இனியொரு காதல் செய்வோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 11, 2025
பார்வையிட்டோர்: 8,397 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏன் அப்படி சொல்கிறீர்கள்”

“காஞ்சனா நீ யாரிடம் பேசுகிறாய் என்பது புரிகிறதா?”

“நன்றாக புரிகிறது. ஒரு ஆன்மகனிடம் இந்தப் பெண்மகள் பேசுகிறேன். ஏதோ கேட்க கூடாததைக் கேட்டு விட்டதாக ஏன் என்னைப் பார்க்கிறீர்கள்?”

“உனக்கு எப்படி புரியவைப்பது என்பது புரியவில்லை. ஆபீஸ் முடிந்த பிறகு இதைப் பற்றி பேசலாம். நீ முதலில் போய் வேலையைப் பார். ஏற்கனவே ஆபீஸில் நம் இருவரைவும் பற்றி கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர்.”

“அதை ஏன் உண்மையாக்க கூடாது?.”

“அது உண்மை இல்லை என்றுதான் மற்றவர்களுக்கு தெளிவுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.”

“நான் எதிலே குறைந்தவள், எனக்குத் தகுதியில்லை என்று நினைக்கிறீர்களா?”

“இனி உன்னிடம் பேசிப் பயனில்லை, உண்மையைச் சொன்னால் நீ ஏற்றுக் கொள்ளமாட்டாய். ஆமாம். நீ எனக்குத் தகுதியில்லை.”

“நீங்கள் மானேஜர். நான் ஸ்டெனோ. அதனால்தானே இப்படி பாராபட்சம் காட்டுகிறீர்கள். நம்முடைய மார்க்கெட்டிங் ஆபீஸர் ஷீலாவிடம் மட்டும் உங்களால் சிரித்துப் பேச முடியும். நேரடியாகச் சொல்லுங்கள். நான் ஷீலாவைக் கட்டிக் கொள்ள போகிறேன் என்று.”

“சீ அசடு மாதிரி அழுதுகொண்டு, முதலில் கண்ணீரைத் துடை காஞ்சனா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் பெண்ணே! நான் ஏற்கனவே காதலித்து அவளை இழந்ததால் இனி என் வாழ்வில் காதலோ, கல்யாணமோ, கத்தரிக்காயோ எதுவுமே கிடையாது என்று இருப்பவன் என்பதையாவது புரிந்து கொள்.”

“என்னது?”

“திகைப்படையாதே. ஒருவர் வாழ்வின் முழு பக்கங்களும் மற்றவர்களுக்கும் தெரிவதில்லை.”

“ஒருமுறை காதல் தோல்வியடைந்ததால் திரும்ப காதலிக்கவோ திருமணம் செய்து கொள்ளவோ கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன?”

“உனக்கு என் நிலைமை தெரியாது காஞ்சனா? நீ இங்கே இவ்வளவு நேரமிருப்பதே தவறு. என் கேபினுக்குள் அதிக நேரம் செலவழிக்காதே என்று பல முறை சொல்லிவிட்டேன். நீ கிளம்பு.”

“நான் யாருக்கும் பயப்படவில்லை சார். ஒரு பெண், நான் மனதை திறந்து சொன்ன பிறகும் எனக்கு ஒழுங்காக பதில் கிடைக்காமல் இந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை.”

“காஞ்சனா. நான் காதலிக்காத… என்னை விரட்டி விரட்டிக் காதலித்த போதும் எனக்கு விருப்பமில்லாத பெண் என்னைவிட்டுப் போனதற்காக தான் இன்னும்… இனி எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற நிலையில் இருக்கிறேன்.”

“எனக்குப் புரியும்படியாகச் சொல்லுங்கள். நான் புரிந்து கொண்டால் கிளம்புகிறேன்.”

“அப்படி உட்கார்.”


பரமேஸ்வரன் காரில் வந்து இறங்கியபோது “ஹலோ பரமு, ஹாப்பி பர்த் டே” என்றவாறு கையில் ஒரு சிவப்பு ரோஜாவை கொடுத்தாள் இனியா.

“உன்னிடம் எத்தனை முறை சொல்லியாகிவிட்டது. இனியா எனக்கு உன் மேல் ஈர்ப்பு வரவில்லை. எனக்கென்று வேறு யாரோ பிறந்திருக்கிறதாகத்தான் உணர்கிறேன். நீ வீணாக எனனை விரட்டி விரட்டிப் பின் தொடர்வதில் அர்த்தமேயில்லை” என்று ரோஜாவை வீசி எறிந்துவிட்டு வேகமாக நடந்தான்.

அன்று இடைவேளையில் திரைப்படம் பார்க்கப் பிடிக்காமல் வெளியே வந்து சிகரெட் வாங்கி, தீப்பெட்டி தேடிய போது கையில் லைட்டரை வைத்துக் கொண்டு “நான் சிகரெட்டைக் கொளுத்தட்டுமா?” என்றாள் இனியா.

“இது எனக்குச் சரியாகப் படவில்லை இனியா.”

“பரமேஸ்வரன் உங்களைத் தொடர்வதில் எனக்கு இனிப்பாக இருக்கிறதே”

மறுநாள் இரயில்வே ஸ்டேஷனில் பத்திரிகை வாங்கிக் கொண்டு சில்லறை தேடியபோது “இந்தப்பா ரெண்டு ரூபாய்” என்று தன் பர்ஸில் இருந்து எடுத்துத் தந்தாள் இனியா.

