வந்திருக்கிறாள் நீ நினைப்பதுபோல அவள் இன்னமும் சின்னக் குழந்தையல்ல. அவளுக்கு தன்னைக் காக்கத் தெரியும். அல்லா மலும் ‘மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை’ என்று உன் திருவள்ளுவர் தானே சொல்லியிருக்கிறார் ஒன்றும் யோசி யாதே. உன் வேண்டுகோளை நான் மறக்க மாட்டேன். போய்வா” என்று அவர் பண்டிதருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
அன்று இப்படி ஆறுதல் கூறிய தங்கவேலுதான் இந்தக் கடிதத்தையும் எழுதியிருக்கிறார்.
முருகேசனார் பயிற்சிபெற்ற தமிழாசிரியர். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர். சைவப்புலவர். இத்தகைய பின்னணியைப் பெற்ற ஒருவர் தாம் கற்று உணர்ந்து நயந்து போற்றிவந்த தமிழ்ப் பண்பாட்டிலும் மரபாசாரங்களிலும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்று மில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு இவற்றில் பற்றும் பிடியும் இருந்தனவோ அவ்வளவுக்கு புதிய அலையாய் வந்து மோதிக்கொண்டிருக்கும் நவீன பழக்க வழக்கங்களையும் மனப்போக்குக்களையும் அவர் வெறுத்தும் வந்தார்.
யாழ்ப்பாணத்திலேயுள்ள கல்லூரி ஒன்றிலே தலைமைத் தமிழாசானாய் அவர் பணிபுரிந்து வருகின்றார்.
சிதம்பரம், திருச்செந்தூர், மதுரை, காசி, கதிர்காமம், செல்வச்சந்நிதி, நல்லூர் என்று இந்தியாவிலும் ஈழத்திலு முள்ள கோயில்களுக்கெல்லாம் யாத்திரை செய்து வழிபட்டு. கடினமான விரதங்களை யெல்லாம் அனுஷ்டித்து, அவற்றின் பயனாகத் திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகவின் பின்பு பெற்றெடுத்த அவரின் தங்கக் கொழுந்து தான் புவனேஸ். வரி -எகபுத்திரி!
வைகறையின் மௌன அமைதி கலையாத காலைப்பொழு திலே மெல்ல மலர்ந்து மணம் பரப்பும் மல்லிகை மலரைப் போன்று, அடக்கமான அழகும் கூர்மையான விவேகமும் ஒருசேரக் கூடிய பெண்மையின் இலட்சியமாகப் புவனேஸ்வரி வளர்ந்த பொழுது, உலகத்திலே தமக்கு ஈடான பாக்கிய சாலி எவருமேயில்லை என்று பெருமித உணர்ச்சிகொண்டு தலைநிமிர்ந்து திரிந்தவர், பண்டிதர் முருகேசனார்.
பெரிய புராணத்துத் திலகவதியைப் பொலவும் மங்கை யர்க்கரசியைப் போலவும் தம் மகள் விளங்குவாள் என்பதே அவரின் கனவும் நனவுமாக இருந்தது. இதற்குத் திலக வதியும் ஒத்துழைப்பை ஈந்தாள். செல்லம் என்ற காரணத் தால் குரங்குத்தனமாக மகளை வளர்க்கக்கூடாது என்பதில் இருவரும் பிடிவாதமாய் இருந்தனர்.
திருக்குறள், கம்பராமாயணம், தேவார திருவாசகங்கள், திருமுறைகள் முதவியவற்றை வீட்டிலும், பொருளாதாரம், சரித்திரம் தருக்கம் முதலிய பாடங்களைக் கல்லூரியிலும் கற்று அசாத்திய திறமையைப் புவனேஸ்வரி வெவிப்படுத்தினாள்.
திறமைமட்டும் 3பாதியதல்ல, அறிவு வளர்ச்சியோடு மனித வாழ்க்கை முடி வடைந்துவிடுவதில்லை. கடவுள் நம்பிக்கை, சமய உணர்வு, ஆசாரங்களைப் போற்றல் என்ற இவையும் தரமாக தம் மகளிலே வளரவேண்டும் என்று பண்டிதர் சைவப் புலவர் முருகேசனார் எதிர்பார்த்தார்
புவனேஸ்வரியும் அவரை ஏமாற்றவில்லை. பாவாடை தாவணி அணிந்து, சுவாமி அறையிலே கர்ப்பூரச் சாம் பிராணிச் சூழவிலே அமர்ந்து கண்களை முடியபடி கூப்பிய கரங்களோடு அவள் திருமுறைகளைப் பாடும்போது முருகேசனார் தமக்குக் கிடைத்த பெரும் பாக்கியத்தைப் பற்றி நினைந்து இறுமாந்திருந்த நாட்கள்தாம் எத்தனை எத்தனை!
காலாதி காலங்களாகத் தாம் செய்த தவங்களும் கண்ட கனவுகளுமே ஓர் உருவாகி வந்தன என்று பெருமையடைந்து பெருமகிழ்விலே திளைத்துப் பூரித்த அந்த முருகே சனார் தாம்…
தமது சாபக்கேடுகளின் மொத்த வடிவமே புவனேஸ்வரி என்ற வடிவில் வந்து திலகவதியின் வயிற்றிலே இருந்து மண்ணில் விழுந்து வளர்ந்ததோ என்று நினைத்து இன்று பெருமூச்சு விடுகின்றார்!
ஒன்றரை ஆண்டுகளிலே தான் எவ்வளவு மாற்றம்.
“மினிஸ்கேட்” நாகரிகம் உச்சக் கட்டத்திலிருந்த வேளை யிலே முழங்கால்களை ம மறைக்கும் சட்டையணிந்த புவ னேஸ்வரி, அட்வான்ஸ் லெவலுக்குப் பிறகு சேலை தரித்துச் சென்ற புவனேஸ்வரி, பல்கலைக் கழகத்தில் புகுந்திருந்த தவணையின் பின்பு வீடுவந்தபொழுது தனது இருபத்தோ ராவது வயதிலே ‘மினிஸ்கேட்’ அணிந்தாள் என்றால்…!
அவள் இப்பொழுது சேலை அணிவதே அபூர்வம். தலைமயிரை அழகாக வகிடு பிரித்துப் பின்னி மலர் குடுவ தில்லை. மதுரை வீதிகளிலே நீதிகேட்டு மெய்யிற் பொடியும் விரிந்த கருங்குழலுமாய் திரிந்த கண்ணகிபோல அவிழ்த்து விட்ட கூந்தல் அலங்காரந்தான் அவளுக்குப் பிடிக்கிறது.
வீபூதி தரிப்பதிலும் புதுப் பாஷன். நெற்றி நடுவே ஒற்றைவிரற் கீற்றுப் பூச்சு, அதுவும் அவசரம் அவசரமாகப் பிரார்த்தனை யென்ற இணைவில்லாத ஓர் இயல்பூக்கத் தொ ழிற்பாடு – அவ்வளவு தான்.
அப்பா, அம்மா என்ற மதிப்பும் போய்விட்டது. அவர்க ளோடு நின்று பேசுவதே மினைக்கேடு என்ற ஓர் அலட்சியப் போக்கு, ஏதாவது கேட்டால் எடுத்தெறிந்து பேசி விவாதம் செய்து தன்கோள் நிறுவுவதில் ஒரு முனைப்பு.
ஒரு விடுமுறையின் போது தம் மகள் நல்ல ‘மூடில்’ இருந்த வேளை பார்த்து முருகேசனார் தமது உபதேச மூட் டையை அவிழ்த்துவிடத் தொடங்கினார்.
அவர் சொன்ன அத்தனை விடயத்தையும் புவனேஸ்வரி மௌனமாகக் கேட்டுவிட்டு கடகடவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பின் நெருப்புக் காங்கையே அவரின் உள்ளத்தைப் பஸ்மீ கரமாக்கப் போதியதாயிருந்தது. அவள் தொடர்ந்து கூறிய சொற்கள்…’
”அப்பா! நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் சுத்த பத்தாம்பசலிக் கருத்துக்கள், பண்பாடு, மரபு, கலாசாரம் என்பதெல்லாம் பூர்ஷுவா மனப் பான்மையின் வெளிப் பாடுகள். சாமானிய மக்களைப் பேய்க் காட்டி அடக்கி ஒதுக்கி வைக்க மேல்தட்டு வர்க்கத்தினர் கற்பனை செய்து செயற்படுத்திய தந்திரங்கள் தாம் இவை. இந்த இருபதாம் நூற்றாண்டிலே முற்போக்கான கருத்துக்கள் மேலோங்கிக் கொண்டிருக்கின்றன. வெறும் தமிழ்ப் படிப்பு மட்டும் உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு இவை விளங்காது. உங்களுக்கும் வயது போய்விட்டது. உங்கள் காலமும் மலையேறி விட்டது. தயவுசெய்து எங்கள் வழியிலே தலையிடாமல் இருங்கள்; அது போதும்.”
