இது வரை நிஜம், இனிமேல் பொய்




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இப்போதைக்குக் குணமாயிட்டார். ஆனால் ஏஜ் இஸ் எகென்ஸ்ட் ஹிம். கவனமாப் பார்த்துக்குங்கோ” என்று பாபுவிடம் தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு நோயாளியிடம் திரும்பினார் டாக்டர். “இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடறேன் சார். நீங்க ஆத்துக்குப் போகலாம். மருந்துகளை மட்டும் ஒழுங்கா சாப்பிட்டுண்டு வாங்கோ. என்னைக் கேட்டால் இன்னும் ரெண்டு நாள் இருங்கோன்னு சொல்வேன். நீங்க ஆத்துக்குப் போகணும், ஆத்துக்குப் போகணும்னு அவசரப்படறேளே?” என்றார். (டாக்டருக்கு ஒன்றும் பிராமணாள் பாஷையில் தனி அபிமானம் கிடையாது. ஆனால் பிராமணர்களிடம் பிராமணாள் பாஷையிலும் மற்றவர்களிடம் மற்றவர் பாஷையிலும் பேசணும் என்று தொழில் ரீதியாக ஒரு கொள்கை வைத்திருந்தார்.)
பெரிய டாக்டர். பெரிய ஆஸ்பத்திரி. ஆகவே மூன்று ஜூனியர் டாக்டர்களும் இரண்டு நர்ஸ்களும் பயபக்தியுடன் வைதீகமாகத் தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்துப் பேசாமல், அரைக் கண் மூடி,மேலே பார்த்துக் கொண்டு, மருந்துகளின் பெயர்களையும், வேளை களையும், ஆகார அனுஷ்டானங்களையும் சொன்னார் டாக் டர். அவர்கள் குறித்துக் கொண்டதும், “ஓ.கே. மிஸ்டர் நாராயணன்” என்று கூறி, பரிவாரங்களுடன் விடைபெற்றுக் கொண்டார்.
“தாங்க்ஸ் டாக்டர்” என்று நாராயணன் சொல்ல வில்லை. அவருடைய தலைமாட்டில் நின்றிருந்த அலமேலு தான் சொன்னாள்.
அவர்கள் போனதும் கணவனின் பக்கம் வந்து, “இப்ப எப்படி இருக்கு, பாபுப்பா?” என்று கேட்டாள்.
நாராயணன் உடனே பதில் சொல்லாததால் பயம் ஏற்பட்டவளாக, “பாபுப்பா, இப்ப எப்படி இருக்குன்னு கேட்டேன்” என்றாள் மறுபடி கொஞ்சம் உரத்த குரலில்.
பாபுவுக்குப் பிறகு இரண்டு பெண்ணும் ஒரு பிள்ளையும் பிறந்துவிட்டபோதிலும், மூத்தவன் பாபுவின் பெயரைச் சொல்லித்தான் அக்கம்பக்கத்தில் எல்லாப் பெண்மணிகளும் குறிப்பிடுகிறார்கள். பாபு ப்ளஸ் அப்பா: பாபுப்பா. பாபு ப்ளஸ் அம்மா = பாபும்மா. அதனால் அவளும் என்னவோ, ‘உங்களைத்தானே’வை போடுவதில்லை. ‘பாபுப்பா’தான்.
நாராயணன் மெதுவே கண்ணைத் திறந்து, தாடி வளர்ந் திருந்த மோவாயைச் சொறிந்து கொண்டார். “இப்ப என்ன, எப்பவுமே எனக்கு நன்னாத்தான் இருக்கு” என்றார். குரல் பலவீனமாயிருந்தாலும் தெளிவாக இருந்தது. “நீங்க எல்லாருமா சேர்ந்து ஆய் ஊய்னு அமர்க்களம் பண்ணிட்டீங்க…”
“சொல்ல மாட்டேளோ? முந்தா நாள் நீங்க இருந்த இருப்புக்கு, அப்பப்பா! நினைச்சப் பார்க்கவே பயமாயிருக்கு. உப்பிலியப்பன்தான் இந்த மட்டுக்குக் காப்பாத்தினான்” என் றாள் அலமேலு. அவள் கண்களில் நீர் தளும்பியது. துடைத்துக் கொண்டு, “ஏன் பாபுப்பா, நான் சொல்றேன்னு கோபிச்சுக்காதேள். டாக்டர் சொல்ற மாதிரி இன்னும் இரண்டு நாள் இங்கே இருந்துட்டுத்தான் போவோமே?”
”ஊகூம்” என்றார் நாராயணன்.
“ஆஸ்பத்திரியோட சௌகரியம் வீட்டிலே வராதுப்பா” என்றான் பாபு. அப்பாவிடம் வாதாட என்றைக்குமே அவனுக்குத் தயக்கம். “உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போன் பண்ணியதுமே ஆம்புலன்ஸ் அனுப்பிச்சாங்க. ஐஸியூவிலே மூணு நாள் வச்சிண்டு ஆக்ஸிஜன் கொடுத்தாங்க. அரை மணிக்கொருதரம் டாக்டர்களும் நர்ஸ்களும் வந்து பார்த்துக்கிறாங்க. பெருமாள் கிருபையிலே நாங்க எல்லாரும் நல்லபடி இருக்கோம். பணத்தைப் பார்க்காதீங்க. யோசனை பண்ணிச் சொல்லுங்கப்பா…”
”ஊகூம். வீட்டுக்குப் போகணும். அங்கே ஒரு காரியம் இருக்கு.”
அலமேலு ஒரு பெருமூச்சுடன், “ஹும்… உன் அப்பா பிடிவாதத்தை யாராலும் மாத்த முடியாது” என்று சொல்லி விட்டு, “இங்கேயே இரு. நான் கீழே போய்ப் பணம் கட்டிவிட்டு வரேன். டாக்டர் என்னமோ டிஸ்சார்ஜ் என்று சொல்லிட்டாரேயொழிய, இந்த பில் வரணும், அந்த ஷீட் வரணும்னு ரெண்டு மணி நேரம் பண்ணிடுவா. பல தடவை அனுபவம் ஆயிடுத்து. ராகு காலத்துக்கு முன்னாலே புறப்பட்டா தேவலை” என்றவாறு கிளம்பினாள்.
இரண்டு மணி நேரம் ஆகாவிட்டாலும் முக்கால்மணி நேரம் போலாகிவிட்டது பில் ஸெட்டில் செய்ய. பாபு அறை வாசலில் நின்றிருந்தான், அவளுக்காகக் காத்திருப்பவன் போல.
”என்னடா, அப்பா என்ன பண்றார்?”
“சும்மா படுத்துண்டு இருக்கார். வீட்டுக்குப் போய் என்ன காரியம், இங்கே தான் இருங்களேன்னு சொன்னேன். என்னவோ மாம்பலத்தில் ஒரு மரக்கட்டில் இருக்கு, அதை எடுத்துண்டு வந்து படுத்துக்கணும்னு சொல்றார். எனக்குப் புரியலே.”
அலமேலு குழம்பியவளாக உள்ளே போய், “ஏதோ மாம்பலம், மரக்கட்டில்னு சொன்னேளாமே? எதுக்கு அந்தப் பேச்செல்லாம்?” என்று கேட்டாள்.
நாராயணன் அரைத் தூக்கத்தில் இருந்தார். ”உனக்கு எல்லாம் மறந்து போச்சு. எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு” என்றார்.
அலமேலுவுக்கு மறக்கவில்லை. ஆனால் அதைப் பற்றிப் பேசத்தான் பிடிக்கவில்லை. கப்போர்ட்டிலிருந்த பிளாஸ்க், சர்க்கரை டப்பா, தட்டு, ஸ்பூன், விகடன், கல்கி எல்லாவற்றையும் பிக்-ஷாப் பைகளிலும் பிரம்புக் கூடைகளிலும் அடைத்துக் கொண்டாள். “இந்தா பாபு, இந்த மீந்துபோன மாத்திரை, இஞ்செக்ஷன் எல்லாத்தையும் கீழே இருக்கிற பார்மஸியிலே கொண்டு போய்க் கொடு; வாங்கிப்பா. ஆனா பணம் தரமாட்டா. ஏதாவது பண்டம் வாங்கிக்கலாம். ஹார்லிக்ஸ் தீர்ந்து போச்சு. அது வேணா வாங்கிக்கோ. அப்படியே வண்டியிலே டிரைவர் இருக்கானான்னு பார். டீ குடிக்கப் போயிடாதேன்னு சொல்லு.”
பாபு போவதையே பார்த்தவாறு நாராயணன் எழுந்து உட்கார்ந்திருந்தார். காலைத் தொங்கப் போட்டிருந்தார். காலைத் தொங்கப் போட்டிருந்தாலும் தரையைத் தொட வில்லை. கட்டில் உயரமாயிருந்ததே காரணம். கொஞ்சம் எம்பித்தான் இறங்க வேண்டும். முந்தின முறை இங்கே வந்தபோது, டாக்டரிடம் இதைப் பற்றிச் சொல்ல, ‘ஆஸ்பத்திரி ரெகுலேஷன்ஸ்படி இந்த உயரம் இருக்க வேண்டும்’ என்று சொன்னது ஞாபகம் வந்தது. கட்டிலைப் பற்றிக் கூட ஆஸ்பத்திரிகளுக்குப் பொதுவான சட்டம் உண்டா என்ன என்று நினைத்துக் கொண்டவர், மீண்டும் கட்டிலைக் குறித்தே சிந்தனை திரும்பியதால், “ஏன் அலமு, நிஜமாகவே உனக்கு அந்த மரக் கட்டிலை ஞாபகமில்லே?” என்று கேட்டார்.
“இல்லையே?” என்று அலமேலு மனமறிந்து பொய் சொன்னாள்.
“மாம்பலத்தை விட்டுக் கிளம்பறச்சே விட்டுட்டு வந்தமே, அதைச் சொல்றேன். நாப்பத்தஞ்சு வருஷமானாலும் எனக்கு நன்னா நினைவிருக்கு.”
“எனக்கும் மறக்கலே” என்று அழுத்தமாகச் சொன்னாள் அலமேலு. “அதைத் தொலைச்சுத் தலை முழுகணும்னு தானே பத்து ரூபாய்க்கு வித்துட்டு வந்தோம். இப்ப அதைப் பத்தி என்ன பேச்சு?”
“அந்தக் கட்டில் திரும்பக் கிடைச்சால் தேவலை. கடை சிக் காலத்திலே, போற உயிர் எங்க அம்மாவோட கட்டில்லே படுத்துண்டுதான் போகட்டுமே?”
“சமர்த்து வழியறது, கம்முனு இருங்கோ” என்று அலமேலு சொல்லிக் கொண்டிருந்தபோது பாபு திரும்பி வந்து, ஒரு சாக்லேட் பாக்கெட்டைப் பிரித்து அம்மாவிடம் ஒரு துண்டு விண்டு கொடுத்தான். “ஹார்லிக்ஸ் விலை போக மீதியும் கொஞ்சம் பணம் இருந்தது. இதை வாங்கினேன். அப்பா குணமடைஞ்சதுக்காக ஸெலிப்ரேஷன்” என்று சொல்லிச் சிரித்தான்.
“எனக்கு இல்லையா?” என்று கையை நீட்டினார் நாராயணன்.
“ஊகூம். ஸ்வீட் பக்கம் தலைவச்சப் படுத்துக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.”
”பாவம்டா அப்பா” என்று தன் விள்ளலிலிருந்து கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தாள் அலமேலு.
அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் பம்பாயிலிருந்து வந்திருந்த ஜலஜாவும், கௌஹாத்தியிலிருந்து வந்திருந்த கல்யாணியும், மதுரையிலிருந்து வந்திருந்த வைகுண்டனும், ‘உடம்பைப் பார்த்துக்குங்கோப்பா’ என்று ஆளுக்குப் பத்து முறை சொல்லிவிட்டுத் தத்தம் ஊர்களுக்குத் திரும்பினார்கள். பாபு உள்ளூரிலேயே சார்ட்டர்டு அக்கவுண்டெண்ட். ராதாகிருஷ்ணன் சாலையில் ஆபீஸ் நடத்துகிறான். கல்யாணமாகாதவன். வருகிற பெண்களையெல்லாம் இது சரியில்லை, அது சரியில்லை என்று தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறான்.
”வீடு வெறிச்சுனு ஆயிடுத்து” என்றாள் அலமேலு.
மாத்திரைகளைக் காலை, பகல், இரவு சாப்பாட்டுக்கு முன், பின் என்றெல்லாம் வகைப்படுத்தி, சின்னச் சின்னப் பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைப்பது அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. இப்போதும் அதைத்தான் செய்துகொண்டிருந்தாள்.
“பாபு, ஆபீசுக்குக் கிளம்பிட்டியா?” என்று கேட்டார் நாராயணன்.
“ஆமாம்ப்பா. ஒரு வாரமா எல்லாம் போட்டது அப்படியே கிடக்கு.”
”சாயந்தரம் திரும்பி வர்றப்போ, டயம் இருந்தால் மாம்பலத்துக்குப் போ. அயோத்யா மண்டபத்துக்கு எதிரே ஒரு தெரு போறது இல்லையா? அதிலே நேரா போனால் லெஃப்டில் சின்னப்பா தெருன்னு ஒண்ணு இருக்கு…”
”உங்களுக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு” என்றாள் அலமேலு.
“அங்கே என்ன வேணும், சொல்லுங்கப்பா. அம்மா கெடக்கிறா.”
“பாபு, உனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு. அவர் ஏதாவது சொல்லிண்டிருப்பார். நீ புறப்படு” என்றாள் அலமேலு.
”அப்பா சொல்றதைச் சொல்லட்டுமே அம்மா? நீ ஏன் தடுக்கிறே?” என்ற பாபு, “சொல்லுங்கப்பா” என்று கூறி விட்டு நாசூக்காகக் கைக்கடியாரத்தையும் பார்த்துக் கொண் டான்.
“அந்தச் சின்னப்பா தெருவிலே எட்டாம் நம்பர் வீட்டிலே நானும் அம்மாவும் கல்யாணம் ஆன புதிதில் குடியிருந்தோம். காலி பண்ணிண்டு வர்றப்ப எல்லாச் சாமான்களையும் எடுத்துண்டோம். ஒரு மரக் கட்டிலை மட்டும் அடுத்த வீட்டிலே இருந்த ஒருவருக்கு வித்துட்டு வந்துட்டோம். அது எங்க அம்மா அப்பா காலத்துக் கட்டில். மாப்பிள்ளைத் திண்ணை மாதிரி சாய்மானத்தோட இருக்கும். விலை கொடுத்தாவது அதை வாங்கிண்டு வர முடியுமா பார்” என்றார் நாராயணன்.
மாப்பிள்ளைத் திண்ணை, சாய்மானம் இதெல்லாம் ஒரு சார்ட்டர்டு அக்கவுண்ட்டெண்ட் இளைஞனுக்கு எப்படிப் புரியும்? ஆபீசுக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. ‘சரிப்பா, விசாரிக்கிறேன்’ என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.
கார் கிளம்புகிற சத்தம் கேட்ட பிறகு, சமையல்கார அம்மாளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து விட்டு, அலமேலு கணவனிடம் வந்து, “எதுக்கு அந்தச் சனியன் பிடிச்ச கட்டில்? அதுக்குப் பயந்துதானே மாம்பலத்தை விட்டே வந்தோம்? நீங்க உடம்பும் கிடம்புமா இருக்கிற இந்தச் சமயத்திலே என்னத்துக்கு அதெல்லாம்?” என்றாள்.
“உடம்பும் கிடம்புமா இருக்கிறதாலேதான் அதிலே படுத்துண்டு பிராணனை விடலாம்கிறேன்” என்று நாராயணன் கோபமாகச் சொன்னார்.
“வெள்ளிக்கிழமையும் நாளுமா என்ன பேச்சுப் பேசறேள்?” என்று கணவனைக் கடிந்து கொண்டாள் அவள். “முதல்லே, அது நாம்ப விட்டுட்டு வந்த வீட்டிலே இருக்காது. அப்புறம் என்ன?” என்று பேச்சை முடித்துக் கொண்டு மற்ற வேலைகளைக் கவனிக்க உள்ளே போய்விட்டாள்.
சுவரில் மாட்டியிருந்த அம்மா, அப்பாவின் படத்தையே பார்த்தபடி படுத்திருந்தார் நாராயணன். அப்பாவை அவருக்கு நினைவில்லை. அவருக்கு நாலைந்து வயது இருக்கும்போதே போய்விட்டார். அம்மாதான் ஒரு சமையற்காரருக்கு உதவியாக இருந்து கொண்டு, கல்யாண வீடுகளில் எச்சில் எடுத்து, திவச வீடுகளில் திருவத்தியானத் தளிகை செய்து கொடுத்து, எந்தக் கெட்ட பெயரும் வாங்காமல் நாராயணனை வளர்த்து ஆளாக்கி, வக்கீலுக்குப் படிக்க வைத்து, கல்யாணமும் பண்ணி வைத்தாள்.
மாம்பலத்தில் குறைந்த வாடகையில் சுலபமாக வீடு கிடைத்த காலம் அது. நாராயணன், அலமேலு, அம்மா, அம்மாவுக்கு அத்தையோ என்னவோ, ஒரு பாட்டி இவ்வளவு பேரும் சௌகரியமாக ஒரு முழு வீட்டில் குடி இருக்க முடிந்தது. அந்த அத்தைக்கு ஒரு உதவாக்கரை தம்பி. எப்போது எந்த ஊரில் என்ன செய்கிறார் என்பது தெரியாது. நடுநடுவே வருவார், சில நாள் தங்குவார், போய் விடுவார்.
நாராயணனுக்கு முதல் குழந்தை பிறந்த சமயம் குடும்பம் ஓரளவு தலையெடுத்திருந்தது. சிறுகச் சிறுகப் பாத்திரம் பண்டம் வாங்கியதெல்லாம் நாராயணனுக்கு நினைவிருக்கிறது. ஆனால் அந்த மரக் கட்டில் எங்கே இருந்து வந்தது என்று மட்டும் தெரியாது. ‘உன் அப்பா காலத்தது’ என்று அம்மா அடிக்கடி சொல்வாள் – தேக்கு மரக் கட்டில். ஒன்றரைப் பேர் வசதியாக, இரண்டு பேர் சிரமப்பட்டுப் படுத்துக் கொள்ளும்படி அகலம் கொண்டது. பழைய மரத்துக்கே உரித்தான ஒரு நோஞ்சான் நிறம்.
அந்த அத்தைக் கிழவியின் தம்பி ஒருநாள் ஊரிலிருந்து வந்தார்.(கிண்டியில் ரேஸ் நடக்கும் தினங்களில் அவர் சென்னைக்கு வருகிறார் என்பது நாராயணனின் சந்தேகம்.) மறுநாள் வயிற்றுப்போக்கு என்று படுத்தார் அந்த மரக் கட்டிலில். கல்தூண் மாதிரி இருந்த ஆசாமி நாலாம் நாள் அந்தக் கட்டிலிலேயே காலமானார். எல்லா இறுதிக் காரியங்களையும் நாராயணன்தான் செய்தார்.
தம்பி இறந்து போன சோகத்தில், ஒரு மாதத்துக்கெல்லாம் அந்த அத்தைக் கிழவி ஃப்ளூ காய்ச்சலில் படுத்தாள். அந்தக் கட்டிலிலேயே கண்ணை மூடி விட்டாள்.
இந்த இரண்டு மரணங்களும் நாராயணனைப் பாதிக்க வில்லை. ஆனால் – அம்மா!
‘இனிமேல் எனக்கு என்னடா வேணும், நாராயணா? நீ நல்ல நிலைமைக்கு வர்றதைப் பார்த்தாச்சு. மகாலட்சுமி மாதிரி மாட்டுப்பெண் அலமேலுவைப் பார்த்தாச்சு. தங்க விக்கிரகமா என் பேத்தியைப் பார்த்தாச்சு. திருப்தியா போறேண்டா…’ என்று சொன்னபடி நாராயணன் மடியில் தலைவைத்துக் கொண்டு அதே கட்டிலில் உயிரை விட்டாள் அம்மா.
அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள், சொப்பனத்திலும் நினைக்காத கொடுமை நிகழ்ந்தது.
நாராயணனின் முதல் குழந்தை ஒன்றரை வயதுப் பிஞ்சு -டிப்தீரியா கண்டு பேச்சு மூச்சற்று அந்தக் கட்டிலில் படுத்திருந்தது. குடும்ப டாக்டரை ஓடிப் போய் அழைத்து வந்தான் நாராயணன். அவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்ததுமே, ‘நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான், அலமேலு’ என்று சொல்லி விட்டுத், திரும்பி விட்டார். ‘டாக்டர்! நிஜமா டாக்டர்!’ என்று நாராயணன் அலறின அலறல் இன்றைக்கும் கூட அலமேலுவின் காதில் ஒலிக்கிறது.
அடுத்தடுத்து இப்படி நிகழவே நாராயணனையும் அலமேலுவையும் திகில் பிடித்து ஆட்டியது.
இந்த மாம்பலமே வேண்டாம். வேறே எங்காவது போய் விடுவோம் என்று மட்டுமே அலமேலு சொன்னாள்.
நாராயணன் ஒரு படி மேலே போய், “வீட்டைக் காலி பண்றப்போ எதை எடுத்துண்டு போனாலும் இந்த மரக் கட்டிலை மட்டும் எடுத்துண்டு போகக் கூடாது. வீட்டிலே இப்ப மிஞ்சியிருப்பது நீயும் நானும்தான். அடுத்த குறி நம்ம ரெண்டு பேரில் ஒருத்தருக்குத்தான் இருக்கும்” என்றார்.
அன்றைக்கு அப்படிச் சொல்லி பத்து ரூபாய் விலைக்கு அடுத்த வீட்டில் இருந்த ஒருவருக்கு விட்டு விட்டு வந்த கட்டிலை இன்றைக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஏன் பிடிவாதம் பிடிக்கிறார்? அதுவும் அதிலே படுத்து…
நினைக்கவே பயமாயிருந்தது அலமேலுவுக்கு.
ஒருவாரம் வரை நாராயணன் அந்தப் பேச்சை எடுக்காமல் இருந்தார். மறந்து விட்டார் போலிருக்கிறது என்று அலமேலு மனசுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்ட சமயம்…
ஆபீசிலிருந்து திரும்பிய பாபுவிடம், “என்னடா, அந்த மாம்பலம் தெருவுக்குப் போனாயா?” என்று கேட்டார்.
“இல்லேப்பா. ஒரு முக்கியமான கிளையன்ட் ஃபெரா சிக்கலில் மாட்டிண்டிருக்கார். அதைச் சரிப்படுத்தவே மண்டையை உடைச்சிண்டிருக்கேன். இன்னும் ஒரு மாசத்துக்கு மூச்சு விட நேரம் இருக்காது” என்றான் அவன். “வேணா வேறே யாரையாவது அனுப்பி விசாரிக்கச் சொல்றேன்.’
“சொந்தப் பிள்ளை நீயே செய்ய மாட்டேங்கறப்போ வேற எவன் வந்து செய்யப் போறான்?”
“செய்ய மாட்டேன்னு சொல்லலேப்பா. கொஞ்சம் டயம் கொடுங்கோ.”
கொடுத்தார். மேலும் ஒரு மாதம் ஓடியது.
ஃபெரா கிளையன்ட் விவகாரம் முடிந்ததும், வேறொரு கிளையன்ட்டின் இன்கம்டாக்ஸ் விவகாரம் முளைத்தது.
“அப்பாவுக்குக் கோபம் வந்துடப் போறதுடா, பாபு” என்று பிள்ளையின் காதைக் கடித்தாள் அலமேலு.
அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில், டிரைவருக்கு லீவாகையால், தானே காரை ஓட்டிக் கொண்டு போய் வந்தான்.
”அப்பா, சின்னப்பா தெரு, பெரிய பெரியப்பா தெருவா ஆயிட்டுது. இப்ப மாம்பலமே நீங்க விட்டுட்டு வந்த மாம்பலம் இல்லே. அம்மாடி… என்ன கடை… என்ன அபார்ட்மென்ட்.. என்ன வியாபாரம்…” என்று அடுக்கிக் கொண்டே போனான்.
நாராயணன் பொறுமை இழந்து, ‘என்ன ஆச்சு, சொல்லு” என்றார். “அந்தத் தெருப் பூரா சின்ன வீடுகள் போய்ப் பெரிய வீடுகள் வந்துடுத்து. நீங்க இருந்தது எட்டாம் நம்பர்னு சொன்னேள் இல்லியா? ஒன்பதாம் நம்பர் இப்ப! அப்பார்ட்மென்ட்கள் கட்டிக் காம்ப்ளெக்ஸா ஆயிடுத்து.”
“அப்படின்னா, காம்ப்ளெக்ஸுக்கு இடம் கொடுத்தவாளுக்கு ஒரு ஃப்ளாட் கொடுத்திருப்பாளே? விசாரிச்சியா?”
“அதாம்ப்பா சொல்ல வரேன். கோவிந்த்ராஜன்னு ஒருத்தர்…”
“அவரேதான், அவரேதான்” என்று அவசரப்பட்டார் நாராயணன்.
“அவர் பரமபதம் போய் ரொம்பக் காலமாகிறதாம். அவரோட சன் நைரோபியில் இருக்கிறானாம்.”
“இதை உனக்கு யார் சொன்னா?”
”அந்த காம்ப்ளெக்ஸிலே இருக்கிற ஒருத்தர்.”
”அவர்கிட்டேயே அந்தப் பையனோட நைரோபி அட் ரஸைக் கேட்டுண்டு வர்றதுக்கென்ன?”
“கேட்காமல் இருப்பேனாப்பா? அவருக்குத் தெரியா தாம். அந்தப் பையனோட ஸிஸ்டர் நுங்கம்பாக்கத்திலே திருக்காள், அந்தப் பக்கம் போனா வாங்கி வைக்கிறேன்னார். அப்புறம்…”
“அப்புறம்?”
“வேண்டாம். சொன்னா கோபிப்பேள்.”
”இல்லே, சொல்லு.”
“எதுக்கு இவ்வளவு தூரம் விசாரிக்கிறேன்னு அந்த மனுஷன் கேட்டார். விஷயத்தைச் சொன்னதும் சிரிச்சார். ‘பழைய வீட்டை வித்து, இடிச்சு, புது ஃப்ளாட் கட்டி, குடி வர்றபோது ஓட்டை உடைசலையெல்லாமா ஒருத்தர் வச்சிண்டிருப்பார்? தூக்கி வாசல்லே போட்டிருப்பார். அதுவும் நாற்பத்தஞ்சு வருஷத்துக்கு முந்தின சமாசாரம்!’னு சொல்லிச் சிரிக்கிறார்.”
“சிரிச்சால் சிரிக்கட்டும். அப்படியெல்லாம் இருக்காது. அந்தக் கட்டிலைப் பார்த்தா யாருக்கும் அதை எறியத் தோணாது” என்றார் நாராயணன். புருவத்தை உயர்த்தி, தலையை மேலும் கீழுமாக லேசாய் ஆட்டிக் கொண்டார், ஏதோ ஒரு பழைய சம்பவத்தை அசை போடுகிறவர் போல.
அலமேலு வாய் திறவாமல் நின்றிருந்தாள். இந்த மரக்கட்டிலைப் பற்றிப் பேச்சு வந்தாலே மௌனமாகி விடுவது என்று உறுதிபூண்டிருந்தாள் அவள்.
“அந்தக் கட்டிலுக்கு ஒரு ஸ்பெஷல் அடையாளம் கூட இருக்கு” என்று மெதுவே விவரித்தார் நாராயணன்.
”ஒருநாள் ஆப்பிள் பழத்தை அதிலே வச்சு நறுக்கிச் சாப்பிட்டுண்டிருந்தேன். பழம் தீர்ந்து போச்சு. கத்தி பிடிச்ச கை சும்மா இருக்காதே! கட்டில் நடுவில் ‘நாராயணன்’ என்று கீற ஆரம்பித்தேன். அதுக்குள்ளே யாரோ கூப்பிட்டா. அப்படியே விட்டுட்டேன். என்.ஏ என்று நான் கீறினது அப் படியே இருக்கும். ஏ கூட முழுசாய் இருக்காது. பாதி எழுத் துத்தான் இருக்கும்…”
சில நிமிடங்கள் கழித்து இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தார்.”அந்த நைரோபி பையனின் அட்ரஸை எப்படியும் வாங்கிடுடா
“ஆகட்டும்ப்பா…ஆனா அந்தப் பக்கம் போனாத்தான் வாங்கிண்டு வரேன்னு அவர் சொன்னார்.”
“போனேளா, போனேளான்னு நாலு தடவை கேளேன். காசு செலவா, பணம் செலவா?”
மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிற பிள்ளையை என்ன விரட்டு விரட்டுகிறார் என்று எண்ணிக் கொண்டாள் அலமேலு.
அப்பா சொல்வதைத் தட்டாமல் அந்தக் காம்ப்ளக்ஸ் காரரைப் ‘போனேளா, போனேளா என்று பாபு கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அவரும் இதோ போறேன், இதோ போறேன் என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தார்.
ஒரு நாள், “நீங்க அந்த அம்மாவோட விலாசத்தைச் சொல்லுங்கோ. நானே போய்க் கேட்டுக்கிறேன்” என்ற போது, ‘வீடு அடையாளம்தான் தெரியும். விலாசம் தெரி யாது” என்றார் அவர்.
”சரி, வண்டியிலே ஏறிக்குங்கோ.”
“என் டாட்டருக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு. மேரியேஜ் ஹாலுக்காக அலையறேன். இந்த வாரம் என்னை விட்டுடுங்கோளேன்” என்று கெஞ்சினார் மனிதர்.
சரியென்று விட்டு விட்டான். ஆனால் நாராயணன் அதை நம்பவில்லை. “அம்மா பிள்ளை ரெண்டு பேரும் அந்தக் கட்டிலை இங்கே கொண்டு வரக் கூடாதுன்னு சதி பண்றேள்” என்று பாபு மனம் புண்படக் குற்றம் சாட்டினார்.
அதைப் பொறுத்துக் கொண்டு, காம்ப்ளெக்ஸ்காரரை மறுபடி மறுபடி அண்டி, தனக்குத் தெரிந்த கல்யாண மண்டபங்களின் விலாசத்தைச் சிபாரிசு செய்து, ஒருவழியாய் நுங்கம்பாக்கம்காரரிடமிருந்து நைரோபி விலாசத்தைப் பெற்றான்.
‘இன்றே எழுதிப் போட்டுடறேன்’ என்று பாபு சொன் னதை நாராயணன் ஒப்புக் கொள்ளவில்லை. ‘ஏர்மெயில் கவர் கொண்டு வா’ என்று சொல்லி, தானே விவரமாக நைரோ பிவாசிக்குக் கடிதம் எழுதி, தானே ஒட்டி, தானே போய்த் தபால் பெட்டியில் போட்டுவிட்டு வந்தார்.
நைரோபிக்குக் கடிதம் போவதும் வருவதும் இலேசாகவா இருக்கிறது?
ரொம்ப நாள் கழித்துத்தான் பதில் வந்தது. ‘மரக் கட்டி லாவது மண்ணாவது…’எனக்கென்ன தெரியும்?’ என்று எழுதுவான் என்றே அலமேலு எதிர்பார்த்தாள். ஆனால் அவன் பண்பாட்டுடன் பணிவாக எழுதியிருந்தான்.
‘தங்கள் உணர்ச்சிகளை நான் பெரிதும் மதிக்கிறேன். புரா தனக் கலைச் செல்வங்களை இந்தியர்கள் மதிப்பதில்லை என்று மேலைநாட்டினர் புகார் கூறும் சமயம், தங்களைப் போன்ற ஒருவர் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
தாங்கள் குறிப்பிடும் கட்டில் எனக்கு நன்றாக நினைவி ருக்கிறது. அது அழகான நல்ல கட்டில். அதனால் என் தந்தை புது ஃப்ளாட்டுக்கு வந்த பிறகும் அதைப் பிரியமா கப் பாதுகாத்து வந்தார். நானும் சென்னையில் இருந்த வரை யில் பத்திரமாக வைத்திருந்தேன். ஆனால் என் குழந்தை கள் படிப்பதற்கு இடவசதி போதாமல் இருந்ததால் சில ஃபர்னிச்சர்களை அகற்ற வேண்டியிருந்தது. மவுண்ட்ரோடு ஏலக் கம்பெனியிடம் அது சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்த போது கும்பகோணத்திலிருந்து என் மாமா வந்தார். நல்ல கட்டிலாக இருப்பதால் அதைத்தான் ஊருக்குக் கொண்டு போவதாகச் சொன்னார். பத்திரமாக வைத்திருக் கும்படி சொல்லிக் கொடுத்தனுப்பினேன். அவர் பெயர் சாரங்கபாணி ஐயங்கார், வக்கீல். கும்பகோணம் முடுக்குத் தெருவில் இருக்கிறார். வீட்டு நம்பர் மறந்து விட்டது. மன்னியுங்கள்.
நாராயணனிடமிருந்து மேற்படி கடிதத்தை வாங்கிப் படித்தவுடனேயே பாபு, “அப்பா, நான் கட்டாயம் கும்பகோணத்துக்குப் போய் அந்தக் கட்டிலைக் கொண்டு வந்து விடுகிறேன், கவலையே வேண்டாம்” என்று சொன்னான்.
“சீக்கிரம் செய்” என்றார் நாராயணன்.
“அதுதான் சொல்ல வந்தேன். கோபிச்சுக்காதீங்கோ. என் கிளையன்ட் ஒருத்தர் ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் பிரச்னை யில் திண்டாடிண்டிருக்கார். அவருக்காக ரிசர்வ் பாங்கோடே நான் மன்றாடிண்டிருக்கேன். கொஞ்ச நாள் பம்பாய்க்கும் டெல்லிக்குமா அலைஞ்சிண்டிருப்பேன். அது முடிஞ்சதும் முதல் வேலை கும்பகோணம்தான்” என்று உறுதி கூறினான் பாபு.