“வாட் நான்சென்ஸ் ஆல் தீஸ் திங்க்ஸ். இனியா என் பொறுமைக்கு எல்லை உண்டு. இனி நான் போலீஸிற்கு போக வேண்டியதிருக்கும்” பரமேஸ்வரன் இரயில்வே ஸ்டேஷன் என்று உணராமல் கத்தினான்.

எல்லாப் பயணிகளும் திரும்பிப் பார்க்க “எனக்கு வருத்தமே கிடையாது பரமு. நீங்கள், போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தால் நான் ஜெயிலுக்கு போகத் தயார்” என்றாள் இனியா.

“என் பொறுமையை ஏன் சோதிக்கிறாய். பாடிகார்டு மாதிரி பின்னாலே சுற்றிச் சுற்றி வருகிறாய். என்ன வேண்டும் உனக்கு?”

“நீங்கள் வேண்டும்… உங்கள் காதல் வேண்டும்…என்னை நீங்கள் காதலிக்க வேண்டும்.”

“இந்த ஜென்மத்தில் நடக்க முடியாத காரியம்”

“நான் நடக்க வைக்க முயற்சிக்கிறேன்.”

“எனக்கு உன்மீது ஈர்ப்பு வரவில்லை, இரக்கம்தான் வருகிறது.”

“அந்த இரக்கத்தை காதலாக மாற்றிக் கொள்ளுங்கள்.”


“இவ்வளவு சொல்கிறீர்களே, அந்த இனியா என்ன ஆனாள்?” என்றாள் காஞ்சனா.

“அவள் எப்படியானால் உனக்கென்ன?”

“…”

“என்னை இப்படி விரட்டி விரட்டிக் காதலித்த இனியாவையே என்னால் காதலிக்க முடியவில்லை. நீ வேறு வந்து தொந்தரவு செய்து கொண்டு.. போய் வேலையைப் பார்.”

“சார். இனியா எங்கே இருக்காங்க சொல்லுங்க”

“வேண்டாம் காஞ்சனா. நீ ரொம்ப வருத்தப்படுவாய்”

“பரவாயில்லை சொல்லுங்கள்”.


அந்த ஆறு மாடிக் கட்டிடத்திற்கு மேல் நின்று கொண்டு “மிஸ்டர் பரமேஸ்வரன் என்னைக் காதலிக்க போகிறீர்களா? இல்லைக் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளட்டுமா?” என்றாள் இனியா.

கீழே இருந்து ரசித்த பரமேஸ்வரன் “இனியா நீ கீழே விழு. எனக்குப் பார்க்க ஆசையாக இருக்கிறது” என்று சப்தமாக சிரித்தான்.

“நான் உண்மையாக குதித்து விடுவேன்.”

“இன்றோடு என் பிரச்சனை தீர்ந்தது என்று தலை முழுகிவிடுவேன்.”

“அப்படியானால் என்னைக் பாற்ற முயற்சி செய்ய மாட்டீர்களா?”

“கண்டிப்பாக மாட்டேன்.”

பரமேஸ்வரன் எதிர்பார்க்காதவாறு ‘தொபுக்கடீர்’ என்று மேலேயிருந்து கீழே இனியா குதித்து விட ரத்தச்சேறு தரையில் எங்கும் சிதறியது.


“காஞ்சனா நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அசட்டுப் பெண் கீழே குதித்துவிட்டாள். அப்படியே அள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். டாக்டர்கள் கையை விரித்து விட்டார்கள். போலீஸ் கேஸ் எத்தனை பிரச்சனைகள். நான் வெறுமனே கேலி பண்ணுகிறாள் என்று நினைத்தேன். உணமை அரியாது கீழே விழுந்து தன்னை மாய்த்துக் கொள்வாள் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அந்த இனியா இறந்த பிறகு என் மனதில் இடம் பிடித்துக் கொண்டாள். அவள் நினைவோடு இந்த வாழ்க்கையை நான் கடத்திக் கொண்டு போய் விடுவேன். தன் காதல் நிறைவேறவில்லை என்பதற்காக அவள் உயிரைத் தியாகம் செய்தாள். அவள் காதலை நான் ஏற்றுக் கொண்டு என் வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருக்கிறேன்” கண்ணாடி யைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார் பரமேஸ்வரன்.

“நான் ரொம்ப வருத்தப்படுறேன்’ சார். ஆனால் இறந்து போனவர்களுக்காக எத்தனை காலம் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை, மனைவி எல்லாம் தேவையில்லையா?”

“இல்லை காஞ்சனா. என் காதலி, மனைவி, வாழ்க்கை எல்லாமே இனியாதான். நான் இப்போது விடோயர். கல்யாணம் பண்ணாமல் இருந்தாலும் இனியாதான் எல்லாமாகி விட்டவள் எனக்கு.”

“சார். நான் என்ன சொல்ல வர்றேன்னா” என்று இழுத்தாள் காஞ்சனா.

“யு மே கெட் அவுட். இனியாவது புரிந்து கொள். வேறு வாழ்க்கைக்கு தயாராகு. போய் வா” என்றார் பரமேஸ்வரன்.

– தின பூமி, 22-02-1998.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *