இப்படிக்கு காத்தாயி!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 3,359
பெருமிதம் தவழும் முகம், காக்கைச் சிறகை முறித்து வைத்தது போன்ற புருவங்கள், சீறிட்டுவரும் காற்றுக்கே நெளியும் நூலிடையில் இரண்டு பெண்கள் நடந்து சென்றார்கள். சரவணப் பொய்கையின் கரையில், பார்ப்பவர்கள் வியந்து நாக்குமேல் பல்லுப் போடும் அளவுக்கு நடையில் அத்தனை நளினம் ஏறியிருந்தது.
எப்போதும் போலவே ஐம்புலன்களை அடக்கி, அதே பொய்கையில் தவம் மேற்கொண்டு வந்தார்கள் அவர்கள். அபரிமிதமான செல்வம் வேண்டும் என்ற, நாட்டுப்புறத்தின், கொச்சையான பிரார்த்தனையில்லை அந்த தவத்தில். பார்வதிதேவியின் கருப்பையில் சுமக்க இடம்தராமல், சிவனின் நெற்றிக்கண்ணில் பிறந்த , அழகன் முருகனை கணவவனாக அடைய வேண்டும் என்ற பிறவிப் பேரவா. அவர்களின் பிரார்த்தனை, குறிக்கோள், இலக்கு எல்லாமே அதுதான்.அதுவாகவேதான் இருந்தது.
எத்தனை நாட்கள்தான் தன்னையே நினைத்து, கடுந்தவம் புரியப்போகிறார் கள் என்ற இரக்கமோ, சதைப்பற்றில்லாத காதலில் ஏற்பட்ட பிரிவாற்றாமையோ தெரியவில்லை. ஒரு முடிவுக்கு வந்தார் சுப்பிரமணியர். தவத்தில் ஈடுபட்டவர்களின்,விழிகளை விரிக்கும் பிரகாசத்தில் ஓளிகாகீற்று. தொடர்ந்து ஒரு அசரீரி ” சூரனை வதம் செய்யும் பொருட்டு உள்ளேன். அழகு நங்கைகளே,வதம் முடிந்தவுடன் இருவரையும் கரம் கோர்க்கிறேன்” ஒலியைக் காதில் வாங்கிய சுந்தரவல்லியும், அமுதவல்லியும், புன்முறுவல் பூக்க தவத்திலிருந்து விழித்தனர்.
நாட்கள் கடந்தன. மங்கல முடிச்சுக்கு நம்பிய சுப்பிரமணியரே, அசரீரியாய், வாக்குறுதியளித்து விட்டதால், இரவு கூட பகலாக மாறியது. கனவு, கற்பனைகளில் மிதந்தார்கள். விரகதாபத்தின் உச்சத்திற்குப்போன அமுதவல்லி, இந்திரலோகம் சென்றாள். இந்திரனைப் பார்த்து, தன்னை, தத்து மகளாகப் பாவித்து வளர்க்க வேண்டும் என்று கேட்டாள். சல்லாபனான இந்திரனுக்கு அதற்கெல்லாம், நேரமில்லாமல் போயிருக்கலாம்போல.. “வளர்த்து ஆளாக்க வேண்டியது உனது பொறுப்பு” என ஐராவதம் யானையிடம் அமுதவல்லியை ஒப்படைத்தார்.
5ஐராவதம் யானை வளர்த்ததால் அமுத வல்லி, தேவயானையாக உருப் பெற்று, முருகனை மணந்தாள். இந்த நிலையில் இரண்டாவது மனைவியாக கரம்பிடிக்க, இன்னொருத்தி, தினைப் புனத்தில் வளர்ந்து பருவமெய்தினாள். அவள் பெயர் காத்தியாயினி. நாராயணர் லஷமி தேவியின் புதல்வி, வள்ளியாக பெயர் மாறறம் செய்யப்பட்டு, நம்பிராஜனிடம், கிடைத்ததைப் பெற்று மனநிறைவோடு தினைப்புனத்தில் வளர்ந்தாள்.
6சாபவிமோசத்திற்காக பூலோகம் வந்த நாராயணர், லஷ்மிதேவியுடன் கூடினார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் காத்தியாயினி. அவளை வளர்த்து ஆளாக்க நினைக்காத லஷ்மியும், நாராயணரும், ஒரு வல்லிச் செடி புதருக்குள் குழந்தையை கிடத்திவிட்டு மேலோகம் சென்று விட்டனர்.
தினைப்பனத்தில் புதருக்குள் கிடந்த காத்தாயியை மீட்ட நம்பிராஜன், காவலுக்கு கைகொடுப்பாள் என்ற எதிர்பார்பில் வளர்த்து வந்தார்.” நான் ஆளான நாளிது” என, பருவமடைந்த நாட்களை கூட, தினைப்புனத்தில் கொண்டாடி மகிழ்ந்த காத்தியாயினி என்ற வள்ளி, நேர்த்தியான வடிவத்தில் இருந்தாள். அவளது நாசி, மோவாய், இதழ்கள், கைதேர்ந்த சிற்பியால் செதுக்கப்பட்டது போல, கண்களுக்கு இதமாக மிளிர்ந்தாள்.
பெருமிதமே உருவான அழகைக் கொண்ட காத்தியாயினியை, சும்மா விடுவாரா முருகன். மானைத் தேடுவதைப்போல் கானகம் புகுந்தவர், ஆலோலம் ஷோவை ரசித்தார். இறுதியாக நம்பிராஜனிடம் வள்ளியாக வளர்ந்த காததியாயினியைக் கவர்ந்து சென்றார்.
காத்தியாயினியை முன்னோராக நினைத்து தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், காத்தாயி அம்மன் என்ற பெயரில் வழிபட்டனர். நூற்றாண்டுகள் கடந்து கலியுகம் பிறந்தது. பல இடங்களில் ஆலயப் பராமரிப்பு சரியில்லை. இதில் ஒரு திருவிளையாடல் போல, ஒரு கோவிலில் இருந்த சிலைகள் மாயமாகின. கைவரிசை காட்டிய திருடர்கள், கள்ளத் தோணி மூலம், அவற்றை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டனர்.
கடற்கரைக்கு மேற்கே முப்பது கிலோமீட்டர் தூரத்திலும், ராமேஸ்வரத்திற்கு வடக்கே எழுபது கிலோமீட்டர் தூரத்திலும் இறக்கி வைத்து விட்டு, ஓய்வெடுத்தனர். நள்ளிரவுக்குமேல் சிலைகள் வெடிப்பதுபோல் சத்தம் எழுந்தது. இதனால் அச்சத்தில் எழுந்து ஓடிய திருடர்கள், சிறிதுநேரம் கழித்து, சம்பவ இடத்திற்குத் திரும்பினர்.
ஏதோ பூமியிலிருந்து வெளித் தோன்றிய சுயம்புபோல, மண்ணில் புதைந்து காட்சியளித்த சிலைகள், கைக்குக் கிட்டாததால், திருடர்கள் வீசிய வெறும் கையோடு திரும்பினர். காலையில் விவசாய வேலைக்குச் சென்றவர்கள், கோட்டையாளும் பெருமாத்தாவின் பட்டா நிலத்தில் கண்ட காட்சியால் மெய் சிலிர்த்தனர். அன்றாடங் காய்ச்சிகளாக வாழ்ந்து, ஆடு மேய்த்த இடைச்சிகள், கோட்டையாளும் பெருமாத்தா மகளிடம் இந்த தகவலைக் கொண்டு சென்றனர்.
இடத்திற்குச் சொந்தமான கோட்டையாளும் பெருமாத்தாவின் வளர்ப்புமகள், சிலைகள் இருந்த இடத்தையே கோவிலாக மாற்றினாள். அழகம்மாள் இனத்தவனாக இருந்தாலும், வயிற்றுக்குப் போராடிக் கொண்டிருந்தவன், கட்டுமானப் பணிக்கு மண்ணை வெட்டி ஏற்றினான். இறக்கினான். இதன் பலன் வனது வயிறு நிறைந்ததோடு, மண்ணைவெட்டி என்ற கௌரவப் பட்டத்தையும் வாங்கிச் சென்றான்.
வேண்டுதலை நிறைவேற்றியதால், சக்திவாய்ந்த தெய்வமாக புகழடைந்தாள். இதனால் நாள்தோறும் அபிஷேகம், அர்ச்சனை. ஆண்டு தோறும் திருவிழா. . குலதெய்வ தரிசனத்திற்காக தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்தனர். காலப்போக்கில் கோவில் கட்டுமானம் சிதிலமடைந்தது. புனருத்தாரணம் செய்வதுபற்றி யாரும் சிந்திக்கவில்லை.
நீண்ட காலத்திற்குப் பிறகு, நாராயணர், மகாலஷ்மியின் ஆசீர்வாத த்தால், ஆலய மறுநிர்மானப் பணி நடைபெற்றது. செல்லம்மாள் என்ற மகாலஷ்மியின் அவதாரத்தால். காத்தாயி புதுப்பொலிவு பெற்றாள். நாள்தோறும் நடைபெற்று வரும் அர்ச்சனை அபிஷேகங்களால் இன்று சிரிக்கிறாள்
ஆணாதிக்க சமூகத்தில், பெண் என்பவள் இழைத்தவளில்லை என்பதற்காக, வெளியக்கோட்டை என்ற அந்த குக்கிராமத்தில், காத்தாயி அம்மன் மூலவராக உள்ளார். வள்ளி என்ற காத்தாயிக்கு முருகப் பெருமானே பரிவார வரிசையில்தான் இருக்கிறார். தெருவுக்குத்தெரு கோவில்கள் உள்ள நாட்டில்,
குறிப்பிட்ட அளவில் மகாலட்சுமிக்கு ஆலயங்கள் இல்லாமல்போனது. இதனால் வளமான வாழ்வு வேண்டுபவர்கள், குக்கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் ஆலயத்திறகுச் சென்று வழிபடுகிறார்கள்.
ஏனென்றால் இவள் மகாலஷ்மியின் புதல்வி.
“அப்போ நான் யார்..?” என்று அழகன் முருகனிடமிருந்து கேள்வி வரலாம். அப்போதும் சொல்வாள், முருகனின் மனைவிதான். ஆனால் இப்போது மகா லஷமியின் மகள்.
இப்படிக்கு
இவள் காத்தாயி
ராமநாதபுரம் அருகேயுள்ள சிற்றூரில் அருள் பாலிக்கும், எங்கள் குலதெய்வமான காத்தாயி மற்றும் பச்சைவாழியம்மனை வணங்கி வந்தோம், இறைவனின் ஆசீர்வாதத்தால், இன்று மும்பையில் பரிபூரணமாக உள்ளோம். என் குலதெய்வம் பற்றிய சிறுகதையை வெளியிட்ட, இந்த தலத்துக்கு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எல். ஆர். வினோத்
இந்த சிறுகதைக்கு நன்றி. இது உண்மைச் சம்பவத்தின் பின்னணி என, நினைக்கிறேன். நான் கடலூர் மாவட்டம், மஞ்சக் குப்பத்தை சேர்ந்தவள். அந்த கோவிலுக்கு செல்ல நினைக்கிறேன், சரியான வழித்தட முகவரி தெரியவில்லை.
சிறுகதைத் தளத்திற்கு எனது பாராட்டுக்கள்
ச. மீனாட்சி