‘கொஞ்ச நாள்’ என்பது அவன் விஷயத்தில் ஒன்றரை மாதமாகி விட்டது.
பிறகு ஒருநாள் புறப்பட்டுச் சென்றான். ரயிலில் ரிசர் வேஷன் கிடைக்கவில்லை. பஸ்ஸிலேயே சென்றான்.
குழம்புக்கு உப்புப் போட்டு விட்டோமா இனிமேல் தான் போட வேண்டுமா என்று சமையல்கட்டில் அலமேலு குழம்பிக் கொண்டிருந்த வேளையில் பாபு வேகமாக வந்தான். “வெற்றி, அம்மா வெற்றி! அப்பா எங்கே?” என்றான் உற்சாகமாக.
”உஷ்! அப்பா மாடியிலே தூங்கறார். போன காரியம் என்ன ஆச்சு?” என்றாள் அலமேலு.
“அதான் சொன்னேனே, வெற்றி” என்றான் பாபு. ராத்திரி பூரா பஸ்ஸில் வந்ததால் தலை கலைந்து முகம் அழுக் காக இருந்தது. ‘கும்பகோணத்துக்குப் போய் அந்த முடுக் குத் தெருவைக் கண்டுபிடிச்சு, வக்கீல் சாரங்கபாணின்னு விசாரிச்சேன், யாருக்கும் தெரியலே. அப்புறம் ஒருத்தர், புளி யோதரை வக்கீலான்னு கேட்டார். கட்சிக்காரங்க ஃபீஸைக் கொடுக்கிறதோட கொஞ்சம் புளியோதரை யும் கோவில்லேருந்து வாங்கிண்டு வந்தால்தான் அவருக்குப் பூரண சந்தோஷமாம். அதனாலே புளியோதரை வக்கீல்னே பேர் வந்துடுத்து….”
“அந்தப் புராணமெல்லாம் எதுக்கு? விஷயத்துக்கு வா. அத்தோட மெதுவாப் பேசு.'”
“புளியோதரை வக்கீலைக் கேட்டால், அந்தக் கட்டிலை சுவாமிமலையிலே ஒரு குடியானவனுக்குக் கொடுத்துட் டேன்னார். மனுஷனுக்கு இளகின மனசு. நாலு வருஷம் முந்தி மழை கொட்டி, ஊரெல்லாம் வெள்ளமாய்ப் போனப்ப, அந்த குடியானவன் அவரோட குத்தகைக் காரன். அவனோட நோயாளிப் பெண்டாட்டி ஈரத்தரையிலே படுத்துண்டிருக்கான்னு சொல்லி அழுதானாம். அதனாலே அவனுக்குக் கொடுத்துட்டாராம்.”
”சரி, அப்புறம்?”
“என்னம்மா நீ, எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு சொல்றேன். சுவாரசியமில்லாமல் ‘சரி, அப்புறம்’ என்கிறாயே” என்று பாபு முகம் சுளித்தான்.
“சரி சுவாரசியமா கேட்கிறேன். அப்புறம் சொல்லு.”
“புளியோதரை வக்கீல்கிட்ட சுவாமிமலை குடியானவ னின் பேர் விலாசத்தைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு, பஸ் பிடிச் சுப் போனேன். அவன் வீட்டிலே ஏதோ விசேஷம் போலே யிருக்கு. பரபரப்பா இருந்தாங்க. குடியானவன் பேர் தங்க வேலு. கொஞ்சம் சந்தோஷமா இருந்தான். கொஞ்சம் கவலையாயும் இருந்தான். நான் விஷயத்தைச் சொன்னேன். ‘அது பத்திரமா இருக்குது சார்’னு சொல்லி, உள்ளே வீட்டுக்குள்ளே அழைச்சிட்டுப் போய்க் காட்டினான். அப்பாடா! மூச்சு வந்தது. அந்தக் கட்டிலை முதல் முறையா கண்ணாலே பார்த்தேன்.”
”உருப்படியா இருந்ததா?”
‘மேனி நலுங்காமல் ஜம்முனு இருந்தது. அப்பா சொன்ன அடையாளம் இருக்கான்னு பார்த்தேன். கத்தியாலே என்.ஏ.ன்னு கீறினது இருந்தது. வந்த விஷயத்தைச் சொல்லி, எங்க அப்பா திருப்பி வேணுமின்னு ஆசைப்படறார்ன்னு சொன்னேன். அதுக்கென்ன, தாராளமாய் எடுத்திட்டுப் போங்கன்னான். ”
”பரவாயில்லையே?”
“முழுக்கக் கேள். அவன் சந்தோஷமாயிருந்தது, மக ளுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறதாலே கவலையா யிருந்தது, கல்யாணச் செலவுக்குப் பணம் போதலைங்கிற தாலே. இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்னான். இத்தனை கஷ்டப்பட்டுக் கட்டிலைக் கண் டுப்பிடிச்ச பிறகு பணத்தைப் பார்க்கக் கூடாதுன்னு சரின்னேன்.”
“அவ்வளவு ரூபாய் பணம் எடுத்துண்டு போயிருந்தியா என்ன?”
“அதுக்குத்தான் திரும்பி வந்தேன். பணம் எடுத்துண்டு இன்னொரு ட்ரிப் கும்பகோணத்துக்குப் போயிட்டு வரணும். ‘இரண்டு நாளிலே வர்றேம்ப்பா, அதுக்குள்ளே கட் டிலை யாருக்கும் கொடுத்துடாதே’ன்னு அவன்கிட்டே சொல்லிட்டு வந்திருக்கேன்.”
“இரு” என்று சொல்லி, பீரோவைத் திறந்து, நூறு ரூபாய் நோட்டாக இருபது நோட்டு எடுத்து வந்து பிள்ளையிடம் கொடுத்தாள் அலமேலு.