புவனேஸ்வரியா இப்படிப் பேசுகிறாள்!
முருகேசனாருக்கு அவள் சொன்ன பூர்ஷுவா, மேல் தட்டுவர்க்கம், முற்போக்குக் கருத்துக்கள் என்பவை யெல்லாம் புதுமையாகவேயிருந்தன.
அவர் ஒன்றும் பேசவில்லை.
அவரின் மௌனத்தைத் தன் வெற்றியாக அர்த்தம் பண்ணிக்கொண்ட புவ னேஸ்வரி சிரிப்பிற் கலகலத்தபடி எழுந்து போனதைக் கூடக் காணாதவராய்ப் பண்டிதர் முருகேசனார் நெடுநேரம் உட்கார்ந்திருந்தார்.
விடுமுறைக் காலங்களில் புவனேஸ்வரியைத் தேடி அவ ளின் தோழர்கள், தோழியர்கள் என்று பலர் வந்தனர். அவர்கள் பல விஷயங்களைப்பற்றி விவாதித்தனர்.
அரசியற் கோட்பாடுகள், பாலியல் விடயங்கள், ஆசாரங் களின் போலித் தன்மைகள் என்று பல அவர்களின் விவாதத்தில் அடிபட்டன.
அவர்கள் தமிழிலே தான் பேசிக் கொண்டனர். ஆனால், தமிழ்ப் பண்டிதரான முருகேசனாருக்கு அவர்கள் கையாண்ட வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் புதுமையாகவே தோன்றின. பெரியவர்கள் பேசும்பொழுது ஒரு குழந்தை ஒன்றும் புரியாமல் கண்களை உருட்டி விழிக்குமே, அதுபோல உருட்டி விழிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் பல முருகேனாருக்கு ஏற்பட்ன.
அப்பொழுதெல்லாம் முருகேசனாரின் இதயத்திலே குருதி வடித்தது உண்மை தான் பொட்டு வைத்தல். பூச்சூடுதல், திருமணம், தாலி சடங்குகள் கோயில், பூசாரித்துவம், பெரி யோரை மதித்தல் என்று அவர் போற்றிய பல விடயங்களும், ஆராடபூதித்தனத்தின் வெளிப்பாடுகள் என்று அவர் அந்த இளம் வட்டத்தின் வாய்களிலிருந்து அருளுபதேசங்களைப் பெற நேர்ந்தபொழுதெல்லாம் பெரிதும் சங்கடப்பட்டார் என்பதம் வாஸ்தவமே.
என்றாலும் அவர் இவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சகிக்கப் பழகிக் கொண்டார். பிள்ளைப்பாசம் என்ற அத்திவாரம் அந்த வேளைகளிலும் கலகலத்துப் போகவில்லை.
ஆனால் இன்று தங்கவேலுவின் அந்தக் கடிதம்… திலகவ திக்கும் அதைக் காட்டி அவளின் மனத்தையும் வருத்த விரும்பாது சிலுவையைச் சுமந்த யேசுபிரான் போலத் தாமே தமது சட்டைப் பைக்குள் சுமந்து கொண்டு திரிகிறார், அதை.
கண்டி
76-5-25
அன்பார்ந்த முருகேசு;
உன் மகள் புவனேஸ்வரியை நீ எதிர்பார்க்கும் முறை யிலே உன்னிடம் திருப்ப என்னால் முடியும் என்ற நம்பிக்கை இன்று எனக்கு இல்லை. என்னை மன்னித்து வீடு.
அவள் முன்போல இல்லை. கோயிலும் குளமும் மறந்து விட்டாள் அடக்க ஓடுக்கமெல்லாம் அகன்றோடிவிட்டன. ஹோட்டல்களில் சன்று என்ன வெல்லாமோ சாப்பிடு வதாகக் கேள்வி.
அவளைத்தேடி நேரங்கெட்ட நேரங்களிலே பலர் வருகிறார்கள் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுங்கூடத்தான்.
இரவில் நேரங்கழித்து வருகிறாள். காரணம் கேட்டால், ‘அங்கிள் நீங்கள் வொறி பண்ண வேண்டாம். நான் என்ன சின்னக் குழந்தையா? என்னைக் காக்க எனக்குத் தெரியும்’ என்கிறாள், இதையெல்லாம் நான் சகிக்கத் யாராயில்லை. இன்னும் ஓரிரு மாதங்கள் எங்களோடு உமது மகள் இருந்தால் என்ன பிள்ளைகளும் கெட்டு விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.
நீ முதன்முதல் அவளை என் வீட்டில் கொண்டு வந்து விட்ட பொழுது. ‘அவளைக் காக்க அவளுக்குத் தெரியும்’ என்று உனக்கு ஆறுதல் கூறினேன். இன்று அதே ஆறுதல் மொழியை உன் மகள் எனக்கு சொல்கிறாள்! இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
சென்றவாரம் புதிதாகப் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த மாணவர்களை, ‘றாகிங்’ பண்ணும் கூட்டத்தில் உன் மகள் புவனேஸ்வரியும் முக்கிய இடம் வகித்தாள். இவர்களின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாணவர் நால்வரைப் பல்கலைக்கழக நிர்வாகம் விரிவுரைகளுக்குச் செல்வதிலிருந்து தற்காலிகமாகத் தடுத்து வைத்திருக்கிறது.
அந்த நால்வருக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்பது புவனேஸ்வரி உள்ளிட்ட மாணவர் பலரதும் முடிவு. இதனால் இவர்கள் பல்கலைக்கழக முடிவை எதிர்த்து ஆர்ப் பாட்டம் செய்ய ஆயத்தமாகின்றார்கள்.
இந்த ஆயத்தங்களின் முன்னணியில் நிற்போரில் உன் மகளும் இடம் பெற்றுப் பகலிரவாக அலைந்து கொண்டிருக்கிறாள்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் அதன் விளைவு எந்தத் திருப்பத்தையும் ஏற்படுத்தலாம்!
எனவே தான் நீ அடித்தது போல நான் ஒரு போலித் தந்தியைத் தயார் செய்து ‘உனக்கு வருத்தம் கடுமை’ என்று புவனேஸ்வரியை நம்பச் செய்து நாளை காலைப் புகைவண்டியில் உவ்விடம் அனுப்பி வைக்கின்றேன்.
புவனேஸ்வரி தன் வருகையை உங்களுக்குத் தந்தி மூலம் அறிவிப்பாள் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்பு இங் குள்ள குழ்நிலையை நீ விபரமாக அறிந்து கொள்வதற்காக உனது பாடசாலை விலாசத்திற்கு இந்தக் கடிதத்தை அனுப்புகின்றேன். அவசரம் என்பதால் ‘எக்ஸ்பிறஸ்’ கடிதமாக அனுப்புகின்றேன்.
உன் மைத்துனன்,
தங்கவேலு.
அன்று இரவு பத்தரை மணிக்குப் புவனேஸ்வரி டாக்ஸியில் வந்து வீட்டின் முன் இறங்கினாள்.
அவள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தபொழுது அவளின் தாய் திலகவதி மெளனமாக அவளை வரவேற்றாள்.
“அம்மா, அப்பாவுக்கு எப்படி?” என்று புவனேஸ்வரி கேட்டபொழுது அதுவரை தமது அறையினுள்ளே இருந்த முருகேசனார் ஆவேசத்துடன் வெளியே வந்து, எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. உனக்குத்தான் ஏதோ ஆபத்து என்று கேள்விப்பட்டேன். உயிரோடு வந்துவிட்டாயா? அவ்வளவும் போதும். உன்னைப் பெற்ற குற்றத்துக்காகத்தான் உன் தாய் இந்தக் கதவைத் திறந்துவிட்டாள். ஆனால், என்னைப் பொறுத்தவரை என் இதயக் கதவு எப்பொழுதோ மூடிக் கொண்டுவிட்டது. போ உள்ளே. அம்மா விதம் விதமாக உனக்காகச் சமைத்து வைத்திருக்கிறா. கொட்டிக் கொள். என்று தமது கோபத்தைக் கொட்டினார்.
முருகேசனாருக்கு இவ்வளவும் பேசியதால் மூச்சு இரைத்தது. அவர் வேதனையோடு உள்ளே போய் அறைக்கதவை அடித்துச் சாத்திக் கொண்டார்.