“அப்பாவைக் கேட்க வேண்டாமாம்மா?”
“வேண்டாம். இது என் சொந்தப் பணம். வீட்டுச் செல விலே அப்பப்ப சேர்த்து வைச்சிருக்கிறது. அப்பாவுக்கே தெரியாது.”
“எனக்கும்தான் தெரியாது. நீ கில்லாடிம்மா. அப்பா எழுந்துண்டதும் விஷயத்தைச் சொல்லி…”
“வேண்டாம்” என்று தடுத்தாள் அலமேலு.
”பணத்தை எடுத்துண்டு போய் அந்த குடியானவன் கிட்டே கொடு…”
“அப்படியே டிவிஎஸ்லே சொல்லி, லாரியிலே ஏத்தி…”
“வேண்டாம்” என்று மறுபடியும் சொன்னாள் அலமேலு. “இந்தப் பணத்தை அவன் மகள் கல்யாணத்துக்கு வச்சுக்கச் சொல்லு. ஆனால் கட்டில் அவன்கிட்டேயே இருக் கட்டும். நீ வந்ததோ, அப்பாவைப் பத்திச் சொன்னதோ, வாங்கிக்க ஏற்பாடு பண்ணினதோ எதுவும் தெரிய வேண்டாம். கட்டிலை வேறே யாருக்கும் வித்துடாமே அவன் வீட்டிலேயே எப்பவும் இருக்கணும்னு கண்டிஷனோடே பணத்தைக் கொடு.”
அம்மாவைத் திகைப்பும் குழப்பமுமாகப் பார்த்தான் பாபு. “என்ன சொல்றே நீ? கட்டிலை இங்கே கொண்டு வர வேண்டாமா?”
“வேண்டாம்.”
“சரிதான்! கடைசியிலே உனக்கும் பயம் வந்துட்டுது. அந்தக் கட்டில் இங்கே வந்து அப்பா அதிலே படுத்து, அவருக்கு ஏதாவது ஆகிடப்போறதேன்னு பயப்படறே?”
”இல்லே. அவருக்கு எதுவும் ஆகாதுங்கிற தைரியத் திலே, ஆகக் கூடாதுங்கிற நம்பிக்கையிலே சொல்றேன்” என்றாள் அலமேலு.
அம்மாவின் முகத்தில் தென்பட்ட திடத்தையும் நம்பிக்கையையும் கவனித்த பாபு எதுவும் பேசாமல் நின்றான்.
“அப்பாவை ஆஸ்பத்திரியிலேருந்து அழைச்சிண்டு வந்தமே, அது எப்ப?” என்று அலமேலு கேட்டாள்.
பாபு சிறிது யோசித்து, “போன செப்டெம்பர் மாசம்” என்றான்.
“அதாவது, ஒரு வருஷத்துக்கு மேலே ஆகிறது. அவர் கட்டிலைப் பத்திச் சொல்லி, அதை நீ தேட ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கு மேலே ஆயிடுத்து, இல்லையா?”
“சரி?”
“இந்த ஒரு வருஷத்திலே அப்பா எத்தனை தடவை ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆனார்?”
“ஒரு தடவை கூட இல்லை.”
“எத்தனை தடவை டாக்டர் இங்கே வந்தார்?”
“ஒரு தடவை கூட இல்லை.”
“எத்தனை தடவை அப்பா இஞ்செக்ஷன் போட்டுண்டார்?”
“ஒரு தடவை கூட இல்லை” என்றவன், பொறுமை இல்லாதவனாக, “நீ என்னம்மா சொல்ல வர்றே?” என்றான்.
”பாபு. நீ சார்ட்டர்டு அக்கவுண்டெண்ட். நூத்துக்கணக் கான பிஸினஸ்காரங்களைப் பார்க்கிறே. அவங்ககிட்டே ஒரு விஷயம் கவனிச்சிருப்பியே? பிஸினஸ் ஸக்ஸஸா ஆகணும்கிற லட்சியத்தோட இருக்கிற வரையில் எல்லம் சரியாயிருக்கு. ஸக்ஸஸ் ஆன பிறகு கோளாறா ஆயிடறாங்க. நீ பேப்பர் படிக்கிறவன். அரசியல் கட்சிகளைப் பார். ஆட்சிக்கு வரணும்கிற லட்சியம் இருக்கிற வரையில் பிரமாதமான பேரோட இருக்கிறாங்க. ஆட்சிக்கு வந்துட்டால் கன் னாபின்னான்னு ஆயிடறாங்க…”
பாபு பெருமூச்சு விட்டு, “எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னே புரியலே” என்றான்.
“அது போல, இந்தக் கட்டிலைத் தேடிப் பிடிச்சுடணும் கிற ஆசை, லட்சியம், நம்பிக்கை இருக்கிறதாலே அப்பா உடம்புக்கு ஒண்ணும் வராமே திடகாத்திரமா இருக்கார். அப்படியே இருந்துட்டுப் போகட்டும். கட்டில் கிடைச்சிடுத்துன்னா எல்லாம் தலைகீழாயிடும். அப்பா நன்னா இருக்க ணும். அதனாலே அந்தக் கட்டில் கிடைக்கவே வேண்டாம். அவர்கிட்டே மூச்சு விடாதே. அந்தக் குடியானவன் கிட்டேயும் மூச்சு விடாதேன்னு சொல்லிப் பணத்தைக் கொடுத்துட்டு வந்து சேர். இதுவரை அப்பாகிட்டே நிஜம் சொல் லிண்டிருந்தே. இனிமேல் அங்கே இருக்கு. இங்கே இருக்குன்னு பொய் சொல்ல ஆரம்பி. என்ன?”
”சரிம்மா” என்றவன் பர்ஸைத் திறந்து பணத்தை வைத் துக் கொண்டான்.
– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.