திலகவதி திகைத்து மரமாய் நின்றபடி புவனேஸ்வரி யைச் சுட்டுவிடுவதுபோலத் தன் கண்களை விழித்து நோக் கினாள்.
புவனேஸ்வரி ஒன்றும் சொல்லவில்லை. அவள் மௌன மாக அறைக்குள் சென்று விட்டாள். அன்றிரவு அந்த மூவரும் சிவ பட்டினி.
அடுத்தநாள் காலை எட்டு மணிவரை அங்கு மௌனமே ஆதிக்கம் செலுத்தலாயிற்று.
திலகவதியின் மூளைக்குள்ளே நூற்றுக்கணக்கான வண்டுகள் குடைவதுபோன்ற நரகவேதனையுணர்ச்சி இடைவிடாது ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
முதல்நாள் திடீரென்று மகள் வரப்போவதாகத் தந்தி வந்ததும், வழக்கத்திற்கு மாறாக முருகேசனார் புகையிரத நிலையத்திற்குச் செல்லாமல் விட்டதும், மகள் வீடு வந்த பொழுது சீறி விழுந்து சொல்லக்கூடாத வசைமாரியை அவர் பொழிந்ததும், இவை யாவற்றிற்கும் மேலாக புவனேஸ்வரி சாதிக்கும் மௌனமும் அந்தத் தாயின் உள்ளத்தைச் சல்லடைகளாக்கிக் கொண்டிருந்தன.
பல்கலைக் கழகத்திற்குப் போனதிற்குப் பிறகு தன் மகளின் போக்குக்களில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்களைத் திலகவதியும் அவதானித்துத்தான் வந்திருக்கிறாள். ஆனால், அவளது கணவரைப்போல அவளுக்குத் தன் மகளில் எந்த வேளையிலும் அவநம்பிக்கை ஏற்பட்டதில்லை.
படிப்பு ஏற ஏற மனவிரிவும் சுதந்திரப் போக்கும் ஏற் படுவது இயற்கைதான் என்ற அளவில் நினைத்துக் கொண்டு மகளின் விட்டேற்றியான போக்குகளையும் பெரிது படுத்தாமல் அவளிடம் வருவோரையெல்லாம் இன்முகத்தோடு வரவேற்று உபசரித்து அனுப்பி வந்தவள் அவள்.
ஆனால். இன்று அந்தப் பரிசுத்த உள்ளத்திலும் கள்ளம் புகுந்துவிட்டது. அவளைப் பொறுத்தவரையில் ஒரு பெண் விடக்கூடிய மிகப்பெரிய பிழை ஒன்றுதான்.
அப்படி ஏதாவது பிழையைத் தன் மகள் விட்டு விட்டாளோ? அதுதான் தசப்பன் அவள்மீது இப்படிச் சீறி விழுகிறாரோ?
இந்த நினைவும் முடிவும் ஏற்பட்டபொழுது திலகவதி யால் அதைச் சகிக்கக்கூட முடியவில்லை.
அப்படி ஏதாவது நடந்துவிட்டிருந்தால் நானே வளுக்கு நஞ்சுட்டிக் கொன்று விடுவேன் என்று பயங்கரமாக அவள் தீர்மானித்துக் கொண்டு கணவர் கல்லூரிக்குச் செல்லும் வரை ஒவ்வொரு ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக்கொண்டிருந்தாள்.
முருகேசனாரின் தலை மறைந்ததும் திலகவதி துப்பாக்கியி லிருந்து குண்டு பாயும் வேகத்தில் புவனேஸ்வரியின் அறை யினுட் பாய்ந்தாள்.
மகளின் தலைமயிரைப் பற்றிக் கொண்டு பல்லை நெருமியபடி அவள் “இதோ பார். உண்மையைச் சொல்லி விடு. எவனோடாவது தகாத முறையில் உனக்கு ஏதாவது உறவு ஏற்பட்டு விட்டதா? அதனால் நடக்கக் கூடாதது ஏதாவது?..சொல்லடி” என்று கேட்டாள்.
புவனேஸ்வரி பதற்றப்படவில்லை. அவள் தன் தாயின் கைகளை விலக்கியபடி நிமிர்ந்து நின்றாள். “அம்மா! உங்கள் சந்தேகத்தில் அர்த்தமில்லை. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலத்தின் மனப்போக்குக் காரணமாகத்தான் நீங்களும் அப்பாவும் தங்கவேலு மாமாவும் என்னை அநாவசியமாகச் சந்தேகிக்கிறீர்கள். காதல், உடலுறவு, கத்தரிக்காய் விஷயங்களுக்கு நாங்கள் அப்பாற்பட்டவர்கள் ”
திலகவதிக்கு அவள் கூறுவது விளங்கவில்லை. என்றாலும் தான் நினைத்ததுபோல ஒன்றும் நடந்து விடவில்லை என்பதை மகளின் வாயிலாக அறிந்து கொண்ட பொழுது அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
“நீ என்னடி சொல்கிறாய்?” என்று அவள் தன் மகளைப் பார்த்து ஏக்கத்தோடு கேட்டாள்.
புவனேஸ்வரி சொன்னாள்:
”உலகம் மிகவும் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. எங்களைப் போன்ற இளம் சமுதாயத்தை வயது வந்த பெரியவர்கள் அடக்கி வைத்து எங்களின் சிந்தனையை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள். இதற்கு நாங்கள் இடம் கொடுக்காமல் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தைக் கண்டு பெரியவர்கள் பயந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்வது?
“எங்களுக்குப் போலி வேஷங்கள் பிடிப்பதில்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி நடந்து ஏமாற்று வித்தை செய்வதை நாங்கள் அலுமதிக்கப் போவதில்லை. நாங்கள் இயக்கத்தில் நம்பிக்கை உடையவர்கள். அசையாது தேங்கிப்போய்க் கிடக்கும் பழைமைச் சேற்றின் நிலைப்பாடுகளை மரபு என்றும், கலாசாரம் என்றும் போற்றி வாழ நாங்கள் தயாராயில்லை.”
புவனேஸ்வரியின் வார்த்தைகள் சூடுபிடிக்கையில் அவள் மேடைப் பேச்சாளி போலக் கைகளை ஆட்டிப் பேசுகையில்…
அவள் சொன்னவற்றில் ஒரு வார்த்தையைக் கூடப் புரிந்து கொள்ளாத திலகவதி தலையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்கிறாள்.
– வீரகேசரி, 1979.
– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.
சொக்கன்
சிறுகதைப் படைப்பாளி; நாவலாசிரியர்; நாடக எழுத்தாளர்; இலக்கிய ஆய்வாளர்; கவிஞர்; மொழி பெயர்ப்பாளர்; இந்துமதத் தத்துவங்களை நுணுகி நோக்கியவர்; கேட்டார்ப் பிணிக்கும் பேச்சாளர். – இவர்தாம் சொக்கன்.
தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த பயிற்சி யுடையவராகிய சொக்கன் பழந்தமிழுக்கும் புதுமைத் தமிழுக்கும் பாலமாக விளங்குபவர். இவர் ஒரு சூறாவளி எழுத்தாளர். இவருடைய படைப்புகளாக முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இது இது வரை வெளிவந்துள்ளன. இவை தவிர, பத்துக்கும் மேற்பட்ட பாடநூல்களையும் சொக்கன் எழுதியுள்ளார்.
இவர் அண்மையில் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கியுள்ள நவமான ஒரு பங்களிப்பு சலதி என்னும் காவிய நவீனம் ஆகும்.
சொக்கன், கலைக்கழக நாடகப் போட்டி களில் இருகடவை முதற்பரிசு பெற்றார். இவரது சிறுகதைத் கொகுதி சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது,
சொக்கன் அவர்களது இயற்பெயர் க. சொக்கலிங்கம். எம். ஏ. பட்டதாரி யாகிய இவர், மகாவித்தியாலயம் ஒன்றில் அதிபராகப் பணிபுரிகின்றார்.
![]() |
ஈழத்து மூத்த எழுத்தாளரில் ஒருவரான சொக்கன் (க.சொக்கலிங்கம்) அவர்கள் 1930ஆம் ஆண்டு யூன் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆவரங்காலில் கந்தசாமிச் செட்டிக்கும் மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார். டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு இறைபதம் எய்தினார். நமது நாட்டின் தமிழ் இலக்கிய உலகிலே மூதறிஞர் என்று போற்றப்படும் "சொக்கன்” 1944ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் “தியாகம்" என்ற வீரகேசரி சிறுகதை மூலம் எழுத்துலகில்…மேலும் படிக்க... |